Print Version|Feedback
Brazilian President Bolsonaro guest of honor at India’s Republic Day
இந்தியாவின் குடியரசு தின விழாவில் பிரேசில் ஜனாதிபதி போல்சொனாரோ கௌரவ விருந்தினராக பங்கேற்பு
By Tomas Castanheira
30 January 2020
பிரேசிலின் பாசிசவாத ஜனாதிபதி ஜாய்ர் போல்சொனாரோ, இந்தியாவின் வருடாந்திர ஜனவரி 26 குடியரசு தின விழா அணிவகுப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் கௌரவ விருந்தினராக பங்கேற்றமை, அவரது பாரதீய ஜனதா கட்சி (BJP) அரசாங்கத்தின் தீவிர வலதுசாரி தன்மை குறித்து உலகிற்கு மற்றொரு தெளிவான செயல் விளக்கத்தை வழங்குகிறது.
போல்சொனாரோ, அமைச்சர்கள் மற்றும் வர்த்தகர்கள் அடங்கிய ஒரு பிரதிநிதித்துவக் குழுவுடன் வெள்ளியன்று இந்தியாவிற்கு வந்தார், அவர்களில் 10 பிரேசிலிய ஆயுத உற்பத்தியாளர்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் அடங்குவர். பிரேசில் மற்றும் இந்திய அரசாங்கங்கள், போல்சொனாரோவின் விஜயத்தை இரு நாடுகளின் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் உறவுகளை பெரிதும் விரிவுபடுத்துவதற்கான, மற்றும் இருதரப்பு மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குவதற்கான வாய்ப்பாக ஊக்குவித்தன. குடியரசு தின கொண்டாட்டத்திற்கு முன்னதாக, மோடியும் போல்சொனாரோவும் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பிற விடயங்களை உள்ளடக்கிய 15 இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
புது தில்லியில் மோடியும் (இடது) போல்சொனாரோவும் [நன்றி: ஆலன் சாண்டோஸ் / PR]
ஒரு கூட்டறிக்கையில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்கு இடையிலுள்ள வர்த்தக மதிப்பான 7 பில்லியன் அமெரிக்க டாலரை வருடத்திற்கு 15 பில்லியன் அமெரிக்க டாலர் என்றளவிற்கு இரட்டிப்பாக்குவதற்கான அவற்றின் நோக்கத்தை அரசாங்கங்கள் உறுதிப்படுத்தின. குறிப்பாக, ஈத்தனோல் உற்பத்தியில் உத்தேசிக்கப்பட்ட கூட்டாண்மைகளை ஏற்படுத்தியும், இந்தியாவின் பிரேசில் எண்ணெய் இறக்குமதியை அதிகரித்தும் ஒத்துழைக்க வேண்டிய ஒரு துறையாக எரிசக்தி துறை குறிப்பிடப்பட்டது. பொருளாதார ஆய்வாளர்களின் கருத்துப்படி, வெனிசுவேலாவிலிருந்து தற்போது இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கு மாற்றாக இது கண்டறியப்பட்டது என்ற நிலையில், வாஷிங்டனின் கோரிக்கையை எதிர்கொள்ள இந்தியாவிற்கு இது உதவும்.
இராணுவ உறவுகளைப் பொறுத்தவரை, ஆயுதங்கள் மற்றும் ஆயுத அமைப்பு-முறைகளின் உலகின் இரண்டாவது மிகப்பெரிய வெளிநாட்டு கொள்முதலாளரான இந்தியாவுக்கான ஆயுத ஏற்றுமதியாளராக தனது நிலையை உறுதிப்படுத்த பிரேசில் அரசாங்கம் விரும்புகிறது. ஆனால் தற்போது நடைமுறையில் ஏற்றுமதி எதுவும் செய்யபடாத நிலையில், இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவிற்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கான ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு பிரேசில் இலக்கு வைத்துள்ளது.
இந்தப் பயணத்தின் விளைவாக, புது தில்லியும் பிரேசிலும் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்புக்கான கூட்டு செயற்குழுவை உருவாக்குவதற்கு ஒப்புக்கொண்டன. மேலும் இது, பிரேசிலிய ஆயுத உற்பத்தியாளர் டாரஸ் (Taurus), மற்றும் எஃகு தயாரிப்பாளர் ஜிண்டால் (Jindal) மற்றும் அதன் துணை ஆயுத நிறுவனமான ஜிண்டால் டிஃபென்ஸ் (Jindal Defense) ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு கருத்துக்களத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை, அந்த நிறுவனங்கள் இந்தியாவில் ஒரு சிறிய ஆயுத உற்பத்தி நிறுவனத்தை கட்டமைப்பதற்கான கூட்டு முயற்சியை மேற்கொள்ளவிருப்பது பற்றி அறிவித்தன. இந்த முயற்சி, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு பதிலீடாக உள்நாட்டு உற்பத்தி பொருட்களை உருவாக்குவது, மற்றும் சீனாவுக்கு மாற்று பூகோள அளவிலான உற்பத்தி சங்கிலி மையமாக இந்தியாவை எழுச்சி பெறச் செய்வது ஆகிய இரண்டையும் ஊக்குவிக்கும் மோடியின் “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” கொள்கையுடன் ஒத்துப் போகிறது.
இந்தியாவில் போல்சொனாரோவிற்கு வழங்கப்பட்ட இராணுவ வரவேற்பு
அடுத்த ஐந்து ஆண்டுகளில், 500 மில்லியன் டாரஸ் தயாரிப்பிலான துப்பாக்கிகளை இந்திய அரசாங்கம் கொள்முதல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. திங்கட்கிழமை அறிவிப்பின் விளைவாக, பிரேசில் பங்கு சந்தையில் டாரஸின் பங்குகள் அதிகரித்துள்ளன.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெரிய விண்வெளி நிறுவனமான Embraer உருவாக்கிய ஒரு உயர்தர இராணுவ போக்குவரத்து விமானத்தை இந்தியா விமானப் படைக்கு விற்பதற்கான சாத்தியம் இருப்பது உட்பட, இன்னும் பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுவதற்கான வேலைகள் நடப்பதாகக் கூறப்படுகிறது.
பிரேசில் ஜனாதிபதியின் மகனும், கூட்டாட்சி சட்டமன்ற உறுப்பினருமான எடுவார்டோ போல்சொனாரோ, இந்தியாவிற்கு வந்த பிரதிநிதித்துவக் குழுவில் அங்கம் வகித்தார் என்பதுடன், ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கான பூகோள அளவிலான மையமாக பிரேசிலை ஊக்குவிப்பதில் அவர் மிகவும் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக, மோசமான சுரண்டலுக்கு உள்ளாகியுள்ள தொழிலாளர் சக்தியால் அவர்கள் கவர்ந்திழுக்கப்படுவார்கள் என்று கணக்கிட்டு, பிரேசிலில் கட்டமைக்கும் வெளிநாட்டு ஆயுத உற்பத்தியாளர்கள் மீதான அதிகாரத்துவ தடைகளை நீக்குவதற்கு அவர் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
மோடி மற்றும் போல்சொனாரோவால் கையெழுத்திடப்பட்ட பல ஒப்பந்தங்கள் குறித்த பரபரப்பு ஒருபுறம் இருந்தபோதிலும், இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி தொடர்பான நீண்டகால வர்த்தக மோதலை தீர்க்க முடியவில்லை. பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் குவாத்தமாலா ஆகியவை அரசாங்கத்தின் மானியத் திட்டத்துடன் உலக சர்க்கரை சந்தையில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதாக குற்றம் சாட்டுகின்றன. அத்தகைய புகார்கள் குறித்து உலக வர்த்தக அமைப்பு கடந்த ஆண்டு முறையான விசாரணையைத் தொடங்கியது. போல்சொனாரோவின் விஜயம் இந்திய சர்க்கரை விவசாயிகளின் எதிர்ப்பைத் தூண்டியது, அதாவது பிரேசிலுடனான எந்தவொரு ஒப்பந்தமும் தங்கள் செலவில் இருக்கும் என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்தியாவும் பிரேசிலும் சீனாவிற்கு அடுத்ததாக உலகின் இரண்டு மிகப்பெரிய “வளர்ந்து வரும்” பொருளாதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன, அதேவேளை பெய்ஜிங்கின் வளர்ந்து வரும் செல்வாக்கிற்கு எதிரிடையாக இவ்விரு நாடுகளையும் மேம்படுத்தும் ஒரு முயற்சியில் அவற்றின் வலதுசாரி அரசாங்கங்களுடனான உறவுகளை வளர்க்க வாஷிங்டன் முயன்று வருகிறது.
மோடியின் கீழ், தென் சீனக் கடலில் வாஷிங்டனின் ஆத்திரமூட்டும் போக்கை அப்படியே எதிரொலித்து, இந்தியா தனது தளங்களையும் துறைமுகங்களையும் அமெரிக்க போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களின் வழமையான பயன்பாட்டிற்கு திறந்து வைத்துள்ளதுடன், அமெரிக்கா மற்றும் அதன் பிரதான ஆசிய-பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் “the Quad” என்னும் நேட்டோ பாணியிலான இராணுவ மூலோபாய கூட்டணியையும் அது உருவாக்கியுள்ளது.
போல்சொனாரோவும் சீன-எதிர்ப்பு பிரச்சாரம் செய்ததுடன், பிரேசிலின் பொருளாதாரம் சீனாவைச் சார்ந்திருப்பதை குறைப்பதற்கு நோக்கம் கொண்டுள்ளதையும் வெளிப்படுத்தியுள்ளார். என்றாலும், உண்மை என்னவென்றால், இரு தலைவர்களுக்கிடையில் அறிவிக்கப்பட்ட இலக்குகள் வார இறுதிக்குள் எட்டப்பட்டாலும் கூட, பிரேசிலிய-இந்திய இருதரப்பு வர்த்தகம் என்பது பிரேசிலுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக மதிப்பில் வெளிப்படையாக பத்தில் ஒரு பங்காகவே இருக்கும்.
மோடிக்கும் போல்சனாரோவிற்கும் இடையிலான சந்திப்பு உலக அரங்கில் மிகவும் பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கான பொதுவான உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அவர்கள், தங்களது கூட்டு அறிவிப்பின் நீண்ட பத்தியை “சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுதல்” என்று அழைத்தனர். மேலும், “பெரியளவிலான உளவுத்துறை பகிர்வு உட்பட, பயங்கரவாதத்தையும் வன்முறை மிக்க தீவிரவாதத்தையும் கட்டுப்படுத்த வலுவான சர்வதேச கூட்டாண்மையை” உருவாக்குவதிலும், அத்துடன் “ஒவ்வொரு நாட்டினாலும் அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒத்துழைப்பதிலும்” அவர்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாடு குறித்து அறிவித்தனர்.
இது ஒருபுறம், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் பெயரில் ஈரானிய ஜெனரல் காசிம் சுலைமானியை படுகொலை செய்தது போன்ற தனது ஆக்கிரமிப்பு மற்றும் போர்க்குற்றங்களை நியாயப்படுத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெளியுறவுக் கொள்கையுடனான அவர்களது ஒத்துழைப்பைக் குறிக்கிறது. மறுபுறம், “பயங்கரவாத அச்சுறுத்தல்” என்று “ஒவ்வொரு நாடும்” சுதந்திரமாக அடையாளம் காணக்கூடிய எந்தவொரு சமூக எதிர்ப்பையும் வன்முறையால் அடக்குவதற்கான உரிமையை இரு அரசாங்கங்களும் கோருகின்றன.
இது ஊகம் அல்ல. போல்சொனாரோ சமூக ஆர்ப்பாட்டங்களை பயங்கரவாத செயல்கள் என்று அழைப்பதோடு, பயங்கரவாத சட்டத்தின் கீழ் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த பிரேசிலிய காங்கிரஸ் சட்டங்களை ஊக்குவித்து அதேவேளை, இந்திய அரசாங்கம் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் பெயரில் காஷ்மீர் மற்றும் அதன் 13 மில்லியன் மக்கள்தொகை மீது முற்றுகையை திணித்துள்ளது, மேலும் இந்தியாவின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு (Unlawful Activities Prevention) சட்டத்தின் கீழ் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களை சுமத்தி சமூக ஆர்வலர்கள் மீது ஜோடிப்பு வழக்குகளை தொடுத்துள்ளது.
தில்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தற்போதைய பிரச்சாரத்தில், ஜனவரி 26 குடியரசு தின விழா அணிவகுப்பு களத்தில், மோடி அரசாங்கம் சமீபத்தில் செயல்படுத்திய முஸ்லீம்-விரோத குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு ஒரு குறிப்பாக, முக்கிய பிஜேபி அரசியல்வாதிகள் “துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள்” என்ற கோஷத்தை மீண்டும் மீண்டும் எழுப்பினர்.
அவர்களது மாநாட்டின் போது, போல்சொனாரோவை மோடி பாராட்டவில்லை, அவரை “அன்பான நண்பர்” என்று மட்டுமே அழைத்தார். பிரேசில் ஜனாதிபதியின் முகம் கொண்ட சுவரொட்டிகளால் புது தில்லியின் தெருக்களை அரசாங்கம் அலங்கரித்திருந்தது. “ஒரே மாதிரியான சித்தாந்தம் மற்றும் ஒத்த மதிப்புகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு மூலோபாய கூட்டாண்மையை” பற்றி இரு நாடுகளுமே புரிந்து கொண்டிருப்பதாக மோடி வலியுறுத்தினார். இந்த “சித்தாந்தம்” மற்றும் இந்த “மதிப்புகள்” என்பவை இரு ஜனாதிபதிகளும் பின்பற்றும் தீவிர வலதுசாரி தேசியவாத மற்றும் பாசிச வகைப்பட்ட கொள்கைகளை உள்ளடக்கியது.
இந்து பாசிச இராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (RSS) வாழ்நாள் உறுப்பினரான மோடி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிரேசிலை ஆட்சி செய்த இரத்தக்களரியான இராணுவ சர்வாதிகாரத்தை போல்சனாரோ உற்சாகமாக பாதுகாத்ததை நிச்சயமாக அடையாளம் காட்டுகிறது. அவர்களது அரசியல் உறவை அடிக்கோடிட்டுக் காட்டும் போல்சொனாரோ, மோடியின் மதிப்பு இந்திய ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, “ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் என்று என்னையும் தான் அவர்கள் கூறுகிறார்கள்” என்று இழிவாக பதிலிறுத்தார்.
அச்சுறுத்தப்பட்ட போராட்டங்களை எதிர்கொண்ட நிலையிலும், மேலும் ஐரோப்பாவின் பெரும் பகுதிகளில் நச்சுத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்பட்ட நிலையிலும், கடந்த ஆண்டு அமெரிக்காவிற்கான தனது விஜயத்தை இரத்து செய்ய போல்சொனாரோ நிர்ப்பந்திக்கப்பட்டார். ஆனால், ஊடக சுதந்திரம் மற்றும் பிற முக்கிய ஜனநாயக உரிமைகள் மீதான அவரது அரசாங்கத்தின் தாக்குதல் குறித்து கேள்விகளை எழுப்பாத ஒரு அரசாங்கத்தையும் பெருநிறுவன ஊடகங்களையும் அவர் நம்பக்கூடிய ஒரு நாடாக இந்தியா இருந்தது.
இத்தகைய மாறுபட்ட வரலாற்று பின்னணிகளைக் கொண்ட நாடுகளின் அரசாங்க தலைவர்களுக்கிடையேயான அரசியல் ஒற்றுமைகள் இந்திய மற்றும் பிரேசிலிய ஆளும் வர்க்கங்களின் பொதுவான கவலைகளை பிரதிபலிக்கின்றன, இவை இரண்டுமே பரந்த வறுமை மற்றும் சமூக செயலிழப்பு, மற்றும் பயம், மேலும் அனைத்திற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்தின் பெருகி வரும் சமூக எதிர்ப்பிற்கு மத்தியில், முன்னோடியில்லாத செல்வத்தில் கீழ்த்தரமாக புரளுகின்றன. இரு நாடுகளிலுமே தொழிலாளர்கள் ஒரே மாதிரியான அடிப்படை பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்: அவை, பாரிய வேலையின்மை, மோசமான வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகள், அரசாங்க வெட்டுக்கள், தொழிற் சங்கங்கள் மற்றும் பெருவணிகங்கள் கட்டளைகளை திணிக்கையில் தம்மை “இடதாக” காட்டிக் கொள்ளும் போலியான தொழிலாளர் (இந்தியாவில், ஸ்ராலினிச கம்யூனிஸ்ட்) கட்சிகளின் காட்டிக்கொடுப்புகள் போன்றவை.
தொழிலாளர்களை சுரண்டுவதற்கான பொதுவான நிலைமைகள் முதலாளித்துவ உற்பத்தியின் பூகோளமயமாக்கல் செயல்பாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ளன. அதே நேரத்தில், அவை அரசியல் கோரிக்கைகளை ஒன்றிணைப்பதற்கும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் போராட்டங்களை ஒருங்கிணைப்பதற்கும் மகத்தான புரட்சிகர சாத்தியங்களையும் வழங்குகின்றன.