ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Drawing the lessons of the ICFI split—International Strategy and National Tactics: The change in the ICFI’s approach to national liberation movements

ICFI இன் உடைவிலிருந்து படிப்பினைகளை எடுத்துக்கொள்ளல் - சர்வதேச மூலோபாயமும் தேசிய தந்திரோபாயமும்: தேசிய விடுதலை இயக்கங்களை நோக்கிய நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அணுகுமுறையிலான மாற்றம்

By Deepal Jayasekera
30 September 2019

இந்த விரிவுரை இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் துணைச் செயலரான தீபால் ஜெயசேகரா 2019 ஜூலை 15 அன்று அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைப் பள்ளியில் வழங்கியதாகும்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு (Revolutionary Communist League - RCL) ஒரு புதிய காலகட்டத்தை திறந்துவிட்ட தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (Workers Revolutionary Party - WRP) ஓடுகாலிகளுடனான 1985-86 உடைவுக்கு பின்னர் எழுந்த அரசியல் பிரச்சினைகள் சிலவற்றை ஆய்வு செய்ய விரும்புகிறேன். பல ஆண்டுகால கிட்டத்தட்ட முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டமை மற்றும் WRP இடம் இருந்தான அரசியல் தாக்குதல்களுக்கு பின்னர், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அனைத்துலகக் குழுவுடன் நெருங்கி வேலை செய்ததன் மூலமாக அதன் அரசியல் நிலைப்பாட்டையும் தொழிலாள வர்க்கத்திலான அதன் தலையீடுகளையும் வலுப்படுத்திக் கொள்ள முடிந்தது. குறிப்பாக புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்திற்கும் ஒட்டுமொத்தமாக அனைத்துலகக் குழுவுக்கும் ஒரு மிகப்பெரும் அடியாக அமைந்த தோழர் கீர்த்தி பாலசூரியா 1987 இல் அகால மரணமடைந்ததற்கு பின்னர் குறிப்பாக இந்நிலைமையே இருந்தது. மேற்கொள்ளப்பட்ட இந்த அரசியல் அபிவிருத்திகள், ஆசியாவிலும் அதனைத் தாண்டியும் காலதாமதமாக முதலாளித்துவ அபிவிருத்தி அடைந்த மற்ற நாடுகளிலுள்ள தொழிலாள வர்க்கத்திற்கு மாபெரும் முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கும் என்று நான் நம்புகிறேன். குறிப்பாக, பல்வேறு தேசிய விடுதலை இயக்கங்களை நோக்கிய எங்களது அணுகுமுறையின் விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி பேசவிருக்கிறேன்.


மைக்கல் பண்டா

சோசலிச தொழிலாளர் கழகம்/தொழிலாளர் புரட்சிக் கட்சி (SLL/WRP) நிரந்தரப் புரட்சித் தத்துவத்தில் இருந்து விலகிச் சென்றதும், தேசிய விடுதலை இயக்கங்கள் மற்றும் மாவோயிசத்தை நோக்கிய அதன் அரசியல்ரீதியாக சமரசப்பட்ட மனோபாவமும், பின்னாளில் அப்போக்குகளின் முன்னால் அது சரணாகதியடைந்ததும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் வேலைகளின் மீது கணிசமானதொரு தாக்கத்தைக் கொண்டிருந்தது.

பின்தங்கிய நாடுகளின் தேசிய முதலாளித்துவத்திடம் SLL சரணடைந்தமையானது அதற்கும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கும் இடையில் கூர்மையான கருத்துபேதங்களுக்கு இட்டுச்சென்றது; 1971 இந்திய-பாகிஸ்தான் போரில் பங்களதேஷ் விடுதலை இயக்கத்தை ஆதரிப்பதான சாக்கில், கிழக்கு பாகிஸ்தானுக்குள் இந்திய இராணுவம் செய்த தலையீட்டுக்கு “விமர்சனரீதியான ஆதரவு” வழங்கி, அனைத்துலகக் குழுவின் பேரில் மைக்கல் பண்டா ஒரு அறிக்கை வெளியிட்டார். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், தோழர் கீர்த்தியின் தலைமையின் கீழ், பண்டாவின் அணுகுமுறைக்கு முரண்பாடானதொரு அறிக்கையை தயார் செய்தது. அது பின்வருமாறு கூறியது:

பாட்டாளி வர்க்கத்தின் பணி, முதலாளித்துவத்தின் போட்டிக் கன்னைகளில் ஒன்றை ஆதரிப்பதல்ல, மாறாக, துணைக்கண்டத்தின் மில்லியன் கணக்கான உழைப்பாளிகளது சமூக மற்றும் தேசிய அபிலாசைகளைப் பூர்த்தி செய்யத்தக்கதாக அது மட்டுமே இருக்கக் கூடிய ஒரு கூட்டாட்சி சோசலிசக் குடியரசை அமைக்கின்ற முன்னோக்குடன், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக, வர்க்க எதிரியின் முகாமில் உருவாகும் ஒவ்வொரு மோதலையும் பயன்படுத்திக் கொள்வதேயாகும். [1]

அனைத்துலக் குழுவின் அறிக்கை குறித்து அறிந்தவுடன், கீர்த்தி உடனடியாக, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் உறுதியான எதிர்ப்பை தெரிவித்து ICFI செயலாளரான கிளீஃவ் சுலோட்டருக்கு கடிதம் எழுதினார்.

இந்திய-பாகிஸ்தான் போரை எதிர்க்காமல், வங்காள மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் சோசலிச அடித்தளங்களின் மீது இந்தியா சுயவிருப்பின்பேரில் ஐக்கியப்படுவதையும் ஆதரிப்பது சாத்தியமற்றதாகும். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்குள் இருந்தவாறு போரை எதிர்க்காமல், இந்திய துணைக்கண்டத்தில் பல தேசியங்களது சுய-நிர்ணய உரிமையைப் பாதுகாக்கக் கூடிய ஒரேயொரு வழியான ஒரு ஐக்கியப்பட்ட சோசலிச இந்தியா குறித்து பேசுவது முற்றிலும் அபத்தமானதாகும். [2]

ஆயினும், தனது கோட்பாட்டுரீதியான சர்வதேசியவாதத்தை வெளிப்படுத்துகின்ற விதத்தில், கீர்த்தி புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அறிக்கையை வெளியிடாமல் நிறுத்தி வைத்திருந்தார், அனைத்துலகக் குழுவின் நிலைப்பாட்டுடன் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் கொண்டிருக்கும் கருத்துமுரண்பாடுகள் குறித்து அனைத்துலகக் குழுவுக்குள்ளாக ஒரு விவாதத்திற்கு கோரிக்கை வைத்தார். அவர் எழுதினார்:

அனைத்துலகக் குழுவின் அறிக்கையை பாதுகாப்பது கடினமான ஒன்று என்பதை கூறுவது அவசியமில்லை. எவ்வாறெனினும், அகிலத்திற்குள்ளான தெளிவே வேறெதனையும் விட மிக முக்கியமானதாகும். ஏனென்றால் அகிலத்தைக் கட்டுவதற்குப் போராடாமல் ஒரு தேசியப் பிரிவைக் கட்டியெழுப்புவது என்பது நமக்கு சாத்தியமற்றதாகும். [3]

SLL தலைமை அத்தகையதொரு விவாதம் நடப்பதை திட்டமிட்டு தடுத்து விட்டதுடன் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் கடிதத்தையும் மற்ற பிரிவுகளிடம் மறைத்து விட்டது.

இதேவகையில், ஆரம்பத்தில் இருந்தே நிரந்தர புரட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்த தேசியப் பிரச்சினையிலான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் கோட்பாட்டுரீதியான நிலைப்பாடு SLL/WRP இடம் இருந்தான பெரும் அழுத்தத்திற்கு ஆளானது. ஒரு சோசலிச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கின் அடிப்படையில் தீவில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லீம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதை அடிப்படையாக அமைத்துக் கொண்டு, அடுத்தடுத்து பதவிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள் மேற்கொண்ட தமிழர்-விரோத இனப்பாகுபாட்டுக்கு எதிராகவும், தேசியவாதம் மற்றும் இனவாதத்தின் அத்தனை வடிவங்களுக்கு எதிராகவும் தொடர்ச்சியாக போராடி வந்திருந்த உறுதியான வரலாற்றை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் கொண்டிருந்தது.


கீர்த்தி பாலசூரியா

1970களின் ஆரம்பத்தில், தீவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இருந்து துருப்புகளை திரும்பப் பெற வேண்டும் என்று புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அழைப்பு விடுத்தது. 1972 ஜூனில் விடுத்த ஒரு அறிக்கையில், “தமிழ் தேசியம் சுய-நிர்ணயத்திற்குக் கொண்டுள்ள உரிமையை அங்கீகரிக்கின்ற” அதேவேளையில் இதனையும் வலியுறுத்தியது: “சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையிலும் மற்றும் இதே உரிமையை அங்கீகரிக்கின்றதன் அடிப்படையிலுமான ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காக சிங்கள, தமிழ் தொழிலாளர்களை அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே இந்த உரிமை வென்றெடுக்கப்பட முடியும்.” [4] இதில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஒரு தனி தமிழ் அரசுக்கு ஆதரவளிக்கவில்லை, மாறாக அத்தகையதொரு அரசுக்கு தமிழ் மக்கள் கொண்டுள்ள உரிமையை பாதுகாத்தது.

ஆயினும், 1972 இல் நடந்த ஒரு ICFI கூட்டத்தில், SLL தலைமை, குறிப்பாக பண்டா, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் நிலைப்பாட்டை முழுமையாக எதிர்த்தனர்; தமிழ் மக்களின் சுய-நிர்ணய உரிமைக்கு ஆதரவளிப்பதை தீவை துண்டாடுவதற்கான ஏகாதிபத்தியங்களின் திட்டங்களுக்கு உதவி செய்வதாக முத்திரை குத்தினர். 1971 இல் கிழக்கு பாகிஸ்தானில் இந்திய இராணுவத் தலையீட்டுக்கு அவர் ஆதரவளித்த விடயத்தில் நடந்ததைப் போல, பண்டாவின் நிலைப்பாடானது, 1947-48 இல் தெற்காசியாவில் ஏகாதிபத்தியத்தால் ஸ்தாபிக்கப்பட்டிருந்த “சுதந்திர” தேசிய அரசுகள் எனக் கூறப்பட்டவற்றை பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

எனினும், SLL தலைமையின் அனுபவம் மற்றும் அரசியல் ஆளுமைக்கு கீழ்ப்படியும் விதமாக, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் சுய-நிர்ணயத்திற்கு தமிழ் மக்கள் கொண்டுள்ள உரிமையைப் பாதுகாப்பதை தயக்கத்துடன் திரும்பப் பெற்றது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் தொடர்ந்தும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்ததுடன், சிங்கள, தமிழ் தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காகப் போராடியது என்ற அதேவேளையில், 1970களின் பெரும்பகுதியிலான அதன் கோட்பாடான போராட்டம் சுய-நிர்ணயத்திற்கான உரிமையைப் பாதுகாப்பது என்ற முக்கியமான தந்திரோபாய ஆயுதத்தை அதற்கு மறுப்பதற்கு SLL தலைமை மேற்கொண்ட நடவடிக்கைகளால் இடையூறு செய்யப்பட்டது.

ஆனால் 1979 இல், தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் சர்வதேச முக்கியத்துவத்தை எட்டிய சமயத்தில், WRP 180 பாகை தலைகீழ் திருப்பத்தை எடுத்து, விமர்சனமற்று குட்டி-முதலாளித்துவ தமிழ் தேசியவாத குழுக்களை தழுவிக்கொள்ள விரைந்தது. அரபு முதலாளித்துவத்துடனான அதன் கோட்பாடற்ற உறவுகளை அடியொற்றி, WRP, தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்புடன் உறவுகளை ஸ்தாபித்து, அதற்கு “சோசலிச” வண்ணங்களையும் கூட பூசியதோடு, தமிழ் தேசியவாதம் மற்றும் LTTE ஐ ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் மீது திணிப்பதற்கும் முயன்றது.

1983 இல், கொழும்பு அரசாங்கம் சந்தை-ஆதரவுக் கொள்கைகளுக்கு அது திரும்பியதன் ஒரு விளைவாக ஆழமான நெருக்கடியில் சிக்கியிருந்த நிலையில், தமிழர்-விரோத ஆத்திரமூட்டல்களை நூற்றுக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட ஒரு தீவுதழுவிய படுகொலைப் பிரச்சாரமாக அதிரடியாக தீவிரப்படுத்தியது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே இந்த வன்முறை வெறியாட்டத்தை எதிர்த்த ஒரேயொரு அமைப்பாக இருந்தது, அது சிங்கள, தமிழ் தொழிலாளர்களின் ஐக்கியத்திற்கு அழைப்பு விடுத்தது. WRP புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை பாதுகாப்பது என்பது ஒருபுறம் இருக்கட்டும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் உறுப்பினர்களின் கதி என்னானது என்பதை விசாரிக்கவும் கூட அக்கறை கொள்ளவில்லை. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் உறுப்பினர்கள் கூட காணாமல் போயிருக்கக் கூடும் என்பதான உண்மை குறித்து அது தன் பத்திரிகையில் ஊகம் மட்டுமே வெளியிட்டது. இது 2009 இல் முடிவடைந்த இலங்கையின் நீண்ட நெடிய உள்நாட்டுப் போரின் தொடக்க காலமாகும்.


கீர்த்தி பாலசூரியா RCL கூட்டம் ஒன்றில் உரையாற்றுகிறார்

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், தீவில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் என இன மற்றும் மத ரீதியாக பிரிந்து கிடந்த தொழிலாள வர்க்கத்தை, ஒரு சோசலிச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கின் அடிப்படையில் ஐக்கியப்படுத்துவதற்குமான அதன் தீரமான அரசியல் போராட்டத்தை தொடர்ந்து நடத்தியது. ஆயினும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான WRP இன் விமர்சனமற்ற ஆதரவு தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் தேசியவாதக் குழுக்களின் அரசியல் குறித்த எந்த தீவிரமான பகுப்பாய்வையும் செய்வதில் இருந்து புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை தடுத்திருந்தது.

1985-86 உடைவுக்குப் பின்னரே, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் ICFIம் தேசியப் பிரச்சினை குறித்தும் அது தொடர்பான இலங்கை பிரிவின் அரசியல் முன்னோக்குகள் குறித்தும் ஒரு தீவிர பகுப்பாய்வை தொடங்குவதற்கு முடிந்தது. 1971 இல் கிழக்கு பாகிஸ்தானிலான இந்திய இராணுவத்தின் தலையீடு குறித்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஆவணங்கள் 1987 மார்ச்சில் நான்காம் அகிலம் இதழில் வெளியிடப்பட்டன.

இலங்கை ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, போரின் ஒரு விளைவாக ஒரு ஆழமான நெருக்கடிக்கு முகம்கொடுத்த நிலையில், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி உடன் 1987 ஜூலையில் “இந்திய-இலங்கை ஒப்பந்த”த்தில் கையெழுத்திட்டார். அந்த ஒப்பந்தத்தின் கீழ், தமிழ் ஆயுதக் குழுக்களை நிராயுதபாணியாக்குவதற்கும், ஒப்பந்தத்திற்கான எந்த எதிர்ப்பையும் ஒடுக்குவதற்குமாய் இந்தியத் துருப்புகள் தீவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கொண்டுவரப்பட்டன. வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கைத் துருப்புகள், தெற்கில், தொழிலாள வர்க்கத்திடம் இருந்து, குறிப்பாக, கிராமப்புற இளைஞர்களிடம் இருந்து பெருகிவந்த சமூக எதிர்ப்பை கையாள்வதற்காக, கட்டவிழ்த்து விடப்பட்டன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (SLFP) ஜனதா விமுக்தி பெரமுனவும் (JVP) சிங்களப் பேரினவாதத்தின் நிலைப்பாட்டில் இருந்து இந்த ஒப்பந்தத்திற்கு எதிரான ஒரு பிரச்சாரத்தைத் தொடக்கின, லங்கா சம சமாஜக் கட்சி (LSSP), ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (CP), மற்றும் பப்லோவாத நவ சம சமாஜக் கட்சி (NSSP) ஆகியவை ஜெயவர்த்தனாவின் நடவடிக்கைகள் தீவில் அமைதியைக் கொண்டு வரும், இவ்வாறாக தேசியப் பிரச்சினைக்கு தீர்வளிக்கும் என்பதாகக் கூறி அந்நடவடிக்கைகளின் பின்னால் அணிதிரண்டன; புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே தொழிலாள வர்க்க சர்வதேசியவாதத்தின் அடிப்படையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தது. ஒப்பந்தத்திற்கு எதிராகவும் இந்தியாவின் இராணுவத் தலையீட்டிற்கு எதிராகவும் இலங்கையிலும் இந்தியாவிலும் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்காக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் போராடியது.

தேசியப் பிரச்சினையிலான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் நிலைப்பாடானது, தேசிய தந்திரோபாயங்களுக்கு மேலாக சர்வதேச மூலோபாயத்தை சரியான விதத்தில் அமர்த்திய IC உடனான விரிவான கலந்துரையாடல்களிலிருந்து அபிவிருத்தி கண்டதாகும்.

1987 நவம்பரில், ‘ஸ்ரீலங்காவின் நிலைமையும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் கடமைகளும்’ என்ற தலைப்பில் ஒரு விவரமான அறிக்கையை ICFI வெளியிட்டது. ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தில் தனக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருந்த இந்த அறிக்கையானது, தீவில் தமிழ் மக்களது ஜனநாயக உரிமைகள் சோசலிசத்திற்கு ஆதரவளிப்பதனூடாக சிங்கள, தமிழ் தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தின் ஊடாகவே சாதிக்கப்பட முடியும் என்று ஸ்தாபித்தது. ஸ்ரீலங்கா தமிழீழ ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான அழைப்பை அது முதன்முதலாக எழுப்பியது.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் வெளிப்பட்டவாறாக தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் நச்சுத்தனமான இயல்பை சுட்டிக்காட்டி, அந்த அறிக்கை அறிவித்தது:

இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற எண்ணற்ற துன்பகரமான அனுபவங்கள் பின்தங்கிய நாடுகளில் உள்ள தேசிய முதலாளித்துவத்தின் துரோகத்தனத்தையும், பிற்போக்குத்தனத்தையும் ஏற்கனவே நிறுவிக்காட்டியுள்ளன. இவற்றிலே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்து இடப்பட்டதும், இலங்கையின் வட கிழக்கு மாகாணங்களிலே இந்தியாவின் ஆக்கிரமிப்பும் ஒடுக்கப்பட்ட உழைப்பவர்களுக்கு கிடைத்த இன்னுமொரு கசப்பான அனுபவமும் ஒன்றாகும். ஜெயவர்த்தனாவினதும் காந்தியினதும் செயல்களிலே ஏதாவது ஒருமைப்பாடு இருந்தது என்றால் அவர்களின் கூட்டு சதித்திட்டத்தை நிறைவேற்ற இருவரும் இணைந்து செய்த வஞ்சனையும், கொடுமையும்தான். இந்த தேசிய முதலாளித்துவத்தின் பாதுகாவலர்களான கொலைகாரர் இருவரும் செய்தது மறக்கவும், மன்னிக்கவும் முடியாததாகும். ஏகாதிபத்திய அடிவருடிகளான சியாங் கேய் ஷேக், சதாத், மொபுட்டு போன்றோருக்கு அருகில் இடம்பிடிக்கவேண்டியவர்களாவர். ஜெயவர்த்தனாவினதும் காந்தியினதும் அரசியலானது தமது நாடுகளில் தேசிய முதலாளித்துவம் தமது நாடுகளில் எதிர்காலத்தில் ஏதாவது ஒரு முற்போக்கு பாத்திரம் வகிக்கும் என்பதில் எஞ்சியிருந்த அற்ப சொற்ப பிரமைகளைக்கூட இல்லாது அழித்துவிட்டது.[5]

அத்தியாவசியமான வரலாற்றுப் படிப்பினைகளை உள்ளீர்த்து, ICFI இன் அறிக்கை வலியுறுத்தியது:

எவ்வித விதிவிலக்குமின்றி, ஏகாதிபத்தியத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட "சுதந்திரம்" என்பது, ஜனநாயகக் கொள்கைகளின் ஒரு கேவலமான சமரசத்தின் அடிப்படையில் அமைந்த முறைதவறிப் பிறந்த அரசுகளை உருவாக்குவது என்பதாகவே அர்த்தமளித்து வந்திருக்கிறது. இந்த அரசுகளின் உருவாக்கத்தினுள்ளே தேசிய முதலாளித்துவம் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களின் விடுதலையாளர் என்ற பாத்திரத்தை வகிக்காமல் ஏகாதிபத்திய சூறையாடலில் இளைய பங்காளியாக செயல்பட்டுள்ளது. இப்படி உருவாக்கப்பட்ட அரசுகள், உற்பத்தி சக்திகளின் முற்போக்கான அபிவிருத்தி சாத்தியமற்ற அழுகுகின்ற முதலாளித்துவத்தின் சிறைக்கூடமாகவே இருப்பதைத் தவிர வேறொன்றும் அல்ல. [6]

இந்திய முதலாளித்துவ வர்க்கத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்ததன் மூலம் குட்டி-முதலாளித்துவ தேசியவாதத்தின் திவால்நிலை எவ்வாறு வெளிப்பட்டிருந்தது என்பதையும் அந்த ஆவணம் விளக்கியது:

வரலாற்று நெருக்கடியான காலகட்டங்களிலே முழு மக்களினதும் தலைவிதி அந்தரத்தில் தொங்கிக்  கொண்டிருக்கையிலே மற்றவரின் மனம் நொந்துவிடும் என்று சிந்திப்பதற்கு எதுவுமில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) இயக்கத்தின் நிலைமையைப் பற்றியோ, அதன் போராளிகளின் தலைவிதியில் அனுதாபங்கொண்டோ கூறவேண்டிய உண்மையை கூறாது விடமுடியாது: ஜூலை 29, 1987இல் இருந்து தேசிய விடுதலை போராட்டம் சந்தித்த கடுமையான பின்னடைவுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கொள்கைகளே பிரதான பொறுப்பாகும்.[7]

அந்த அறிக்கை தொடர்ந்தது:

ஸ்ராலினிஸ்டுக்களதும், திரிபுவாதிகளினதும், குட்டி முதலாளித்துவ தேசியவாதிகளதும் எதிர்ப்பிற்கு மத்தியில் இந்தக் கடமைகளை செய்து முடிப்பதை வரலாறு பாட்டாளி வர்க்கத்திடமே ஒப்படைத்துள்ளது. இந்த ஒரேயொரு சமூக சக்தியால் மாத்திரந்தான் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை  யதார்த்தமாக்க முடியும். பாட்டாளி வர்க்கம் இதைச் செய்து முடிக்கும் பொழுது ஒருபோதும் முதலாளித்துவத்தின் சகபாடியாக செய்யாது. மாறாக சமரசமற்ற எதிரியாகவே செய்து முடிக்கும். பாட்டாளி வர்க்கம் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை தனது சொந்த ஆயுதத்தால், தனது சொந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களை தனக்கு பின்னே அணிதிரட்டியே செய்து முடிக்கும். தேசிய சுயநிர்ணய உரிமையை பாட்டாளி வர்க்கம் சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதியாகவே செய்து முடிக்கும். பாட்டாளி வர்க்கத்தால் தலைமை தாங்கி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிர்மாணித்ததுடன் ஒடுக்கப்பட்ட அனைத்து தேசிய இனங்களுக்கும் அவர்களது ஜனநாயக உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கப்படும். தேசங்களின் உண்மையான சமத்துவம் என்ற கட்டமைப்பிற்குள், அது தாமே முன்வந்து ஒரு ஐக்கிய சோசலிச சமஷ்டிக் குடியரசை அமைக்கும்படி அறைகூவும், அனைத்து ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் தாமே முன்வந்து ஐக்கிய குடியரசு அமைக்கும் பட்சத்தில் ஒடுக்கப்பட்ட இனங்களின் பொருளாதார, கலாச்சார முன்னேற்றங்களுக்கு அதிக வாய்ப்பு கிட்டுமென நம்பும் பாட்டாளி வர்க்கம் தனது சர்வாதிகாரத்தின் கீழ், பிரிந்து செல்ல விரும்பும் தேசிய இனங்கள் செல்வதற்கு உறுதி அளிக்கும். தமிழீழம்-ஸ்ரீலங்கா ஐக்கிய சோசலிச அரசுகள் என்ற வேலைத்திட்டத்தையே புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தன் வேலைத் திட்டத்தின் முக்கிய சாராம்சமாக முன்மொழிந்துள்ளது.. [8]

இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கான மற்ற ஒரேயொரு எதிர்ப்பு JVP இன் சிங்கள பேரினவாத நிலைப்பாட்டில் இருந்து வந்தது, அரசாங்கம் நாட்டை பிளவுபடுத்துவதாகக் குற்றம்சாட்டிய அது, தொழிலாளர்கள் அதன் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் இணைய வேண்டும் என்று துப்பாக்கி முனையில் கோரியது. 1988 இன் பிற்பகுதிக்குள்ளாக, JVP குண்டர்கள் பொதுவாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும், குறிப்பாக தொழிற்சங்கவாதிகள், LSSP, CP, NSSP இன் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு எதிராகவும் கொலைவெறித் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தனர். JVP கொலைகாரர்கள் RCL இன் உறுப்பினர்கள் மூன்று பேரைப் படுகொலை செய்தனர். JVP இன் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான கொலைபாதக பாசிசத் தாக்குதல்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான UNP அரசாங்கத்தின் போலிஸ்-இராணுவ அணிதிரட்டலுடன் இணங்கியிருந்தது.


R.A. பிட்டவெல, 1988 இல் JVP குண்டர்களால் கொல்லப்பட்ட RCL அங்கத்தவர்

1988 இன் பிற்பகுதியில், JVP இன் பாசிசத் தாக்குதல்களுக்கு எதிராகவும் UNP அரசாங்கத்தின் இராணுவ-போலிஸ் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தொழிலாள வர்க்க கட்சிகள் மற்றும் அமைப்புகள் அனைத்தின் ஒரு ஐக்கிய முன்னணிக்கு அழைப்பு விடுத்ததன் மூலம், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் அனைத்துலகக் குழுவும் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுகின்ற நோக்குடன் ஒரு மிக முக்கியமான தந்திரோபாய முன்முயற்சியை அபிவிருத்தி செய்தன. முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட இயக்கமாக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கும், முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கிவீசி சோசலிசக் கொள்கைகளை முன்னெடுக்கக் கூடிய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளது ஒரு அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரு போராட்டத்தில் வறிய விவசாயிகள் உள்ளிட ஒடுக்கப்பட்ட வெகுஜனங்கள் அனைவரையும் தொழிலாள வர்க்கத்தைச் சூழ அணிதிரளச் செய்வதற்காகவும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் போராடியது.

தீவின் தெற்கில் இருந்த விவசாயிகள் மற்றும் வேலைவாய்ப்பற்ற சிங்கள இளைஞர்கள் மீதான JVP இன் சமூக அடித்தளத்தை நோக்கிய RCL இன் அணுகுமுறை குறித்து ஒரு வெகுமுக்கியமான விவாதம் எழுந்தது. அது, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சி, விவசாயிகளை நோக்கிக் கொண்டிருக்கும் மனோபாவத்தை தெளிவுபடுத்துவதில் இன்றியமையாததாக இருந்தது. சுமார் 60,000 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதும் விவசாயிகளுக்கு எதிரான ஒரு பொதுவான பயங்கர பிரச்சாரமாக இருந்த JVP ஆதரவாளர்கள் மீதான கொழும்பு அரசாங்கத்தின் பாரிய படுகொலைகளுக்கு அலட்சியம் காட்டுகின்ற ஒரு போக்கை, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் எழுத்துக்களில், அனைத்துலக் குழு சரியாக அடையாளம் கண்டது.

இந்த விவாதங்களின் போது, டேவிட் நோர்த் விளக்கினார்:

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமானது தூக்கிவீசப்பட்ட முதலாளித்துவ வர்க்கத்தை நோக்கி ஒரு இரும்பு முஷ்டியை முன்நீட்டுகின்ற அதேநேரத்தில், ஒடுக்கப்பட்ட விவசாய மக்களை நோக்கி அது ஒரு உதவிக் கரத்தை நீட்டுகிறது. 1917 அக்டோபரில் உருவாக்கப்பட்ட ஆட்சியை போல்ஷிவிக்குகள் எப்போதும், வறிய விவசாயிகளின் ஆதரவின் மீது தங்கியிருந்த ஒரு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்றே விவரித்தனர். பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்தின் மீது ஏறிஅமர்ந்து ஆட்சி செய்து அதனை ஒடுக்கிய அதேநேரத்தில், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமானது நகர்ப்புற தொழிலாளர்களுக்கும் வறிய விவசாயிகளுக்கும் இடையிலான ஒரு கூட்டணியை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

இந்தப் பிரச்சினையில் மேலும் தெளிவுகூட்டும் விதமாக, அவர் கூறினார்:

அடுத்துவரும் பக்கங்களில் உங்கள் அறிக்கை எடுத்துக்காட்டுவதைப் போல, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், வறிய விவசாயிகளை தொழிலாள வர்க்கத்தின் பக்கத்தில் அணிதிரளச் செய்யும் பொருட்டு ஒரு கிராமப்புற வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான தேவையை உணர்கிறது. ஆயினும், கவனக்குறைவாக வறிய விவசாயிகளை, “ஏனைய அனைத்து வர்க்கத்தின்” மேலமர்ந்து ஆட்சி செய்வதற்கு பாட்டாளி வர்க்கம் கொண்டிருக்கும் “வரலாற்று நியாயப்படுத்தலை” நாம் முன்நிறுத்துவதில் இருந்து விரோதமான முடிவுகளை எடுத்துக்கொள்ள அனுமதித்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் முதலாளித்துவ வர்க்கத்திற்கு கொண்டிருக்கக் கூடிய முக்கியத்துவத்திற்கும் ஒடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு அது கொண்டிருக்கக் கூடிய முக்கியத்துவத்திற்கும் இடையிலான அத்தியாவசியமான வித்தியாசத்தை காட்டத் தவறுவோமேயானால், இந்தப் பணி பலவீனமாகி விடும். [9]

JVP தலைவர் விஜேவீரா கொல்லப்பட்டது தொடர்பான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஒரு அறிக்கைக்கு நோர்த் ஆட்சேபித்தார், அந்த அறிக்கை JVP இன் சமூக அடித்தளமான விவசாயிகள் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு எதிரான மிகப்பரந்த ஒடுக்குமுறையைக் கணக்கிலெடுக்கத் தவறியிருந்தது.

இது விஜேவீரா குறித்து தார்மீகத் தீர்ப்பை கூறுவதான விடயமல்ல, மாறாக அந்த இயக்கத்தின் சமூக அடித்தளத்தைப் புரிந்து கொள்வதைக் குறித்த விடயமாகும். விஜேவீராவுக்கு நாம் கொஞ்சமும் அனுதாபம் கொள்ளவுமில்லை அவரது மரணத்திற்காக துக்கம் அனுசரிக்கவும் இல்லை. ஆனால் JVP பிரச்சினையானது இலங்கையின், பொதுவாக பின்தங்கிய நாடுகளின், சிக்கலான சமூக உறவுகளது கோணத்தில் இருந்து அல்லாமல் வேறுவழியில் புரிந்து கொள்ளப்பட முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். [10]

LSSP இன் காட்டிக்கொடுப்பும் விவசாயிகளை நோக்கி அது காட்டிய அலட்சியமுமே JVPக்கான அடித்தளத்தை உருவாக்கித் தந்தது என்று நோர்த் சரியாக சுட்டிக்காட்டினார். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் அதே பாதையில் பயணிக்கக் கூடாது.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் மத்திய குழுவில் ஒரு பிரதிநிதிகள் குழுவின் முழுப் பேரவை ஒன்று, 1990 நவம்பர் 6-9 அன்று டேவிட் நோர்த் உடன், நடத்தியதொரு விவாதத்தில், இந்தப் பிரச்சினை மேலதிகமாக விவாதிக்கப்பட்டது. இது தென்னிலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு படுகொலைக்கு எதிராய் ஒரு சர்வதேசப் பிரச்சாரத்திற்கு இட்டுச் சென்றது.

மேற்கூறிய விவாதங்களின் மூலமாக எட்டப்பட்ட அரசியல் மற்றும் தத்துவார்த்த தெளிவுகளின் அடிப்படையில், தெற்கில் கிராமப்புற இளைஞர்களுக்கு எதிரான அரசு படுகொலைக்கும், வடக்கில் தமிழ் வெகுஜனங்களுக்கு எதிராக புதுப்பிக்கப்பட்டிருந்த போருக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க, ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக, தொழிலாள வர்க்கம் தலையிட அழைப்பு விடுத்து, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஒரு அறிக்கை விடுத்தது. அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக கிராமப்புற வெகுஜனங்களை பாதுகாப்பதென்பது, முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கி வீசி, ஸ்ரீலங்கா ஈழ ஐக்கிய சோசலிசக் குடியரசுகளின் வடிவில் ஒரு தொழிலாளர்கள்’ மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்துடன் பிரிக்கவியலாமல் பிணைந்துள்ளது என்பதையும் அது சுட்டிக்காட்டியது.

இது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மற்றும் அனைத்துலகக் குழுவின் அனைத்துப் பிரிவுகளது ஒரு விரிவான பிரச்சாரத்திற்கான அடிப்படையாகியது.

1990களின் ஆரம்பத்தில் பால்கன்கள், கிழக்கு ஐரோப்பா, மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் பிரிவினைவாத இயக்கங்கள் வெடித்ததை ஒட்டி, தேசியப் பிரச்சினை குறித்த ஒரு மிக முக்கியமான மறு-ஆய்வை, இலங்கை மற்றும் விரிந்த தெற்காசியப் பிராந்தியத்திற்கான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் முன்னோக்கினை நேரடியாக எடுத்துக்காட்டி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தொடக்கியது.

1993 ஜூனில் நடந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் 13வது பேரவையில், தேசியப் பிரச்சினை தொடர்பான அதன் வேலைத்திட்டம் தொடர்பாகவும் குறிப்பாக “சுய-நிர்ணய”த்தை நோக்கிய அதன் அணுகுமுறை தொடர்பாகவும் அனைத்துலகக் குழு விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டது.

அதில் டேவிட் நோர்த் குறிப்பிட்டார்:

சுய-நிர்ணயப் பிரச்சினைக்கு —பொதுவாக, தேசியவாதப் பிரச்சினைக்கு— எந்த ஒரு வரலாற்றுக்கு அப்பாற்பட்ட (supra-historical) அல்லது எக்காலத்திற்குமானதொரு சமூக பெருநிகழ்வுக்குரிய பண்பைக் கொடுக்க மறுக்கின்ற வரலாற்று சடவாதரீதியான அணுகுமுறை என்பது, உண்மையில், லெனினால், “தேசங்களின் சுய-நிர்ணயம் தொடர்பில் நாடுகளின் மூன்று வகைகள்” என்று அவர் குறிப்பிடுகின்ற அவரது குறிப்பான மற்றும் வரலாற்றுத் துல்லியமான வரையறையில், முழுமையாக சுட்டிக்காட்டப்படுகிறது.

“தேசங்களின் சுய-நிர்ணயம் தொடர்பில் நாடுகளின் மூன்று வகைகள்” என தேசியப் பிரச்சினை குறித்த அவரது 1913-16 கால எழுத்துக்களில் அவர் குறிப்பிடுகிறார். லெனின் “சுய-நிர்ணயத்துக்கு தேசங்கள் கொண்டிருக்கும் உரிமை” குறித்து அவர் அறிவுறுத்துகிறபோது, இன பேதங்கள் கடந்து தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்காக போராடுவதற்கும், ஜாரிசத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட தேசியங்களது ஆதரவை அணிதிரட்டுவதற்காகவுமான ஒரு வழிவகையாகவே அவர் அவ்வாறு செய்தார். அவரது நிலைப்பாடு எப்போதும் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியின் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் மட்டத்தை நிபந்தனையாகக் கொண்டிருந்தது. 1913 இல், ரஷ்ய சாம்ராஜ்யத்தில், பால்கன்களில் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில்  சுய-நிர்ணயத்துக்கான உரிமையை அவர் முன்வைத்தபோது, இந்த நாடுகள் பெரும்பாலும் அப்போதும் விவசாயம் சார்ந்ததாகவே இருந்தன, முதலாளித்துவ அபிவிருத்தியும் தேசிய இயக்கமும் அங்கு அவற்றின் அரும்பு நிலையில் இருந்தன. [11]

ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்திற்குப் பின்னர், ஒட்டுமொத்தமாக இந்த உலகத்தைப் போலவே, இந்த அத்தனை பிராந்தியங்களும் மிகப் பரந்த மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கின்றன.

ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் உள்ள இந்த மூன்றாவது வகையில் உள்ள நாடுகளின் நிலையிலான ஆழமான மாற்றங்களை சுட்டிக்காட்டி, நோர்த் தெரிவித்தார்:

லெனின் இந்த வகையை வரையறை செய்த நேரத்தில் நிலவிய நிலைக்கு உண்மையாக பொருந்தக் கூடியதாக எந்த நாடுகளோ அல்லது நாடுகளின் குழுக்களோ இருக்கின்றனவா? அந்தக் கேள்வியைக் கேட்டாலே அதற்கு பதில் கூறுவதாய் அமையும். நிச்சயமாக 1913 அல்லது 1914 இன் ஆசியா அல்லது ஆபிரிக்கா மிகப்பெருமளவில் உருமாற்றமடைந்திருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் “சுதந்திரம்” பெற்ற பின்னர், அடிப்படை ஜனநாயகக் கடமைகள் எதனையும் தீர்ப்பதில் தேசியவாத இயக்கங்கள் பரிதாபகரமாகத் தோல்வியடைந்ததின் ஒரு விளைவாக, இந்த பிராந்தியங்களில் பல்வேறு இன, வகுப்பு மற்றும் மத அடிப்படைகளின் வழி புதிய இயக்கங்கள் எழுந்தன. [12]

இந்த பொதுவான நிகழ்ச்சிப்போக்கின் ஒரு வெளிப்பாடாக இந்தியாவை எடுத்துக் கொண்டு, நோர்த் விளக்கினார்:

இந்தியாவில் முதலாளித்துவ தேசிய வேலைத்திட்டத்தின் வீழ்ச்சியில் இருந்து, அல்லது, வேறுவிதமாய் சொல்வதானால், இந்திய முதலாளித்துவ வர்க்கம் உண்மையான தேசிய ஐக்கியப்படுத்தலை சாதிக்கவோ அல்லது இந்தியாவை ஏகாதிபத்திய மேலாதிக்கத்தில் இருந்து விடுதலை செய்யவோ திறனற்றதாக இருந்த அந்த துல்லியமான காரணத்தால், இந்த அரசின் சடலத்தை அடிப்படையாகக் கொண்டு, எந்த விதத்திலும் நூற்றாண்டின் முதல் பாதியின் புரட்சிகர தேசியவாத இயக்கங்களால் குணாம்சப்படுத்தப்பட்ட அனைவருக்குமாக போராடுதல் என்பதான தன்மை எதையுமே கொண்டிராத, பிளவுபடுத்தல் மற்றும் பிரிவினைவாத இயக்கங்களது அத்தனை வகைகளும் மீண்டும் எழுந்திருப்பதை, நாம் கொண்டிருக்கிறோம். [13]

முன்னாள் சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பா மற்றும் பால்கன்களில், முன்னாள்-ஸ்ராலினிச அதிகாரத்துவாதிகள் மற்றும் முதலாளித்துவவாதிகளின் சிறு குழுக்கள் முதலாளித்துவ மீட்சியின் பகுதியாக தமக்காக பிராந்தியங்களை வெட்டியெடுத்துக் கொள்ளும் பொருட்டு பல்வேறு வகுப்புவாத மற்றும் இனவாத பிளவுகளை தூண்டி விட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த புதிய தேசியவாத பிரிவினைவாத இயக்கங்கள் எதற்குமே ஏகாதிபத்திய-எதிர்ப்பு இயல்பு அல்லது வரலாற்றுரீதியாக முற்போக்கான இயல்பு இருக்கவில்லை. மாறாக, அவை ஏகாதிபத்தியங்களின் அரவணைப்பையும் உலக மூலதனத்துடனான தனிப்பட்ட உடன்பாடுகளையும் செயலூக்கத்துடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்தன, வெளிநாட்டு பன்னாட்டு பெருநிறுவனங்களுக்கு பாதுகாப்பான புகலிடங்களை வழங்க விழைந்தன.

நோர்த் குறிப்பிட்டார்:

பல்தேசிய நிறுவனங்களின் உற்பத்தியின் அபிவிருத்தியானது எண்ணற்ற அரசுகளுக்கு, அல்லது எண்ணற்ற துண்டுக் குழுக்களுக்கு, அவை இதற்கு முன் ஒருபோதும் கொண்டிராத சாத்தியங்களை வழங்குகிறது. பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சிப்போக்கும், மூலதனத்தின் நகர்நிலையும் ஒரு மிகச் சிறு பகுதிக்குள் இருக்கக் கூடிய ஏதோவொரு வகை இனக் குழுவாக்கங்களுக்கும் கூட, அவை சர்வதேச மூலதனத்துடன் எவ்வாறு பிணைத்துக் கொள்கின்றன என்பதைப் பொறுத்து சில தேசியக் குழுவாக்கங்களுக்கு சுதந்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட ஆதாயங்களைப் பெறுவதை சாத்தியமாக்குகின்றன. எல்லாவற்றுக்கும் மேல் சிங்கப்பூர், தைவான் மற்றும் ஹாங்காங் போன்றவை இதற்கான மாதிரிகளாய் இருக்கின்றன. [14]

அந்த விவாதத்தில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக பொதுச் செயலரான விஜே டயஸ் கூறினார்:

தேசிய ஜனநாயக உரிமைகளது பிரச்சினையானது புரட்சியாளர்களால், ஒரு உலக சோசலிச வேலைத்திட்டத்தின் -மார்க்சிச இயக்கம், அதாவது ட்ரொட்ஸ்கிச இயக்கம், இதற்காகவே போராடுகிறது- பகுதியாக அணுகப்பட வேண்டும். இந்த ஜனநாயகக் கடமைகள் சோசலிசப் புரட்சியின் ஒரு துணை விளைபொருளாகவே அடையப்பட முடியும் என்று நாங்கள் எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கிறோம். ஆகவே, தேசிய ஜனநாயக உரிமைகள் உலக சோசலிசப் புரட்சியின் ஒரு துணை விளைபொருளாக மட்டுமே அடையப்பட முடியும். தேசிய ஜனநாயக உரிமைகளை சாதிப்பதற்கு தேசிய வழியேதும் கிடையாது. தேசிய விடுதலை அல்லது சுதந்திரத்திற்கான தேசிய பாதைகள் ஏதுமில்லை. [15]

உலக சூழ்நிலையில் மிகப் பரந்த மாற்றங்களது நிலைமைகளின் கீழ், “சுய-நிர்ணய” சுலோகத்தை நோக்கிய நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் அணுகுமுறையில் ஒரு மாற்றத்திற்காக வாதாடிய, டேவிட் நோர்த் அறிவித்தார்:

வகுப்புவாத, இனவாத மற்றும் பேரினவாத இயக்கங்கள் சுய-நிர்ணய சுலோகம், தேசிய விடுதலை ஜனநாயக வார்த்தையாடல்களுக்கு பின்னால் ஒளிந்து கொள்கின்ற அதேநேரத்தில், பரந்த மக்களை ஏகாதிபத்தியத்திற்கு மீண்டும் அடிமைப்படுத்துவதை பொருளாதார உள்ளடக்கமாகக் கொண்ட ஒரு கொள்கையையே அவை பின்பற்றுகின்றன. அவை தேசிய விடுதலையை இந்த வார்த்தை முந்தையதொரு வரலாற்றுக் காலகட்டத்தில் புரிந்து கொள்ளப்பட்டிருந்தவாறானதொரு அர்த்தத்தில் நோக்கி செலுத்தப்படுவதில்லை, மாறாக பரந்த மக்களால் முன்னதாக ஈட்டப்பட்டிருந்த மட்டுப்படுத்தப்பட்ட வெற்றிகளையும் அழிப்பதை நோக்கியே செலுத்தப்படுகின்றன. [16]

இந்த விவாதத்தின் பாதையில் எட்டப்பட்ட அரசியல் மற்றும் தத்துவார்த்த தெளிவின் வழியில், நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு, தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தப் போராடுவதற்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற பல்வேறு தேசிய பிரிவினைவாத இயக்கங்களை நோக்கியும் அவை தனி முதலாளித்துவ அரசுகளை —அநேக சந்தர்ப்பங்களில் சிறு துண்டு அரசுகளை— உருவாக்குவதை நியாயப்படுத்துவதற்காக “சுய-நிர்ணய உரிமை”யை முன்வைப்பதை நோக்கியும் ஒரு விமர்சனபூர்வமான, இன்னும் குரோதமானதுமான, ஒரு மனோபாவத்தை அது எடுத்தாக வேண்டும் என்று முடிவெடுத்தது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு விளக்கியது:

இங்கே முக்கிய கேள்வி என்னவென்றால், பழைய முதலாளித்துவ தேசிய இயக்கங்களின் உடைவிற்கு தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சி எவ்வாறு பதிலிறுப்பு செய்கிறது? இந்த நாடுகளிலுள்ள பரந்த வெகுஜனங்கள், காலனித்துவ அகற்றத்தின் மூலமாக மற்றும் மத பிரத்தியேகவாத (particularism) அடித்தளத்தின் மீது உருவாக்கப்படுகின்ற துண்டு அரசுகளை அடிப்படையாகக் கொண்டு புதிய பிரிவினைவாத இயக்கங்களின் மூலமாக தமது நலன்களை முன்னெடுத்தாக வேண்டுமா?

அத்தகையதொரு முன்னோக்கை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். இத்தகைய துண்டு அரசுகள் இந்தியாவிலோ அல்லது வேறெங்கிலுமோ தொழிலாள வர்க்கத்திற்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட பரந்த மக்களுக்கும் எந்த முன்னோக்கிய பாதையையும் வழங்கப் போவதில்லை. அதிகபட்சமாக, சலுகையுடைய வர்க்கங்களின் ஒரு சின்னஞ்சிறு அடுக்கிற்கு, அவை ஒரு தடையில்லா வாணிக மண்டலத்தை உருவாக்கி நாடுகடந்த மூலதனத்துடன் தமது சொந்த உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள இயலுகின்ற மட்டத்திற்கு, இலாபங்களை உருவாக்கித் தரும். வெகுஜனங்களை பொறுத்தவரையில், அவை இனச் சண்டை இரத்தப்பாய்வுகளுக்கும் தீவிரப்பட்ட சுரண்டலுக்கும் மட்டுமே வாய்ப்புவளம் அளிக்கின்றன. [17]

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், கொழும்பில் அடுத்தடுத்த அரசாங்கங்களால் நடத்தப்பட்ட தமிழர்-விரோத இனவாதப் போருக்கான அதன் கோட்பாடான மற்றும் தீரமிக்க எதிர்ப்பை தொடர்ந்தது, ஒடுக்கப்பட்ட தமிழ் வெகுஜனங்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து நின்றது என்ற அதேநேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத வேலைத்திட்டத்தை எதிர்த்தது. முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கிவீசி ஸ்ரீலங்கா ஈழம் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தை ஸ்தாபிப்பதற்காக, சிங்கள, தமிழ், முஸ்லீம் இனபேதமின்றி தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்காக கட்சி தளர்ச்சியின்றி தொடர்ந்து போராடி வந்திருக்கிறது.

Footnotes:

[1] “Revolutionary Communist League Statement,” December 8, 1971, Fourth International, March 1987, p. 37.

[2] “Letter from the RCL to Cliff Slaughter,” December 16, 1971, Fourth International, March 1987, p. 42.

[3] Ibid, p. 43.

[4] The Historical & International Foundations of the Socialist Equality Party Sri Lanka, Mehring Books, 2012, p. 102.

[5] “The Situation in Sri Lanka and the Political Tasks of the Revolutionary Communist League,” International Committee of the Fourth International Statement, Fourth International, January–March 1988, p. 18.

[6] Ibid, p. 21.

[7] Ibid. p. 19.

[8] Ibid. p. 21.

[9] “Letter from David North to Wije Dias,” December 27, 1988, Political Chronology of the International Committee of the Fourth International 1982–1991, p. 55.

[10] “Meeting of the RCL Political Committee,” March 3–8, 1990, Political Chronology of the International Committee of the Fourth International 1982–1991, pp. 80–81.

[11] “Perspectives and Tasks of the ICFI: The Permanent Revolution Today,” 13th Plenum of the ICFI Essen, June 1–7, 1993.

[12] Ibid. p. 2.

[13] Ibid. p. 4

[14] Ibid. pp. 18–19.

[15] Ibid. p. 11

[16] Ibid. p. 34.

[17] Globalisation and the International Working Class: A Marxist Assessment, Statement of the International Committee of the Fourth International, Mehring Books, 1998, p. 115