Print Version|Feedback
Trump puts Europe in his sights for trade war
ட்ரம்ப் அவரின் வர்த்தகப் போர் பார்வையில் ஐரோப்பாவை நிறுத்துகிறார்
By Nick Beams
23 January 2020
கனடா மற்றும் மெக்சிகோ உடனான ஓர் உடன்படிக்கையைத் தொடர்ந்தும் மற்றும் சீனாவுடனான "முதல் கட்ட" வர்த்தக உடன்படிக்கை கையெழுத்தானதைத் தொடர்ந்தும், ட்ரம்ப் நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட வர்த்தகப் போர் சற்றே குறைந்திருப்பதாக உலகின் பிரதான பொருளாதாரங்களின் தலைவர்கள் கருதி இருந்தால், பின் அவர்களுக்கு இவ்வாரம் டாவோஸ் பொருளாதார கருத்தரங்களின் வருடாந்தர கூட்டத்தில் ஒரு கடுமையான அதிர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா "இதுவரை உலகம் பார்த்திராததைப் போன்ற ஒரு பொருளாதார வளர்ச்சியின் மத்தியில்" உள்ளது என்று கூறி, ட்ரம்ப் அவரது நிர்வாக கொள்கைகளைப் பெருமைபீற்றி செவ்வாய்கிழமை வழங்கிய தலைமை உரைக்குப் பின்னர், அவர் தொடர்ச்சியான பல கருத்துகளிலும் பேட்டிகளிலும் வர்த்தக போர் இப்போது தான் தொடங்கி உள்ளது என்பதைத் தெளிவுபடுத்தினார்.
அவரின் தலைமை உரையில் அதிகரிக்கப்பட்ட தாக்குதல் ஒரு முன்னறிவிப்பாக இருந்தது, அமெரிக்கா "21 ஆம் நூற்றாண்டு வர்த்தகத்திற்கான ஒரு புதிய மாதிரியை" அபிவிருத்தி செய்திருப்பதாக அவர் அதில் தெரிவித்தார்.
சீட்டலின் ஹார்பர் தீவின் சரக்கு இறக்குமிடத்தில் ஐந்து அடுக்கில் அடுக்கப்பட்ட சரக்கு கொள்கலன்களுக்கு அருகே, கப்பலுக்கு எடுத்துச்செல்லப்படும் சரக்கு கொள்கலன்களுடன் டிரக்குகள் இயக்கப்படும் காட்சி [படம்: அசோசியேடெட் பிரஸ்/ எலைன் தாம்சன்]
டாவோஸ் கூட்டத்திற்குப் பக்கவாட்டில் வணிக செய்தி சேனல் CNBC க்கு வழங்கிய ஒரு பேட்டியில், ட்ரம்ப் கூறுகையில், அவரது நிர்வாகம் ஐரோப்பாவை உறுதியாக அதன் பார்வையில் வைத்துள்ளதாக தெளிவுபடுத்தினார்.
ஐரோப்பிய கார்கள் மற்றும் வாகன தயாரிப்புகள் மீது அமெரிக்கா 25 சதவீத இறக்குமதி வரி விதிக்கும் என்று அச்சுறுத்திய பின்னர் ஜூலை 2018 இல் ஒரு புதிய வர்த்தக உடன்படிக்கை மீது பேச்சுவார்த்தைகள் தொடங்க, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஓர் உடன்படிக்கையை எட்டின. ஆனால் அந்த நிர்வாகம் சீனா மற்றும் வட கொரியா மீது ஒருமுனைப்பட்டிருந்த நிலையில் அந்த அச்சுறுத்தலை நிலுவையில் போட்டிருந்தது.
“சீனாவுடன் விடயங்கள் முடிவடையும் வரை நான் காத்திருக்க விரும்பினேன், ஒரே சமயத்தில் சீனாவுடனும் ஐரோப்பாவுடனும் இறங்க நான் விரும்பவில்லை … மெக்சிகோ மற்றும் கனடாவுடன் முதலில் முடித்துக் கொள்ள விரும்பினேன். இப்போது அவை நிறைவடைந்து விட்டன, நாங்கள் ஐரோப்பாவைச் செய்வதை நோக்கி செல்லவிருக்கிறோம்” என்று ட்ரம்ப் CNBC க்குத் தெரிவித்தார்.
“ஐரோப்பாவைச் செய்வது" என்பது என்ன அர்த்தப்படுத்துகிறது என்பது, பிரெஞ்சு ஆடம்பர பண்டங்கள் மீது அமெரிக்கா 100 சதவீத இறக்குமதி வரி விதிக்க முன்பு அச்சுறுத்திய பின்னர், இவ்வார ஆரம்பத்தில் பிரெஞ்சு அரசாங்கம் உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான டிஜிட்டல் சேவைகள் வரியை திணிக்கும் அதன் திட்டத்திலிருந்து பின்வாங்கிய போது தெளிவுபடுத்தப்பட்டது. இத்தகைய உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதன் அதிகார எல்லைக்குள் இருந்து பெரும் வருவாய்களை அறுவடை செய்துகொள்கின்றன ஆனால் நடைமுறையளவில் எந்த வரியும் செலுத்துவதில்லை.
இந்த திட்டநிரல், ட்ரம்ப் மற்றும் அவரின் நிதித்துறை செயலர் ஸ்டீவ் மினுசினின் கருத்துக்களில் மேற்கொண்டு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மினுசின் செவ்வாயன்று ஒரு பேட்டியில் கூறுகையில், ஒரு நிரந்தர தீர்வு எட்டப்படும் வரையில் இந்தாண்டு இறுதி வரையில் பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் வரி விதிப்பை நிறுத்தி வைக்க உடன்பட்டிருப்பதாக தெரிவித்தார். நிர்வாக அதிகாரிகள் அதிகாரபூர்வமற்ற அறிக்கைகளில், மக்ரோனின் தீர்மானம் அமெரிக்க வரிவிதிப்பு அச்சுறுத்துதலுக்கு விடையிறுப்பாக எடுக்கப்பட்டது என்றனர்.
இதுபோன்ற நடவடிக்கைகளைப் பிரிட்டனும் இத்தாலியும் முன்நகர்த்தினாலும் சரி, “அவர்களும் ஜனாதிபதி ட்ரம்பின் வரிவிதிப்புகளை முகங்கொடுப்பார்கள்" என்று முனுசின் எச்சரித்தார். “அவர்களுடனும் நாங்கள் இதேபோன்ற பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம்,” என்பதையும் அவர் அச்சுறுத்தும் விதத்தில் சேர்த்துக் கொண்டார்.
நேற்று பிரிட்டன் நிதித்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் உடனான நேற்றைய டாவோஸ் குழு விவாதத்தின் போது முனுசின் அந்த அச்சுறுத்தலைத் தீவிரப்படுத்தினார். ஏப்ரலில் டிஜிட்டல் வரியை முன்னெடுக்க போவதாகவும், ஒரு சர்வதேச உடன்படிக்கை எட்டப்பட்டதும் அது நீக்கப்படுமென்றும் ஜோன்சன் அரசாங்கம் அதன் திட்டங்களைக் கூறியுள்ளது. அது மாதிரியான எதுவும் அமெரிக்கா கொண்டிருக்கவில்லை என்பதை முனுசின் தெளிவுபடுத்தினார்.
“அவர்கள் எங்களின் டிஜிட்டல் நிறுவனங்கள் மீது வெறுமனே ஒருதலைபட்சமாக வரிவிதிக்க விரும்பினால், நாங்களும் கார் நிறுவனங்கள் மீது ஒருதலைபட்சமாக விரிவிதிப்பது குறித்து பரிசீலிப்போம்,” என்றார். “டிஜிட்டல் வரி என்பது இயல்பிலேயே ஒருதலைபட்சமானது என்று நினைக்கிறோம்.”
வாகன வரிவிதிப்பைத் திணிப்பதற்கான இந்த அச்சுறுத்தல், டிஜிட்டல் சேவை வரி பிரச்சினையையும் கடந்து செல்கிறது. அது ஒரு வர்த்தக உடன்படிக்கையை எட்டுமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை நிர்பந்திக்க ட்ரம்ப் நிர்வாகத்தால் தயாராக வைக்கப்பட்டுள்ள பிரதான பொருளாதார கருவியாகும். ஐரோப்பிய ஒன்றியம் தொழில்துறை பண்டங்கள் மீது பேச்சுவார்த்தைகள் நடத்த உடன்பட்டுள்ளது என்றாலும் விவசாயப் பொருட்களைத் தவிர்க்க வலியுறுத்துகிறது. ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்க விவசாய பொருட்களுக்கும் திறந்து விடப்பட வேண்டுமென ட்ரம்ப் நிர்வாகம் கோரி வருகிறது.
“அவர்கள் ஓர் உடன்படிக்கை செய்தே ஆக வேண்டும் என்பதால் அவர்கள் அதை செய்வார்கள்,” என்று ஒரு தொலைக்காட்சி பேட்டியில் ட்ரம்ப் தெரிவித்தார். “அவர்களுக்கு வேறு வழியில்லை,” என்றார்.
அவர் CNBC க்குத் தெரிவிக்கையில், ஐரோப்பிய ஆணையத்திற்கு வரவிருக்கும் தலைவி ஊர்சுலா வொன் டெர் லெயெனுடன் அவர் சிறந்ததொரு பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தெரிவித்தார். “ஆனால், 'பாருங்கள், நாம் ஏதோவொன்றையாவது எட்டவில்லை என்றால், நான் ஏதேனும் நடவடிக்கை எடுக்கவிருக்கிறேன், அந்த நடவடிக்கை எங்கள் நாட்டுக்குள் வரும் அவர்களின் கார்கள் மற்றும் ஏனைய பண்டங்கள் மீது மிக அதிக வரிவிதிப்பாக இருக்கலாம்' என்று நான் கூறினேன்,” என்றார்.
ஏனைய கருத்துரைகளில், ட்ரம்ப் "எல்லா இடங்களிலும்,” வரிவிதிப்புகள் வைத்திருப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தைக் கண்டித்தார், "அவர்கள் சாத்தியமில்லாமல் செய்கிறார்கள். வெளிப்படையாக கூறினால் சீனாவை விட அவர்களுடன் தான் வர்த்தகம் செய்வது மிகவும் சிரமமாக உள்ளது,” என்றார்.
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் உடனான ஒரு பேட்டியில் அவர் கூறினார்: “ஒரு நியாயமான உடன்படிக்கையை அவர்கள் செய்யவில்லை என்றால் நான் வரிவிதிப்புகள் செய்வேன் என்பது அவர்களுக்குத் தெரியும்.” எவ்வாறிருப்பினும் "காலக்கெடு என்ன என்பது அவர்களுக்கே தெரியும்" என்றும், அதை பகிரங்கமாக விரைவில் அவர் வெளியிட இருப்பதாகவும் கூறி, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அவர் என்ன காலக்கெடு விதித்திருக்கிறார் என்பதை குறிப்பிட ட்ரம்ப் மறுத்துவிட்டார்.
வாகனங்கள் மீது அச்சுறுத்தப்படும் வரிவிதிப்புகள் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களின் விலைகளில் ஏறத்தாழ 7000 டாலரை அதிகரிக்கும் என்பதுடன் ஏற்கனவே தொந்தரவுக்குள்ளாகி உள்ள ஜேர்மன் கார் தொழில்துறையில் பிரச்சினைகளைத் தீவிரப்படுத்தும் என்ற நிலையில், அவை "தேசிய பாதுகாப்பு" அடித்தளத்தில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கும் 1962 வர்த்தக விரிவாக்க சட்டத்தின் 232 பிரிவின் கீழ் கையிலெடுக்கப்படலாம்.
இத்தகைய அதிகாரங்களை நியாயப்படுத்துவதாக கருதப்படும் ஓர் அறிக்கையை வர்த்தகத்துறை தயாரித்துள்ளது என்றாலும் அதை வெளியிடுமாறு காங்கிரஸ் தீர்மானம் கொண்டு வரப்பட்டதற்கு மத்தியிலும் இதுவரையில் அதை வெளியிட அது மறுத்து வருகிறது.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட 23 பக்க கடிதம் ஒன்றில் நீதித்துறை பல வரலாற்று முன்நிகழ்வுகளை மேற்கோளிட்டு குறிப்பிடுகையில், அந்த அறிக்கையை ஜனவரி 19 இல் வெளியிட வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை மறுக்க ஜனாதிபதி அவரின் நிர்வாக தனி அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டது.
ஜனாதிபதி பதவியின் கரங்களில் அதிகாரத்தைக் குவிக்கும் முனைவுக்கான மற்றொரு வெளிப்பாட்டில் அது குறிப்பிடுகையில், அந்த அறிக்கையை வெளியிடுவது "தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்காக நடந்து வரும் இராஜாங்க முயற்சிகளை முடக்கும் அபாயம்" ஏற்படலாம் என்றும், நிர்வாக பிரிவு பரிசீலனைகளில் தலையிடும் அபாயமும் ஏற்படலாம் என்றது குறிப்பிட்டது.
சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இருகட்சிகளிடம் இருந்தும் கிடைத்த பரந்த ஆதரவைப் போல் அல்லாமல், ஐரோப்பிய வாகனத் தொழில்துறைக்கு எதிரான வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு உள்ளதுடன், அமெரிக்காவின் "மூலோபாய கூட்டாளிகளாக" கருதப்படும் நாடுகளுக்கு எதிராக பொய்யாக "தேசிய பாதுகாப்பு" வழிவகைகளைப் பயன்படுத்துவதாக ஆகிறது.
ஆனால் அதுபோன்ற மனப்போக்கு அமெரிக்க பெருநிறுவன ஸ்தாபகத்தில் மாறிவிடக்கூடும். டாவோஸ் கூட்டத்திற்கு முன்னதாக நியூ யோர்க் டைம்ஸில் எழுதுகையில், ஆண்ட்ரூ ரோஸ் சோர்கின், குறிப்பாக அமெரிக்காவினது பெருநிறுவன செல்வந்த தட்டுக்களின் கண்ணோட்டங்களில் ஒரு மாற்றம் இருப்பதையும், அதுவும் வரிவிதிப்பு அடிப்படையிலான பிணைப்புகள்-இழந்த உலகில் ட்ரம்ப் புதிய "டாவோஸ் மனிதராக" பார்க்கப்படலாம் என்றும் குறிப்பிட்டார்.
அந்த கட்டுரை பிரதான தனியார் முதலீட்டு நிறுவனம் பிளாக்ஸ்டோனின் துணை ஸ்தாபகர் Stephen Schwarzman இன் கருத்துரைகளை மேற்கோளிட்டது, அவர், அமெரிக்க பொருளாதாரத்தின் பலத்தின் காரணமாகவும், மெக்சிகோ, கனடா மற்றும் சீனாவுடனான வர்த்தக உடன்படிக்கைகள், பிரதான பெருநிறுவன வரி வெட்டுக்கள் மற்றும் நெறிமுறை தளர்வுகளின் காரணமாகவும் ட்ரம்பை நோக்கிய வணிக சமூகத்தின் மனநிலை "போதுமானளவுக்கு நேர்மறையாக" உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
அந்த "நேர்மறையான" மனநிலை, அமெரிக்கா-முன்னெடுத்த உலகளாவிய வர்த்தகப் போரின் புதிய கட்டத்திற்கு செயலூக்கமான ஆதரவாக மாறக்கூடும்.