Print Version|Feedback
Britain’s general election and the coming struggle of the working class for socialism
பிரிட்டனின் பொதுத் தேர்தலும், சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் எதிர்வரவிருக்கும் போராட்டமும்
By Chris Marsden
12 December 2019
பிரிட்டனில் இன்று நடக்கும் முன்கூட்டிய பொதுத் தேர்தல், ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் ஆளும் வர்க்கத்தின் கன்னைகள் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவம் தொடர்பாக அவற்றுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்கவியலாததால் அவசியப்படுத்தப்பட்டதாகும். ஆனால் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) இதுபற்றி சரியாக பின்வருமாறு முன்கணித்தது, “பிரெக்ஸிட் சம்பந்தமாக வஞ்சகமான பிளவுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை பொறுத்த வரையில், தீர்க்கமான பிரச்சினைகள் சமூகம் சார்ந்தவையாக உள்ளன: அதாவது வீழ்ச்சியடைந்துவரும் கூலிகள், காட்டுமிராண்டித்தனமான சுரண்டல், அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் அத்தியாவசிய சமூக சேவைகளின் அழிப்பு ஆகியவை.”
இந்த தேர்தல் "போருக்குப் பிந்தைய பிரிட்டன் வரலாற்றிலேயே சமூகரீதியிலும் அரசியல்ரீதியிலும் மிகவும் துருவமுனைப்பட்டு" இருக்கும் என்று SEP எச்சரித்தது. அது முன்ஒருபோதும் இல்லாதளவில் அருவருக்கத்தக்க போட்டியாக இருந்தது என இப்போது எண்ணற்ற விமர்சகர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். ஜனநாயகத்தின் இன்றியமையா கட்டமைப்பே உடையும் ஆபத்தில் உள்ளது என்றளவுக்கு அரசியல் பதட்டங்கள் உச்சத்தை எட்டியுள்ளன, பில்லியனர் ரோபர்ட் முர்டோச்சின் Sun பத்திரிகை "மார்க்சிச புரட்சி" இன் அச்சுறுத்தலுக்கு எதிராக சீறிக் கொண்டிருக்கிறது, டோரி ஆதரவு டெலிகிராப் நாளிதழ் "உண்மையிலேயே இந்த தேர்தல் முதலாளித்துவத்தைக் காப்பாற்றுவது சம்பந்தப்பட்டது,” என்று அறிவிக்கிறது.
அரசியல் மோதல்களின் தீவிரத்திற்கு அடித்தளத்தில் இருப்பது, உலகளாவிய வர்க்க போராட்ட வெடிப்பில் வெளிப்பாட்டைக் காண தொடங்கியுள்ள வர்க்கங்களுக்கு இடையிலான வரலாற்றுரீதியில் முன்பில்லாத சமூக துருவமுனைப்பாடு ஆகும்.
கடந்த வருடத்தில் துனீசியாவிலும் அல்ஜீர்யாவிலும் சூடானிலும் கொங்கொங்கிலும் போட்டோரிக்கோவிலும் ஹைட்டியிலும் எகிப்திலும் ஈக்குவடோரிலும் ஈராக்கிலும் லெபனானிலும் கட்டலோனியாவிலும் சில்லியிலும் மில்லியன் கணக்கானோர் தெருக்களில் அணிவகுத்ததையும் வேலைநிறுத்தங்களிலும் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது. ஆங்கிலக்கால்வாயின் இருபுறத்திலும் வெடிப்புமிக்க நிகழ்வுகளை காண்கின்றோம். ஐரோப்பாவின் மத்தியில் பிரான்சில் ஒரு பொதுத்துறை தொழிலாளரின் வேலைநிறுத்தமும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெறுகின்றன.
Chris Marsden of the Socialist Equality Party (left) and Jeremy Corbyn (right)
ஒவ்வொரு இடத்திலும் சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்புத்தான் புரட்சிகர போராட்டத்தின் ஒரு புதிய கட்டத்திற்கு உந்துசக்தியாக உள்ளது. பிரிட்டனும் வர்க்க மோதலில் சூழப்படுவதற்கு இன்னும் நிறைய நாட்கள் இல்லை என்பதை ஆளும் வர்க்கம் புரிந்து கொண்டிருப்பதால், அது தொழிலாள வர்க்கத்தை கையாள தயாரிப்பு செய்து வருகிறது.
தொழிற் கட்சி வெற்றியை எதிர்ப்பதற்காக வெகுஜன ஊடகங்களினது வெறித்தனமான பிரச்சாரத்தைக் கொண்டு மட்டுமே கூட இதை விளக்கிவிட முடியும். பொருளாதார பேரழிவு குறித்த பயங்கர எச்சரிக்கைகளுடன் சேர்ந்து, கோர்பின் மற்றும் "இடது" யூத-எதிர்ப்புவாதமாக சித்தரிக்கப்படுவதுடன், மற்றும் தலைமை யூத மதகுருவில் இருந்து கான்டர்பெர்ரியின் பேராயர், ஆயுதப் படைகள், MI5, MI6 ஆகியவற்றின் முன்னாள் தலைவர்கள் வரையில் மற்றும் கோர்பினின் சொந்த கட்சியில் உள்ள பிளேயரிச வலதுசாரி தலைமையில் இருப்பவர்களால் அரசியல்ரீதியில் தலைமைதாங்கப்படுவோரும் இந்த நீண்ட சதிக்கூட்டத்தின் பின்னணியில் உள்ளனர்.
சோசலிச சமத்துவக் கட்சி (SEP) இந்த பொதுத் தேர்தலில் அதன் சொந்த வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. வரலாறை ஆழ்ந்து ஆராய்ந்து கவனத்தில் கொண்டு அது வழங்கிய படிப்பினைகளில் வேரூன்றிய ஒரு சோசலிச சர்வதேசியவாத முன்னோக்கில் தொழிலாளர்களை நிறுத்துவதற்காக எங்களின் போராட்டம் தொழிலாளர்களுக்கானதாகும்.
நாங்கள் தொழிற் கட்சிக்கு வாக்களிக்குமாறு அழைப்புவிடுக்கவில்லை. அவ்வாறு செய்வது மீண்டும் கோர்பின் மற்றும் தொழிற் கட்சியின் மீது பிரமைகளை மீளப்பலப்படுத்துவதாகவே இருக்கும், அவை அம்பலப்படுத்தப்பட்டு சிதறடிக்கப்பட வேண்டும். கோர்பின் அதிகாரத்திற்கு வந்தாலும், ஒன்று கிரீஸில் சிரிசா செய்ததைப் போல அவரே தொழிலாள வர்க்கத்தைத் தாக்குவார், அல்லது தொழிலாள வர்க்கத்தின் கைகளை கட்டி சிலியில் சால்வடோர் அல்லென்டே செய்ததைப் போல அரசியல் பிற்போக்குச் சக்திகளின் காலடிகளில் விழச் செய்வார்.
2015 இல் அவர் தொழிற் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, கோர்பின் சிக்கன நடவடிக்கைகள், இராணுவவாதம் மற்றும் போரை நிறுத்துவதற்கு விரும்பி அக்கட்சியில் இணைந்த நூறாயிரக் கணக்கானவர்களைக் கலைத்து விடுவதற்காக அவரால் ஆன ஒவ்வொன்றையும் செய்துள்ளார். அவர், தொழிற் கட்சியின் உண்மையான முகமாக விளங்கும் பட்டவர்த்தனமாக வணிகங்களுக்கு ஆதரவான அரசியலையும் மற்றும் போர்-வெறித்தனத்தையும் கொண்டுள்ள பிளேயரிச நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றுவதற்கான எந்தவொரு அரசியல் முனைவையும் தடுக்க முனைந்துள்ளார்.
தொழிற்சங்க அதிகாரத்துவமோ, அதன் பங்கிற்கு, 110,000 தபால்துறை தொழிலாளர்களின் திட்டமிடப்பட்ட வேலைநிறுத்தம் உட்பட தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்கவும் மற்றும் தேர்தலின் போதே கூட 40,000 பல்கலைக்கழக பணியாளர்களின் நடவடிக்கையை துண்டித்து தனிமைப்படுத்தவும் —இலண்டன் சேவையில் உள்ள இரண்டு இரயில்வே ஒப்பந்த நிறுவனங்களின் நடவடிக்கைகளுடன் சேர்ந்து, பிரான்ஸ் இயக்கத்துடன் இணையாக இப்போது வேலைநிறுத்தங்கள் நடந்து வருகின்ற நிலையில்— ஒரு கோர்பின் அரசாங்கம் அமைவதற்கான சாத்தியக்கூறால் தோற்றுவிக்கப்பட்ட பிரமைகளைச் சார்ந்துள்ளது.
கோர்பினின் தலைமை, தொழிற் கட்சியை புத்துயிரூட்டுவதற்கான வாய்ப்பை வழங்குவதாகவும், ஒரு தேசிய சீர்திருத்தவாத கொள்கையை நடைமுறைப்படுத்த ஒரு வாய்ப்பாகவும், சோசலிச தொழிலாளர்கள் கட்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சி போன்ற போலி-இடது குழுக்களின் வாதங்களை, SEP எதிர்க்கிறது. அதே நேரத்தில், பிரெக்ஸிட் ஒரு "இடது" தொழிற் கட்சி அரசாங்கத்திற்கான அடித்தளத்தை வழங்கும் என்று வாதிட்டவாறு கோர்பினை பெருமைப்படுத்துகின்ற அதே போன்ற போக்குகளைப்போல், பிரெக்ஸிட் விவகாரத்தைத் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு தேசிய பாதையாக காட்டும் பிரமைகளையும் நாம் எதிர்க்கிறோம்.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தொழிற் கட்சி ஒரு முதலாளித்துவ-சார்பு மற்றும் ஏகாதிபத்திய கட்சியாக நிற்கிறது. ஒரு "இடது" தலைவரைத் தேர்ந்தெடுப்பதன் மூலமாகவோ அல்லது சோசலிச மாற்றீட்டை விரும்பும் புதிய உறுப்பினர்களை உள்ளிணைப்பதன் மூலமாகவோ அதை மாற்றிவிட முடியாது.
கோர்பின் மற்றும் அவர் ஆதரவாளர்கள் மீதான எங்களின் விமர்சனம் சமகாலத்திய முதலாளித்துவத்தின் யதார்த்தங்களை அடிப்படையாக கொண்டுள்ளது. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிகள் பூகோளமயப்பட்ட உற்பத்தி அபிவிருத்திக்கு உதவி உள்ளன, அவை பழமைப்பட்ட தேசியவாத தொழிலாளர் அமைப்புகளையும், வர்க்க விரோதங்களை ஒடுக்க பொருளாதார நெறிமுறைப்படுத்தும் அவற்றின் வேலைத்திட்டங்களின் அடித்தளங்களை இல்லாதொழித்துள்ளது. இந்த அல்லது அந்த தலைவரின் தகுதிகளோ அல்லது வேறெதுவோ அல்ல, இதுதான் சமூக ஜனநாயகக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உலகளாவிய போட்டித்தன்மையைப் பாதுகாப்பதற்காக தொழிலாள வர்க்கம் மீதான மூர்க்கமான சுரண்டலைத் திணிப்பதில் அவற்றின் சொந்த ஆளும் வர்க்கங்களின் நேரடி கருவிகளாக அவற்றை மாற்றுவதற்கு இட்டுச் சென்றுள்ளன.
பிரெக்ஸிட் சம்பந்தமாக SEP வலியுறுத்துகையில், 2016 கருத்து வாக்கெடுப்பு இரண்டு வலதுசாரி முதலாளித்துவ கன்னைகளுக்கு இடையே ஒரு தவறான அதுவா இதுவா "விருப்பத் தெரிவை" வழங்கியது — ஆழமடைந்து வரும் வர்த்தகப் போரில் அமெரிக்காவா அல்லது ஐரோப்பாவா எதனுடன் கூட்டணி சேர்வது, ஆனால் இரண்டுமே தொழிலாள வர்க்கத்திற்கு விரோதமானவை என்பதுடன் "தாட்சர் புரட்சி" என்று குறிப்பிட்டு இவை ஆச்சரியப்படும் ஒன்றை இன்னும் ஆழப்படுத்துவதற்கான பேரார்வத்தில் உள்ளன. முன்னோக்கிய பாதை பிரெக்ஸிட் இலும் இல்லை, அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தையும் மற்றும் சிக்கன நடவடிக்கைகள், புலம்பெயர்வோர் விரோத நடவடிக்கைகள், எதேச்சதிகார ஆட்சி மற்றும் அதிவலதை பேணி வளர்க்கும் அதன் கொள்கைகளையும் ஆதரிப்பதிலும் இல்லை, மாறாக ஒரு ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்காக கண்டந்தழுவிய தொழிலாளர்களினது ஓர் ஒருங்கிணைந்த போராட்டத்தில் உள்ளது என்று நாம் கூறினோம்.
லியோன் ட்ரொட்ஸ்கி இந்த சகாப்தத்தின் அடிப்படை கேள்வியாக எதை அடையாளப்படுத்தினாரோ அதை, அதாவது புரட்சிகர தலைமைக்கான நெருக்கடியை தீர்க்கும் நோக்கில், தொழிலாள வர்க்கம் மற்றும் இளைய தலைமுறையில் உள்ள மிகவும் முன்னேறிய கூறுபாடுகளை நோக்கி நாம் நோக்குநிலை ஏற்றுள்ளோம். இந்த முன்னோக்கிற்கான போராட்டம் என்பது, இந்த பொது தேர்தலைப் பின்தொடர்ந்து வரவிருக்கின்ற அரசியல் மற்றும் சமூக போராட்டங்களுக்கு அத்தியாவசிய தயாரிப்பு செய்வதாகும்.
கோர்பின் பெரும்பான்மை பெறத் தவறினால், அல்லது அங்கே மற்றொரு தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டால், பின்னர் கடிவாளமற்ற வெறியுடன் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதலை டோரிக்கள் தொடுப்பார்கள். ராயல் மெயில் தபால்துறை தொழிற்சங்க உறுப்பினர்களில் 95 சதவீதத்தினரின் ஆதரவுடன் அவர்களின் ஒரு திட்டமிட்ட வேலைநிறுத்தத்திற்கு எதிராக நீதிமன்றங்கள் வழங்கிய இரண்டு தீர்ப்புகள் மூலமாக, என்ன திட்டமிடப்பட்டுள்ளது என்பதற்கான ஒரு அறிகுறி வழங்கப்பட்டுள்ளது. இதை பின்தொடர்ந்து, தென்மேற்கு இரயில்வேக்கு எதிராக தொழிலாளர்கள் எடுத்த நடவடிக்கைக்கு விடையிறுப்பாக பொது போக்குவரத்தின் அனைத்து வேலைநிறுத்தங்களுக்கும் தடை விதிப்பதற்கான ஜோன்சனின் அச்சுறுத்தல் வந்தது.
இதுபோன்ற வேலைநிறுத்த தடைகளை அமல்படுத்துவதற்கான வழிவகைகள் என்ன என்பது பிரான்சில் பார்க்கலாம். அங்கே மக்ரோன் அரசாங்கம் வேலைநிறுத்தக்காரர்கள் மற்றும் மஞ்சள் சீருடை போராட்டக்காரர்களுக்கு எதிராக மீண்டும் மீண்டும் கலகம் ஒடுக்கும் பொலிஸை அணித்திரட்டி உள்ளது. பிரிட்டனில் என்ன தயாரிப்பு செய்யப்படுகிறதோ அதன் அளவு Yellowhammer நடவடிக்கையில் எடுத்துக்காட்டப்பட்டது, அங்கே 50,000 பணியிலுள்ள துருப்புகளும் பின்புல துணை துருப்புகளும் தயாராக வைக்கப்பட்டனர். இத்துடன் பிரெக்ஸிட் க்குப் பிந்தைய உள்நாட்டு அமைதியின்மை சம்பவத்திற்காக அங்கு 10,000 கலகம் ஒடுக்கும் பொலிஸ் பின்புலத்தில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தொழிற் கட்சியின் தோல்வி, கோர்பினின் நீக்கத்திற்கும் மற்றும் கட்சியில் பிளேயரிசவாதிகளின் ஆளுமையை பலப்படுத்தும் நகர்வுகளுக்கு இட்டுச் செல்லும். ஆனால் கோர்பின் ஜெயித்தாலும் சரி, இந்த தாக்குதலின் வடிவம் மட்டுமே மாறும். பிளேயரிசவாதிகள் கட்சியை உடைக்க நகர்வார்கள் என்பதுடன், அவர்கள் பல மாதங்களாக கோர்பினின் கண் முன்னாலேயே தயாரிப்பு செய்து வருவதைப் போல, வலதை நோக்கி பல கட்சிகளுடன் மறுஅணிசேர்க்கைக்கான அடித்தளத்தை உருவாக்க நகர்வார்கள்.
கோர்பினின் விடையிறுப்பு, தொழிலாள வர்க்கத்தைத் தாக்குவதற்காக பிரதான பெருநிறுவனங்கள் மற்றும் இலண்டன் நகரினது கட்டளைகளுக்குப் பணிவதாக இருக்கும் என்பதுடன், அவரை எதிர்ப்போரைச் சமாதானப்படுத்த முயற்சிப்பதாக இருக்கும். அவரின் எல்லையில்லா வளைந்துகொடுக்கும் தன்மைக்கும் கொள்கையற்ற தன்மைக்கும் இன்னும் கூடுதலாக ஆதாரம் தேவையானால், பின் விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜின் பாதுகாப்பு விடயத்திலும் மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டுக்களின் மீது அமெரிக்காவுக்கு அவரை நாடு கடத்துவதற்கு எதிராகவும் அவர் ஒரு நிலைப்பாடு எடுக்க மறுப்பதே அதை வழங்குகிறது. டோரி ஆட்சிக்கும், முடிவில்லா சிக்கன நடவடிக்கைகளுக்கும் மற்றும் உலகளாவிய இராணுவ வன்முறைக்கும் கோர்பின் ஒரு மாற்றீட்டை வழங்குகிறார் என்ற எந்தவொரு பிரமைகளும் வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் குரூரமாக சிதறடிக்கப்படும்.
அனைத்திற்கும் மேலாக ஆளும் வர்க்கம் அருவருக்கத்தக்க நாடாளுமன்ற உத்திகளுடன் அதனை மட்டுப்படுத்திக் கொள்ளாது. அது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக எதிர்புரட்சிகர வன்முறைக்குத் தயாரிப்பு செய்து வருகிறது. 2015 இல் கோர்பின் தலைமை பதவி ஏற்ற உடனேயே, பெயர் வெளியிடாத "பணியிலுள்ள மூத்த பிரிட்டிஷ் தளபதி" ஆல் "மூத்த தளபதிகள்" சம்பந்தப்பட்ட "நடைமுறையளவில் ஒரு கலகம் நடப்பதற்கான நிஜமான சாத்தியக்கூறு" கொண்டு அவர் அச்சுறுத்தப்பட்டார்.
டிசம்பர் 13 தேர்தலில் எந்த கட்சி பெரும்பான்மை பெற்றாலும், தீவிரமடைந்து வரும் ஒரு வர்க்க போராட்டத்தில் இந்த தேர்தல் ஒரு இடைக்காலகட்டம் என்பதை நிரூபிக்கும். மிகவும் பலமான சமூக சக்தியான, பிரிட்டிஷ், ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஒருங்கிணைந்த இயக்கம் மட்டுமே ஆளும் உயரடுக்கின் சூழ்ச்சிகளைத் தோற்கடிப்பதற்கு அவசியமான வழிவகைகளை வழங்குகிறது. பெருவணிகங்கள் மற்றும் அதன் கட்சிகளுக்கு எதிரான ஒரு எதிர்-தாக்குதலைத் தொடுக்கவும் மற்றும் சோசலிசத்திற்கும் அவசியமான வேலைத்திட்டத்தைக் கொண்டுள்ளதும் மற்றும் உண்மையைக் கூறிய ஒரே கட்சியுமான சோசலிச சமத்துவக் கட்சியில் (SEP) இணைந்து அதைக் கட்டியெழுப்புமாறு நாங்கள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.