Print Version|Feedback
Amidst growth of class struggle, union membership in US falls to historic lows
வர்க்க போராட்ட வளர்ச்சிக்கு மத்தியில், அமெரிக்காவில் தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கை வரலாற்றிலேயே குறைந்த மட்டத்திற்கு வீழ்கிறது
Jerry White
4 February 2020
உலகெங்கிலும் அமெரிக்காவிலும் வேலைநிறுத்தங்கள் மற்றும் சமூக போராட்டங்களின் ஓர் அலைக்கு மத்தியில், கடந்த வாரம் தொழிலாளர் புள்ளிவிபர ஆணையம் வெளியிட்ட புள்ளிவிபரங்கள், 2019 இல் அமெரிக்காவில் தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கை மேலும் 170,000 குறைந்து, 14.6 மில்லியன் தொழிலாளர்களாக, அல்லது தொழிலாளர் சக்தியில் 10.3 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருப்பதை எடுத்துக்காட்டியது.
தனியார் துறையில் மட்டுமே சங்கத்தில் இணைந்திருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 101,000 அளவிற்கு, 6.2 சதவீதத்திற்கு சரிந்தது. இது ஒரு நூற்றாண்டில் அல்லது அதற்கும் அதிகமான காலத்தில் மிகக்குறைந்த எண்ணிக்கையாகும்.
ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் ரோரி காம்பெல், இடதுபுறம், மிச்சிகன் டியர்போர்னில் திங்கட்கிழமை ஜூலை 15, 2019 இல் ஃபோர்ட் மோட்டார் நிறுவன தலைமை செயலதிகாரி ஜிம் ஹாக்கெட் உடன் அவர்களின் ஒப்பந்த பேச்சுவர்த்தைத் தொடங்குகையில் கைகுலுக்குகிறார். (அசோசியேடெட் பிரஸ்/ கார்லொஸ் ஒசோரியோ)
இது, 1983 இல் 20.1 சதவீதமாக இருந்த தொழிற்சங்கமயப்பட்ட விகிதத்துடனும் மற்றும் 1954 இல் அதன் உச்சத்தில் இருந்த அண்மித்து 35 சதவீதத்துடனும் முரண்படுகிறது. 1979 இல் இருந்து தொழிலாளர் சக்தி 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்ற போதினும், 1979 இல் அதன் உயர்ந்த மட்டத்தை விட இன்று தொழிற்சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை பாதிக்கும் குறைவாக உள்ளது.
தொழிற்சங்க அங்கத்துவத்தின் வீழ்ச்சி தொழிலாளர்களிடையே எந்தவிதத்திலும் போர்க்குணம் இல்லாததனால் அல்ல. அதற்கு மாறாக, 1986 க்குப் பின்னர் இருந்து பிரதான வேலைநிறுத்தங்களில் இணைந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகபட்ச மட்டங்களை எட்டியுள்ளதுடன், அமெரிக்காவில் வேலைநிறுத்த நடவடிக்கையானது, உலகெங்கிலுமான வர்க்க போராட்ட வளர்ச்சியின் பாகமாக, கடந்த இரண்டாண்டுகளில் அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டாண்டுகளில், நூறாயிரக் கணக்கான ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்கள் உட்பட, இவர்களில் பலர் மேற்கு வேர்ஜினியா, கரோலினாஸ் மற்றும் ஏனைய மாநிலங்களின் தொழிற்சங்கம் சாராதவர்கள் என்ற நிலையில், அண்மித்து ஒரு மில்லியன் அமெரிக்க தொழிலாளர்கள் 47 பிரதான வேலைநிறுத்தங்களில் பங்கெடுத்திருந்தனர். அரை நூற்றாண்டில் மிக நீண்ட தேசிய வாகனத்துறை வேலைநிறுத்தமான 40 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த 48,000 ஜெனரல் மோட்டார்ஸ் தொழிலாளர்கள் உள்ளடங்கலாக தொழில்துறை தொழிலாளர்களின் குறிப்பிடத்தக்க பிரிவுகள், 2019 இல், லோஸ் ஏஞ்சல்ஸ், சிக்காகோ மற்றும் ஏனைய நகரங்களின் ஆசிரியர்களுடன் இணைந்திருந்தனர்.
தொழிற்சங்க அங்கத்துவம் தொடர்ந்து இரத்தப்போக்கு போல குறைந்து வருகிறது என்றால், அது தொழிற்சங்கங்கள் பெருநிறுவன நிர்வாகத்தின் நேரடியான கருவிகளாக செயல்படுகின்றன என்பதால் ஆகும். வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் வேலையிட நிலைமைகள் மீதான தாக்குதலை எதிர்ப்பதிலிருந்து வெகுதூரம் விலகி, தொழிற்சங்கங்கள் அவற்றுக்கு ஒத்துழைக்கின்றன.
நிறுவனம் சார்ந்த அந்த அமைப்புகள் ஒன்றும் வழங்குவதில்லை என்பதை நன்கறிந்து கொண்ட தொழிலாளர்கள், டேய்டனில் Fuyao கண்ணாடி அமெரிக்க ஆலை; வோல்ஸ்வாகனின் சட்டநூகா, டென்னஸி உற்பத்தி ஆலை; மிசிசிப்பி கன்டனில் நிசான் ஆலை; தெற்கு கரோலினாவில் வடக்கு சார்லெஸ்டனின் போயிங் 787 ட்ரீம்லைனர் ஆலை உள்ளடங்கலாக பல உயர் தொழில்துறை தொழிற்சங்கங்களின் அங்கீகரிப்பு வாக்கெடுப்பில் கடந்த பல ஆண்டுகளாக பெருவாரியாக அவற்றுக்கு எதிராக வாக்களித்தனர்.
தொழிலாளர்கள் தங்களை இத்தகைய வலதுசாரி பெருநிறுவன-சார்பு அமைப்புகளில் இருந்து விடுவித்துக் கொண்டு, புதிய, உண்மையான ஜனநாயக மற்றும் போர்குணம் கொண்ட போராட்ட அமைப்புகளை —சாமானிய தொழிலாளர்களின் பணியிடக் குழுக்களை ஸ்தாபிக்க வேண்டிய அவசியத்தையே சமீபத்திய இந்த தொழிற்சங்க அங்கத்துவ புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
தொழிற்சங்கங்களின் அனுதாபிகள், தொழிற்சங்க அங்கத்துவத்தின் இந்த வீழ்ச்சிக்கு, பெருநிறுவனங்களும் மற்றும் ட்ரம்ப் நிர்வாகமும், அத்துடன் அரசின் "வேலையிட உரிமை" சட்டங்களும் தடுப்பதாக பழி போடுவார்கள். ஆனால் தொழிற்சங்க அங்கத்துவம் 1930 கள் போன்ற காலக்கட்டங்களில் கூர்மையாக வளர்ந்தன, அப்போது தேசிய பாதுகாப்புப்படை மற்றும் துப்பாக்கியேந்திய தனியார் குண்டர்களின் ஒடுக்குமுறை மற்றும் தொழிற்சங்க ஒழுங்கமைப்பாளர்கள் மீது பாரபட்சமாக தீர்ப்பளிப்பது உட்பட தொழிற்சங்க போர்க்குணமானது நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களிடம் இருந்து மிகப்பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டிருந்தது என்பது ஒரு வரலாற்று உண்மை விடயமாகும்.
ஆனால் அந்த காலகட்டத்தில் தான் அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின் பழைய தொழிலாளர் அமைப்புகளுடன் உடைத்துக் கொண்டு புதிய பாரிய தொழில்துறை சங்கங்கள் உதித்தன. அவை உள்ளிருப்பு வேலைநிறுத்தங்கள் உட்பட பாரிய போராட்டங்களில் இருந்து உருவாக்கப்பட்டன, இவற்றுக்கு சோசலிசவாதிகளும் போர்குணம் மிக்க இடதுசாரிகளும் தலைமை கொடுத்தனர்.
AFL-CIO தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் ஜனநாயகக் கட்சியுடன் நெருக்கமாக அணிசேர்ந்த ஒரு சிந்தனை குழாமான பொருளாதார கொள்கை பயிலகம் (EPI) கடந்த வாரம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், EPI கொள்கை மையத்தின் கொள்கை இயக்குனர் ஹைடி ஷியர்ஹோல்ஸ் குறிப்பிடுகையில், தொழிற்சங்க அங்கத்துவத்தின் வீழ்ச்சி "அமெரிக்க நடுத்தர வர்க்கத்திற்கு கெட்ட செய்தி" (அழுத்தம் சேர்க்கப்பட்டது) என்றார். திருமதி ஷியர்ஹோல்ஸ், அவர் சொல்லவிரும்பியதை விட அதிகமாகவே கூறியுள்ளார்.
நலிவடைந்து கொண்டிருக்கும் தொழிற்சங்க செல்வாக்கு நிச்சயமாக இத்தகைய அமைப்புகளை நிர்வகிக்கும் நிர்வாகிகளுக்கு "கெட்ட செய்தி" தான், மேலும் இவர்களை தொழிலாள வர்க்கத்தின் அங்கத்தவர்களாகவோ அல்லது பிரதிநிதிகளாகவோ கூட விவரிக்க முடியாது. அமெரிக்க ஆசிரியர்கள், தேசிய கல்வி அமைப்பு, டீம்ஸ்டர்ஸ், ஐக்கிய உணவு மற்றும் வர்த்தக தொழிலாளர்களின் அமெரிக்க கூட்டடமைப்பு மற்றும் ஏனைய சங்கங்களின் நிர்வாகிகள் ஆண்டுக்கு 300,000 டாலர், 400,000 டாலர், 500,000 டாலர் பெறுவதுடன், செலவின தொகைகள் மற்றும் ஏனைய கூடுதல் படிகளுடன், இவர்கள் உயர்மட்ட ஒரு சதவீத அல்லது இரண்டு சதவீத வருவாய் அடுக்கில் நிற்கிறார்கள். இவர்கள் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொள்ளும் தொழிலாளர்கள் என்ன சம்பாதிக்கிறார்களோ அதை விட இவர்கள் 10 முதல் 15 மடங்கிற்கு இடையே சம்பாதிக்கிறார்கள்.
பல தசாப்தங்களாக தொழிற்சங்கங்கள் பேரம்பேசி உள்ள விட்டுக்கொடுப்புகள், அவற்றினது உறுப்பினர்களின் கூலிகள் மற்றும் சலுகைகளைக் குறைத்துள்ளன, அதேவேளையில் தொழிலாள வர்க்க சமூகங்களைச் சீரழித்துள்ள ஆலைமூடல்கள் மற்றும் பாரிய வேலைநீக்கங்களுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளன. ஆனால் இந்த கதியால் தொழிற்சங்க நிர்வாகிகள் பாதிக்கப்படவில்லை. பல பில்லியன் டாலர் ஓய்வூதிய நிதி மீதான அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தும், பெருநிறுவன பொதுக்குழு கிடைத்திருக்கும் பதவிகள் மற்றும் தொழில்-நிர்வாக தனி ஒதுக்கீட்டு நிதிகளில் இருந்தும் கொழித்து, அவர்கள் முற்றிலும் வேறொரு உலகில் வாழ்கின்றனர்.
இது ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்களின் சங்கத்தை (UAW) விட மிகவும் வெளிப்படையாக வேறெங்கும் இல்லை, கடந்த மாத நீதிமன்ற விசாரணைகளில் மத்திய வழக்குரைஞர்கள் அதை "குற்றகரமான அமைப்பாக" முத்திரை குத்தினர். 2000 இல் இருந்து, ஜிஎம், போர்ட் மற்றும் கிறைஸ்லர் தொழிலாளர்களின் எண்ணிக்கை பாதிக்கும் அதிகமாக குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில், உயர்மட்ட UAW நிர்வாகிகளோ கோல்ஃப் விளையாட்டு பிரயாணம், ஆடம்பர குடியிருப்புகள், உயர்விலை உணவகங்கள் மற்றும் பிற அபிலாஷைகளுக்கு நிதி செலவிட மில்லியன் டாலர் தொழிற்சங்க சொத்துக்களைத் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
இதற்கு கூடுதலாக, புதிய தொழிலாளர்களின் சம்பளங்களைப் பாதியாக வெட்டிய, நாளொன்றுக்கு எட்டு மணி நேரத்தை அழித்த, புதிய "நெறிப்படுத்தப்பட்ட" குறைதீர்க்கும் வழிமுறையின் கீழ் தொழிலாளர்களை தவறாக பயன்படுத்த நிறுவனங்களின் கரங்களைச் சுதந்திரப்படுத்திய நிறுவன-சார்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட, UAW பேச்சுவார்த்தையாளர்கள், தொழில்-நிர்வாக பயிற்சி மையங்கள் மூலமாக பாய்ச்சப்பட்ட மில்லியன் கணக்கிலான டாலர்களை இலஞ்சமாக பெற்றனர்.
கடந்த கோடையில் சாமானிய தொழிலாளர்களின் ஒரு கிளர்ச்சிக்கு அஞ்சி, UAW ஜிஎம் ஆலையில் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. தீவிர போராட்டத்தை தொடுப்பதற்கு தொழிலாளர்களுக்கு போதிய வேலைநிறுத்த உதவிகளை வழங்குவதற்குப் பதிலாக, UAW வேலைநிறுத்த சம்பளமாக வாரம் 250 டாலர் கொடுத்து அவர்களைப் பட்டினியில் கிடத்தியது. வெளிநடப்புக்கு இட்டுச் சென்ற இந்த தசாப்தங்களில், UAW, "நிர்வாகத்திற்கு" சம்பளம் கொடுக்கவும் மற்றும் செலவுகளை "ஒழுங்கமைக்கவும்", அதாவது ஏறக்குறைய 450 நிர்வாகிகள், அலுவலக பணியாளர்கள் மற்றும் சர்வதேச UAW இன் கீழ் கூலி பெறுபவர்களுக்கு சௌகரியங்கள் செய்து கொடுக்க நூறு மில்லியன் கணக்கான டாலர் சந்தா நிதியாக வழங்கப்பட்ட வேலைநிறுத்த நிதியிலிருந்து கைமாற்றியது.
வேலைநிறுத்தம் செய்து வந்த தொழிலாளர்களைத் தனிமைப்படுத்தி மற்றும் அவர்களை அடிபணிய வைக்க பட்டினி கிடத்திய பின்னர், UAW அதிக ஆலைமூடல்களுக்கும், இரண்டு அடுக்கு சம்பள முறையைத் தொடர்வதற்கும் மற்றும் சங்க சந்தா செலுத்தும் ஆனால் எந்த உரிமையும் இல்லாத தற்காலிக தொழிலாளர்களை அதிகரிப்பதற்கும் ஒப்புதல் வழங்கிய ஓர் உடன்படிக்கையில் ஜிஎம் நிர்வாகத்துடன் கையெழுத்திட்டது.
இவை "தொழிலாளர்களின் அமைப்புகள்" இல்லை, மாறாக ஊழல்பீடித்த ஓர் உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தால் மற்றும் பேராசை நிறைந்த முதலாளித்து சமூக அடுக்கால் அவர்களுக்காகவே நடத்தப்படும் தொழிலாளர் ஆட்சிக்குழுவாகும். தொழிலாளர்களால் வெறுக்கப்படும் இத்தகைய அமைப்புகள் பெருநிறுவன நிதிகளையும் மற்றும் அவற்றின் உயிர்வாழ்வுக்காக முதலாளித்துவ அரசை உறுதிப்படுத்துவதையும் சார்ந்துள்ளன.
இதுவொரு உலக நிகழ்வுபோக்காகும். பிரான்சில், 2017 இல் அரசாங்கம் மற்றும் முதலாளிமார்களிடம் இருந்து அண்மித்து 96 மில்லியன் டாலர் பெற்ற தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் அலையை ஒடுக்குவதற்கும் மற்றும் பாரியளவில் ஓய்வூதிய வெட்டுக்களைத் திணிப்பதற்கும் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுடன் ஒத்துழைத்து வருகின்றன.
தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடன் சட்டரீதியாக "சமூக பங்காளிகளாக” விளங்கும் ஜேர்மனியில், IG Metall தொழிற்சங்கம், வோல்ஸ்வாகனில் மட்டும் 20,000 வேலைகள் உள்ளடங்கலாக நூறாயிரக் கணக்கான வாகனத்துறை வேலைகளை அழிப்பதில் உடந்தையாக உள்ளன.
அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) போன்ற பல்வேறு போலி-இடது அமைப்புகளோ, தொழிற்சங்கங்களைத் சீர்திருத்தி விடலாம் என்ற கட்டுக்கதையை ஊக்குவித்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலான பகுதிகளில் அவை அவ்வாறு செய்கின்றன ஏனென்றால் அவற்றின் சொந்த உறுப்பினர்களே அதிகரித்தளவில் தொழிற்சங்க எந்திரத்திற்குள் ஆதாயமான பதவிகளைப் பெற்று வருகின்றனர், அங்கே அவர்கள் தொழிலாளர்களை ஏமாற்றும் மற்றும் காட்டிக்கொடுக்கும் கீழ்த்தரமான வேலைகளில் இணைந்துள்ளனர்.
உற்பத்தியின் பூகோளமயப்பட்ட ஒருங்கிணைப்பு மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகள் சர்வதேசியமயமான நிலைமைகளின் கீழ், தொழிற்சங்கங்களினது தேசியவாத மற்றும் முதலாளித்துவ-சார்பு வேலைத்திட்டம் தோல்வியடைந்திருப்பதன் விளைவாகவே, தொழிற்சங்கங்கள் பெருவணிகத்தின் கருவிகளாக மாறி உள்ளன. தங்களைத்தாங்களே தொழிற்சங்கங்கள் என்று அழைத்துக் கொள்ளும் இந்த வலதுசாரி ஜனநாயக விரோத ஊழல் கோட்டைகள், பெருநிறுவன நிர்வாகத்தின் மற்றும் முதலாளித்துவ அரசின் கட்டமைப்புக்குள் இவை தசாப்த காலத்திற்கு முன்னரே ஒருங்கிணைந்ததன் விளைபொருளாகும்.
தொழிற்சங்கள் மற்றும் அவற்றைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள சக்திகளின் நலன்கள், சமரசத்திற்கிடமின்றி தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு எதிரானவை. அவை வர்க்கப் பிளவின் எதிர்தரப்பில் உள்ளன. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அரசியல் தீவிரமயப்படல் குறித்தும் மற்றும் சோசலிசத்திற்கு ஆதரவு அதிகரிப்பது குறித்தும் அவற்றின் தலைவர்கள் அவர்களின் ஆளும் வர்க்க எஜமானர்களுக்கு குறைவின்றி அஞ்சுகின்றனர். அடிமட்டத்திலிருந்து முதலாளித்துவ அமைப்புமுறைக்கு வரும் ஒரு சவாலுக்கு விடையிறுக்கையில், அவர்கள் காடைத்தனம் மற்றும் அரசு ஒடுக்குமுறையில் தஞ்சம் புகுவார்கள்.
கடந்த இரண்டாண்டுகளில், மெக்சிகோ, அமெரிக்காவிலும் மற்றும் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா எங்கிலுமான நாடுகளில் நடந்துள்ள பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் உட்பட வர்க்க போராட்டத்தின் அதிகரித்து வரும் ஒரு பேரலை இருந்துள்ளது. அதிகரித்தளவில் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் பிடியிலிருந்து உடைத்துக் கொண்டு எல்லை கடந்து அவர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்த முனைந்துள்ளனர்.
தொழிலாளர்களுக்கு என்ன தேவையோ அதன் அடிப்படையில் புதிய அமைப்புகளை உருவாக்குவது என்பது, முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்புமுறையால் அது இயலுமளவுக்கு கோருவது என்பதல்ல, இது தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவதற்கும் ஐக்கியப்படுத்துவதற்குமான இன்றியமையா முன்நிபந்தனையாகும். ஆலை மற்றும் பணியிடத்தில் சாமானிய தொழிலாளர் குழுக்களின் இந்த வடிவம் மூலமாகத்தான் —பாதிக்கப்பட்ட மற்றும் வேலையிலிருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்ப்பது, அனைத்து விட்டுக்கொடுப்புகளையும் மீட்டெடுப்பது, சம்பள அடுக்குமுறையை ஒழிப்பது மற்றும் அனைத்து தற்காலிக தொழிலாளர்களையும் நிரந்தரமாக பணியில் அமர்த்துவது என—தொழிலாளர்கள், அவர்களின் சொந்த கோரிக்கைகளை முன்னெடுக்க முடியும் மற்றும் பணியிடத்தில் தொழில்துறை ஜனநாயகம் மற்றும் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டை எடுக்க போராட முடியும்.
தேசியவாத தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவப் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட தொழிலாளர்களின் சுயாதீனமான குழுக்கள், உலகெங்கிலுமான தொழிலாளர்களை ஒரு பொதுவான போராட்டத்தில் ஐக்கியப்படுத்துவதற்கான நிலைமைகளை உருவாக்கும்.
வர்க்கப் போராட்ட வளர்ச்சியை ஒரு சர்வதேச சோசலிச அரசியல் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்துடன் இணைக்க, சுயாதீனமான தொழிலாளர்களின் அமைப்புகளை உருவாக்குவதை ஊக்குவிப்பதிலும் மற்றும் உதவவும் உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் எங்கள் சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் செய்வோம். இதுபோன்ற குழுக்களை ஸ்தாபிப்பதில் ஆர்வமுள்ள தொழிலாளர்கள் இன்றே எங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.