Print Version|Feedback
වෘත්තීය සමිති වැඩ වේගවත් කිරීමට එරෙහි කම්කරුවන්ගේ අරගලය පාවාදෙයි
இலங்கையில் வேலை அதிகரிப்புக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் காட்டிக் கொடுத்தன
By. M Thevarajah
19 December 2019
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) மற்றும் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்து, ஹொரன பெருந்தோட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான நுவரெலியா மாவட்டத்தின் சாமிமலையில் அமைந்துள்ள ஓல்டன், கவரவில, ஸ்டாக்ஹொம், மானெலு ஆகிய நான்கு தோட்டங்களின் தொழிலாளர்கள் டிசம்பர் 29 அன்று ஆரம்பித்த தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தை டிசம்பர் 2 அன்று நிறுத்திவிட்டன.
வேலையை விரைவுபடுத்துவதன் ஒரு பகுதியாக தோட்ட நிர்வாகம் மின் அடையாள அட்டை மற்றும் டிஜிடல் தராசை அறிமுகப்படுத்தியதை எதிர்த்தே தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தத்தில் சுமார் 5,000 தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
புதிய முறையின் கீழ், வேலை துரிதப்படுத்தப்படுவதோடு தொழிலாளர்களின் ஊதியங்கள் வெட்டப்படும். இந்த மின் அடையாள அட்டையின் மூலம் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் பரீட்சிக்கப்படுவதோடு தினசரி இலக்கான 18 கிலோ தேயிலை கொழுந்துகளை பறிக்கத் தவறினால், அவர்கள் அரை நாள் ஊதியத்தை மட்டுமே பெறுவார்கள்.
தொழிற்சங்கங்களின் அழுத்தத்தின் கீழ், ஓல்டன், கவரவில மற்றும் மாநெலு தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் வேலைநிறுத்த்தை முடித்துக்கொண்டு மீண்டும் வேலைக்குச் சென்ற போதிலும், ஸ்டாக்ஹொம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை டிசம்பர் 4 வரை தொடர்ந்திருந்தனர்.
வேலைநிறுத்தத்தை முறியடிக்க அரசாங்கம் பொலிசை அனுப்பிய போதிலும், தொழிலாளர்கள் அதனால் பீதியடையவில்லை. நவம்பர் 29 அன்று தொண்டமானின் உத்தரவுகளை மீறி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட இ.தொ.கா. தோட்டத் தலைவி பெருமாள் ராணியைக் கைது செய்ய பொலிஸ் முயன்றது. தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அது தோல்வியடைந்தது. வேலைநிறுத்தத்தை எதிர்த்ததற்காகவும், பொலிஸாருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காததற்காகவும் தொண்டமான் உள்ளிட்ட இ.தொ.கா. தலைவர்களுக்கு எதிரான போராட்டமாக, ராணி இ.தொ.கா.வில் இருந்து விலகினார்.
போராட்டம் மற்ற தோட்டங்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சத்தில், தொழிற்சங்கத் தலைவர்களும் தோட்ட உரிமையாளர்களும் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மீது பெரும் அழுத்தத்தை கொடுத்தனர். கம்பனியின் முடிவை ஏற்றுக் கொண்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு தொழிற்சங்கங்கள் தொடர்ந்து தொழிலாளர்களை நெருக்கின.
டிசம்பர் 2 அன்று ஓல்டன் தோட்டத்திற்கு வந்த NUW தேசிய அமைப்பாளரும், மற்றும் இ.தொ.கா. தலைவர்களில் ஒருவரான பாரத் அருள்சாமியும், வேலைநிறுத்தத்தை முடிக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தனர். மறுநாள் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களை தோட்ட முகாமையாளருடன் வந்து சந்தித்த NUW பிரதேச தலைவர் ஜெயபாலன், வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு கோரியதோடு, புதிய முறைமையின் கீழ் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அது பற்றி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்தார்.
ஸ்டொக்ஹொம் தோட்டத்திலுள்ள தொழிலாளர்கள், புதிய முறையானது மிகக்கொடிய சுரண்டல் முறையாகும் என்று உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் கூறினார். “இந்த முறையின் மூலம் எங்கள் வேலைச் சுமை அதிகரித்துள்ளது. தேவையான இலக்கை கொடுக்காவிட்டால், ஊதியங்களைக் குறைப்பீர்கள். அடுத்த மாதம் சம்பள பட்டியல் கிடைத்த பின்னரே எங்களுக்கு உண்மை சரியாகத் தெரியும். இந்த அநீதியே புதிய அமைப்புக்கு எதிராக போராட எம்மை கட்டாயப்படுத்தியது. ஆனால் தொழிற்சங்கங்களிலிருந்து எங்களுக்கு சரியான தலைமை கிடைக்காததாலேயே எங்கள் போராட்டம் தோல்வியடைந்தது. 1000 ரூபாய் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது இ.தொ.கா. இந்த புதிய முறைக்கு ஒப்புக் கொண்டுள்ளது. NUW மற்றும் ம.ம.மு. தொழிற்சங்கங்களும் அதை ஆதரித்துள்ளன.”
"தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்காக எந்தவொரு போராடத்தையும் செய்யவில்லை. தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை அமைத்து, தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற உங்கள் திட்டம் சரியானது. அதைப் பற்றி கலந்துரையாட நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்,” என்று ஒரு தொழிலாளி கூறினார்.
அக்டோபரில் ஓல்டன் தோட்டத்தில் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது, தொழிலாளர்கள் அதை எதிர்த்து வேலைநிறுத்தத்தில் இறங்கினர். வேலைநிறுத்தம் ஏனைய தோட்டங்களுக்கும் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும், ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) வேட்பாளர்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய அரசியல் பாதிப்புகள் குறித்தும் கவலை கொண்ட தொழிற்சங்கத் தலைவர்கள், புதிய முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு நிர்வாகத்திடம் கோரினர். NUW மற்றும் ம.ம.மு. சங்கங்கள் ஐ.தே.க. வேட்பாளர் சஜித் பிரேமதாசவையும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. வேட்பாளர் கோடாபய இராஜபக்ஷவை இ.தொ.கா.வும் ஆதரித்தன.
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் புதிய முறையை அமல்படுத்துவதை எதிர்த்து நவம்பர் 29 அன்று நான்கு தோட்டங்களிலும் உள்ள தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த முறையை இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் ஏற்றுக்கொண்டிருந்ததால், அவர் தோட்டத் தலைவரகள் ஊடாக வேலைநிறுத்தத்தை தடுத்து நிறுத்த முயன்ற போதிலும், அந்த முயற்சி தோல்வியடைந்தது.
தொழிற்சங்கங்களின் காட்டிக் கொடுப்பு சம்பந்தமாக தொழிலாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஓல்டன் தோட்டத்தில் 34 வயதான பரிமளா, இரு பிள்ளைகளின் தாயாவார். தனது போராட்டம் தோல்வியடைந்தமை குறித்து விரக்தியிலும் கோபத்திலும் அவர் பேசினார்: “எங்களுக்கு சரியான தலைமை இல்லாததால் எங்கள் போராட்டத்தை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாங்கள் புதிய முறையை ஏற்றுக்கொண்டு மீண்டும் வேலைக்குச் சென்றோம். உள்ளூர் தொழிற்சங்கத் தலைவர்கள் ஆரம்பத்தில் வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதாகக் கூறினர். ஆனால் கடைசியில் அவர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தராசுடன் தொழிலாளர்கள் முன் வந்தார்கள். இந்த முறையினால் எதிர்காலத்தில் பெரிய பிரச்சினைகளை நாங்கள் எதிர்கொள்வோம்.”
தான் எதிர்கொள்ளும் சிரமங்களை பற்றி அவர் மேலும் விவரித்தார்: “பெண் தொழிலாளர்கள் என்ற வகையில் நாங்கள் விசேட பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்க வேலை நேரத்தில் சிறிய இடைவெளி எடுத்து வீட்டிற்கு செல்ல வேண்டும். புதிய முறையின் கீழ் இது சாத்தியமில்லை. புதிய முறையைப் பயன்படுத்தி, நிர்வாகிகள் வேலை நேரத்தையும் கொழுந்து பறிக்கவேண்டிய அளவையும் தொடர்ந்து அவதானித்துக் கொண்டிருக்கின்றனர். மழை நாட்களில் கொழுந்துகள் குறைவாகவே பறிக்க முடியும்.
"அட்டைகள், பாம்புகள் மற்றும் சிறுத்தைகள் கூட இருப்பதனால் மிக அவதானத்துடன் தான் வேலை செய்ய வேண்டும். வேலை நேரத்தில் இயற்கை உபாதைகளுக்கு கழிப்பறைகள் கிடையாது. அதற்கு இரண்டு மூன்று கிலோமீட்டர் நடக்க வேண்டும்.
“டிஜிடல் அடையாள அட்டையை நாளொன்றுக்கு மூன்று முறை தராசில் பதிவு செய்ய வேண்டும். நான் ஒரு இ.தொ.கா. உறுப்பினர். சங்கத்தின் உறுப்பினர் கொடுப்பனவு மாதம் 230 ரூபா. ஆனால் எந்த பயனும் இல்லை. எனவே நான் தொழிற்சங்கத்தை விட்டு வெளியேற முடிவு செய்துவிட்டேன்.”
தொழிற்சங்கங்கள் மீது தொழிலாளர்கள் கோபப்படுவது நியாயமானது. தொழிற்சங்கங்களின் துரோகம் செய்வது, இலங்கையிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் பொதுவான சூழ்நிலை ஆகும். தொழிற்சங்கங்கள் முதலாளித்துவ மூலதனத்தின் நலன்களை ஆதரிக்கும் அமைப்புகளாகும்.
பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் உரிமைகள் பற்றி கவலைப்படவில்லை, மாறாக அவை முதலாளித்துவ தோட்டக் கம்பனிகள் மற்றும் முதலாளித்துவ அரசாங்கத்தின் நலன்களைப் பற்றியே கவலைகொள்கின்றன. இந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் அரசியல் சலுகைகளுக்காக முதலாளித்துவ அரசாங்கங்களுடன் பேரம் பேசும் அமைப்புகளாக மட்டும் அன்றி, தொழிலாளர்களின் போராட்டங்களை அடக்குவதற்காக கம்பனிகளுக்கும் முதலாளித்துவ அரசாங்கத்திற்கும் சார்பாக செயல்படும் தொழில்துறை பொலிஸ் படையும் ஆகும்.
தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை அமைத்துக்கொண்டு, பெருந்தோட்ட கம்பனிகளதும் முதலாளித்துவ அரசாங்கத்தினதும் தாக்குதல்களுக்கு எதிராக, ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே தோட்டத் தொழிலாளர்களால் தங்கள் உரிமைகளுக்காக போராட முடியும். அந்த போராட்டம் சர்வதேச சோசலிசக் கொள்கைகளைச் செயல்படுத்தக்கூடிய ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதற்கான முன்னோக்கை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.