ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Mass strikes intensify ahead of national protest against French pension cuts

பிரெஞ்சு ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக தேசியப் போராட்டம் நடக்கவிருக்கையில் பாரிய வேலைநிறுத்தங்கள் தீவிரமடைகின்றன

By Alex Lantier
16 December 2019

டிசம்பர் 5 இல் தொடங்கப்பட்ட பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் பெருவாரியான மக்கள் எதிர்ப்புக்கு மத்தியிலும் ஓய்வூதிய வெட்டுக்களை முன்னெடுக்க இருப்பதாக பிரதம மந்திரி பிலிப் விடாப்பிடியாக அறிவித்த பின்னர், நாளைய பாரிய போராட்ட பேரணிகளுக்கு முன்னதாக வேலைநிறுத்தங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

வெட்டுக்களுக்கு எதிராக பிரான்ஸ் எங்கிலும் இன்று ட்ரக் ஓட்டுனர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்க உள்ளார்கள், அதேவேளையில் பிரான்சின் எட்டு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் பெரும்பாலானவை ஏற்கனவே வேலைநிறுத்தத்தில் உள்ளன அல்லது முற்றுகையிடப்பட்டுள்ளன. பிரெஞ்சு தேசிய இரயில்வே (SNCF) மற்றும் பாரீஸ் வெகுஜன போக்குவரத்து (RATP) ஏற்கனவே வேலைநிறுத்தால் முடங்கிப் போயுள்ள நிலையில், இப்போது தேசியளவில் பெட்ரோல் பற்றாக்குறைக்கான அச்சுறுத்தல் அரசாங்கம் மீது தொங்கிக் கொண்டுள்ளது. ட்ரக் ஓட்டுனர்களின் தொழிற்சங்கம் பத்திரிகைக்குக் கூறுகையில், அவற்றின் உறுப்பினர்கள் "பிரான்சின் ஒவ்வொரு பகுதியிலும் … பேரணிகள், முற்றுகைகள் அல்லது பிற நடவடிக்கைகளை" ஒழுங்கமைப்பார்கள் என்று எச்சரித்தது.

செல்வந்தர்களின் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் 6 ட்ரில்லியன் டாலர் நிதிய சொத்துக்களை மேற்பார்வையிட்டு வரும் உலகின் மிகப் பெரும் சர்வதேச முதலீட்டு நிதி நிறுவனமான பிளாக்ராக் (BlackRock) இன் அதிகாரிகளைச் சந்தித்தார் என்று கடந்த வாரம் செய்திகள் வெளியான பின்னர், அவர் மீதான கோபம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத தனியார் நிதி நிறுவன அதிகாரிகளுடனான பிரெஞ்சு ஜனாதிபதியின் மறைமுக தொடர்புகள், தற்போதைய ஓய்வூதிய முறையை அழிப்பதற்கும் மற்றும் "புள்ளிகள்" அடிப்படையிலான ஓய்வூதிய முறையைக் கொண்டு அதை பிரதியீடு செய்வதற்கும் மற்றும் தனியார் ஓய்வூதிய கணக்குகளை அதிகரிக்க மக்களை ஊக்குவிப்பதற்கான மக்ரோனின் முயற்சிகளுக்கு அடியிலுள்ள வர்க்க நலன்களை வெளிப்படுத்துகிறது.


சமூக அவசரநிலையை அறிவிக்குமாறும், பணக்காரர்கள் மீது வரி விதிக்குமாறும் அழைப்பு விடுக்கும் ஒரு பதாகை

தொழிலாள வர்க்கத்திற்கும் மக்ரோன் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு சமரசமற்ற மோதல் எழுந்துள்ளது, மக்ரோனைப் பதவியிலிருந்து கீழிறக்குவது மட்டுமே இதற்கான ஒரே முற்போக்கான தீர்வாகும். “மஞ்சள் சீருடையாளர்கள்" மற்றும் தொழிலாளர்களின் பெருவாரியாக அடுக்குகளிடையே மேலோங்கி உள்ள இந்த கோரிக்கைக்கு, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக மற்றும் பிரான்சிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் முன்பினும் பரந்த அடுக்குகளை அணித்திரட்டும் நடவடிக்கை குழுக்களைக் கொண்டு ஒழுங்கமைக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் தொழிற்சங்கங்களோ மக்ரோன் உடன் ஓர் உடன்படிக்கையை, அதுவும் ஓர் அழுகிய விட்டுக்கொடுப்பாக மட்டுமே இருக்கக்கூடிய ஒன்றை பேரம்பேசுவதற்கு முயன்று வருகின்றன என்பது தெளிவாக உள்ளது.

ஆளும் வர்க்கம் ஓய்வூதிய முறையை ஏன் "புள்ளிகள்" அடிப்படையில் கொண்டு செல்ல விரும்புகின்றன என்பதற்கான காரணங்களை முன்னாள் பிரெஞ்சு பிரதம மந்திரி பிரான்சுவா ஃபிய்யோனின் ஒரு காணொளி ஏற்கனவே வெட்டவெளிச்சமாக்கி காட்டியது. "புள்ளிகளின்" அடிப்படையில் தொழிலாளர்களுக்கு வரையறுக்கப்படாத பணத்தொகை வழங்கும் ஒரு ஓய்வூதிய முறை "எந்த அரசியல்வாதியும் வெளியிடாத ஒரு விடயத்தை அனுமதிக்கிறது. அது ஒவ்வொரு ஆண்டும் புள்ளிகளின் அளவையும் மதிப்பையும் குறைக்க அனுமதிக்கிறது, அவ்விதத்தில் ஓய்வூதியங்களின் மட்டம் குறைக்கப்படும்,” என்பதை ஃபிய்யோன் அந்த காணொளியில் ஒப்புக் கொள்கிறார்.

சுருக்கமாக கூறுவதானால், பெரும்பாலான பிரெஞ்சு மக்கள் என்ன தெரிந்து வைத்திருத்திருக்கிறார்களோ அது குறித்து அரசாங்கம் முற்றிலும் நனவுபூர்வமாக உள்ளது: அதாவது, ஓர் ஒட்டுண்ணித்தனமான நிதியியல் பிரபுத்துவத்தின் இலாபங்களை ஊக்குவிப்பதற்காக மில்லியன் கணக்கான ஓய்வு பெறும் தொழிலாளர்களை வறுமைக்குள் தள்ளுவதே மக்ரோன் அரசாங்கத்தின் கொள்கையாக உள்ளது.

மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்குத் தயாரிப்பு செய்வதை மேற்பார்வையிட்ட உயர் ஆணையர் ஜோன்-போல் டுலுவா (Jean-Paul Delevoye), பிரான்சின் காப்பீட்டுத்துறை பணியாளர்கள் பயிற்சி அமைப்பில் சுய-ஆர்வலராக பதவியில் இருப்பதை அவர் வெளியில் தெரிவிக்கவில்லை என்ற சமீபத்திய அம்பலப்படுத்தல்களால் அவர் முற்றிலும் மதிப்பிழந்துள்ளார். அவ்விதத்தில் அவர், பிரெஞ்சு மக்களுக்குச் செலுத்தப்படும் ஓய்வூதியங்களில் இருந்து பத்து பில்லியன் கணக்கான யூரோக்களை அரசு குறைப்பதால் ஆதாயமடையும் அதே நிதியியல் வட்டாரங்களுடன் அவர் கொண்டிருக்கும் தொடர்புகளை அவர் மறைத்து வந்தார்.

ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கான உயர் ஆணையர் என்பதற்காக டுலுவாவுக்கு ஆண்டுக்கு 74,526 யூரோ வழங்கப்படுகிறது. ஆனால் அவர், அவரின் இந்தப் பதவியை உயர் கல்விக்கான IGS மையத்தில் (இங்கே அவர் 78,408 யூரோ பெறுகிறார், இருப்பினும் அதற்கு பதிலாக அவரின் அரசு படிவங்களில் 40,000 யூரோ என்று அறிவித்துள்ளார்) வகிக்கும் அவரின் தலைமை பதவி மற்றும் அதனுடன் சேர்ந்த Parallax சிந்தனைக் குழாமில் தலைமை பதவியுடன் (இங்கே அவருக்கு 73,338 யூரோ வழங்கப்படுகிறது) சேர்த்து வகித்து வருகிறார். ஓர் அமைச்சர் பதவியுடன் பல அரசு பதவிகளைச் சேர்ந்து வகிப்பது என்பது பிரெஞ்சு அரசியலமைப்பு மீறலாகும், அரசியலமைப்பு சாசனம் 23, அமைச்சர்கள் "எந்தவொரு அரசு வேலையையோ அல்லது தொழில் நடவடிக்கைகளையோ" வகிப்பதைத் தடுக்கிறது.

RATP பாரீஸ் வெகுஜன போக்குவரத்து தொழிலாளர்களும் கலந்து கொண்ட சனிக்கிழமை "மஞ்சள் சீருடை" போராட்டத்தில், வேலைநிறுத்தக்காரர்கள் மக்ரோனின் கொள்கை மீது அவர்களின் வெறுப்பை வலியுறுத்தினர். “72 வயதான டுலுவா மாதத்திற்கு 20,000 யூரோ குவித்துக் கொண்டு, பின்னர் மக்களிடம் வந்து, 'சிறிய ஓய்வூதியத்திற்காக நீங்கள் நிறைய வேலை செய்யுங்கள்' என்று கூறுகிறார்," என்று தனது அவமதிப்பை பாட்ரிக் மூடிமறைக்கவில்லை.

பாட்ரிக் தொடர்ந்து கூறினார், "நான் மக்ரோனைப் பதவியிலிருந்து வெளியேற்ற விரும்புகிறேன், அவ்வளவு தான். ... மக்ரோனும் அவரைப் பதவிக்குக் கொண்டு வந்திருப்பவர்களும் பிரான்சில் என்ன செய்ய நினைக்கிறார்கள் என்பதற்கு ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றொரு எடுத்துக்காட்டாக உள்ளன. ஐரோப்பிய ஒன்றியமும், நிதி அமைச்சக தொழில் உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஊடகங்களை நடத்தும் பெருவணிகங்களும் தான் இதையெல்லாம் செய்கின்றன," என்றார்.

1968 மே-ஜூனின் புரட்சிகர சாத்தியக்கூறைக் காட்டிக் கொடுத்து ஓர் அரை-நூற்றாண்டுக்குப் பின்னர், இப்போது மக்ரோனுடன் பேரம்பேசி வரும் தொழிற்சங்கங்கள் வகிக்கும் பாத்திரத்திற்கு எதிராகவும் பாட்ரிக் எச்சரித்தார்: "நான் வரலாற்றில் இருந்து சிலவற்றை நினைவு கூரவிரும்புகிறேன். 1968 இல் இங்கே மாணவர் கலகம் நடந்தது, அதை தொடர்ந்து ஒரு பொது வேலைநிறுத்தம். பின்னர் தொழிற்சங்கங்கள் பேரம்பேசத் தொடங்கின ... இந்த அமைப்புமுறையை உயிர்பிழைக்க வைத்திருப்பது தான் தொழிற்சங்கங்கள் வகிக்கும் பாத்திரம்," என்றார்.

RATP இன் ஓட்டுனரும் "மஞ்சள் சீருடை" போராட்டக்காரருமான பிராங்க் கூறினார்: "ஒட்டுமொத்த பிரெஞ்சு மக்களையும் அச்சுறுத்துகின்ற ஓய்வூதிய வெட்டுக்கு எதிராக நாங்கள் ஒரு போரில் மற்றும் வேலைநிறுத்தத்தில் உள்ளோம். நாங்கள் அங்கே எங்களின் சொந்த நலன்களைப் பாதுகாப்பதற்காக நிற்கவில்லை என்றால், நாங்கள் 'மஞ்சள் சீருடையாளர்களை' ஆதரிக்கவும் இங்கே இருந்திருக்க மாட்டோம். ... நமது பூமியில் என்ன இருக்கிறதோ நாங்கள் இங்கே அதை பாதுகாப்பதற்காக இல்லை, மாறாக ஒவ்வொருவருக்காகவும், நமது குழந்தைகள் அனைவருக்காகவும், பிரெஞ்சு மக்களுக்காகவும் நிற்கிறோம். அதிகாரத்தில் இருப்பவர்களின் வழமையான நண்பர்களான தனியார் ஓய்வூதிய நிதிகள் மீது வெறுமனே பணம் பாய்ச்சுவதும், மற்றும் நமது நாட்டில் தசாப்தங்களாக இருந்துள்ள ஒரு முறையை அழிப்பதும் தான் இந்த சீர்திருத்தத்தின் நோக்கமாக உள்ளது."

அல்ஜீரியா மற்றும் ஈராக் போல, உலகெங்கிலுமான நாடுகளில் பாரிய போராட்டங்களின் வெடிப்பு அதிகரித்து வருவது குறித்து பிரான்ங்க் தொடர்ந்து கூறுகையில், அவர் அவரின் போராட்டத்தை ஒரு சர்வதேச போராட்டத்தின் உள்ளார்ந்த பாகமாக பார்ப்பதாக தெரிவித்தார்: "இன்று நாங்கள் வெறுமனே ஒரு ஓய்வூதிய வெட்டுக்கும் கூடுதலானதை மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்த அமைப்புமுறையையும் எதிர்த்து வருகிறோம், இதுவொரு உலகளாவிய அமைப்புமுறை என்பது எங்களுக்குத் தெரியும். பிரான்ஸ் ஒரு பாதையைத் திறந்துவிடும் என்பது எங்களுக்குத் தெரியும், அதை தான் நாங்கள் பிரான்சில் அணித்திரட்டி வருகிறோம் ஏனென்றால் பிரான்ஸால் விடயங்களை மக்களுக்கு எடுத்துக்காட்டி, அவர்கள் போராடுவதற்கு உதவ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்."

விடுமுறைகள் இழப்பு மற்றும் வேலைநிறுத்தத்தால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு மத்தியிலும் வேலைநிறுத்தக்காரர்கள் தொடர்ந்து போராடுவதற்குத் தீர்மானகரமாக இருப்பதை பிரான்ங்க் வலியுறுத்தினார்: "நாங்கள் மறியல் இடத்திலேயே கிறிஸ்துமஸ் இரவு விருந்தை ஏற்க வேண்டியிருந்தாலும் அதை ஏற்போம், ஏனென்றால் அது தான் ஒவ்வொருவரின் பெரும் ஆர்வமாக உள்ளது. நாம் வாழும் சமூகமே பணயத்தில் வைக்கப்பட்டுள்ளது. ... நாங்கள் எங்களின் விடுமுறைகளைக் கூட தியாகம் செய்ய தயாராக உள்ளோம், பெரும்பாலும் நாங்கள் எங்களின் ரயில்களில் அன்புக்குரியவர்களைப் பிரிந்து இருந்துள்ளோம். ஆகவே, இந்த அரசாங்கத்தின் கண்ணோட்டத்திற்காக அல்ல, நல்ல ஓய்வூதியங்களைப் பெறுவதற்காகவும் நம் குழந்தைகளுக்கான ஒரு நல்ல சமூகத்திற்காகவும் இந்த விடுமுறையைத் தியாகம் செய்ய வேண்டியிருந்தாலும், நாங்கள் இன்னுமொரு விடுமுறையை வேண்டுமானாலும் தியாகம் செய்வோம்," என்றார்.


இதில் எழுதப்பட்டிருப்பது: என் குழந்தைகளும் பேரக் குழந்தைகளும் அடிமைகளாக இருப்பதை நான் விரும்பவில்லை என்பதற்காக இங்கே நான் இருக்கிறேன்

அதிகாரம் தொழிலாளர்கள் வசம் இருக்க வேண்டும் என்பதில் நான் உடன்படுகிறேன் என்றவர் WSWS பத்திரிகையாளர்களுக்குத் தெரிவித்தார்: "கஜானா காலியாக உள்ளது, ஆனால் கஜானாவை யார் காலி ஆக்கியது? இது இத்தகைய ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்தவர்களால் மட்டுந்தான் நடந்தது, அவர்கள் நிறைவேற்றிய சட்டங்கள்தான் கஜானாவைக் காலியாக்கியது. ஆகவே உண்மையில் ஆட்சி அதிகாரத்தை நமது கரங்களில் எடுக்க இதுவே சரியான தருணம்," என்றார்.

இந்த தீவிரமயப்படல், தொழிற்சங்கங்கள் மக்ரோனுடன் பேரம்பேச பெரும் பிரயத்தனத்துடன் முயன்று வரும் நிலையில், தொழிலாளர்களையும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தையும் பிரிக்கும் வர்க்க இடைவெளியையும் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தொழிலாளர்கள் ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது. மக்ரோன் மற்றும் வங்கிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் தொடங்கி உள்ள அரசியல் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் முன்பினும் அதிக பகிரங்கமாகவே விரோதமாக உள்ளன, அதுவும் குறிப்பாக பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு (CFDT) அண்மித்து இரண்டு வாரங்களாக போராட்டங்களைப் புறக்கணித்த பின்னர்தான் அந்த வேலைநிறுத்தத்தில் இணைந்தது.

மக்ரோனை ஆதரிக்கும் CFDT இன் தலைவர் லோரோன் பேர்ஜியே Journal du dimanche க்கு கூறுகையில், "விடயம் எளிதானது: வரைவு சட்டத்தின் மீது CFDT மற்றொரு நிலைப்பாடு எடுக்க வேண்டும்," ஓய்வு பெறும் வயதை 62 இல் இருந்து 64 ஆக உயர்த்தி நடைமுறைப்படுத்துவதை "அரசாங்கம் திரும்ப பெற உடன்பட வேண்டியிருக்கும்." இந்த வாரம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வாக்குறுதி அளித்த அவர், வேலைநிறுத்தக்காரர்கள் "இந்த கிறிஸ்துமஸ் இல் போக்குவரத்து முறையில் எந்த முற்றுகைகளும்" ஒழுங்கமைக்க வேண்டாமென கோரினார். "செவ்வாயன்று டிசம்பர் 17 இல் CFDT போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது," ஆனால் "18, 19 மற்றும் தொடர்ச்சியான நாட்களில்" நடத்தப்படாது என்றார்.

ஸ்ராலினிச தொழிற்சங்கமான தொழிலாளர் பொது கூட்டமைப்பின் (CGT) பிலிப் மார்ட்டினேஸ் உம் அதே நிலைப்பாட்டை, பெரிதும் சற்றே வேறு விதமான தொனியில் வழங்கினார். BFM-TV இல் பேசுகையில், அவர் இந்த வெட்டுக்களைத் திரும்ப பெறுமாறு அரசாங்கத்திடம் இரந்தார்: "அரசாங்கம் அதன் திட்டங்களைத் திரும்ப பெற்றால், கிறிஸ்துமஸில் அனைத்தும் சிறப்பாக செல்லும்," என்றார். வேலைநிறுத்தக்காரர்களின் "ஏமாற்றங்கள்" என்று மக்ரோன் எதை குறிப்பிட்டாரோ அதற்கு எதிராக அவர் மக்ரோனை எச்சரித்தார்.

அடுத்தடுத்து வெற்றி பெற்று வந்த அரசாங்கங்களுடன் தசாப்தங்களாக பின்னடைவான "சீர்திருத்தங்களை" பேரம்பேசியுள்ள திவாலான தொழிற்சங்கங்களை தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள நிலையில், பேராட்டத்தை தொழிற்சங்கங்களின் கரங்களில் இருந்து வெளியில் எடுத்து, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான அவர்களின் சொந்த நடவடிக்கை குழுக்களைக் கட்டமைத்து, மக்ரோனைப் பதவியிலிருந்து கீழிறக்க போராடுவதே அவர்களுக்கு முன்னிருக்கும் பாதையாகும்.