Print Version|Feedback
Germany: Trial in Hamburg for former SS security guard at Stutthof concentration camp
ஜேர்மனி: ஸ்ருட்ஹோஃப் சித்திரவதை முகாமின் முன்னாள் SS காவலாளி குறித்து ஹம்பேர்க்கில் விசாரணை
By Elisabeth Zimmermann
10 February 2020
ஸ்ருட்ஹோஃப் சித்திரவதை முகாமின் முன்னாள் நாஜி SS (பாதுகாவல்படை-Schutzstaffel) காவலாளியான 93 வயது புருனோ டி மீதான விசாரணை அக்டோபர் 17, 2019 அன்று தொடங்கியது. ஆகக்குறைந்தது 5,230 பேரின் கொலைக்கு புருனோ டி உடந்தையாக இருந்து உதவியளித்தார் என்று அரசு வழக்குத்தொடுனர் குற்றம்சாட்டுகிறார்.
ஆகஸ்ட் 9, 1944 முதல் ஏப்ரல் 26, 1945 வரை ஸ்ருட்ஹோஃப் சித்திரவதை முகாமின் SS காவலாளிகள் குழுவில் புருனோ டி அங்கம் வகித்திருந்தார். புருனோ டி இன் அப்போதைய வயதின் காரணமாக –அப்போது அவர் வெறும் 17-18 வயதினராக இருந்தார்– ஹம்பேர்க்கில் நடந்த வழக்கு விசாரணை அந்நகரின் சிறார் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. ஸ்ருட்ஹோஃப் சித்திரவதை முகாமில் சுமார் 65,000 பேர் நாஜிக்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது, இந்த முகாம் தற்போதய போலந்தின் டன்சிக் (Gdansk) நகரத்தில் இருந்து கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
விசாரணையின் தொடக்கத்திலிருந்து உடன் வாதிகள், ஸ்ருட்ஹோஃப் சித்திரவதை முகாமிலிருந்து உயிர்பிழைத்தவர்கள், மற்றும் அவர்களது உறவினர்கள் அளித்த அறிக்கைகள், SS. காவலாளிகள் வகித்த பங்குடன் முகாமில் நிலவிய கொடூரமான மற்றும் கொலைகார நிலைமைகளை தெளிவாக எடுத்துக்காட்டி நிரூபிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளன.
அமெரிக்காவில் வசிக்கும், ஜேர்மனிக்கு பயணிக்க முடியாத 90 வயது ஜூடி மெய்செல் (Judy Meisel) ஒரு அறிக்கையை வாசித்தார். இவர் 13 வயது சிறுமியாக இருந்தபோது அவரது தாயுடன் சேர்ந்து ஸ்ருட்ஹோஃப் முகாமிற்கு கொண்டு அவர் செல்லப்பட்டார், அங்கு அவரது தாய் எரிவாயு அறையில் கொலை செய்யப்பட்டார். அவரது வழக்கறிஞரால் வாசிக்கப்பட்ட அவரது அறிக்கையில், அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்: “ஸ்ருட்ஹோஃப் இல் பாரிய படுகொலை SS ஆல் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதுடன், காவலாளிகளால் அது சாத்தியப்படுத்தப்பட்டது. ஏனென்றால், அவர்கள் தான் இந்த நரகத்திலிருந்து எவரும் தப்பிக்க முடியாமல் செய்தனர்.”
குற்றம்சாட்டப்பட்ட புருனோ டி தனது வாக்குமூலத்தில் சித்திரவதை முகாமில் முக்கியமாக தான் பாதுகாப்பு கோபுரத்தில் பணியாற்றி வந்ததாகவும், ஒருபோதும் தான் ஆயுதத்தை பயன்படுத்தியதில்லை என்றும் தெரிவித்திருந்தார். முகாம் பற்றிய பல விபரங்களை அவரால் நினைவுகூர முடியும் என்றாலும், தகன அறையிலிருந்த வந்த ஒவ்வொரு நாளும் எரிக்கப்பட்ட உடல்களின் மணத்தை தன்னால் நினைவுகூர முடியவில்லை என்றும் அவர் கூறினார். ஆனால், சித்திரவதை மற்றும் அழிப்பு முகாம்களில் இருந்து உயிர்தப்பியவர்கள் அனைவரும் அந்த மணத்தை ஒருபோதும் மறக்க முடியாது என்றே கூறுகின்றனர்.
சித்தரவதை முகாமில் வேலையை எந்த விதத்திலாவது தவிர்ப்பதற்கான வழி அவருக்கு தெரியவில்லை என்றே புருனோ டி உம் கூறினார். இவரது கூற்று, இதேபோன்ற பல விசாரணைகளில் கைதேர்ந்த சாட்சியாளராக இருந்த வரலாற்றாசிரியர் ஸ்டீபன் ஹோர்ட்லெருக்கு (Stefan Hordler) முரணானதாக இருந்தது.
சித்திரவதை முகாமின் செயல்பாட்டில் SS காவலாளிகள் முக்கிய பங்காற்றினர் என்று ஹோர்ட்லெர் சுட்டிக்காட்டினார். அவர்கள், முகாமை வெளியில் இருந்து பாதுகாப்பது, கைதிகளை தப்பியோடி விடாமல் தடுப்பது, அவர்களை அவர்களது அன்றாட கட்டாய வேலைக்கு இட்டுச் செல்வது, அத்துடன் உள்வரும் இரயில்களை பாதுகாப்பது மற்றும் அங்கு கொண்டுவரப்பட்ட பலரை நேரடியாக கொலைக்கு இட்டுச்செல்லும் தேர்வு செயல்முறையை நடத்துவது போன்ற பல பணிகளை செய்தனர்.
குற்றம்சாட்டப்பட்டவரின் வயதை பொருட்படுத்தாமல், இவ்வளவு தாமதமாக ஏன் விசாரணை நடத்தப்பட்டது என்ற கேள்வியை புருனோ டி இன் வழக்கறிஞர் முன்வைத்தார். அதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், இரண்டாம் உலகப் போர் சமயத்தில் நாஜிக்கள் செய்த எண்ணற்ற குற்றங்கள் குறித்து போருக்குப் பிந்தைய மேற்கு ஜேர்மனியில் ஒருபோதும் உண்மையான அரசியல்ரீதியான மற்றும் சட்டரீதியான மீள்மதிப்பீடு இல்லை. போருக்குப் பின்னர் நாஜி சகாப்தத்திலிருந்து பெருமளவில் பல நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகளும் எவ்வித பதவி மாற்றமின்றி தொடர்ந்து முன்னணி பதவிகளை வகித்தனர். எடுத்துக்காட்டாக, போரிலிருந்து உயிர்தப்பியவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவுஸ்விட்ச் சித்திரவதை மற்றும் அழிப்பு முகாமில் பணியாற்றிய சுமார் 6,500 எஸ்.எஸ். உறுப்பினர்களில், போருக்குப் பிந்தைய கூட்டாட்சி குடியரசில் 29 பேருக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டது.
சித்திரவதை முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டு 66 ஆண்டுகளுக்குப் பின்னர் பெரும்பாலான கொலைக் குற்றவாளிகள் தங்களது படுக்கையில் நிம்மதியாக உயிரை விட்ட நீண்ட காலத்திற்குப் பின்னர் வழக்குத் தொடர்வதற்கான ஒரு புதிய சட்ட அடிப்படை முதன்முதலில் 2011 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. நாஜிக்களால் செய்யப்பட்ட பாரிய கொலையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுவதற்கு குறிப்பிட்ட குற்றத்திற்கான ஆதாரங்கள் எதுவும் இனி தேவையில்லை என்று புதிய சட்டம் வரையறுத்தது. அதற்கு பதிலாக, ஒட்டுமொத்த சித்திரவதை முகாம்களின் முழு நோக்கமும் கைதிகளை அழிப்பதை எளிதாக்கிய நிலையில், அங்கு என்ன வேலை செய்திருந்தாலும் அதுவே குற்றம்சாட்டுவதற்கு போதுமானதாக இருந்தது.
இதன் விளைவாக, உக்ரேனிய காவலாளி ஜோன் டெம்ஜான்ஜூக் (John Demjanjuk) மற்றும் SS காவலாளி ஒஸ்கார் குரோனிங் (Oskar Groning) உட்பட பல முன்னாள் காவலாளிகள், பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் கொலை செய்யப்படுவதில் ஈடுபட்டதால் 2011 முதல் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய விசாரணைகளின் முக்கியத்துவம், நாஜி சர்வாதிகாரத்தின் பாரிய குற்றங்களுக்கு காலவரையறை கிடையாது என்பதை எடுத்துக் காட்டுவதே. அதாவது, இதுபோன்ற கொடுமைகளில் இருந்து உயிர்தப்பியவர்களுக்கும், வாழ்நாள் முழுவதும் இந்த கொடூரமான அனுபவங்களின் விளைவுகளுடன் வாழ வேண்டிய கட்டாயத்திலுள்ள அவர்களது குடும்பங்களுக்கும் குறைந்தபட்சம் சில நிவாரணங்களையும் நீதியையும் இது வழங்குகிறது.
ஜேர்மனி, ஐரோப்பா மற்றும் உலகெங்கிலுமான அதிவலது தீவிரவாதம் மற்றும் பாசிசத்தின் தற்போதைய மீள்எழுச்சியினால், புருனோ டி க்கு எதிரான வழக்கில், இதுவரை விசாரித்த பல இணைவாதிகள், இந்த விசாரணை மிகவும் முக்கியம் வாய்ந்தது என வலியுறுத்தியுள்ளனர். ஹெஸ்ஸ மாநிலத் தலைவரான வால்டர் லூப்க (Walter Lubcke) ஒரு நவ பாசிசவாதியால் கொலை செய்யப்பட்டமை மற்றும் ஹால நகரில் ஒரு யூத ஆலையத்தின் மீதான மிக சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதல் ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்த விசாரணை “அவசரமாக அவசியமானது” என்று ஒரு இணை வாதியான கிறிஸ்டோஃப் ருக்கேல் (Christoph Ruckel) கூறினார். ஒவ்வொரு தீவிர வலதுசாரி செயலும் “விட்டுக்கொடுக்கப்படாமல்” தண்டிக்கப்பட வேண்டும் என்று ருக்கேல் வலியுறுத்தினார்.
அக்டோபர் மாத இறுதியில், 93 வயதான மரெக் டுனின்-வாசோவிச் (Marek Dunin-Wasowicz), புருனோ டி இன் விசாரணையில் சாட்சியமளித்தார். வார்சோவில் இருந்து வந்திருந்த டுனின்-வாசோவிச், ஸ்ருட்ஹோஃப் சித்திரவதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளில் ஒருவராவார். ஜேர்மன் ஆக்கிரமிப்பிற்கு எதிரான எதிர்ப்பை அவர் தனது சகோதரர்கள் மற்றும் பெற்றோருடன் சேர்ந்து ஆதரித்தார்.
டுனின்-வாசோவிச், சித்திரவதை முகாம்களின் கொடூரமான நிலமைகள் பற்றி விவரித்ததுடன், 1944 இலையுதிர் காலத்தில் ஆயிரக்கணக்கான யூதர்கள் சித்திரவதை முகாம்களுக்கு கொண்டுவரப்பட்டதையும், SS காவலாளிகளால் அவர்கள் வேட்டையாடப்பட்டு தாக்கப்பட்டது பற்றியும் விவரித்தார். அவர்களில் பலரும் பின்னர் முகாமில் காணப்படவில்லை, அதாவது, அவர்கள் உடனடியாக கொலை செய்யப்பட்டு அவர்களது உடல்கள் அழிக்கப்பட்டன. மேலும், முகாமில் மனிதச் சடலங்களை காண்பது பொதுவானது என்று அவர் தெரிவித்தார்.
டுனின்-வாசோவிச் குடியிருப்பு முகாம்களின் நிலைமைகளையும் விவரித்தார், அங்கு சுவரோடு இணைந்த மூன்று அடுக்கு வைக்கோல் படுக்கையை மூன்று பேர் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது. அங்கு பசி பரவலாக காணப்பட்டது. காலை உணவுக்கு ஒரு துண்டு ரொட்டியும், மதிய உணவுக்கு ஒரு அகப்பை சூப்பும் வழங்கப்பட்டது. இத்தகைய நிலைமைகளின் கீழ் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட பலரும் பசி மற்றும் சோர்வினால் இறந்தனர். 1945 ஜனவரியில் கெஸட்டாப்போ ஏற்பாடு செய்திருந்த மரண ஊர்வலத்தில் இருந்து டுனின்-வாசோவிச் ஆல் அதிர்ஷ்டவசமாக தப்பிக்க முடிந்தது.
Spiegel செய்தி வலைத் தளத்தின் படி, டுனின்-வாசோவிச் தனது அறிக்கையின் முடிவில், இது தனது கடமை என்று உணர்ந்ததால் நீதிமன்றத்தில் அவர் ஆஜரானதாக தெரிவித்தார். தன்னுடன் சிறையில் அடைக்கப்பட்ட அனைவருக்கும், மற்றும் ஸ்ருட்ஹோஃப் இல் இறந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்த அவர் வந்திருந்தார். தான் அனுபவித்தது ஒருபோதும் திரும்ப நிகழாமல் இருக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் அவர் அழுத்தமாகக் கூறினார்.
“ஜேர்மனி, போலந்து, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை நான் காண்கின்ற வகையில்: தேசியவாதமும் இனவாதமும் எழுச்சி அடைவதால் –ஏன் பாசிசமும் கூட– நான் அச்சமடைகிறேன்,” என்றும், “அதனால்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். பழிவாங்கலை நான் விரும்பவில்லை” என்றும் மரேக் டுனின்-வாசோவிச் தெரிவித்தார்.
டிசம்பர் தொடக்கத்தில், முகாமில் இருந்து உயிர்தப்பிய ஆபிரகாம் கோரிஸ்கி (Abraham Koryski) ஹம்பேர்க்கிற்கு வந்திருந்தார். 92 வயதான அவர் இஸ்ரேலில் இருந்து தனது மகள் மற்றும் இரண்டு உறவினர்களுடன் SS செய்த கொடூரமான அட்டூழியங்கள் குறித்து சாட்சியமளிக்க வந்திருந்தார். அவரது 16 வயதில், ஆகஸ்ட் 1944 இல் ஸ்ருட்ஹோஃப் சித்திரவதை முகாமிற்கு அவர் அனுப்பப்பட்டார். பல முகாம்களின் வழியாக தொடர்ந்த அவரது துன்பப்பயணம் ஸ்ருட்ஹோஃப் இல் முடிவடைவதற்கு முன்பு, லித்துவேனியாவின் தலைநகரான வில்னியுஸின் பழைய நகரின் ஒரு முகாமில் பல ஆண்டுகளை அவர் கழித்தார். தேசிய சோசலிஸ்டுகள் ஆயிரக்கணக்கான யூதர்களை வில்னியுஸிலிருந்து Ponar வரை கொண்டு சென்றனர், அங்கு அவர்கள் பாரிய அழிப்பிற்கு ஆளாக்கப்பட்டனர்.
போரின் முடிவிற்கு சற்று முன்னர் மரண ஊர்வலத்தில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் கோரிஸ்கிக்கும் ஏற்பட்டது. கைதிகளுக்கு உணவு, பானம், சூடான உடைகள் மற்றும் காலணிகள் அனுமதிக்கப்படவில்லை. யார் இறந்தாலும் சாலையின் ஓரத்தில் அவர்களது உடல்கள் தள்ளிவிடப்பட்டன, எஞ்சியவர்களுக்கு தொடர்ந்து ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. “நாங்கள் பனியை சாப்பிட்டோம்,” என்று கோரிஸ்கி கூறினார். அவரால் இனிமேல் வலியை தாங்க முடியாத நிலையில் பல முறை அவர் உட்கார நேர்ந்தது. பின்னர் மீண்டும் அவர் எழுந்தார். சோவியத் செம்படையின் தலையீட்டால் இறுதியில் அவர் விடுவிக்கப்பட்டார்.
விசாரணையில் சாட்சியமளிக்க கோரிஸ்கி வெளிப்படையாக விரும்பினார். அவர், “இது எனக்கு எளிதானது அல்ல. நான் பழிவாங்குவதற்கு வரவில்லை. அதே நேரத்தில், நான் குற்றம்சாட்டுகிறேன்; நான் மன்னிக்க மாட்டேன். என்ன நடந்தது என்பதை உலகம் அறிய வேண்டுமென்றே நான் விரும்புகிறேன். எல்லோரும் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார். இது வருங்கால தலைமுறையினருக்கு மிகவும் முக்கியமானது என்றார். எனது பழிவாங்கல் என்பது, இங்கு இந்த அறையில் இருந்த எனது குடும்பம் மற்றும் எனது உறவினர்களுக்காகத்தான்” என்று கோரிஸ்கி கூறினார். “அவை அனைத்திலிருந்தும் என்னால் தப்பிக்க முடிந்தது என்பதை அவர்கள் நிரூபிக்கின்றனர்.”
ஜனவரி 24 அன்று, ஹம்பேர்க் பிராந்திய நீதிமன்றம், ஸ்ருட்ஹோஃப் சித்திரவதை முகாமிலிருந்து தப்பிய மற்றொருவரின் சாட்சியத்தை கேட்டது. இதை, நோர்வே நாட்டைச் சேர்ந்த 97 வயதான ஜோஹான் சோல்பேர்க்கின் மகன் குன்னார் சோல்பேர்க் வாசித்தார். அவர் தற்போது மருத்துவமனையில் இருக்கிறார், ஹம்பேர்க்கிற்கு பயணிக்க முடியாத அளவிற்கு உடல்நிலை சரியில்லாமல் அவர் இருக்கிறார்.
ஜோஹன் சோல்பேர்க் நோர்வேயில் ஜேர்மன் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போராடிய எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர். அவர் கைது செய்யப்பட்டு 44 ஆண்கள் மற்றும் 18 பெண்களுடன் ஸ்ருட்ஹோஃப் சித்திரவதை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டார். முகாமிற்கு மேலே எழுந்த “புகைபிடித்த மணத்தை” அவர் இன்னமும் நினைவில் வைத்திருப்பதாகக் கூறினார்.
ஆகஸ்ட் 10, 1944 அன்று சோல்பேர்க் அங்கு வந்து சேர்ந்தவுடன் உடனடியாக ஒரு பயங்கரமான சூழ்நிலையை எதிர்கொண்டார்: அப்போது ஒரு மனிதன் அவர்களது கட்டுப்பற்களிலிருந்து தங்கத்தால் கட்டிய பல்லை இழுத்து எடுத்தபோது, சுமார் 15 பேரின் பட்டினிபோடப்பட்ட உடல்கள் குடியிருப்பின் முன்னால் கிடந்தன. யூத கைதிகள் மிக மோசமான தலைவிதியை எதிர்நோக்கியிருந்தனர். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்களை எரிவாயு அறைக்கு அழைத்துச் செல்வதை அவர் கண்டார். அவர்களில் பலரும் அழுது கொண்டிருந்தனர். “அவர்கள் அங்கு தான் செல்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும்,” என்று அவர் கூறினார்.
ஒருவர் தண்டிக்கப்பட்டால், அனைத்து கைதிகளும் எப்படி நடக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தனர் என்றும் சோல்பேர்க் விவரித்தார். 11 மரணதண்டனைகளை அவர் நேரில் கண்டார். 1944 கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பின்னர் சில நாட்களில் கிறிஸ்துமஸ் மரத்திற்கு அருகே இரண்டு ரஷ்ய சிறுவர்கள் தூக்கிலிடப்பட்டது இதில் கொடூரமானதாகும்.
1970 களில் தனது தந்தையுடன் “ஹோலோகாஸ்ட்” என்ற தொலைக்காட்சித் தொடரைப் பார்த்ததாகவும், “அது உண்மையிலேயே அவ்வளவு மோசமானதாக இருந்ததா?” என்று தந்தையிடம் தான் கேட்டதாகவும் மகன் தெரிவித்தார், அதற்கு “இல்லை, அது படுமோசமாக இருந்தது” என்று தந்தை பதிலளித்தார்.
ஜோஹான் சோல்பேர்க் தனது அறிக்கையில், “நான் நாஜி அமைப்புமுறையை வெறுக்கிறேன், ஆனால் தனிப்பட்ட நபர்களை அல்ல. பழிவாங்கல் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது. நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து இது ஒருபோதும் மீண்டும் நிகழாதிருக்க செய்வோம்” என்று வலியுறுத்தினார்.