Print Version|Feedback
India: Maoist union betrays 140-day Motherson auto parts workers’ strike
இந்தியா: மாவோவாத தொழிற்சங்கம், 140 நாள் மதர்சன் வாகன உதிரிப் பாக தொழிலாளர் வேலை நிறுத்தத்தை காட்டிக்கொடுக்கிறது
By Arun Kumar
February 2020
தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் தனது உறுப்பினர்களை முற்றிலும் காட்டி கொடுக்கும் விதமாக, மாவோவாதிகள் தலைமை வகிக்கும் இடது தொழிற்சங்க மையம், கடந்த மாதம் துரோக ஒப்பந்தத்தில் மதர்சன் நிர்வாகத்துடன் கையெழுத்திட்டு, தொழிலாளர்களின் 140 நாள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு ஆணையிட்டது.
மதர்சன் தொழிலாளர்களின் அமர்வு போராட்டம்
சென்னையிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, MATE ஆலையில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கடந்த வருடம் ஆகஸ்ட் 26 அன்று வெளிநடப்பு செய்தனர். அவர்களின் முக்கிய கோரிக்கைகள், கூலியுயர்வு, கடுமையான வேலைநிலைமைகளை முடிவுக்கு கொண்டுவருதல் மற்றும் CAMJTS தொழிற்சங்கத்தை அங்கீகாரம் செய்தல் போன்றவையாகும்.
வேலைநிறுத்தக்காரர்களின், எந்த கோரிக்கைகளும், LTUC இன் வேலைக்கு-திரும்பும் ஒப்பந்தத்தில் வழங்கப்படவில்லை, மேலும் வேலைநிறுத்தத்தில் பழிவாங்கப்பட்ட 79 தொழிலாளர்களும் திரும்ப பணியமர்த்தப்படவில்லை.
தொழிற்சங்கம், உண்மையில், 28 பயிற்சியாளர்களை முற்றிலுமாக கைவிட்டுவிட்டது, மேலும் 51 நிரந்தர தொழிலாளர்கள் மீது MATE நிர்வாகம் "ஒழுங்கு விசாரணை" நடத்த அனுமதித்துள்ளது. இந்த விசாரணையின் இறுதி முடிவு, துணை தொழிலாளர் ஆணையரிடம் சமர்பிக்கப்படவுள்ளது, அவர் இறுதி தீர்ப்பினை தருவார்.
தொழிற்துறை நடவடிக்கைகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டுவந்த பின்னர், ஏனைய தொழிலாளர்கள், நிர்வாகத்தின் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கின்றனர், அவை பணி இடமாற்றம் மற்றும் பணியிடத்தில் கைபேசியை தடை செய்வது போன்றவை.
மதர்சன் தொழிலாளர்களின் போராட்டத்தின் ஒரு பகுதியினர்
CAMJTS -மதர்சன் தொழிலாளர்கள் சங்கம்- முதலில் மாவோவாத சி.பி.ஐ-எம். எல்-விடுதலையின் (CPI-ML) கட்சியின் தொழிற்சங்க பிரிவான AICCTU வின் கீழ் இயங்கியது.
கடநத நவம்பர், AICCTU வின் தேசிய தலைவர் குமாரசாமி எந்தவொரு விளக்கமும் இன்றி கட்சியில் இருந்து விலகி LTUC அமைத்தார். கட்சியின் பிரிந்த குழுவான கம்யூனிச கட்சி குமாரசாமி தலைமையில் CAMJTS ஐ LTUCயுடன் இணைத்தது.
LTUC மற்றும் AICCTU வின் அதிகாரத்துவம், ஒரே துரோகப் பாத்திரத்தை இந்த வேலைநிறுத்தத்தில் வகித்தனர், அவை வேலைநிறுத்தக்காரர்களை தனிமைப்படுத்தல் முற்றும் ஒரு உண்மையான தொழிலாள வர்க்க ஆதரவினை அணிதிரட்ட மறுத்தல் ஆகியனவாகும். அக்டோபரில், வேலைநிறுத்தக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு சம்மதித்தால் AICCTU அனைத்து கோரிக்கைகளையும் விட்டு விடுவதாக, MATE நிர்வாகத்திடம் கூறியது.
தொழிற்சங்கம் முதுகில் குத்தியபின்பும், MATE உதிரிப்பாக தொழிலாளர்கள், வீரமாக தங்களின் வேலைநிறுத்தத்தை அரசு ஒடுக்குமுறை மற்றும் நிர்வாக அச்சுறுத்தல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு நடுவே, தொடர்ந்தனர்.
MATE, மதர்சனின் பாலிமர் பிரிவான இந்த கம்பெனி 1986 இல் ஜப்பானின் சுமிட்டோமோ வயரிங் சிஸ்டம்ஸ் மற்றும் சம்வர்தனா மதர்சன் குழு இடையே கூட்டு நிறுவனமாக தொடங்கப்பட்டது. இந்தியாவின் ஆலைகள் உட்பட MATE 42 நாடுகளில் 135,000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. 2018 இல் இதன் இலாபம், 11.7 பில்லியன் டாலர்கள் ஆகும்.
கம்பெனியின் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். அதில் 560 பேர் மட்டுமே நிரந்தர தொழிலாளர்கள், ஏனைய 1000 தொழிலாளர்கள் ஒப்பந்த மற்றும் பயிற்சி தொழிலாளர்களாவார்.
AICCTU மற்றும் LTUC நூற்றுக்கணக்கான ஒப்பந்த மற்றும் பயிற்சி தொழிலாளர்களை வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக அணிதிரட்ட மறுத்தன, மேலும் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் மற்றும் இந்தியாவில் உள்ள ஏனைய மதர்சன் தொழிலாளர்களிடம் ஒரு பரந்த அளவிலான ஆதரவுக்கு அழைப்பு விடுக்கவும் மறுத்தன.
தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தக்காரர்களை தனிமைப்படுத்தி, அரசாங்க தொழிலாளர் அதிகாரிகள் மற்றும் தொழிலாள வர்க்க எதிர்ப்பு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) தலைமையிலான தமிழ்நாடு மாநில அரசு உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் பயனற்ற முறையீடுகளாக திசை திருப்பின.
இது மேட் நிர்வாகத்தின் கைகளை வலுப்படுத்தியது, அது வேலைநிறுத்தக்காரர்களுக்கு எதிரான அதன் அடக்குமுறை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதுடன், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களை உற்பத்தியை பராமரிக்கப் பயன்படுத்தியது. வேலைநிறுத்தம் செய்யும் டஜன் கணக்கான நிரந்தர ஊழியர்களை நிர்வாகம், இடைநீக்கம் செய்தது மற்றும் பயிற்சியாளர்களை பணிநீக்கம் செய்தது. அது வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு "குற்றப்பத்திரிகை" அல்லது "காரண அறிவிப்பைக் காட்ட கோரும் நோட்டிசையும்” அனுப்பியது.
AICCTU இலிருந்து பிளவு மற்றும் LTUC உருவாக்கம் ஆகியவை மாவோயிஸ்ட்-ஸ்ராலினிச அமைப்புகள் மேலும் வலதிற்கு திரும்புவதை குறித்தது. பல்வேறு தமிழ் தேசியவாத அமைப்புகளின் தலைமையில் முன்னெடுக்கப்படும் பேரினவாத “வெல்க தமிழ்” (Rise up Tamil) பரப்புரைகளுடன் LTUC தன்னை இணைத்துக் கொண்டது. மாவோவாத தொழிற்சங்கத் தலைவர்கள், மதர்சன் கார் உதிரிபாகத் தொழிலாளர்களை இந்தியா முழுவதும் உள்ள சக தொழிலாளர்களிடமிருந்து பிரிக்க வேண்டுமென்ற திட்டமிடப்பட்ட முயற்சியில், வேலைநிறுத்தக்காரர்களை தமிழ் தேசியவாத போராட்டங்களில் பங்கேற்குமாறு பணித்தனர்.
சி.பி.ஐ-எம்எல்-விடுதலையின் தேசியவாத முதலாளித்துவ சார்பு திட்டத்திலிருந்து AICCTU மற்றும் LTUC இன் பிற்போக்குத்தனக் கொள்கைகள் எழுகின்றன, மேலும் இது இரண்டு முக்கிய ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது (CPM) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) உடன் கூட்டணியில் உள்ளன. இந்த அமைப்புகள் அண்மையில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெருவணிக திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான தேர்தல் கூட்டணியை நிறுவின. மாவோவாத குழு பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் ஒரு தேர்தல் கூட்டணியையும் கூட நிறுவி, மாற்று அரசாங்கத்தை உருவாக்க உதவுவதாக உறுதியளித்தது.
சிபிஎம், சிபிஐ மற்றும் சிபிஐ-எம்எல்-விடுதலை ஆகிய மூன்று ஸ்ராலினிசக் கட்சிகளும், 2019 தேசியத் தேர்தல்களில், இந்திய முதலாளித்துவத்தின் விருப்பமான அரசாங்கக் கட்சியான காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிக்கத் தயாராக இருந்தன. முதலாளித்துவம் மற்றும் வாகனத் தொழில்துறை இலாபங்களைப் பாதுகாக்கும் இந்த போட்டியிடும் ஸ்ராலினிசக் கட்சிகளின் அந்தந்த தொழிற்சங்க கூட்டமைப்புகள், மதர்சன் தொழிலாளர்களின் 140 நாள் வேலைநிறுத்தத்திற்கு பின்னால் எந்தவொரு சுயாதீனமான அணிதிரட்டல் மற்றும் தொழிலாள வர்க்க ஆதரவுக்கு விரோதமாக இருந்தன. கார்ப்பரேட் ஊடகங்களும் ஸ்ராலினிசக் கட்சிகளால் கட்டுப்படுத்தப்படும் வெளியீடுகளும் மதர்சன் தொழிலாளர்களின் தொடர்ச்சியான தொழில்துறை நடவடிக்கைக்கு ஒரு முழு அளவிலான ஊடக இருட்டடிப்பு விதித்தன.
இதற்கு நேர்மாறாக, உலக சோசலிச வலைத் தளம் (WSWS), வேலைநிறுத்தத்தில் இருந்து எழும் பிரச்சினைகள், AICCTU மற்றும் LTUC இன் துரோகக் கொள்கைகளை அம்பலப்படுத்துதல் மற்றும் மதர்சன் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய ஒரு சோசலிச மற்றும் சர்வதேச திட்டத்தை விரிவுபடுத்துதல் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இந்திய ஆதரவாளர்கள் வேலைநிறுத்தக்காரர்களிடையே இந்த விஷயத்தை பரப்பினர் மற்றும் இந்த விவாதங்களை நிறுத்த மாவோவாத AICCTU மற்றும் LTUC நிர்வாகிகள் எடுத்த தீவிர முயற்சிகளை மீறி தொழிலாளர்களுடன் பேசினர். ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டவிரோதமானது என பொய் கூறி, வேலைநிறுத்தத்தில் சேரும்படி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு அழைப்பு விட மறுத்ததை நியாயப்படுத்த ஒரு மாவோவாத தொழிற்சங்க நிர்வாகி முயன்றார்.
வட இந்திய மாநிலமான ஹரியானாவில் உள்ள மானேசரில் இயங்கும் மாருதி சுசுகி வாகனம் தயாரிக்கும் ஆலையில் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மலிவு கூலி உழைப்பு நிலைமைகளுக்கு எதிராக 2011 ல் ஒன்றுபட்ட தொழில்துறை நடவடிக்கை எடுத்ததாக ICFI ஆதரவாளர்கள் MATE தொழிலாளர்களுக்கு விளக்கினர். தமிழக தலைநகரான சென்னையிலிருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் (NLC) ஊதிய உயர்வு மற்றும் நிரந்தர வேலைகள் கோரி 10,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பல காலவரையற்ற வேலைநிறுத்தங்களை நடத்தினர் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
WSWS, ஆரம்பத்தில் இருந்தே, MATE வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், சர்வதேச அளவில் வளர்ச்சி கண்டு வரும் தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் மீள் எழுச்சியின் ஒரு பகுதியாகும் என்று விளக்கியுள்ளது.
MATE தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் மற்றும் அது தொழிற்சங்கங்களினால் காட்டிக் கொடுக்கப்பட்டது குறித்த மையப் படிப்பினை என்னவென்றால் நிரந்தர வேலைகள், தரமான ஊதியங்கள், மேம்பட்ட வேலை நிலைமைகள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் முதலாளித்துவ அமைப்பையும் அதன் அனைத்து அரசியல் ஏஜன்டுகளையும் சவால் செய்வதன் மூலம் மட்டுமே முன்னேறி செல்ல முடியும்.
இதற்கு அனைத்து ஸ்ராலினிச-மாவோவாத கட்டுப்பாட்டில் உள்ள, முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களிடமிருந்தும் முழுமையாக முறித்துக் கொண்டு, தொழிலாளர்கள் உண்மையான சுதந்திரமான சாமானிய குழுக்களை நிறுவ வேண்டும், அது இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள வாகனத் தொழிலாளர்களை ஒரு சோசலிச மற்றும் சர்வதேச திட்டத்தில் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் அணிதிரட்ட போராட வேண்டும்.