Print Version|Feedback
ජනාධිපතිවරනයට ඉදිපත් වී සිටින ධනපති අපේක්ෂකයන් ගැන වතු කම්කරුවෝ පිලිකුල පලකරති
இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான முதலாளித்துவ வேட்பாளர்கள் மீது தோட்டத் தொழிலாளர்கள் வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள்
M. Thevarajah
2 November 2019
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, நவம்பர் 3 அன்று ஹட்டன் நகர மண்டபத்தில் நடைபெறவிருக்கும் கூட்டத்தை கட்டியெழுப்புவதற்காக கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குழு கடந்த சில நாட்களாக போகவந்தலாவ, ஹட்டன், டிகோயா மற்றும் அக்கரப்பத்தனையில் பிரச்சாரம் செய்து வருகிறது.
பிரித்தானிய கம்பனிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தோட்டங்களில் கூலித் தொழிலாளர்களாக உழைக்க பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களால் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களே இலங்கை தோட்டத் தொழிலாளர்களாவர். ஏறக்குறைய 200,000 தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுமாக சேர்த்து சுமார் ஒரு மில்லியன் தோட்டத் தொழிலாளர்கள் குடும்பங்களில் பெரும்பாலோர் பிரிட்டிஷ் ஆட்சியின் போது கட்டப்பட்ட பழைய லயின் (வரிசை) அறைகளிலேயே இன்னமும் வாழ்கின்றனர்.
தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையில் தொழிலாள வர்க்கத்தின் வறிய பகுதியினர் ஆவர். குறைந்தபட்ச ஊதியங்கள், மோசமான வேலை நிலைமைகள், வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் கல்வி உட்பட அடிப்படை சமூக வசதிகள் கூட அவர்களுக்கு கிடையாது. முதலாளித்துவ அரசாங்கங்கள், தோட்ட கம்பனிகள் மற்றும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் கருவிகளாக செயல்படும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை கடுமையான சுரண்டலுக்கு உட்படுத்தியுள்ளன.
கடந்த டிசம்பர்-ஜனவரி மாதங்களில் தோட்டத் தொழிலாளர்கள் தினசரி 1,000 ரூபா ஊதியம் கோரி நடத்திய போராட்டத்தை காட்டிக் கொடுத்த தொழிற்சங்க தலைவர்கள், அரசாங்கத்தின் உதவியுடன் கம்பனிகள் நிர்ணயித்த சம்பளத்தை திணித்தனர். அதன்படி, தொழிலாளர்கள் ஒரு அற்ப ஊதிய உயர்வான 20 ரூபாயை மட்டுமே பெற்றனர். அரசாங்கம் 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவு வழங்குவதாக உறுதியளித்த போதிலும், பின்னர் நிராகரித்துவிட்டது. தொழிற்சங்கங்களின் துரோகத்தால் பலம்பெற்ற தோட்டக் கம்பனிகள், இப்போது தொழிலாளர்களை சுரண்டுவதை தீவிரப்படுத்தும் வருமானப் பங்கீடு மற்றும் வேலை இலக்குகளை அதிகரிப்பதையும் அமுல்படுத்த்த் தொடங்கியுள்ளன.
மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர் கோட்டாபய இராஜபக்ஷவை ஆதரிக்கும் அதே வேளை, தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா.) மற்றும் மலையக மக்கள் முன்னணியும் (ம.ம.மு.) தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் (LJEWU) ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றன.
ஜே.வி.பி தலைமையிலான அனைத்து இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமானது தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரா குமார திசாநாயக்கவை ஆதரிக்கிறது.
கோடாபய இராஜபக்ஷவும் திசாநாயகவும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா நாள் சம்பளம் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ள அதே நேரம், பிரேமதாச 1,500 ரூபா கொடுப்பதாக கூறியுள்ளார். இவை அனைத்தும் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்கான பொய் தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமே.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் நடத்திய பிரச்சாரத்தில், பாணி விஜேசிறிவர்தன சர்வதேச சோசலிசக் கொள்கையின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை அறிவிக்கும், உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகளின் நூற்றுக்கணக்கான பிரதிகள் தொழிலாளர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன.
ஃபோடைஸ் தோட்டத்தில் சோ.ச.க. பிரச்சாரம்.
சோ.ச.க. பிரச்சாரகர்களுடன் பேசிய தொழிலாளர்கள் தாங்கள் எதிர்கொண்ட கடினமான சமூக மற்றும் வேலை நிலைமைகளை விவரித்து முதலாளித்துவ கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் மீது சீற்றத்தை வெளிப்படுத்தினர்.
பி. ஆனந்தராஜா, பொகவந்தலாவை மோரா தோட்டத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி ஆவார். ஆளும் வர்க்கத்தின் அனைத்து கட்சிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் தொழிற்சங்கங்கள் மீது தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் கடுமையான கோபம் இருப்பதாக அவர் கூறினார். “அவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதையும் கொடுப்பதில்லை. சம்பள உயர்வு கோரி 11 நாட்கள் வேலை நிறுத்தம் செய்தோம். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள் நிறைய கஷ்டப்படுகிறோம். இந்த வீடுகளில் மழை நாட்களில் இருக்க முடியாது. கூரையிலிருந்து தண்ணீர் கசியும். ஒரு வீட்டில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் உள்ளன. கழிப்பறைகள் இல்லை. வாங்கும் சம்பளம் போதாது, நாம் எப்படி ஒரு வீட்டை புதுப்பிப்பது அல்லது கட்டுவது? அரசாங்கங்கள் மாறுகின்றன, ஆனால் எங்கள் வாழ்க்கை மாறாது”.
"எங்களை என்றென்றும் முட்டாளாக்க முடியாது," என்று அவர் குறிப்பிட்டார். சஜித் பிரேமதாச மற்றும் நவீன் திசாநாயகவும் அரசாங்கத்தின் அமைச்சர்கள், ஆனால் கம்பனி நஷ்டத்தில் இயங்குகிறது, வாக்குறுதியளிக்கப்பட்ட 50 ரூபாவை வழங்க முடியாது என்று கூறியதை அவர் நினைவூட்டினார். "இவர்கள் அனைவரும் பொய் சொல்கிறார்கள்" என்று அவர் குற்றம் சாட்டினார்: "ஆனால் நீங்கள் வேறு ஒரு திட்டத்தை முன்வைக்கின்றீர்கள். நாங்கள் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும்," என அவர் கூறினார்.
இருபத்தி ஆறு வயதான என். சுதர்சன். ஹட்டன் டிக்கோயாவுக்கு அருகில் ஃபோர்டைஸ் தோட்டத்தில் தேயிலை தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளி ஆவார். அவர், ஜனாதிபதி பிரச்சாரத்தில் ஈடுபட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் பொய் சொல்கிறார்கள் என்றார். “தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ரூபா 1,000 ஆக அதிகரிப்பதாகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து விவசாயிகளுக்கு உதவுவதாகவும் கோடாபய கூறுகிறார். சஜித் பிரேமதாச மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகியோர் இதே போன்ற விஷயங்களைச் சொல்கிறார்கள். தூய்மையான ஆட்சியை நிறுவுவேன் என்று திசாநாயக்க கூறுகிறார். அது நடக்கும் என்று நான் நம்பவில்லை.”
அவர் மேலும் கூறியதாவது: “கோடாபயவுக்காக பிரச்சாரம் செய்ய [இ.தொ.கா.] ஆறுமுகம் தொண்டமன் தோட்டத்திற்கு வந்தபோது, தேர்தலின் போது மட்டும் ஏன் வருகிறார் என்று அவரிடம் கேட்டேன். எங்கள் உரிமைகளுக்காக நீங்கள் போராட மாட்டீர்கள் என்று சொன்னேன். ஆனால் அவர் எந்த பதிலும் கொடுக்கவில்லை. அதிகாரத்தில் உள்ள எந்தவொரு முதலாளித்துவக் கட்சியும் ஒரு இராணுவ அரசாங்கத்திற்குத் தயாராகி வருவதையும், தொழிற்சங்கங்களால் எந்தப் பயனுமில்லை என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன்.
"அவர்கள் எங்கள் உரிமைகளுக்காக போராடவில்லை. தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து நடவடிக்கை குழுக்களை உருவாக்கும் திட்டத்துடன் நான் உடன்படுகிறேன். தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுடன் உறுதியாக இணைந்திருப்பதால் இது ஒரு கடினமான பணி. அவர்களுக்கு கல்வி ஊட்டுவதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இந்த விஷயங்களை மேலும் தெளிவுபடுத்த நான் மூன்றாம் திகதி ஹட்டனுக்கு வருகிறேன்,” என்று அவர் கூறினார்.
பி.கோமதி
ஃபோர்டைஸ் தோட்டத்தில் ஒரு பெண் தொழிலாளி, தோட்டத் தொழிலாளர்களைப் போல வேறு எந்த தொழிலாளியும் ஆபத்துகளையும் கஷ்டங்களையும் எதிர்கொள்வார் என்று தான் நினைக்கவில்லை என்றார். “நாங்கள் மழை, பாம்புகள், சிறுத்தைகள் மற்றும் பன்றிகளின் ஆபத்துக்கு மத்தியில் வேலை செய்ய வேண்டும். ஆனால் எங்களுக்கு ஒரு நாளைக்கு ரூபா 700 மட்டுமே கிடைக்கின்றது. முன்னதாக, நான் 750 ரூபா பெற்றேன். கடந்த மாத சம்பளத்திலிருந்து 50 ரூபாய் குறைந்துவிட்டது. காரணம் தெரியவில்லை. பொருட்களின் விலை ஒவ்வொரு நாளும் உயர்கிறது. நாம் எப்படி வாழ்வது பிள்ளைகளை வளர்ப்பது? தொழிற்சங்கங்கள் யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கலாம் ஆனால் நாங்கள் யாருக்கும் வாக்களிக்கப் போவதில்லை. நீங்கள் ஒரு தொழிலாளர் அரசாங்கத்தைப் பற்றி பேசுகிறீர்கள். அத்தகைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர முடிந்தால் நன்றாக இருக்கும். எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால், எங்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.”
பி.கோமதி அகரபத்தனையில் பெரியநகம தோட்டத்தில் வேலை செய்யும் பெண். அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை தேர்தலின் போது மட்டுமே சந்திப்பதாக அவர் குற்றம் சாட்டினார். “நாங்கள் நரகத்தில் வாழ்கிறோம். அவர்கள் எங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. நாங்கள் யாருக்கும் வாக்களிக்க மாட்டோம், என்றார்.
1,000 ரூபா சம்பளத்திற்கான போராட்டத்தை தொழிற்சங்கங்கள் காட்டிக் கொடுத்ததாக அவர் நினைவு கூர்ந்த அவர், தீபாவளி திருவிழாவிற்கு ரூ.15,000 முன்கூட்டியே தருவதாகக் கூறினர். எனினும், அக்டோபர் 23 வேலை நிறுத்தம் செய்த பின்னரே 10,000 ரூபாவை கொடுத்தனர், என அவர் கூறினார்.
"தொழிற்சங்கத் தலைவர்கள் பொய்யர்கள்" என்று அவர் புகார் கூறினார்: "நாங்கள் கடினமான நிலையில் வாழும்போது, அவர்கள் மிகவும் வசதியான வாழ்க்கை வாழ்கிறார்கள். நாங்கள் பெறும் மிகச்சிறிய சம்பளத்துடன், ஒரு பண்டிகை விடுமுறைக்கு ஒரு பிள்ளைக்கு உடுப்பு வாங்குவது மிகக் கடினமே." கோமதியின் மகள் மற்றும் அவரது கணவரால் பேச முடியாது. ஆனால் அவர்களுக்கு சமுர்தி மானியம் கிடைக்கவில்லை. அவர்கள் வாடகை வீட்டில் ரூபா 2,000 மாதம் செலுத்தி தங்கியிருக்கின்றனர். மூன்று குடும்பங்கள் கோமதியின் வீட்டில் வசிக்கின்றன..