ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

UN rapporteur Nils Melzer warns: Julian Assange may die in a British prison

ஜூலியன் அசான்ஜ் பிரிட்டிஷ் சிறையில் இறந்துவிடக்கூடும் என்று ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் நீல்ஸ் மெல்ஸர் எச்சரிக்கிறார்

Oscar Grenfell
4 November 2019

சித்திரவதை குறித்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் நீல்ஸ் மெல்ஸர், விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் சிறையிலிருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டு அவருக்கு தேவைப்படும் மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லையானால், பிரிட்டனின் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அவர் இறந்துவிடக் கூடும் என்ற அச்சமுறச் செய்யும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

Associated Free Press ஊடக கருத்துக்களுக்கு இணையாக, மெல்ஸர் தனது அறிக்கை “புதிய மருத்துவ ரீதியான ஏற்புடைய தகவல்களை” அடிப்படையாகக் கொண்டது என்று தெரிவித்தார். “நீண்டகால தனிமைச் சிறைவாசம் மற்றும் ஒருவர் மீது காட்டப்பட்ட இடையறாத ஒருதலைப்பட்சம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வழமையான நிலையாக, கடுமையான கவலை, மன அழுத்தம் மற்றும் உதவியற்ற நிலைக்கு ஆளாகி திரு அசான்ஜின் உடல்நலம் படிப்படியாக கீழ்நோக்கிச் சென்றுவிட்டது,” என்று ஐ.நா. அதிகாரி தெரிவித்தார்.

சித்திரவதை மற்றும் அதன் அறிகுறிகள் தொடர்பாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சட்ட நிபுணரான மெல்ஸர் இவ்வாறு விளக்கினார்: “துல்லியமான மாற்றத்தை உறுதியாக கணிப்பது கடினம் என்றாலும், இத்தகைய அறிகுறிகள் இருதய முறிவு அல்லது நரம்பு உடைவு சம்பந்தப்பட்ட உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையாக விரைவில் உருவெடுக்கலாம்.”


ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்யக் கோரும் பதாகையை ஏந்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் (AP Photo/Frank Augstein)

மெல்ஸரின் அறிக்கைகள், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமெரிக்க நிர்வாகத்தின் சார்பாக செயலாற்றும் பிரிட்டிஷ் அரசாங்கம், அசான்ஜின் உளவியல் மற்றும் உடல் ரீதியான அழிவைத் தவிர வேறெதையும் விரும்பவில்லை என்பதை உறுதி செய்கின்றன.

அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைத்து அவரை ஆயுள் தண்டனை அனுபவிக்கச் செய்யும் முயற்சி என்பது இந்த சட்டவிரோத பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். மேலும், உண்மையான தனிமைச் சிறைவாசத்தில், தேவையான மருத்துவ கவனிப்பும் இல்லாமல் பிரிட்டனின் குவாண்டனாமோ விரிகுடாவையொத்த பெல்மார்ஷ் சிறையில் காலவரையின்றி அவர் தடுத்துவைக்கப்பட்டிருப்பது அதன் மற்றொரு பகுதியாகும்.

அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸை மௌனமாக்குவதும், மற்றும் வரலாற்றுப் போர்க்குற்றங்கள், உலகளாவிய இராஜதந்திர சதித்திட்டங்கள் மற்றும் வெகுஜன கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை அவர்கள் அம்பலப்படுத்தியதற்காக அவர்களை கடுமையாக பழிவாங்குவதும் இவ்விரண்டின் நோக்கமாக உள்ளது.

ஏப்ரல் 11 அன்று, பிரிட்டிஷ் பொலிசார் ஈக்வடோர் இலண்டன் தூதரகத்திலிருந்து சட்டவிரோதமாக அசான்ஜை வெளியே இழுத்து வந்து கைதுசெய்த நாள் முதல், ஒன்றன்பின் ஒன்றாக சட்டரீதியான போலிச்சாட்டுகளுக்கு அவர் ஆளாகி வருகிறார்.

பிணை மீறல் குற்றத்திற்காக மட்டுமே அசான்ஜ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள போதிலும், அதிகூடிய பாதுகாப்புள்ள பெல்மார்ஷ் சிறையில் உடனடியாக அவர் அடைக்கப்பட்டார். மே மாதத்தில், இரண்டு மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து சென்று மெல்ஸர் அவரை சந்தித்தார். அவர்கள், “நீண்டகால உளவியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதற்கான அனைத்து அறிகுறிகளும்” அசான்ஜிடம் தென்படுவதாக மதிப்பீடு செய்தனர்.

அந்த சமயத்தில், மெல்ஸர் குறிப்பிட்டதான பெருநிறுவன ஊடகங்களால் முன்னெடுக்கப்பட்ட “அப்பட்டமான பழிவாங்கல்” என்பதன் மூலம் அசான்ஜ் ஏற்கனவே ஒன்பது ஆண்டுகால அமெரிக்கத் தலைமையிலான பழிவாங்குதலுக்கு ஆளாகியிருந்தார். அசான்ஜ் ஏழு ஆண்டுகளாக ஈக்வடோரிய தூதரகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார், அந்த சிறிய கட்டிடத்தை விட்டு அவர் வெளியேறினால் அவர் கைது செய்யப்படுவார் என்ற பிரிட்டிஷ் அதிகாரிகளின் அச்சுறுத்தல்களின் விளைவாக, அங்கு சூரிய ஒளியை கூட அனுபவிக்க முடியாத மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாத நிலையில் அவர் இருந்தார்.

அவரது தடுப்புக்காவலின் கடைசி 18 மாதங்களில், ஈக்வடோரிய அதிகாரிகளால் அந்த தூதரகம் அரசியல் அடைக்கலத்திற்கான ஒரு இடம் என்பதிலிருந்து உண்மையானதொரு சிஐஏ சிறையாக மாற்றப்பட்டிருந்தது. பார்வையாளர்களை சந்திப்பதற்கான மற்றும் வெளியுலகத்தை தொடர்பு கொள்வதற்கான உரிமை அசான்ஜூக்கு மறுக்கப்பட்டது, என்றாலும் கூட அமெரிக்க உளவுத்துறை முகமைகளால் இடைவிடாது அவர் உளவு பார்க்கப்பட்டு வந்தார்.

மே மாதம் அசான்ஜை மெல்ஸர் சந்தித்த பின்னர், “அவரது உடல்நலம் மற்றும் கண்ணியத்தை பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை” பிரிட்டிஷ் அதிகாரிகள் எடுக்க வேண்டுமெனக் கோரி அவர்களுக்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பினார்.

வெள்ளிக்கிழமை, மெல்ஸர் தனது எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுவிட்டன என்று பகிரங்கமாக அறிவித்ததுடன்,  இதையும் தெரிவித்தார்: “நாம் பார்த்த வரையில் இங்கிலாந்து அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திரு.அசான்ஜின் உரிமைகளையும் ஒருமைப்பாட்டையும் முற்றிலும் அவமதிப்பதாக உள்ளன. அவசர மருத்துவ சிகிச்சை குறித்த எனது கோரிக்கை மற்றும் கூறப்படும் மீறல்களின் தீவிரத்துவம் ஒருபுறமிருந்தாலும், சர்வதேச சட்டத்தின் கீழ் தேவைப்படும் விசாரணை, தடுப்பு மற்றும் நிவாரணம் தொடர்பான எந்தவித நடவடிக்கையையும் இங்கிலாந்து மேற்கொள்ளவில்லை.

சித்திரவதைக்கு எதிரான சர்வதேச மரபுகளை மட்டும் பிரிட்டன் மீறவில்லை, கூடுதலாக சட்ட ஆவணங்களையும் மற்றும் அவரது பாதுகாப்பிற்கான பிற தயாரிப்புக்களையும் அவர் அணுகுவதை தடுப்பதன் மூலம் அசான்ஜின் அடிப்படை சட்ட உரிமைகளையும் அது மறுத்துவிட்டது என்று மெல்ஸர் கூறினார்.

பிணை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கான காவல் தண்டனை செப்டம்பர் 22 அன்று முடிவடைந்துவிட்ட போதிலும், அசான்ஜ் “அவரது தடுப்புக்காவல் நிலை குறித்து நியாயப்படுத்தப்படாமல், தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் கண்காணிக்கக்கூடிய அடக்குமுறை நிலைமைகளின் கீழ் தடுத்துவைக்கப்படுவார்” என்பதுடன், பிரிட்டிஷ் அரசு மற்றும் அதன் நீதித்துறை மூலம் “அப்பட்டமான மற்றும் நீடித்த ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளுக்கு” அவர் ஆளாவார் என்று மெல்ஸர் குறிப்பிட்டார்.

அவரது அறிக்கை, அக்டோபர் 21 அன்று பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் அசான்ஜ் ஆஜரானதைத் தொடர்ந்து வெளியானது, அதை ஒரு போலி நாடக விசாரணை என்று மட்டுமே விவரிக்க முடியும்.

தலைமை நீதிபதி வனேசா பாரைட்சர், அரசியல் குற்றங்களுக்காக பிரிட்டனில் இருந்து அமெரிக்காவிற்கு அசான்ஜை நாடுகடத்துவது குறித்த தடை மற்றும் அசான்ஜை சட்டவிரோதமாக சிஐஏ உளவு பார்ப்பது உட்பட, அசான்ஜின் நாடுகடத்தல் வழக்கை உடனடியாக தள்ளுபடி செய்வதற்கு வழிவகுக்கும் சட்டபூர்வ விவாதங்களை தள்ளுபடி செய்தார். அசான்ஜையும் மற்றும் அவரது வழக்கறிஞர்களையும் இவர் இழிவுபடுத்தியதுடன், அவரது பெயரையும் பிறந்த தேதியையும் கூட கூற முடியாமல் திணறும் அளவிற்கு அவரது உடல்நிலை அப்பட்டமாக மோசமடைந்து வருவது குறித்து அலட்சியமாக இருந்தார்.

பாரைட்சர் அத்தகைய வெட்கக்கேடான பக்கச்சார்புகளை மட்டுமே வெளிப்படுத்த முடியும், ஏனென்றால் பிரிட்டிஷ் அரசியல் ஸ்தாபகத்தின் ஒட்டுமொத்த கொள்கையையும் அவர் செயல்படுத்துகிறார் என்பதை அவர் அறிந்திருக்கின்றார். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள அனைத்து உத்தியோகபூர்வ கட்சிகளும்,  அசான்ஜ் மெல்ல மெல்ல படுகொலை செய்யப்படுவது தொடர்பான எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதன் மூலம், இராணுவம் மற்றும் உளவு அமைப்புக்களின் விசுவாசமிக்க ஊழியர்களாக செயலாற்றுகின்றன.

ஏப்ரல் 11 அன்று, எப்போதாவது தன்னை ஒரு சோசலிசவாதி என கூறிக் கொள்ளும் பிரிட்டிஷ் தொழிற் கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின், “ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்த அட்டூழியங்களின் ஆதாரங்களை அம்பலப்படுத்தியதற்காக அமெரிக்காவிற்கு ஜூலியன் அசான்ஜ் நாடுகடத்தப்படுவதை பிரிட்டிஷ் அரசாங்கம் எதிர்க்க வேண்டும்” என்று அறிவித்தார்.

அதன் பின்னர், கோர்பினின் உதடுகளால் அசான்ஜின் பெயர் அரிதாகவே உச்சரிக்கப்பட்டது. மாறாக, ஏகாதிபத்திய போருக்கு எதிராகவும், மற்றும் அசான்ஜூக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கும் ஒரு சில முக்கிய உறுப்பினர்களை இலக்கு வைக்கும் தனது சொந்த கட்சியின் வலதுசாரிகளுடன் சேர்ந்து கொண்டு ஒரு அரசியல் சூனிய வேட்டையை நடத்த அவர் ஒப்புக் கொண்டார். 

பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் தற்போது ஈடுபட்டு வரும் கோர்பின், உலகின் மிக முக்கியமான ஊடகவியலாளர் பிரிட்டனின் மத்தியில் மரணத்திற்கு அச்சுறுத்தும் வகையில் சித்திரவதை செய்யப்பட்டு வருகிறார் என்ற ஐ.நா. அதிகாரியின் எச்சரிக்கைகளுக்கு பதிலிறுக்க தகுதியானவராகத் தெரியவில்லை. ஒரு அரசியல் கைதியாக அசான்ஜ் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலண்டன் நகரம், இதேபோல மௌனமாக இருந்து வரும் தொழிற் கட்சி மேயர் சாதிக் கான் என்பவரால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் முதல், ஆஸ்திரேலியாவில் சோசலிச கூட்டணி மற்றும் பிரிட்டனில் சோசலிச தொழிலாளர் கட்சி வரையிலான போலி-இடது அமைப்புக்களால் மிகுந்த துரோகமிக்க பங்காற்றப்படுகிறது. அவர்களது மோசமான வெளியீடுகளை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் உலகை மதிப்பிடுவாரானால், அசான்ஜ் என்பவர் இருப்பதை கூட ஒருவர் அறிய மாட்டார்.

சுவீடனில் போலியான பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுக்களில் அவரை சிக்க வைக்கும் சிஐஏ இன் முயற்சிக்கு இருந்த ஆதரவையும் மற்றும் ஏகாதிபத்திய போருக்கு அவர்களது வெளிப்படையான ஒத்திசைவையும் அடிப்படையாகக் கொண்டு விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் கைவிடப்பட்ட நிலையில், இந்த அமைப்புக்கள் சாதாரணமாக அசான்ஜை பற்றி இனி நீண்ட காலம் குறிப்பிடாது.

ஆஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் எதிர்கட்சியான தொழிற் கட்சியையும் பொறுத்தவரை, ஒரு ஆஸ்திரேலிய குடிமகனும் ஊடகவியலாளருமான அவர் பிரிட்டனின் சட்டவிரோத தடுப்புக்காவலின் விளைவாக மரணத்தை எதிர்கொள்கிறார் என்ற மெல்ஸரின் எச்சரிக்கைகளுக்கு அவர்கள் எந்தவித பதிலையும் வழங்கவில்லை. ஆஸ்திரேலிய பாராளுமன்றக் கட்சிகள் அனைத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அவர்கள் அளிக்கும் ஆதரவுடன் சேர்ந்து, அசான்ஜிற்கு எதிரான பிரச்சாரத்தையும் அவை ஆதரிக்கின்றன.

ஜனநாயக உரிமைகளையும், மற்றும் அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கு எதிராக பொய் சாட்சியம் வழங்க மறுத்ததற்காக அமெரிக்காவில் சிறையிலடைக்கப்பட்டுள்ள துணிச்சல் மிக்க இரகசிய செய்தி வெளியீட்டாளர் செல்சியா மானிங் போன்ற வர்க்க போராட்டக் கைதிகளையும் பாதுகாப்பதற்கான ஒரே அரசியலமைப்பாக தொழிலாள வர்க்கம் மட்டுமே உள்ளது என்ற உண்மை குறித்த மற்றொரு நிரூபணமாக இந்த பதிலிறுப்புகள் உள்ளன.

சிக்கன நடவடிக்கை, சமத்துவமின்மை மற்றும் போருக்கு எதிரான சமூக மற்றும் அரசியல் போராட்டங்களில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் நுழைகின்ற நிலையில், அசான்ஜ் மீதான துன்புறுத்தல் என்பது ஒரு எச்சரிக்கை விடுப்பாக உள்ளது: அது என்னவென்றால், போர்க்குற்றங்களையும் மற்றும் அரசாங்க சட்டவிரோதத்தையும் எதிர்க்கும் சக்திகளுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை நீங்கள் எடுத்தால் இதுதான் நடக்கும் என்பதாகும்.

இது தோற்கடிக்கப்பட வேண்டிய ஒரு முன்மாதிரியாக உள்ளது. எல்லா இடங்களிலும், அசான்ஜின் அவலநிலை குறித்தும், மேலும் அவர்களது சொந்த சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் மற்றும் அவரது உடனடி நிபந்தனையற்ற விடுதலைக்கான போராட்டம் ஆகியவற்றிற்கு இடையிலான பிரிக்க முடியாத உறவு குறித்தும் தொழிலாளர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

இதற்கு, சமீபத்திய மாதங்களில் சிலி, ஈக்வடோர், லெபனான் மற்றும் உலகெங்கிலும் நடந்த பெரும் போராட்டங்களில் வெளிப்படுத்தப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் சக்தியை திரட்டுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சர்வதேச பிரச்சாரம் தேவைப்படுகிறது.

சர்வதேச அளவில், உலக சோசலிச வலைத் தளமும் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சிகளும் தொழிலாள வர்க்கப் பகுதிகள், பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் அசான்ஜ் மற்றும் மானிங்கின் பாதுகாப்பிற்காக தீவிர பிரச்சாரங்களை நடத்தி வருகின்றன. இதில், வரவிருக்கும் வாரங்களில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள முக்கிய பொதுக் கூட்டங்களும் அடங்கும். எனவே, இந்த முக்கியமான போராட்டத்தில் இணைந்து கொள்ள இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.