Print Version|Feedback
Germany’s budget for 2020: Billions for rearmament and war
2020 ஆம் ஆண்டிற்கான ஜேர்மனியின் வரவு-செலவுத் திட்டம்: மறுஆயுதபாணியாக்கலுக்கும் போருக்கும் பல பில்லியன் நிதி ஒதுக்கீடு
By Johannes Stern
2 December 2019
கடந்த வெள்ளிக்கிழமை, ஜேர்மன் நாடாளுமன்றம் (Bundestag), கூட்டு அரசாங்கத்தை அமைத்த கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU), கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU) மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) ஆகிய கூட்டணி கட்சிகளின் ஒட்டுமொத்த வாக்குகளுடன், அதன் 2020 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றியது.
நிதியமைச்சர் ஓலாவ் ஷொல்ஸ் (SPD) முன்வைத்த இந்த வரவு-செலவுத் திட்டத்தின் மையமாக பெரும் இராணுவ செலவின அதிகரிப்பு உள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முன்பே, 2014 மூனிச் பாதுகாப்பு மாநாட்டின் போது, ஆக்கிரோஷமான வெளியுறவு மற்றும் பெரும் வல்லரசு கொள்கையின் பக்கம் ஜேர்மனி திரும்புவது பற்றி இந்த மாபெரும் கூட்டணி அறிவித்தது. அத்தகைய கொள்கையின் தொலைதூர விளைவுகளே தற்போதைய வரவு-செலவுத் திட்டத்தில் அதிகரித்தளவில் பிரதிபலிக்கின்றன.
அடுத்த ஆண்டில் இராணுவ வரவு-செலவுத் திட்டத்திற்கு மட்டும் மொத்தம் 45.05 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். இது 2014 இன் 32.4 பில்லியன் ஒதுக்கீட்டைக் காட்டிலும் 12 பில்லியன் யூரோக்கள் கூடுதலானது. உண்மையில், இந்த அதிகரிப்பு இன்னும் அதிகமானதாகும். ஜேர்மன் செய்தி ஊடக அறிக்கையின் படி, 2020 இல் 50.25 பில்லியன் யூரோக்களை செலவிட நேட்டோ உள்நோக்கம் கொண்டிருப்பதாக ஜேர்மன் அரசாங்கம் அறிவித்துள்ளது. “நாங்கள் எங்களது சர்வதேச கடமைகளுக்கு இணக்கமாக இருக்கிறோம். நேட்டோ பாதுகாப்பு விகிதம் 1.42 சதவிகிதமாகும்,” என்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் ஷொல்ஸ் வலியுறுத்தினார்.
எதிர்வரும் ஆண்டுகளில் மேலதிக பெரும் செலவு அதிகரிப்புக்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளன. சான்சலர் அங்கேலா மேர்க்கெல் (CDU), தனது உரையில் அரசாங்க பணிகள் பற்றி சுருக்கமாக இவ்வாறு தெரிவித்தார்: “நாங்கள் இதை படிப்படியாக தொடர்வோம்: அதன்படி இது 2024 இல் 1.5 சதவிகிதமாக இருக்கும். அதாவது, 2030 களின் முற்பகுதியில் இது 2 சதவிகிதத்தை எட்டும் வகையில் எங்களது தகமைகளை அதிகரித்து கூட்டணிக்குள் செயல் தகமையை நாங்கள் மேம்படுத்த உதவும் விதமாக பாதுகாப்பு அமைச்சர் ஒரு திட்டத்தை வகுத்துள்ளார். அதனை நீங்கள் நம்பலாம், அன்பர்களே!.”
போருக்கு தயாராகும் வகையில் பாரிய மறுஆயுதமயமாக்கல் திட்டத்தை வகுப்பதே மேர்க்கெல் மற்றும் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தின் திட்டமாகும். முழுமையாக கூறுவதானால், வேல்ஸில் 2014 நேட்டோ உச்சிமாநாட்டில் பெரும் கூட்டணி ஒப்புக் கொண்டதான, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவிகித இலக்கு என்பது, வருடத்திற்கு 90 பில்லியன் யூரோக்களுக்கு அதிகமாக இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை அதிகரிப்பதாகும். இது ஒரு பிரம்மாண்டமான தொகையாகும். இந்த திட்டமிடப்பட்ட அதிக செலவினம் மட்டும், நாட்டின் சுகாதாரசேவைக்கான வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீட்டைப் போல அண்மித்து மும்மடங்காகும், இவ்வாறாக இது அடுத்த ஆண்டில் 15.35 பில்லியன் யூரோக்களாக உயர்ந்து நிற்கும்.
பாராளுமன்றத்தில், பாராளுமன்றத்தின் அனைத்து பிரிவினைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் தங்களது உரைகளில், ஜேர்மன் மக்கள் அத்தகைய பைத்தியக்காரத்தனத்தை முதலாளித்துவம் மற்றும் போருக்கு எதிரான சுயாதீனமான சோசலிச வெகுஜன இயக்கம் ஒன்றை கட்டியமைக்கப்படுவதனால் தடுக்க தவறுவார்களானால், அடுத்த சில ஆண்டுகளில் ஜேர்மன் மக்களுக்கு ஏற்படவுள்ள விளைவுகள் பற்றி அவர்கள் குறிப்பிட்டனர். தொழிலாளர்களும் இளைஞர்களும் பல வழிகளில் மறுஆயுதமயமாக்கத்திற்கு விலைகொடுப்பார்கள். அது சமூக வெட்டுக்களின் ஆழ்ந்த வடிவங்களில் புதிய ஆயுத கொள்முதலுக்கு நிதியளிப்பதாகவும், அவர்கள் புதிய ஏகாதிபத்திய போர்களுக்கு பீரங்கி தீனியாக போடப்படுவதாகவும் இருக்கும்.
பாதுகாப்பு அமைச்சர் அன்னகிரெட் கிராம்ப்-காரன்பவர் (CDU) தனது உரையில், எது பணயம் வைக்கப்படுகிறது என்பது பற்றி குழப்பத்துடன் இவ்வாறு குறிப்பிட்டார்: “உலகின் பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டால், மேலும் பெரும்பாலான சரக்குகளை கடல்வழி கொள்கலன்கள் மூலம் நாம் கொண்டு செல்வதால், இலவச கப்பல் போக்குவரத்தை நம்பியிருக்கும் நாடுகளில் ஒன்றாக நம் நாடு இருக்கும் நிலையில், இலவச கடல் போக்குவரத்து மற்றும் கடல்வழி சுதந்திரம் பற்றி பேசுவது அவசியமாகிறது. பிற நாடுகள் தங்களது சிப்பாய்களை அனுப்பி இந்த சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் என்ற நம்பிக்கை என்னிடம் இல்லை. நாம் தயாராக இருக்க வேண்டும். இந்த விவாதம் தான் மேற்கொள்ளப்பட வேண்டும்.”
கடந்த திங்கள்கிழமை, சார்லாண்டில் உள்ள ஜேர்மன் இராணுவ தளத்தில் கிராம்ப்-காரன்பவர் ஏற்கனவே, புதிய வெளிநாட்டு இராணுவப் பணிகளுக்கு அரசாங்கம் தயாராகி கொண்டிருப்பதாக அறிவித்தார். கூடுதல் நிதி ஒதுக்கீட்டினால், “நம்மால் இப்போது கூடுதல் பணிகளை மேற்கொள்ள முடியும்,” என்று அவர் விளக்கமளித்தார். வெள்ளிக்கிழமை, பள்ளி கல்வியை முடிக்கும் அனைவருக்கும் கட்டாய சேவைக்கான முன்மொழிவை அவர் அறிமுகப்படுத்தினார். உண்மையில் அவர் முன்மொழிவது என்னவென்றால், 2011 இல் இடைநிறுத்தம் செய்யப்பட்ட கட்டாய இராணுவ சேவையை அவர் மீள்அறிமுகம் செய்கிறார், அதன்மூலம் ஜேர்மன் முப்படைகளுக்கு (Bundeswehr) புதிய படையினர் நியமனங்களைப் பெற்று, புதிய போர்களைத் தொடுப்பதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை முன்னெடுப்பதாகும்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் பாராளுமன்ற அரசு செயலரான பீட்டர் ரவ்பெர் (Peter Tauber), CDU கட்சி தலைமையகத்தில் பேசுகையில் எதையும் சுற்றிவளைக்காமல், “அத்தகைய கட்டாய கடமைக்கு நான் ஆதரவாக இருக்கிறேன்,” என்று கூறினார். ஒரு “முன்னாள் கட்டாய இராணுவ பணியாளராக” பேசிய அவர், கட்டாய சேவை மேம்பட்ட சமூக கூட்டிசைவுக்கு வழிவகுக்கும் என நம்புவதாக குறிப்பிட்டார். “எங்களது சுதந்திரத்தைப் பாதுகாப்பதை ஒருசிலரிடம் விட்டுவிட முடியாது” என்பதிலும் அவர் தீர்மானமாக இருந்தார்.
பெரும் இராணுவ வல்லரசாக ஜேர்மன் பங்காற்றுவதற்கான திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் பெரும் கூட்டணியில் தான் SPD ஆரம்பத்தில் இருந்தது. வெள்ளிக்கிழமை, வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ் (SPD) தனது சொந்த உரையில், சிரியா, லிபியா, உக்ரேன், ஆப்கானிஸ்தான், யேமன் மற்றும் பிற நாடுகளில் ஜேர்மனியின் ஈடுபாடுகள் குறித்து பெருமைப்பட்டுக்கொண்டார். மேலும், அவர் இவ்வாறு விளக்கமளித்தார்: “இதை கவனிக்கும் மற்றும் உலகில் ஜேர்மனியின் பொறுப்பை பற்றி குறிப்பிடும் எவரும், நாங்கள் தற்போது கையாளும் அனைத்து நெருக்கடிகளிலும், மோதலுக்கான தீர்வை காண்பதில் ஜேர்மனி தான் இப்போது முன்னணி பங்காற்றுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உலகில் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அதுவொரு சிறந்த வழி என்றே நான் கருதுகிறேன்.”
இந்த பெரும் கூட்டணியின் மறுஆயுதமயமாக்கல் கொள்கை இப்போது, வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீட்டு (AfD) கட்சியின் கொள்கையை மிகவும் ஒத்ததாக உள்ளது என்ற நிலையில், புதிய போர் வரவு-செலவுத் திட்டத்தை AfD அரசியல்வாதிகள் பாராட்டினர். 2020 க்கான பாதுகாப்பிற்கான வரவு-செலவுத் திட்டம் சுமார் 45 பில்லியன் யூரோக்களாக அதிகரிக்கும். இது மிகவும் வரவேற்கத்தக்கது,” என்று கூறி AfD துணை தலைவர் மார்ட்டின் ஹோஹ்மான் (Martin Hohmann) மகிழ்ச்சியடைந்தார். “கனரக போக்குவரத்து ஹெலிகாஃப்டரை சேர்ப்பதும்” மற்றும் “HIL ஆலைகளிலிருந்து இராணுவத்திற்கு ஆயுதங்கள் விநியோகிக்கப்படுவது தொடர்ந்து அரசாங்கத்தின் கைகளில் இருக்கும் என்ற அமைச்சரின் அறிவிப்பும்” “அதேபோல் சாதகமானதாக” இருந்தது.
யூத விரோதம் என்று மதிக்கக்கூடிய ஒரு உரையை அவர் ஆற்றியதைத் தொடர்ந்து 2004 இல் CDU இல் இருந்து ஹோஹ்மன் வெளியேற்றப்பட்டார். வெள்ளிக்கிழமை பாராளுமன்ற விவாதத்தில், “நேட்டோவிற்கு இரண்டு சதவிகிதம் குறித்து வாக்குறுதியளித்தமைக்கு” ஆதரவளிப்பதற்கும், உள்நாட்டு இராணுவத்தை மேம்படுத்துவதற்கும், பெரும் கூட்டணியை அவர் பாராட்ட முனைந்தார். “ஜேர்மன் இராணுவத்தை உள்நாட்டில் ஈடுபடுத்துவது தொடர்பாக பாராளுமன்றத்தில் நவம்பர் 12 அன்று உங்களுடைய கருத்திற்கு பாரிய பகிரங்க ஆதரவு இருந்தது. இதேபோன்று பொலிஸ்காரர்களைப் போல சீருடையில் (இந்த கேள்வி முன்பே இங்கு எழுந்தது) நிச்சயமாக சீருடையில் இருக்கும் படையினருக்கும் இலவச இரயில் பயணத்தை அனுமதித்து உங்களது உறுதியான நடவடிக்கையாக இருந்தது.
இடதுசாரி எதிர்க்கட்சிகள் என்றழைக்கப்படுபவை, ஆளும் வர்க்கம் மூலமான வலதை நோக்கிய கூர்மையான திருப்பத்தை எதிர்க்க தவறியதோடல்லாமல், அவர்களும் அதே வழியை பின்பற்றினர். இடது கட்சி மற்றும் பசுமை கட்சியின் பிரதிநிதிகள் அவர்களது உரைகளில் பெரும் கூட்டணியை விமர்சித்த போது, அவர்களது சர்வதேச போட்டியாளர்களுக்கு எதிராக ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் நலன்களை மேம்படுத்த அரசாங்கம் போதுமானதை செயற்படுத்தவில்லை என்ற நிலைப்பாட்டிலிருந்து அவர்கள் இதை செய்கின்றனர்.
“பெரும் வல்லரசுகளான ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றிற்கு இடையே வெறும் விளையாட்டு பொருளாக இருக்கவோ அல்லது மாறவோ நாங்கள் நிச்சயமாக விரும்பவில்லை,” என்று இடது கட்சியின் வெளியுறவுக் கொள்கை செய்தியாளர் ஸ்ரெபான் லீபிச் தெரிவித்தார். “நேட்டோவின் தற்போதைய நிலையின் காரணமாக… இந்த சவாலை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டால், ஐரோப்பாவிற்காக இது என்ன செய்யும், மேலும் ஐரோப்பிய வரவு-செலவுத் திட்டத்திற்காக இது என்ன செய்யும் என்பது பற்றி இங்கு நாங்கள் தீவிரமாக விவாதிக்க வேண்டும்.” அரசாங்கத்தின் தற்போதைய வரவு-செலவுத் திட்டம், “இதுவரை நாங்கள் செய்தது போல, நேட்டோவின் கட்டமைப்பிற்குள்ளாக ஐரோப்பிய இறையாண்மையை உண்மையில் நாம் வடிவமைக்க விரும்புவோமானால் அது போதுமானது அல்ல.”
பசுமைக் கட்சி தலைவர் அன்டன் கோவ்ரைட்டர் பின்வருமாறு கோரினார்: “ஐரோப்பாவில் இன்னும் அதிகமாக நாங்கள் முதலீடு செய்ய வேண்டும், ஏனென்றால் மற்றவர்கள் சர்வதேச விதிகளை கட்டமைக்கும் போது முடிவில் நாங்கள் வெளியே அமர்ந்திருக்கக் கூடாது. பின்னர் இந்த விதிகளை ஏற்றுக்கொள்பவர்களாக மட்டுமே நாங்கள் இருப்போம். ஐரோப்பாவும் அதிக பொறுப்பேற்க வேண்டும், அதேவேளை நாங்களும் ஐரோப்பாவிற்காக அதிக பொறுப்பேற்க வேண்டும்.” ஜேர்மன், “ஐரோப்பா தமக்கு தாமே இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ள உதவ வேண்டும்.” மேலும், “டாலரை நாங்கள் குறைவாக சார்ந்திருக்கும் வகையில், யூரோ உலகளாவிய இருப்பு நாணயமாக மாற வேண்டும்,” என்றும், குறிப்பாக “சீனாவைக் கையாள்வதில்,” “ஐரோப்பாவின் சுய உறுதிப்பாட்டை செயல்படுத்த வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.