Print Version|Feedback
ශ්රී ලංකාවේ මහ ධනපතියෝ ගෝඨාභය රාජපක්ෂගේ ජයග්රහනය උත්කර්ෂයට නංවති
இலங்கை பெரும் வணிகர்கள் கோடாபய ராஜபக்ஷவின் வெற்றியை மகிமைப்படுத்துகிறார்கள்
By Vijith Samarasinghe
25 November 2019
நவம்பர் 16 அன்று, கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, இலங்கை பெருவணிகங்கள், வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், அதே போல் முதலாளித்துவ ஆய்வாளர்கள் மற்றும் ஊடகங்களும் "பலமான அரசாங்கத்தை" உருவாக்கும் நம்பிக்கையில் அவரைச் சுற்றி நிற்கின்றன. முன்னாள் இராணுவ அதிகாரியும் பாதுகாப்புச் செயலாளருமான ராஜபக்ஷவுக்கு இராணுவ பாணியிலான ஆட்சியை ஸ்தாபித்துக்கொள்ள ஆதரவளித்து, அதன் மூலம் பெருகிவரும் வெகுஜன போராட்டங்களை நசுக்க முடியும் என்றும் அவர்கள் எண்ணுகின்றனர்.
நவம்பர் 18, ராஜபக்ஷ பதவியேற்றபோது, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த பங்கு விலைக் குறியீடு 1.77 சதவீதம் உயர்ந்து, மொத்த வருவாய் 2.4 பில்லியன் ரூபாயைத் தாண்டியது. இது 2019 இல் பங்குச் சந்தையில் மிக உயர்ந்த வளர்ச்சியாகும். ராஜபக்ஷவின் வெற்றியைப் பற்றி பங்குச் சந்தையில் “நல்ல செய்தி” நிறைந்திருப்பதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ள அதே நேரம், நிலையான இலங்கை பற்றிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பங்குச் சந்தையில் திடீர் உயர்வு வெளிப்படுத்தியுள்ளது என பிராதன வணிக செய்தித்தாள்கள் மற்றும் லங்கா பிசினஸ் ஆன்லைன் மற்றும் டெய்லி எஃப்.டி போன்ற வலைத்தளங்களும் பாராட்டியுள்ளன.
தேர்தல் முடிவுகள் வெளியானவுடனேயே, புதிய ஜனாதிபதியின் வெற்றிக்கு அவரை வாழ்த்துவதற்காக பல வர்த்தக சபைகள் மற்றும் வர்த்தகர்களும் முன்வந்தன. பொருளாதாரத்தில் ஒரு "புதிய சகாப்தம்" தொடங்குகிறது என்று அவை நம்பிக்கை வெளியிட்டன. இலங்கை வர்த்தகர்கள் சம்மேளனம், ராஜபக்ஷவுக்கு ஒரு வாழ்த்து கடிதத்தை அனுப்பி, "வணிகர்களின் தேவைகளையும் பொதுவாக தேசிய நலன்களையும் நிவர்த்தி செய்ய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்," எனத் தெரிவித்தது.
ஒரு அறிக்கையை வெளியிட்ட தேசிய வர்த்தக சபையானது ராஜபக்ஷ இலங்கை "வர்த்தக மற்றும் வணிக வளர்ச்சியை புதிய உச்சத்துக்கு உயர்த்துவார்" என்று நம்பிக்கை தெரிவித்தது. தேசிய ஏற்றுமதியாளர்கள் சபையின் தலைவர் ரம்யா வீரகோன், “புதிய ஜனாதிபதி ‘சுருசுருப்பான மனிதர்’ என்பது தனது அமைப்புக்கு நன்கு தெரியும், ஆதலால், ஏற்றுமதிக்கு சாதகமான நீண்டகால, நிலையான மற்றும் தர்க்க ரீதியான கொள்கைகளை அவர் செயல்படுத்துவார் என தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
கொழும்பு முதலாளிமார் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி அமில கங்கானம்கே, டெய்லி நியூஸ் பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த போது, "ராஜபக்ஷவின் பரந்த வெற்றியானது நல்லாட்சி அரசாங்கத்தின் மந்தமான தலைமைத்துவம் மற்றும் நிர்வாகத்தினதும் தோல்விக்கு ஒரு சான்றாகும்" என்று கூறினார். முந்தைய சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், யுத்தம் முடிவடைந்த பின்னர் அடையக்கூடிய வளர்ச்சியை அடையத் தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியதோடு, கோட்டாபய ராஜபக்ஷ பெரும்பான்மை மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்தவர்” என்று பாராட்டினார்.
டெய்லி மிரர் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில், பங்குச் சந்தையில் முன்னணி பங்கு தரகர்களில் ஒருவரான சிலோன் அசெட் மேனேஜ்மென்ட்டின் இயக்குனர் ரெய்னர் மைக்கல் பிரைஸ் கூறியதாவது: கடந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது, 25 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்குப் பிறகு அமைதி மீட்டெடுக்கப்பட்டது, கொழும்பு ஆசியாவின் மிக அழகான நகரங்களில் ஒன்றாக மாற்றப்பட்டது. இவை அவர் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்கு காரணமாகின. கடந்த சிறிசேன-விக்ரமசிங்க ஆட்சியின் போது ஏற்பட்ட ஒரு தொடர் தோல்விகள் மற்றும் பலவீனமான சந்தை செயற்பாடுகளை மாற்றியமைத்து, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் ஸ்தாபிக்க ராஜபக்ஷயின் வெற்றி மிக முக்கியமானது, என்று அவர் எழுதியுள்ளார்.
இலங்கை முதலாளித்துவத்தின் முன்னணி பிரதிநிதிகள் மற்றும் ஆய்வாளர்கள் சிலரால் வெளியிடப்பட்ட இந்த கருத்துக்கள் இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளன. முதலாவது, கடந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது நிலவிய இராணுவ பாணி பிடிவாத வழிமுறை மூலமாக முன்னெடுத்த நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகித்த கோடாபய ராஜபக்ஷவை அதிகாரத்துக்கு கொண்டு வருவதன் மூலம், ஒரு எதேச்சதிகாரத்தை நிறுவ முடியும். இரண்டாவதாக, சர்வதேச முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க, சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்ட தனியார்மயமாக்கல் மற்றும் நலன்புரி நடவடிக்கைகளில் எஞ்சியிருப்பதையும் வெட்டிக் குறைப்பதும் மற்றும் தொழிலாளர்களை சுரண்டுவதற்கு புதிய நிலைமைகளை செயல்படுத்துவதையும் துரிதப்படுத்துவதும் ஆகும்.
இலங்கை முதலாளித்துவ வர்க்கம், ஒருபுறம், உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் மீளமுடியாத சரிவில் கடுமையாக சிக்கியுள்ளதுடன், இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் போராட்டங்களால் பீதியடைந்துள்ளது. இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இந்த ஆண்டு 2.7 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கம் 13 டிரில்லியன் டொலருக்கும் அதிகமான கடன் நெருக்கடியை எதிர்கொள்கிறது.
முன்னாள் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி மற்றும் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட சிறிசேன-விக்ரமசிங்க ஆட்சி ஆகிய இரண்டும், சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதலின் கீழ் மறைமுக வரிகளை விதித்து, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற பொது சேவைக்கான செலவுகளை வெட்டிக் குறைத்து மற்றும் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவதன் மூலமும் இந்த பொருளாதார நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதற்கு செயற்பட்டுள்ளன. இந்த சிக்கன நடவடிக்கைகளுக்கு பாரிய மக்கள் எதிர்ப்பு வளர்ச்சியடைந்துள்ளது.
முப்பது ஆண்டுகளுக்கு பின்னர், இலங்கையில் ஆயிரக்கணக்கான வேலைநிறுத்தங்கள் மற்றும் தொழிலாளர் போராட்டங்கள் வெடித்துள்ளன. 2018-2019 ஆம் ஆண்டில் துறைமுகங்கள், போக்குவரத்து, மின்சாரம் மற்றும் பெருந் தோட்டங்கள் உட்பட பல துறைகள் இந்த போராட்டங்களால் ஸ்தம்பித்தன. வர்க்கப் போராட்டத்தின் இந்த மீள் தீவிரமடைதலின் காரணமாக, சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம் பிளவுபட்டு அது உள் மோதலாக விரிவடைந்து, கடைசி நாட்களில் ஏற்பட்ட பாரதூரமான அரசியல் நெருக்கடியின் காரணமாக, ஆளும் வர்க்கத்தின் ஒரு கனிசமான பிரிவு, ஆட்சியில் பாரதூரமான மாற்றத்தைக் கொண்டுவர முயன்றது. இதனாலேயே முதலாளித்துவ பிரதிநிதிகள் கோடாபய ராஜபக்ஷவின் வெற்றியில் ஆறுதல் அடைகின்றார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, 30 ஆண்டுகால இனவாதப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போது, 40,000 க்கும் மேற்பட்ட தமிழ் பொது மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்ததிலிருந்து, அதே இராணுவ மற்றும் பொலிஸ் படைகளைப் பயன்படுத்தி போராட்டத்திற்கு வரும் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை ராஜபக்ஷ அரசாங்கம் நசுக்கியது. இந்த தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை உட்பட ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் எதிரிகளை அடக்குவது மற்றும் கடத்திச் செல்வது போன்றவற்றால் அந்த அரசாங்கம் வகைப்படுத்தப்பட்டது.
போருக்குப் பிறகு, கொழும்பின் ஏழ்மையான பகுதிகளில் உள்ள நிலம் முதலீட்டாளர்களுக்கு விற்கப்பட்டது; துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதிகள் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ள பெருமளவு வெளிநாட்டுக் கடன்களை அரசாங்கம் பெறத் தொடங்கியது. ஆயிரக்கணக்கான நகர்ப்புற குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன, அவர்களது வீடுகள் இடிக்கப்பட்டன, உள்கட்டமைப்பு கட்டுமானங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்ப்புகள் நசுக்கப்பட்டன. முதலீட்டாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான திட்டங்களின் செலவுகள் கடன்களாக உயர்ந்துள்ளன. பொது மக்களின் நலன்களுக்குப் பயன்படாத இந்த திட்டங்களில் சிலவற்றிற்கு பில்லியன் கணக்கான டொலர்கள் செலவிடப்படுவதால், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான பாதீட்டு ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.
அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த புதிய ஜனாதிபதி, இந்த நடவடிக்கைகள் அனைத்திலும் இணைந்திருந்தார். யுத்தத்தை உக்கிரமாக்குவதில் அவர் நேரடிப் பங்கைக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், அதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நகர அழகுபடுத்தல், குடிசை வீடுகளை அகற்றுதல் மற்றும் சில உள்கட்டமைப்பு திட்டங்களும் இராணுவ வழிமுறையைப் பயன்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக அவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டன.
ராஜபக்ஷவின் கடந்தகால சாதனையை "தலைமைப் பண்பாக" கருதிய முதலாளித்துவம், அவர் ஒரு நிலையான பொலிஸ் ஆட்சியை நிறுவவும், தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்களை முறியடிக்கவும் இயலுமை கொண்டவர் என்று நம்புகின்றது.
முந்தைய மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது ஒரு சிறிய குழுவின் கைகளில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டமை, முதலாளித்துவத்தின் உயர் மட்டத்திற்கு அருவறுப்பானதாக தெரியவில்லை. 2015 ஜனாதிபதித் தேர்தலில், சீனாவை நோக்கிய ஒரு அரசாங்கத்தை அமைத்த ராஜபக்ஷை வெளியேற்றுவதற்காக, வாஷிங்டனால் நடத்தப்பட்ட ஆட்சி கவிழ்ப்புக்கு, முதலாளித்துவ வர்க்கம் நிபந்தனையற்ற முறையில் ஆதரவளித்ததற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும். ஆனால், கூர்மையான மக்கள் எதிர்ப்பையும், ஆளும் நிர்வாகத்தின் ஸ்திரமின்மையையும் கண்டதைத அடுத்து, சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தை உருவாக்கிய, ஆளும் உயரடுக்கின் ஒரு பகுதியினர் விரைவில் ராஜபக்ஷவின் பக்கம் திரும்பியுள்ளனர்.
இருப்பினும், புதிய ராஜபக்ஷ ஆட்சி குறுகிய காலத்தில் நெருக்கடிக்குள் மூழ்கிப் போவதை தவிர்க்க முடியாதது. பெருகிவரும் நெருக்கடியானது சிக்கன திட்டத்தை உடனடியாக செயல்படுத்த அவரை கட்டாயப்படுத்துவது மட்டுமல்லாமல், தாக்குதல்களுக்கு எதிரான கடுமையான போராட்டங்களுக்கும் வழிவகுக்கும்.