ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Dozens killed in growing border clashes between Turkey and Syria

துருக்கிக்கும் சிரியாவிற்கும் இடையே அதிகரித்துவரும் எல்லை மோதல்களில் பெருமளவிலானோர் கொல்லப்பட்டனர்

By Ulas Atesci
4 February 2020

வடமேற்கு சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் துருக்கிய மற்றும் சிரிய இராணுவப் படைகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் நேற்று இரத்தக்களரியான மோதலாக வெடித்தது. துருக்கிய நிலைகள் மீது குண்டு வீசியதாக சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத்துக்கு விசுவாசமாக இருந்த படையினரை துருக்கிய படைகள் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து பெருமளவிலான சிரிய சிப்பாய்கள் கொல்லப்பட்டதுடன், ஆறு துருக்கிய சிப்பாய்கள் பலியாவதற்கு வழிவகுத்தது. இந்த வன்முறை, நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கிக்கும் சிரிய ஆட்சியின் அணுவாயுத நட்பு நாடான ரஷ்யாவிற்கும் இடையே நேரடி மோதலை அதிகரிப்பதற்கு அச்சுறுத்துகிறது.


சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் வடக்கு நகரமான சர்மாடாவில் காணப்படும் துருக்கி இராணுவ கவச வாகனப்படை (AP Photo/APTN)

ஒரு அறிக்கையில், துருக்கிய பாதுகாப்பு அமைச்சகம், “இட்லிப்பில் தமது படைத்தளநிலைகள் முன்பே அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், அங்கு மோதல்களை தடுப்பதற்கான எமது துருப்புக்களை பலப்படுத்தவே எங்கள் படைப்பிரிவுகள் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவற்றையே” சிரிய குண்டு வீச்சுத் தாக்குதல் இலக்கு வைத்ததாகக் கூறியது.

உக்ரேனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதற்கு முன்பு, துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், “துருக்கி முன்பு செய்ததைப் போலவே இந்த தாக்குதலுக்கு எதிராகவும் பதிலடி கொடுத்தது என்பதுடன், பதிலடி கொடுப்பதை மேலும் தொடர்கிறது” என்று கூறினார். துருக்கிய ஹோவிட்ஸெர் மற்றும் F-16 ரக போர் விமான குண்டு வீச்சுத் தாக்குதலில் “30-35 [சிரிய] ஆட்சிப் படைகள்” கொல்லப்பட்டன என்று கூறி “நடந்து கொண்டிருக்கும் நடவடிக்கையில் சுமார் 40 நிலைகள் குறிவைக்கப்பட்டுள்ளன” என்றும் அவர் கூறினார். இந்நிலையில், 12 சிரிய துருப்புக்கள் கொல்லப்பட்டதாகவும், சுமார் 20 துருப்புக்கள் காயமடைந்ததாகவும் அடுத்தடுத்து வந்த செய்திகள் சுட்டிக்காட்டின.

எர்டோகன் மேலும், “எங்களது நாடு, எங்களது தேசம் மற்றும் இட்லிப்பில் உள்ள எங்கள் சகோதரர்களின், அதாவது, அல்கொய்தாவுடன் இணைந்த எஞ்சியுள்ள இஸ்லாமிய ஆயுதக்குழுக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எங்களது நடவடிக்கைகளைத் தொடர்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என்றும் அவர் கூறினார். அத்துடன், “துருக்கியின் வழியில் குறுக்கிட வேண்டாம்” என்றும் ரஷ்யாவை அவர் அச்சுறுத்தினார்.

ஆயினும், துருக்கிய துருப்புக்களின் தளநிலைகளை மாஸ்கோவிற்கு தெரியப்படுத்தியதாக துருக்கி கூறுவதை ரஷ்ய இராணுவம் மறுத்தது. RT செய்தி நிறுவனத்தின் படி, சிரிய நல்லிணக்கத்திற்கான ரஷ்ய மையம் இவ்வாறு அறிவித்தது: “இட்லிப் மோதல்தவிர்ப்பு மண்டலத்திற்குள் ரஷ்ய தரப்பினருக்கு தெரிவிக்காமல் துருக்கிய இராணுவப் பிரிவுகள் பெப்ரவரி 2 முதல் பெப்ரவரி 3 வரை இரவு நேரங்களில் முன்னோக்கி வந்த நிலையில், சராகிப்பிற்கு (Saraqib) மேற்கே பயங்கரவாதிகளை இலக்குவைத்து கொண்டிருந்த சிரிய அரசாங்க துருப்புக்களின் துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு ஆளாயின.

இட்லிப்பில் துருக்கியின் 12 இராணுவ கண்காணிப்பு நிலையங்களில் குறைந்தது 4 நிலைகள் சிரிய ஆட்சிப் படைகளால் முற்றுகையிடப்பட்டுள்ளன.

இட்லிப்பில் அல்கொய்தாவுடன் இணைந்த படைகளுக்கு எதிரான சிரியாவின் தாக்குதல் தொடர்பாக துருக்கிய அதிகாரிகளுக்கும், ரஷ்ய மற்றும் சிரிய அதிகாரிகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த மோதல் ஏற்பட்டது. மேலும் சமீபத்திய வாரங்களில் ரஷ்ய மற்றும் ஈரானிய ஆதரவுடைய சிரிய துருப்புக்கள் குறிப்பிடத்தக்க வெற்றிகளை அடைந்துள்ளன. அவர்கள் மாரெட் அல்-நுமான் (Maaret al-Numan) என்ற ஒரு மூலோபாய முக்கியத்துவமான நகரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஆதரவுடன் எர்டோகனுக்கு எதிராக 2016 இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு தொடங்கப்பட்ட பின்னர், கடந்த வாரம் முதல்முறையாக அவர் தனது “ரஷ்ய பங்காளியை” விமர்சித்தார் என்று கூறப்பட்டது. சிரிய அரசாங்க துருப்புக்களுக்கும் சிரியாவின் வடமேற்கு இட்லிப் மாகாணத்தில் குவிந்துள்ள மேற்கத்திய ஆதரவுடைய “கிளர்ச்சியாளர்களுக்கும்” இடையே கூட்டாக ரோந்து செல்லும் “இராணுவமகற்றப்பட்ட மண்டலத்தை” நிறுவுவதற்கான செப்டம்பர் 2018 சோச்சி நகரில் ஒப்பந்தத்திற்கு ரஷ்யா “இணங்கவில்லை” என்று அவர் குற்றம்சாட்டினார். மேலும், ரஷ்யா, ஈரான் மற்றும் துருக்கி இடையேயான அஸ்தானா நகரின் இடம்பெற்ற நடவடிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் “முடிந்து” போயின என்றும் அவர் கூறினார்.

வெள்ளிக்கிழமை எர்டோகன், “சிரியாவில் உள்ள நிலைமையை நாங்கள் கைகட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். … இராணுவ பலத்தை பயன்படுத்துவது உட்பட, எதைச் செய்யவும் நாங்கள் தயங்க மாட்டோம்” என்று மிரட்டினார்.

இதற்கு கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இவ்வாறு பதிலிறுத்தார்: “இட்லிப் மண்டலம் தொடர்பான சோச்சி ஒப்பந்தங்களுக்கு ரஷ்யாக முழுமையாக இணங்குகிறது,” என்றும், “இன்னமும் அப்பகுதியில் ஏராளமான பயங்கரவாதிகள் உள்ளனர்” என்றும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டு முதல் துருக்கி மற்றும் அதன் எதிர்த்தரப்பு சிரிய தேசிய இராணுவப் போராளிகளால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான அல்-பாப்பைச் சேர்ந்த துருக்கிய ஆதரவு இஸ்லாமிய ஆயுதக்குழுக்கள் சிரிய அரச படைகளுக்கு எதிராக சனிக்கிழமையன்று எதிர் தாக்குதலைத் தொடங்கினர். இதற்கு, அல்-பாப் மீது குண்டு வீசி ரஷ்ய விமானப்படை பதிலடி கொடுத்தது. மாஸ்கோவை பொறுத்தவரை, கடந்த வாரம் மட்டும் இஸ்லாமிய ஆயுதக்குழுக்களில் குறைந்தது 40 சிரிய சிப்பாய்களைக் கொன்றுள்ளனர். ரஷ்ய தாக்குதல்களுக்குப் பின்னர், பல துருக்கிய இராணுவ வாகனங்கள் காஃப்லோசின் (Kafrlosin) எல்லையை கடந்து சிரியாவிற்குள் நுழைந்தன என்று அல்-அரேபியா செய்தி ஊடகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

ரஷ்ய S-400 ரக விமானம் எதிர்ப்பு ஏவுகணைகளை துருக்கியில் நிலைநிறுத்துவது மற்றும் வாஷிங்டன் கண்டித்த TurkStream எரிவாயு குழாய் வழி அமைப்பு ஆகியவை தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையிலான இராணுவ மூலோபாய உறவுகள் வளர்ந்து வருகின்ற போதிலும், அங்காராவுக்கும் மாஸ்கோவுக்கும் இடையிலான ஸ்திரமற்ற கூட்டணி நவம்பர் 2015 முதல் வீழ்ச்சியடைந்து வருகிறது. அந்த நேரத்தில், சிரிய-துருக்கிய எல்லையில் ரஷ்ய குண்டு வீச்சு விமானம் ஒன்றை துருக்கிய ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தியதுடன், ரஷ்யாவையும் துருக்கியையும் மட்டுமல்லாது ஒட்டுமொத்த நேட்டோ கூட்டணியையும் போரின் விளிம்பிற்கு கொண்டு வந்தது.

இட்லிப் மாகாணத்தில் போராடும் சிரிய மற்றும் ரஷ்யப் படைகளை அமெரிக்க உயர் அதிகாரிகள் கண்டனம் செய்யும் நிலையில், துருக்கிய அரசாங்கம் வாஷிங்டனின் நெருக்கமான ஒத்துழைப்பை பெறுவதற்கு அதன் பக்கம் திரும்புவதாகத் தெரிகிறது. டிசம்பர் இறுதியில், ட்ரம்ப், “இட்லிப் மாகாணத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை ரஷ்யா, சிரியா மற்றும் ஈரான் நாடுகள் கொலை செய்கின்றன, அல்லது கொலை செய்யப் போகின்றன, அதைச் செய்யாதீர்கள்! இந்த படுகொலையைத் தடுக்க துருக்கி கடுமையாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது” என்று இட்லிப் பற்றி ட்வீட் செய்தார்.

அதேபோல, அமெரிக்க வெளியுறவுச் செயலரான மைக் பொம்பியோவும் கடந்த வாரம் இவ்வாறு அறிவித்தார்: “ரஷ்யா, ஈரானிய ஆட்சி, ஹிஸ்புல்லா மற்றும் அசாத் ஆட்சி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த படைகள் இட்லிப் மற்றும் மேற்கு அலெப்போ மாகாணங்களின் மக்கள் மீது பெரியளவிலான தாக்குதலை நடத்தி வருவதாகக் கூறப்படும் வடமேற்கு சிரியாவின் நிலைமையை அமெரிக்கா மிகுந்த கவலையுடன் கண்காணித்து வருகிறது.”

இதற்கிடையில், அமெரிக்க ஐரோப்பிய கட்டளையகத்தின் தளபதியும், ஐரோப்பாவின் நேட்டோ உயர் கூட்டுப் படைகளின் தளபதியுமான அமெரிக்க விமானப்படை ஜெனரல் டோட் வோல்டர்ஸ் முக்கியமாக சிரியா தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக ஜனவரி 30 அன்று அங்காராவுக்கு விஜயம் செய்தார். அப்போது அவர் பாதுகாப்பு அமைச்சரையும், உயர் இராணுவ தளபதியையும் சந்தித்தார்.

சிரியாவில் நிலவும் கடுமையான போர் ஆபத்து என்பது, எர்டோகன் அரசாங்கத்தின் ஆதரவுடன் ஏகாதிபத்திய சக்திகளால் 2011 முதல் சிரியாவில் நடத்தப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கான கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால பினாமிப் போரின் நேரடி தயாரிப்பு ஆகும். லிபியாவில் நடந்த 2011 நோட்டோ போரும், மற்றும் அதன் விளைவாக அசாத் ஆட்சிக்கு எதிராக இஸ்லாமிய ஆயுதக்குழுக்கள் ஆயுதமேந்தியமையும், எகிப்திலும் துனிசியாவிலும் ஏகாதிபத்திய ஆதரவுடைய சர்வாதிகாரிகளை கவிழ்த்திய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சிகளுக்கான ஏகாதிபத்திய சக்திகளின் பதிலிறுப்பாக இருந்தன. இந்த பிராந்தியத்தில் ரஷ்ய மற்றும் ஈரானிய செல்வாக்கை கீழறுப்பதும், மற்றும் அந்த நடவடிக்கைகளுக்கான தளமாக சிரியாவை பயன்படுத்துவதும் அவர்களின் இலட்சியமாக இருந்தது.

துருக்கிய மற்றும் சிரிய துருப்புக்களுக்கு இடையிலான மோதலானது, இந்த தசாப்த கால போரின்போது ஏகாதிபத்திய சக்திகள் திரும்பத்திரும்ப செய்த சூழ்ச்சிகள் மற்றும் மூலோபாய மாற்றங்களின் இரத்தக்களரியான விளைவாகும்.

ஆரம்பகட்டத்தில், வாஷிங்டன், பாரசீக வளைகுடா எண்ணெய் ஷேக் இராச்சியங்கள், மற்றும் துருக்கி ஆகியவற்றின் தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள், பல்லாயிரக்கணக்கான அல்கொய்தாவுடன் இணைந்த இஸ்லாமியர்களை சிரியாவிற்குள் குறிப்பாக துருக்கி மூலமாக அனுப்பின. CIA ஆல் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த நிகழ்முறை, வாஷிங்டனின் சொந்த Frankenstein’s monster என்ற கற்பனை பாத்திரத்தைப் போல, ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு (ISIS) என்ற இயக்கத்தை உருவாக்கியது. 2014 ஆம் ஆண்டில், ISIS சிரியாவிலிருந்து ஈராக் மீது படையெடுத்து, வாஷிங்டனின் ஈராக்கிய கைப்பாவை அரசாங்கத்தை அச்சுறுத்தியதன் பின்னர், “ISIS க்கு எதிரான போர்” என்று அழைக்கப்படும் ஒரு புதிய தலையீட்டை நேட்டோ சக்திகள் ஈராக்கிலும் சிரியாவிலும் தொடங்கின.

சிரியாவில் அவர்களது இஸ்லாமிய கூட்டணிகள் பிளவுபடுத்தப்பட்டு தோற்கடிக்கப்பட்ட நிலையில், சிரியாவிற்குள் குர்திஷ்-தேசியவாத மக்கள் பாதுகாப்பு பிரிவுகள் (YPG) என்ற உள்ளூர் குடிப்படையினரை தங்களது முக்கிய பினாமி சக்தியாக ஏகாதிபத்திய சக்திகள் மாற்றின. எவ்வாறாயினும், கடந்த 35 ஆண்டுகளாக தென்கிழக்கு துருக்கியில் ஒரு இரத்தக்களரியான எதிர்ப்புத் தாக்குதலுக்கு எதிராக அங்காரா போராடி வருகின்ற குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியுடன் (PKK) இணைக்கப்பட்ட YPG ஐ அங்காரா துருக்கியின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான ஒரு அடிப்படை அச்சுறுத்தலாக கருதுகின்றது. இந்நிலையில், YPG க்கு எதிராக மாஸ்கோவிற்கு நெருக்கமாக எர்டோகன் நகர்ந்தமையானது, ஜூலை 2016 இல், துருக்கியில் அமெரிக்க மற்றும் ஜேர்மனிய ஆதரவுடைய ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு இட்டுச்சென்றதுடன் மற்றும வடக்கு சிரியாவில் குர்திஷ் படைகளுக்கு எதிரான துருக்கியின் அடுத்தடுத்த ஊடுருவல்களுக்கும் வழிவகுத்தது.

கடந்த ஆண்டு, துருக்கிய மற்றும் சிரிய ஆட்சிப் படைகள் இப்பகுதியில் தலையிட்டதுடன் வாஷிங்டன் வடக்கு சிரியாவில் தனது குர்திஷ் கையாட்களை கைவிட்டது. அந்த நேரத்தில் உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்த படி, “ஈரான் ஆதரவு பெற்ற சிரிய இராணுவம் துருக்கிய ஆக்கிரமிப்புப் படைகளையும் அவர்களது அல்கொய்தாவுடன் இணைந்த சிரிய “கிளர்ச்சி” கூட்டணியையும் எதிர்கொள்ள வடக்கு நோக்கி படைநகரத்திய நிலையில், மத்திய கிழக்கும் உலகமும் முழுமையான போரின் விளிம்பில் உள்ளன. … மூன்று தசாப்த கால ஏகாதிபத்திய போரினால் மத்திய கிழக்கில் உருவாக்கப்பட்ட கட்டுக்கடங்காத குழப்பத்திற்குள் துருக்கி மூழ்கி போயுள்ளது.”

கடந்த ஆண்டு இந்த பிராந்தியத்தில் துருக்கி மற்றும் சிரிய அரசாங்கப் படைகளுக்கு இடையேயான ஒரு ஸ்திரமற்ற உடன்பாடு குறித்து மாஸ்கோ பேச்சுவார்த்தை நடத்தினாலும், அந்த உடன்பாடு இப்போது முறிந்துவிடும் விளிம்பில் உள்ளது. குறிப்பாக 2011 நேட்டோ போரினால் லிமியாவில் தூண்டப்பட்ட உள்நாட்டுப் போரில் போட்டிக்கான தரப்பினரை அவர்கள் ஆதரிப்பதால் அங்கு  துருக்கிக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றது.

அனைத்திற்கும் மேலாக, பிராந்திய அளவிலான போருக்கு வாஷிங்டன் ஈரானை அச்சுறுத்துவது போல, அது இன்னமும் சிரியாவில் பதட்டங்களை அதிகரித்து வருகிறது. சிரியாவின் வடகிழக்கு Deir Ezzor மாகாணத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை அதன் YPG பினாமிகளுடன் சேர்ந்து தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது. மேலும் ஜனவரி 3 ஆம் தேதி பாக்தாத்தில் ஈரானிய ஜெனரல் காசிம் சுலைமானியை ட்ரோன் படுகொலை செய்ததன் மூலம் இப்பகுதி முழுவதிலுமாக பதட்டங்களுக்கு எரியூட்டியுள்ளது. மத்திய கிழக்கு எங்கிலுமான ரஷ்யா மற்றும் சீனாவுடனான “பெரும் சக்தி” மோதலுக்கான பெரியளவிலான தயாரிப்பின் ஒரு பகுதியாகவுள்ள இந்த கொள்கைகள், அணுவாயுத சக்திகளுக்கு இடையிலான முழுமையான போரின் விளிம்பிற்கு உலகை கொண்டு வருகின்றன.