Print Version|Feedback
Seventy-five years since the liberation of Auschwitz
அவுஸ்விட்ச் விடுதலைசெய்யப்பட்டு எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர்
Christoph Vandreier
27 January 2020
இன்றிலிருந்து எழுபத்தி ஐந்தாண்டுகளுக்கு முன்னர் செம்படையின் 1 ஆவது உக்ரேனிய முன்னணி படைப்பிரிவின் 60 ஆவது இராணுவப் பிரிவுகள் அவுஸ்விட்ச் சித்திரவதை முகாமை விடுவித்தபோது, அவர்கள் மனிதகுல வரலாற்றிலேயே மிகவும் கொடூரமான குற்றங்களுக்கான ஆதாரங்களை கண்டனர். நீண்டகாலமாக விறைத்துப் போன வெறும் தோல் போர்த்திய “மனித உடல்களும்”, அல்லது எலும்புகூடுகளும், கட்டில்களில் கிடந்தன,” என்றொரு செம்படை சிப்பாய் நினைவுகூர்ந்தார். ஐந்தாண்டுகளுக்கும் குறைந்த காலத்தில் அவுஸ்விட்ச்சில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில், மரணத்தின் விளிம்பில் இருந்த சுமார் 8,000 சிறைக்கைதிகள் தான் மொத்தத்தில் எஞ்சியிருந்தனர்.
அவுஸ்விட்ச்சின் நுழைவாயில்
அதற்கு முந்தைய நாட்களில், 60,000 சிறைக்கைதிகளை மேற்கு நோக்கி மரண நடைபயணத்திற்கு உட்படுத்தியோ, அல்லது அவர்களை உடனடியாக கொன்று குவித்தோ, நாஜிகளின் அதிரடிப்படையான SS அந்த முகாமை காலியாக்கி இருந்தது. 837,000 பெண்களின் உடைகள், 370,000 சட்டைகள், 44,000 ஜோடி காலணிகள், மற்றும் ஏழு டன் தலைமுடிகளை அவர்கள் விட்டுச் சென்றிருந்தனர், அதிலிருந்து 140,000 பேர் இருந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டதுடன் அங்கே சைக்லோன் B (Zyclon B) என்ற நச்சு வாயுவின் தடையங்களும் இருந்தன.
அவுஸ்விட்ச், அந்த ஒட்டுமொத்த கண்டம்முழுவதும் பரவியிருந்த தொழிற்துறைமயமாக்கப்பட்ட பாரிய படுகொலை திட்டமுறையின் இதயதானமாக இருந்தது. யூதர்களும், சிந்தி இனத்தவரும் (Sinti), நாஜி ஆட்சியின் அரசியல் எதிர்ப்பாளர்களும், ஏனையவர்களும் ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பாவின் ஒவ்வொரு பாகத்திலிருந்தும் அந்த மரண முகாமுக்கு அனுப்பப்பட்டனர். பலர் அதற்கு முன்னரே ஏனைய சித்திரவதை முகாம்களில், பல சந்தர்ப்பங்களில் பலவற்றில், அடைக்கப்பட்டிருந்தார்கள், அவற்றில் 11 முகாம்கள் இன்றைய ஜேர்மனியின் எல்லைக்கு உள்ளேயே இருந்தன. அதற்கும் கூடுதலாக, பால்டிக் நாடுகள், போலந்து, நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியாவிலும் எண்ணற்ற சித்திரவதை முகாம்கள் இருந்தன. மொத்தம் 6 மில்லியன் யூதர்கள் அந்த யூதப்படுகொலையில் கொல்லப்பட்டார்கள்.
பெரும்பாலான முகாம்களில், கைதிகள் பலவந்தமான உழைப்பின் மூலமாகவும், சத்துக் குறைபாடு மற்றும் கடுமையான துஷ்பிரயோகத்தினாலும் அழிக்கப்பட்டார்கள். இந்த சித்திரவதை முகாம் அமைப்புமுறை நெருக்கமாக பெருவணிகங்களுடன் பிணைந்திருந்தன. உழைப்பாளர்களை பலவந்தமாக சுரண்டுவதற்காக அவுஸ்விட்ச்சை சுற்றிலும் டஜன் கணக்கான நிறுவனங்கள் ஆலைகளை நிறுவி இருந்தன. Krupp மற்றும் Siemens-Stuckert போன்ற நிறுவனங்களும் அவற்றில் உள்ளடங்கும். Bayer, BASF, மற்றும் Höchst போன்ற மிகப்பெரும் நிறுவனங்களின் கூட்டு ஸ்தாபனமாக விளங்கிய பிரமாண்ட பெருநிறுவனம் IG Farben கூட, அதன் சொந்த சித்திரவதை முகாமான Auschwitz III என்பதை நடத்தி வந்தது, அங்கே சுமார் 11,000 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.
தொழிலாளர்களின் ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கத்தின் மீதும் சோசலிசத்தின் மீதுமான ஹிட்லரின் வெறுப்புடன் சேர்ந்து யூத மக்களுக்கு எதிராக நூற்றாண்டுகள்-பழமையான பாரபட்சங்கள் மற்றும் ஆக்ரோஷங்கள், வெறித்தனமான யூத-எதிர்ப்பை அணித்திரட்டவும் அரசியல்மயப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டன. அதன் அடிப்படையில் தான் அவுஸ்விட்ச் அமைந்திருந்தது. சமூக ஜனநாயகவாதி கொன்ராட் ஹெய்டன் (Konrad Heiden) 1936 இல் பிரசுரிக்கப்பட்ட அவரின் ஹிட்லரின் வரலாற்றில் எழுதியவாறு, “தொழிலாளர்கள் இயக்கம் யூதர்களால் தலைமை தாங்கப்பட்டதால் அது ஹிட்லரை எதிர்க்கவில்லை, மாறாக தொழிலாளர்கள் இயக்க தலைமையில் யூதர்கள் இருந்ததால் அவர்களை ஹிட்லர் எதிர்த்தார்.” தொழிலாளர்களின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் அழிப்பதற்கே ஆளும் வர்க்கத்தால் ஹிட்லர் அதிகாரத்திற்குக் கொண்டு வரப்பட்டார். இந்த இலக்கை அடைவதற்கு யூத-எதிர்ப்புவாதம் என்பது ஓர் ஆயுதமாக இருந்தது.
அதே நேரத்தில், சமூக ஜனநாயகக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் அழிப்பு என்பது இரண்டாம் உலக போர் தொடங்குவதற்கும், யூதர்களை இன்னல்படுத்துவதை நடைமுறைப்படுத்துவதற்கும் முன்நிபந்தனையாக இருந்தது. “ஜேர்மன் சோசலிச இயக்கத்தின் வீழ்ச்சி ஐரோப்பிய யூத இனத்தை அழிக்க வழிவகுத்தது,” என்று முடிவுறாத இருபதாம் நூற்றாண்டு நூலில் டேவிட் நோர்த் வலியுறுத்தினார்.
ஆனால் ஐரோப்பாவில் யூதர்களின் படுகொலையை, இரண்டாம் உலக போர் வெடிப்பின் மூலம்தான் நடைமுறைப்படுத்தப்படக்கூடியதாக இருந்தது. யூதர்களின் படுகொலையானது சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான நிர்மூலமாக்கும் போருடன் பிணைந்திருந்தது, 27 மில்லியன் உயிர்கள் கொல்லப்பட்ட அந்த போர், தொடக்கத்தில் இருந்தே, ஹிட்லரின் வார்த்தைகளில் கூறுவதானால், "யூத போல்ஷிவிசம்" எனும் ஒட்டுமொத்த அரசியல் புத்திஜீவித உயரடுக்கையும் சரீரரீதியில் அழிப்பதையும் மற்றும் பின்னர் வரவிருந்த நூற்றாண்டுகளில் ஜேர்மன் மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதையும் நோக்கமாக கொண்டிருந்தது.
“முதலாளித்துவத்தின் உச்சக்கட்டமான ஏகாதிபத்தியத்தின் காட்டுமிராண்டித்தனத்தன்மை, இந்த நிர்மூலமாக்கும் இராணுவப் பிரச்சாரத்தில் அதன் மிகவும் பூரண வெளிப்பாட்டைக் கண்டது,” என்று ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei) அதன் வரலாற்று அடித்தளங்கள் ஆவணத்தில் எழுதியது.
முதலாளித்துவத்தின் இந்த கொடூரமான குற்றத்தின் சித்திரங்கள், பரந்தமக்களின் நனவில் ஆழமாக பதிந்து உள்ளதுடன், இந்த புவியில் மனிதகுலம் உள்ள வரையில் இது நினைவுகூரப்படும். அதிதீவிர வலதின் மீளெழுச்சியை முகங்கொடுப்பதில், “மீண்டும் ஒருபோதும் பாசிசம் வேண்டாம்!” என்பதே பரந்த பெரும்பான்மை மக்களின் ஆழமாக உணரப்பட்ட கோஷமாக உள்ளது.
ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் இஸ்ரேலில் Yad Vashem இல் அமைந்துள்ள Shoah நினைவிட உரையில், யூத-எதிர்ப்புவாத, மக்கள்-தேசியவாத மற்றும் எதேச்சதிகார கருத்துருக்கள் திரும்புவதைக் குறித்து எச்சரிக்க நிர்பந்திக்கப்பட்டதாக உணர்ந்தார். ஜேர்மனியின் “Halle நகரில் யூதர்களின் Yom Kippur வழிபாட்டு தினத்தன்று யூத வழிபாட்டுத் தலங்கள் மீது இரத்த ஆறை ஓடச் செய்ய வலதுசாரி தீவிரவாதிகள் முயன்றதை ஒரு கனமான மரக்கதவு மட்டுமே தடுத்தது எனும் போது, நாம் வரலாற்றில் இருந்து கற்றுக் கொண்டோம் என்று நம்மால் கூற முடியவில்லை,” என்று ஜனாதிபதி அறிவித்தார்.
ஐயத்திற்கிடமின்றி பாசிசம் முன்னிறுத்தும் ஆபத்து, மூன்றாம் குடியரசு நிபந்தனையின்றி மண்டியிட்டதற்குப் பின்னரான எந்தவொரு நேரத்தை விடவும் இன்று மிகப்பெரியளவில் உள்ளது. ஒரு வலதுசாரி தீவிரவாத கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD), 90 க்கும் அதிகமான ஆசனங்களுடன் முதல்முறையாக ஜேர்மனியின் கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்கிறது. வலதுசாரி பயங்கரவாத வலையமைப்புகள் அரசியல் எதிர்ப்பாளர்களை அச்சுறுத்துகின்றன மற்றும் படுகொலை செய்கின்றன, நவ-நாஜி குண்டர்கள் அகதிகளுக்கு எதிராக அட்டூழியங்களை நடத்துகின்றனர்.
ஆனால், ஸ்ரைன்மையரில் இருந்து ஆளும் உயரடுக்கின் ஏனைய பிரதிநிதிகள் வரையில் பாசிசவாத அச்சுறுத்தல் குறித்த இவர்களின் எச்சரிக்கைகள் போலித்தனமானவையாகும். சமீபத்திய ஆண்டுகளில், அவர்கள் AfD இன் கிளர்ச்சியூட்டலையும் கொள்கைகளையும் அதிகரித்தளவில் அரவணைத்துள்ளனர், அவ்விதத்தில் அதன் வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும் சித்தாந்த சூழலையும் அரசியல் நிலைமைகளையும் உருவாக்கி உள்ளனர். இந்த நிகழ்வுபோக்கில் ஜேர்மனியின் அரசு தலைவர் ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ளார். 2017 தேசிய தேர்தலில் AfD தேர்தல் வெற்றி அடைந்து சிறிது காலத்திற்குப் பின்னர், அவர் குறிப்பிடுகையில், ஒருவர் அதிவலது கட்சியைச் சுற்றியுள்ள "சமரசப்படுத்தவியலா சுவர்களை" நீக்கி, “ஜேர்மன் தேசபற்றை" வளர்ச்சியடைய செய்ய வேண்டுமென குறிப்பிட்டார்.
அதன் பின்னர் விரைவிலேயே, ஸ்ரைன்மையர் புதிய அரசாங்கம் அமைப்பதன் மீது கலந்தாலோசிக்க AfD நாடாளுமன்ற குழு தலைவர்கள் அலெக்சாண்டர் கவுலாண்ட் மற்றும் அலீஸ் வைடெலைச் சந்தித்தார். பின்னர் மார்ச் 2018 இல் மகா கூட்டணி பதவி பிரமாணம் ஏற்றதுடன், AfD ஐ உத்தியோகபூர்வ எதிர்கட்சியாக உயர்த்தியது. ஏனைய கட்சிகள் பல முக்கிய நாடாளுமன்ற குழுக்களின் தலைமை பொறுப்புகளை AfD ஏற்பதற்கு வசதியாக விட்டுக் கொடுத்ததுடன், அதற்குப் பின்னர் இருந்து வலதுசாரி தீவிரவாதிகளுடன் நெருக்கமாக செயல்பட்டு வந்துள்ளன.
நாஜிக்களின் குற்றங்களும் பாசிசவாதத்திற்கு எதிரான போராட்டமும் ஒட்டுமொத்த ஆளும் உயரடுக்கால் அபாயமற்றதாக காட்டப்பட்டு வருகிறது. இரண்டாம் உலக போர் வெடித்து 80 ஆம் நினைவாண்டு தினத்தில் ஸ்ரைன்மையர் வழங்கிய அவர் உரையில், யூதர்களின் நிர்மூலமாக்கல் குறித்து ஒரேயொரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை. இது ஒரு தெளிவான விட்டுக்கொடுப்பாக இருந்ததுடன், நாஜிக்களை "ஆயிரமாயிரம் ஆண்டு பெருமைமிகு ஜேர்மன் வரலாற்றில் படிந்த மிகச் சிறிய களங்கம்" என்று விவரிக்கும் AfD க்கு அதுவொரு சமிக்ஞையாகவும் இருந்தது. AfD ஸ்தாபகர் பேர்ண்ட் லுக்க மீண்டும் பேராசிரியராக அவர் பதவிக்குத் திரும்ப அனுமதித்ததைக் கடந்த அக்டோபரில் மாணவர்கள் எதிர்த்த போது, ஸ்ரைன்மையர் அதை "ஏற்றுக் கொள்ளவியலாத" “விவாதத்தை ஆக்ரோஷமாக தடைவிதிப்பதாக" கூறி அவர்களைக் குற்றஞ்சாட்டினார்.
ஸ்ரைன்மையர், வைடெல், மற்றும் கௌலாண்ட் இருக்கும் ஒரு பேஸ்புக் பதிவு
மனித வரலாற்றிலேயே மிக மோசமான குற்றங்களை குறைத்து மதிப்பிட்டு காட்டுவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்து வரும் வலதுசாரி தீவிரவாதி பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி, ஜேர்மன் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுவதுடன், எந்தவொரு விமர்சனத்தில் இருந்தும் ஊடகங்களின் பெரும் பகுதிகளால் பாதுகாக்கப்படுகிறார். பேர்லினில் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் அந்த கிழக்கு ஐரோப்பிய வரலாற்றுத்துறை பேராசிரியர் பெப்ரவரி 2014 இல் Der Spiegel க்கு கூறுகையில், ஒரு யூத-எதிர்ப்புவாதியும் நாஜி அனுதாபியுமான மறைந்த ஏர்ன்ஸ்ட் நோல்டவுக்கு மறுவாழ்வளிப்பதை அவர் ஆதரிப்பதாக தெரிவித்தார். “நோல்டவுக்கு அநீதி இழைக்கப்பட்டது. வரலாற்றுரீதியில் பேசுகையில், அவர் சரியாகவே இருந்தார்,” என்று கூறிய பார்பெரோவ்ஸ்கி, அதை நியாயப்படுத்தும் போக்கில் முன்னதாக, “ஹிட்லர் மனநலம் பாதிக்கப்பட்டவரோ, வக்கிரமானவரோ இல்லை. அவர் யூதர்களின் நிர்மூலமாக்கல் குறித்து அவர் தனது மேசையில் பேசக் கூட விரும்பியதில்லை,” என்றார்.
மிகவும் பரவலாக வாசிக்கப்படும் ஒரு ஜேர்மன் செய்தி பத்திரிகையில் நாஜிக்களின் குற்றங்களைக் குறித்த இந்த மூச்சடைக்க வைக்கும் கண்துடைப்பை எதிர்த்து பேராசிரியர்கள் குழாமோ அல்லது ஊடகங்களோ ஒரேயொரு குரல் கூட எழுப்பவில்லை. அதற்கு மாறாக, சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் சோசலிச சமத்துவக் கட்சியும் (Sozialistische Gleichheitspartei) பொதுக் கூட்டங்களிலும் துண்டறிக்கைகளிலும் பார்பெரோவ்ஸ்கியை விமர்சித்ததற்காக ஊடகங்களால் அவை கண்டிக்கப்பட்டன. பார்பெரோவ்ஸ்கி ஒரு வலதுசாரி தீவிரவாதி இல்லை என்றும், அவர் மீதான "ஊடக தாக்குதல்களை" “ஏற்றுக் கொள்ளவியலாது" என்றும் ஹம்போல்ட் பல்கலைக்கழக நிர்வாகம் இன்று வரையில் வலியுறுத்தி நிற்கிறது.
டெய்லி ஸ்டோர்மர் பத்திரிகையில் பார்பெரோவ்ஸ்கி
அரசியல் ஸ்தாபகத்திடம் இருந்து அவர் பெற்றுள்ள ஆதரவால் பலமடைந்து, பார்பெரோவ்ஸ்கி இன்னும் ஒருபடி மேலே சென்றுள்ளார். அவர் ஒரு சில நாட்களுக்கு முன்னர் பிராங்க்பேர்ட்டர் Allgemeine Zeitung பத்திரிகைக்கு கூறுகையில், மனிதகுல வரலாற்றின் மிகப் பெரும் குற்றங்களைக் குறித்து ஹிட்லர் எதையும் தெரிந்து கொள்ள விரும்பியதில்லை என்றார். “ஸ்ராலின்தான் குரூரத்தில் மிகவும் நாட்டம் கொண்டிருந்தார், அதேவேளையில் ஹிட்லர் அவ்வாறு செய்யவில்லை, அவர் அவுஸ்விட்ச் குறித்து எதையும் கேட்க விரும்பியதில்லை, இது தான் விடயத்தை இன்னும் கூடுதலாக மோசமாக்கி உள்ளது,” என்று பார்பெரோவ்ஸ்கியின் கருத்துக்கள் மீதான ஒரு பொழிப்புரையில் அப்பத்திரிகை எழுதியது.
அவுஸ்விட்ச் குறித்து ஹிட்லர் எதையும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை என்ற வாதம், “ஐரோப்பிய யூதர்களின் படுகொலை திட்டமிட்டரீதியில் நடத்தப்பட்ட ஒரு கொள்கையின் விளைவு, இந்த கொள்கை 'மூன்றாம் குடியரசு' இல் அடோல்ஃப் ஹிட்லரின் உச்சபட்ச அதிகாரத்தால் பின்பற்றப்பட்டது,” என்ற வாதத்தை மறுப்பதற்கு வலதுசாரி தீவிரவாதிகளது நன்கறியப்பட்ட ஒரு தந்திரம் என்று ஹிட்லரின் வாழ்கை வரலாற்றை எழுதிய பீட்டர் லாங்கரீச், பிரிட்டனை சேர்ந்த யூதப்படுகொலை மறுப்பாளர் டேவிட் இர்விங்கை எதிர்த்து அவர் முன்வைத்த அறிக்கையை மேற்கோளிட்டு குறிப்பிட்டார்.
அவுஸ்விட்ச் விடுவிக்கப்பட்டு எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு பின்னரும், இதுபோன்ற வலதுசாரி அழுக்குகள், அதிக வாசகர்களைக் கொண்ட ஜேர்மனியின் மிகப் பெரிய பத்திரிகைகளில் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அதுமட்டுமல்ல. சாக்சோனியில் நினைவுகூடங்களின் அமைப்பு இரண்டாம் உலக போர் முடிந்ததன் 75 ஆம் நினைவாண்டில் அதன் முக்கிய நினைவுவிழா நிகழ்வில், ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி அன்னகிரேட் கிரம்ப்-காரன்பவர் உடன் சேர்ந்து, தலைமை உரை வழங்க பார்பெரோவ்ஸ்கியை அழைத்துள்ளது.
அந்த அமைப்பின் தகவல்படி, அந்த நிகழ்வு இரண்டாம் உலக போரில் பாதிக்கப்பட்டவர்களை மட்டும் நினைவுகூரப் போவதில்லை, மாறாக கிழக்கு ஐரோப்பாவின் சர்வாதிகாரங்களால் பாதிக்கப்பட்டவர்களையும் நினைவுகூரும். அவர்கள் "மீண்டுமொருமுறை துன்பத்திற்கும் தொல்லைகளுக்கும் உள்ளாகி" இருக்கின்றனராம். அந்த போருக்குப் பின்னர் Torgau இன் சோவியத் சிறப்பு சிறைச்சாலைகளில் கைதிகளாக அடைக்கப்பட்ட ஆயிரக் கணக்கான நாஜிக்கள் மற்றும் போர் குற்றவாளிகள் வழங்கிய நேரில் பார்த்த விபரங்களை விபரிப்பதே திட்டமாக உள்ளது.
வலதுசாரி தீவிரவாத நிலைப்பாடுகளை மீண்டுமொருமுறை சமூகரீதியிலும் அரசியல்ரீதியிலும் ஏற்றுக் கொள்ளுமாறு செய்வதற்கு, அரசாங்கத்தின் உயர்மட்டங்களிலும் ஊடகங்களின் பெரும் பாகங்களில் இருந்தும் செய்யப்படும் வரலாற்று திருத்தல்வாதமே இதன் நோக்கமாகும். 1930 களுக்குப் பிந்தைய மிக ஆழமான முதலாளித்துவ நெருக்கடி நிலைமைகளின் கீழ், ஆளும் உயரடுக்கு, உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீது வக்கரமான தாக்குதல்களுக்கான கொள்கைகளுக்கும், வெளிநாடுகள் மீது இராணுவவாத கொள்கைகளுக்கும் திரும்பி வருகிறது.
வாகனத் தொழில்துறையில் ஆயிரக் கணக்கான வேலைகளை அழிப்பதும் சரி, அல்லது ஆபிரிக்காவில் நவகாலனித்துவ ஆக்கிரமிப்பும் சரி, அல்லது மூன்றாம் உலக போருக்கான மீள்ஆயுதமயமாகும் உந்துதலும் சரி, இவற்றை ஜனநாயக வழிவகைகள் மூலமாக கொண்டு செல்ல முடியாது. ஆகவே ஆளும் உயரடுக்கு தொன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் செய்ததைப் போலவே, அது எதேச்சதிகார மற்றும் பாசிசவாத ஆட்சி வடிவங்களுக்குத் திரும்பி வருகிறது. “பிணைக்கைதிகளைப் பிடிக்கவும், கிராமங்களை எரிக்கவும், மக்களைத் தூக்கிலிடவும், அச்சம் மற்றும் பீதியைப் பரப்பவும்" ஒருவர் தயாராக இருந்தால் மட்டுந்தான், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் வெற்றிகொள்ள முடியுமென பார்பெரோவ்ஸ்கி அவரே 2014 இல் அறிவித்தார். இது தான் நாஜிக்களின் மற்றும் அவர்களது நிர்மூலமாக்கல் போர்களின் மொழியாகும்.
இந்த நிகழ்வுகள் எவ்விதத்திலும் ஜேர்மனியோடு மட்டுப்பட்டதல்ல. இது ஒவ்வொரு நாட்டின் ஆளும் உயரடுக்கிற்கும் பொருந்தும். பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் பாசிசவாத சர்வாதிகாரி பிலிப் பெத்தனைப் பாராட்டுகிறார், மஞ்சள் சீருடை போராட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவத்தை நிலைநிறுத்துகிறார். பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் அவரின் வெளிநாட்டவர் விரோத மற்றும் தேசியவாத கொள்கைகளில், அதிவலது கட்சியான பிரிட்டன் முதலில் (Britain First) கட்சி உறுப்பினர்களது ஆதரவைச் சார்ந்துள்ளார், அதேவேளையில் அமெரிக்காவில், ட்ரம்ப் போருக்கான மீள்ஆயுதமயமாகும் குற்றகரமான தயாரிப்புகளுக்கான பரந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த பகிரங்கமாகவே ஒரு பாசிசவாத அடித்தளத்தை அணித்திரட்டி வருகிறார்.
இத்தகைய கொள்கைகள் பெரும் பெரும்பான்மை மக்களிடையே எந்த ஆதரவையும் கொண்டிருக்கவில்லை. அதற்கு பதிலாக, தொழிலாளர்களும் இளைஞர்களும் சமூக சமத்துவமின்மை, இராணுவவாதம், மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடி வருகின்ற நிலையில் உலகெங்கிலும் கடுமையான தொழிலாள வர்க்க போராட்டங்கள் வெடித்து வருகின்றன. ஆனால், ஒரு புரட்சிகர தலைமையும் ஒரு தெளிவான வேலைத்திட்டமும் இல்லாமல், இத்தகைய இயக்கங்கள் வெற்றி பெற முடியாது என்பதுடன், முதலாளித்துவம் அதன் பாசிசவாத மற்றும் போர் கொள்கைகளை மீண்டும் திணிப்பதற்கே இவை வாய்ப்பை வழங்குகின்றன. முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்குள் மீண்டும் வீழ்வதை தடுக்க, சோசலிச புரட்சிக்கான உலக கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவைக் (ICFI) கட்டமைப்பதே தீர்க்கமான பணியாகும்.