ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Former top military official wins Sri Lankan presidential election

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் உயர் இராணுவ அதிகாரி வெற்றி பெற்றார்

By K. Ratnayake
18 November 2019

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) ஜனாதிபதி வேட்பாளர் கோடாபய இராஜபக்ஷ சனிக்கிழமை நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதாக இலங்கை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

முன்னாள் இராணுவ கர்னலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபய இராஜபக்ஷ 2005 மற்றும் 2014 க்கு இடையில் இலங்கை பாதுகாப்பு செயலாளராக இருந்தார். 2009 மே மாதம் முடிவடைந்த பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை ஈவிரக்கமின்றி முன்னெடுத்தமைக்காக அவர் இலங்கை ஆளும் உயரடுக்கு, இராணுவம் மற்றும் சிங்கள இனவாதிகளாலும் பாராட்டப்படுபவர். தொழிலாளர்களின் போராட்டங்களையும், பத்திரிகையாளர்கள் உட்பட அரசாங்க விமர்சகர்களையும் கொடூரமாக நசுக்கியதற்காகவும் அவர் பரவலாக வெறுக்கப்படுகிறார்.

ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. வேட்பாளர் மொத்த வாக்குகளில் 6.9 மில்லியன் அல்லது 52 சதவிகித வாக்குகளைப் பெற்றார், இதில் பெரும் பகுதி கிராமப்புறங்களில் இருந்து அவருக்கு கிடைத்த ஆதரவாகும். அமெரிக்க சார்பு ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) வேட்பாளர் சஜித் பிரேமதாச 5.5 மில்லியன் வாக்குகளை அல்லது மொத்த வாக்குப்பதிவில் சுமார் 42 சதவீத வாக்குகளைப் பெற்றார். பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் சுமார் 82 சதவீதம் பேர் சனிக்கிழமை வாக்குப்பதிவில் பங்கேற்றனர், இது இலங்கை தேர்தலில் மிக உயர்ந்த வாக்களிப்பு வீதமாகும்.


கோட்டாபய இராஜபக்ஷ

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஆளும் ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கத்தின் மீதும் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனக் நடவடிக்கைகளை அது அமுல்படுத்தியதற்கு எதிராகவும் வளர்ச்சி கண்டுவந்த வெகுஜன எதிர்ப்பின் மத்தியிலேயே இந்தத் தேர்தல் நடைபெற்றது. ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. வேட்பாளருக்கு வாக்களித்த அநேகம் பேர் ஐ.தே.க. அரசாங்கத்திற்கு எதிரான தமது வெறிப்பை வெளிப்படுத்தவே அவ்வாறு செய்தனரே அன்றி, வீழ்ச்சியடைந்த சமூக நிலைமைகளை தூக்கி நிறுத்துவதாக அவர் கொடுத்த வாக்குறுதிகள் நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இராஜபக்ஷவுக்கு வாக்களிக்கவில்லை.

எவ்வாறாயினும், கோடாபய இராஜபக்ஷவின் தேர்வு, சாதாரண உழைக்கும் மக்களின் முன்னேற்றத்தை விட, தற்போதைய அரசாங்கத்தின் சிக்கனத் திட்டத்தை இன்னும் தீவிரப்படுத்துவதையும், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளின் எதிர்ப்பை இரக்கமின்றி அடக்குவதையும் மேற்கொள்ளும்.

பிரச்சாரத்தின்போது, ​​2009 இல் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தனது பங்கைப் பற்றி இராஜபக்ஷ பெருமையாகப் பேசியதோடு, நிலையான அரசாங்கத்தைக் கொண்டுவரத் தேவையான “வலிமையானவர்” என்று அவர் புகழப்படுகிறார். பாதுகாப்பு செயலாளராக, அவர் குறைந்தது 40,000 தமிழ் பொதுமக்கள் படுகொலைக்கு தலைமை தாங்கினார் மற்றும் நேரடியாக போர்க்குற்றங்களில் சிக்கியுள்ளார். எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், விமர்சகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கான சட்டத்துக்குப் புறம்பான முந்தைய கொலைகள் மற்றும் "காணாமல் ஆக்குதல்களை" அரங்கேற்றிய இராணுவ ஆதரவிலான கொலைப்படைகளுக்கும் அவர் பொறுப்பாளியாவார்.

இராஜபக்ஷவின் தேர்வானது எதேச்சதிகார ஆட்சி வடிவங்கள் மற்றும் அடிப்படை அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிமுறைகளை மீறுவதை நோக்கிய கூர்மையான மாற்றத்தை குறிக்கிறது. ஜனாதிபதியாக, அவரும் அவரது சகோதரரும், தொழிலாள வர்க்கத்தை கையாள்வதில், தங்கள் அரசியல் எதிரிகளுக்கும் போரின் போது தமிழ் மக்களுக்கும் எதிராகவும் கையாண்டே அதே குற்றவியல் முறைகளுக்கு அவர் தவிர்க்க முடியாமல் திரும்புவார்.

ஏப்ரல் 21 அன்று சுமார் 300 பேரைக் கொன்ற, ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவுடைய தேசிய தவ்ஹீத் ஜமாத் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, அரசாங்கம் உளவுத்துறை எந்திரத்தை பலவீனப்படுத்தியதாகக் கூறி, ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. அரசாங்கத்தின் மீது எதிர்ப்பைத் தூண்டிவிட்டது.

சமூக பதட்டங்களை இனவாத வழிகளில் திசை திருப்பும் முயற்சியில், கோட்டாபய இராஜபக்ஷ, இலங்கை ஒரு புதிய இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகக் கூறி முஸ்லீம்-விரோத உணர்வை தூண்டிவிட்டதோடு, “புலி பயங்கரவாதம் புத்துயிர் பெறுகிறது” என்று குற்றம் சாட்டினார்.

கோடாபய இராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரம், பயங்கரவாதத்தை தோற்கடிக்க சிறந்த “தேசிய பாதுகாப்புக்கான” அவரது பிரச்சாரத்தை மையமாகக் கொண்டிருந்தது. அதன் உண்மையான நோக்கம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரத்தை கட்டியெழுப்புவதாகும். இந்த பிற்போக்கு செயல்திட்டத்தை ஐ.தே.க. வேட்பாளர் பிரேமதாச மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) வேட்பாளர் அனுர குமார திசாநாயக்கவும் பகிர்ந்து கொண்டு, தமது தேர்தல் பிரச்சாரத்தின் போது தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று கோரினர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளும் தமிழர்களும் முஸ்லிம்களும் கோட்டாபய இராஜபக்ஷைவை நிராகரித்து ஐ.தே.க. வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கோரின. தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளும் மக்கள் மத்தியில் மதிப்பிழந்துள்ள அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இராஜபக்ஷவை தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் பெருமளவில் நிராகரித்தனர்.

பௌத்த ஸ்தாபகம் மற்றும் சிங்கள இனவாதிகளால் வணங்கப்படும் அனுராதபுரத்தில், இராஜபக்ஷ தனது பதவியேற்பு விழாவை நாளை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த நகரம் ஒரு தமிழ் மன்னரை தோற்கடித்து துட்டகைமுனு என்ற மன்னன் ஆட்சி செய்த பழைய இராச்சியத்தின் இருப்பிடமாகும்.

பிரேமதாச தோல்வி அடைந்து துணை கட்சித் தலைவர் பதவியையும் இராஜினாமா செய்தவுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய தேர்தலுக்காக பாராளுமன்றத்தை கலைக்கலாமா அல்லது எதிர்க்கட்சியில் அமரலாமா என்பது குறித்து புதிய ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதாகக் கூறினார். நிதி மற்றும் சர்வதேச வர்த்தகம் உட்பட பல அரசாங்க அமைச்சர்கள் ஏற்கனவே இராஜனாமா செய்துள்ளனர்.

ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. தலைவர் மஹிந்த இராஜபக்ஷ நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டு, ஆளும் ஐ.தே.க. "தேர்தல் ஆணையை மதிக்கும்" என்று தான் நம்புவதாக தெரிவித்தார். புதிய ஜனாதிபதியின் பதவியேற்பின் பின்னர் "அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தால் உருவாக்கப்பட்டுள்ள சிக்கல்களை" தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

"பொருளாதாரத்தை கீழிருந்து மேல்நோக்கி மீண்டும் கட்டியெழுப்பவும், இந்த நோக்கத்தை அடைய அரசியலமைப்பு மற்றும் சட்ட சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தவும்" நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் முன்னாள் ஜனாதிபதி அறிவித்தார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கம் இராஜனாமா செய்ய வேண்டும் என்றும் அதன் வலதுசாரி, தொழிலாள வர்க்க எதிர்ப்பு செயல்திட்டத்தை அமுல்படுத்த புதிய ஆட்சியை ஸ்தாபிப்பதற்கு புதிய நாடாளுமன்ற தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. மற்றும் கோடாபய இராஜபக்ஷவும் விரும்புகிறார்கள்.

"19 வது திருத்தத்தால் உருவாக்கப்பட்ட சிக்கல்கள்" என்று அழைக்கப்படுவது, ஜனாதிபதியின் சில அதிகாரங்களைக் குறைக்க ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கம் அறிமுகப்படுத்திய வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் குறிக்கிறது. வெளிப்படையாகக் கூறப்படவில்லை என்றாலும், எதிர்கால சட்ட சீர்திருத்தமும் அரசியலமைப்பு மாற்றமும் நாட்டை சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கி மாற்ற பயன்படும்.

அரசாங்கம் மற்றும் ஆளும் உயரடுக்கின் ஆழ்ந்த அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் போராட்டங்களுக்கு மத்தியிலுமே சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. ஆளும் உயரடுக்கின் ஒவ்வொரு பிரிவும் பொலிஸ்-அரசு ஆட்சியை ஸ்தாபிக்க முயல்கிறது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. அத்தகைய நடவடிக்கைகளை செயல்படுத்தத் தொடங்கும்.

மஹிந்த இராஜபக்ஷவின் “பொருளாதாரத்தை கீழிருந்து மேல்நோக்கி மீண்டும் கட்டியெழுப்புவது” பற்றிய கருத்து குறிப்பிடத்தக்கது ஆகும். இலங்கை பெருகிவரும் கடனில் மூழ்கி பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்கிறது.

நெருக்கடியை தீர்ப்பது என்ற பெயரில், சர்வதேச நாணய நிதியமானது அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் மற்றும் சமூக நலத்திட்டங்களை வெட்டிக் குறைத்தல் உட்பட பொருளாதார மறுசீரமைப்பை கோரியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் விரும்புகிற அதே நேரம், இந்த ஆண்டின் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி, அந்த இலக்குகளை அடைய முடியாவிட்டால், இலங்கை “அடிப்படையில் கிரேக்கம் போன்ற ஒரு சூழ்நிலை’யில்” இருக்கும் என்று எச்சரித்தார்.

வெகுஜன எதிர்ப்பின் மத்தியில், 2015 தேர்தலில் மஹிந்த இராஜபக்ஷ வெளியேற்றப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், ஜனாதிபதி சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரால் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. ஸ்தாபிக்கப்பட்டது. சிங்கள பேரினவாதத்திற்கு அழைப்பு விடுத்த அது, பௌத்த பிக்குகள் மற்றும் பாசிச பொதுபல சேனா மற்றும் இராணுவ தரப்பின் பிரிவுகள் உட்பட இனவாத சக்திகளின் ஆதரவைத் திரட்டியுள்ளது.

தேர்தலின் போது தொழிலாளர்களை அரசியல் ரீதியாக நிராயுதபாணியாக்கிய போலி-இடது மற்றும் தொழிற்சங்கங்கள், ஜனநாயக விரோத ஆட்சி முறைகளின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள வலதுசாரி ஐ.தே.க. வை ஊக்குவிப்பதன் மூலம் கோட்டபய இராஜபக்ஷைவை ஆட்சிக்கு கொண்டுவரும் நிலைமைகளை உருவாக்க உதவியன.

இந்தத் தேர்தலில், ஐ.தே.க. அரசாங்கத்தின் ஒரு இணைப்பாக செயல்படும் போலி இடது நவ சம சமாஜா கட்சி (ந.ச.ச.க.), "பாசிச" கோடாபய வெற்றிபெறுவதை தடுக்க ஐ.தே.க. வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிக்க அழைப்பு விடுத்தது. இதேபோல், ஐக்கிய சோசலிசக் கட்சியும், "பாசிச கோடாபயவை" தடுப்பதே பிரதான பணி என அறிவித்து பிரேமதாசவை மறைமுகமாக ஆதரித்தது.

ஊதியங்கள் மற்றும் நிலைமைகள் தொடர்பாக இலங்கை தொழிலாளர்கள் அண்மையில் நடத்திய வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது,  தொழிற்சங்கங்கள் ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கத்தை ஆதரித்தன. மற்றொரு போலி இடது அமைப்பான முன்நிலை சோசலிசக் கட்சி, தொழிலாளர்கள் போராட்டங்கள் மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளும் சலுகைகளை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கும் நிறுவனங்களுக்கும் அழுத்தம் கொடுக்கக்கூடும் என்று கூறி தொழிலாளர்களை மட்டுப்படுத்தி அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தியது.

இந்த அமைப்புகள் அனைத்தும் ஆளும் வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்காகவும் சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காக போராடுகின்ற சோசலிச சமத்துவக் கட்சியின் போராட்டத்தை எதிர்த்தன. ஆளும் உயரடுக்கு சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நகருகின்ற நிலையில், தொழிற்சங்கங்களும் போலி இடதுகளும் அதைப் பலப்படுத்த உதவியுள்ளன.

ஏகாதிபத்திய யுத்தம், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக, ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட்ட ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே. சோ.ச.க. பிரச்சாரம் பல தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், எங்கள் வேட்பாளர் தீவு முழுவதும் 3,014 வாக்குகளைப் பெற்றார். இந்த எண்ணிக்கை சிறியதாக இருந்தாலும் ​​இது சோசலிசத்திற்கான வர்க்க உணர்வுடன் அளிக்கப்பட்ட வாக்கு ஆகும்.

தாமதமின்றி, விரைவில், தொழிலாள வர்க்கமானது பதவிக்கு வரவுள்ள ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்துடன் நேரடி மோதலுக்கு வரும். தாக்குதல்களைத் தோற்கடிக்க தொழிலாளர்கள் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தில் காலூன்றிக்கொள்ள வேண்டும். இந்த போராட்டத்திற்கு தேவையான புரட்சிகர கட்சியாக சோ.ச.க.வை உருவாக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை எங்களுடன் சேருமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.