ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The fight against communal reaction in India is the fight for socialism

இந்தியாவில் வகுப்புவாத பிற்போக்குத்தனத்திற்கு எதிரான போராட்டம் என்பது சோசலிசத்திற்கான போராட்டமாகும்

Keith Jones
21 December 2019

நரேந்திர மோடி அரசாங்கத்தின் பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) இந்து மேலாதிக்க நோக்கம் கொண்ட அதன் அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை (CAA) டிசம்பர் 12 இல் சட்டமாக நிறைவேற்றியதில் இருந்து, இந்தியா அதிகரித்து வரும் பாரிய வெகுஜன போராட்டங்களின் ஓர் அலையால் சூழப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் மூலம் இந்திய சுதந்திர வரலாற்றில் முதல்முறையாக மதத்தை வரையறையாக கொண்டு குடியுரிமை தீர்மானிக்கப்பட உள்ளது. இது, பிஜேபி மற்றும் அதன் நிழலுலக பாசிசவாத சித்தாந்த அறிவுரையாளர் RSS இன் வெளிப்படையான முக்கிய இலக்கை நடைமுறைப்படுத்துவதை நோக்கிய ஒரு முக்கிய படியாகும். அதாவது, இந்தியாவை ஓர் இந்து ராஷ்டிரமாக அல்லது அரசாக மாற்றுவதும், அதில் முஸ்லீம் சிறுபான்மையினர் இந்து மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் மட்டுமே அவர்கள் "சகித்துக் கொள்ளப்படுவர்.”


டிசம்பர் 20, 2019, வெள்ளிக்கிழமை, இந்தியாவின் நல்பாரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தின் போது இந்தியர்கள் கோஷங்களை முழங்குகின்றனர் (அசோசியேடெட் பிரஸ்/ அனுபம் நாத்)

முஸ்லீம் மாணவர்களும் இளைஞர்களும் CAA-எதிர்ப்பு போராட்டங்களின் முன்னணியில் நிற்கின்றனர் என்றாலும், இந்த போராட்டங்கள் மத-வகுப்புவாதம் சார்ந்த, இனம் மற்றும் ஜாதி சார்ந்த பிளவுகளைக் கடந்து, இந்தியாவின் அனைத்து பாகங்களையும் சூழ்ந்துள்ளன.

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டங்கள், அமெரிக்காவில் இருந்து ஐரோப்பா, ஆசிய மற்றும் ஆபிரிக்கா வரையில் நீண்ட வர்க்க போராட்டத்தின் ஓர் உலகளாவிய மேலெழுச்சியின் பாகமாக இந்தியா மற்றும் இலங்கையின் வேலைநிறுத்த அலையைப் பின்தொடர்ந்து வருகிறது.

அதிர்ச்சியடைந்த பிஜேபி அரசாங்கம் CAA இக்கு எதிரான போராட்டங்களை பாரிய ஒடுக்குமுறையைக் கொண்டு விடையிறுத்துள்ளது. வடஇந்தியாவில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு படைகளுடன் நடந்த மோதல்களில் குறைந்தபட்சம் ஆறு பேர் கொல்லப்பட்டனர். உத்தர பிரதேசம் (மக்கள்தொகை 230 மில்லியன்), கர்நாடகா (65 மில்லியன்) மற்றும் தேசிய தலைநகர் டெல்லியின் பல பாகங்கள் உள்ளடங்கலாக நாட்டின் பெரும் பகுதிகளில், அரசாங்கம் குற்றவியல் வரையறை சட்டம் பிரிவு 144 ஐ அமுலாக்கி, நான்கு நபர்களுக்கு அதிகமானவர்கள் ஒன்று கூடுவதைச் சட்டவிரோதமாக ஆக்கி உள்ளது. பத்து மில்லியன் கணக்கானவர்களுக்கு இணையமும், சில இடங்களில், கைத்தொலைபேசி சேவையே கூட துண்டிக்கப்பட்டுள்ளது.

CAA இன் கீழ், 2015 க்கு முன்னர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களதேஷில் இருந்து புலம்பெயர்ந்த, முஸ்லீம் அல்லாத அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளன. இது இன்னும் அதிக வஞ்சகத்தனமான வகுப்புவாத திட்டத்திற்கு ஓர் முன்னேற்பாடாக உள்ளது: அதுவாவது, இந்தியாவின் 1.3 பில்லியன் மக்கள் அனைவரும் அவர்கள் இந்திய குடியுரிமைக்கு உரியவர்கள் என்பதை அதிகாரிகளுக்குத் திருப்திகரமாக நிரூபிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

பிஜேபி இன் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (NRC) ஒரே நோக்கம் முஸ்லீம்களை அச்சுறுத்துவது, அலைக்கழிப்பது மற்றும் பழிவாங்குவது தான் என்பதை CAA இன் பத்திகள் தெளிவுபடுத்துகின்றன. அதனால் அவர்கள் மட்டும், “நாடற்றவர்களாக" அறிவிக்கப்படும் அச்சுறுத்தலின் கீழ் இருப்பார்கள், அவ்விதத்தில் அவர்கள் அனைத்து குடியுரிமைகளையும் இழப்பதுடன் தடுப்புக் காவல் மற்றும் நாடுகடத்தலுக்கும் உள்ளாவார்கள்.

CAA மற்றும் NRC ஆகியவை பிஜேபி அரசாங்கம் நீண்டகாலமாக தொடர்ச்சியாக நடத்தி வரும் வகுப்புவாத ஆத்திரமூட்டல்களில் சமீபத்தியது மட்டுமே ஆகும்.

ஆகஸ்ட் 5 இல், அது இந்தியாவின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமான ஜம்மு & காஷ்மீரின் சிறப்பு அரை-சுயாட்சி அந்தஸ்தைச் சட்டவிரோதமாக பறித்து, அப்பகுதியை நிரந்தர மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் உட்படுத்தியது. இந்த அரசியலமைப்பு ஆட்சிக்கவிழ்ப்பு சதியானது, பத்தாயிரக் கணக்கான கூடுதல் பாதுகாப்புப் படைகளை நிலைநிறுத்தியும், ஆயிரக் கணக்கானவர்களைக் குற்றச்சாட்டின்றி கைது செய்தும், மாதக் கணக்கில் கைத்தொலைபேசி சேவை மற்றும் இணைய அணுகுதலை முடக்கியும் அமலாக்கப்பட்டுள்ளது.

மோடி அரசாங்கம் மற்றும் ஆர்எஸ்எஸ் இன் கோரிக்கைகளுக்கு வளைந்து கொடுத்து, கடந்த மாதம் உச்சி நீதிமன்றம் அயோத்தியாவில் பாப்ரி மஸ்ஜித் (மசூதி) இருந்த இடத்தில் ஓர் இந்து கோயிலைக் கட்ட தீர்ப்பளித்தது. அந்த மசூதி 1992 இல் பிஜேபி தலைமையின் தூண்டுதலின் பேரில் இந்து வெறியர்களால் இடிக்கப்பட்டது.

இந்தியாவில் முஸ்லீம் மற்றும் இந்து மதம்சார்ந்த பெருந்திரளான தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுனர்கள் இடையே ஒருகாலத்தில் "மதச்சார்பற்ற ஜனநாயக" இந்தியாவாக இருந்ததற்கு இன்று என்ன நிகழ்ந்துள்ளது என்பது தொடர்பாக கோபமும் மனக்குமுறலும் நிலவுவதுடன் அச்சட்டத்தை எதிர்ப்பதற்கான உறுதிப்பாடும் உள்ளது.

ஆனால் இதை வெல்வதற்கு அவர்கள் ஓர் சர்வதேசியவாத சோசலிச மூலோபாயத்தைக் கொண்டு ஆயுதபாணியாக வேண்டும். முதலாளித்துவ வர்க்கம் அதிதீவிர தேசியவாதம், பாசிசவாதம், மற்றும் எதேச்சதிகாரவாதத்திற்குத் திரும்புவதை, தொழிலாளர்களினது அதிகாரத்திற்கான போராட்டத்தில் முதலாளித்துவ உயரடுக்கு மற்றும் அதன் அனைத்து அரசியல் பிரதிநிதிகளுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் சுயாதீனமாக அணித்திரட்டுவதன் மூலமாக மட்டுமே வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.   

ஓர் உலகளாவிய நிகழ்வுபோக்கு

மோடி அரசாங்கமும் அதன் வகுப்புவாத தாக்குதலும் ஓர் உலகளாவிய நிகழ்வுபோக்கின் இந்திய வெளிப்பாடாகும்.

இன்னும் ஆழமடைந்து வரும் சமூக சமத்துவமின்மை, அதிகரித்து வரும் உலகளாவிய வர்க்க போராட்டம், சந்தைகள், ஆதார வளங்கள் மற்றும் புவிசார்மூலோபாய ஆதாயங்களுக்காக முதலாளித்துவ அரசுகளுக்கு இடையிலான மோதல் என இந்த நிலைமைகளின் கீழ், ஒவ்வொரு இடத்திலும் முதலாளித்துவ வர்க்கம் ஏதேச்சதிகார ஆட்சி வடிவங்களுக்கு எதிராக திரும்பி வருவதுடன், அதிவலது மற்றும் பாசிசவாத சக்திகளை விதைத்து வருகிறது.

இவ்வாறான நிலைமை, ஏகாதிபத்திய "ஜனநாயகங்களை" பொறுத்த வரையில் உண்மையாக உள்ளது மட்டுமல்லாது, இந்தியா, துருக்கி அல்லது பிரேசில் போன்ற காலங்கடந்து முதலாளித்துவ வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் அதுபோலவே உள்ளது.

அமெரிக்காவில், இராணுவம் மற்றும் பொலிஸிற்கு அழைப்புவிட்டும், சோசலிசம் மீது வெறித்தனமாக கண்டனங்களைப் பொழிந்தும், ட்ரம்ப், ஜனநாயக உரிமைகள் மீது ஒரு மிகப்பெரும் தாக்குதலை நடத்தி வருவதுடன், ஒரு பாசிசவாத இயக்கத்தை வளர்த்தெடுக்க முயன்று வருகிறார்.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் விச்சி ஆட்சியின் நாஜி ஒத்துழைப்பாளர் மார்ஷல் பெத்தானுக்கு புத்துயிரூட்ட நகர்ந்துள்ளார் மற்றும் பாரிய சமூக வெட்டுக்களைத் திணிக்கவும் ஆக்ரோஷமான பிரெஞ்சு இராணுவவாதத்தை மீட்டுயிர்பிக்கவும் சமூக எதிர்ப்பை தொடர்ந்து வன்முறை மூலம் ஒடுக்க உத்தரவிட்டுள்ளார். ஜேர்மனியில், உளவுத்துறை முகமைகளும் ஆளும் உயரடுக்கும் நவ-நாஜி AfD கட்சியை ஜேர்மன் நாடாளுமன்றத்தில் (Reichstag) உத்தியோகபூர்வ எதிர்கட்சியாக ஆக்கி, அதை ஊக்குவிக்கின்றன.

உலக அரங்கில் இந்திய பெருவணிகங்களின் சூறையாடும் நலன்களை இன்னும் அதிக ஆக்ரோஷமாக முன்னெடுக்கவும் மற்றும் சமூகரீதியில் நாசகரமான முதலீட்டாளர்-சார்பு கொள்கைகள் மூலமாக பலவந்தப்படுத்தவும் இந்திய பெருவணிகங்களால் 2014 இல் மோடி அதிகாரத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.

பிஜேபி இன் இரண்டாவது பதவி காலத்தின் இந்த முதல் ஆறு மாதங்களில், அது ஒரே நேரத்தில் இந்து மேலாதிக்க வலது திட்டநிரலை நடைமுறைப்படுத்தும் மற்றும் நவ-தாராளவாத சீர்திருத்தத்தைத் திணிக்கும் அதன் முனைவைத் தீவிரப்படுத்தி உள்ளது, தனியார்மயமாக்கல் மற்றும் பெருவணிகங்களுக்கான பாரிய வரி வெட்டுக்களின் ஒரு புதிய அலையும் இதில் உள்ளடங்கும்.

பெரிதும் வீண்பெருமை பீற்றப்படும் "வளர்ந்து வரும்" முதலாளித்துவ இந்தியா ஒரு சிறு தீப்பொறியில் பற்றி எரியக்கூடிய ஒரு சமூக வெடி உலையாக உள்ளது என்பது குறித்து மோடிக்கும் அவரின் தலைமை அரசியல் கையாளான உள்துறை அமைச்சர் அமீத் ஷாவுக்கும் துல்லியமாக நன்கு தெரியும். அவர்கள், அதிகரிதளவில் போர்குணத்துடன் எதிர்க்கும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு அதிரடி துருப்புகளாக அவர்களின் இந்து பாசிசவாத அடித்தளத்தை அணித்திரட்டும் நோக்கிலும், பேராபத்தான சமூக சமத்துவமின்மை மற்றும் வேகமாக சீரழிந்து வரும் பொருளாதாரத்தால் உண்டான சமூக பதட்டங்களைப் பிற்போக்குத்தனம் மற்றும் போர்நாடும் வெளியுறவு கொள்கைக்குப் பின்னால் திசைத்திருப்பிவிடும் நோக்கிலும் முஸ்லீம்-விரோத வகுப்புவாதத்தைத் தூண்டிவிட்டு வருகிறார்கள்.

முதலாளித்துவ உற்பத்தியால் உலகளவில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதும் மற்றும் அதிகரித்தளவில் அதன் சர்வதேச இயல்பைக் குறித்து சுய-நனவுடன் விளங்கும் தொழிலாள வர்க்கம் தான், உலகெங்கிலும் போலவே, இந்தியாவிலும், முதலாளித்துவ பிற்போக்குத்தனம், எதேச்சதிகாரவாதம் மற்றும் போருக்கு எதிரான ஓர் எதிர்-தாக்குதலுக்கான சமூக அடித்தளமாக விளங்குகிறது. ஆனால் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து அரசியல் பிரதிநிதிகளையும் எதிர்த்தும் தன்னை அவர்களிடம் இருந்து பிரித்தும் ஒழுங்கமைத்துக் கொண்டால் மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் அளப்பரிய சமூக சக்தியை அணித்திரட்ட முடியும்.

ஒப்பீட்டளவில் சமீபம் வரையில் முதலாளித்துவ வர்க்கத்தின் தலையாய அரசாங்க கட்சியாக விளங்கிய காங்கிரஸ் கட்சியும், பிராந்திய-பேரினவாத மற்றும் ஜாதிய கட்சிகளின் ஒரு தொகுதியும் மோடி அரசாங்கத்திற்கு எதிரான பாரிய வெகுஜன எதிர்ப்பைத் தணிக்கவும் மற்றும் அரசியல்ரீதியில் சுரண்டிக் கொள்ளவும் இரண்டு விதத்திலும் முயன்று வருகின்றன.

இதில் முக்கியமாக இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஆகிய இரண்டு ஸ்ராலினிச நாடாளுமன்ற கட்சிகளும் வெறுக்கத்தக்க அபாயகரமான பாத்திரம் வகித்து வருகின்றன.

இன்று, 1992 இல் பாப்ரி மஸ்ஜித் எரிக்கப்பட்ட பின்னர் போலவே; 2002 இல் மோடி தலைமையில் குஜராத் முஸ்லீம்-விரோத படுகொலைகளுக்குப் பின்னர் போலவே; 2014 இல் முன்னொருபோதும் இல்லாத பெரும்பான்மையுடன் பிஜேபி அரசாங்கத்தின் தலைமையில் மோடி அதிகாரத்திற்கு வந்த போது, ஸ்ராலினிஸ்டுகள் "இந்து பாசிசத்திற்கு" எதிராக சீறினார்கள். ஆனால் இந்திய முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அதன் அரசு கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் தொழிலாள வர்க்கத்தைக் கட்டி வைக்கும் அவர்களினது முயற்சியின் பாகமாக மட்டுமே அதை அவர்கள் செய்கிறார்கள்.

இந்து வலதுசாரிகளை எதிர்த்து போராடுகிறோம் என்ற பெயரில், ஸ்ராலினிசவாதிகள் திட்டமிட்டு வர்க்க போராட்டத்தை ஒடுக்கி உள்ளதுடன் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் நவ-தாராளவாத திட்டநிரலை நடைமுறைப்படுத்த உதவினர். இது, அடுத்தடுத்து வந்த வலதுசாரி, அமெரிக்க-சார்பு அரசாங்கங்களை, இதில் பெரும்பாலானவை 1989 மற்றும் 2008 இக்கு இடையே காங்கிரஸ் தலைமையிலானவை, அதிகாரத்திற்குக் கொண்டு வருவதிலும் மற்றும் அது கலைந்து விடாமல் தாங்கிப் பிடிப்பதிலும் அவர்கள் வகித்த பாத்திரத்தால் எடுத்துக்காட்டப்படுகிறது. அனைத்திற்கும் மேலாக, அவர்கள் பதவி வகித்துள்ள மாநிலங்களான மேற்கு வங்காளம், கேரளா மற்றும் திரிபுராவில் ஸ்ராலினிசவாதிகள் அவர்களே எதை "முதலீட்டாளர் சார்பு" கொள்கைகள் என்று கூறினார்களோ அதையே அவர்கள் நடைமுறைப்படுத்தி உள்ளனர்.

முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் ஸ்தாபக இடது கட்சிகளின் போர்-சார்பு, சிக்கன நடவடிக்கைகள் சார்பு நடவடிக்கைகள் மூலம், அதிவலதின் வளர்ச்சிக்கு அவை வழி வகுத்து உதவியதைப் போலவே; ஸ்ராலினசவாதிகளும் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் ஒடுக்கியதன் மூலம் அதை செய்து, வகுப்புவாத பிற்போக்குத்தனத்தின் வளர்ச்சிக்கு அரசியல் களத்தைப் பண்படுத்தி உள்ளனர்.

இவ்விதத்தில், இந்து வலதைத் தோற்கடிப்பதே தங்களின் பிரதான நோக்கமும் வழிநடத்தும் கோட்பாடுமாகும் என்று ஸ்ராலினிசவாதிகள் வாதிட்டு மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், மோடியும் அவரின் பிஜேபி உம் முன்னொருபோதும் இல்லாத பலத்தைப் பெற்றுள்ளனர்.

இன்று, “ஜனநாயகம் மற்றும் மதசார்பின்மையை" பாதுகாக்க மீண்டுமொருமுறை பெருவணிக காங்கிரஸ் கட்சியுடன் ஒன்றுபட்டு நிற்குமாறு சிபிஐ மற்றும் சிபிஎம் அழைப்பு விடுத்து வருகின்றன. இந்து வலதுக்கு உதவுவதிலும் துணை போவதிலும் காங்கிரஸ் கட்சி இழிவார்ந்த முன்வரலாறைக் கொண்டுள்ளது என்பது பற்றி அவர்களுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. கடந்த மாதம் தான், காங்கிரஸ் கட்சி, சிபிஎம் ஆல் ஆதரிக்கப்பட்ட ஒரு நடவடிக்கையில், இந்தியாவின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான மகாராஷ்டிராவில் இந்து மேலாதிக்கவாத மற்றும் மராட்டா பேரினவாத கட்சியான, மற்றும் வெறும் சில வாரங்களுக்கு முன்னர் வரையில் பிஜேபி இன் நெருக்கமான கூட்டாளியாக விளங்கிய சிவ சேனா கூட்டணி அரசாங்கம் அதிகாரத்திற்கு வருவதற்கு அது ஒத்துழைத்தது.

வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டமும் நிரந்தரப் புரட்சியும்

மோடி ஆட்சியின் ஜனநாயக-விரோத மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்க்க உச்ச நீதிமன்றத்தையும் மற்றும் முதலாளித்துவ அரசின் ஏனைய நாடி தளர்ந்த வலதுசாரி அமைப்புகளையும் நாடுமாறு ஸ்ராலினிசவாதிகள் உழைக்கும் மக்களுக்கு வலியுறுத்துகின்றனர். யதார்த்தத்தில், உச்ச நீதிமன்றமே தசாப்தங்களாக ஒன்று மாற்றி ஒன்றாக வகுப்புவாத மற்றும் எதேச்சதிகார அத்துமீறலுக்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளது.

இந்திய குடியரசும் அதன் அமைப்புகளும் 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் தெற்காசியாவை அதிர வைத்த பாரிய ஏகாதிபத்திய-விரோத போராட்டத்தின் விளைபொருள் என்று கூறி, ஸ்ராலினிசவாதிகள் தொழிலாள வர்க்கத்தை இந்திய அரசுக்குப் பின்னால் அணிதிரட்டும் அவர்களின் முயற்சியை நியாயப்படுத்துகின்றனர்.

இதுவொரு பொய்யாகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் அதன் உள்நாட்டு முதலாளித்துவ வாடிக்கையாளர்களுக்கு இடையே ஒரு இழிந்த உடன்படிக்கை மூலமாக தெற்காசியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் புரட்சிகர வேட்கைகளை நசுக்கியதன் மீது தான் இந்தியா ஸ்தாபிக்கப்பட்டது. ஓர் ஒருங்கிணைந்த ஜனநாயக மதசார்பற்ற இந்தியா என்ற அதன் சொந்த வேலைத்திட்டத்தைக் காட்டிக்கொடுத்த இந்திய தேசிய காங்கிரஸ், தெற்காசியாவில் இருந்து வெளியேறும் பிரிட்டிஷ் காலனித்துவ பிரபுக்கள் மற்றும் முஸ்லீம் லீக்குடன் கரங்கோர்த்து, வெளிப்படையாகவே முஸ்லீம் பாகிஸ்தான் மற்றும் இந்துக்கள் மேலோங்கிய இந்தியா என்று, தெற்காசியாவில் வகுப்புவாத பிரிவினையை நடைமுறைப்படுத்தியது.

இந்திய முதலாளித்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மோகன்லால் காந்தியும் ஜவஹர்லால் நேருவும் தொழிலாள வர்க்க மேலெழுச்சி அதிகரித்து வந்த நிலைமைகளின் கீழ் பிரிட்டிஷ் காலனித்துவ முதலாளித்துவ அரசு எந்திரத்தினை தமது கரங்களில் பொறுப்பு எடுப்பது பற்றி மிகவும் கவலையுடன் இருந்தனர். அவர்கள், பிரிட்டிஷ் மற்றும் அவர்களின் இந்து முஸ்லீம் வகுப்புவாத கூட்டாளின் பிரித்தாளும் தந்திரோபாயத்தை எதிர்ப்பதற்கான ஒரே வழியான அதாவது, ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் அவர்களின் பொதுவான வர்க்க நலன்களுக்கு ஒரு அழைப்புவிடும் அடிப்படையில் தெற்காசியாவின் இந்து, முஸ்லீம், மற்றும் சீக்கிய தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களை அணிதிரட்டுவதற்கு விரோதமாகவும், இயல்பாகவே திராணியற்றும் இருந்தனர்.

பிரிவினையின் உடனடி பாதிப்பு மிகப்பெரும் வகுப்புவாத வன்முறையாக இருந்தது அதில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 20 மில்லியனுக்கு நெருக்கமாக மக்கள் அவர்களின் வீடுகளை விட்டு விரட்டப்பட்டனர். ஆனால் அதற்கும் மேலாக, அது உருவாக்கிய ஒரு பிற்போக்குத்தனமான வகுப்புவாத அரசு அமைப்புமுறை, ஏகாதிபத்தியம் அப்பிராந்தியத்தில் அதன் மேலாதிக்கத்தை தொடர்வதற்கு வழிவகையாக சேவையாற்றி உள்ளது; பிற்போக்குத்தனமான நாடுகளுக்கு இடையிலான எதிர்விரோதங்களை அதிகரித்துள்ளது, இது எண்ணற்ற போர்களுக்கு இட்டுச் சென்றுள்ளதுடன் இன்று அப்பிராந்தியத்தையே இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான அணுஆயுத மோதலைக் கொண்டு அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது; மேலும் அது வகுப்புவாதத்தை தூண்டவும் மற்றும் பெருந்திரளான மக்களைப் பிளவுபடுத்தவும் தெற்காசியாவின் பிற்போக்குத்தனமான ஆளும் உயரடுக்குகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எழுபத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்திய சுதந்திரத்துடன் உதித்த பெயரளவுக்கு மதச்சார்பற்ற மற்றும் வகுப்புவாதம் அல்லாத அரசு என்று கூறப்படும் ஒன்றின் இறுதிக் கட்டவிழ்வு, இந்திய தொழிலாளர்கள், அவர்கள் போராட்டத்தின் அச்சாணியாக, ரஷ்யாவில் 1917 அக்டோபர் புரட்சியில் எடுத்துக்காட்டப்பட்டவாறு நிரந்தர புரட்சி மூலோபாயத்தை ஏற்க வேண்டியதன் அவசரத்திற்கு, எதிர்மறையான விதத்தில், மற்றொரு எடுத்துக்காட்டாக உள்ளது. கிராமப்புற உழைப்பாளர்களின் கூட்டணியுடன் தொழிலாள வர்க்க தலைமையில் ஒரு சோசலிச புரட்சி இல்லாமல், காலங்கடந்து முதலாளித்துவ அபிவிருத்தி அடைந்த நாடுகளில், ஜனநாயக புரட்சியின் ஒரேயொரு அடிப்படையைக் கடமையைக் கூட பாதுகாக்க முடியாது.

வகுப்புவாத பிற்போக்குத்தனத்திற்கு எதிரான போராட்டமானது ஒரு சோசலிச சர்வதேசியவாத முன்னோக்கால் உயிரூட்டப்பட வேண்டும். அனைத்து குறுங்குழுவாத மற்றும் ஜாதிய நிலைப்பாடுகளையும் கடந்து இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களை ஒருங்கிணைப்பதற்கான போராட்டம் என்பது உலகெங்கிலுமான தொழிலாளர்களின் அத்தகைய போராட்டத்துடன் அவர்களின் போராட்டத்தையும் இணைப்பதற்கான போராட்டத்துடன் கரங்கோர்த்து செல்கிறது.

ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு என்பது, சமூக சமத்துவமின்மை, படுமோசமான வேலைவாய்ப்பின்மை, வாஷிங்டன் உடனான இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் இராணுவ-மூலோபாய கூட்டணி, மற்றும் அதன் பாரிய இராணுவக் கட்டமைப்பு ஆகியவற்றுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவதற்கான போராட்டத்தில் இருந்து பிரிக்கவியலாததாகும்.

இதற்கு வர்க்க போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டியது அவசியமாகும். முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அதன் அனைத்து அரசியல் பிரதிநிதிகளையும் எதிர்ப்பதில் தொழிலாள வர்க்கம் அதன் அரசியல் சுயாதீனத்தை ஏற்படுத்திக் கொண்டு, உலக முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்க தாக்குதலின் பாகமாக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஓர் அரசாங்கத்திற்கான போராட்டத்தில் கிராமப்புற ஏழைகள் மற்றும் ஒடுக்கப்படும் மக்களையும் அதன் பின்னால் அணிதிரட்ட வேண்டும்.

இந்த போராட்டத்தை முன்னெடுக்க விரும்பும் இந்தியாவின் அனைத்து தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஏனையவர்களும் உலக சோசலிச வலைத் தளத்தை மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை தொடர்பு கொள்ளுமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.