ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India’s Telangana state government gives fresh ultimatum to 48,000 fired strikers

இந்தியாவின் தெலுங்கானா மாநில அரசாங்கம், பணிநீக்கம் செய்யப்பட்ட 48,000 வேலைநிறுத்தக்காரர்களுக்கு புதிய இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது

By Kranti Kumara
5 November 2019

தென்னிந்திய மாநிலமான தெலுங்கானாவில், 48,000 தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்துக் கழக (Telangana State Road Transport Corporation - TSRTC) ஊழியர்கள் அவர்களது குறைந்த ஊதியங்கள், கடுமையான வேலை நிலைமைகள், மற்றும் TSRTC இன் வரவிருக்கும் தனியார்மயமாக்கல் அல்லது பணிநீக்கத்தை எதிர்கொள்வது ஆகியவற்றை எதிர்த்து அவர்கள் மேற்கொண்டு வரும் ஒரு மாத காலம் நீடித்த வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர அம்மாநிலத்தின் முதலமைச்சர் வழங்கிய காலக்கெடுவின் இறுதி நாள் இன்றேயாகும்.     

சனிக்கிழமை நடந்த ஐந்து மணிநேர அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் TSRTC பேருந்து ஓட்டுநர்கள், இயந்திர வல்லுநர்கள், பராமரிப்பு பணியாளர்கள் மற்றும் நுழைவுச் சீட்டு சேகரிப்பாளர்கள் என அனைவர் மீதும் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் தனது தாக்குதலை அதிகரித்தார். தனது தெலுங்கானா இராஷ்ட்ர சமிதி (TRS) அரசாங்கம் TSRTC இன் பாதி வழித்தடங்களை தனியார்மயமாக்குவதற்கு “மாற்ற இயலாத” முடிவை எடுத்துள்ளதாக அவர் அறிவித்து, தொழிலாளர்களை வேலைக்கு திரும்பும் படி அச்சுறுத்தும் அவரது இறுதி எச்சரிக்கையையும் விடுத்தார்.


அக்டோபர் 19, 2019, சனிக்கிழமை அன்று இந்தியா, ஹைதராபாத்தில், தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்துக் கழகமும் (TSRTC) மற்றும் அரசியல் எதிர் கட்சிகளும் அழைப்பு விடுத்திருந்த ஒரு நாள் வேலைநிறுத்தத்தின் போது செயற்பாட்டாளர்களை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்தது. TSRTC, அரசாங்கத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, TSRTC ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்கள் அக்டோபர் 5 முதல் தெலுங்கானா மாநிலம் முழுவதிலுமாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கின. (AP Photo/ Mahesh Kumar A.)

இந்த வேலைநிறுத்தத்தின் ஆரம்பகட்டத்திலிருந்தே, கே.சந்திரசேகர ராவ் அல்லது, பொதுவாக அறியப்படும் KCR, தொழிலாளர்களின் எதிர்ப்பை தகர்த்தெறியவும், மேலும் குறைந்தபட்சம் மிகுந்த போர்க்குணமிக்க தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யவும் தீர்மானித்திருந்தார். இந்த வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று பகிரங்கமாக அவர் அறிவித்ததுடன், அவ்வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டு சில மணி நேரங்களிலேயே அக்டோபர் 5 அன்று மாலை 6 மணிக்குள் வேலைக்கு திரும்பிவிட்டதாக தொழிலாளர்கள் அறிக்கை செய்யாவிடில் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று அச்சுறுத்தினார்.

இந்த சிறிய எதேச்சதிகார அறிவிப்புக்கு அஞ்சி ஆயிரம் தொழிலாளர்கள் மட்டுமே அவரது கடுமையான அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்தனர்.

அதனையடுத்து, வேலைநிறுத்தத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 48,000 வேலைநிறுத்தக்காரர்கள் “சுயமாக வெளியேறுகிறார்கள்,” என்று ஆத்திரமூட்டும் வகையில் அறிவித்து அவர்களது செப்டம்பர் மாத ஊதியத்தை சட்டவிரோதமாக நிறுத்திவைத்தார் என்பதுடன், TSRTC தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (Joint Action Committee-JAC) உடனான எந்தவித உறுதியான பேச்சுவார்த்தையையும் நடத்த மறுத்துவிட்டார். என்றாலும் பரந்த வெகுஜன எதிர்ப்பால் தெளிவாக திணறடிக்கப்பட்ட KCR, உறுதியுடன் எதிர்த்து நிற்கும் 48,000 தொழிலாளர்களுக்கு முறையான பணிநீக்க அறிவிப்பு வழங்குமாறு TSRTC நிர்வாகத்திற்கு அறிவுறுத்தவில்லை.

சென்ற வாரம், தெலுங்கானா முதலமைச்சர், TSRTC தொழிலாளர்கள் சர்வாதிகார விதிமுறைகளை ஏற்றுக் கொள்வார்களானால் மட்டுமே, வேலைக்கு திரும்புவதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார். அத்தொழிலாளர்களுக்கு “மறு-வேலைவாய்ப்பு,” வழங்கப்படுவதற்கான நிபந்தனையாக, அவர்கள் தங்களது ஜனநாயக, சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட, தொழிற்சங்க பிரதிநிதித்துவ உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதுடன், “அவர்கள் எந்தவொரு தொழிலாளர்களின் சங்கத்திலும் சேர மாட்டார்கள்” என்ற வாக்குறுதியையும் வழங்க வேண்டும் என்பதாகும்.

தெலுங்கானாவில் TSRTC வேலைநிறுத்தக்காரர்களுக்கு பரந்த ஆதரவு நிலவுகின்ற நிலையில், இந்தியா முழுவதிலுமாக அவர்களது போராட்டம் பற்றி அறியப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட TSRTC தொழிலாளர்களுக்கு ஆதரவாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

2015 இல், தெலுங்கானா உயர் நீதிமன்றம் TSRTC வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று விரைவாக அறிவித்து, TRS அரசாங்கம் அதனை முறியடிக்க உதவியது. அரசாங்கத்திற்கும் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் இடையிலான தற்போதைய இந்த மோதல் ஒரு பரந்த தொழிலாள வர்க்க எழுச்சி உருவெடுப்பதற்கான வினையூக்கியாக மாறக்கூடும் என்று கருதி உயர் நீதிமன்றம் இதுவரை மிகவும் கவனமாக உள்ளது. வேலைநிறுத்தம் தொடங்கி இரண்டே வாரங்களில், வேலைநிறுத்தத்தின் சட்டபூர்வத்தன்மையின் பேரில் தீர்ப்பை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக நீதிமன்றம் அறிவித்து, அரசாங்கத்தையும், தொழிற்சங்கங்களையும் கண்டித்ததுடன், பேரம் பேசுவதற்கு திரும்புமாறு அரசாங்கத்தை அறிவுறுத்தியது.

பிற மாநிலங்களில் உள்ள போக்குவரத்து தொழிலாளர்கள், ஆசிரியர்கள், நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் உட்பட, அனைத்து தொழிலாளர்களும், மற்றும் இந்தியாவின் உலகளவில் இணைக்கப்பட்ட வாகன உற்பத்தியாளர்களால் பணியமர்த்தப்பட்டவர்களும், இதேபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்கின்ற நிலையில், பாதிக்கப்பட்ட TSRTC தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு விடுக்கப்படும் அழைப்பு என்பது, தனியார்மயமாக்கல் மற்றும் வேலையை தற்காலிகமாக்குதலுக்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர் தாக்குதலின் இயக்கமாக அது இந்தியா முழுவதிலும் எதிரொலிக்கும்.

மாறாக, தொழிற்சங்கங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM ஆகிய ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சிகளும், TSRTC தொழிலாளர்களின் போர்க்குணமிக்க போராட்டத்தை தனிமைப்படுத்தவும், உயர் நீதிமன்றம் மற்றும் தெலுங்கானாவின் எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளின் மீது நம்பிக்கை வைக்குமாறு அவர்களை ஊக்குவிக்கவும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். இதில், இந்தியாவை நாடுகடந்த நிறுவனங்களுக்கான மலிவு உழைப்பு புகலிடமாகவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் “பூகோள அளவிலான மூலோபாய பங்காளியாகவும்” உருவாக்குவதற்கான ஆளும் உயரடுக்கின் உந்துதலுக்கு நீண்டகாலமாக முன்னிலை வகித்த காங்கிரஸ் கட்சியும் மற்றும், இந்தியாவின் தற்போதைய ஆளும் கட்சியான இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சியும் (BJP) அடங்கும்.

KCR உம் அவரது அமைச்சரவையும் சனிக்கிழமை TSRTC தொழிலாளர் மீது அவர்களது ஒட்டுமொத்த தாக்குதலை அதிகரிப்பதற்கு சதித்திட்டம் தீட்டிய நிலையில், JAC இன் தலைவர்கள், பிஜேபி இன் மாநில பிரிவு மற்றும் சிபிஐ தலைவர்கள் உட்பட, எதிர்க்கட்சி பிரதிநிதிகளை சந்தித்தனர்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து TRS அமைச்சரவைக் கூட்ட அமர்வு நடந்து கொண்டிருந்த சமயத்தில், JAC கூட்ட ஒருங்கிணைப்பாளர் இ.அஸ்வத்தாம ரெட்டி ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தில், “[அமைச்சரவை கூட்டத்திலிருந்து] எந்தவித அறிவிப்பு வந்தாலும், [தொழிலாளர்கள்] கவலைப்பட வேண்டாம். வேலைநிறுத்தம் தொடரும்” என்று தெரிவித்தார்.

உண்மையில் ரெட்டியின் பேச்சுக்கள், JAC இன் பேரழிவு தரும் சுய-குற்றச்சாட்டாக இருந்தன என்பதுடன், TSRTC தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தின் தலைமையை முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களின் கைகளிலிருந்து விடுவிக்க வேண்டிய அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வலது கையான அமித் ஷா உடனான சந்திப்பிற்கு தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுக்கும் என JAC கூட்ட ஒருங்கிணைப்பாளர் அறிவித்தார். மேலும், “நாங்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, நிலைமையை எடுத்துக்கூறி, இந்த விவகாரத்தை கவனிக்கும் படி கேட்போம்” என்றும் கூறினார்.

குஜராத் மாநில முதலமைச்சராக 2002 குஜராத் முஸ்லீம் விரோத படுகொலையை மோடி தூண்டியது உட்பட, மோடியின் அனைத்துக் குற்றங்களிலும் துணைநிற்கும் ஷா தொழிலாள வர்க்கத்தின் பரம எதிரியாக இருந்து வருகிறார். ஒரு இந்து மேலாதிக்கவாத கிளர்ச்சித் தலைவரான ஷா, வறுமையில் வாடும் பங்களாதேஷ் புலம்பெயர்ந்தோரை “கறையான்கள்” என்று பலமுறை விவரித்தார், மேலும் அவர், தேசிய குடிமக்கள் பதிவேட்டை இந்தியா முழுவதிலும் நீட்டிக்க உறுதியளித்தார், அதன் கீழ் வடகிழக்கு மாநிலமான அசாமில் இரண்டு மில்லியன் முஸ்லீம்கள் நாடுகடத்தப்படுவதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

மோடி மற்றும் ஷாவின் வகுப்புவாத பிற்போக்குத்தனத்தை தூண்டும் தன்மை, முதலீட்டாளர் சார்பு கொள்கைகளை திணித்து முன்னெடுத்து செல்வதற்கு ஏதுவாக தொழிலாள வர்க்கத்தை அச்சுறுத்தும் மற்றும் பிளவுபடுத்தும் நோக்கம் கொண்டுள்ளது. சமீபத்திய வாரங்களில், பிஜேபி அரசாங்கம் பெருநிறுவன வரிகளை அதிகமாக குறைத்துள்ளது, அதன் தனியார்மயமாக்கல் உந்துதலை முடுக்கிவிட்டுள்ளது, வெளிநாட்டு முதலீட்டிற்கான உச்சவரம்புகளை உயர்த்தியது அல்லது முற்றிலுமாக உயர்த்தியது, மேலும் உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய சமூக தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்த வேண்டிய ஏராளமான தொகைகளை நாட்டின் நலிவுற்ற வங்கிகளுக்கு வாரி வழங்கியுள்ளது.

TSRTC ஐ தனியார்மயமாக்க முனைவதில், KCR உம் மற்றும் தெலுங்கானா மாநில அரசாங்கமும் ஷாவின் அமைச்சரவை சகாவான சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பரிந்துரைத்த கொள்கையை மட்டுமே உண்மையில் பின்பற்றுகின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், கட்கரி, பொது போக்குவரத்தை தனியார்மயமாக்கும் படி இந்தியாவின் மாநில அரசாங்கங்களை பகிரங்கமாக அறிவுறுத்தினார், ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை கருவூலத்தின் ஒரு சகித்துக் கொள்ள முடியாத விரயமாக அத்துறை உள்ளது. அதாவது, நூற்றுக்கணக்கான மில்லியன் இந்தியர்களுக்கு ஒப்பீட்டளவில் மலிவான பொது சாலை போக்குவரத்து என்பது, வேலைக்கு அல்லது பள்ளிக்கு செல்வதற்கும் நீண்ட தூர பயணத்திற்கும் உதவும் ஒரு அத்தியாவசிய சேவை என்பது கூட முக்கியமாக கருதப்படவில்லை.

அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பை எதிர்கொண்ட நிலையில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் முதல் சிலி மற்றும் ஈக்வடோர் வரையிலான முதலாளித்துவ ஆளும் உயரடுக்கினர் வன்முறையான அடக்குமுறைக்கு திரும்பி வருகின்றனர். சந்தேகத்திற்கு இடமின்றி, ஜம்மு-காஷ்மீரின் பகுதியளவிலான தன்னாட்சி அந்தஸ்தை சட்டவிரோதமாக இரத்து செய்ததிலும், மற்றும் 12 மில்லியனுக்கும் அதிகமானோர் வசிக்கும் அப்பிராந்தியத்தில் மூன்று மாத காலம் முற்றுகையை திணித்ததிலும், மோடி மற்றும் ஷாவிற்கு பெருவணிகங்களும், நீதிமன்றங்களும் மற்றும் அரசியல் ஸ்தாபகமும் வழங்கிய வலுவான ஆதரவை அறிந்து கொண்டு, TSRTC தொழிலாளர்கள் மீதான தனது தாக்குதலில் KCR தைரியமாக உள்ளார்.

சனிக்கிழமை TRS அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை KCR குற்றம்சாட்டினார். இலாப நோக்கமற்ற கொள்கைகளின் பேரில் இயக்கப்படும் மாநில அரசுக்கு சொந்தமான நிறுவனமான TSRTC, அதன் தொழிலாளர்களுக்கு அதிகளவிலான வேலை பாதுகாப்பையும் மற்றும் சிறந்த நலன்களையும் வழங்குவதற்காக மாநில அரசாங்கத்துடன் அது இணைக்கப்பட வேண்டும் என்ற தொழிலாளர்களின் பிரதான கோரிக்கை தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையையும் அவர் மீண்டும் நிராகரித்தார்.

“நவம்பர் 5 நள்ளிரவுக்குள் அவர்கள் பணிக்குத் திரும்பவில்லை என்றால், மீதமுள்ள 5,000 வழித்தடங்களையும் நாங்கள் தனியார்மயமாக்குவோம்,” என்று தெலுங்கானா முதலமைச்சர் அறிவித்தார்.

TRS அரசாங்கம், அரசுக்கு சொந்தமான பேருந்து நிறுவனத்தை தனியார்மயமாக்குவதற்கான சாக்குப்போக்கை வழங்குவதற்காக பல ஆண்டுகளாக அதற்கு நிதி ஒதுக்கீடு வழங்காமல் வேண்டுமென்றே அந்நிறுவனத்தை தரைமட்டமாக்கியுள்ளது.

ஆயினும் கூட, தனியார்மயமாக்கல் நடவடிக்கையுடன் இணைந்து வரும் கட்டண உயர்வு மற்றும் சேவை வெட்டுக்களை சுட்டிக்காட்டும் ஒரு அறிக்கையில், KCR, ஒரு “சரியான ஆடுகளத்தை” அந்நிறுவனத்திற்கு வழங்க கிட்டத்தட்ட பாதிக்கும் அதிகமான அதன் வழித்தடங்களை தனியார் பேருந்து நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டியது அவசியம் என்று கூறினார். நிச்சயமாக, தனியார் பேருந்து இயக்குநர்கள் பொது மக்களிடமிருந்து இலாபம் ஈட்டும் நிலைமைகளை உருவாக்குவதுதான் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கடமையா என்பது குறித்து அவர் விளக்கவில்லை.

TSRTC தற்போது, தெலுங்கானாவிலும் மற்றும் அண்டை மாநிலங்களுக்குமாக 10,400 வழித்தடங்களை இயக்குகிறது. பாழடைந்து போன TSRTC பேருந்து படையை மேம்படுத்துவதற்கு பதிலாக இவற்றில், 5,100 வழித்தடங்கள் தனியார் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்படவுள்ளன.

TSRTC தொழிலாளர்கள், அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களை மீறுவதற்கும், அவர்களை அடிபணியச் செய்வதற்காக பட்டினி போடுவதற்கு அரசாங்கம் முனைவதை எதிர்த்து நிற்பதற்கும் பெரும் தைரியத்தைக் காட்டியுள்ளனர். இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் அதிகரித்தளவில் தீவிரமயமாகி வருவதற்கான கூடுதல் சான்றாக இந்த வேலைநிறுத்தம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு தான், பல தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகளால் தனி தெலுங்கானா மாநிலம் கோரும் போராட்டத்தை ஆதரிப்பதற்காக TSRTC தொழிலாளர்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர். KCR மற்றும் அவரது TRS தலைமையில், தெலுங்கானா பிரிவினைவாத இயக்கம், அதன் சொந்த பிராந்திய அரசு எந்திரத்திற்கான தெலுங்கானா உயரடுக்கின் பிற்போக்குத்தனமான மற்றும் பிளவுபடுத்தும் கோரிக்கையை முன்னெடுப்பதற்காக, வேலையின்மை மற்றும் பிற சமூக பிரச்சினைகள் குறித்த மக்கள் சீற்றத்தை சுரண்டிக் கொண்டன.

Hindu Business Line செய்தியிதழின் படி, JAC, தொழிலாளர்களின் தற்போதைய மனநிலையை அளவிடுவதற்கான நோக்கத்துடன், ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒரு கூட்டத்தை நடத்தியது. சொற்ப அளவில் ஒரு சில தொழிலாளர்கள் மட்டும் வேலைக்கு திரும்புவதாக சில அறிக்கைகள் தெரிவித்தன. இதுவரை, இது உண்மை தான், ஏனென்றால், வலதுசாரி KCR அரசாங்கத்திற்கு எதிராகவும், மற்றும் அதற்கு துணைநிற்கும் புது தில்லியின் பிஜேபி ஆட்சிக்கு எதிராகவும் சமரசமற்ற தொழில்துறை மற்றும் அரசியல் தாக்குதலை, தொழிற்சங்கங்களும், ஸ்ராலினிசக் கட்சிகளும் பரந்த தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டி போராடுவதற்கு மறுக்கின்ற நிலையில், தொழிலாளர்கள் சோர்ந்து போயிருக்கிறார்கள்.