Print Version|Feedback
Sri Lanka: JVP presidential candidate vows to strengthen capitalist state
இலங்கை: ஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளர் முதலாளித்துவ அரசை பலப்படுத்த சபதமெடுத்துள்ளார்
By W.A. Sunil
5 September 2019
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி.) அமைப்பு இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், ஜே.வி.பி.யின் தலைவர் அனுரா குமார திசானாயக்காவை வேட்பாளராக நியமித்துள்ளது. கடந்த மாதம் கொழும்பின் காலிமுகத் திடலில் நடந்த கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஜே.வி.பி. 1999 முதல் ஜனாதிபதித் தேர்தலில் தனது சொந்த வேட்பாளரை நிறுத்தவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் இது பிரதான முதலாளித்துவ கட்சிகளை தீவிரமாக ஆதரித்துள்ளது. அது 2005 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) வேட்பாளரையும் மற்றும் பொது வேட்பாளர்கள் எனப்பட்ட அமெரிக்க சார்பு ஐக்கிய தேசிய கட்சியின் (ஐ.தே.க.) தலைமையிலான முன்னணியின் வேட்பாளர்களை 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஆதரித்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான வலதுசாரி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) முன்னாள் ஜனாதிபதியின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோட்டாபய இராஜபக்ஷவை அதன் வேட்பாளராக நிறுத்தப்போவதாக கடந்த மாதம் அறிவித்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி (யு.என்.பி) அதுவரை அதனது வேட்பாளரை அறிவித்திருக்கவில்லை.
என்.பி.பி. என்பது 28 அமைப்புகளின் கூட்டணியாகும், இதில் ஜே.வி.பி. மற்றும் அதனுடன் இணைந்த தொழிற்சங்கங்கள், ஜே.வி.பி.யில் பிளவடைந்த சிறிய குழுவான புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, மக்கள் முன்னோடி கலைஞர்கள், யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட செயல்படும் இடது ஐக்கியம், மற்றும் உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு. பல்வேறு கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட தேசிய அறிவுசார் அமைப்பு (என்.ஐ.ஓ.), ஆகியவை என்.பி.பி.யை ஒழுங்கமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளன.
2015 இல், ஜே.வி.பி.யும் இப்போது என்.பி.பி.யை உருவாக்கும் பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்களும், ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்க ஆதரவுடைய மைத்ரிபால சிறிசேனவை ஆதரித்தனர். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரிலும் இராஜபக்ஷ அரசாங்கம் செய்த குற்றங்களுக்கும், ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான அதன் நாடு தழுவிய தாக்குதல்களுக்கும் எதிராக வளர்ச்சியடைந்த வெகுஜன எதிர்ப்பைத் திசைதிருப்பும் முயற்சியில் அவர்கள் சிறிசேனவின் பின்னால் திரண்டனர்.
ஜே.வி.பி. மற்றும் அதன் ஆதரவாளர்களும், சிறிசேன மற்றும் அவரது ஐ.தே.க. ஆதரவாளர்களும் "நல்லாட்சியை" நிறுவுவார்கள் என்றும், இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவார்கள் என்றும் கூறிய அவர்களுக்கு நம்பகத்தன்மையை வழங்கினர்.
சிறிசேனவும் ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கமும் அந்த வாக்குறுதிகளை விரைவாக கைவிட்டுவிட்டு, சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை செயல்படுத்தி, ஜனநாயக உரிமைகள் மீதான அதன் தாக்குதலை முடுக்கிவிட்டன. இந்த தாக்குதல்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் தொழிலாள வர்க்கத்தின் பிரதான பிரிவினரின் வேலைநிறுத்தங்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் ஆர்ப்பாட்டங்களுடன் சமூக எதிர்ப்பின் அலைகளை உருவாக்கியுள்ளன. ஆழமடைந்து வரும் சமூக எதிர்ப்பு அரசாங்கத்திற்குள் கூர்மையான கன்னை மோதல்களையும் முழு ஆளும் வர்க்கத்திற்கும் ஒரு அரசியல் நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது.
முன்னர் சிறிசேனாவை ஊக்குவித்தவர்களில் சிலர், இப்போது வெகுஜன எதிர்ப்பை அரசியல் ரீதியாகத் தகர்த்து, முதலாளித்துவ ஆட்சியை சவால் செய்யும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் முயற்சியாக, ஜே.வி.பி. மற்றும் என்.பி.பி. பின்னால் அணிதிரண்டுள்ளனர். உண்மையில், என்.பி.பி. ஆனது, ஜே.வி.பி.யின் உண்மையான அரசியல் வரலாற்றை மூடிமறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அதன் தேர்தல் கூட்டணியானது "மக்கள் சக்தியை" பிரதிநித்துவம் செய்வதாக பொய்யாகக் கூறப்படுகிறது.
கடந்த மாத காலிமுகத் திடல் பேரணியில் பெருமளவில் மக்கள் கலந்துகொண்டமை, சிறிசேன மற்றும் ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கத்தின் மீதான வெகுஜன கோபம் மற்றும் அதிருப்தியினதும் ஆழத்தை சுட்டிக்காட்டியிருந்தாலும், உண்மையான அரசியல் மாற்றீட்டை நாடுபவர்களுக்கு அங்கு தேசியவாத வாய்வீச்சு மற்றும் வெற்று வாக்குறுதிகளைத் தவிர வேறு எதுவும் கிடைத்திருக்காது.
ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் திசாநாயக்க, ஏனைய அனைத்து இலங்கை முதலாளித்துவ அரசியல்வாதிகளையும் போலவே, பாரம்பரிய வாத்தியங்களுடன் மேடைக்கு கொண்டு செல்லப்பட்டதோடு, அவர் மக்களின் நம்பிக்கையை காட்டிக் கொடுக்க மாட்டார் என்று மீண்டும் மீண்டும் அறிவித்தார். தேசியவாத சொல்லாட்சிக் கலை வாய்வீச்சினால் ஆதிக்கம் செலுத்திய அவரது பேச்சில், "முதலாளித்துவம்" அல்லது "முதலாளித்துவ வர்க்கத்தை" பற்றி ஒரு வார்த்தை தன்னும் குறிப்பிடாதமை ஒருபுறம் இருக்க வேறு எந்த அரசியல் கட்சியையும் பற்றி கூட அவர் குறிப்பிடத் தவறிவிட்டார்.
தன்னை ஒரு மக்களுக்கான மனிதனாகக் காட்டிக் கொள்ள முயன்ற திசநாயக்க, அறிவித்ததாவது: “சாதாரண மனிதனின் உணர்வுகள் மற்றும் வேதனைகள் மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்கள் குறித்து ஒரு புரிதல் எமக்கு இருக்கிறது, அந்த புரிதலின் அடிப்படையில் இந்த போராட்டம் ஒரு வெற்றியுடன் முடிவடையும்."
என்.பி.பி., "[முந்தைய] காலாவதியான, தோல்வியுற்ற மற்றும் அழிவுகரமான பாதையிலிருந்து விடுபடுவது" மற்றும் "மக்களுக்கு இன்பம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டுவருவதை" நோக்கமாகக் கொண்டது. "எங்கள் மனித வளங்களை உலகின் மிக மேம்பட்ட நிலைக்கு கொண்டு வந்து." இலங்கை பொருளாதாரத்திற்காக ஒரு "புதிய பாதை" உருவாக்கப்படும், அவர் மேலும் கூறினார். "விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தோட்டங்களில் உள்ள மக்களதும் வீட்டு வாசலுக்கு பொருளாதார நன்மைகள் கொண்டு வருப்படும்" என்று அவர் தொடர்ந்தார்.
மொழி, மதம், பாலினம் அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்காது என்று திசாநாயக கூறிக்கொண்டார். பல்வேறு மத மற்றும் இனக்குழுக்களிடையே தேசிய ஒற்றுமை ஸ்தாபிக்கப்படும், இதன் மூலம் பொது பாதுகாப்பு உறுதி செய்யப்படும். "எங்கள் நாடு" -அதாவது, சிங்கள-பௌத்த மேலாதிக்க ஒற்றையாட்சி நாடு- உலக அரங்கில் "ஒரு கண்ணியமான, பெருமைக்குரிய மற்றும் திடமான அரசாக" இருக்கும்.
இந்த "செழிப்பு" எவ்வாறு உருவாக்கப்படும் என்பதை விளக்க திசாநாயக்க தவறிவிட்டார். எவ்வாறாயினும், அவரது வாய்ச்சவடாலானது சர்வதேச மூலதனத்தால் இன்னும் கூடுதலான சுரண்டலுக்காக இலங்கையின் "மனித வளங்களை" பயன்படுத்துவதற்கு என்.பி.பி. சட்டம், ஒழுங்கு மற்றும் ஒழுக்கத்தை அமுல்படுத்தும் என்ற வாக்குறுதியை முதலாளித்துவ வர்க்கத்திற்கு வழங்குவதாக இருந்தது.
என்.பி.பி. ஜனநாயகம் மற்றும் "தேசிய ஒற்றுமைக்காக" முன்நிற்கின்றது என்ற திசானாயக்காவின் கூற்று ஒரு பொய் ஆகும்.
பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் இனவாத போருக்கு அது வழங்கிய இழிந்த வரலாற்று ஆதரவோடு, சமீபத்தில் ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட கொழும்பின் அவசரகால நிலைமைக்கும், அதைப் பற்றிக்கொண்டு முன்னெடுக்கப்பட்ட முஸ்லிம்-விரோத பிரச்சாரத்திற்கும் ஜே.வி.பி. விமர்சனமற்ற ஆதரவை வழங்கி இருந்தது.
ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லீம் சமூகத்திடமும் அதன் கட்சிகளிடமும் "இஸ்லாமிய தீவிரவாதிகள்" இருக்கும் இடத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கோரி, பயங்கரவாத தாக்குதல்களுக்கு முழு சமூகத்தையும் வெளிப்படையாக குற்றம் சாட்டினர். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பாதுகாப்பு தரப்பினர் வரவிருக்கும் பயங்கரவாத குண்டுத் தாக்குதல் குறித்து இந்திய உளவுத்துறையால் எச்சரிக்கப்பட்டிருந்தனர் என்பதை ஜே.வி.பி. நன்கு அறிந்திருந்தது.
காலிமுகத் திடல் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, என்.பி.பி.க்கு ஒரு தீவிரமான முகத்தை கொடுக்க முயன்றார். தேர்தல் கூட்டணியானது இடதுசாரிகள், ஜனநாயக முகாம் மற்றும் முற்போக்குவாதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று அவர் கூறினார். இந்த இயக்கம் "தேர்தலுடன் மட்டுப்படுத்தப்படாது, மாறாக மக்கள் வெற்றிபெறும் வரை தொடரும்," என அவர் கூறினார்.
ஜனவரி மாதம் என்.ஐ.ஓ.வால் தயாரிக்கப்பட்ட என்.பி.பி.-ஜே.வி.பி. திட்டம், "தற்போதுள்ள புதிய தாராளவாத சந்தை பொருளாதாரத்தையும் அதன் மனிதாபிமானமற்ற தாக்கத்தையும் சமாளிக்க ... தேசிய மற்றும் சர்வதேச கொள்கை அணுகுமுறைகளின் நேர்மறையான கூறுகளை கணக்கில் எடுத்துக்கொள்வதன் மூலம்" தயாரிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த கூற்றுக்கள் ஒரு மோசடி ஆகும்.
ஆழமடைந்து வரும் உலக நெருக்கடியில் சிக்கி, புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கைக்கோ அல்லது வேறு எந்த நாட்டிற்கோ தேசியவாத பாதை கிடையாது. ஜே.வி.பி மற்றும் அதன் கல்வியாளர்களின் உண்மையான அச்சம் எதுவெனில், இலங்கை மற்றும் சர்வதேச அளவில் அதிகரித்துவரும் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பாகும்.
உலகம் பூராவும் உள்ள தமது சகாக்களைப் போலவே, ஒவ்வொரு இலங்கை முதலாளித்துவக் கட்சியும் தொழிலாள வர்க்கத்தை அடக்குவதற்காக பொலிஸ்-அரசு ஆட்சி முறைகளை நோக்கி நகர்கின்றன. இந்த ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் மைய விவாதம் ஆளும் உயரடுக்கின் எந்தப் பிரிவு இந்த வேலைக்கு மிகவும் பொருத்தமானது என்பதே ஆகும்.
ஜே.வி.பி. பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் ஒரு ஊடக சந்திப்பில் விளக்கியவாறு, ஜே.வி.பி. ஜனாதிபதி வேட்பாளரின் முக்கிய கருப்பொருள் “நிதி ஒழுக்கம், நிர்வாக ஒழுக்கம் மற்றும் மக்களின் பாதுகாப்பு” ஆகும்.
ஜே.வி.பி. மற்றும் அதன் என்.பி.பி.யும் தொழிலாள வர்க்கம் தான் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை எதிர்த்துப் போராடக்கூடிய ஒரு வழிமுறையல்ல. மாறாக தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தையும் தடுக்கின்ற ஒரு தடையும், பொலிஸ்-அரசு சர்வாதிகாரத்திற்கு வழி வகுக்கின்ற ஒரு அமைப்பு ஆகும். ஜே.வி.பி. ஆட்சிக்கு வந்தால் அது ஏனைய முதலாளித்துவ அமைப்புகளைப் போலவே ஈவிரக்கமின்றி செயல்படும்.
ஊடகங்கள் கூறுவதற்கு மாறாக, ஜே.வி.பி. மற்றும் அதன் ஜனாதிபதி பிரச்சாரத்திற்கும் மார்க்சிசம் அல்லது சோசலிசத்துடன் எந்த தொடர்பும் கிடையாது. இது 1960களின் நடுப்பகுதியில் ஸ்ராலினிசம், மாவோயிசம் மற்றும் சிங்கள தேசப்பற்று ஆகியவற்றின் நச்சு கலவையை அடிப்படையாகக் கொண்ட ஒரு குட்டி முதலாளித்துவ தீவிரவாத இயக்கமாக உருவானது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி-லங்கா சம சமாஜா கட்சி மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியினதும் கூட்டணி அரசாங்கம், 1971 இல் சாகசவாத கிளர்ச்சியை நசுக்கி, சுமார் 15,000 இளைஞர்களைக் கொன்று அதன் தலைவர்களை சிறையில் அடைத்த பின்னர், 1978 இல் ஜே.வி.பி. முதலாளித்துவ நாடாளுமன்ற அரசியலை நோக்கி ஒரு திட்டவட்டமான மாற்றத்தை ஏற்படுத்தியது.
1980 இல், அப்போதைய ஐ.தே.க. ஆட்சியின் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்களுக்கும், அதன் திறந்த சந்தை பொருளாதாரக் கொள்கைக்கும் எதிராக, அரசாங்கத் துறை தொழிலாளர்கள் தேசிய வேலைநிறுத்த நடவடிக்கைகளை எடுத்தபோது, ஜே.வி.பி. தலைமையிலான தொழிற்சங்கங்கள் “இது வேலைநிறுத்தம் செய்ய பொருத்தமான நேரம் அல்ல" எனக் கூறி தொழிற்சங்க நடவடிக்கைக்கு விரோதமாக கருங்காலி வேலை செய்தன.
கொழும்பின் இனவாத போருக்கு ஜே.வி.பி.யின் பல தசாப்த கால ஆதரவுடன், 1987-1990ல் "இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு" எதிரான அதன் பிரச்சாரத்தின் போது தொழிலாளர்கள் மற்றும் அரசியல் எதிரிகள் மீது பாசிச தாக்குதல்களையும் நடத்தி, நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றது. கொல்லப்பட்டவர்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகத்தின் மூன்று உறுப்பினர்களும் அடங்குவர். இந்த நேரத்தில் ஐ.தே.க. அரசாங்கம் ஜே.வி.பி-க்கு எதிராக ஒரு படுகொலை தாக்குதலை நடத்தி, அதன் பெரும்பாலான தலைவர்களையும் சுமார் 60,000 கிராமப்புற இளைஞர்களையும் கொன்றது.
உலகம் பூராவும் உள்ள அதன் குட்டி முதலாளித்துவ சகாக்களைப் போலவே, ஜே.வி.பி. இலங்கையின் முதலாளித்துவ ஸ்தாபனத்தின் ஒரு கட்சியும் சர்வதேச மூலதனத்தின் ஒரு இணைப்பும் ஆகும்.
திசானாயக்கின் மூன்று தசாப்த கால அரசியல் வாழ்க்கை இந்த மாற்றத்தை உள்ளடக்கியிறுக்கின்றது. அவரும் மற்ற மூன்று ஜே.வி.பி. தலைவர்களும் 2004இல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை ஏற்றுக்கொண்டதோடு, சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை செயல்படுத்த உதவினர். இது 2005 முதல் 2008 இறுதி வரை ராஜபக்ஷ அரசாங்கத்தின் வெளிப்புற பங்காளராகவும் செயல்பட்டது. இந்த நேரத்தில் கொழும்பில் இருந்த இராஜதந்திரிகள் மூலம், அமெரிக்கா மற்றும் ஏனைய மேற்கத்திய சக்திகளுடன் ஜே.வி.பி. நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளது.
2005 இல், ஜே.வி.பி தலைவர்கள் அமெரிக்க உதவி வெளியுறவுத்துறை செயலாளர் கிறிஸ்டினா ரோக்காவை சந்தித்து, ஜனாதிபதி புஷ்ஷின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" பாராட்டியதோடு புலிகளுக்கு எதிரான கொழும்பின் போருக்கு அமெரிக்க ஆதரவைக் கோரினர். சமீபத்தில் அமெரிக்க தூதர் அலினா டெப்லிட்ஸ், ஜே.வி.பி. தலைவர்களையும் ஏனைய இலங்கை கட்சிகளின் அதிகாரிகளையும் சந்திப்பது வழக்கம் என்று ஒப்புக்கொண்டார். இந்த நற்சான்றுகளுடன், ஜே.வி.பி. ஒரு அரசியல் ரீதியாக பொருத்தமான கட்சியாகவும் முதலாளித்துவ ஆட்சியின் திறமையான பாதுகாவலராகவும் கருதப்படும் என்ற நம்பிக்கையில் அது உள்ளது.
இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஜே.வி.பி. மற்றும் அதன் என்.பி.பி.இன் தேர்தல் கூட்டணியை தீர்க்கமாக நிராகரிக்க வேண்டும், அதற்கு பதிலாக சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுத்த சோசலிச அனைத்துலகவாதத்திற்கான வரலாற்று மற்றும் கொள்கை ரீதியான போராட்டத்தை கற்று, எதிர்காலத்தில் வரவுள்ள புரட்சிகர போராட்டங்களுக்காக கட்சியின் வேலைத் திட்டத்தை விரிவாக்கப் போராட வேண்டும்.