ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

NATO bitterly divided as London summit begins

இலண்டன் உச்சி மாநாடு தொடங்குகின்ற நிலையில் நேட்டோ கடுமையாக பிளவுபட்டுள்ளது

By Alex Lantier
3 December 2019

இன்று தொடங்க இருக்கின்ற இரண்டு நாட்கள் உச்சி மாநாட்டிற்காக நேட்டோ இராணுவ கூட்டணியின் அரசு தலைவர்கள் நேற்று இலண்டன் வந்தடைந்துள்ள நிலையில், இரண்டாம் உலக போருக்குப் பின்னர் 1949 இல் நேட்டோ நிறுவப்பட்டு 70 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த கூட்டணியைக் கிழித்துக் கொண்டிருக்கும் கடுமையான பிளவுகள் முழுமையாக வெளிப்பட்டுள்ளன.

உண்மையில், இந்த இலண்டன் மாநாடு, பொறுப்பின்றி பிரதான அணுஆயுத சக்திகளை இலக்கில் வைத்து பின்புலத்தில் நடந்து வரும் பாரியளவிலான நேட்டோ இராணுவக் கட்டமைப்பை உயர்த்துக் காட்டுவதற்காகவே உத்தேசிக்கப்பட்டிருந்தது. அடுத்தாண்டு தொடக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ள Defender 2020 இராணுவ ஒத்திகை தென் சீனக் கடலுக்கு நேட்டோ கடற்படை பிரிவை அனுப்புவதை மட்டும் காணப் போவதில்லை, மாறாக அனைத்திற்கும் மேலாக ஐரோப்பாவில் ரஷ்யா உடன் போருக்குத் தயாரிப்பு செய்வதற்கான ஒரு பிரதான ஒத்திகையாகவும் இருக்கும். கிழக்கு ஐரோப்பாவில் ஒரு போருக்காக, ஐரோப்பாவில் உள்ள 20,000 துருப்புகள், 70 கப்பல்கள் மற்றும் 150 விமானங்கள் மற்றும் 10,000 தரைப்படை வாகனங்களுடன் இணைந்து கொள்ள, அமெரிக்காவை மையமாக கொண்ட 20,000 துருப்புகளை வாஷிங்டன் அட்லாண்டிக் கடந்து அனுப்ப உள்ளது.


கடந்தாண்டு புரூசெல்ஸில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் (இடது) மற்றும் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் [படம்: அசோசியேடெட் பிரஸ்/ பிராங்கோ மொரி]

நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் வெள்ளியன்று அறிவித்ததைப் போல, நேட்டோ நாடுகள் 2016 இல் இருந்து அவற்றின் இராணுவச் செலவுகளைக் கூட்டாக 160 பில்லியன் அளவுக்கு அதிகரித்துள்ளன. உழைக்கும் மக்களை இலக்கில் வைத்து சமூக செலவினக் குறைப்பைத் தீவிரப்படுத்தியதன் மூலமாக நிதி வழங்கப்பட்ட இந்த இராணுவ நிதி ஒதுக்கீட்டில் இந்த உயர்வு, ஸ்டொல்டென்பேர்க் கூற்றுப்படி, 2024 க்குள் 400 பில்லியன் டாலரை எட்டும்.

ஆனால் இந்த இராணுவக் கட்டமைப்பு, சென்ற நூற்றாண்டில் இரண்டு முறை உலக போர்களில் ஒன்றோடொன்று மோதிக் கொண்ட நேட்டோ நாடுகளுக்கு இடையிலான பிளவுகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முகங்கொடுத்து நடந்து வரும் பதவி நீக்க குற்ற விசாரணை, சிரியா மீதான துருக்கியின் படையெடுப்பு சம்பந்தமான மோதல்கள், பிரெக்ஸிட் பின்னணியில் கட்டவிழ்ந்து வரும் பிரிட்டிஷ் தேர்தல், ஐரோப்பிய கொள்கை மீது அதிகரித்து வரும் ஜேர்மன்-பிரெஞ்சு மோதல்கள் ஆகியவற்றால் நேட்டோ தடுமாறிக் கொண்டிருக்கிறது.

இலண்டனில் நேட்டோவின் இரண்டு நாள் கூட்டம் ஒரு "உச்சி மாநாடு" என்பதிலிருந்து "தலைவர்களின் கூட்டம்" என்றளவுக்குக் கீழறங்கிவிட்டது, ஒரு உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடுவதைத் தவிர்க்க ட்ரம்ப் அல்லது மற்ற அரசு தலைவர்கள் கையெழுத்திட மறுக்கக்கூடும். கடந்தாண்டு கியூபெக்கில் நடந்த ஜி7 உச்சி மாநாடு வெளிப்படையாகவே தோல்வி அடைந்தது, அங்கே ட்ரம்ப் கடைசி நிமிடத்தில் கனடா, ஜப்பான், ஜேர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகியவை உடன்பட்ட அறிக்கையில் கையெழுத்திட மறுத்தார். எவ்வாறிருப்பினும், கடந்தாண்டு நெடுகிலும், நேட்டோவுக்குள் சர்வதேச பதட்டங்கள் ஆழமாக அதிகரிக்க மட்டுமே செய்துள்ளன.

நேட்டோ "கூட்டணி நாடுகள் இலண்டன் உச்சி மாநாட்டை முன்னெச்சரிக்கை உணர்வுடன் அணுகி வருகிறார்கள்,” என்று ஜேர்மன் Marshall Fund சிந்தனைக் குழாமின் Karen Donfried குறிப்பிட்டார். “அதிகரித்து வரும் விரிசல்களை நிறுத்தவும், நல்லிணக்கத்தில் ஐக்கியப்படுத்துவதற்குமான ஒரு கூட்டமாக வெகு சிலர் தான் அனுமானிக்கிறார்கள்.” என மேலும் அவர் கூறினார்.

அதிகரித்தளவில், ட்ரம்பின் கருத்துக்கள் மட்டுந்தான் பிரதான இராஜாங்க விவகார நெருக்கடியைத் தூண்டிவிடும் கருத்துக்களாக பார்க்கப்படவில்லை. “இந்த கூட்டணிக்கு ஏதேனும் விதத்தில் சேதங்கள் இழைத்து வரும், ஜனாதிபதி ட்ரம்ப், (பிரெஞ்சு) ஜனாதிபதி (இமானுவல்) மக்ரோன் அல்லது (துருக்கிய) ஜனாதிபதி (ரெசெப் தாயிப்) எர்டோகன் ஆகியோர் இல்லாமல் நம்மால் இந்த கூட்டத்தை நடத்த முடியுமானால், அந்தளவுக்கு நேட்டோ கூட்டணி நாடுகள் இந்த அமைப்புக்கு வழங்கும் மதிப்பிற்கு ஒரு தெளிவான செய்தியாக இருக்கும்,” என்று புஷ் நிர்வாகத்தின் முன்னாள் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரியாக இருந்த Kori Schake புளூம்பேர்க் செய்திகளுக்கு தெரிவித்தார்.

இலண்டன் கூட்டத்திற்கு முன்னதாக, நேட்டோவுக்கு உள்ளே கடுமையான கருத்து வேறுபாடுகள் பகிரங்கமாக வெடித்தன. வெள்ளியன்று, பாரீசில் ஸ்டொல்டென்பேர்க் உடனான ஒரு சந்திப்புக்குப் பின்னர், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ரஷ்யாவையும் சீனாவையும் இலக்கில் வைக்கும் ஓர் ஆக்ரோஷமான கொள்கையைச் சுற்றி இக்கூட்டணி அணிதிரள்வதற்கான அமெரிக்காவின் அழைப்புகளை மீண்டும் கேள்விக்குள்ளாக்கினார்.

“இன்று நமது எதிரி ரஷ்யாவா? அல்லது சீனாவா? அவற்றை எதிரிகளாக முத்திரை குத்துவதுதான் நேட்டோவின் குறிக்கோளா? நான் அவ்வாறு நினைக்கவில்லை,” மக்ரோன் தெரிவித்தார். ரஷ்யா மற்றும் சீனா உடனான மத்திய தூர அணுஆயுத தளவாடங்கள் தடை ஒப்பந்தத்தை வாஷிங்டன் பொறுப்பின்றி புறக்கணித்ததைக் குறிப்பிட்டு, மக்ரோன் பின்வருவதையும் சேர்த்துக் கொண்டார்: “ஐரோப்பாவில் அமைதி, மத்திய தூர அணுஆயுதங்கள் தளவாடங்கள் தடை ஒப்பந்தத்திற்குப் பிந்தைய நிலைமை, ரஷ்யாவுடனான உறவு, துருக்கி விவகாரம், யார் எதிரி?”

அந்த உச்சி மாநாட்டில் இருந்து முன்னதாகவே பாரீசுக்குத் திரும்பி, அவரின் சிக்கன கொள்கைகளுக்கு எதிராக டிசம்பர் 5 தேசிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு அவர் அரசாங்கத்தின் விடையிறுப்பை மேற்பார்வையிட உள்ள மக்ரோன், “பயங்கரவாதம்" தான் நேட்டோவின் எதிரி என்று வாதிட்டதுடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுடன் நல்லுறவுக்கு அழைப்பு விடுத்தார். உள்நாட்டில் ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைகளைத் திணித்து வருவதற்கு அப்பாற்பட்டு, மக்ரோன் அரசாங்கம் தற்போது ஆபிரிக்காவில் முன்னாள் பிரெஞ்சு காலனி நாடான மாலியில் அதன் இரத்தந்தோய்ந்த நவ-காலனித்துவ போருக்கு நேட்டோவின் உதவியைக் கோரி வருகிறது.

மக்ரோனின் கருத்துக்கள், கடந்த மாதம் பிரிட்டனின் எக்னொமிஸ்ட் பத்திரிகையில் பிரசுரமான அவரின் பேட்டியை தொடர்ந்து வந்தது, அதில் அவர் நேட்டோவின் நிலைக்குந்தன்மையைக் கேள்விக்குட்படுத்தி இருந்தார். நேட்டோ "மூளைச்சாவு" அடைந்து விட்டதாக உதறித் தள்ளி, அவர் ரஷ்யாவுக்கு எதிரான ஆக்ரோஷமான அமெரிக்க கொள்கைகளை "அரசுரீதியான, அரசியல்ரீதியான மற்றும் வரலாற்றுரீதியான விஷமப்பிரச்சாரம்,” என்று விமர்சித்ததுடன், சிரியாவில் அமெரிக்க ஆதரவிலான குர்திஷ் போராளிகள் குழுக்களை இலக்கில் வைத்துள்ள துருக்கியின் படையெடுப்பு, சிரியாவின் பிரதான கூட்டாளியான ரஷ்யாவுடன் ஒட்டுமொத்த நேட்டோ கூட்டணிக்கும் மற்றும் துருக்கிக்கும் இடையே ஒரு மோதல் அபாயத்தை ஏற்படுத்துவதாகவும் விமர்சித்தார். வாஷிங்டனிலிருந்து சுதந்திரமான ஒரு வெளியுறவு மற்றும் இராணுவ கொள்கையை அபிவிருத்தி செய்யுமாறு அவர் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவுக்கு அழைப்பு விடுத்தார்.

இது ஐரோப்பாவின் முன்னணி ஏகாதிபத்திய சக்தியான பேர்லினில் இருந்து விமர்சனங்களை தூண்டியது, அங்கே அதிகாரிகளும் ஊடகங்களும் —குறைந்தபட்சம் தற்போதைக்காவது— நேட்டோவினது கவசத்தின் கீழ் ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவை மீளஇராணுவமயப்படுத்த அழைப்பு விடுத்தன. அவர்கள் கிழக்கு ஐரோப்பிய ஆட்சிகளை கோபமூட்டுவதற்காக மக்ரோனின் அதிக ரஷ்ய-சார்பு நிலைப்பாட்டை விமர்சித்தனர்.

“சீர்குலைக்கும் அரசியலுக்கான உங்கள் விருப்பம் எனக்கு புரிகிறது,” என்று பேர்லின் சுவர் தகர்க்கப்பட்டதன் 30 ஆம் நினைவாண்டு நிகழ்வில் கடந்த மாதம் அவர்கள் சந்தித்த போது மேர்க்கெல் மக்ரோனிடம் தெரிவித்தார். “ஆனால் உடைந்த சிதறல்களை ஒன்று சேர்ப்பதில் நான் சோர்ந்து விட்டேன். நாம் ஒன்று சேர்ந்து அமர்ந்து ஒரு கோப்பை தேனீர் அருந்த வேண்டும் என்பதற்காக, நீங்கள் உடைக்கும் கோப்பைகளை ஒன்று சேர்க்க, மீண்டும் மீண்டும், நான் பசை தடவ வேண்டியுள்ளது” என்றார்.

கடந்த நாட்களில், மக்ரோன் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகனிடமும் அவமானப்பட்டார், அவர் வெள்ளிக்கிழமை மக்ரோனுக்குக் கூறினார்: “மீண்டும் நான் உங்களுக்கு நேட்டோவில் கூறுவேன், முதலில் நீங்கள் உங்கள் மூளைச் சாவைப் பரிசோதியுங்கள்.” துருக்கி நேட்டோவில் தங்கியிருக்க வேண்டுமா அல்லது வெளியேற்றப்பட வேண்டுமா என்பதை விவாதிப்பது மக்ரோன் வசமில்லை என்றும் எர்டோகன் தெரிவித்தார். துருக்கிய அரசாங்கம் ஒரு பயங்கரவாத குழுவாக பட்டியலிட்டுள்ள சிரிய குர்திஷ் மக்கள் பாதுகாப்பு பிரிவு (YPG) போராளிகள் குழுக்களை ஆதரிப்பதற்காக எர்டோகன் மக்ரோனை விமர்சித்தார்.

நேட்டோ கூட்டாக YPG ஐ ஒரு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடவில்லை என்றால், போலாந்து மற்றும் பால்டிக் அரசுகளில் இருந்து ரஷ்யாவை இலக்கு வைப்பதற்கான நேட்டோ இராணுவ திட்டங்களை வீட்டோ தடுப்பதிகாரம் கொண்டு தடுக்கவும் எர்டோகன் அச்சுறுத்தினார்.

நேட்டோவிடம் இருந்து ஒரு பொதுவான எதிரியை இழக்கச் செய்த 1991 ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் சோவியத் ஒன்றிய கலைப்புக்கு அண்மித்து 30 ஆண்டுக்குப் பின்னர், மூலோபாய மற்றும் பொருளாதார நலன்கள் மீது ஆழமாக-வேரூன்றிய மோதல்கள் பிரதான நேட்டோ அதிகாரங்களைச் சின்னாபின்னமாக கிழித்துக் கொண்டிருக்கின்றன என்பது முன்பினும் அதிகமாகவே தெளிவாகிறது. சிரியாவில் அவர்களின் எட்டாண்டு கால பினாமி போர் மற்றும் மத்திய கிழக்கு எங்கிலுமான போர்களில் அவர்களின் தோல்வியை முகங்கொடுத்துள்ள நேட்டோ அதிகாரங்கள் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொறுப்பற்ற தீவிரப்பாட்டைத் தயாரித்து கொண்டிருக்கின்றன. இந்த பாதை, உள்நாட்டில் உழைக்கும் மக்களிடம் இருந்து வரும் அதிகரித்த எதிர்ப்பையும், மற்றும் அவர்களுக்கு மத்தியிலேயே அதிகரித்து வரும் பிளவுகளையும் கையாள்வதற்கான ஒரு முயற்சியில் சென்று கொண்டிருக்கிறது.

குறிப்பாக, ட்ரம்பைக் குற்ற விசாரணைக்கு உட்படுத்தி பதவி நீக்குவதற்காகவும் மற்றும் அவரை ரஷ்ய-சார்பு தேசத்துரோகி என்று குற்றஞ்சாட்டுவதற்காகவும் ஜனநாயகக் கட்சியினது பிரச்சாரத்திற்கு கீழமைந்துள்ள அமெரிக்க ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கை மீதான தந்திரோபாய பிளவுகள், ஒட்டுமொத்த நேட்டோ கூட்டணிக்கு உள்ளேயும் நிலவும் வெடிப்பார்ந்த மோதல்களுடன் நெருக்கமாக பிணைந்துள்ளன.

வாஷிங்டன் தவிர்த்து, மேர்க்கெல், மக்ரோன், புட்டின் மற்றும் உக்ரேனிய ஜனாதிபதி விளாடிமீர் ஜெலென்ஸ்கியும் டிசம்பர் 8 இல் பாரீசில் ஓர் உடன்படிக்கையைப் பேரம்பேசுவதற்காக சந்திக்க உள்ள நிலையில், இந்த பதவி நீக்க குற்ற விசாரணை நெருக்கடியானது அஜாக்கிரதையாக உக்ரேன் மீது ஐரோப்பிய சக்திகளின் கரங்களைப் பலப்படுத்தி விடக்கூடும் என்று வாஷிங்டன் போஸ்ட் எச்சரித்தது.

அதன் தலையங்கத்தில் போஸ்ட் எழுதியது: “கடந்த இரண்டு ஆண்டுகளில் (உக்ரேன் உடனான) உறவு மீது நடைமுறையளவில் செயல்பட்ட ஒவ்வொரு மூத்த அதிகாரியும் இராஜினாமா செய்துள்ளனர் அல்லது இந்த பதவி நீக்க குற்றவிசாரணையில் சாட்சியம் அளித்துள்ளனர் மற்றும் ஜனாதிபதியால் கண்டிக்கப்பட்டுள்ளனர். … இவை அனைத்தும் குறிப்பிடத்தக்க வகையில் திரு. ஜெலென்ஸ்கியின் நிலைப்பாட்டைப் பலவீனப்படுத்துகிறது, அதுவும் குறிப்பாக அவர் திரு. புட்டின், ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் உடனான சந்திப்பைச் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில். ரஷ்யா உடனான ஐரோப்பிய உறவுகளைச் சீர்படுத்த ஓர் உடன்படிக்கை அவர்களை அனுமதிக்கும் என்பதால், கடைசி இருவரும் ரஷ்ய ஆட்சியாளருக்கு விட்டுக் கொடுப்புகளைச் செய்ய உக்ரேனை வளையச் செய்யக்கூடும்.”

அட்லாண்டிக் கூட்டணிக்கு ஆதரவாக ஐரோப்பிய ஏகாதிபத்திய மூலோபாயவாதிகளிடையே கூட நேட்டோ மீது அதிகரித்து வரும் அவநம்பிக்கை, நேற்று Le Monde இல் பிரான்சின் மூலோபாய ஆராய்ச்சி அமைப்பான சிந்தனைக் குழாமின் புருனோ டேர்ட்ரைஸ் இன் ஒரு கட்டுரையில் வெளிப்பட்டது.

டேர்ட்ரைஸ் தெரிவித்தார், “2049 இல் நேட்டோ அதன் 100 வது பிறந்த நாளைக் கொண்டாடும் என்பது முற்றிலும் சாத்தியமே. ஆனால் இந்த இலண்டன் உச்சி மாநாடு கூட்டணி நாடுகளுக்கு இடையே முன்னொருபோதும் இல்லாதளவில் சர்ச்சைகளை அவிழ்த்து விட திரும்புமேயானால், அது நேட்டோவினது முடிவின் தொடக்கமாக வரலாறில் கீழ் நோக்கி சென்று விடும்.”

நேட்டோ மூளைச் சாவு அடைந்து விட்டது என்ற மக்ரோனின் அறிக்கையை அவர் விமர்சித்த போதினும், டேர்ட்ரைஸ் எழுதினார்: “இன்றியமையாதரீதியில் பிரான்ஸ் தேர்ந்தெடுத்துள்ள பாதை சரியானதே. ஐரோப்பிய திறன்களின் அபிவிருத்தி இருதரப்புக்கும் வெற்றி மூலோபாயமாகும், அது நேட்டோவை மீளப் பலப்படுத்துகிறது என்பதுடன் அது பொறிந்தாலும் ஒரு பாதுகாப்பாக சேவைசெய்யும். அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களுக்கு எதிராகவும் மற்றும் நேட்டோ சீனாவுக்கு எதிராகவும் கூட ஆழமாக ஈடுபட வேண்டுமென விரும்புபவர்களுக்கு எதிராகவும் நம்மை பாதுகாத்து கொள்ள நமக்கு எல்லா காரணங்களும் உள்ளன.”