ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Macron warns Economist magazine of world war, collapse of NATO alliance

மக்ரோன் உலக போர் குறித்தும், நேட்டோ கூட்டணியின் முறிவு குறித்தும் எக்னொமிஸ்ட் பத்திரிகையில் எச்சரிக்கிறார்

By Alex Lantier
9 November 2019

20 ஆம் நூற்றாண்டில் இரண்டு முறை உலக போராக வெடித்த ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான கட்டுப்பாட்டில் வைக்க முடியாத பிளவுகள், உலக முதலாளித்துவ விவகாரங்களுக்கு முக்கியமான சர்வதேச உறவுகளுக்கு மீண்டும் குழிபறித்து வருகின்றன. இதுதான், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் பிரிட்டனின் எக்னொமிஸ்ட் பத்திரிகைக்கு வழங்கிய ஒரு நீண்ட, ஆழ்ந்த அவநம்பிக்கையான பேட்டியின் உள்ளடக்கமாக இருந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையிலான நேட்டோ கூட்டணி மரணிக்க இருப்பதாக அவர் அறிவித்தார். ஒரு பிரெஞ்சு ஜனாதிபதியின் இந்த பேட்டி, நினைவில் உள்ள காலத்தில் முன்னோடியில்லாத அறிக்கைகளைக் கொண்டிருந்தன.

மக்ரோன் முதலில் உலக சூழ்நிலை குறித்து அவரின் மனக்குழப்பத்தையும் அமெரிக்க கொள்கை மீது அவரின் ஏமாற்றத்தையும் வெளியிட்டார்: “நான் தெளிவுபடுத்த முயல்கிறேன், ஆனால் உலகில் என்ன நடந்து கொண்டிருக்கின்றன என்பதைப் பாருங்கள்,” என்றார். “ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இது சிந்திக்க முடியாததாய் இருந்திருக்கும். பிரெக்ஸிட் விவகாரத்தில் நம்மை நாமே இவ்விதத்தில் சோர்வாக்கி கொண்டிருப்பது, ஐரோப்பா முன்நகர்வதை மிகவும் சிரப்படுத்துகிறது, ஓர் அமெரிக்க கூட்டாளி மூலோபாய பிரச்சினைகளில் இந்தளவுக்கு விரைவாக நம்மை நோக்கி முதுகைக் காட்டுகிறது — இது நடக்குமென யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.”

மக்ரோன் உலக போர் அபாயத்திற்கு அழுத்தமளித்து அவர் குறிப்பிடுகையில், மத்தியக் கிழக்கில் இருந்து ரஷ்யா, சீனா மற்றும் உலகளாவிய நிதியியல் வரை பரந்தளவிலான அமெரிக்க கொள்கையை அவர் அத்தியாவசிய பிரெஞ்சு நலன்களுக்கு அச்சுறுத்தல்களாக பார்ப்பதாக தெரிவித்தார். சிரியாவில் நேட்டோ போர்களுக்குப் பினாமிகளாக சேவையாற்றிய குர்திஷ் போராளிகள் மீதான துருக்கிய தாக்குதலுக்கு பச்சைக் கொடி காட்டும் முகமாக, சிரியாவில் இருந்து அமெரிக்க துருப்புகளை ட்ரம்ப் பின்னுக்கு இழுத்துக் கொண்டதை அவர் தாக்கினார்.

“நாம் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றால், நான் நினைக்கிறேன், நேட்டோ மூளைச்சாவு அடைந்துவிட்டது,” என்று தெரிவித்த மக்ரோன், நேட்டோவின் கூட்டு தற்காப்பு சம்பந்தமான ஷரத்து 5 பிரான்சை அதன் பெயரளவிற்கான நேட்டோ கூட்டாளியான துருக்கி தொடங்கிய போரில் சிரியா மற்றும் சிரியாவின் பிரதான கூட்டாளி ரஷ்யாவுக்கு எதிராக பிரான்சை உள்ளிழுக்கக்கூடும் என்பது குறத்த அவர் கவலையைச் சுட்டிக்காட்டினார். “ஷரத்து 6 என்பது நாளை என்ன அர்த்தப்படுத்தும்? (சிரிய ஜனாதிபதி) பஷர் அல்-அசாத்தின் ஆட்சி துருக்கிக்கு எதிராக எதிர்தாக்குதல் நடத்த முடிவெடுக்கிறது என்றால், நம்மை நாமே இராணுவரீதியில் பொறுப்பேற்க தயாராவோம்? … ஒரு மூலோபாய மற்றும் அரசியல் நிலைப்பாட்டில் இருந்து, என்ன நடந்துள்ளது என்றால் நேட்டோவுக்காக ஒரு மிகப்பெரிய பிரச்சினை உள்ளது,” என்றார்.

மக்ரோன், ஒரு பிரதான அணுஆயுத சக்தியான ரஷ்யாவை நோக்கிய அமெரிக்க கொள்கையையும் தாக்கினார்: “அமெரிக்கா ரஷ்யாவுடன் மிகவும் கடுமையாக இருக்கையில், அதுவொரு வகையான அரசுரீதியான, அரசியல்ரீதியான மற்றும் வரலாற்றுரீதியான விஷமப் பிரச்சாரமாக இருக்கிறது,” என்றார்.

அமெரிக்க கொள்கை ரஷ்யாவுடன் முற்றுமுழுதான போரைத் தூண்டலாம், அதற்கு பதிலாக மாஸ்கோவுடன் ஒரு கூட்டணியை அபிவிருத்தி செய்வதற்கு அவர் வலியுறுத்தினார்: “ஐரோப்பாவில் நாம் அமைதியைக் கட்டமைக்க விரும்பினால் மற்றும் ஐரோப்பிய மூலோபாய சுய-அதிகாரத்தைக் கட்டமைக்க விரும்பினால், நாம் ரஷ்யாவை நோக்கிய நமது நிலைப்பாட்டை மறுபரிசீலினை செய்தாக வேண்டும்,” என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், "உலகம் ஒரு மிகப்பெரிய மோதலுக்குள் நுழைவதைத் தடுக்க ஒவ்வொருவரிடமும் பேசி அதற்கான உறவுகளைக் கட்டமைக்க" பிரான்சால் முடியும்,” என்றார்.

“கடந்த 15 ஆண்டுகளில், வலுவான சீன எழுச்சி, இருதுருவமுனைப்படல் அபாயத்தை உயர்த்தி இருப்பதுடன் தெளிவாக ஐரோப்பாவை ஓரங்கட்டும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. அமெரிக்க-சீனா 'ஜி2' அபாயம், ஐரோப்பாவுக்கு அருகே,” ரஷ்யா மற்றும் துருக்கி போன்ற "எதேச்சதிகார சக்திகள் திரும்பி வந்திருப்பதுடன்" சேர்ந்துள்ளது என்றும் மக்ரோன் எச்சரித்தார். சீன விஜயத்திலிருந்து சமீபத்தில் தான் திரும்பி இருந்த அவர், 15 பில்லியன் டாலர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, சீனா மற்றும் ஐரோப்பாவுக்கு எதிரான அமெரிக்க வர்த்தகப் போர் வரிவிதிப்புகளை அங்கே அவர் கண்டித்திருந்த நிலையில், ஐரோப்பிய மற்றும் உலகளாவிய இணைய கட்டமைப்பை அமைப்பதில் இருந்து வாஷிங்டனால் ஒதுக்கப்பட்ட ஒரு நிறுவனமான ஹூவாய் சம்பந்தமாக அவர் "நடுநிலையுடன்" இருப்பதாக மக்ரோன் தெரிவித்தார்.

மக்ரோன், முன்னணி முதலாளித்துவ நாடுகளுக்கு இடையே சந்தைகளுக்கான கடுமையான மோதல்கள் இருப்பதை உயர்த்திக் காட்டினார். அமெரிக்க நிதியியல் பொறிவு குறித்த அச்சங்கள் அதனுடன் சேர்ந்து ஐரோப்பாவையும் இழுத்துக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அமெரிக்க வர்த்தகப் போர் கொள்கைகளை தாக்கி, அறிவித்தார்: “ஐரோப்பா பெரும் சேமிப்புகளைக் கொண்ட ஒரு கண்டம். இந்த சேமிப்புகளில் பெரும்பகுதி அமெரிக்க அரசாங்க கடன் பத்திரங்களை வாங்க செல்கிறது. ஆகவே எங்களின் சேமிப்புகள் அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு நிதி அளிக்கிறது, அதன் உறுதியற்ற தன்மை எங்களை ஆபத்தான நிலையில் வைக்கிறது. அது அபத்தமானது.”

அமெரிக்க வர்த்தகப் போர் கொள்கைகளை அவர் ஏற்றுக் கொள்ள இயலாதவையாக பார்ப்பதாக வலியுறுத்தி மக்ரோன் இதையும் சேர்த்துக் கொண்டார்: “ட்ரம்ப் … நேட்டோ பிரச்சினையை ஒரு வர்த்தகப் பிரச்சினையாக முன்நிறுத்துகிறார். அவரைப் பொறுத்த வரையில், இது அமெரிக்காவுக்கு ஒரு விதமான புவிசார் அரசியல் பாதுகாப்பு வழங்கும் திட்டமாகும், ஆனால் அதற்கு பிரதிபலனாக, அங்கே பிரத்யேக வர்த்தக உறவு உள்ளது. இதுதான் அமெரிக்க தயாரிப்புகளை வாங்குவதற்கான காரணம். ஆனால் பிரான்ஸ் அதுபோன்றவொரு கூட்டணிக்காக கையெழுத்திடவில்லை,” என்றார்.

அவரும் ஐரோப்பாவின் மற்ற அரசு தலைவர்களும் ட்ரம்ப் உடனான உறவுகள் மீதான நம்பகத்தன்மை சம்பந்தமாக மட்டுமல்ல, மாறாக அமெரிக்கா உடனான 70 ஆண்டுகால நேட்டோ கூட்டணி சம்பந்தமாகவும் நீண்டகால தாக்கம் ஏற்படுத்தும் தீர்மானங்களை வரைந்து வருவதாக மக்ரோன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

"இது உங்களின் அண்டைநாடு, என்னுடையது அல்ல" என ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் கூறி, மத்திய கிழக்கைப் பற்றிய தனது கவலையை நிராகரித்ததையும் மக்ரோன் மேற்கோள் காட்டினார்: “சில கூட்டணிகள் அல்லது குறிப்பிட்ட உறவுகளின் நம்பகத்தன்மை கேள்விக்கிடமானது என்று அமெரிக்க ஜனாதிபதி கூறுகையில், … நாம் விரும்பாவிட்டாலும் கூட, பொறுப்பாக செயல்படுவதற்காக அதிலிருந்து நாம் தீர்மானங்களை எடுக்காமல் இருக்க முடியாது, அல்லது எதேனும் சந்தர்ப்பத்தில் பிரதிபலிக்க தொடங்காமல் இருக்க முடியாது. நம் பங்காளிகளில் பலரும் இதை பார்த்திருக்கிறார்கள் என்றே நான் நம்புகிறேன், இந்த வகையில் விடயங்கள் நகரத் தொடங்கி உள்ளன,” என்றார்.

எக்னொமிஸ்ட் பத்திரிகை மக்ரோன் பேட்டியின் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை கட்டண வாசகர்களுக்கு மட்டுமே கிடைக்கச் செய்தது என்றாலும், அது நேட்டோ அதிகாரிகளிடையே ஏற்பட்ட கலக்கத்தை மாற்றிவிடவில்லை. பேர்லின் சுவரின் வீழ்ச்சியின் 30 ஆம் நினைவாண்டுக்காக வந்திருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ மக்ரோனுக்கு விடையிறுக்கையில், “நேட்டோ, பதிவு செய்யப்பட்டுள்ள வரலாறு அனைத்திலும், ஒரு தனிச்சிறப்பான, முக்கியமான, அனேகமாக வரலாற்றுரீதியில் அதிமுக்கிய, மூலோபாய பங்காண்மைகளில் ஒன்றாக இருந்துள்ளதாக நான் கருதுகிறேன்,” என்றார்.

ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மக்ரோன் கருத்துக்களைக் "கடுமையான வார்த்தைகள்" என்று குறிப்பிட்டதுடன், “இதுபோன்ற கடுமையான தீர்மானங்கள் அவசியமென நான் கருதவில்லை, நமக்குள் பிரச்சினைகள் இருந்தாலும் கூட, ஒன்று சேர்த்து முன்னெடுத்து செல்ல வேண்டும்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

ஆனால் உண்மையில், ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் பரந்த பிரிவுகள் மக்ரோனுடன் உடன்படுகின்றன. “மக்ரோன் சரியே,” என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில், ஜேர்மனியின் Der Spiegel இதழ் எழுதியது, “நேட்டோ மூளை செத்துவிட்டதாக பிரெஞ்சு ஜனாதிபதி அறிவித்துள்ளார், அங்கே பெரும் சீற்றம் உள்ளது. ஆனால் இன்றியமையாத விதத்தில், மக்ரோனின் பகுப்பாய்வு சரியானதே,” என்றது.

அது தொடர்ந்து குறிப்பிட்டது, “மூளை செத்தவர்களின் உடலத்தில் உயிர் இருப்பதாக தெரியும், ஆனால் உண்மையில் அவர் இறந்திருப்பார், அவருக்கு எந்தவிதமான சிகிச்சையும் பலனளிக்காது. நேட்டோ குறித்து பிரெஞ்சு ஜனாதிபதி இதைத்தான் நினைக்கிறார்.” நேட்டோ மீதான மக்ரோனின் "கடுமையான தீர்மானங்கள்" குறித்த மேர்க்கெலின் விமர்சனத்தைப் ஒதுக்கிவிட்டு, Der Spiegel அறிவித்தது: “யதார்த்தத்தில், இது நேட்டோவுக்கு வெறும் ஒரு பலவீனமான பாதுகாப்பாகும். நிஜத்தில் நோயாளியே தன்னை அதுபோன்றவொரு நிலைமையில் பார்க்கிறார் என்பது மேர்க்கெலுக்கும் தெரியும்.”

20 ஆம் நூற்றாண்டில் இரண்டு முறை உலகப் போருக்குள் மூழ்கடித்த, ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான 70 ஆண்டுகால கூட்டணியின் முறிவு குறித்து ஆளும் வட்டாரங்களில் நடந்து வரும் விவாதம் மிகவும் அபாயகரமான ஒரு நெருக்கடியைச் சுட்டிக்காட்டுகிறது. மீண்டும் இந்த முதலாளித்துவ அமைப்புமுறை, இம்முறை அணுஆயுதங்களைக் கொண்டு போரிடப்படும் ஓர் உலகளாவிய பெரும் மோதலைக் கொண்டு அச்சுறுத்தி வருகிறது.

குறிப்பிடத்தக்க வகையில், மக்ரோன் அவரே நேட்டோவுக்குள் என்ன மேலெழுந்து கொண்டிருக்கிறதோ அது கடந்து சென்று விடக்கூடிய ஒரு பூசல் இல்லை, மாறாக 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்புக்குப் பின்னர் இருந்து தசாப்தங்களாக ஏகாதிபத்திய போர்கள் சம்பந்தமாக தயாரிப்பு செய்யப்பட்ட சர்வதேச உறவுகள் ஆழமாக உடைந்து வருகிறது என்பதை வலியுறுத்தினார்.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது மார்க்சிச திவால்நிலைமையின் விளைவல்ல, மாறாக ஸ்ராலினிசத்தின் தேசியவாத, தன்னிறைவு பொருளாதார மற்றும் ட்ரொட்ஸ்கிச-விரோத பொருளாதார வேலைதிட்டத்தின் விளைவாகும் என்பதை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஏற்கெனவே விளக்கியிருந்தது. ஸ்ராலினிச ஆட்சிகளை முந்திச் சென்ற முதலாளித்துவ அரசுகள் நேரடியாக உலக சந்தைகளின் ஆதார வளங்களைக் கையாள முடிந்தது என்றால், அதற்கு முதலாளித்துவ பூகோளமயமாக்கலுக்குத் தான் நன்றி கூற வேண்டியிருக்கும். 1980 களில் அதிகரித்து வந்த தொழிலாள வர்க்க போர்குணத்தை முகங்கொடுத்த ஸ்ராலினிச அதிகாரத்துவம் முதலாளித்துவ சொத்துரிமைகளை மீட்டமைத்து, ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமான உறவுகளை நிறுவியது.

1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், இதை "வரலாற்றின் முடிவாக", மார்க்சிசத்தின் மரணமாக மற்றும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் இறுதி வெற்றியாக கூறி வாதிட்ட பிரான்சிஸ் புக்குயாமா போன்ற முதலாளித்துவ பிரச்சாரகர்களை ICFI எதிர்த்தது. உண்மையில், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது, முதலாளித்துவம் வேரூன்றி உள்ள தேசிய-அரசு அமைப்புமுறையின் தீவிரமடைந்து வரும் நெருக்கடியின் ஒரு பிரதிபலிப்பாக இருந்தது. இந்த நெருக்கடி, குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா எங்கிலும் நேட்டோ ஏகாதிபத்திய போர்களின் அலைக்கு மத்தியில், முதலாளித்துவ அரசுகளையும் பலவீனப்படுத்தி கொண்டிருந்தது.

வங்கியாளராக இருந்து ஜனாதிபதியான மக்ரோன் ஐயத்திற்கிடமின்றி சோசலிசத்திற்கு ஒரு வெறித்தனமான எதிர்ப்பாளர் தான் என்றாலும், இந்த பகுப்பாய்வு தெளிவாக அவர் அரசாங்கத்திற்குள் விவாதிக்கப்பட்டுள்ளது. அவர் எக்னொமிஸ்ட் க்குத் தெரிவித்தார்: “1990 கள் மற்றும் 2000 களில் பரவிய கருத்துரு, மேற்கு முகாம் வென்றிருந்த மற்றும் தன்னை உலகமயப்படுத்தக் கூடிய வரலாற்றின் முடிவு மற்றும் ஜனநாயகத்தின் வரம்பற்ற விரிவாக்கம் குறித்த கருத்துக்களைச் சுற்றித்தான் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தது. 2000 கள் வரையில் நாம் இந்த வரலாற்றின் மீதுதான் வாழ்ந்து கொண்டிருந்தோம், இப்போது பல தொடர்ச்சியான நெருக்கடிகள் அது உண்மையில்லை என்பதை எடுத்துக்காட்டியது.”

“நமது மதிப்புகளைத் திணிக்க முயன்றதன் மூலமாகவும், மக்கள் ஆதரவு இல்லாமல் ஆட்சி மாற்றங்களைச் செய்ய முயன்றதன் முயன்றதாலும் சில வேளைகளில் நாம் தவறுகள் இழைத்துள்ளோம். இதைத்தான் நாம் ஈராக் மற்றும் லிபியாவில் பார்த்தோம் … ஒருவேளை சிரியாவில் திட்டமிடப்பட்டதும் இதுவாக இருக்கலாம், ஆனால் அது தோல்வியடைந்தது. அது மேற்கத்திய அணுகுமுறையின் கூறுபாடாகும், பொதுவான அர்த்தத்தில் நான் கூறுவது, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து அதுவொரு பிழையாக இருந்தது, வெளிநாடுகளில் தலையீடு செய்வதற்கான உரிமை மற்றும் நவ-பழமைவாதம் ஆகிய இரண்டு போக்குகள் ஒன்றொடொன்று கலந்ததன் காரணமாக அனேகமாக அது துயரகரமான ஒன்றாக இருந்தது,” என மக்ரோன் ஒப்புக் கொண்டார்.

கடந்த 30 ஆண்டுகளாக பிரதான நேட்டோ அரசாங்கங்களின் கொள்கைகள் அனைத்தும் அரசியல்ரீதியில் குற்றகரமாக இருந்தன என்பதை மக்ரோன் ஒப்புக் கொள்கிறார். ஆனால் போர்களுக்காக அமெரிக்கா மட்டுமே "8 ட்ரில்லியன் டாலர்களை" செலவிட்டிருப்பதாகவும் அவற்றில் "மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும்", அந்த போர்கள் "ஒரு பொய்யான மற்றும் நிரூபிக்கப்படாத அனுமானங்களின் மீது அமைக்கப்பட்டு" இருந்ததாகவும் ட்ரம்ப் ஒரு ட்வீட் செய்தியில் குறிப்பிட்டிருந்ததை மக்ரோன் மீண்டும் நினைவூட்டவில்லை. மக்ரோனைப் பொறுத்த வரையில், அவரே கூட 2013 இல் சிரியா மீது குண்டு வீசுவதற்கு அழுத்தமளித்த பிரெஞ்சு அரசாங்கத்தில் ஒரு முன்னாள் மந்திரியாக ஆழமாக உடந்தையாக இருந்துள்ளார்.

ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் ஒரு போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பதன் அவசர அவசியத்தையே மக்ரோனின் கருத்துக்கள் சுட்டிக் காட்டுகின்றன. முதலாளித்துவ அமைப்புமுறை திவாலானது மட்டுமில்லை, குற்றகரமானதும் ஆகும். முன்னணி முதலாளித்துவ அதிகாரிகள் அவர்களே ஒப்புக் கொண்டுள்ள விதத்தில், சந்தைகள் மற்றும் மூலோபாய ஆதாயங்கள் சம்பந்தமாக அதன் தீவிரமடைந்து வரும் மோதல்கள் உலகை ஒரு முற்றுமுதலான பெரும் மோதலின் விளிம்பில் நிறுத்தி உள்ளது.

இந்த நிலைமையைச் சரி செய்வதற்கு மக்ரோன் விவரிக்கும் பிற்போக்குத்தனமான முன்னோக்கு — பெயரிட்டு கூறுவதானால் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக உளவுபார்ப்பு முகமைகளுக்கு இடையே சர்வதேச கூட்டுறவை அதிகரிப்பது — ஏகாதிபத்தியங்களுக்கு இடையே சந்தைகள் மற்றும் மூலோபாய அனுகூலங்களுக்காக அடியில் நடந்து வரும் மோதல்களைத் தீர்த்துவிடாது. உண்மையில், முதலாளித்துவ அடித்தளத்தில் மக்ரோன் முன்மொழியும் தீர்வு, மோதல்களை மட்டுமே தீவிரப்படுத்தும் என்பதே வெளிப்படையாக உள்ளது.

“நம்பிக்கை மற்றும் பாதுகாப்புக்கான ஒரு கட்டமைப்பு என்று நான் குறிப்பிட்டதை எவ்வாறு கட்டமைப்பது … நாம் தெளிவாக மூலோபாய உறவைக் குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டும்,” என்று கூறிய மக்ரோன், “நமது உளவுபார்ப்பு முகமைகள் இணைந்து செயல்படுமாறு செய்ய வேண்டும், அச்சுறுத்தல் குறித்து ஒரே தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், நமது ஒட்டுமொத்த அண்டைநாடுகளிலும் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக அதிகளவில் ஒருங்கிணைந்த விதத்தில் தலையீடு செய்வது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

“ஐரோப்பிய அறிவொளி உடன் 18 ஆம் நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்ட நமது முன்மாதிரி உடன்" இஸ்லாமியவாதத்தை முரண்படுத்தி மக்ரோன் குறிப்பிடுகையில், இஸ்லாமியவாதம் “சுதந்திர பகுத்தறிவாளர்களைச் சார்ந்துள்ள ஐரோப்பிய மனிதாபிமான மதிப்புகளுக்கும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான சமத்துவத்திற்கும் மற்றும் விடுதலைக்கும் படுமோசமான எதிரியாகும்,” என்றார்.

இது அபத்தமானது. மக்ரோன் அறிவொளியின் பாதுகாவலர் இல்லை, மாறாக ஒரு வலதுசாரி வங்கியாளர் மற்றும் அரசியல்வாதியான இவர், சிக்கன கொள்கைகள் மற்றும் சமூக சமத்துவமின்மை மீதான அவரது கொள்கைகளுக்கு அதிகரித்து வரும் எதிர்ப்பு மீதான அவரின் பொலிஸ் ஒடுக்குமுறையின் பாகமாக இருக்கும் இவர், பிரெஞ்சு புரட்சியைக் குறித்து வருந்தி இருப்பதுடன் பிரான்சுக்கு ஓர் அரசர் தேவைப்படுவதாக அறிவித்திருந்தார். “மனிதாபிமான மதிப்புகளை" அவர் துணைக்கு இழுப்பதைப் பொறுத்த வரையில், அவை பிரெஞ்சு பாதுகாப்பு படைகளில் சர்வசாதாரணமாக அதிகரித்து வரும் நவ-பாசிசவாத இஸ்லாம் வெறுப்புக்கு அவர் செய்யும் தொடர்ச்சியான முறையீடுகளால் பொய்யாக்கப்படுகின்றன.

மக்ரோன் முன்மொழிந்து வரும் கொள்கை, போர் முனைவை நிறுத்துவதற்கான கொள்கையல்ல, மாறாக ஒரு போர்-எதிர்ப்பு இயக்கத்திற்கு எதிராக அணித்திரட்டப்படும் அரசு ஒடுக்குமுறை முகமைகளை இன்னும் கூடுதலாக கட்டி எழுப்புவதற்கான கொள்கையாகும்.