ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

සජිත් ප්‍රේමදාසගේ ව්‍යාජ පොරොන්දු වලින් ඔතා ඇත්තේ දක්ෂිනාංශික වැඩපිලිවෙලකි

சஜித் பிரேமதாசவின் போலி வாக்குறுதிகள் ஒரு வலதுசாரி வேலைத் திட்டத்தை மூடி மறைத்துள்ளன

Saman Gunadasa
14 November 2019

ஐக்கிய தேசியக் கட்சி அமைத்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஒரு "நலன்புரி சேவகர்" என்றும் அவரது போட்டி வேட்பாளராகிய கோட்டாபய இராஜபக்ஷவுடன் ஒப்பிடும்போது அவர் "குறைந்த தீங்கானவர்" என்றும் போலி-இடது குழுக்கள், சிவில் அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகள் பிரிவினரும் விளம்பரப்படுத்துகின்றனர். இது முழு பொய்யாகும். இது நிதி மூலதனத்தின் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதற்கே வழி வகுக்க உதவும்.

2015 இல் முன்னாள் ஜனாதிபதி இராஜபக்ஷவுக்கு எதிராக தன்னை ஒரு முற்போக்கான ஜனநாயகவாதியாக காட்டிக்கொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாத்ததாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுடன் முகாமிட்டிருந்த இந்த உயர் நடுத்தர வர்க்க தட்டின் உதவியுடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கம், சீனாவிற்கு எதிரான இந்தோ-பசிபிக் இராணுவத்தை வலுப்படுத்த இலங்கை ஆயுதப்படைகளை வாஷிங்டனுடன் இணைத்தது.

சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு பரவலான எதிர்ப்பு வளர்ந்ததை அடுத்து, ராஜபக்ஷக்களின் வலதுசாரி அமைப்பான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) உருவாகியுள்ளது. இந்த போலி-இடது அமைப்புகளும் அறிவுசார் மோசடிக்காரர்களும் மீண்டும் இந்த "குறைந்த தீங்கு" என்பதை தூக்கிப் பிடிப்பதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் வர்க்க சுயாதீனத்திற்கு இன்னுமொரு பொறிக்கிடங்கை உருவாக்குகின்றன.

பிரேமதாசவின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனமான “சஜித்தின் சமூகப் புரட்சி” என்பது அக்டோபர் 31 அன்று கண்டியின் குயின்ஸ் ஹோட்டலில் வெளியிடப்பட்டது.

பிரேமதாச அமைச்சரவை அமைச்சராக இருந்த நடப்பு அரசாங்கம், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல்கள் நடத்திய போதிலும், பிரேமதாச தன்னை ஒரு "ஏழைகளின் வேட்பாளர்" என்று அழைத்துக் கொண்டு, தனது புதிய அரசாங்கத்தின் கீழ் தொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட ஏழைகள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்வதாக கூறிக்கொள்கிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகையில், நாடு முழுவதும் நீங்கள் கொடுக்கும் வாக்குறுதிகளுக்கு பணம் எங்கிருந்து கிடைக்கும் என்ற கேள்விக்கு பிரேமதாச அளித்த பதில் பின்வருமாறு: சுகாதார பெம்பஸ்களை இலவசமாக வழங்குவதன் மூலம், பெண்கள் தொழிலாளர் சந்தையில் அதிகம் சேருவர், இதன் விளைவாக கணக்கிட முடியாத பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது; மாத வருமானம் ஒரு மில்லியன் ரூபாய்க்கும் குறைவாக உள்ள சிறு நிறுவனங்களுக்கு பெறுமதி சேர் வரி சலுகைகள் வழங்கப்படுகின்றன; அமைச்சர்கள் வரி செலுத்தாமல் வாகனங்களை வாங்குவதை தடுப்பது போன்ற வீணான செலவினங்களைக் குறைக்க முடியும்; மத்திய வங்கியை அரசியல் தலையீட்டில் இருந்து விடுவித்து, நிதிச் சந்தைகளில் நம்பிக்கையை அதிகரித்தல், குறைந்த வட்டிக்கு கடன் வாங்குதல், போன்றவை இவற்றில் அடங்கும்.

நாடு ஏற்கனவே ஒரு பெரிய கடன் வலையில் சிக்கியுள்ளதால், பொருளாதார வளர்ச்சி சரிந்துவிட்டதால், இந்த நிதி முறைகளின் வெறுமை குறித்து வார்த்தைகளை எழுதுவது தேவையற்றது.

“இலங்கையின் முன்னேற்றத்திற்கு எல்லையே இல்லை. ஒன்றாக செல்லலாம்” என்ற பெயரில் அள்ளி வீசப்படும் வாக்குறுதிகளில், காய்கறிகள், பழங்கள், சேனைப் பயிர்ச்செய்கை, ஏற்றுமதி பயிர்கள், தேங்காய், தேயிலை உள்ளிட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபடும் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச உரங்களை வழங்குதல், 30 தேசிய பாடசாலைகள், இரண்டு பாடசாலை சீருடைகள், ஒரு ஜோடி காலணிகள் மற்றும் மாணவர்களுக்கு இலவச, சத்தான மதிய உணவு, அனைவருக்கும் ஒரு வீடு, மற்றும் பெண்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு போன்ற வாக்குறுதிகள் அனைத்தும், பிரேமதாச ஆட்சிக்கு வந்த பின்னர் விரைவில் காணாமல் போய்விடும். ஏனென்றால் அரசாங்கத்திடம் பணம் இல்லாத அதே வேளை, சர்வதேச நாணய நிதியம் அத்தகைய திட்டங்களை கடுமையாக எதிர்க்கிறது.

பிரேமதாசவும் ஒரு பகுதியாக இருக்கும் உயர்மட்ட அரசாங்க தலைவர்கள் முன்கூட்டியே அறிந்து வைத்திருந்த ஏப்ரல் 21 பயங்கரவாத குண்டுத் தாக்குதலின் பின்னர் அதைப் பயன்படுத்திக்கொள்ள அவர் முன்வந்த விதம், அரசியல் நிலைமையை தமக்கு சாதகமான வகையில் பயன்படுத்திக்கொள்ளும் ஆளும் வர்க்கத்தின் இரத்தக்களரி தந்திரோபாயங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். அந்த தாக்குதல்களை அடுத்து விதிக்கப்பட்ட அவசர கால நிலைமை மற்றும் அத்தியாவசிய சேவை ஆணைகளைப் பயன்படுத்திக்கொண்டு, தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளின் வளர்ச்சி கண்டுவந்த போராட்டங்களை அடக்குவதற்கு அரசாங்கம் இராணுவ மற்றும் பொலிஸ் பயங்கரங்களை கட்டவிழ்த்துவிட்டது. அரசாங்கம் நினைத்தவாறு நடக்க அனுமதிக்காமல், தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.

ஊடகங்களில் பரப்பப்பட்ட அனைத்து வாய்ச்சவடால்கள் மற்றும் வாக்குறுதிகளுக்கும் மத்தியில், சர்வதேச நிதி தன்னலக்குழுக்களின் கசையடிகாரனான சர்வதேச நாணய நிதியம், 2016 இல் அங்கீகரிக்கப்பட்ட 1.5 பில்லியன் டாலர் கடனின் ஆறாவது தவணையை வழங்கி, நவம்பர் 1 அன்று வெளியிட்ட அறிக்கையில், "உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஸ்திரமற்ற தன்மைகள் அதிகரிக்கும் போது ஏற்படும் ஆபத்துக்களை தடுக்கும் திறனை மேம்படுத்த, இலங்கையின் நிதிக் கொள்கையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது," எனத் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் குறிப்பிடும் "ஆபத்து" எனப்படும் நாட்டின் திவால்நிலை, மற்றும் "பணவியல் கொள்கையின் ஒழுக்கம்" என்பது தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களிடமிருந்து எத்தகைய சவால் வந்தாலும், சிக்கன நடவடிக்கைகளை சுமத்த வேண்டும் என்பதைத் தவிர வேறில்லை.

"ஒரு வலுவான தேசம் மற்றும் நியாயமான சமூகம்" என்று அழைக்கப்படும் பிரேமதாசவின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் முதல் பகுதியில், “போதைப்பொருள், ஊழல் மற்றும் மத தீவிரவாதத்திற்கு எதிரான கடுமையான கொள்கை” என்ற பகுதியை இந்த சூழலில் வைத்தே புரிந்து கொள்ள வேண்டும். போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று அவர் தேர்தல் கூட்டங்களில் பலமுறை கூறியுள்ளார்.

தனது அரசாங்கம் இரக்கமற்றது என்று பிரேமதாச முதலாளித்துவ முதலீட்டாளர்களுக்கு அறிவிக்கின்றார், தமிழர்களுக்கு எதிரான மிருகத்தனமான போருக்கு தலைமை தாங்கிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை தனது பாதுகாப்பு அமைச்சராக்கப் போவதாக அறிவித்தார்.

"பாதுகாப்புப் படைகள், பொலிஸ் மற்றும் உளவுத்துறை சேவைகளை நவீனமயமாக்குவதற்கும் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும் நாங்கள் உத்தேசித்துள்ளோம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1948 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் 71 ஆண்டுகளில் பிரேமதாச மற்றும் அவர் தூக்கிப் பிடிக்கின்ற அவரது தந்தையுமாக ஐக்கிய தேசியக் கட்சி, 37 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்துள்ளது. போதைப்பொருள், ஊழல் மற்றும் மத தீவிரவாதம் போன்றவை இந்த முதலாளித்துவ ஆட்சியின் விளைவே அன்றி, தன்னிச்சையாகத் தோன்றியவை அல்ல. இந்த முதலாளித்துவ தலைவர், இப்போது தனது சொந்த அரசாங்கங்களால் உருவாக்கப்பட்ட இத்தகைய பேரழிவுகளிலிருந்து நாட்டை காப்பாற்றுவதாக நாடகமாடி தனக்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுக்கின்றார்.

ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் "பல இனங்கள், பன்முக கலாச்சாரவாதம், பன் மொழி மற்றும் பன்மைத்துவம்" ஆகியவற்றை சித்தரிக்கும் புதிய அரசியலமைப்பின் அவசியத்தைப் பற்றி குறிப்பிடப்படுகிறது. விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் மாகாண சபை பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு இரண்டாவது பிரதிநிதிகள் சபை, அதாவது ஒரு செனட் சபை முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த பன்மைத்துவ சொல்லாட்சிகள் ஒருபுறம் இருக்க, பிரேமதாச தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு ஆற்றிய உரையில், ஒற்றைத் தன்மை, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பௌத்த சிந்தனைக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு தாய்நாட்டை உருவாக்குவதாக அறிவித்து சிங்கள-பௌத்த இனவாதத்தை கிளறிவிட்டார். நேற்று, கண்டியில் உள்ள மல்வத்த பௌத்த பீடத்தின் தலைமை பிக்குவை சந்தித்த அவர், பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை அப்படியே இருக்கும் என்று எழுத்துபூர்வமாக வாக்குறுதியளித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தின் படி, "போட்டி பொருளாதாரம்" என்ற பிரிவில், சர்வதேச நிதி மூலதனம் மற்றும் அதன் தரகு உள்நாட்டு முதலாளிகளின் அதிகூடிய இலாபங்களுக்கான அதன் உறுதிப்பாட்டை அது அறிவிக்கிறது. "தனியார் துறை என்பது வளர்ச்சியின் இயந்திரம்" என்ற முதலாளித்துவ ஆட்சியாளர்களால் நீண்ட காலமாக பட்டையடிக்கப்பட்ட ஒரு கருத்துடன் அது தொடங்குகிறது. அதன்படி, அந்த அறிக்கையில், "அரசு மிகவும் மூலோபாய நிறுவனங்களை மட்டுமே இயக்கும்" என்ற வாக்கியம் சேர்க்கப்பட்டுள்ளது, இது பொதுத்துறை தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை பின்பற்றுவதாக அறிவிப்பதாகும்.

மீதமுள்ள அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் "பிரதானமாக வணிக அடிப்படையில் பேணப்படும் அரசுக்கு சொந்தமான உற்பத்தி தொழிலாக நிர்வகிக்கப்படும் பொறுப்புடைமை நிறுவனத்தின் கீழ் வைக்கப்படும்.”

பிரேமதாசவின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில், “இலங்கையில் கூட, 1977இல் தொடங்கிய திறந்த பொருளாதார கொள்கையின் நேரடி விளைவாகவே வறுமை ஒழிக்கப்பட்டது,” என்று அறிவித்து தொழிலாள வர்க்கம் எழும்புவரை சுரண்டப்படும் “திறந்த பொருளாதார” கொள்கை கொண்டாடப்படுகிறது. உண்மை என்னவென்றால், செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையிலான இடைவெளி அன்றாடம் விரிவடைந்து வருகின்றது. 2016 அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, இலங்கையின் பணக்கார 20 சதவீதம் பேர் மொத்த குடும்ப வருமானத்தில் 51 சதவீதத்தையும், ஏழ்மையான 20 சதவீதம் பேர் வெறும் 5 சதவீதத்தை மட்டுமே பெறுகின்றனர்.

ஒவ்வொரு மாகாணத்திற்கும் "சிறப்பு பொருளாதார மண்டலங்களை" அமைப்பதன் மூலமும், தற்போதுள்ள தொழிலாளர் சுரண்டலுக்கு இழிபுகழ் பெற்ற சுதந்திர வர்த்தக வலயங்களை இரட்டிப்பாக்குவதன் மூலமும் மலிவான உழைப்பை சுரண்டுவதற்கு சர்வதேச நிதி மூலதனத்திற்கு பிரேமதாச உறுதியளிக்கிறார்.

அதே நேரத்தில், இந்த விஞ்ஞாபனம் பெருவணிகத்திற்கான வரி நிவாரணம் மற்றும் பிற வசதிகளையும் வழங்குகிறது. “100 மில்லியன் டாலர் வரையிலான அனைத்து முதலீடுகளுக்கும் 100 சதவிகிதம் தேய்மானம் வழங்கப்படுவதற்கும் மேலாக 100 சதவீத மூலதன கொடுப்பனவையும் உத்தரவாதம் செய்கின்ற அதேவேளை, 150 மில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீடுகளுக்கு மேலதிகமாக நூற்றுக்கு 150 சதவீத மூலதனக் கொடுப்பனவை வழங்கவும் பிரேமதாச வாக்குறுதி அளித்துள்ளார்.

அதாவது பெரும் வர்த்தகர்களுக்கு தேவையான போது தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யக் கூடியவாறு நிலைமைகளை உருவாக்குவதை அர்த்தப்படுத்தி, சேவை வழங்குனர்களின் அவசியத்தை இட்டு நிரப்புவதற்காக "மிகவும் நெகிழ்வான உழைப்புப் படையை" வழங்க பிரேமதாச உறுதியளிக்கிறார். குறைந்த ஊதியம் பெறும் ஒப்பந்தத் தொழிலாளர்களை வழங்கும் “மனிதவள முகமைகளை” ஒழுங்குபடுத்துவதன் மூலம் முன்னேற்றங்களை செய்வதாக விஞ்ஞாபனம் கூறுகிறது.

பல்கலைக்கழகங்களுக்காக மாணவர்களுக்கு 1.6 மில்லியன் ரூபா வரை வட்டி இல்லாத கடன்களை வழங்குவதன் மூலம், அரசு பல்கலைக்கழகங்களை மேலும் பாதாளத்துக்குள் தள்ளி தனியார் கல்வியின் விரிவாக்கும் முயற்சியாகும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு பயிரிடப்பட்ட நிலத்தை வழங்குவதன் மூலம் மாத வருமானத்தை 1,500 ரூபாவாக ஆக்க முடியும் என்று பிரேமதாசவின் கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தொழிலாளர் எதிர்ப்பின் மத்தியில் சுரண்டலை தீவிரப்படுத்துவதற்காக தோட்ட கம்பனிகள் கொடுத்த வாக்குறுதியாகும். இதன் மூலம் தொழிலாளர் உரிமைகள் அபகரிக்கப்பட்டு, தொழிலாளர்கள் மீது குறைந்த வருமானத்தை திணிக்கும் "குத்தகை விவசாய" முறைக்கு தனது முழு ஆதரவையும் உறுதியளிப்பதாகும்.

“நலன்புரி சேவைளை” மிகைப்படுத்திக் காட்டி, தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் வாக்குகளை இழிந்த முறையில் சுரண்டிக்கொண்டு ஆட்சிக்கு வந்து, மேற்கண்ட வேலைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமெனில், அதற்கு எதிரான போராட்டங்களை நசுக்குவதற்கு ஒரு சர்வாதிகார ஆட்சியை உருவாக்கினாலயே சாத்தியம். உழைக்கும் மக்களுக்கு, கோடாபய இராஜபக்ஷவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் எவரையும் தேர்வு செய்துகொள்ள முடியாது.

சர்வதேச சோசலிசத்தின் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இந்த தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதற்கு தொழிலாளர்கள் தங்களைச் சூழ ஏழைகளையும் இளைஞர்களையும் அணிதிரட்டிக்கொண்டு ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராட வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) முன்னெடுக்கும் இந்தப் போராட்டத்துடன் இணைந்து, சோ.ச.க. ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனேவுக்கு ஆதரவளிக்குமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம்.