Print Version|Feedback
French strikers march as Prime Minister Philippe offers cosmetic changes to pension cuts
பிரதம மந்திரி பிலிப் ஓய்வூதிய வெட்டுக்களில் மேம்போக்கான மாற்றங்களை வழங்கிய நிலையில், பிரெஞ்சு வேலைநிறுத்தக்காரர்கள் அணிவகுக்கின்றனர்
By Alex Lantier and Anthony Torres
13 January 2020
“தேசிய சதுக்கத்தில் போராட்டக்காரர்களின் ஒரு பகுதியினர்"
பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப் "தற்காலிக" மேம்போக்கான விட்டுக்கொடுப்புகளை வழங்கிய நிலையில், ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக சனிக்கிழமை நூறாயிரக் கணக்கான பிரெஞ்சு வேலைநிறுத்தக்காரர்களும் "மஞ்சள் சீருடையாளர்களும்" அணிவகுத்தனர். குறைந்தபட்சம் மே வரையிலாவது வெட்டுக்களின் உள்ளடக்கம் தொடர்பான நிச்சயமற்றத்தன்மையைப் பேணுவதன் மூலம் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தக்காரர்களை படிப்படியாக கலைத்து விட அனுமதிப்பதும், அதேவேளையில் ஓய்வூதியங்களைக் குறைப்பதற்கு மக்ரோனுக்கு அதிகமான புதிய அதிகாரங்களை வழங்குவதுமே இந்த எரிச்சலூட்டும் நடவடிக்கைகளின் நோக்கமாகும்.
வேலைநிறுத்தக்காரர்கள் பிரான்ஸ் எங்கிலுமான நகரங்களில் அணிவகுத்த நிலையில், ஓய்வூதிய நிதி ஒதுக்கீடு மீது தொழில்வழங்குனர் கூட்டமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான நான்கு மாத கால மாநாட்டை ஒழுங்கமைக்க முன்மொழியும் கடிதம் ஒன்றை பிலிப் வெளியிட்டார். என்னவாக இருந்தாலும் அவர் எந்த குறிப்பிடத்தக்க விட்டுக்கொடுப்புகளையும் செய்யவில்லை என்பதையே, உண்மையில், பிலிப்பின் கடிதம் மீதான ஒரு பகுப்பாய்வு தெளிவுபடுத்துகிறது. அவரின் திட்டத்தின் கீழ், மக்ரோனின் வெட்டுக்களின் அடிப்படை அம்சங்கள் அனைத்துமே, ஏதோவொரு விதத்தில், நடைமுறைக்கு வரும்.
மக்ரோனுடன் பேரம்பேசுவதற்கு அங்கே ஒன்றுமே இல்லை என்ற நிலையில், தொழிற்சங்கங்களின் பேரம்பேசல்கள் ஒரு பொறி என்பதையே இது மீண்டும் அடிக்கோடிடுகிறது. மக்ரோன் அரசாங்கம் மற்றும் அதை ஆதரிக்கும் பிளாக்ராக் (BlackRock) போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களுக்கும், சமூக சமத்துவமின்மை மற்றும் இராணுவவாதத்தை எதிர்த்து போராடும் பிரெஞ்சு மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே ஒரு சமரசமற்ற மோதல் எழுந்துள்ளது. மக்ரோனைப் பதவியிலிருந்து கீழிறக்கும் ஒரு போராட்டத்தை ஒருங்கிணைக்க, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை உருவாக்குவதே போராட்டத்தில் இறங்கியுள்ள தொழிலாளர்களுக்கு முன்னுள்ள பாதையாக உள்ளது.
“பிளாக் ராக்"
பிலிப் இன் கடிதம் மக்ரோனின் அனைத்து வெட்டுக்களும் திணிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளையும் உள்ளடக்கியுள்ளது. கடந்த 15 ஆண்டுகள் அல்லது 6 மாதங்களின் அடிப்படையில் அல்லாமல் கடந்த 25 ஆண்டுகால தொழிலாளர்களினது சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் "புள்ளிகளின்" அடிப்படையில் கணக்கிடப்படும் ஓய்வூதியங்களை உருவாக்குவது, இதன் மதிப்பை புதிய தலைமுறை தொழிலாளர்கள் ஓய்வு பெறும் ஒவ்வொரு நிதியாண்டும் அரசால் எதேச்சதிகாரமாக வெட்ட முடியும்; அரசுத்துறையில் சிறப்பு ஓய்வூதிய திட்டங்களை நீக்குதல்; மற்றும் "நடுநிலையான" ஓய்வூதிய வயதை இரண்டாண்டுகள் அதிகரித்து 64 ஆக உயர்த்துவது ஆகியவை அதில் உள்ளடங்கி உள்ளன. தொழிற்சங்கங்கள் சமூக செலவினங்களை வெட்டுவதற்கு வேறேதாவது வழியைக் கண்டுபிடித்தால், கடைசி தாக்குதலை அவர் திணிக்காமல் விட்டுவிடலாம் என்பதையும் "தற்காலிகமாக" மட்டுமே என்பதையும் பிலிப்பின் கடிதம் சுட்டிக் காட்டுகிறது.
அவர் எழுதுகிறார், “புள்ளிகள் அடிப்படையில் அனைவருக்குமான ஓர் ஓய்வூதிய திட்டத்தை (universal pension system) உருவாக்க அரசு உத்தேசிக்கிறது என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்... சிறப்பு ஓய்வூதிய திட்டங்கள் டிசம்பரில் வரையறுக்கப்பட்ட மாற்றத்திற்கான ஒரு இடைக்காலத்திற்குப் பின்னர் நீக்கப்படும். இந்த அனைவருக்குமான திட்டத்தில் பிரெஞ்சு மக்கள் அனைவரும் இணைக்கப்படுவார்கள்,” என்கிறார்.
“ஓய்வூதிய வரவு-செலவு திட்டக்கணக்கைச் சமப்படுத்துவதற்கான கட்டாய விதிமுறைகளும், அத்துடன் இத்திட்டத்தை முன்னெடுப்பதில் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்வழங்குனர் குழுக்களுக்கு உள்ள முக்கிய பொறுப்புகளும், இந்த சட்டமசோதாவில் உள்ளடக்கப்பட்டிருக்கும். இதனால் தான் இந்த சட்டமசோதா, அனைவருக்குமான எதிர்கால திட்டத்தில் ஒரு சமப்படுத்தப்பட்ட வயது (equilibrium age) இருக்கும் என்பதை குறிப்பிடும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொள்கிறார். "ஏப்ரல் 2020 இன் இறுதிக்குள் தீர்மானங்களை முன்வைப்பதற்காக" தொழிற்சங்கங்களும் தொழில்வழங்குனர் குழுக்களும் ஓய்வூதிய வரவு-செலவு திட்டக்கணக்கைச் சமப்படுத்தும் ஒரு மாநாட்டை நடத்துவதற்கும் அது முன்மொழிகிறது.
தொழில்வழங்குனர் கூட்டமைப்புகளும் தொழிற்சங்கங்களும் அவர்களின் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கும் வரையில், “2027 இல் ஒரு சமப்படுத்தப்பட்ட ஓய்வூதிய வயதாக 64 க்கு செல்லும் … என் முன்மொழிவை குறுகிய-கால நடவடிக்கையாக அச்சட்டமசோதாவில் இருந்து திரும்ப பெற விரும்புகிறேன்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொள்கிறார்.
“ஓய்வூதிய போராட்டத்தில் மஞ்சள் சீருடையாளர்கள்"
எவ்வாறிருப்பினும் தொழிற்சங்கங்கள் முன்மொழிவுகளைச் சமர்பித்ததும், அரசாங்கம் ஓய்வூதியங்களை குறைக்க கடுமையான அதிகாரங்களைக் கோரும். பிலிப் குறிப்பிடுகிறார்: “2027 க்குள் ஓய்வூதிய திட்டத்தைச் சமப்படுத்துவதை உத்தரவாதப்படுத்தக்கூடிய எந்த நடவடிக்கையையும் உத்தரவுகள் மூலமாக திணிப்பதற்கு அனுமதிக்கும் வகையில், ஒரு முக்கிய அதிகாரம் வழங்கும் சட்டத்தை நிறைவேற்றுமாறு நாடாளுமன்றத்திடம் கோரும் விதத்தில் அரசாங்கம் அந்த சட்டமசோதாவை மாற்றியமைக்கும்”. அதாவது அரசாங்கம் கைவிடுவதாக கூறும் ஓய்வூதிய வயதை உத்தரவுகள் மூலமாக அதிகரிப்பதை அது மீளஅறிமுகப்படுத்தக்கூடும் என்று இதை கூறலாம். அது இதற்கும் மேலான வெட்டுக்களையும் சுமத்தலாம்.
நவபாசிசவாத மரீன் லு பென் மற்றும் கோலிச செனட்டர் ரோஜே கரோச்சி போன்ற வலதுசாரி அரசியல்வாதிகளே கூட, ஓய்வூதிய வெட்டில் ஒரு "தற்காலிக" திரும்பப்பெறலில் என்ன அர்த்தம் உள்ளதென்றே அவர்களுக்குப் புரியவில்லை என்று குறிப்பிட்டு, பிலிப்பின் கடிதத்தை அவர்கள் கேலி செய்தனர், இருந்தபோதினும் தொழிற்சங்க அதிகாரத்துவமோ அக்கடிதத்தை வரவேற்றன. பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு (CFDT) கூறுகையில், அது "சீர்திருத்தத்தில் இருந்து சமப்படுத்தப்பட்ட வயதைத் திரும்பப் பெறுவது, சமரசப்படுவதற்கான அரசாங்கத்தின் விருப்பத்தை எடுத்துக் காட்டுவதால் அதை பாராட்டுவதாக" கூறியது.
இதேபோல சுதந்திர சங்கங்களின் தேசிய கூட்டமைப்பு (UNSA) குறிப்பிடுகையில், பிலிப்பின் கடிதம் "சமப்படுத்தும் பிரச்சினையை பொறுமையாக விவாதிக்க எங்களை அனுமதித்திருப்பது நல்ல விடயமே" என்று குறிப்பிட்டு, மக்ரோனை ஆதரித்தது.
ஸ்ராலினிச தலைமையிலான தொழிலாளர் பொது கூட்டமைப்பின் (CGT) தலைவர் பிலிப் மார்ட்டினேஸ் கூறுகையில், “சமப்படுத்தப்பட்ட வயது சம்பந்தப்பட்ட பிரச்சினை ஒரு பொய்த்தோற்றம்" அது "வெட்டுக்கள் மீதான எங்கள் எதிர்ப்பை மாற்றிவிடாது,” என்று ஒப்புக் கொண்டார் என்றாலும், ஓய்வூதிய வெட்டுக்கள் மீது 2017 இல் தொடங்கப்பட்ட மக்ரோனுடனான "அனைத்து" பேச்சுவார்த்தைகளிலும் CGT கலந்து கொண்டுள்ளது என்று பெருமைப்பீற்றி, ஓய்வூதிய வெட்டுக்கள் மீதான பேச்சுவார்த்தைகளில் அரசுடனும் தொழில்வழங்குனர் குழுக்களுடனும் அவர் தொடர்ந்து கலந்து கொள்வார் என்பதை வலியுறுத்தினார்.
இந்த சீர்திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில், வேலைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ள மற்றும் அணிவகுத்துள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்களிடம் இருந்து தொழிற்சங்க உயர்மட்ட நிர்வாகிகளை ஒரு வர்க்க இடைவெளி பிரிக்கிறது. சாமானிய தொழிலாளர்களே இந்த வேலைநிறுத்தங்களை நடத்தினர், அவர்கள் இந்த சீர்திருத்துவதை நிறுத்துவதில் மட்டுமல்ல, மாறாக மக்ரோன் மற்றும் சர்வதேச நிதியியல் சந்தைகளால் முன்னெடுக்கப்படும் போர் மற்றும் இராணுவ ஆக்ரோஷ கொள்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதிலும் தீர்மானகரமாக உள்ளனர்.
ஒரு "மஞ்சள் சீருடை" போராட்டக்காரரான சில்வி பாரீசில் WSWS பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “அவர்கள் சமப்படுத்தப்பட்ட வயதைத் திரும்ப பெற்றிருக்கிறார்களா இல்லையா என்பதைக் குறித்து எங்களுக்கு ஒன்றும் கவலையில்லை. நாங்கள் வெட்டுக்கள், அதற்கான காலகட்டத்தையும் எதிர்க்கிறோம்… நாங்கள் தொழிற்சங்கங்களை முற்றிலுமாக நம்பவில்லை, ஆனால் மறுபுறம் சாமானிய தொழிலாளர்கள் தீர்மானமாக உள்ளார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்,” என்றார்.
கட்டுமானத்துறை தொழிலாளியும் "மஞ்சள் சீருடை" போராட்டக்காரருமான மிக்கேய்ல் கூறினார்: “தொழிற்சங்கங்களை நடத்துபவர்கள் மக்ரோனுக்கு உடந்தையாய் இருக்கிறார்கள் என்று நான் நிஜமாகவே நம்புகிறேன். போராட்டங்களில் இணைந்து வரும் சாமானிய தொழிலாளர்கள், பின்வாங்க மாட்டார்கள். ஆனால் தொழிற்சங்கத் தலைவர்கள் எதுவும் நன்மை செய்ய மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன்,” என்றார். “எங்களுடன் வந்து இணையுமாறு, கட்டுமானத்துறை தொழிலாளர்கள் அனைவருக்கும் நான் பெரும் முறையீடு செய்கிறேன். உண்மையில், இதற்கு முடிவு கட்ட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து வர வேண்டும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
வெப்பமாக்கல்துறை பொறியாளர் லோரோன்ட் WSWS க்குக் கூறியவாறு, அங்கே போர் மற்றும் நிதியியல் பிரபுத்துவத்திற்கும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது: “அவர்கள் அனைத்தையும் அழித்து வருகிறார்கள். எங்கள் குழந்தைகளுக்கு ஓர் எதிர்காலத்தை நாங்கள் விரும்புகிறோம் … அவர்கள் நம்மை மீண்டும் பின்னோக்கி 19 ஆம் நூற்றாண்டுக்குக் கொண்டு செல்ல விரும்புகிறார்கள்.”
இந்தியா மற்றும் லெபனானிலும், சர்வதேச அளவிலும் அதிகரித்து வரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் குறித்து அவர் உற்சாகமடைவதாக லோரோன்ட் தெரிவித்தார்: “மக்கள் ஒவ்வொரு இடத்திலும் குழப்பத்திற்குள்ளாக்கப்பட்டு, ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை நாங்கள் உணர்ந்து வருகிறோம். ஒவ்வொன்றையும் முடிவெடுப்பவர்களும் ஒவ்வொரு இடத்திலும் சேதங்களை ஏற்படுத்துபவர்களும் எப்போதும் ஒரே நபர்களாகத்தான் இருக்கிறார்கள். மாலியனுடன் நீங்கள் பேசிப் பாருங்கள், நீங்கள் [பிரெஞ்சு எண்ணெய் நிறுவனம்] மற்றும் [நிதியியல் சாம்ராஜ்ஜியம்] Bolloré குறித்து பேசுவதில் போய் நிற்பீர்கள். நமக்கு ஒரே எதிரிகள் தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள். அதே ஒட்டுண்ணிகள் தான் ஒவ்வொரு நாட்டையும் அழிக்க முயன்று வருகிறார்கள். நாளையே அவர்கள் ஒரு போரைத் தொடங்கினால், அது மக்கள் அனைவரையும் நசுக்குவதை நியாயப்படுத்துவதற்கும் மற்றும் இந்த கொள்கையை தீவிரப்படுத்துவதற்கும் ஆக இருக்கும்.”
ஈரானிய தளபதி காசிம் சுலைமானியின் சமீபத்திய அமெரிக்க ட்ரோன் படுகொலை "பயங்கரவாதம் ஆகும். அவர்களின் அரசியலுடன் ஒருவர் உடன்படுகிறாரா இல்லையா என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு, மக்களைப் படுகொலை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இன்று, ஒவ்வொரு இடத்திலும், குற்ற நடவடிக்கைகள் சாத்தியமே என்பதைப் போல உள்ளது. அது சதாம் உசேன் அல்லது கடாபி கொல்லப்பட்டதைப் போன்றது,” என்பதையும் லோரோன்ட் சேர்த்துக் கொண்டார், நேட்டோ போர்களுக்குப் பின்னர் ஈராக் மற்றும் லிபியாவின் ஆட்சியாளர்களான சதாம் உசேனும் கடாபியும் அவர்களின் நாடுகளிலேயே ஏகாதிபத்திய ஆதரவிலான சக்திகளால் படுகொலை செய்யப்பட்டார்கள். “அவர்கள் எண்ணெய் மற்றும் பணத்திற்காக கொல்லப்பட்டார்கள்,” என்று லோரோன்ட் தெரிவித்தார்.
ஈரானிய நெருக்கடிக்கு மத்தியில் மற்றும் மக்ரோன் அவர் வெட்டுக்களைத் திணிக்க நகர்ந்து வருகையில் அதிகரித்து வரும் போர் மற்றும் ஒடுக்குமுறையைப் பல போராட்டக்காரர்களும் சுட்டிக்காட்டினர். ஒரு பிரெஞ்சு ஆசிரியையான சோபி கூறினார், பொலிஸ் வன்முறை "சகித்துக் கொள்ளவியலாதளவுக்கு, இன்னும் மோசமாக, ஒரு நிரந்தர நிகழ்வாக ஆகி வருகிறது. ஊடகங்களை குறித்து என்னுடன் பேசவராதீர்கள். புத்திஜீவிகள் அதற்கு எதிராக பேச வேண்டும். அவர்கள் அனைவருமே இந்த பிரச்சினை மீது குறிப்பிடத்தக்க அளவில் மவுனமாக உள்ளனர். பொலிஸ் வன்முறை கண்டித்தக்கதாக உள்ளது, மேலும் அவர்களால் விதிவிலக்கீட்டுரிமையுடன் நடந்து கொள்ள முடிகிறது என்பது இன்னும் மோசமானது. கடந்த வியாழக்கிழமை போராட்டங்களின் போது என்ன நடந்ததோ அது பயங்கரமானது, அவர்கள் ஏறக்குறைய நேருக்கு நேராக ரப்பர் தோட்டாகளைப் பயன்படுத்தி சுட்டார்கள்.”
ஈரான் மற்றும் மத்திய கிழக்கு மீதான தாக்குதல்கள் ஐரோப்பாவில் தேசியவாதத்தை மற்றும் ஒடுக்குமுறையை நியாயப்படுத்த பயன்படுத்தப்படும்: “முதலில் அது, அப்பிராந்தியத்தில் வர்க்கப் போராட்டத்தின் குரல் வளையை நெரிப்பதற்கான ஒரு மூலோபாயம் என்றே இப்போது எங்களில் பலர் நினைக்கிறோம். அது லெபனானில் போராட்டங்களை நிறுத்துவதற்கு உதவியதை நாம் பார்த்தோம். … மக்கள் கோபத்தின் குரல் வளையை நசுக்குவதற்கு போர் என்பது முன்முயற்சிக்கப்பட்ட ஓர் உண்மை முறை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.”
போராட்டத்தை தொழிற்சங்கங்களின் கரங்களில் இருந்து எடுப்பதும், போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான ஓர் அரசியல் போராட்டத்தை ஒழுங்கமைக்கவும் மற்றும் மக்ரோன் அரசாங்கத்தை கீழிறக்குவதற்கும் சுயாதீனமான அமைப்புகளைக் கட்டமைப்பதுமே முக்கிய கேள்வி என்பதை இது அடிக்கோடிடுகிறது.