ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian army chief denounces mass protests against BJP government’s anti-Muslim citizenship law

பிஜேபி அரசாங்கத்தின் முஸ்லீம்-விரோத குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான பெரும் ஆர்ப்பாட்டங்களை இந்திய இராணுவத் தலைவர் கண்டிக்கிறார்

By Wasantha Rupasinghe and Keith Jones
30 December 2019

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா  கட்சியின் (BJP) ஏனைய தலைவர்களின் பொய்களை எதிரொலிப்பதாக, இந்திய இராணுவத் தலைவரான ஜெனரல் பிபின் ராவத், பிஜேபி இன் முஸ்லீம்-விரோத குடியுரிமை திருத்தச் சட்டம் அல்லது CAA இன் எதிர்ப்பாளர்கள் வன்முறை மிக்க போராட்டங்களை நடத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

டிசம்பர் 26 அன்று பேசுகையில், ராவத் குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களை குறிப்பிட்டு, “வேண்டுமென்றே தீ வைத்தல் மற்றும் வன்முறை”யை அவர்கள் தூண்டிவிட்டதாகக் கூறினார்.


இராணுவத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் 2018 இல் புது தில்லியில் பேசுகிறார் (நன்றி: இந்திய பாதுகாப்பு அமைச்சகம்)

இந்த மாத தொடக்கத்தில் பிஜேபி அரசாங்கம் அதன் பாரபட்சமான CAA ஐ பாராளுமன்றம் மூலம் நிறைவேற்றி சட்டமாக்க தீவிரம் காட்டியது முதல், இந்தியாவை நிலைகுலையச் செய்த பல ஆர்ப்பாட்டங்களுக்கு மாணவர்கள் தான் தலைமை தாங்கினர்.

இந்த ஆர்ப்பாட்டங்களில் இரண்டு டசினுக்கும் அதிகமானோர் இறந்துவிட்டனர், அவர்களில் பெரும்பாலானோர் குறிப்பாக உத்திரப்பிரதேச பொலிஸின் தாக்குதலினால் இறந்தவர்களாவர், அங்கு நான்கு பேருக்கு அதிகமான மக்கள் கூடும் அனைத்து கூட்டங்களுக்கும் 15 நாட்களாக பிஜேபி அரசாங்கம் தடை விதித்துள்ளதுடன், போராட்டக்காரர்களை மூர்க்கத்தனமாக தாக்குவதற்கு பாதுகாப்பு படையினரை ஊக்குவித்தது.

ஒரு “மனிதாபிமான” அடையாளமாக பிஜேபி ஆல் இழிவாக ஊக்குவிக்கப்பட்டதான இந்த CAA, முஸ்லீம் சிறுபான்மையினர் துன்பத்தில் வாழ்ந்து வருகின்ற இந்தியாவை ஒரு “இந்து தேசம்” என்று வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்ட அதன் தொடர்ச்சியான வகுப்புவாத ஆத்திரமூட்டல்களில் சமீபத்தியதாகும்.

இந்த சட்டம், முஸ்லீம்கள் தவிர, 2015 க்கு முன்னர் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்தவர்களுக்கு, அல்லது புலம்பெயர்ந்த அவர்களது மூதாதையர்களுக்கு என அனைவருக்கும் இந்திய குடியுரிமை வழங்க விரைவான வழியை வழங்குகிறது. அதாவது, தேசிய குடிமக்கள் பதிவேட்டை (National Register of Citizens-NRC) தயாரிப்பதற்கான பிஜேபி இன் திட்டத்தின் கீழ், இந்தியாவின் அனைத்து 1.3 பில்லியன் குடியிருப்பாளர்களும் தாங்கள் இந்திய குடிமக்கள் தான் என்று அதிகாரிகள் திருப்திப்படும் வகையில் நிரூபிக்க வேண்டும் என்பது, உண்மையில் ஏழை முஸ்லீம்களை அச்சுறுத்துவதற்கும் துன்புறுத்துவதற்குமான ஒரு திட்டம் என்பதையே இதன் ஷரத்து அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஏனென்றால், இதன் கீழ், முஸ்லீம்கள் மட்டுமே, தற்போது “நாடற்றவர்கள்” என்று அறிவிக்கப்படுவதற்கான மற்றும் அவர்களது குடியுரிமை உரிமைகள் பறிக்கப்படுவதற்கான மேலும் தடுத்து வைக்கப்படுவதற்கான மற்றும் நாடுகடத்தப்படுவதற்கான அச்சுறுத்தலுக்குள்ளாவார்கள்.

CAA க்கு எதிர்ப்பானது, வகுப்புவாத, சாதி ரீதியான மற்றும் இன-பிராந்திய எல்லைகளை கடந்த அதன் தீவிரத்தன்மையால் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தையும் ஆட்டம் காணச் செய்துள்ளது. அதனால் உந்தப்பட்ட பிஜேபி அரசாங்கம், அரசு வன்முறை மற்றும் மோசடியான பிரச்சாரம் மூலம் அதற்கு பதிலிறுத்துள்ளது.

“தலைவர்கள்,” “மக்களை தவறான திசைகளில் வழிநடத்துபவர்கள் அல்லர், அதை நாம் ஏராளமான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களில் [மற்றும்] அவர்கள் நமது நகரங்களிலும் மற்றும் பெருநகரங்களிலும் தீ வைப்பது மற்றும் வன்முறையில் ஈடுபடுவதில் பெரும் கூட்டங்களை வழிநடத்தும் முறைகளிலும் காண்கிறோம்” என்று இந்திய இராணுவத் தலைவர் தெரிவித்தார்.

அதற்கு முந்தைய தினம் பேசுகையில், இதேபோல மோடியும் CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை வன்முறை என்றே சித்தரித்தார். “குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்த மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்திய விதம் குறித்து” இந்திய பிரதமர் கண்டித்ததுடன், “பொலிஸை மதிக்க” வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். மேலும், முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டுவதாக தற்போது குற்றவியல் குற்றம்சாட்டப்பட்டுள்ள உத்திரப்பிரதேச முதலமைச்சரான யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து பேசுகையில், குடியுரிமை குறித்த ஒரு பாசிச கருத்தாக்கத்தை முன்வைக்க மோடி முயன்றார். மக்களுக்கு உரிமைகள் உண்டு என்பதை அவர் ஒப்புக் கொண்டார், என்றாலும் “உரிமைகளுக்கு வரம்புகள் உள்ளன, அதேசமயம் [அரசுக்கு] இருக்கும் பொறுப்புக்களும் கடமைகளும் பரந்தளவிலானவை” என்று கூறினார்.

CAA எதிர்ப்பு கிளர்ச்சியை வன்முறை என்று முத்திரை குத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிர்க்கட்சிகளும் இந்தியாவின் ஆங்கில மொழி பெருநிறுவன ஊடகங்களின் சில பிரிவுகளும் சவால் விடுக்கின்றன.

இராணுவத் தலைவர் ராவத்தின் அறிக்கைகள் குறிப்பாக அரசியலில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற இராணுவ உயர் அதிகாரிகளின் அரசியலமைப்பு கடமையை வெளிப்படையாகவும் முன்நிகழ்ந்திராத வகையிலும் மீறுவதை பிரதிநிதித்துவம் செய்த காரணத்தால் அவை  எதிரான  கருத்துக்களை தூண்டியுள்ளன.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில், “வரையறையைக் கடந்து,” (“Crossing a line”) என்று தலைப்பிடப்பட்டு கடுமையாக எழுதப்பட்டிருந்த ஒரு தலையங்கம், “ஆயுதப் படைகள் ஆளும் கட்சியின் நீட்டிப்போ அல்லது அதன் கருவியோ அல்ல, அல்லது அரசியல் ஆதிக்கம் செலுத்தும் ஆட்டக்காரரும் அல்ல” எனக் குறிப்பிட்டு, ஜனநாயக அரசியலமைப்பு “வரையறையை” அவர்கள் மீறிவிட்டதால், CAA எதிர்ப்பு குறித்த ராவத்தின் கண்டனங்கள், “வெளிப்படையாகவே முறையற்றவை” என்று தெரிவித்தது.

எக்ஸ்பிரஸ் பத்திரிகை, “எதிர்ப்புக்களை குற்றப்படுத்துவதற்கான” மோடி அரசாங்கத்தின் “முயற்சிகளை” ராவத்தின் அறிக்கைகள் “வலுப்படுத்துகின்றன” என்று சரியாக எச்சரித்ததுடன், அவை “நிகழ்ந்திருக்கின்றன மேலும் … தன்னிச்சையானதாகவும், பெரும்பாலும் தலைவர்களின்றியும், மேலும் பெரும்பாலும் அமைதியாகவும் அவை தொடரும்” என்றும் தெரிவித்தது.

எக்ஸ்பிரஸ் நாளிதழின் தலையங்கம், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்த தனது “இயலாமையையும் தோல்வியையும்” “பொலிஸ் தடியடி மற்றும் தன்னிச்சையாக தடுப்புக் காவலில் வைப்பது, இணைய சேவையை இடைநிறுத்தம் செய்வது மற்றும் நான்கு பேருக்கு அதிகமானோர் கூடி பேசுவதை தடை செய்வதற்காக [குற்றவியல் சட்டப்] பிரிவு 144 இன் கீழ் தடை விதிப்பது” ஆகிய நடவடிக்கைகள் மூலம் “மூடிமறைக்க முயலும்” அரசாங்கத்தை கண்டிக்க முயன்றது,

ராவத் மற்றும் பிஜேபி பற்றிய இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் விமர்சனம், அனைத்தையும் காட்டிலும் குறிப்பிடத்தக்கதாகும் என்பதுடன், இதுவரை பிஜேபி அரசாங்கத்திற்கு பெரும்பாலும் ஆதரவளித்து வந்துள்ள பெரும்பாலான இந்திய ஊடகங்களைப் போல, “முதலீட்டாளர் சார்பு” நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், வாஷிங்டன் உடனான இந்தியாவின் சீன எதிர்ப்பு இராணுவ-மூலோபாய கூட்டாண்மையை விரிவுபடுத்துவதற்குமான சிறந்த பந்தயக்காரராக மோடியை பார்க்கிறது.

ஆயினும், CAA எதிர்ப்பு விரிவடைந்து வருவதும், மேலும் பிஜேபி இன் இந்து மேலாதிக்க தாக்குதல் முக்கிய அரசு நிறுவனங்களை சீர்குலைக்கும் மேலும் சட்டவிரோதமாக்கும் என்று அஞ்சப்படுவதும் ஆளும் உயரடுக்கின் சில பிரிவுகளுக்கு கவலையளிக்கிறது.

Times of India நாளிதழ், பிஜேபி அரசாங்கம், “அமைதியான போராட்டங்களுக்கான தளத்தை கட்டுப்படுத்துவது”, மேலும் தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens-NRC) தயாரிப்பை விரைந்து முன்னெடுப்பதற்கான அதன் திட்டங்களில் இருந்து பின்வாங்கி அதற்கு பதிலாக நவ தாராளவாத “சீர்திருத்தத்திற்கு” அழுத்தம் கொடுத்து முன்னெடுத்து செல்வது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று ஊக்குவித்தது.

ஏறக்குறைய அருள்வாக்கு சொல்வது போல, Times பத்திரிக்கையின் சமீபத்திய தலையங்கம் “துன்பம், குழப்பம் மற்றும் பொருளாதார சீர்குலைவிற்கு எச்சரிக்கை விடுக்கும்” “மையம் கொள்ளும் புயல்” என்று எச்சரித்தது. மேலும் இது, “இந்த பெரும் பிளவிலிருந்து பின்வாங்கவும், மற்றும் இந்தியாவின் [பொருளாதார] மந்தநிலையின் அதிர்ச்சியூட்டும் அளவு பற்றி சர்வதேச நாணய நிதியம் (IMF) கூறியது குறித்து நாட்டின் கவனத்தை செலுத்தவும்” மோடி அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தியது.

எவ்வாறாயினும், மோடியும் அவரது பிஜேபி அரசாங்கமும், CAA ஐ நடைமுறைப்படுத்துவதற்கும், “சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்கள்” மீது அடக்குமுறையை செயல்படுத்துவதற்கும் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க உறுதிபூண்டுள்ளனர்.

பெருகிவரும் எதிர்ப்பு மற்றும் தடுமாறும் பொருளாதார நிலைமைகளின் கீழ், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தங்களது பாசிச இந்து மேலாதிக்க செயற்பாட்டாளர்களின் அடித்தளத்தை அணிதிரட்டுவது, மேலும் பெருகி வரும் சமூக சீற்றத்தை பிற்போக்குத்தன திசையில் செலுத்தி, இந்தியாவின் தொழிலாளர்களும் உழைப்பாளர்களும் வகுப்புவாத அடிப்படையில் ஒருவருக்கொருவர் எதிராக குழிபறித்துக் கொள்ளச் செய்வது என இரண்டிற்கும் இந்து வகுப்புவாதத்தைத் தூண்டுவது அவசியம் என்று அவர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், உத்திரப்பிரதேச (UP) முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடன் டிசம்பர் 25 அன்று மோடி மேடையில் தோன்றியது குறிப்பாக ஆத்திரமூட்டுவதாக இருந்தது.

இந்த இந்து மதகுருவின் தலைமையின் கீழ், CAA இற்கு எதிரான அனைத்து பொது எதிர்ப்பையும் குற்றப்படுத்தவும், மேலும் தடியடி அடக்குமுறையை நியாயப்படுத்தவும் 144 தடைச் சட்டத்தை UP அரசாங்கம் பயன்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் மோடியுடன் ஒரே மேடையில் பேசுவதற்கு முன்னரும் பின்னரும் பொலிஸை வெறித்தனமான நடவடிக்கைகளை எடுக்கத் தூண்டும் வகையில் தொடர்ச்சியான ஆத்திரமூட்டும் அறிக்கைகளை ஆதித்யநாத் விடுத்துள்ளார். இதில், “பொது சொத்துக்களுக்கு ஏதேனும் சேதம் விளைவித்ததற்காக” ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாப்புப் படையினர் “பழிவாங்குவர்” என்று அவர் உறுதிபூண்டதும், மேலும் சேதத்திற்கு “ஈடாக” எதிர்ப்பாளர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் படி அவர்களுக்கு அவர் உத்தரவிட்டதும் அடங்கும்.

சென்ற வெள்ளிக்கிழமை, “ஒவ்வொரு கலகக்காரரும்… ஒவ்வொரு பிரச்சனையாளரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்” என்பதுடன், “யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் கண்டிப்பைக் கண்டு மவுனமாகிவிட்டனர்” என்று பெருமை பீற்றும் ஒரு ட்வீட்டை ஆதித்யநாத் பதிவிட்டிருந்தார்.

உத்திரப்பிரதேச மாநில பிஜேபி அரசாங்கத்தின் வற்புறுத்தலின் பேரில் காவல்துறையினர் எடுத்த குற்றவியல் நடவடிக்கைகள் பற்றிய அறிக்கைகள் இந்திய மற்றும் சர்வதேச பத்திரிக்கைகளில் தற்போது வெளியாகின்றன. அவற்றில் பின்வருவன அடங்கும்: ஏழை மீரட் சுற்றுப்புறத்தில் CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை துரத்திப் பிடிப்பதற்காக அவர்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டை பொலிசார் நடத்திய போது, நான்கு ஏழை முஸ்லீம் தொழிலாளர்கள் கொல்லப்பட்டது; முஸ்லீம்களை பொதுவாக அச்சுறுத்துவதற்கும், பாகிஸ்தானுக்கு நாடுகடத்தப்படுவார்கள் என்று அச்சுறுத்துவதற்கும், மேலும் அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் என பல நகரங்களிலும் மற்றும் பெருநகரங்களிலும் உள்ள முஸ்லீம் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்தது; மேலும் முக்கிய மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்களை தடுப்புக் காவலில் வைத்தது.

மேலும் எடுக்கப்படவுள்ள தெளிவற்ற சர்வாதிகார நடவடிக்கை என்னவென்றால், இராணுவத் தலைவர் ராவத்தை புதிதாக உருவாக்கப்பட்ட பாதுகாப்புப் படைத் தலைவர் (Chief of Defence Staff-CDS) பதவிக்கு உயர்த்துவதை பிஜேபி அரசாங்கம் அறிவிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

சனிக்கிழமையன்று, இந்தியாவின் முதல் CDS ஐ 65 வயது வரை சேவையாற்ற அனுமதிக்கும் வகையில், இந்தியாவின் இராணுவத்தை நிர்வகிக்கும் விதிகளில் அரசாங்கம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. அதாவது இந்த மாற்றம் டிசம்பர் 31 அன்று ஓய்வு பெறவிருக்கும் ராவத்துக்கு புதிய பதவியை ஏற்றுக் கொள்ள வழி வகுக்கும் என்று இந்திய ஊடகங்களில் கிட்டத்தட்ட உலகளவில் விளக்கப்பட்டுள்ளது, இது, அமெரிக்க கூட்டுப் படைகளின் பணியாளர்களுக்கான தலைவர் பதவியை ஒத்ததாக நியமிக்கப்பட்டுள்ளது.

பல மூத்த அதிகாரிகளைத் தாண்டி இராணுவத் தலைவர் பதவிக்கு மோடியால் உயர்த்தப்பட்டவரான இந்த ராவத், பாகிஸ்தானுக்கு எதிரான பிஜேபி அரசாங்கத்தின் போர்க்குணமிக்க நிலைப்பாட்டின் வலுவான ஆலோசகராக இருந்து வருகிறார். CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்து கடந்த வாரம் அவர் தெரிவித்த கருத்துக்கள் முலம், CDS ஆக, காஷ்மீரிலோ அல்லது இப்போது நாடு எங்கிலுமாகவோ அரசாங்கம் அரசு வன்முறையை அதிகரித்து வருவதை அவர் கடுமையாக ஆதரிப்பார் என அவர் சமிக்ஞை செய்தார்.

சமீபகாலம் வரை இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய அரசாங்க கட்சியாக இருந்து வந்த காங்கிரஸ் கட்சியும், ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சிகளிலுள்ள அவர்களது கூட்டணிக் கட்சிகளும், மற்றும் மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் தமிழ்நாட்டில் திமுக போன்ற முன்னாள் பிஜேபி கூட்டணிக் கட்சிகள் உட்பட பல்வேறு இன-பிராந்தியக் கட்சிகளும், இந்திய ஸ்தாபக அரசியலின் பிற்போக்குத்தன கட்டமைப்பிற்குள் மோடி அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பைக் கட்டுப்படுத்த முயன்று வருகின்றன.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM உம் மற்றும் அதன் சகோதரத்துவ ஸ்ராலினிசக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (CPI) ஆபத்தான வகையில் பங்காற்றி வருகின்றன. பல தசாப்தங்களாக, நவ தாராளவாத சீர்திருத்தத்திற்கும், வாஷிங்டன் உடனான நெருக்கமான உறவுகளுக்கும் தலைமை வகித்த காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கங்களை ஆதரித்து வந்த ஸ்ராலினிசக் கட்சிகளும் முறையே அவற்றின் தொழிற்சங்க கூட்டமைப்புக்களான CITU மற்றும் AITUC என அனைத்தும் “இந்து பாசிச பிஜேபி” ஐ எதிர்க்கும் மற்றும் மதச்சார்பின்மையை பாதுகாக்கும் பெயரில், வர்க்கப் போராட்டத்தை முறையாக ஒடுக்கி வந்துள்ளன. உண்மையில், இந்திய ஸ்தாபகத்தின் மற்ற பிரிவுகளைப் போல, காங்கிரஸ் கட்சியும் இந்து வலதை ஏற்றுக் கொண்டு, மறைமுகமாக அதற்கு ஒத்துழைக்கிறது.

உலகெங்கிலும் உள்ளது போல, இந்தியாவிலும், ஜனநாயக உரிமைகளுக்கான மற்றும் வகுப்புவாத மற்றும் பாசிச பிற்போக்குத்தனத்தை தோற்கடிப்பதற்கான போராட்டத்திற்கு, சமூக சமத்துவத்திற்காகவும், அழுகிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ சமூக ஒழுங்கிற்கு எதிராகவும் போராடும் வகையிலான தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் தேவைப்படுகிறது.