ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump emerges strengthened after Democrats’ impeachment debacle

ஜனநாயகக் கட்சியின் பதவிநீக்க குற்றவிசாரணை தோல்விக்குப் பின்னர் ட்ரம்ப் பலத்துடன் எழுகிறார்

Joseph Kishore—Socialist Equality Party candidate for US president
6 February 2020

புதன்கிழமை அமெரிக்க செனட், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அதிகார துஷ்பிரயோகம் (52 க்கு 48) மற்றும் காங்கிரஸ் சபையை மீறியமை (53 க்கு 47) ஆகிய குற்றச்சாட்டுகளில் இருந்து விடுக்க வாக்களித்தது. பெரிதும் கட்சி-சார்ந்த அந்த வாக்குகள் கடந்த இலையுதிர் காலத்தில் ஜனநாயகக் கட்சியால் கொண்டு வரப்பட்ட பதவிநீக்க குற்றவிசாரணை நடைமுறையை நிறைவு செய்கிறது.

இறுதி விளைவு ஜனநாயகக் கட்சிக்கு ஓர் அரசியல் தோல்வியாகும், இது ட்ரம்பைப் பலப்படுத்த மட்டுமே செய்துள்ளது.


ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று பெப்ரவரி 4, 2020 இல் வாஷிங்டனின் தலைமை செயலக சபை வளாகத்தில் காங்கிரஸின் கூட்டு கூட்ட அமர்வுக்கு அவரின் மாநில கூட்டாட்சி மன்ற உரை வழங்குகிறார், அதை துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் சபாநாயகர் நான்சி பெலோசி பார்த்துக் கொண்டிருக்கின்றனர். (படம்: அசோசியேடெட் பிரஸ் வழியாக லெஹ் மில்லிஸ்/ பூல்)

ட்ரம்ப் இன்று மதியம் தேசியளவில் ஓர் உரை வழங்க உள்ளார். ட்வீட்டரில் அவர் குறிப்பிட்டதைப் போல, இதன் நோக்கம் "இந்த பதவிநீக்க குற்றவிசாரணை புரளி மீது நம் நாட்டின் வெற்றியை விவாதிப்பதாக" இருக்கும். ட்ரம்ப் 2024, ட்ரம்ப் 2028, ட்ரம்ப் 2032... ட்ரம்ப் 4EVA என்று பல அடையாள குறியீடுகளைக் காட்டிய டைம்ஸ் பத்திரிகையின் ஓர் அட்டைப்படத்தை ட்ரம்ப் புதன்கிழமை மதியம் மீண்டும் ட்வீட் செய்தார். இது அரசியலமைப்பு அதிகார வரம்புகளைக் கடந்து பதவியில் இருப்பதற்கான அவரின் முந்தைய அச்சுறுத்தல்களின் மறுவெளிப்பாடாக உள்ளது.

இறுதி வாக்கெடுப்பின் முடிவு ஐயத்திற்கிடமின்றி இருந்த நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்ப் அவரின் மாநில கூட்டாட்சி மன்ற உரை வழங்குவதற்குக் காங்கிரஸில் அரங்கை வழங்கினர். ட்ரம்ப் அவரின் அரசியல் எதிர்ப்பாளர்களைக் கண்டிக்கவும், “சோசலிசத்திற்கு" எதிராக சீறுவதற்கும் மற்றும் பெருமளவில் வலதுசாரி முன்மொழிவுகளைப் பிரஸ்தாபிக்கவும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தினார்.

ட்ரம்ப் அவரின் ஜனநாயக விரோத மற்றும் எதேச்சதிகார நடைமுறைகளை இன்னும் முன்னோக்கி அழுத்தமளிக்க, குற்றவிசாரணையிலிருந்து அவரின் விடுவிப்பைப் பயன்படுத்தக் கூடும். செவ்வாயன்று வாஷிங்டன் போஸ்டில் எழுதிய ஜோனாதன் துர்லெ செனட் சபையில் பதவிநீக்க குற்றவிசாரணையின் போது ட்ரம்பை நியாயப்படுத்தி Alan Dershowitz முன்வைத்த வாதத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டினார். “அதிகார துஷ்பிரயோகமோ" அல்லது "காங்கிரஸை மீறியமையோ" பதவிநீக்கத்திற்குரிய ஒரு குற்றமல்ல என்ற Dershowitz இன் வாதம் தான் ட்ரம்பின் பாதுகாப்புக்கான மத்திய அச்சாக இருந்தது.

“பின்னர் ஜனாதிபதியின் பாதுகாப்பு இந்த மிதமிஞ்சிய மற்றும் உறைய வைக்கும் வாதத்துடன் பிரித்தெடுக்க முடியாத படிக்கு பிணைந்திருந்தது,” என்று துர்லெ எழுதினார், இந்த பாதுகாப்பு இப்போது செனட்டால் ஆமோதிக்கப்படுகிறது.

David Von Drehle எழுதிய, போஸ்டில் மற்றொரு கருத்துரை, கடந்த இலையுதிரில் 39 சதவீதத்தில் இருந்த ட்ரம்பின் செல்வாக்கு இந்த பதவிநீக்க குற்றவிசாரணை நிகழ்முறையின் முடிவில் 49 சதவீதத்திற்கு அதிகரித்திருப்பதை எடுத்துக்காட்டிய ஒரு Gallup கருத்துக்கணிப்பை மேற்கோளிட்டிருந்தது — "அவரின் ஜனாதிபதி பதவி காலத்தில் இதுவரையிலான அதிகபட்ச அளவு மற்றும் பராக் ஒபாமாவை விட குறைந்தபட்சம் மூன்று புள்ளிகளாவது அதிகமாக" இருப்பதை அவரின் மறுதேர்வு ஆண்டின் பெப்ரவரி ஆரம்பத்தில் கொண்டாடக்கூடும்."

அதே கருத்துக்கணிப்பை மேற்கோளிட்டு, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தலையங்க குழு குரூர திருப்தியுடன், ஜனநாயகக் கட்சியினர் ஒருவேளை “அவர் மீது குற்றவிசாரணை நடத்தி [ட்ரம்ப்] இரண்டாவது முறையாக ஜெயிக்க உதவி" இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டது.

இது, ட்ரம்புக்கு எதிரான ஜனநாயகக் கட்சியின் பிரசாரத்திலும் அதில் சம்பந்தப்பட்ட வர்க்க நலன்களிலும் பயன்படுத்தப்பட்ட அணுகுமுறையின் விளைவாகும். ஜனநாயகக் கட்சி மூலோபாயத்தில் ஒரு நிலையான அம்சம் இருக்கிறதென்றால், அது, ட்ரம்ப் நிர்வாகம் மீதான மக்கள் வெறுப்பைத் தணிப்பதும் மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் எதிர்ப்பு இடதிற்குத் திரும்பிவிடாமல் வலதுக்கு திருப்புவதை உறுதிப்படுத்தி வைப்பதுமாகும்.

மூன்றாண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்கு முன்னர் ட்ரம்ப் பதவியேற்பு விழா, புலம்பெயர்ந்தவர்கள் மீதான அவரின் தாக்குதல்களுக்கு எதிராகவும், அகதிகளுக்கு எதிரான அவரின் இனவாத கொள்கைகள், அவரது நிர்வாகத்தின் உயர்மட்ட பதவிகளில் அவர் பாசிசவாதிகளை நியமித்ததற்கு எதிராகவும், அவரின் பெருநிறுவன சார்பு கொள்கைகள் மற்றும் வரி வெட்டுக்கள், அவரின் இராணுவவாத அச்சுறுத்தல்கள் மற்றும் சமூக வேலைத்திட்டங்கள் மீதான அவரின் தாக்குதல்களுக்கு எதிராகவும் நடந்த போராட்டங்களுக்கு உடனடியாக பின்னர் நடத்தப்பட்டது. அவர் பதவியேற்ற மறுநாளே, ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பங்கெடுத்திருந்த, நாடெங்கிலும் அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய ஒரு நாள் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அதுபோன்ற பிரச்சினைகள் ஒவ்வொன்றின் மீதும் மக்கள் எதிர்ப்பு நசுக்கப்பட்டதுடன், ஜனநாயகக் கட்சியினர் முழுமூச்சாக அவர்களின் பிரச்சாரத்தில் ட்ரம்புக்கு எதிராக வெளியுறவு கொள்கை விவகாரத்தில் ஒருமுனைப்பட்டிருந்ததால் அந்த எதிர்ப்பு தடம் புரள செய்யப்பட்டது. குறிப்பாக, ட்ரம்ப் ரஷ்யாவுக்கு எதிராக போதுமான ஆக்ரோஷத்துடன் சண்டையைப் பின்தொடரவில்லை என்று இராணுவ மற்றும் உளவுத்துறை ஸ்தாபகத்தின் செல்வாக்கான கன்னைகளுக்குள் நிலவிய கவலைகள் மீதே அவர்களின் எதிர்ப்பு மையமிட்டிருந்தது.

அந்த தேர்தலுக்கு முன்னரே கூட, “நமது ஜனநாயகத்திற்குக் குழி பறிக்கவும்" மற்றும் அமெரிக்காவுக்குள் "பிளவுகளை விதைக்கவும்" கிரெம்ளின் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் வழிநடத்திய பாரியளவிலான சூழ்ச்சியே ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின் மையப் புள்ளியாக இருந்தது என்ற சொல்லாடலை ஜனநாயகக் கட்சியினர் ஜோடிக்க தொடங்கி இருந்தனர்.

1950 களின் மக்கார்த்தியிச ஆத்திரங்கள் மற்றும் ஜோன் பிர்ச் சமூகம் தந்திரமாக கம்யூனிச-விரோதத்தை சந்தைப்படுத்தியமை ஆகியவற்றுடன் மட்டுமே ஒப்பிடத்தக்க அந்த ரஷ்ய-விரோத பிரச்சாரம் விஷமத்தனமான பரிமாணங்களை ஏற்றது. ரஷ்யா ஒரு சில நூறாயிரம் டாலர்களை —இது ஜனாதிபதி பிரச்சாரக் குழுவிற்காக பெருநிறுவனங்களும் பணக்காரர்களும் செலவிட்ட பில்லியன்களில் ஒரு சிறிய பகுதி— சமூக ஊடக விளம்பரங்களுக்குச் செலவிட்டது என்ற ஆதாரமற்ற வாதத்தை, ஜனநாயகக் கட்சி அமெரிக்காவுக்கு எதிரான ஒரு "ரஷ்ய சதி" என்றும், இதில் ட்ரம்ப் புட்டினின் கைப்பாவையாக சேவையாற்றினார் என்றும் ஆரவாரமான குற்றச்சாட்டுகளுக்குள் திருப்பியது.

இந்த நிகழ்வுபோக்கு நெடுகிலும், ட்ரம்ப் சம்பந்தமாக ஜனநாயகக் கட்சி ஒரு பித்துப் பிடித்த தன்மையை ஏற்றிருந்தது. அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நலன்களைப் பாதிக்கும் வெளியுறவு கொள்கை விடயங்களில் நிர்வாகத்தை எதிர்த்த போதினும், அவர்கள் உடன்பட்டிருந்த ஆளும் வர்க்க கொள்கையின் முக்கிய அம்சங்களில், குறிப்பாக நிதியியல் செல்வந்த தட்டுக்களைத் தொடர்ந்து கொழிக்க வைக்கும் சமூக பொருளாதார கொள்கைகளில், அவருடன் இணைந்து செயல்பட உத்வேகமாக இருந்தனர்—இருக்கின்றனர்.

ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் உடனடியாக, “வரவிருக்கும் நமது ஜனாதிபதி வெற்றிகரமாக செயல்படுவதை உறுதிப்படுத்தும் ஒரு இடைமருவு மாற்றத்திற்கு ஒத்துழைப்பதே,” அவரின் “முதல் முன்னுரிமை” என்று ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அறிவிப்புடன் இது தொடங்கியது. இந்த தேர்தல் "ஒரே குழுவின்" இரண்டு அணிகளுக்கு இடையே நடக்கும் "உள்குழப்பம்" தான் என்ற அறிவிப்பையும் ஒபாமா அத்துடன் சேர்த்திருந்தார். பின்னர் ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பின் பெருநிறுவன வரி வெட்டுக்கள் நிறைவேற்றப்படுவதையும், புலம்பெயர்ந்தோர் மீதான அவரின் தாக்குதல்கள், அவரின் சாதனையளவிலான இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கு மற்றும் வெனிசுவேலா, சீனா மற்றும் ஏனைய நாடுகளுக்கு எதிரான அவரின் ஆக்ரோஷமான நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்துவதில் அவருடன் ஒத்துழைத்தனர்.

ட்ரம்புக்கு எதிரான எந்தவொரு பாரிய மக்கள் இயக்கம் குறித்தும் பீதியுற்றும் எதிர்த்தும், ஜனநாயகக் கட்சியினர் அரண்மனை சதியின் அணுகுமுறைகளைப் பயன்படுத்தி வெள்ளை மாளிகையுடனான அவர்களின் மோதலைப் பின்தொடர்ந்தனர் — திரைக்குப் பின்னால் நடந்த சூழ்ச்சிகளில் உளவுத்துறை முகமைகளும் மற்றும் அரசுக்குள் அதிருப்தி கன்னைகளும் சம்பந்தப்பட்டிருந்தன.

ஜனநாயகக் கட்சியினர் ("போலி செய்திகளை" எதிர்க்கிறோம் என்ற பெயரில்) பேச்சு சுதந்திரத்தை ஒடுக்குவதற்கான அவர்களின் சொந்த கோரிக்கைகளுக்கு அழுத்தமளிக்கவும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜை அவர்கள் தொல்லைக்குட்படுத்துவதை சட்டப்பூர்வமாக்கவும் ரஷ்ய-விரோத பிரச்சாரத்தைப் பயன்படுத்தி உள்ளனர்.

ரஷ்ய "தலையீடு" குறித்து முன்னாள் FBI இயக்குனர் ரோபர்ட் முல்லெர் தலைமையிலான விசாரணை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ஜனநாயகக் கட்சியினர் அவர்களின் நடவடிக்கையைத் தொடர இந்த பதவிநீக்க குற்றவிசாரணை பிரச்சாரத்தைத் தொடங்கினர். அதிகார துஷ்பிரயோகத்திற்கு அடித்தளமான கூறப்படும், "சமரச உடன்பாடு" என்று ட்ரம்புக்கு எதிராக குற்றஞ்சாட்டப்படுவதில், உக்ரேனுக்கு, இது கிழக்கு உக்ரேனில் ரஷ்ய ஆதரவிலான படைகளுடன் ஓர் இராணுவ மோதலில் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு இராணுவ உதவியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தமையும் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது.

அரசுக்குள் ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள் பயன்படுத்திய அணுகுமுறைகள் அவர்களை உத்வேகப்படுத்தும் சமூக மற்றும் அரசியல் நலன்களால் தீர்மானிக்கப்படுகின்றன. இனவாத மற்றும் பாலியல் அடையாள அரசியல் மூலமாக தங்களின் நலன்களைப் பின்தொடரும் உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் தனிச்சலுகை கொண்ட பிரிவுகளுடன் அணி சேர்ந்துள்ள ஜனநாயகக் கட்சி, வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ உளவுத்துறை முகமைகளின் ஒரு கட்சியாகும்.

ஜனநாயகக் கட்சியின் அரண்மனை சதி தோல்வியில் முடிந்துள்ளது. இப்போது ட்ரம்புக்கு எதிராக அபிவிருத்தி செய்யப்பட வேண்டியது சோசலிச இயக்கமாகும். அதுவொன்றே, ட்ரம்பின் பிற்போக்குத்தனத்திற்கு எதிராகவும் மற்றும் ஜனநாயக கட்சியில் உள்ள கோழைத்தனமான அவரின் எதிர்ப்பாளர்களுக்கு எதிராகவும் ஜெயிக்கக் கூடியதாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி (SEP) தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர சோசலிச தலைமையைக் கட்டமைக்க அதன் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளது. கடந்த இரண்டாண்டுகளாக, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் பாரிய போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த சமூக சக்தியினால் தான் ட்ரம்பைக் கீழிறக்க முடியும், ஏகாதிபத்திய போரை முடிவுக்குக் கொண்டு வர முடியும், சர்வாதிகாரம் மற்றும் பாசிசவாத முனைவை நிறுத்த முடியும், முதலாளித்துவ சுரண்டல் மற்றும் சமத்துவமின்மைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

தொழிலாள வர்க்கத்தின் இந்த இயக்கம் ஒரு நனவுபூர்வ சோசலிச, புரட்சிகர, சர்வதேசியவாத வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கால் வழிநடத்தப்பட வேண்டும். இந்த 2020 தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியை ஆதரிக்குமாறும் மற்றும் SEP இலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் அதன் சகோதரத்துவ கட்சிகளிலும் இணைய முடிவெடுக்குமாறும் நாங்கள் அனைத்து தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

SEP தேர்தல் பிரச்சாரம் குறித்து அதிக தகவல்களைப் பெறுவதற்கு, உள்நுழைவதற்கு, socialism2020.org தளத்தைப் பார்வையிடவும்.