Print Version|Feedback
Bangladeshi jute mill unions call off workers’ protests
பங்களாதேஷ் சணல் ஆலை தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் போராட்டங்களை நிறுத்தி வைக்கின்றன
By Wimal Perera
3 January 2020
பங்களாதேஷில், அரசுக்கு சொந்தமான சணல் ஆலைகளில் பத்தாயிரக்கணக்கானவர்கள் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டங்களையும் மற்றும் உண்ணாவிரத போராட்டங்களையும், ஜவுளி மற்றும் சணல் அமைச்சர் கோலம் காஷியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதன் பின்னர், தொழிற்சங்கங்கள் நேற்று (வியாழக்கிழமை) அவற்றை நிறுத்தி வைத்துள்ளன.
குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு நீண்டகாலத்திற்கான ஊதிய உயர்வை வழங்க காஷி உறுதியளித்துள்ளதாக தொழிற்சங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். என்றாலும், இந்த ஊதிய உயர்வு எப்போது வழங்கப்படும் அல்லது தொழிலாளர்களின் எந்தவொரு பிற கோரிக்கையும் நிறைவேற்றப்படுமா என்பது பற்றிய சரியான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இது, கடந்த மாதத்தில் அரசாங்க அமைச்சர் அளித்த இரண்டாவது “வாக்குறுதி”யாகும்.
சணல் ஆலைத் தொழிலாளர்கள் அவர்களது தற்போதைய மாத ஊதியமான 4,150 ராக்காவிலிருந்து (48 அமெரிக்க டாலர்) 8,300 ராக்காவாக அவர்களது ஊதியம் குறைந்தபட்சம் இருமடங்காக்கப்படும் வகையில், 2015 தேசிய ஊதிய ஆணயம் (nation wage commission-NWC) பரிந்துரைத்த படி ஊதிய அதிகரிப்பை உடனடியாக வழங்க வேண்டுமென விரும்புகின்றனர்.
மேலும் குறைவூதியம் பெறும் தொழிலாளர்கள், முறையான ஊதியம் வழங்குதல், அரசாங்கத்தின் அரச-தனியார் கூட்டு (public-private partnership-PPP) திட்டத்தை இரத்து செய்தல், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்குதல், இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு காப்பீடு வழங்குதல், மற்றும் தேசிய சணல் துறை வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் அழைப்பு விடுத்தனர்.
பிரதமர் ஹசீனாவின் அவாமி லீக் அரசாங்கத்துடனான ஒரு நேரடி அரசியல் மோதலை தடுக்கத் தீர்மானித்து, கடந்த மாத தொடக்கத்தில் தொடர்ச்சியான அடையாள உண்ணாவிரத போராட்டங்களுக்கு தொழிற்சங்க அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர். இவற்றில் முதலாவது போராட்டம் டிசம்பர் 10 அன்று தொடங்கியது, அதில் நாட்டின் அரசுக்கு சொந்தமான 26 ஆலைகளில் 24 ஐ சேர்ந்த கிட்டத்தட்ட 50,000 தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் ஈடுபட்டனர். தொழிற்சங்கங்கள் இந்த நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு முன்னர், இரண்டு தொழிலாளர்கள் இறந்தனர் என்பதுடன், 200 க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தொழிலாளர்களின் “முக்கிய கோரிக்கைகளை” அரசாங்கம் நிறைவேற்றும் என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் பேகம் மொன்னுஜான் சுஃபியன் உறுதியளித்துள்ளதாகக் கூறி, டிசம்பர் 13 அன்று சணல் ஆலையின் கூட்டு பேரம் பேசும் சங்கம் (Collective Bargaining Association-CBA) மற்றும் CBA இல் உள்ளடங்காத சங்க்ராம் பரிஷத் ஆகிய அமைப்புக்களின் அதிகாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை நிறுத்தி வைத்தனர்.
48 வயது அப்துர் சத்தார், மற்றும் 55 வயது சோஹ்ராப் ஹொசைன் ஆகிய இறந்து போன உண்ணாவிரத போராட்டக்காரர்கள் இருவரும் குல்னாவில் உள்ள பிளாட்டினம் சணல் ஆலைகளிலிருந்து (Platimum Juet Mills) வந்தவர்கள். சத்தார் மயக்கமடைந்து குல்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் இறந்து போனார். ஹொசைன் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று டிசம்பர் 14 அன்று பணிக்கு திரும்பினார். என்றாலும், மீண்டும் அவர் பாதிப்படைந்து KMCH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்து போனார்.
அவரை அடக்கம் செய்வதற்கு முன்னர், கோபமடைந்த சணல் தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருந்த கலிஷ்பூருக்கு சத்தரின் உடல் கொண்டு செல்லப்பட்டது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சுஃபியன் இறந்தவர் குடும்பத்திற்கு 50,000 ராக்கா இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்த அதேவேளை, இந்த இறப்புக்கள் மேலதிக ஆர்ப்பாட்டங்களைத் தூண்டக்கூடுமோ என அஞ்சி, ஹசீனா அரசாங்கம் கலகப் பிரிவு பொலிசாரை அங்கு நிலைநிறுத்தியது.
ஆயினும் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என்ற நிலையில், குல்னா மற்றும் ஜெஸ்ஸோரில் உள்ள ஒன்பது சணல் ஆலைகளின் தொழிலாளர்கள் அழுத்தம் கொடுத்த காரணத்தால், தொழிற்சங்கங்கள் டிசம்பர் 25 அன்று - காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை - ஒரு அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஒழுங்கமைத்தது. பத்திரிகை செய்திகளின் படி, தொழிற்சங்கங்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு முன்னரே, 20 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
சணல் தொழிலாளர்களின் அவலநிலை குறித்து முற்றிலும் கவனத்தில் கொள்ளாமலும், அவர்களது கோரிக்கைகளுக்கு விரோதமாகவும், தொழிற்சங்கங்களின் உதவி மற்றும் உடந்தையின் பேரில், அரசாங்கம், சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களின் சிக்கன நடவடிக்கை மற்றும் தனியார்மயமாக்கல் கோரிக்கைகளை திணிப்பதற்கு தீர்மானித்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தத்தின் கீழ், அரசாங்கத்தின் கடைசி வரவு செலவுத் திட்டம் மொத்த அரசாங்க செலவினங்களில் 6.35 சதவிகிதத்தை “தனியார்மயமாக்கல் மேம்பாட்டிற்கு” ஒதுக்கியது, இது இந்த தசாப்தத்தின் மிகவுயர்ந்த செலவினமாகும்.
ஏப்ரல் 2019 இல், உலக வங்கி (WB) பங்களாதேஷ் அபிவிருத்தி மேம்படுத்தல் அறிக்கை, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கான (state-owned enterprises-SOE) அனைத்து நிதி ஒதுக்கீடுகளையும் முடிவுக்குக் கொண்டுவர கோரியது. இது, “அவர்களது வரவு செலவுத் திட்ட கட்டுப்பாட்டை கடுமையாக்க தேசிய வரவு செலவுத் திட்டத்திலிருந்து SOE க்களை துண்டிப்பதற்கும்,” மற்றும் “சொத்துக்களின் மீதான சிறந்த வருமானத்தை ஈட்டுவது, அல்லது மறுசீரமைப்பு, கலைத்தல் அல்லது தனியார்மயமாக்கலை எதிர்கொள்வதற்கும்” அழைப்பு விடுத்தது. மேலும், ஆலைகளை அழித்து, “மதிப்புமிக்க நிலத்தை” “சிறந்த மாற்றுப் பயன்பாடுகளுக்கு” உட்படுத்தவும் உலக வங்கி அரசாங்கத்தை அறிவுறுத்தியது.
வாழ்வூதியம் மற்றும் அவர்களது கடுமையான வேலை நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்த சணல் தொழிலாளர்களின் போராட்டம் என்பது, பங்களாதேஷிய தொழிலாளர்களின் வளர்ந்து வரும் தீவிரமயமாக்கல் போக்கின் ஒரு பகுதியாகும். டிசம்பர் 2018 இல், சுமார் 50,000 ஆடைத் தொழிலாளர்கள் தேசிய அளவிலான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர், மேலும் ஜனவரி 2019 இல், மீண்டும் ஊதிய உயர்வு கோரி போராடினர்.
வேலைநிறுத்தக்காரர்களை பொலிசார் கடுமையாகத் தாக்கி, ஒரு தொழிலாளியைக் கொன்றனர். அதே நேரத்தில் ஆடை தொழிற்சாலை உரிமையாளர்கள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தனர். அப்போது தொழிலாளர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஊதியமான வெறும் 8,000 ராக்காவை குறைந்தபட்சம் 16,000 ராக்காவிற்கு உயர்த்த கோரிக்கை விடுத்தனர்.
சணல் ஏற்றுமதிகளும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜவுளி மற்றும் சணல் அமைச்சக அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தியா, ரஷ்யா, துருக்கி, சிரியா, ஈரான், எகிப்து மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கான தேவை குறைந்து வருவதால், சணல் மற்றும் சணல் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 2017-18 ஆம் ஆண்டில் 20.41 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
1980 இல், பங்களாதேஷின் ஏற்றுமதி வருமானத்தில் 80 சதவிகித பங்கை சணல் கொண்டிருந்தது. தனியார்மயமாக்கல், ஊழல் மற்றும் தவறான மேலாண்மை, காலாவதியான இயந்திரங்கள் மற்றும் சணல் மாற்றீடுகளின் உருவாக்கம், ஆகியவற்றினால் கடந்த நிதியாண்டில் தொழில்துறை ஏற்றுமதிகள் நாட்டின் வெளிநாட்டு வருவாயில் வெறும் 2 சதவிகிதத்திற்கு குறைந்ததைக் கண்டது.
உலக வங்கியின் மேம்பாட்டுக் கொள்கை கடன் திட்டம், முன்மொழியப்பட்ட 750 மில்லியன் டாலர் கடன் தொகையில் முதல் தவணையாக 250 மில்லியன் டாலரை கடந்த ஜனவரியில் வழங்கியது என்ற நிலையில், தனியார் துறைக்கான முதலீட்டாளர்-நட்பு சூழலை உருவாக்க பங்களாதேஷ் அரசாங்கங்கள் மிகவும் உறுதியாகவுள்ளன.
சுமார் 80,000 தொழிலாளர்களை பணியமர்த்தியுள்ள அரசுக்கு சொந்தமான சணல் ஆலைகளின் தனியார்மயமாக்கம் என்பது, தொழில்துறையைச் சார்ந்திருக்கும் மில்லியன் கணக்கானோரின் கோபத்திற்கு எரியூட்டும். தற்போது, மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கினர் சணல் மற்றும் சணல் தொழில்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பிணைந்துள்ளனர்.
சணல் மற்றும் அரசுக்கு சொந்தமான பிற தொழில்களின் தனியார்மயமாக்கம் பங்களாதேஷ் தொழிலாளர்களுக்கு துன்பத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது. ஆட்குறைப்புக்குப் பின்னர், ரிக்ஷா இழுப்பவர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் போன்ற வழக்கமில்லாத வேலைக்குச் செல்ல முயற்சிக்கும் வகையில், முறைசாரா தொழிலாளர் சந்தைக்குள் அவர்கள் தள்ளப்பட்டு வருகிறார்கள். இது, பலரையும் அவர்களது வேலை காலத்தில் சேர்த்து வைத்திருந்த சில சொத்துக்களைக் கூட விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளி, அவர்களை கடனாளிகளாக்கியுள்ளது.
பங்களாதேஷ் தொழிலாளர்களின் மத்தியில் வளர்ந்து வரும் இந்த அமைதியின்மை என்பது, குறைவூதியங்கள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும் முடிவுக்குக் கொண்டுவர தீர்மானித்து மேற்கொள்ளப்பட்டதான, அமெரிக்கா, பிரான்ஸ், சிலி, மெக்சிக்கோ, பிரேசில், இந்தியா, ஹாங் காங் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மற்றும் தொழில்துறை நடவடிக்கை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும்.
பங்களாதேஷ் தொழிலாளர்களும், அவர்களது சர்வதேச சக தொழிலாளர்களைப் போல, தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான, சாமான்ய தொழிலாளர் அமைப்புக்களை அபிவிருத்தி செய்து, சுரண்டும் முதலாளித்துவ இலாப முறைக்கு ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் முற்றுப்புள்ளி வைப்பது ஆகியவற்றால் மட்டுமே, நல்ல ஊதியங்கள், வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளை பெறுவதற்கான அவர்களது உரிமைகளை முன்னெடுக்க முடியும்.