Print Version|Feedback
Billionaires’ wealth surged in 2019
2019 இல் பில்லியனர்களின் செல்வவளம் அதிகரிப்பு
Barry Grey
28 December 2019
21 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தம் முடிவுறுவதற்கு நெருக்கத்தில் உள்ள நிலையில், உலகளாவிய நிதியியல் தன்னலக்குழுவால் மனிதகுலம் சூறையாடப்படும், அதன் மிக முக்கிய அம்சம் தொய்வின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஒருபுறம் இராணுவவாதம் மற்றும் எதேச்சதிகாரவாதத்தின் வளர்ச்சி மற்றும் வர்த்தகப் போர், மறுபுறம் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான தொழிலாள வர்க்க போராட்டங்கள் என இவற்றுக்கு இடையே, பங்குச் சந்தையோ சாதனை உயரங்களை எட்டி வருகிறது மற்றும் உலகின் பில்லியனர்களின் சொத்துக்களோ தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கின்றன.
நியூ யோர்க்கின் சென்ட்ரல் பூங்காவையே மறைத்து விடும் அளவுக்கு புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன, செவ்வாய்கிழமை, ஏப்ரல் 17, 2018. (அசோசியேடெட் பிரஸ் - மார்க் லென்னிஹன்)
அமெரிக்காவின் மொத்தம் மூன்று பிரதான பங்குச்சந்தை குறியீடுகளும் புதிய சாதனைகளை எட்டிய ஒரு நாளுக்குப் பின்னர், வெள்ளியன்று, புளூம்பேர்க் உலகின் 500 மிகப் பெரிய பணக்காரர்களைக் குறித்த அதன் ஆண்டு முடிவு பட்டியலை வெளியிட்டது. செல்வந்த அடுக்குகளின் செல்வவளம், 2018 ஐ விட 25 சதவீதம் உயர்ந்து, ஒட்டுமொத்தமாக 1.2 ட்ரில்லியன் டாலர் அதிகரித்திருப்பதாக புளூம்பேர்க் பில்லியனர்களின் குறியீடு குறிப்பிட்டது. அவர்களின் மொத்த நிகர மதிப்பு இப்போது 5.9 டிரில்லியன் டாலர்களாக உள்ளது.
இந்த புள்ளிவிபரத்தை ஒரு தெளிவான விபரத்துடன் கொண்டு வருவோமேயானால், இந்த 500 நபர்களும் 2019 இன் மூன்றாம் காலாண்டின் முடிவில் அமெரிக்காவினது மொத்த உள்நாட்டு உற்பத்தியான 5.4 ட்ரில்லியன் டாலரை விடவும் அதிகமான செல்வ வளத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர்.
இந்தாண்டின் மிகப்பெரும் இலாபங்கள் பிரான்சின் பேர்னார் ஆர்னோல்ட் க்குச் சென்றன, இவர் அவரின் சொத்துக்களில் 36.5 பில்லியன் டாலரைச் சேர்த்துக் கொண்டு, அதை 100 பில்லியன் டாலர் வரம்பைக் கடந்து 105 பில்லியன் டாலருக்குக் கொண்டுச் சென்றார். அவர் 89.3 பில்லியன் டாலர் மதிப்பில் இருக்கும் வாரன் பஃபெட்டை வீழ்த்தினார், பஃபெட் நான்காம் இடத்திற்கு கீழிறங்கினார். அமசன் உடமையாளர் ஜெஃப் பெஸோஸ் விவாகரத்து தீர்வின் காரணமாக அண்மித்து 9 பில்லியன் டாலர் இழந்த போதினும் 116 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் முதல் இடத்தை தக்க வைத்திருந்தார். மைக்ரோசாப்ட் ஸ்தாபகர் பில் கேட்ஸ் இந்தாண்டு 22.7 பில்லியன் டாலர் இலாபமீட்டி, 113 பில்லியன் டாலருடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
புளூம்பேர்க் பட்டியலின் 172 அமெரிக்க பில்லியனர்கள் மொத்தம் 500 பில்லியன் டாலர்களை சேர்த்திருந்தனர், இதில் பேஸ்புக்கின் மார்க் சக்கர்பேர்க் இந்தாண்டின் மிகப்பெரிய அமெரிக்க இலாபங்களை, 27.3 பில்லியன் டாலரை பதிவு செய்து, 79.3 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் உலக தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் தன்னை நிறுத்திக் கொண்டார்.
இதுபோன்ற வானளாவிய தொகைகளின் உண்மையான முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வது சிரமமே. பொருளாதார நிபுணர் பிராங்கோ மிலனோவிக் உலகளவிய சமத்துவமின்மை (Global Inequality) என்ற அவரின் 2016 நூலில் பின்வருமாறு எழுதினார்:
“ஒரு பில்லியன் டாலர் என்பதில் உள்ளடங்கி உள்ள எண்ணிக்கை உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் அனுபவத்தில் எளிதில் புரிந்து கொள்ள முடியாதளவுக்கு அப்பாற்பட்டது… இப்போது நீங்கள் 1 மில்லியன் டாலர் அல்லது 1 பில்லியன் டாலர் வாரிசுரிமையாக கையிருப்பு பெற்றிருக்கிறீர்கள் என்றும், நீங்கள் நாளொன்றுக்கு 1,000 டாலர் செலவு செய்வதாக வைத்துக்கொண்டால், 1 மில்லியன் டாலர் உங்களின் கையிருப்பு தீர மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலம் ஆகலாம். ஆனால் 1 பில்லியன் டாலர் உங்களின் கையிருப்பு முழுமையாக தீர்ந்து போக, (அதாவது, ஹோமரின் lliad இல் இருந்து நம்மை பிரிக்கும் காலம் அளவுக்கு), 2,700 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஆகலாம்.”
இது, 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவைத் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்ட, அடிமட்டத்திலிருந்து சமூகத்தின் மேல் மட்டத்திற்குச் செல்வ வளத்தை பாரியளவில் மறுபங்கீடு செய்த தசாப்தங்கள் நீண்ட ஒரு நிகழ்வுபோக்கின் விளைவாகும். அது தனிநபரினதும் வெறும் சுய-நடவடிக்கை செயல்முறைகளின் விளைவல்ல. மாறாக, உலகெங்கிலுமான முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் கட்சிகளின் கொள்கைகள், அவை பெயரளவிலான "இடது" மற்றும் வலது ஆகட்டும், அவை தொழிலாள வர்க்கத்தை இன்னும் அதிகளவில் வறுமைப்படுத்தவும் ஆளும் உயரடுக்கைச் செல்வ செழிப்பாக்கவும் அர்ப்பணிக்கப்பட்டிருந்தன.
அமெரிக்காவில் உயர்மட்ட ஒரு சதவீதம், கடந்த இரண்டு தசாப்தங்களில் தேசிய வருவாயின் மொத்த அதிகரிப்பையும், 2008 பொறிவுக்குப் பின்னர் இருந்து தேசிய செல்வ வளத்தின் மொத்த அதிகரிப்பையும், கைப்பற்றி உள்ளது.
இந்த செல்வவள பரிவர்த்தனையின் பிரதான இயங்குமுறையாக பங்குச் சந்தை இருந்துள்ளது, அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் சர்வதேச அளவில் மத்திய வங்கிகளின் கொள்கைகள் பங்கு விலைகளை உயர்த்துவதற்கு வட்டி குறைந்த பணத்தை வழங்குவதற்காக முடுக்கி விடப்பட்டன. நிதியியல் சந்தைகள் மற்றும் செல்வந்த தட்டுக்களுக்கு வழங்கப்பட்ட இந்த பாரியளவிலான மானியத்திற்கு, சமூக செலவின வெட்டுக்கள், பாரிய வேலைநீக்கங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் மருத்துவ நலன்களின் அழிப்பு, மற்றும் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான கண்ணியமான சம்பளம் வழங்கும் வேலைகளை பகுதிநேர, தற்காலிக மற்றும் பணிப்பாதுகாப்பற்ற "தற்காலிக" பதவிகளைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட்டதன் வடிவில் தொழிலாள வர்க்கம் விலை கொடுக்க செய்யப்பட்டுள்ளது.
பெருநிறுவன வரிகளைக் குறைப்பதற்கும், பெரு வணிகங்கள் மீதான நெறிமுறைகளைத் தளர்த்துவதற்கும் மற்றும் படிப்படியாக இராணுவ வரவு-செலவுத் திட்டக்கணக்கை அதிகரிப்பதற்கும் சூளுரைத்து, 2017 ஜனவரியில் ட்ரம்ப் பதவி ஏற்றதற்குப் பின்னர் இருந்து, டோவ் ஜோன்ஸ் பங்குச் சந்தை 9,000 புள்ளிகள் அதிகரித்துள்ளது. இந்தாண்டு, ட்ரம்பும் நிதியியல் சந்தைகளும் வட்டி விகிதங்களை "வழமையாக்குவதற்கான" பெடரலின் முயற்சிகளை மாற்றுமாறு அதற்கு மிகப் பெருமளவில் அழுத்தம் அளித்தனர். மூன்று வட்டிவிகித வெட்டுக்களைச் செய்யவும் மற்றும் 2020 வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கும் எந்த திட்டங்களும் இல்லை என்று சந்தைகளுக்கு மீண்டும் மீண்டும் உறுதியளிக்கவும் பெடரல் நிர்பந்திக்கப்பட்டது.
வங்கிகளுக்கும் தனியார் முதலீட்டு நிதியங்களுக்கும் இந்த பண மழையை ஊக்குவித்ததில் ஜனநாயகக் கட்சியினர் குடியரசுக் கட்சியினரை விட எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்லர். உண்மையில், பெருநிறுவனங்களுக்கான ட்ரம்பின் வரி வெட்டுக்களில் இருந்து வணிகங்களுக்கான அனைத்து நெறிமுறைகள் மீதும் நடைமுறையளவில் அவரின் தாக்குதல்கள் வரையில், ட்ரம்பின் பொருளாதார கொள்கைக்கு முழு நிலைப்பாட்டில் இருந்து ஜனநாயக கட்சியால் ஏற்புடைய ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. முற்றிலும் “தேசிய பாதுகாப்பு" என்ற அடித்தளத்திலும் மற்றும் ரஷ்யாவை நோக்கி ட்ரம்ப் "மென்மையாக" இருப்பதாக கூறியும் நடத்தப்பட்ட பதவிநீக்க குற்ற விசாரணைக்கு மத்தியிலும் கூட, ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பினது வரவு-செலவு திட்டக்கணக்கின் பரந்த உச்ச வரம்புகளுக்கும், அவரின் சீன-விரோத அமெரிக்க-மெக்சிகோ-கனடா வர்த்தக உடன்படிக்கைக்கும் மற்றும் அவரின் சாதனையளவிலான 738 பில்லியன் டாலர் பென்டகன் போர் வரவு-செலவு திட்டக்கணக்கிற்கும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
ட்ரம்ப் அவரின் எல்லை சுவரைக் கட்டுவதற்கும் மற்றும் புலம்பெயர்ந்தோரைப் பாரியளவில் தடுப்புக்காவலில் வைப்பதற்கும் தொல்லைகளுக்கு உட்படுத்துவதற்கும் அவர் விரும்பும் மொத்த பணமும் அவருக்கு வழங்கப்பட்டதும் இதில் உள்ளடங்கும்.
ட்ரம்பின் பெருநிறுவன-ஆதரவு கொள்கைகள், ஒபாமா நிர்வாகத்தால் பின்பற்றப்பட்ட கொள்கைகளின் ஒரு நீட்சியும் விரிவுபடுத்தலுமாகும். அது வங்கிகளைப் பிணையெடுக்க வரி செலுத்துவோரின் பணத்தை ட்ரில்லியன் கணக்கில் ஒதுக்கியதுடன் பங்கு விலைகளை உயர்த்துவதற்கு நிதியியல் சந்தைகளுக்குள் மலிவு பணத்தை வெள்ளமென பாய்ச்சியது, அதேவேளையில் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறிஸ்லைர் நிறுவனங்களுக்கான அதன் பிணையெடுப்பில் புதிதாக சேர்க்கப்படும் வாகனத்துறை தொழிலாளர்களின் சம்பளங்களில் அனைத்து பிரிவிலும் 50 சதவீத வெட்டைத் திணித்தது. ஒபாமா, ஆயிரக் கணக்கான பள்ளிகள் மூடப்பட்டதையும், நூறாயிரக் கணக்கான ஆசிரியர்களின் வேலைநீக்கங்களையும் மேற்பார்வையிட்டார் மற்றும் சமூக திட்டங்களை அழித்த சிக்கன வரவு-செலவு திட்டக் கணக்கை நிறைவேற்றினார்.
ஜனநாயகக் கட்சியின் 2020 ஜனாதிபதி வேட்பாளர்களாக நிற்பவர்களில் இரண்டு பேர் பில்லியனர்கள்—டோம் ஸ்டெயெர் மற்றும் மைக்கெல் புளூம்பேர்க். இரண்டாவது நபர், 56 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் அமெரிக்காவில் ஒன்பதாவது மிகப்பெரும் பணக்காரராக உள்ளார். பெரும் செல்வந்தர்களுக்கான வெறும் அடையாள வரி உயர்வுகள் குறித்து பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் எலிசபெத் வாரென் பேசிய பேச்சுக்கள் மீது கோபமடைந்து அவர் தன்னலக்குழுக்களின் ஊதுகுழலாக இந்த போட்டியில் நுழைந்தார்.
அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் நீண்டகால பாதுகாவலர்களான சாண்டர்ஸ் மற்றும் வாரென் குறித்து செல்வந்த அடுக்கு அஞ்சவில்லை — இவர்கள் இருவருமே அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் நீண்டகால பாதுகாவலர்கள் ஆவர்.., இவர்கள் மக்களைக் கொள்ளையடிப்பதற்கான அவர்களினது உரிமையைப் பாதுகாக்கும் ஒரு வழக்குச் சொல்லான "அவர்களின் நியாயமான பங்கை செல்வந்தர்கள் கொடுக்க வேண்டும் என்ற பேச்சுக்களுடன் மூலதனத்திற்கு அவர்கள் கீழ்படிந்திருப்பதை மறைக்க முயல்கிறார்கள். பில்லியனர்கள், முதலாளித்துவத்திற்கு அதிகரித்து வரும் பாரிய எதிர்ப்பைக் கண்டு பீதியடைகிறார்கள், இந்த எதிர்ப்பு ஜனநாயக மடிப்பில் போலி "முற்போக்காளர்களுக்கான" ஆதரவில் ஒரு குழப்பம் மிக்க வெளிப்பாட்டைக் கண்டுள்ளது.
இவர்களுக்கு இடையே, புளூர்பேர்க் மற்றும் ஸ்டெயெர் தேர்தலை முற்றுமுதலாக விலைக்கு வாங்கும் ஒரு முயற்சியில் ஏற்கனவே 200 மில்லியன் டாலர்கள் அவர்களின் சொந்த பணத்தைச் செலவிட்டுள்ளனர்.
சமூக சூறையாடல் கொள்கையின் தாக்கம், ஒரு நாடு மாறி இன்னொரு நாடாக ஒரு கொடிய சமூக நெருக்கடியாக ஆழமடைந்து வருவதில் வெளிப்படுகிறது. அமெரிக்காவில், பள்ளிகள், மருத்துவமனைகள், கட்டுபடியாகின்ற வீட்டுவசதி, ஓய்வூதியங்களுக்கான இன்றியமையா தேவையும், சிதைந்த சாலைகள், பாலங்கள், போக்குவரத்து வசதி, வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துதல், குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதி, தீயணைப்பு கட்டுப்பாடு மற்றும் மின்சார வடங்களை மீளக்கட்டமைப்பதற்கான இன்றியமையா தேவையும், “பணமில்லை" என்ற உத்தியோகபூர்வ பதிலைச் சந்திக்கின்றன.
அதிலிருந்து வந்த விளைவு என்ன? தொடர்ந்து மூன்றாண்டுகளாக ஆயுள்காலம் குறைந்து வருவதும், வரலாறு காணாத போதைப்பழக்கம் மற்றும் தற்கொலை விகிதங்கள், பேரழிவுகரமான காட்டுத்தீ மற்றும் வெள்ளப்பெருக்கு, இலாபமீட்டும் சேவை நிறுவனங்களால் மின்சார வெட்டுக்களும் ஆகும். அடுத்து பணப் பைத்தியம் பிடித்த செல்வந்த ஆட்சியால் மேலாதிக்கம் செலுத்தப்படும் ஓர் அமைப்புமுறையின் கட்டமைப்புக்குள் தீர்க்க முடியாத காலநிலை மாற்ற நெருக்கடியும் உள்ளது.
ஆளும் வர்க்கத்தின் கைக்கூலி கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள், அவர்களுக்கு உதவும் முதலாளித்துவ-சார்பு தொழிற்சங்கங்கள், அதன் நீதிமன்றங்கள், பொலிஸ் மற்றும் துருப்புகள் ஆகியவற்றின் மூலமாக ஆளும் உயரடுக்கு ஆதார வளங்களைச் சமூகத்தில் இருந்து முன்பினும் அதிக ஆடம்பர சொகுசு படகுகள், தங்குமிடங்கள், தனியார் தீவுகள் மற்றும் தனிநபர் விமானங்களுக்காக திருப்பி விட்டு வரும் நிலைமைகளின் கீழ், எந்தவொரு ஒரேயொரு சமூக பிரச்சினையையும் தீர்க்க முடியாது.
எங்கே சமூக சீர்திருத்தம் சாத்தியமில்லையோ, அங்கே சமூக புரட்சி தவிர்க்கவியலாததாக ஆகிறது. இந்த முட்டுச்சந்துக்கான தீர்வை வர்க்க போராட்டத்தின் வளர்ச்சியில் காணலாம். பிரான்சின் பாரிய வேலைநிறுத்தங்களில் இருந்து அமெரிக்காவில் வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்கள் வரையில், சிலி, பொலிவியா, ஈக்வடோர் மற்றும் பிரேசிலில் போராட்டங்கள், லெபனான், ஈரான், ஈராக் மற்றும் இந்தியாவில் பாரிய வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் வரையில் உலகெங்கிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் இந்த இயக்கம், முதலாளித்துவத்திற்கு முடிவு கட்டக்கூடிய, முடிவு கட்டும் சமூக சக்தியாக வெளிப்படுகிறது.
கோர்பின்கள், சாண்டர்ஸ்கள், சிப்ராஸ்கள் மற்றும் அவர்களின் போலி-இடது ஊக்குவிப்பாளர்களை எதிர்த்து, “செல்வந்தர்களின் செல்வந்தங்களைப் பறிமுதல் செய்!” என்பதே முழக்கமாக இருக்க வேண்டும். இது தான் உற்பத்தியை முதலாளித்துவத்தின் தனிச்சொத்துடைமையில் இருந்து சமூக சொத்துடைமையாக பிரதியீடு செய்வதற்கும் மற்றும் சர்வதேச திட்டமிடலுக்கும், அதாவது உலக சோசலிச புரட்சிக்கு தொடக்க புள்ளியாகும்.