Print Version|Feedback
Far-right AfD plays role of kingmaker in German state election
அதிவலது AfD கட்சி ஜேர்மன் மாநில தேர்தலில் ஆட்சியை தீர்மானிக்கும் பாத்திரம் வகிக்கிறது
By Christoph Vandreier
7 February 2020
மூன்றாம் குடியரசு முடிவிற்கு வந்த பின்னர் முதல்முறையாக, ஒரு மாநில முதல்வர் ஒரு வலதுசாரி பாசிசவாத கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீட்டின் (AfD) வாக்குகளுடன் புதன்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். AfD, கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU) மற்றும் நவ-தாராளவாத சுதந்திர ஜனநாயக கட்சி (FDP) ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டணி, முன்னாள் ஜேர்மன் ஜனநாயக குடியரசின் பாகமாக தூரிங்கியா மாநிலத்தில் மிக உயர்ந்த அரசியல் பதவியை ஏற்பதற்காக FDP அரசியல்வாதி தோமஸ் கெம்மரிச் (Thomas Kemmerich) க்கு உதவியது. புதிய முதல்வராவதற்கு தேவையான 45 வாக்குகளில் 22 வாக்குகள் அம்மாநிலத்தின் இரண்டாவது மிகப்பெரிய நாடாளுமன்ற குழுவான AfD உறுப்பினர்களிடம் இருந்து வந்தது.
நாடெங்கிலும் எழுந்த பெரும் போராட்டங்களின் காரணமாக, கெம்மரிச் அவர் இராஜினாமா செய்ய இருப்பதாக வியாழக்கிழமை அறிவித்தார். ஆனால் இதுவரையில் உண்மையில் பதவியிலிருந்து கீழிறங்க மறுத்து வருகிறார் என்பதுடன் இவ்விதத்தில் பாசிசவாதிகளின் வாக்குகள் மீது ஆதரவில் தங்கியுள்ள முதல் மாநில முதல்வராக பதவியிலுள்ளார். தூரிங்கியா மாநில நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய தேர்தல்களுக்கு வழிவிடப்படுமா அல்லது மற்றொரு மாநில முதல்வருக்கு வாக்களிக்கப்படுமா என்பது இன்னமும் தெளிவாக இல்லை. கெம்மரிச் வரவிருக்கும் மாதங்களிலும் பதவியில் இருக்கக்கூடும்.
தோமஸ் கெம்மரிச் [படம்: அசோசியேடெட் பிரஸ்/ மைக்கெல் சோஹ்ன்]
கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் மாநில தலைவர் மைக் மோஹ்ரிங், “சிவப்பு-சிவப்பு-பச்சை கூட்டணிக்கு (இடது கட்சி, சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் பசுமைக் கட்சியின் கூட்டணிக்கு) முடிவு கட்டும் அடித்தளத்தில் தான் நாங்கள் இந்த தேர்தலில் நுழைந்தோம். எங்களின் சொந்த தேர்தல் பிரச்சார வாக்குறுதியை நாங்கள் முறிக்க முடியாது,” என்று கூறி AfD உடனான அவர் ஒத்துழைப்பை நியாயப்படுத்தினார். ஜேர்மன் அரசாங்கத்திற்கான கிழக்கு ஜேர்மனியின் ஆணையாளர் கிறிஸ்டியான் ஹிர்ட (CDU) உடனடியாக கெம்மரிச்சைப் பாராட்டியதுடன், “அரசியலில் மத்திய பிரிவினரின் ஒரு வேட்பாளராக நீங்கள் தேர்வாகி இருப்பது, தூரிங்கிய மக்கள் மீண்டுமொரு முறை சிவப்பு, சிவப்பு, பச்சைக்கு எதிராக வாக்களித்திருப்பதைக் காட்டுகிறது என்று ட்வீட் செய்தார்.
FDP தலைவர் கிறிஸ்ரியான் லிண்ட்னரும் "அரசியலில் மத்திய பிரிவினரின் [அவர்] வேட்பாளருக்கு" வாழ்த்து தெரிவித்தார். ஜேர்மனியின் உள்நாட்டு உளவுத்துறை முகமையின் (அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகத்தின்) முன்னாள் தலைவரும், CDU இன் அதிதீவிர வலது கன்னையின் முன்னணி பிரமுகருமான ஹன்ஸ்-கியோர்க் மாஸன், கெம்மரிச் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒரு "மிகப்பெரும் வெற்றியாக" வர்ணித்தார். “முக்கியமான விடயம், சோசலிசவாதிகள் தோற்றுள்ளார்கள்,” என அவர் அறிவித்தார்.
AfD இன் தேசிய தலைவரும் தேசிய செய்தி தொடர்பாளருமான ஜோர்க் மொய்தன் (Jörg Meuthen) தூரிங்கியா தேர்தலை "ஜேர்மனியின் ஒரு அடிப்படை அரசியல் திருப்புமுனையின் திட்டத்தில் முக்கியமான ஒரு சிறுபகுதி" என்பதாக வர்ணித்தார். இறுதியில் இப்போது "சோசலிச ஆவிகள்" ஒழிந்தன. அதே நேரத்தில், தூரிங்கியாவில் மந்திரிசபை பதவிகள் ஏற்பதற்கு AfD க்கு உரிமை இருப்பதாக அவர் அறிவித்தார்.
முதல் மந்திரி கெம்மரிச் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர், மோஹ்ரிங் மற்றும் முறையே அவர்களின் கட்சிகளும் பாசிசவாதிகள் உடனான அவர்களின் கூட்டணியைச் சிந்தித்தே பார்த்திருக்கவே இல்லை என்று வாதிட்டனர். உண்மையில் இந்த வாதம் அபத்தமானது. கெம்மரிச் இறுதியான மூன்றாவது வாக்குப்பதிவிலேயே தேர்தலில் நுழைந்தார். இந்த மூன்றாவதுகட்ட வாக்கெடுப்பில் ஜெயிப்பதற்குச் சாதாரணமான பெரும்பான்மை வாக்குகளே அவசியப்பட்டது. இப்போதைய முதல் மந்திரி, போடோ ராமலோவ் (இடது கட்சி) முந்தைய இரண்டு சுற்று வாக்குபதிவுகளிலும் பெரும்பாலான வாக்குகளைப் பெற்றிருந்தார் என்றாலும் அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை. அவர் அவரின் சொந்த இடது கட்சியின் மற்றும் பசுமை கட்சி மற்றும் SPD இன் வாக்குகளைச் சார்ந்திருந்தார். இவை அனைத்தும் ஒரு சிறுபான்மை அரசாங்கம் அமைக்க முயன்றன.
ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் AfD, CDU மற்றும் FDP மொத்தத்தில் ஏறத்தாழ ஒருமித்து அவருக்கு வாக்களித்தால் மட்டுமே அவரால் தேர்தலில் ஜெயிக்க முடியும் என்பது கெம்மரிச் க்கு நன்றாக தெரியும். அவ்வாறான ஒன்று முன்கூட்டிய ஓர் உடன்படிக்கை எட்டப்படாமல் பெரிதும் சாத்தியமில்லை. முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், அந்த FDP அரசியல்வாதி உடனடியாக தேர்வானதை ஏற்றுக் கொண்டதுடன், அதன் பின்னர் விரைவிலேயே முதலமைச்சராக அவரின் முதல் உரை வழங்கினார். அவ்விதத்தில் AfD இன் வாக்குகள் அடிப்படையில் ஆட்சி அமைப்பதற்கான அவரின் விருப்பத்தை உறுதிப்படுத்தினார்.
அவர் பதவி விலக இருப்பதாக கெம்மரிச் அறிவிக்க வேண்டியிருந்தது என்றாலும் கூட, AfD இன் உதவியுடன் ஓர் ஆளும் பெரும்பான்மையை உருவாக்குவது என்ற அவ்விரு கட்சிகளின் முடிவும் ஒரு வரலாற்று திருப்புமுனையாகும். இது, ஜேர்மனியில் ஆளும் வர்க்கம் பரந்த மக்கள் எதிர்ப்புக்கு முன்னால் அதன் சமூக சமத்துவமின்மை மற்றும் இராணுவவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்த மீண்டுமொருமுறை பாசிசவாத மற்றும் எதேச்சதிகார முறைகளை பயன்படுத்த முனைகின்றது என்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்த தேர்ந்தெடுப்பு வரலாற்று சமாந்தரங்களை நினைவூட்டுகிறது. ஜனவரி 23, 1930 இல் தூரிங்கியாவில் ஒரு மாநில அரசாங்கம் அமைக்கப்பட்டது. அதில் முதல்முறையாக, ஹிட்லரின் நாஜி கட்சியை உள்ளடங்கி இருந்தது. முன்னதாக அங்கே அந்த மாநில தேர்தலில் ஒருதரப்பினருக்கும் பெரும்பான்மையற்ற நிலை நிலவியது. SPD மற்றும் KPD (ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி) இன் இருப்பத்தி நான்கு உறுப்பினர்கள் பல்வேறு முதலாளித்துவ கட்சிகளின் 23 உறுப்பினர்களுக்கு எதிராக முன்னின்றனர். பின்னர் அது ஆறு நாஜி அங்கத்தவர்களின் உதவியுடன் ஆட்சி அமைக்க பெரும்பான்மையைப் பெற்றது. அரசாங்கத்தில் பங்கெடுத்தமை தூரிங்கியாவில் நாஜிக்களின் ஆதரவுத்தளங்களை மீட்டமைப்பதில் குறிப்பிடத்தக்களவில் பங்களிப்பு செய்தது. அதற்கு மூன்றாண்டுகளுக்குப் பின்னர் ஹிட்லர் ஜேர்மன் சான்சிலராக பதவி ஏற்றார்.
இந்த தூரிங்கியா தேர்தலின் பொறுப்பாளிகளுக்கு எதிராக மக்கள் கோபம் சீறுவதற்கு இட்டுச் சென்றமை முற்றிலும் நியாயமானதே. தேர்தல் முடிவுகள் வெளியான உடனே, ஆயிரக் கணக்கானவர்கள் எண்ணற்ற நகரங்களில் FDP மற்றும் CDU தலைமையகங்களின் முன்னால் ஆர்ப்பாட்டத்திற்காக ஒன்று கூடினர். பேர்லினில் மட்டும், ஆயிரக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் FDP தலைமையங்கங்களின் முன்னால் ஒன்று கூடினர்.
பிரதானமாக இதுபோன்ற பாரிய எதிர்ப்பின் காரணமாக, CDU இன் தலைமை நிர்வாகி அன்னகிரேட் கிரம்ப்-காரன்பவர் மற்றும் கிறிஸ்துவ சமூக ஒன்றியம்/ CSU இன் தலைமை நிர்வாகி மார்க்குஸ் ஷோடர் ஆகியோர் தூரிங்கியாவில் CDU நாடாளுமன்ற குழு எடுத்த நிலைப்பாட்டிலிருந்து தங்களை அந்நியப்படுத்திக்காட்ட நிர்பந்திக்கப்பட்டார்கள். ஆனால் மோஹ்ரிங் தன் நிலைப்பாட்டை பாதுகாத்து அறிவிக்கையில், அவரின் நடவடிக்கை தொடர்பாக தேசிய கட்சி தலைமையுடன் விரிவாக விவாதித்திருந்ததாக வலியுறுத்தினார்.
இடது கட்சி, பசுமை கட்சி மற்றும் SPD இன் சீற்றமான வெளிப்பாடுகளில் எந்த கோட்பாட்டு அடித்தளமும் இல்லை. சமூக வெட்டுக்கள் மீதான அவர்களின் வலதுசாரி கொள்கையும் அகதிகள் மீதான அவர்களின் வெறுப்பும் தான் AfD ஐ முதலிடத்திற்குக் கொண்டு வந்துள்ளது. 2017 இலையுதிரில் 92 பிரதிநிதிகளுடன் ஜேர்மன் நாடாளுமன்ற கீழ் அவையில் AfD ஆசனங்களை எடுத்ததில் இருந்து, அனைத்து அரசியல் கட்சிகளும் பாசிசவாதிகளுடன் சேர்ந்தே செயல்பட்டுள்ளன.
CDU, CSU மற்றும் SPD உடன் ஒரு "மகா கூட்டணிக்குள்" அது நுழைந்தமை AfD ஐ நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாக மாற்றியது. அனைத்து நாடாளுமன்ற குழுவிலும் AfD பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது என்பதுடன் அவ்விதத்தில் திட்டமிட்டு அரசு வேலைகளுக்குள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. Halle நகரில் யூத வழிபாட்டு தலங்கள் மீதான சமீபத்திய தாக்குதலுக்குப் பின்னர் யூத-எதிர்ப்பு ட்வீட் செய்திகளை வெளியிட்ட AfD துணை தலைவர் ஸ்ரெபான் பிரண்ட்னர், அப்போதைய SPD நாடாளுமன்ற குழு தலைவர் தோமஸ் ஒப்பர்மானின் கீழ் ஜேர்மன் நாடாளுமன்ற கீழ் அவையின் சட்டக்குழு தலைவர் பதவி வகித்தார். பிரண்ட்னரை ஒப்பர்மான் தான் அப்பதவிக்கு முன்மொழிந்தார். பல தொடர்ச்சியான புதிய பாசிசவாத வெறிப்பேச்சுக்களைத் தொடர்ந்து கடந்த நவம்பரில் தான் பிரண்ட்னர் வாக்கெடுப்பின் மூலமாக அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
நவதாராளவாத இனவாதி பீட்டர் போரிங்கர் (வரவு-செலவு திட்டக்கணக்கு கொள்கை) மற்றும் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்ட போக்கிரித்தனமான செபஸ்ரியான் முன்ஸன்மையர் (சுற்றுலாத்துறை) போன்ற ஏனைய AfD வலதுசாரிகளும் ஸ்தாபக கட்சிகளின் வாக்குகளுடன் நாடாளுமன்றத்தில் குழு தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
குறிப்பாக அனைத்து கட்சிகளுக்கு இடையிலான கூட்டுறவு தூரிங்கியாவில் வெகுவாக முன்னேறி உள்ளது. இந்த தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர், தூரிங்கியா மாநில சான்சிலர் அலுவலக தலைவர் பெஞ்சமின் இம்மானுவேல் கோவ் (இடது கட்சி) கூறுகையில், பல பிரச்சினைகளில் அரசு கட்சிகளும் எதிர்கட்சிகளும் நாட்டின் நலன்களுக்குரிய தீர்வுகளை அவர்கள் காண விரும்புவதாக தெளிவுபடுத்தி இருப்பதாக தெரிவித்தார். இந்த கட்சி பேதமற்ற பரிவர்த்தனை தூரிங்கியாவில் கடந்த ஆண்டுகளில் சிவப்பு-சிவப்பு-பச்சை கூட்டணியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டது.
கட்சிகள் பின்பற்றும் "வெவ்வேறு அரசியல் மற்றும் சித்தாந்த நிலைப்பாடுகள்" என்னவாக இருந்தாலும், ஆட்சியின் அடிப்படை பிரச்சினைகள் மீது AfD உடன் கவனமாக ஒத்துழைப்பது சாத்தியம் என்பது மட்டுமல்ல மாறாக அவசியமும் கூட என்று கூறிய கோவ் தொடர்ந்து எரிச்சலூட்டும் விதத்தில் கூறினார்: “பேர்லினில் அந்த யூதப்படுகொலை நினைவிடம் வெட்கக்கேட்டிற்குரிய ஒரு நினைவிடமாக குறிப்பிடும் AfD தலைவர் திரு. ஹேக்க உடன் சேர்ந்து நிச்சயமாக நான் எந்த சட்டங்களையும் நிறைவேற்ற மாட்டேன்,” என்றார். ஆனால் நகரசபைகளுக்கு நிதி ஒதுக்குவது மீதான பிரச்சினைகள் குறித்து AfD இன் உள்ளூர் அரசியல்வாதிகளுடன் நிச்சயமாக விவாதிக்கப்பட்டு தீர்க்கப்படலாம்” என்றார்.
AfD கட்சி, ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் வலது நோக்கி திரும்பியதன் விளைவாகும். அது, ஆளும் வர்க்கம் அதன் திட்டநிரலில் வைத்துள்ள இராணுவவாதம் மற்றும் சமூக எதிர்புரட்சி கொள்கைகளை அமலாக்குவதற்காக திட்டமிட்டு அலங்கரிக்கப்பட்டது. தூரிங்கியாவில் CDU மற்றும் FDP கட்சிகள் AfD ஐ சார்ந்துள்ளன என்ற உண்மையால் இது உறுதிப்படுகிறது. அக்கட்சியின் மாநில தலைவர் பியோர்ன் ஹேக்கவை ஒரு நீதிமன்ற தீர்ப்பின்படி ஒரு பாசிசவாதியாக விவரிக்கலாம்.
கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU), சமூக ஜனநாயக கட்சி (SPD), பசுமை கட்சி, இடது கட்சி அல்லது ஏனைய எந்தவொரு முதலாளித்துவ கட்சிகளுக்கும் கோரிக்கை முன்வைப்பதன் மூலமாக அல்ல, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணித்திரட்டுவதன் மூலமாக மட்டுமே பாசிசவாத அபாயத்தை நிறுத்த முடியும். வரலாறு இதை ஏற்கனவே நிரூபித்துக் காட்டியுள்ளது, தற்போதைய நிகழ்வுகளோ இதை மீண்டுமொருமுறை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.