ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

හන්තාන වත්තේ කම්කරුවන්ගේ රැකියා සහ නිවාස අයිතිය ආරක්ෂා කරගන්නේ කෙසේද?

ஹந்தான தோட்டத் தொழிலாளர்களின் தொழில் மற்றும் வீட்டு உரிமைகளை பாதுகாப்பது எப்படி?

By Pradeep Ramanayaka
1 November 2019

அரசுக்கு சொந்தமான மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தியாக்கத்திற்கு (ஜனவசம) சொந்தமான மிகப்பெரிய தேயிலைத் தோட்டங்களில் ஒன்றான ஹந்தான, கண்டியில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஏழு பிரிவுகளைக் கொண்ட இந்த பெருந்தோட்டம் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் வேண்டுமென்றே அழித்து, இரண்டு தசாப்தங்களில் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 2,000 இலிருந்து 350 ஆக குறைத்துவிட்டன.

தோட்டத்திலுள்ள இரண்டு தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, அவற்றில் ஒன்று சுற்றுலாப் பயணிகளுக்கான தேயிலை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. அதன் ஏனைய பிரிவுகள் சுற்றுலா ஹோட்டல்களுக்கும் பிற தனியார் திட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ள அதேவேளை, தோட்டத்தின் பெரும்பகுதியை பராமரிக்காததன் விளைவாக. அவற்றில் புற்கள் வளர்ந்து காடாகியுள்ளன. இதற்கிடையில் தோட்ட லயின் வீடுகளில் இருந்து தொழிலாளர்களை வெளியேற்றி அந்த காணிகளை தனியார் முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்க திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.


சோ.ச.க. உறுப்பினர்கள் ஹந்தான தோட்டத்தில் பிரச்சாரம் செய்தபோது

இந்த திட்டம் ஹந்தான தோட்டத்துக்கு மட்டுமானதல்ல. தெல்தொட, கலஹா, கம்பளை, மாதளை, ஹுன்னஸ்கிரிய மற்றும் கண்டி உட்பட மலைப்பிரதேசத்தில் ஜனவசமவுக்கு சொந்தமான ஏராளமான தேயிலைத் தோட்டங்களை தனியார் துறைக்கு ஒப்படைக்க அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் முன்முயற்சி எடுத்துள்ளன.

அரசுக்கு சொந்தமான தோட்ட நிறுவனங்களை மறுசீரமைக்க, அரச நிறுவன முகாமைத்துவ அமைச்சு 2017 இல் சமர்ப்பித்த திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் கொடுத்ததுடன், சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம் இந்த செயல்திட்டத்தை துரிதப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் திட்டத்தின் கீழ், தேயிலைத் தோட்டங்களுக்கு மேலதிகமாக, கல்லோயா, குருநாகல், சிலாபம் ஆகிய பெயர்களில் உள்ள பெருந்தோட்ட நிறுவனங்களையும் மற்றும் இலங்கை முந்திரிகை கூட்டுத்தாபனத்தையும் மற்றும் ஜனவசமவின் கீழ் உள்ள பல பெரும்பாலான விவசாய நிலங்களையும் தனியார் துறை தொழில்முனைவோரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பெரும்பான்மையானவை நஷ்டத்தில் இயங்குகின்றன எனக் காரணம் கூறியே, அரசுக்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளிட்ட ஏனைய பெருந்தோட்டங்களையும் தனியார் நிறுவனங்களாக மாற்ற வேண்டும் என்று அரசாங்கங்கள் முன்மொழிந்துள்ளன. உலக சோசலிச வலைத் தளத்திடம் (WSWS) பேசிய ஹந்தான தோட்டத் தொழிலாளர்கள் கூறியவாறு, ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் தொழிலாளர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட நிலத்தின் அளவுக்கு மாறாக, தோட்டத்தில் இருந்து தொலைதூரப் பகுதியில் சிறிய நிலத்துண்டுகளை வழங்க தற்போதைய அரசாங்கம் முயல்கிறது. தொழிலாளர்கள் மத்தியில் அதற்கு கடுமையான எதிர்ப்பு காணப்படுகின்றது.

ஹந்தான உள்ளிட்ட ஏனைய தோட்டங்களிலும், முதலாளித்துவ வர்க்கம் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்களின் முதுகில் சுமத்தும் திட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இது தற்போதைய அரசாங்கம் மட்டுமல்ல எதிர்காலத்தில் எந்தவொரு அரசாங்கத்தினதும் வேலைத்திட்டமாக இருக்கும். அந்தக் கொள்கையின் ஒரு பகுதியே ஜனவசம போன்ற அரசாங்க நிறுவனங்களை தனியார் துறைக்கு ஒப்படைப்பது.

ஹந்தான உட்பட அனைத்து தோட்டத் தொழிலாளர்களும் தங்கள் நிலம், தொழில் மற்றும் ஊதியப் பிரச்சினைகளைத் தீர்க்க போராடும்போது, தீர்க்கமான அரசியல் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் தலைமையில் உள்ள இரண்டு பிரதான தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு (ஐ.தே.க.) சொந்தமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) ஆகியவையும் ஹந்தான தோட்டத்தில் கிளைகளைக் கொண்டுள்ளன. அவை ஏனைய தோட்டக் கம்பனிகளுக்கு செய்வதைப் போலவே, தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்குவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு உதவுகின்றன. கடந்த தசாப்தத்தில் ஹந்தான தோட்டத்தில் தொழில்கள் மற்றும் ஏனைய உரிமைகளை அழிப்பதற்கு இந்த தொழிற்சங்கங்கள் காரணமாக இருந்தன.

தொழிற்சங்கங்களைப் போலவே தொழிலாளர்களுக்கு விரோதமாக செயற்படும் முன்நிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) உட்பட போலி இடது அமைப்புகள், தொழிலாளர்கள் ஒரு சுயாதீன வேலைத்திட்டத்தை நாடுவதை தடுக்கின்றன. சம்பளப் போராட்டத்தின் போது தொழிலாளர்களின் போர்க்குணத்தை மொட்டையாக்குவதற்காக மு.சோ.க. மற்றும் அதன் தொழிலாளர் போராட்ட மத்திய நிலையமும் அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் திவாலான முன்னோக்குக்கை தூக்கிப் பிடித்தன. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊதியப் போராட்டத்தில் தலையிட அவர்கள் உருவாக்கிக்கொண்ட “ஆயிரம் ரூபா இயக்கம்”, தொழிலாளர்களை வீண் எதிர்ப்புகளுக்கு மட்டுப்படுத்தும் ஒரு பொறிக் கிடங்காகியது.

கடந்த ஆண்டு தோட்டத் தொழிலாளர்கள் தங்களது அடிப்படை தினசரி ஊதியத்தை 500 ரூபா முதல் 1,000 ரூபா வரை உயர்த்தக் கோரி முன்னெடுத்த நீண்ட மற்றும் உறுதியான போராட்டத்தை காட்டிக் கொடுத்த தொழிற்சங்க அதிகாரத்துவம், தோட்டக் கம்பனிகளுடன் ஊதிய ஒப்பந்தங்களில் இரகசியமாக கையெழுத்திட்டது. ஹந்தான தொழிலாளர்களின் கூற்றுப்படி, தொழிற்சங்கத் தலைவர்கள் தங்கள் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கையை முற்றிலுமாக கைவிட்டுள்ளனர்.

தொழிற்சங்கங்கள் காலை வாரிவிடும் வேலையை செய்திருந்தாலும் தொழிலாளர்கள் ஊதியப் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டங்கள் தொழிற்சங்கங்கள் மீதான ஆழ்ந்த விரக்தியையும், தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட சுயாதீன அமைப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வெளிப்படுத்தின.

சர்வதேச அளவில் புத்துயிர் பெற்றுள்ள வர்க்கப் போராட்டத்தில் தொழிலாளர்கள் மத்தியில் வளரும் இந்தப் போக்கை ஹந்தான தோட்டத் தொழிலாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். முதற்கட்ட நடவடிக்கையாக, அப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் குழு செப்டம்பர் 1 அன்று ஒன்று கூடி தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து கலந்துரையாடினர். அப்பகுதியில் உள்ள ஏனைய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் விளம்பரங்களை விநியோகிக்க ஹந்தான தொழிலாளர்கள் மேற்கொண்ட உற்சாகமான முயற்சியின் மூலமே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கண்டியில் நடந்த சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க) கூட்டத்திற்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

கலந்துரையாடலில் பங்குபற்றிய ஆயிரம் ரூபா இயக்கத்தின் இரண்டு உறுப்பினர்களின் கருத்துக்கள், தொழிலாளர்களைக் குழப்புவதற்காக போலி இடதுகளின் இழிந்த பங்கை மீண்டும் வெளிப்படுத்தின. தொழிலாளர்களை வெற்று ஆர்ப்பாட்டங்களுக்குள் முடக்கி வைப்பதற்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த கருத்துக்களுக்கு விரோதமாக பேசிய, போலி இடது முன்நிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர்களில் ஒருவரான ரணில் புஷ்பகுமார, வரலாற்றிலிருந்து மேற்கோள் காட்டி தனது எதிர்ப்பு ஆர்ப்பாட்ட அரசியலை நியாயப்படுத்தினார்.

1905 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் நிலப்பிரபுத்துவ ஜார் ஆட்சிக்கு எதிராக தலை தூக்கிய வேலைநிறுத்த அலைக்கு மத்தியில், காப்போன் (Georgy Gapon) என்ற பாதிரியார் தலைமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு ஒன்று, சர்வாதிகாரி இரண்டாம் நிக்கோலாவிடம் ஒரு மனுவை ஒப்படைக்க முயன்றபோது, அவரது இராணுவம் அந்த ஊர்வலத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டுக் கொன்றது என்று புஷ்பகுமார குறிப்பிட்டார். "இரத்தக்களரி ஞாயிறு" என்று அழைக்கப்பட்ட இந்த சம்பவத்தில், நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். இதுபோன்ற போராட்டங்களில் முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களின் தாக்குதலுக்கு உள்ளான பின்னர், முதலாளித்துவ அரசாங்கங்களிடம் வேண்டுகோள் விடுப்பது பயன்றது என்பதை தொழிலாளர்கள் உணருவார்கள், என்பதே ஆயிரம் ரூபா இயக்க உறுப்பினர்களின் நச்சுத்தனமான தர்க்கமாகும்.

உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்ர்களின் போராட்டங்களை நசுக்க ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கம் பொலிஸ்-இராணுவ அரசுகளை ஸ்தாபிப்பதை நோக்கி முன்னேறி வருகின்ற நிலையில், ஒடுக்கப்பட்ட மக்களின் எந்தவொரு கோரிக்கைக்கும் செவிசாய்க்க முதலாளித்துவ ஆட்சியாளர்கள் தயாராக இல்லை என்பது மேலும் மேலும் தெளிவாகிறது. எனினும் இந்த உண்மையை மறைத்து முதலாளித்துவ அமைப்பு முறையை பாதுகாப்பதில் உறுதியாக உள்ள இந்த போலி இடதுகள், இதுபோன்ற மரணக்குழிகளைப் பறிக்கும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து சில சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று அவர்கள் மற்றொரு மாயை உருவாக்க அங்கு முயற்சித்தனர். இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தேர்வு செய்ய்படும் புதிய ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதற்கு மாறாக கொடூரமான சிக்கன நடவடிக்கைகளையே முன்னெடுப்பர். முழுக்க முழுக்க முதலாளித்துவ சார்பானவர்களான போலி இடதுகள், முதலாளித்துவ அமைப்பு முறையே நெருக்கடிக்குள் போயுள்ளது என்பதை நிராகரிப்பதோடு, தொழிலாளர்களை இத்தகைய மாயைகளில் மூழ்கடிக்க முயல்கின்றனர்.

தொழிற்சங்கங்களின் துரோகத்திற்கும், போலி இடதுசாரிகளின் இத்தகைய குழப்பிவிடும் நடவடிக்கைகளுக்கும் எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள், தொழிலாளர்களின் சுயாதீனமான சோசலிச இயக்கத்தை உருவாக்க வேண்டிய அவசியம் குறித்து ஹந்தான தொழிலாளர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றனர். தோட்டத் தொழிலாளர்களின் ஊதியப் போராட்டத்தின் மத்தியில், சோசலிச சமத்துவக் கட்சி தலைமையில் ஹட்டனில் உள்ள எபோட்ஸ்லி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த தொழிலாளர் நடவடிக்கைக் குழுவின் அனுபவத்தை அறிந்த ஹந்தான தொழிலாளர்களிடையே மிகுந்த உற்சாகமும் இணக்கமும் இருந்தது. சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களுடன் உருவாக்கப்பட்ட கலந்துரையாடல்களின் பலத்துடன், அக்டோபர் 15 அன்று அவர்கள் தங்கள் சொந்த சுயாதீன நடவடிக்கை குழுவை அமைத்தனர். இது ஹந்தான நடவடிக்கைக் குழு என்று அழைக்கப்படுகிறது.

ஹந்தான தோட்டத்திலுள்ள தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் உரிமைகள் மீதான தாக்குதலின் தோற்றுவாய் முதலாளித்துவ அமைப்பு முறையே ஆகும். முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு சர்வதேச போராட்டத்தின் பகுதியாக தங்களது போராட்டத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் மட்டுமே, அவர்களால் தங்கள் உரிமைகளை வெல்ல முடியும். பொருளாதாரத்தை சோசலிச முறையில் மறுசீரமைப்பதன் மூலம் மட்டுமே தொழிலாள வர்க்கத்தால் உற்பத்தி செய்யப்படும் பிரமாண்டமான செல்வம் முழுவதையும் சமூக நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியும்.

இந்த நோக்கத்திற்காக தொழிற்சங்கங்கள், போலி இடதுகள் அல்லது வேறு எந்த முதலாளித்துவ இயக்கத்திலிருந்தும் சுயாதீனமாக, ஹந்தான தொழிலாளர்கள் தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுவை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் முன்மொழிகிறோம். ஹந்தான தொழிலாளர்கள் உட்பட தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினரையும் சர்வதேச சோசலிசத்திற்காக வென்றெடுப்பதன் மூலம் முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதற்கான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை அபிவிருத்தி செய்ய இந்த நடவடிக்கை போராட வேண்டும்.

இதற்காக சோசலிச சமத்துவக் கட்சியின் வழிகாட்டுதலின் கீழ் தாம் உருவாக்கிக்கொண்ட நடவடிக்கைக் குழுவினுள், தொழிலாள வர்க்கத்தின் முன்னோக்கை ஆழமாக கலந்துரையாட வேண்டும். முதலாளித்துவ அமைப்பு முறையின் நெருக்கடியின் மத்தியில், அதைத் தூக்கி வீசுவதில் தொழிலாள வர்க்கத்திற்கு உள்ள வரலாற்றுப் பங்கு குறித்து தீவிரமாக கலந்துரையாடுவது மிக முக்கியமானது. அந்த புரிதலுடன், சோசலிச சமத்துவக் கட்சியை ஒரு புரட்சிகர வெகுஜனக் கட்சியாக மாற்றுவதற்கான போராட்டத்தில் இணையுமாறு ஹந்தான தோட்டத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.