World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil
 

உலக சோசலிச வலைத்தளம் பற்றி


Use this version to print | Send this link by email | Email the author

உலக சோசலிச வலைத்தளம் (World Socialist Web Site) நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் இணைய மையமாகும் (Internet center ). இது முக்கிய உலக அரசியல் நிகழ்வுகள் தொடர்பான ஆய்வுகளையும், அரசியல் விமர்சனங்களையும், வரலாறு, கலாச்சாரம், தத்துவவியல் விடயங்களையும் சோசலிச இயக்கத்தின் பாராம்பரியம் தொடர்பான பெறுமதிமிக்க ஆவணங்களையும், ஆய்வுகளையும் வழங்கும்.

உலக சோசலிச வலைத்தளத்தின் நோக்கம் இன்றைய சமூகத்தின் பிரச்சனைகளுக்கு தேவையென பரவலாக இன்று உணரப்படும் புத்திஜீவித்தனமான மதிப்பீடு ஒன்றை வழங்கும் தேவையை பூர்த்திசெய்வதாகும். இது சமூக வாழ்க்கையின் தற்போதைய நிலைமையுடன் அதிருப்தி கொண்ட பாரிய மக்களை நோக்கியும், உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு சாதனங்களின் சிடுமூஞ்சித்தனமான, பிற்போக்குத்தனமான அணுகுமுறைக்கு எதிராக தனது கவனத்தை செலுத்துகிறது.

எமது வலைத்தளம் ஒரு சில செல்வம் படைத்தவர்களுக்கும் பாரிய உலக மக்களுக்கிடையே அதிகரித்து வரும் இடைவெளிக்கு காரணமான சமூக சமத்துவமின்மையால் மோசமான அளவில் பாதிக்கப்படும் மக்களுக்கு ஒரு அரசியல்

முன்னோக்கிற்கான அடித்தளத்தை வளங்குகின்றது. உலக சோசலிச வலைத்தளம் பாரிய நிகழ்வுகளான நிதி நெருக்கடி, இராணுவவாதம், யுத்தத்தின் தோற்றம், தற்போதைய நிலைமைகளின் வர்க்க உறவுகளில் ஏற்படும் உடைவு போன்றவற்றால் போராட்டத்தினுள் தள்ளப்படும் அதிகரித்துவரும் உழைக்கும் மக்களுக்கு ஒரு அரசியல் நோக்கை காட்டுகின்றது.

ஒவ்வொரு நாடுகளிலும் வேலையின்மை, குறைந்த ஊதியம், கொடுமையான அரசியல், ஜனநாயக உரிமை மீறப்படுதல் போன்றவற்றிற்கு எதிரான பாரிய போராட்டங்களை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். எப்படியிருந்தபோதும் இப்படியான போராட்டங்களின் வெற்றி மார்க்சிச உலக பார்வையினால் வழிநடத்தப்படும் சோசலிச அரசியல் இயக்கத்தின் ஆளுமையின் வளர்ச்சியுடன் பிரிக்கமுடியாதவாறு இணைந்துள்ளது என உலக சோசலிச வலைத் தளம் வலியுறுத்துகின்றது.

இவ் வலையத் தளத்தின் நிலைப்பாடு முதலாளித்துவ சந்தைப்பொருளாதார முறைக்கு எதிரான புரட்சிகர எதிர்ப்பாகும். இதன் நோக்கம் உலக சோசலிசத்தை உருவாக்குவதாகும். இதனை செய்து முடிப்பதற்கான கருவி சர்வதேச தொழிலாள வர்க்கமே எனவும், 21ம் நூற்றாண்டில் தொழிலாள வர்க்கத்தினதும் முழு மனித சமுதாயத்தினதும் தலைவிதி சோசலிசப் புரட்சியிலே தங்கியுள்ளது என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

உலக சோசலிச வலைத்தளத்தில் கலந்துரையாடுவதென்பது புறநிலையான, உண்மையான விவாதத்தை தவிர்ப்பதல்ல. நாங்கள் முதலாளித்துவ அரசியலுக்கும் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கும் மாற்றீடு ஒன்றை தேடும் தொழிலாளர்கள், மாணவர்கள், புத்திஜீவிகள் உடனான பரந்த கருத்துப்பரிமாற்றத்தை வரவேற்கின்றோம். இயக்கவியல் வழிமுறையான விமர்சனமும் விவாதமும் மூலமே திறமையும் உண்மையும் நிரூபிக்கப்படும் என்பது உலக சோசலிச வலைத்தளத்தின் உள்ளடக்கமாகும். புத்திஜீவித்தனமான நேர்மையும் வரலாற்று உண்மை தொடர்பான அர்ப்பணிப்பும் மட்டுமே இந்நிலையத்திற்கு பங்களிப்பு செய்ய விருப்புவோருக்கு தேவையானதாகும். கட்டுரைகளும், கடிதத் தொடர்புகளும் [email protected] என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

உலக சோசலிச வலைத்தளமும் சர்வதேச தொழிலாள வர்க்கமும்

ஆசியாவில் தொடங்கி உலக பொருளாதாரம் முழுவதையும் மூழ்கடித்த பொருளாதார நெருக்கடியானது உழைக்கும் மக்களின் சர்வதேச ஒன்றிணைப்பின் தேவையை என்றுமில்லாதவாறு வேண்டிநிற்கின்றது. நாடுகடந்த உற்பத்தியும் பூகோளமயமான நிதி நிறுவனங்களும் முதலாளித்துவத்தின் முகத்தை முற்றாக மாற்றியுள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களாக தொழிலாளர்கள் தொடர்ச்சியான வேலை நீக்கத்தையும் நிகர வருமானத்தின் வீழ்ச்சியையும் எதிர்நோக்கையில் முன்னேறிய நாடுகளில் மட்டுப்படுத்தப்பட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன.

குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகளில் சுதந்திர வர்த்தக வலையம், ஏனைய மலிந்த கூலியுழைப்பு திட்டங்கள் மூலம் தொழிலாளர்களை எந்தவித தடையும் இன்றி சுரண்டும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ள நிலைமையில் தேசிய அபிவிருத்தி திட்டங்கள் தூக்கி வீசப்பட்டுள்ளன.

தம்மை கம்யூனிஸ்ட்டுகள், சோசலிஸ்ட்டுகள் அல்லது தொழிலாளார் கட்சிகள் என அழைத்துக்கொண்ட பழைய தொழிலாளவர்க்க அமைப்புகள் அனைத்தும் தேசிய அரசுகளோடு இணைந்து இருந்ததுடன் தொழில்கள், வாழ்க்கைத்தரங்கள், அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதலுக்கு தம்மிடம் பதிலேதும் இல்லையென நிரூபித்தன.

உலக சோசலிச வலைத்தளம் ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்காவிலுள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலக்க குழுவின் அங்கத்தவர்களின் கூட்டு முயற்சியால் வெளியிடப்படுவதுடன், அது தனது ஆரம்ப புள்ளியாக வர்க்கப்போராட்டத்தின் சர்வதேச தன்மையை எடுத்துள்ளது. இது ஒவ்வொரு நாடுகளினதும் அரசியல் அபிவிருத்தியை முதலாளித்துவத்தின் உலக நெருக்கடியின் அடித்தளத்திலிருந்து சர்வதேச தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கும் அரசியல் பணிகளை ஆய்வு செய்கின்றது. இந்த முன்னோக்கின் அடித்தளத்தில் இருந்து சகலவித சோவினிசத்தையும் தேசியவாதத்தையும் முற்று முழுதாக எதிர்க்கின்றது.

உலக சோசலிச வலைத்தளம் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கும் அரசியல் அறிவூட்டுவதற்கும் என்றுமில்லாதவாறு ஒரு சாதனமாக அமையுமென நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். நாடுகடந்த நிறுவனங்கள் தேசிய எல்லைகளை கடந்து தொழிலாளர்களுக்கு எதிரான தமது யுத்தத்தை ஒழுங்கமைப்பதுபோல் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களின் மூலதனத்திற்கு எதிரான போராட்டத்தை இணைக்க இது உதவி செய்யும். இது சகல நாடுகளையும் சேர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கி அவர்களது அனுபவங்களை ஒப்பிட்டு பார்த்து பொதுவான மூலோபாயம் ஒன்றை உருவாக்குவதற்கு உதவியளிக்கும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்குழு, இணையங்களின் விரிவாக்கத்தைப்போல் உலக சோசலிச வலைத்தளத்திற்கு வரும் உலக வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றது. ஒரு துரிதமான பூகோளரீதியான தொடர்பு சாதனம் என்ற வகையில் இணையம் அதியுயர் ஜனநாயகத்தையும் புரட்சிகர உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. இது நூலகங்கள், ஆவணக்காப்பகங்கள், நூதன சாலைகளில் இருந்து உலகத்தின் புத்திஜீவித்தனமான வளங்களை பாரியளவிலான வாசகர்கள் பெற்றுக்கொள்வதற்கான வழியை உருவாக்கியுள்ளது.

15ம் நூற்றாண்டில் Gutenberg அச்சுத்தொழிலை கண்டுபிடித்ததானது தனிமனித வாழ்வின் மீது தேவாலயங்களின் கட்டுப்பாட்டை உடைப்பதற்கும், நிலப்பிரபுத்துவ அமைப்பிற்கு முடிவுகட்டுவதற்கும், இறுதியாக பிரெஞ்சு புரட்சியின் புத்தொழிமயமாக்கலிலும் பிரதிபலித்த மறுமலர்ச்சி இயக்கத்துடன் தோன்றிய பாரிய கலாச்சார எழுச்சியை பேணுவதற்கும் உதவியது. எனவே இப்பொழுது இணையம் புரட்சிகர சிந்தனையை புத்துயிப்பு அளிப்பதற்கு உதவியளிக்க முடியும். ஆகையால் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இத் தொழில்நுட்பத்தை உலக முழுவதுமுள்ள உழைக்கும் மக்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் விடுதலை செய்யும் கருவியாக பிரயோகிக்க முனைகின்றது.

உலக சோசலிச வலைத்தளத்தின் வடிவமைப்புத் தொடர்பான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் [email protected] ற்கு அனுப்பலாம்.

 நான்காம் அகிலத்தின் அனைத்துலக்குழு

நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவினால் உருவாக்கப்பட்ட உலக சோசலிச வலைத்தளம் ஒரு பலம் வாய்ந்த அரசியல் வரலாற்றின் அடித்தளத்தில் உருவாக்கப்பட்டது. அது சோவியத் யூனியனில் வளர்ச்சி கண்ட ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிராக 1923ம் ஆண்டு லியோன் ட்ரொட்ஸ்கியினால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் தத்துவார்த்த போராட்டத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. ரஷ்யப் புரட்சியிலும் உள்நாட்டு யுத்தத்திலும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதிலும் முக்கிய பங்கை வகித்த பின்னர் 1920களில் உருவாகிய அதிகாரத்துவதட்டிற்கும் அதன் தேசியவாத போக்கிற்கும் எதிரான சோசலிச பதிலீடடின் முன்னணித் தலைவராக ட்ரொட்ஸ்கி விளங்கினார்.

சோவியத் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அரசியல் அதிகாரத்தை பறித்துக்கொண்ட ஸ்ராலினிச அதிகாரத்துவ அமைப்பு அக்டோபர் புரட்சியின் கோட்பாடுகளை காட்டிக்கொடுத்ததுடன் இருபதாம் நூற்றாண்டில் பாரிய குற்றங்களையும் செய்துள்ளது. ஸ்ராலினிச கையாளால் கொல்லப்படுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் 1938ல் நான்காம் அகிலத்தை ஸ்தாபிப்பதே ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கையின் நோக்கமாக இருந்தது.

1991ல் ஸ்ராலினிச அரசுகளின் உடைவானது ட்ரொட்ஸ்கியினதும் நான்காம் அகிலத்தினதும் போராட்டத்தினது மிகமுக்கிய ஊர்ஜிதமாகும். 1936ம் ஆண்டுக்கு முன்னரையே ஸ்ராலினிச அதிகாரத்துவம் முதலாளித்துவ புனருத்தாரணத்தை நோக்கி தவிர்க்க முடியாதவாறு செல்லும் வழியில் போய்க்கொண்டிருப்பதாக ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். அதேவேளை இவ்வதிகாரத்துவம் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர, சமூக சமத்துவ நோக்கங்களுக்கும் எதிரான நனவுபூர்வமான அரசியல் எதிர்ப்பாளனாக வந்துள்ளதாக விளக்கினார்.

கடந்த வருடங்களில் சோசலிசமும் மார்க்சிசமும் இறந்து விட்டதாக கூறிய சகல பிரகடனங்களும் லியோன் ட்ரொட்ஸ்கியினதும் நான்காம் அகிலத்தினதும் முக்கியத்துவத்தை தவிர்த்தன அல்லது குறைத்தன. இது ஆச்சரியப்படக் கூடிய ஒன்றல்ல. இவ் அரசியல் பாராம்பரியம் தொடர்பான எந்தவொரு நியாயமான மதிப்பீடும் கீழ்த்தரமான வரலாற்று நேர்மையற்ற விளக்கங்களை வழங்கும் முதலாளித்துவத்தின் உத்தியோக பூர்வ பாதுகாவலர்களின் முகங்களை அம்பலப்படுத்தும். இப்பிற்போக்குவாத வரலாற்று ஆசிரியர்கள் இல்லையென கூறும் ஸ்ராலினிசத்திற்கு எதிரான சர்வதேச சோசலிச மாற்றீடு லியோன் ட்ரொட்ஸ்கியினது எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் இருந்ததைக் காணலாம்.

அனைத்து வாசகர்களையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடனோ அல்லது அதனுடன் இணைந்த அரசியல் கட்சியுடனோ இணையுமாறு கேட்டுக்கொள்வதுடன் தற்போது கிளைகள் இல்லாத நாடுகளில் புதிய கட்சிகளை உருவாக்குவதற்கான விபரங்களுக்கு [email protected] என்ற முகவரிக்கு எழுதவும்.

இவ் வலைத் தளத்தை அபிவிருத்தி செய்வதற்கும் பராமரிப்பதற்கும் நிதியுதவி தேவையாக உள்ளது. முக்கியமாக எமது வாசகர்களை மாதாந்த ரீதியான நிதியுதவி தொடர்பாக கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். எவ்வாறு நிதியுதவிகளை செய்வதென்பது தொடர்பான விபரத்தை Donate to WSWS என்பதன் கீழ் பெற்றுக்கொள்ளலாம்.