Print Version|Feedback
Sri Lankan SEP holds inaugural presidential election meeting
இலங்கை சோ.ச.க. ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரம்ப கூட்டத்தை நடத்தியது
By our correspondents
26 October 2019
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பும் அக்டோபர் 15 அன்று கொழும்பின் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்துக்கான ஆரம்ப கூட்டத்தை நடத்தின. நவம்பர் 16 அன்று நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினரும் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் கொழும்பு ஆசிரியர் குழுவின் நீண்டகால உறுப்பினருமான பாணி விஜேசிறிவர்தனவை கட்சி நிறுத்தியுள்ளது. கட்சி உறுப்பினர்கள் உட்பட சுமார் 100 தொழிலாளர்கள், இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் குடும்பப் பெண்கள் மற்றும் ஆதரவாளர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் ஒரு பகுதியினர்
சோ.ச.க. / ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள் கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள தொழிலாள வர்க்க பகுதிகளில் கூட்டத்திற்காக பிரச்சாரம் செய்தனர். சிங்கள மற்றும் தமிழில் "சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றது என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான கட்டுரையின் ஆயிரக்கணக்கான பிரதிகள் தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன.
கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றிய சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் விலானி பீரிஸ், தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளுக்காக ஒரு சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தை முன்வைக்கும் ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே, என்றார். நவ சம சமாஜாக் கட்சி, முன்நிலை சோசலிசக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி ஆகிய போலி-இடதுகள் உட்பட மற்ற அனைத்து கட்சிகளும் பிற்போக்கு தேசியவாத கொள்கைகளை ஆதரிக்கின்றன.
விலானி பீரிஸ்
தேர்தலில் எந்த முதலாளித்துவ வேட்பாளர் வெற்றி பெற்றாலும், உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் நிலைமைகள் மோசமடையும் என்று பீரிஸ் எச்சரித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) கோடாபய இராஜபக்ஷ, ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியின் (ஐ.தே.மு.) சஜித் பிரேமதாச போன்றவர்களைப் போலவே, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) அனுரா குமார திசாநாயக்கவும் ஒரு முழுமையான முதலாளித்துவ திட்டத்தையே பரிந்துரைக்கின்றார் என்று அவர் சுட்டிக்காட்டினார். பீரிஸ், ஜே.வி.பி.யின் சுகாதார கொள்கை ஆவணத்தில் இருந்து மேற்கோள் காட்டினார். அது ஜே.வி.பி. தலைமையிலான எந்தவொரு எதிர்கால அரசாங்கமும் தனியார் மருத்துவமனைகளை பராமரிக்கும் என்று கூறுகிறது.
ஐ.வை.எஸ்.எஸ்.இ. தலைவர்களில் ஒருவரான பிரதீப் ராமநாயக்க, வளர்ந்து வரும் முதலாளித்துவத்தின் நெருக்கடியின் கீழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் நிலைமையை கோடிட்டுக் காட்டினார். 2019 ஆம் ஆண்டின் 2 வது காலாண்டில், இலங்கையில் இளைஞர்களிடையே வேலையின்மை 20 சதவீதமாக உள்ளது, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் கல்விச் செலவினங்களைக் குறைப்பதன் விளைவாக மாணவர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகளும் மோசமடைந்து வந்துள்ளன, என்று அவர் கூறினார்.
பாணி விஜேசிறிவர்தன
பிரதான அறிக்கையை வழங்கிய விஜேசிறிவர்தன, ஆளும் உயரடுக்கின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் முக்கிய அம்சங்களை மீளாய்வு செய்தார்: சர்வதேச அளவில் முதலாளித்துவ அமைப்பு முறையே சரிந்து போயிருப்பதால், ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகள் அதிகரிக்கின்ற நிலையில், அவை \உலகப் போரை நோக்கிய உந்தப்படுகின்றன. சமூக ஜனநாயகவாதிகள், ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் பப்லோவாத கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் அடக்கி வைக்கப்பட்டிருந்த உலகளாவிய வர்க்கப் போராட்டங்கள், மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் மீண்டும் தலைதூக்கியுள்ளன. இலங்கையில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், புகையிரத தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் சமீபத்திய வேலைநிறுத்தங்களை அவர் குறிப்பிட்டார்.
இலங்கை முதலாளித்துவம் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை விஜேசிறிவர்தன விரிவாக விளக்கினார். "இலங்கையில் ஆளும் வர்க்கத்திற்கு 2021 வரை கடன் சேவைக்காக 15 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது. சர்வதேச தரப்படுத்தல் நிறுவனமான மூடிஸ், இலங்கை கடன் திருப்பிச் செலுத்த முடியா நிலையை எட்டியிருப்பதாக சமீபத்தில் எச்சரித்தது. வட்டி விகிதங்கள் தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்தாலும், பொருளாதாரம் தேக்கமடைந்து வருகிறது. வரவிருக்கும் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி வெறும் 2.7 சதவீதமாகவே இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்டுள்ளது. அதற்கேற்ப, தற்போதைய சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், இரண்டு சமீபத்திய சுற்றறிக்கைகளில், அரசாங்கத் துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கான செலவினங்களை 25 சதவிகிதம் குறைக்க உத்தரவிட்டுள்ளது.” அந்த நிலைமைகளின் கீழ், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இதையும் அதையும் வழங்குவோம் என வழங்குவோம் என போட்டி போட்டுக்கொண்டு வேட்பாளர்கள் அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் பொய்யானவை என்பது நிரூபிக்கப்படும்.
உலகம் முழுதும் புவிசார்-அரசியல் போட்டிகள், குறிப்பாக சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் உந்துதல், அணுசக்தி மோதலின் அபாயத்தை மனித குலத்தின் கண்முன்னே கொண்டு வந்து, உலக மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி 2015 ஜனாதிபதித் தேர்தலில் எச்சரித்ததைப் போல், வாஷங்டனின் பிராந்திய நட்பு நாடான இந்தியாவின் உதவியுடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட ஆட்சி மாற்றம், சீனாவுக்கு எதிரான அமெரிக்க இராணுவ-மூலோபாய தாக்குதலில் தீவை மேலும் நெருக்கமாக ஒருங்கிணைக்க வழிவகுத்துள்ளது.
போர் திட்டங்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மீதான தாக்குதல்கள், தொழிற்சங்க கைவிலங்கில் இருந்து வெளியேறி தொழிலாளர்களை போராட்டங்களுக்கு தள்ளும் என்று விஜசிறிவர்தன கூறினார். "கடந்த ஆண்டு தோட்டத் தொழிலாளர்கள் அதிக ஊதியம் பெறுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டதை நாங்கள் கண்டோம்," என்று அவர் கூறினார். சோ.ச.க.வின் அரசியல் வழிகாட்டுதலின் கீழ் எபோட்சிலி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களால் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான ஒரு நடவடிக்கைக் குழுவை அமைதிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
பிரேமதாச, இராஜபக்ஷ, திசாநாயக்க ஆகிய மூன்று "பிரதான வேட்பாளர்கள்", "தேசிய பாதுகாப்பு" என்பதை அவர்களின் முக்கிய பிரச்சார கருப்பொருளாக எடுத்துக் கொண்டுள்ளனர். "உலகப் பொருளாதார மந்தநிலையின் ஒரு பகுதியாக இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் அலைகளை நசுக்குவதற்கு அவர்கள் திட்டமிடுகின்றார்கள் என்பதே இதன் அர்த்தமாகும்" என்று விஜேசிறிவர்தன கூறினார்.
சோ.ச.க. வேட்பாளர் மேலும் கூறியதாவது: பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு, இலட்சக்கணக்கானோர் அகதிகளாக்கப்பட்ட இனவாதப் போரை ஈவிரக்கமின்றி முன்னெடுத்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு அமைச்சுப் பதவி ஒதுக்கப்படும் என்று பிரேமதாச அறிவித்துள்ளார். முதலாளித்துவ வேட்பாளர்கள் ‘தேசிய பாதுகாப்பு’ என்பதன் மூலம், தொழிலாள வர்க்கத்திலிருந்து வரும் சவாலுக்கு எதிரான முதலாளித்துவ ஆட்சியின் பாதுகாப்பைப் பற்றியே குறிப்பிடுகின்றனர்.”
விஜேசிறிவர்தன பின்வருமாறு உரையை முடித்தார்: “இந்த பிரச்சினைகள் அனைத்தும் இலங்கை போன்ற நாடுகளில் உள்ள தேசிய முதலாளித்துவத்திற்கு, வெகுஜனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத, பிறப்பில் இருந்தே ஏற்பட்ட இயலாமையில் இருந்து தோன்றியவை ஆகும். ஏனைய வேட்பாளர்கள் மீது எந்தவிதமான நம்பிக்கையும் வைக்கக்கூடாது என்று சோ.ச.க. கூறுகின்றது. தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில், தெற்காசியாவின் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச குடியரசை நாங்கள் பிரேரிக்கின்றோம்.”
கூட்டத்துக்கு வருகை தந்திருந்தவர்களை சோ.ச.க.வின் வேலைத் திட்டத்தைப் படிக்குமாறும், அதற்கு வாக்களிக்குமாறும், கட்சியில் இணைந்துகொள்ளுமாறும் விஜேசிறிவர்தன அழைப்பு விடுத்தார்.
விஜே டயஸ்
இறுதி உரையை நிகழ்த்திய சோ.ச.க பொதுச் செயலாளர் விஜே டயஸ் விளக்கியதாவது: “இந்தத் தேர்தலானது, இங்குள்ள ஆளும் வர்க்கத்துக்கும் அவர்களின் ஏகாதிபத்திய எஜமானர்களுக்கும் அரசியலமைப்பின் மூலம் திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்வு மட்டுமல்ல. தொழிலாள வர்க்கம், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலை மற்றொரு வாக்களிக்கும் செயல்முறையாக எடுத்துக் கொண்டால், தம்மீது சுமத்தப்பட உள்ள கொடுரமான சிக்கன நடவடிக்கைகளின் முன் அவர்கள் முற்றிலும் அரசியல் ரீதியாக நிராயுதபாணிகளாக நிற்க வேண்டி வரும். அடுத்த ஜனாதிபதியாகும் எவரும் ஜனநாயக உரிமைகளை அழிக்க நிர்ப்பந்திக்கப்படுவார்.”
ஏற்கனவே சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தின் பிற்போக்கு மூலோபாய நிகழ்ச்சித் திட்டம், தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள், போராட்டங்கள் மற்றும் சிறு விவசாயிகள் மற்றும் மாணவர்களினதும் ஆர்ப்பாட்டங்களால் சவாலுக்கு உட்பட்டுள்ளது.
முன்கூட்டியே சர்வதேச புலனாய்வு அமைப்புகளின் தெளிவான எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் ஏப்ரல் குண்டு தாக்குதல்களை நடத்துவதற்கு அரசாங்கம் அனுமதித்திருந்தது. ஏனெனில் பயங்கரவாத தாக்குதல்களால் உருவாக்கப்பட்ட பீதி மற்றும் இனவாத குழப்பங்களை, தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை திசைதிருப்பவும் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் அவர்களின் போராட்டங்களை கைவிட வலியுறுத்தவும் அந்த தாக்குதலைப் பயன்படுத்த ஆளும் வர்க்கம் திட்டமிட்டிருந்தது. இருப்பினும், இந்த தந்திரம் தோல்வியடைந்தது. செப்டம்பர் மாதத்திற்குள், ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான தொழிலாளர்களின் சர்வதேச எழுச்சியின் பாகமாக வர்க்கப் போராட்டங்கள் மீண்டும் ஒரு படி முன்னேறின.
டயஸ் சமீபத்திய அரசியல் முன்னேற்றங்களை சுட்டிக்காட்டினார். தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் சந்தேக நபர்கள் மற்றும் ஆயுதக் களஞ்சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறி திடீரென கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மலேசியாவிலும் புலிகள் உறுப்பினர்கள் எனப்படுவோர் கைது செய்யப்பட்டனர். 2009 இல் புலி "பயங்கரவாதத்தை" முற்றிலுமாக இராணுவ ரீதியில் ஒழித்துவிட்டதாக கூறிய அதே நபர்கள்தான் இந்த மோசமான பிரச்சாரத்தை முடுக்கிவிட்டள்ளனர்.
"தற்போதைய தேர்தலானது அனைத்து பிரதான முதலாளித்துவ கட்சிகளாலும், இனவாத சக்திகளையும் ஆயுதப்படைகளின் பிரிவுகளையும் அணிதிரட்டுவதற்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கும், போராடி வென்ற சமூக உரிமைகளை மொத்தமாக திரும்ப அபகரிப்பதற்குமான ஒரு களத்தை அமைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது."
“லியோன் ட்ரொட்ஸ்கி வலியுறுத்தியது போல், ஏகாதிபத்தியத்தின் பிற்போக்கு மூலோபாயத்திற்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கம் அதன் சொந்த மூலோபாய தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும். இந்த அனைத்து முக்கியமான வழிகாட்டுதல்களையும் நாங்கள் பின்பற்றுகிறோம்,” என டயஸ் கூறினார்.
இந்தத் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் பங்குபற்றுவதானது, எந்தவொரு ஜனநாயக சூழலின் காரணமாகவும் இல்லை என்று டயஸ் விளக்கினார். மாறாக, ஆளும் வர்க்கத்திற்கு, நெருக்கடியில் மூழ்கியுள்ள முதலாளித்துவ அமைப்பு முறையை பாதுகாக்க முன்பை விட அதிக கைக்கூலிகள் தேவைப்படுகின்றனர். விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான பப்லோவாத நவ சம சமாஜக் கட்சியானது ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் பிரேமதாசாவுக்கு ஆதரவு தேடுவதற்காக தனது கட்சிக்கு வழங்கப்பட்ட இலவச ஊடக வாய்ப்புகளைப் பயன்படுத்தி, தேர்தல் சட்டங்களை பகிரங்கமாக மீறும் நிலைக்கு சென்றிருப்பது இந்த மோசடிக்கு சிறந்த உதாரணம் ஆகும்.
நவ சம சமாஜக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி மற்றும் முன்நிலை சோசலிசக் கட்சி ஆகிய அனைத்து போலி இடது வேட்பாளர்களும் தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களின் அவசரத் தேவைகளுக்கு "தேசியவாத தீர்வுகளையே" திருப்பித் திருப்பி கூறுகின்றனர். அவர்களின் கருத்துக்கள் முதலாளித்துவ வேட்பாளர்களால் கொட்டப்பட்ட பொய்யான வாக்குறுதிகளில் இருந்து எந்த வகையிலும் வேறுபடவில்லை. இந்த முதலாளித்துவ தேசிய கட்டமைப்பிற்கு மாற்றீடு எதுவும் இல்லையென வாக்காளர்களை நம்ப வைக்க அவர்கள் முயல்கின்றனர். இந்த நிலைப்பாடானாது அவர்களை ஏகாதிபத்திய உலக ஒழுங்கை ஏற்றுக் கொள்ளவும், உலக மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு எதிராக, அமெரிக்கத் தலைமையிலான பிரதான சக்திகளின் பொருளாதார மற்றும் அரசியல் மூலோபாயத்தை பின்பற்றவும் தள்ளிச் செல்கின்றது.
இந்தத் தேர்தலின் போது, முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், சிறு விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு சோ.ச.க. மக்களுக்கு முன்வைக்கும் வேலைத் திட்டமானது, சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் அமைந்தது ஆகும். இது சோசலிச புரட்சியின் உலகக் கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டிய ஒத்திவைக்க முடியாத அவசியத்தை வலியுறுத்துகிறது.
"ஒடுக்கப்பட்ட மக்களின் ஒத்துழைப்புடன் அரசியல் அதிகாரத்தை தொழிலாள வர்க்கத்தின் கைகளுக்கு மாற்றுவதானது, முதலாளித்துவ பொருளாதார ஒழுங்கை சோசலிச அமைப்பு முறைக்கு மாற்றுவதாகும். அதாவது முதலாளித்துவ இலாபத்திற்கான உற்பத்தி மற்றும் விநியோகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, மனிதகுலத்தின் பொருளாதார மற்றும் கலாச்சார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மறு ஒழுங்கு செய்வதாகும்” என கூறி டயஸ் உரையை முடித்தார்.