ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Over 40 workers killed in Indian factory fire

இந்திய தொழிற்சாலை தீ விபத்தில் 40 க்கும் அதிகமான தொழிலாளர்கள் பலி

By Wasantha Rupasinghe
9 December 2019

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, புது தில்லியில் நான்கு அடுக்கு தொழிற்சாலை கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது 43 தொழிலாளர்கள் பலியாகினர். தீப் பிழம்பில் சிக்கி 50 க்கும் அதிகமான தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர், அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். இந்திய தலைநகரின் வரலாற்றில் இது இரண்டாவது மிக கொடிய தீ விபத்தாக இருந்தது.

காலை 5 மணிக்கு தீ பற்றிக் கொண்ட சமயத்தில் சுமார் 200 பேர் அங்கு தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்த படி, மீட்கப்பட்டவர்கள் RML, LNJP மற்றும் Hindu Rao மருத்துவமனைகளுக்கு ஆட்டோ ரிக்சாக்கள் அல்லது மூன்று சக்கர வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட அனைவரும் பீகார் மற்றும் உத்திரப்பிரதேசம் போன்ற வட இந்திய மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்த ஏழை தொழிலாளர்களாவர். அவர்களில் குறைந்தபட்ச வயதினராக 13 வயதினரும் அதிகபட்ச வயதினராக 51 வயதினரும் இருந்தனர்.

இறப்புக்கான முதன்மை காரணம் புகையினால் மூச்சுத் திணறியது தான் என்று மருத்துவர்கள் உறுதிசெய்தனர். சில உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவிற்கு கருகிவிட்டிருந்தன.

சுமார் 150 தீயணைப்பு படையினர் ஒரு குறுகிய சந்தின் வழியாக தீ சுவாலையை தண்ணீர் பாய்ச்சி அணைப்பதற்கும், அந்த நெரிசலான பகுதியில் பிற கட்டிடங்களுக்கும் நெருப்பு பரவி விடாமல் தடுப்பதற்கும் ஐந்து மணிநேரங்களாக போராடினர். அதில் இரண்டு தீயணைப்பு படையினர் காயமடைந்தனர். இந்த துயரமிக்க விபத்தால் உறைந்து போன மற்றும் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தங்களது அன்புக்குரியவர்களைத் தேடுவதற்காக விபத்துப் பகுதிக்கு விரைந்து வந்ததான “குழப்பம் நிறைந்த காட்சிகள்” பற்றி ஊடகங்கள் விவரித்தன.       


இந்தியா, புது தில்லியில், டிசம்பர் 8, 2019, ஞாயிற்றுக்கிழமை, தீ விபத்து ஏற்பட்ட, வாகனங்கள் நுழைய முடியாத மிகக் குறுகலான பாதையில் மின் கம்பியில் சிக்கி நிற்கும் ஒரு தீயணைப்பு வாகனம். மத்திய புது தில்லியில் நெரிசலான தானிய சந்தைப் பகுதியில் ஒரு கட்டிடத்தில் ஞாயிறன்று ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் டசின் கணக்கானோர் இறந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்தனர் (AP Photo / Manish Swarup)    

அந்த வளாகத்தில் இயங்கி வரும் கைப்பை உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஒருவரின் சகோதரரான 23 வயது மனோஜ் Indian Express செய்தியிதழுக்கு இவ்வாறு தெரிவித்தார்: “இந்த விபத்தில் எனது சகோதரன் காயமடைந்து விட்டதாக அவனது நண்பன் எனக்கு தொலைபேசியில் தெரிவித்தான். ஆனால் எந்த மருத்துவமனைக்கு அவன் கொண்டு செல்லப்பட்டான் என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை.”

LHMC மருத்துவமனையை சென்றடைந்த போது 13 வயது மொஹமத் மஹ்பூப் இறந்துவிட்டதாக Times of India செய்தியிதழ் தெரிவித்தது. மேலும், அதே தொழிற்சாலையில் வேலை செய்து வந்த அவரது 14 வயது சகோதரர் பற்றி எதையும் அறிய முடியவில்லை.

நம்பிக்கையிழந்து போன சமஸ்திபூரைச் சேர்ந்த வாஜித் அலி, “18 வயதான மொஹமத் அடமுல் என்ற எனது உறவினரின் உடலை நான் பார்த்தேன். ஆனால், எனது சகோதரர்களான சாஜித் (23 வயது) மற்றும் வாஜிர் (17 வயது) இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று Times பத்திரிகைக்கு தெரிவித்தார்.

ராணி ஜான்சி சாலையில் அனாஜ் மண்டி பகுதியில் அமைந்திருந்த அந்த கட்டிடத்தின் ஒவ்வொரு தளமும் நான்கைந்து அறைகளைக் கொண்டிருந்ததுடன், சட்டவிரோதமான உற்பத்தி நிறுவனங்களை உள்ளடக்கியிருந்தன. தரை தளத்தில் பிளாஸ்டிக் பொம்மைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது; முதல் தளத்தில் அட்டைபலகை (Cardboard) தயாரிக்கப்பட்டு வந்தது; இரண்டாவது தளத்தில் ஆடை தயாரிப்பு நிறுவனம் இருந்தது; மேலும் மூன்றாவது தளத்தில் ஜாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டதுடன், அச்சிடும் வசதிகளும் அங்கிருந்தன.

தீயணைப்பு அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணைகளின் படி, இந்த அதிகாலை தீ விபத்து மின் கசிவினால் தூண்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

தில்லி தீயணைப்பு சேவை இயக்குநர் அதுல் கார்க், கட்டிடம் மிகப் பழமையானது என்றும், தீ பாதுகாப்பு சான்றிதழ் அல்லது தீ பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் அங்கில்லை என்றும் Indian Express செய்தியிதழுக்கு தெரிவித்தார். தீயணைப்பு படையினர் ஜன்னல் கம்பிகளை வெட்டியெடுத்தே கட்டிடத்திற்குள் நுழைய வேண்டியிருந்தது.

தீ பற்றத் தொடங்கிய போது கட்டிடத்தில் தூங்கிக் கொண்டிருந்த 60 பேரில் பெரும்பாலானோர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் ஆலைத் தொழிலாளர்களாகவும் இருந்தனர் என்று கார்க் தெரிவித்தார். மேலும், விபத்துப் பகுதிக்கு முதலில் நான்கு தீயணைப்பு பிரிவுகளும் அடுத்து மற்றொரு 30 பிரிவுகளும் விரைந்தன, என்றாலும், அந்த நெரிசலான சந்து பகுதிக்குள் ஒரேயொரு பிரிவு மட்டுமே நுழைய முடிந்தது.

தேசிய பேரிடர் மீட்பு குழு (National Disaster Response Team - NDRF) கட்டிடத்திற்குள் நுழைந்து மிகுந்த அளவில் அபாயகரமான கார்பன் மோனாக்சைடு புகைகள் அங்கு பரவியிருப்பதை கண்டுபிடித்த பின்னர் ஞாயிற்றுக்கிழமை மாலை பேரழிவு பற்றிய கூடுதல் விபரங்கள் தெரியவந்தன.

NDRF இன் துணைத் தளபதி ஆதித்யா பிரதாப் சிங், கட்டிடத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது தளம் முழுவதும் “புகையால் மூழ்கடிக்கப்பட்டிருந்தது” என்றும், சட்டவிரோத உற்பத்தி பிரிவுகளில் பணியாற்றிய பெரும்பாலான தொழிலாளர்கள் தான் மூச்சுத் திணறலால் இறந்து விட்டிருந்தனர் என்றும் Trust of India பத்திரிகைக்கு தெரிவித்தார். மேலும், “ஒரேயொரு காற்றோட்ட வசதியை மட்டுமே கொண்ட அங்கிருந்த ஒரு அறையில் பெரும்பாலான தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்” என்றும் சிங் தெரிவித்தார்.

கட்டிட உரிமையாளர் ரெஹான் மற்றும் அவரது மேலாளர் ஃபுர்கன் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை பொலிசார் கைது செய்தனர். இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 304 (கொலைக்குரிய குற்றமற்ற கொலை) மற்றும் 285 (தீ அல்லது எரியக்கூடிய விடயத்தில் அலட்சியமான நடத்தை) ஆகியவற்றின் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

தில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் பேரழிவிற்குள்ளான கட்டிடத்திற்கு விரைந்துசென்று பார்வையிட்டதுடன், “குற்றவாளிகள் தப்பிக்க முடியாது” என்றும் அறிவித்தார். பேரழிவு குறித்து அமைச்சக ரீதியான விசாரணைக்கு அவர் உத்தரவிட்டதுடன், வெகுஜன கோபத்தை தணியவைப்பதற்கான ஒரு தீவிர முயற்சியாக, விபத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 1,000,000 ரூபாய் (14,000 அமெரிக்க டாலர்) இழப்பீடும், மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு 100,000 ரூபாய் இழப்பீடும் வழங்கப்படும் என அறிவித்தார்.  

மேலும், இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு 100,000 ரூபாய் இழப்பீட்டையும், பலத்த காயமுற்றவர்களுக்கு 50,000 ரூபாய் இழப்பீட்டையும் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். தீ விபத்து “மிகவும் கொடூரமானது” என்று விவரித்தும், மற்றும் “அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்தும் அக்கறையில்லாத ட்வீட்டுகளை வெளியிட்டார். 

இந்த சோக நிகழ்வு குறித்த அவர்களது அரசியல் பொறுப்பிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்கு மோடியும் தில்லி பிராந்தியத் தலைவர்களும் மேற்கொண்ட பெரும் முயற்சிகளாகவே இந்த பாசாங்குத்தனமான அறிக்கைகளும், சொற்பமான இழப்பீடுகளும் இருந்தன. பிராந்திய மற்றும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் கூட ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்தவே முயன்றனர். 

தில்லியின் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் (AAP) பாராளுமன்ற உறுப்பினரான சஞ்சா சிங், மோடியின் பாரதீய ஜனதாக் கட்சி அதிகாரத்திற்குட்பட்ட தில்லி மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பினார். அதாவது, தொழிற்சாலை சட்டவிரோதமாக இயங்கி வருவது, மேலும் அங்கு தீயணைப்பு வசதிகள் இல்லாதது பற்றி கவுன்சில் அறிந்திருந்தும் தொழிற்சாலையை ஏன் மூடவில்லை என்று சிங் கேட்டார்.

தில்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுபாஷ் சோப்ரா ஆம் ஆத்மி மற்றும் பிஜேபி கட்சிகளைக் கண்டித்து “இரண்டிற்கும் சமமான பொறுப்பு உள்ளது” என்று அறிவித்தார். சோப்ராவின் அறிக்கை, பல தசாப்தங்களாக அதிகாரத்திலிருந்த காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டை திசைதிருப்புவதற்கான வெட்கம்கெட்ட முயற்சியாக உள்ளது.

இந்த தீ விபத்திற்கு காரணமான மலிவு உழைப்பு நிலைமைகளை உருவாக்கிய ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் மற்றும் இந்திய முதலாளித்துவ வர்க்கமும்தான், இதற்கும் மற்றும் இந்தியா முழுவதிலுமான அதையொத்த பல பேரழிவுகளுக்கும் நேரடியான பொறுப்பாளிகளாவர். இந்தியாவின் மட்டுப்படுத்தப்பட்ட, ஆனால் கடுமையான தொழிலாளர் சட்டங்கள் மூலமாக “முதலீட்டாளர்களின் ஆர்வத்தை” அதிகரிப்பதற்கான தனது முயற்சிகளை மோடி அரசாங்கம் முன்னெடுக்கின்ற நிலையில், இந்த சமீபத்திய துயரம் நிகழ்ந்துள்ளது.

இந்த ஒருவருக்கொருவர் பழிசுமத்துதலும், மற்றும் “அனுதாப” அறிக்கைகளை விடுப்பதும் ஒருபுறம் இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமை தீ விபத்திற்குப் பின்னர் இந்திய தொழிலாள வர்க்கத்தின் ஆபத்தான நிலைமைகளிலும் மிருகத்தனமான சுரண்டலிலும் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

கடந்த இரண்டு தசாப்தங்களாக தில்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்துக்களின் பட்டியலில் பின்வரும் நிகழ்வுகள் அடங்கும்:

* 1997 இல், புது தில்லியில் உபஹார் திரையரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் பலியானார்கள்.  

* ஆகஸ்ட் 2009 இல்: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு அருகே நேர்ந்த தீ விபத்தால் ஏராளமான நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். அதில் எந்தவித உயிர்சேதமும் நிகழவில்லை என்றாலும், தீ கட்டிடத்தை கடுமையாக சேதப்படுத்திவிட்டிருந்தது. கற்பித்தல் பிரிவின் இரண்டாவது தளத்தில் இருந்த நுண்ணுயிரியல் துறையின் வைராலஜி பிரிவு முற்றிலும் தகர்ந்து போனது.

* நவம்பர் 2018 இல்: மத்திய தில்லியின் கரோல் பாக் பகுதியில் அமைந்திருந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன், ஒருவர் காயமடைந்தார்.

* பெப்ரவரி 2019 இல்: தில்லியின் கரோல் பாக் பகுதியிலுள்ள Arpit Palace ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டதுடன், 35 பேர் காயமடைந்தனர்.