Print Version|Feedback
සීඩබ්ලිව්සී ය වතු කම්කරුවන් මුලා කිරීමේ නව පෙරමුනක් ගොඩ නගයි
இலங்கை தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்ற இ.தொ.கா. புதிய கூட்டணியை உருவாக்கியது
M. Thevarajah
8 August 2019
பிரதான பெருந்தோட்ட தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), சமீபத்தில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் (ஜ.ம.கா.) மற்றும் தேசிய போராளிகள் கட்சி (தே.போ.க.) உடன் இணைந்து ஒரு புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கியது.
இ.தொ.கா. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்க்ஷவின் முந்தைய அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்ததுடன், அதன் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அமைச்சரவை அமைச்சராக இருந்தார். ஜ.ம.கா. என்பது ஜனநாயக மக்கள் முன்னணியில் இருந்து பிரிந்து சென்ற ஒரு சிறிய தொழிற்சங்கமாகும். அதன் தலைவர் பிரபா கணேசன் இராஜபக்க்ஷ ஆட்சியில் பிரதி அமைச்சராக இருந்தார்.
பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களின் ஒரு குழுவால் தே.போ.க. உருவாக்கப்பட்டது. இது கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் அமெரிக்க சார்பு கொழும்பு அரசாங்கத்தின் முக்கிய ஆதரவாளரான தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டது. தே.போ.க. தலைவர்கள் சமீபத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) தலைவர் மஹிந்த இராஜபக்க்ஷவை சந்தித்தனர்.
தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளை பெறுவதற்கு தேர்தல் காலங்களில் கூட்டணிகளை நிறுவுகின்ற பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள், பதவியில் இருக்கும் அரசாங்கங்களை ஆதரிப்பதுடன் அதன் தலைவர்கள் பாரிய சலுகைகளை அனுபவிக்கின்றனர். தேசிய தொழிலாளர் சங்கம் (NUW), ஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.) மற்றும் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) ஆகியவை 2015 ஆம் ஆண்டில் தமிழ் முற்போக்கு கூட்டணியை (த.மு.கூ.) உருவாக்கின. இது சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு உதவியது.
இந்த தொழிற்சங்கங்களின் தலைவர்களான பி. திகாம்பரம், மனோ கணேசன் மற்றும் வி. இராதாகிருஷ்ணனும் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்களாக உள்ளார்கள். இ.தொ.கா இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், வரவிருக்கும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை ஆதரிக்கும் என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் உள்ளன. இ.தொ.கா. தலைமையிலான புதிய கூட்டணி 30 பிரேரணைகள் அடங்கிய பட்டியல் ஒன்றை வழங்கியுள்ளது.
“நுவரெலியா மாவட்டத்தில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவுதல், ஊவா மாகாணத்தில் மற்றொரு ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஹட்டனில் திறந்த பல்கலைக்கழகத்தின் ஒரு கிளை, க.பொ.த. உயர் தரத்தில் விஞ்ஞானம், வர்த்தகப் பிரிவு வசதிகளுடன் 14 தோட்ட மாவட்டங்களில் போதுமான பாடசாலைகளை நிறுவுதல் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களின் வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறப்பு திட்டங்களை செயல்படுத்துதல்” ஆகியவை அதில் அடங்கும்.
இ.தொ.கா தலைமையிலான புதிய முன்னணி, தோட்டத் தொழிலாளர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் என்று எந்த நம்பிக்கையும் வைக்க முடியாது.
ஆறு மாதங்களுக்கு முன்பு, தினசரி அடிப்படை ஊதியத்தை 1,000 ரூபாவாக உயர்த்தக் கோரி தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்த நீண்டகால போராட்டம் இ.தொ.கா. தலைவர் தொண்டமான் உட்பட அனைத்து தோட்ட தொழிற்சங்க தலைவர்களாலும் இழிந்த முறையில் காட்டிக் கொடுக்கப்பட்டது. தொழிலாளர்களுக்கான முந்தைய கொடுப்பனவுகளை குறைத்து அவர்களுக்கு 700 ரூபா நாள் சம்பளத்திற்கு அவர்கள் உடன்பட்டனர். அதன்படி, உண்மையான சம்பள உயர்வு இருபது ரூபாய் மட்டுமே கிடைத்தது. இவ்வாறு கடந்த காலங்களில் இ.தொ.கா. மற்றும் ஏனைய தொழிற்சங்கங்கள் செய்த துரோகங்களின் நீண்ட பட்டியலில் இது சமீபத்தியது.
கூட்டு ஒப்பந்தத்தில், தோட்டத் தொழிலாளர்கள் கடுமையாக எதிர்க்கும் வருமானப் பகிர்வு முறையை செயல்படுத்த தோட்ட நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதாக தொழிற்சங்கங்கள் ஒப்புக்கொண்டன. இந்த திட்டம் தொழிலாளர்களின் மேல் சுரண்டலை தீவிரப்படுத்தும் ஒரு வழியாகும். அதனை செயல்படுத்தப்படும்போது, ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி போன்ற குறைந்தபட்ச சமூக நலன்கள் உள்ளிட்ட தொழிலாளர்களின் உரிமைகள் இரத்து செய்யப்படுகின்றன.
தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் அவர்களின் கோரிக்கைகளில் இல்லாது இருப்பது ஆச்சரியமல்ல. இ.தோ.கா. உள்ளிட்ட ஏனைய தொழிற்சங்கங்கள் கம்பனிகளின் நட்டம் அடைந்துள்ளதால் மேலும் ஊதிய உயர்வு கொடுக்க முடியாது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளன.
புதிய முன்னணி பல கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம், தொழிலாளர்களின் நிலைமைகளை மேம்படுத்த முயற்சிப்பதாக பாசாங்கு செய்கிறது. ஆனால் பல தசாப்த காலங்களாக அவர்கள் செய்த துரோகங்கள் அவர்களை அம்பலப்படுத்தியுள்ளன. மேலும் இது தொழிலாளர்களின் நம்பிக்கையை வெல்வதற்கான அவநம்பிக்கையான முயற்சியாகும். கடந்த காலங்களில், சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்ட சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கும், தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கில் நடந்த இனவாதப் போரிலும் இந்த தொழிற்சங்கங்கள் அரசாங்கங்களுக்கு ஆதரவளித்துள்ளன.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், இ.தொ.கா, அதன் சகாக்களுடன் சேர்ந்து, அவசரகால சட்டத்தை அமுலாக்கவும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு இராணுவத்தை அனுப்புவதை ஆதரித்தது. தோட்டத் தொழிலாளர்களின் கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இளைஞர்களுக்கு வேலைகள் மற்றும் சிறந்த ஊதியங்கள் மற்றும் அனைத்து உழைக்கும் குடும்பங்களுக்கும் புதிய வீடுகள் தேவை. ஆனால் பல தசாப்தங்களாக தோட்டத் தொழிலாளர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டதன் நிலைமை காரணமாக, இன்று மிகப்பெரிய ஆபத்தை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.
உலக சந்தையில் இரக்கமின்றி போட்டியிடும் தோட்ட நிறுவனங்கள், சுரண்டலை தீவிரப்படுத்த முயல்கின்றன, சமூக நிலைமைகளை கூட அழிக்கின்றன. சமீபத்திய ஊதியப் போராட்டத்தில் நிரூபிக்கப்பட்டவாறு, ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் இந்தக் கொள்கையை ஆதரிக்கின்றன.
இலாபத்திற்காக முண்டியடிக்கும் தோட்ட நிறுவனங்களின் கீழ், தொழிலாளர்கள் தங்கள் நிலைமைகளை மேம்படுத்த முடியாது.
வருமான பங்கீட்டு திட்டத்தின் கீழ், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேயிலை செடிகளை கொண்ட ஒரு நிலத்தை ஒரு தொழிலாளிக்கு வழங்குவதன் மூலம் தொழிலாளர்களை அடிமைகளாக மாற்றுவதற்கான வழியை அவர்கள் முன்மொழிந்துள்ளனர். கம்பனி தேயிலை கொழுந்தை கொள்வனவு செய்வதன் மூலம் தொழிலாளியின் உற்பத்தித் திறனை அதிகரிக்க முற்படுகின்றன. இதன் மூலம் தொழிலாளியின் முழு குடும்பத்தையும் உழைப்பில் ஈடுபடுத்தி இலாபத்தை அதிகரித்துக்கொள்கின்றன.
இந்த சூழலில், "பெரும் தோட்ட சமூகத்தை சிறுதோட்ட உரிமையாளராக மாற்ற வேண்டும்" என்ற இ.தொ.கா.வின் முன்மொழிவு குறிப்பிடத்தக்கதாகும். இந்த திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு உறுதி மற்றும் வீட்டுவசதி திட்டம் வழங்கப்படும் என்றும் அந்த திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. வீட்டுத் திட்டம் மற்றும் நில உரிமையுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தாலும், இந்த திட்டம் பிற்போக்குத்தனமானது. இது ஒரு வருமான பகிர்வு முறைக்குள் தொழிலாளர்களைத் தள்ளுவதற்காக ஒரு நிலத்தை ஒதுக்குவதையே முன்மொழிகிறது.
இலங்கையில் ஒரு ஏக்கர் அல்லது இரண்டு ஏக்கர் தேயிலை அல்லது இரப்பர் பயிரிடும் சிறு விவசாயிகள் உள்ளனர் என்பது இரகசியமல்ல. பெரிய இலாபத்திற்கு சம்பாதிக்கும் தொழிற்சாலைக்கு தேயிலை கொழுந்தை வழங்கும் அவர்கள், அதனைப் பராமரிப்பதற்கும், அறுவடை செய்வதற்கும் முதுகெலும்பாக செயல்படுகிறார்கள். இந்த தொழிற்சாலைகள் பல தோட்டத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு சொந்தமானவை.
பெரிய தோட்டங்களை துண்டாடுவதன் மூலம் தொழிலாளர்களை சிறு விவசாயிகளாக மாற்றுவது தொழிலாளர்களுக்கு ஒரு "தீர்வு" அல்ல, மாறாக கம்பனிகளின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக, தொழிலாளர்களின் உரிமைகளுக்காக ஒரு வர்க்கமாக ஐக்கிப்பட்டுப் போராடும் பலத்தை தகர்ப்பதற்கு அல்லது அழிப்பற்கான சதியாகும்.
தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண, பிரமாண்டமான பெருந்தோட்டங்களை தொழிலாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கி உற்பத்தியை விஞ்ஞான அடிப்படையில் மறு ஒழுங்கு செய்ய வேண்டும். இது இலங்கை மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.
உலகெங்கிலும் உள்ள தங்களது சகாக்களைப் போலவே, நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கையில் உள்ள ஆளும் வர்க்கமும் நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் முதுகில் சுமத்த முயல்கிறது. இலங்கை மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் போராட்ட இயக்கம் குறித்து அது பீதியடைந்துள்ளது. இந்த போராட்டங்களின் ஒரு பகுதியாக, டிசம்பரில் ஒன்பது நாள் வேலைநிறுத்தம் உட்பட 100,000 தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் ஆளும் வர்க்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சிறிசேன-விக்ரமசிங்க மற்றும் இராஜபக்க்ஷ தலைமையிலான ஆளும் வர்க்கத்தின் சகல பிரிவுகளும், அரசாங்கத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும், வர்க்கப் போராட்டங்களை நசுக்கக் கூடிய ஒரு பொலிஸ் அரசை ஸ்தாபிப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தின் மீது தங்கள் நெருக்கடியின் முழுச் சுமையையும் சுமத்தவும் அனைத்து பிற்போக்கு முயற்சிகளையும் நாடுகின்றன.
ஏனைய தொழிற்சங்கங்களைப் போலவே, இ.தொ.கா. உண்மையில் இலங்கையில் அத்தகைய சர்வாதிகார ஆட்சியை ஆட்சிக்கு கொண்டுவர தயாராகி வருகிறது. தொழிலாளர்கள் அவர்களின் ஏமாற்று திட்டத்தை நிராகரித்து ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக ஒழுங்கமைய வேண்டும். தோட்டத் தொழிலாளர் போராட்டத்தில் எபோட்ஸ்லி தோட்டத் தொழிலாளர்கள் செய்ததைப் போல், தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டும். இது தொழிலாளர்கள் சோசலிச கொள்கைகளுக்காகவும் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காகவும் போராட உதவும்.