Print Version|Feedback
A socialist response to the global jobs massacre in the auto industry
வாகனத் தொழில்துறையில் உலகளாவிய வேலை அழிப்புகளுக்கு ஒரு சோசலிச பதில்
Peter Schwarz
29 November 2019
செவ்வாயன்று, ஜேர்மன் வாகன உற்பத்தி நிறுவனம் அவுடி (Audi) அடுத்த ஐந்தாண்டுகளில் 9,500 வேலைகளை வெட்ட இருப்பதாக அறிவித்தது, அதாவது ஒவ்வொரு ஆறு தொழிலாளர்களில் ஒருவர் அவர்களின் வேலையை இழப்பார்கள்.
இந்த அறிவிப்பு வாகன தொழில்துறையில் உலகளாவிய வேலைகள் மீதான இரத்த ஆற்றின் பாகமாக உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, இந்தியாவில் சுமார் 350,000 வாகனத்துறை வேலைகள் மற்றும் சீனாவில் 220,000 வேலைகள் அழிக்கப்பட்டுள்ளன. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிற் குழு உடனான உடன்படிக்கையுடன், வோல்ஸ்வாகன் கடந்த மூன்றாண்டுகளில் 30,000 வேலைகளை நீக்கி உள்ளது, அதேவேளையில் அதே காலகட்டத்தில் 25 சதவீத அளவுக்கு உற்பத்தியை அதிகரித்துள்ளது.
ஃபோர்ட் நிறுவனம் தற்போது ஐரோப்பாவில் 12,000 வேலைகளையும், வட அமெரிக்காவில் 7,000 வேலைகளையும் நீக்கி வருகிறது. நிசான் உலகெங்கிலும் 12,500 வேலைகளை வெட்டி வருகிறது. ஜெனரல் மோட்டார்ஸ் அமெரிக்கா மற்றும் கனடாவில் நான்கு ஆலைகளை மூடி வருகிறது மற்றும் 8,000 வேலைகளைக் குறைத்து வருகிறது. இதேபோன்ற திட்டங்கள் டைம்லெர், BMW, PSA, மற்றும் பிற வாகன உற்பத்தி நிறுவனங்களிலும் உள்ளன.
இந்த நிலைமை உதிரிப்பாகங்கள் உற்பத்தி தொழில்துறையில் இன்னும் படுமோசமாக உள்ளது. வரவிருக்கும் பத்தாண்டுகளில் 20,000 வேலைகளை நீக்குவதற்கான திட்டங்களை Continental அறிவித்துள்ளது. Bosch இந்தாண்டு ஜேர்மனியில் 2,500 வேலைகளைக் குறைத்தது மற்றும் 2022 க்குள் இன்னும் 3,000 வேலைகளை வெட்ட திட்டமிட்டுள்ளது. ZF, Schaeffler, மற்றும் Mahle உட்பட மற்ற உதிரிப்பாகங்கள் உற்பத்தி நிறுவனங்களும் ஆயிரக் கணக்கான வேலைகள் மீது இதேயே செய்து வருகின்றன.
கிளேகொமோவின் கன்சாஸ் நகர ஃபோர்ட் உற்பத்தி ஆலையில் ஒரு புதிய அலுமனிய-அலாய் கட்டமைப்பில் ஃபோர்ட் எஃப்-150 பாரவூர்தி மீது என்ஜினைப் பொருத்துவதற்காக வாகனத்துறை தொழிலாளளி ஒருவர் மேல்கட்டமைப்பைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார் (படம்: அசோசியேடெட் பிரஸ்/சார்லி ரீடெல்)
தொழிலாளர்களின் வேலைகள், வேலையிட நிலைமைகள் மற்றும் கூலிகள் மீதான தாக்குதலை எதிர்க்க அவர்களுக்கு ஒரு சர்வதேசவாத முன்னோக்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டமும் அவசியப்படுகிறது என்பதை இந்த அபிவிருத்திகள் தெளிவுபடுத்துகின்றன.
தொழிலாளர்கள், உலகளவில் செயல்பட்டு வரும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பில்லியனிய பங்குதாரர்களை மட்டும் எதிர்கொள்ளவில்லை, மாறாக வெட்டுக்களைச் செய்வதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் நிர்வாகத்திற்கு ஒத்துழைக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சாலை குழுக்களையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய காசுக்காக பேரம் பேசும் எந்திரங்களிடம் இருந்து முறித்துக் கொள்ளாமல், தங்களின் போராட்டங்களை சர்வதேசரீதியில் ஒருங்கிணைப்பதற்குச் சுயாதீனமான சாமானிய தொழிலாளர்கள் குழுக்களை ஸ்தாபிக்காமல், ஒரேயொரு வேலையைக் கூட பாதுகாக்க முடியாது.
இது குறிப்பாக அவுடி ஆலை சம்பவங்களில் தெளிவாகிறது. அந்நிறுவனத்தில் வேலைகளின் அழிப்பானது, நிர்வாகம், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சாலை குழுக்களுக்கு இடையே மாதக் கணக்கிலான இரகசிய பேச்சுவார்த்தைகளில் திட்டமிடப்பட்டு தயாரிப்பு செய்யப்பட்டது.
“ஆலைக் கதவுகளுக்கு முன்னால் செங்கொடிகளுடன் கடுமையான ஆர்ப்பாட்டங்கள் இல்லை,” என்று சற்றே ஆச்சரியத்துடன் Süddeutsche Zeitung எழுதியது. “அதற்கு முரணாக, அத்திட்டமும் வெட்டுக்களின் எண்ணிக்கையும் தொழிற்சாலை குழுவின் ஒத்துழைப்புடன் (அவுடி நிறுவன தலைமை செயலதிகாரி பிராம்) ஸ்காட் ஆல் செய்யப்பட்டிருந்தன, செவ்வாயன்று இரண்டு தரப்பிலும் ஏறத்தாழ குதூகலம் நிரம்பியிருந்தது.” தொழிற்சாலை குழு தலைவர் பீட்டர் மோஸ்ச் வேலைகளின் அழிப்பை ஒரு "முக்கிய மைல்கல்" என்று புகழ்ந்தார்.
வாகன உற்பத்தி நிறுவனங்களும் தொழிற்சங்கங்களும் உலகளவில் விற்பனை சரிந்திருப்பதையும், தானியங்கி மற்றும் மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி, இவை அதிக மேம்பாட்டு செலவுகளைக் கொண்டிருப்பதாகவும் ஆனால் உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கில் வெகு குறைவான செயல்பாடுகளைக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டு, வேலைகள் மற்றும் கூலிகள் மீதான தாக்குதலை நியாயப்படுத்துகின்றன.
உண்மையில், வாகனத்துறை அபிவிருத்திகள் முதலாளித்துவ அமைப்புமுறையின் முட்டாள்தனத்தையே எடுத்துக்காட்டுகின்றன, இதன் கீழ் தொழில்நுட்ப அபிவிருத்தியானது தொழிலாளர்கள் மீதான சுரண்டலைத் தீவிரப்படுத்தவும், ஒரு சிறிய பெரும் பணக்கார உயரடுக்கின் பைகளை நிரப்பவும், மற்றும் நூறாயிரக் கணக்கானவர்களை வறுமையில் தள்ளவும் பயன்படுத்தப்படுகிறது. இது, உலகளாவிய வாகனத்துறையை சமூகத்திற்குச் சொந்தமான சொத்தாக மாற்றுவதற்கும், மற்றும் தனியார் இலாபத்திற்காக அல்லாமல் ஒரு பகுத்தறிவார்ந்த திட்டத்தின்படி மனித தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அதை தொழிலாளர்கள் மற்றும் உலகளவிலான அதன் அமைப்பின் கட்டுப்பாட்டிலும் நிறுத்துவதற்கும் ஒரு பலமான வாதத்தை வழங்குகிறது.
தசாப்த கால கடுமையான போராட்டங்களினூடாக தொழிலாளர்கள் வென்றெடுத்த உரிமைகளை அழிக்க, உலகளாவிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களை, தாக்குதலை அதிகரிப்பதற்காக பயன்படுத்தி வருகின்றன. இந்த தாக்குதல்கள் 1980 களில் தொடங்கியது, அதற்குப் பின்னர் இருந்து வாகனத்துறை தொழிலாளர்களின் கூலிகள் மந்தமாகி உள்ளன அல்லது வீழ்ச்சி அடைந்துள்ளன. தற்காலிக மற்றும் ஒப்பந்த வேலைவாய்ப்பும் மற்றும் ஏனைய வடிவிலான நிச்சயமற்ற வேலை முறையும், தொழிற்சங்களின் ஒப்புதலுடன், வாகன ஆலைகளின் ஒரு முக்கிய அம்சமாக நீண்டகாலமாக ஆகியுள்ளன. அமெரிக்காவில், ஒபாமா நிர்வாகம் புதிதாக நியமிக்கப்படும் அனைவருக்கும் கூலிகளைப் பாதியாக குறைத்தன் மூலமாக ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்லருக்கு மறுவடிவம் கொடுத்தது. ஆசியா, இலத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் வழங்கப்படும் பட்டினி மட்டத்திலான கூலிகள் ஒவ்வொரு இடத்திலும் கூலிகளைக் குறைக்க சாதகமாக்கிக் கொள்ளப்பட்டு வருகிறது.
தானியங்கி முறை மற்றும் செயற்கை நுண்ணறிவின் அறிமுகம் வேலையை எளிதாக்குவதற்காக பயன்படுத்தப்படவில்லை, மாறாக "அமசன்-மய" படுத்த, அதாவது வேலை நாளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. மேம்பாடு மற்றும் உற்பத்தி செலவுகளைக் குறைப்பதற்காக, மற்றும் புதிய சந்தைகளைப் பிடிப்பதற்காக, வாகன உற்பத்தி நிறுவனங்கள் இன்னும் பெரிய நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டு வருகின்றன. ரெனால்ட்/நிசான், வோல்ஸ்வாகன் மற்றும் டொயாட்டா ஆகியவற்றுக்குப் பின்னர், சமீபத்தில் PSA (பேஜோ) மற்றும் பியட்-கிறைஸ்லர் உலகின் நான்காவது மிகப்பெரிய வாகனத்துறை நிறுவனத்தை உருவாக்குவதற்காக அவற்றின் சக்திகளை இணைக்க உடன்பட்டன.
கூலிகள் மற்றும் விலைகளைத் தீர்மானித்து கட்டளையிடும் மிகப்பெரும் ஏகபோகங்கள் உலகச் சந்தையில் மேலாதிக்கம் செலுத்துகின்றன, மற்றும் சந்தைப் பங்குக்காக கடுமையாக போராடுகின்றன, இது அதிகரித்தளவில் ஏகாதிபத்திய சக்திகளின் போர் தயாரிப்புகளுடன் ஒத்துப் போகிறது.
இத்தகைய தாக்குதல்களை எதிர்த்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மெக்சிகோவின் மத்தாமோரொஸில், பெரியளவில் சுரண்டப்பட்டு வந்த பத்தாயிரக் கணக்கான வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தி தொழில்துறை தொழிலாளர்கள் இந்தாண்டு தொடக்கத்தில் பல வாரங்கள் அவர்களின் கருவிகளை கையில்தொடவில்லை. அமெரிக்காவில், 48,000 ஜிஎம் வாகனத்துறை தொழிலாளர்கள் ஐம்பதாண்டுகளில் நீண்ட வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தனர். இந்தியா, சீனா, ருமேனியா, ஹங்கேரி, செக் குடியரசு, ஜேர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஏனைய நாடுகளிலும் வாகனத்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன.
ஆனால் எங்கெல்லாம் இத்தகைய போர்குணமிக்க போராட்டங்கள் வெடிக்கிறதோ, அவை உடனடியாக தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் மோதலுக்கு வருகிறது, இவை அவற்றை விற்றுத் தள்ளி அடிபணிய வைக்கின்றன. ஜேர்மனியின் IG Metall, அமெரிக்காவில் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கம், மற்றும் பிற சங்கங்களும் நீண்டகாலத்திற்கு முன்னரே சமூக மேம்பாடுகள் மற்றும் சீர்திருத்தங்களுக்காக போராடிய தொழிலாளர்களின் அமைப்பு என்பதிலிருந்து முடிவுக்கு வந்துவிட்டன. அதற்கு பதிலாக அவை தொழிலாளர்களை பீதியூட்டவும் மற்றும் நிர்வாகத்தின் கட்டளைத் திணிக்கவும் பணிக்கப்பட்ட ஆலையின் துணை-நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர் மீதான பொலிஸ் படையாக செயல்படுகின்றன.
இந்த பாத்திரம், பிரிக்கவியலாதவாறு ஒன்றோடொன்று பிணைந்த தொழிற்சங்கங்களின் சமூக நிலைமை மற்றும் அவற்றின் அரசியல் வேலைத்திட்டம் இரண்டினாலும் தீர்மானிக்கப்படுகிறது.
தொழிற்சங்க நிர்வாகிகளும் தொழிற்சாலை குழுவினரும் சம்பாதிக்கும் வருமானத்தை தொழிலாளர்களால் கனவு மட்டுமே காண முடியும். இது ஒவ்வொரு நாட்டிலும் வேறு வேறு வடிவங்களாக இருக்கலாம், ஆனால் சாராம்சம் ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. அமெரிக்காவில் UAW தலைவர் கேரி ஜோன்ஸ் மற்றும் பிற முன்னணி அதிகாரிகள் தொழிற்சங்க நிதிகளில் இருந்து மில்லியன் கணக்கிலான டாலர்களைக் களவாடிய பின்னர் இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டனர். ஜேர்மனியில், தொழிற்சங்க சேவைகளுக்கான நிதி, கூட்டு-தீர்மானிப்பு என்றழைக்கப்படும் முறையில் சட்டபூர்வமாக குறியீடு செய்யப்பட்டுள்ளது. Berndt Osterloh (வோல்ஸ்வாகன்) மற்றும் பீட்டர் மொஸ்ச் (அவுடி) போன்ற தொழிற்சாலை குழு தலைவர்கள் உயர்மட்ட ஆறு-இலக்க அளவில் வருடாந்தர சம்பளங்களைப் பெறுகின்றனர்.
தொழிற்சங்க அதிகாரத்துவம் வர்க்க போராட்டத்திற்கு விரோதமாக இருப்பதுடன், அடிப்படையில் தேசியவாதிகளாவர். பெருநிறுவன நிர்வாகிகளைப் போலவே, இவர்களும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு எதிரிகளுக்கு எதிராக தங்களின் "சொந்த" பெருநிறுவனத்தின் போட்டித்தன்மை நிறைந்த ஆதாயத்தைப் பாதுகாப்பதையே தங்களின் வேலையாக காண்கின்றனர். இதை சாதிப்பதற்காக, அவர்கள் கூலி வெட்டுக்களில் இருந்து பாரிய வேலைநீக்கங்கள் வரையில் மற்றும் Bochum இல் ஓப்பெல் ஆலை போல ஆலைகளின் மூடல்கள் வரையில் எதற்கும் உடன்பட தயாராக உள்ளனர். அவர்கள் எப்போதேனும் வேலைநிறுத்தங்கள் அல்லது போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தால், அவர்கள் தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் எதிர்ப்பு அவர்களின் கட்டுப்பாட்டை விட்டு போய்விடாமல் தடுப்பதற்காகவும் திசைதிருப்புவதற்காகவும் மட்டுமே அதை செய்கிறார்கள்.
வர்க்கப் போராட்டத்தை நசுக்க, தொழிற்சங்க செயலதிகாரிகள் அரசாங்கள் மற்றும் பெருநிறுவனங்களுடன் நெருக்கமான ஒத்துழைப்பை ஸ்தாபிக்க நோக்கம் கொள்கின்றனர். சான்றாக, ஜேர்மனியில் வாகனத்துறையின் மையமாக விளங்கும் பாடன் வூட்டெம்பேர்க் மாநிலத்தில் IG Metall தலைவர் Roland Zitzelsberger சமீபத்தில் உருமாற்றும் கவுன்சில் என்றழைக்கப்படுவைக் குறித்து ஒரு பேட்டியில் பெருமைப்பீற்றினார். இந்த கவுன்சிலில் தொழிற்சங்க அதிகாரிகள், தொழிற்சாலை கவுன்சிலர்கள், பெருநிறுவன செயலதிகாரிகள், அரசாங்க பிரதிநிதிகள், மற்றும் கல்வித்துறையாளர்கள் உள்ளடங்கி உள்ளனர், இவர்கள் அனைவரும் பொருளாதார மூலோபாயங்களை விவாதிக்க மேசையைச் சுற்றி ஒன்றுகூடுகின்றனர். இந்த வடிவிலான வர்க்க ஒத்துழைப்பு 20 ஆம் நூற்றாண்டின் போது இத்தாலிய பாசிசவாதத்தின் பெருநிறுவன அரசில் மிகவும் முடிவான வடிவம் கண்டது.
தொழிற்சங்கங்களின் திணறடிக்கும் பிடியை உடைக்க, உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சாலை குழுக்களுக்கு எதிராக சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்க அழைப்பு விடுக்கின்றன.
தொழிற்சங்கங்களின் முதலாளித்துவ-சார்பு மற்றும் தேசியவாத கொள்கைகளுக்கு எதிர்விதமாக, இத்தகைய நடவடிக்கை குழுக்கள் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் தேவைகள் மீது அவற்றின் மூலோபாயத்தை அமைக்கும், அவை முதலாளித்துவத்தோடு சமரசம் செய்ய முடியாதவை. நாடு கடந்த வாகனத்துறை நிறுவனங்களின் உலகளாவிய மூலோபாயத்திற்குப் பதிலடி கொடுப்பதில், சாமானிய தொழிலாளர் குழுக்கள் அனைத்து தொழிலாளர்களுக்கும் நல்ல சம்பளத்தில் வேலை மற்றும் பாதுகாப்புக்கான உரிமையைப் பாதுகாக்கும் ஒரு பொதுவான போராட்டத்தில் உலகெங்கிலுமான வாகனத்துறை தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் நோக்கில் அவற்றின் சொந்த சர்வதேச மூலோபாயத்தை முன்னெடுக்க வேண்டும். சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டமைப்பதிலும், ஆலைகள் மற்றும் தேசிய எல்லைகளைக் கடந்து தகவல் தொடர்புகளை நிறுவுவதிலும், முதலாளித்துவச் சுரண்டலை முற்றுமுதலாக அனைவருக்கும் முடிவுக்குக் கொண்டு வர அவசியப்படும் தொழிலாள வர்க்கத்தின் தலைமையைக் கட்டமைப்பதிலும் வாகனத்துறை தொழிலாளர்களுக்கு உதவுவதில் உலக சோசலிச வலைத் தளம் அனைத்து உதவிகளையும் செய்யும்.