Print Version|Feedback
No to the German-European security zone in Syria!
சிரியாவில் ஜேர்மன்-ஐரோப்பிய பாதுகாப்பு வலையம் வேண்டாம்!
By Johannes Stern
24 October 2019
வடக்கு சிரியாவில் ஒரு சர்வதேச பாதுகாப்பு வலையம் அமைப்பதற்கான ஜேர்மன் பாதுகாப்புத்துறை மந்திரி அன்னெக்ரெட் கிரம்ப்-கரன்பவர் (கிறிஸ்துவ ஜனநாயக கட்சி, CDU) இன் அழைப்பு, ஜேர்மன் இராணுவவாதத்தின் மீளெழுச்சியில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. ஜேர்மன்-ஐரோப்பிய தலைமையின் கீழ் 30,000 மற்றும் 40,000 க்கு இடையே துருப்புகளை நிலைநிறுத்த பரிசீலனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிகப் பெரிய ஜேர்மன் இராணுவ நடவடிக்கையாக இருக்கும்.
புரூசெல்ஸில் நேட்டோ பாதுகாப்பு மந்திரிகளிடையே இன்று அவர் முன்வைக்க உள்ள கிராம்ப்-கரன்பவரினது முன்மொழிவின் வரலாற்று மற்றும் அரசியல் தாக்கங்களை மிகைப்படுத்திக் கூற முடியாது. இரண்டாம் உலக போர் வெடித்து வெறும் 80 ஆண்டுகள் மட்டுமே கடந்துள்ளன. நாஜிக்கள் நாடுகளைக் கைப்பற்றுவதற்கும் நிர்மூலமாக்குவதற்குமான அவர்களின் போர்களின் போக்கில், ஐரோப்பா, சோவியத் ஒன்றியம், வடக்கு ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கைப் பெரிதும் வீணான இடிபாடுகளாக மாற்றினர்.
சான்சிலர் அங்கேலா மேர்க்கெலுக்கு அடுத்து பதவிக்கு வர சாத்தியமான ஜேர்மனியின் பாதுகாப்பு மந்திரியினது முன்மொழிவு இந்த மரபில் நிற்கிறது. சிரியாவில் ஜேர்மனியின் இராணுவ தலையீடு, அந்த உத்தியோகபூர்வ பிரச்சாரம் குறிப்பிடுவதைப் போல, "பயங்கரவாதத்தை,” எதிர்கொள்வதற்கோ அல்லது "தீவிரப்பாட்டைக் குறைப்பதை" அல்லது "சமாதானத்தைப்" பாதுகாப்பதையோ நோக்கமாக கொண்டதில்லை. அந்நாட்டையும், எண்ணெய் வளம் மிக்க மற்றும் மூலோபாயரீதியில் முக்கியத்துவம் கொண்ட மத்திய கிழக்கு பிராந்தியத்தையும், நவகாலனித்துவ முறையில் அடிபணிய வைப்பதும் மற்றும் நூறாயிரக் கணக்கான அகதிகளை மீண்டும் போர் பகுதிகளுக்குள் நாடு கடத்துவதுமே அதன் நிஜமான போர் நோக்கமாகும்.
சர்வதேச சட்டத்தை மீறும் கிராம்ப்-கரன்பவரினது திட்டத்தின் விளைவுகளைத் தெளிவாக அடையாளம் காண்பது இன்றியமையாததாகிறது. மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களைப் பறித்துள்ளதும், காயப்படுத்தி உள்ளதும், மற்றும் எண்ணுக்ணக்கற்றவர்களை அவர்களின் வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்தித்துள்ளதுமான, ஏற்கனவே எட்டாண்டுகளாக சிரியாவிலும், அப்பிராந்தியம் எங்கிலும் 28 ஆண்டுகளாகவும் நடத்தப்பட்டு வருகின்ற அந்த மோதலுக்குள், ஜேர்மனி துருப்புகளை அனுப்பும். அமெரிக்காவின் அழிக்கும் நடவடிக்கைகளை தொடர்வதும், மற்றும் அதில் இன்று வரையில் துணை பாத்திரம் மட்டுமே வகித்து வந்துள்ள ஜேர்மன் ஆயுதப்படை, ஜேர்மன் தலைமையின் கீழ், அப்பிராந்தியத்தில் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் செல்வாக்கைப் பலப்படுத்துவதுமே அதன் குறிக்கோள்களாக இருக்கும்.
ஆகஸ்ட் 2011, ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் சிப்பாய் (புகைப்படம்: அமெரிக்க கப்பற்படை, ஃப்ளிக்கர்)
பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் விடயத்தில், இந்த மேலாதிக்கம் ஒட்டோமான் சாம்ராஜ்ஜிய பிரிவினை மற்றும் முதலாம் உலக போர் முடிவு வரையில் பின்னோக்கி செல்கிறது. ஜேர்மனி விடயத்தில், இது இன்னும் பின்னோக்கி செல்கிறது. முதலாம் உலக போரில், ஜேர்மனி ஒட்டோமான் சாம்ராஜ்ஜியத்துடன் அணி சேர்ந்திருந்து ஆர்மீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலையில் ஒரு நேரடியான பாத்திரம் வகித்தது.
இந்த பிராந்தியம் இன்று, முதலாம் உலக போருக்கு முன்னர் பால்கன்களைப் போலவே, சர்வதேச மோதல்கள் மற்றும் போட்டி நலன்களுக்கான வெடிப்புப்புள்ளியாக மாறி உள்ளது. ஜேர்மன்-ஐரோப்பிய பாதுகாப்பு வலையத்தை ஸ்தாபிப்பது என்பது ஒரு மிகப் பெரிய சிரிய இறையாண்மை மீறலை மட்டும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அது படிப்படியாக பிரதான சக்திகளுக்கு இடையே ஒரு நேரடி மோதல் ஏற்படும் சாத்தியக்கூறையும் மற்றும் அடிப்படையில் ஜேர்மன் சமூகத்தையே மாற்றியமைக்க வேண்டிய சாத்தியக்கூறையும் அதிகரிக்கிறது.
ஆயிரக் கணக்கான சிப்பாய்களை அணித்திரட்டுவதற்கு கட்டாய இராணுவச் சேவையை மறுஅறிமுகம் செய்ய வேண்டியதிருக்கும் மற்றும் போர்-எதிர்ப்பை ஒடுக்க வேண்டியிருக்கும். ஏற்கனவே அடுத்த ஆண்டுக்காக 50 பில்லியன் யூரோவுக்கும் அதிகமாக திட்டமிடப்பட்டுள்ள இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கு மேற்கொண்டும் பெரிதாக்கப்படும். சமூக செலவுகள் மீதான தாக்குதல்களில் இருந்து மீள்ஆயுதமயப்படுத்துவதற்கான செலவுகள் வரையில், போர் முனைகளில் அவர்கள் போர்க்கள பலிப்படைகளாக பயன்படுத்தப்படுவது வரையில், மற்றும் அவர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் வரையில் பல அம்சங்களில் தொழிலாளர்களும் இளைஞர்களும் போருக்கான செலவுகளை தாங்க வேண்டியிருக்கும்.
சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei – SGP), 2014 இல், போருக்கு எதிரான ஓர் அவசர மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தில் ஏற்கனவே ஜேர்மன் இராணுவவாத மீள்வருகையின் நீண்டகாலத்திற்கான விளைவுகளைக் குறித்து எச்சரித்தது. முனீச் பாதுகாப்பு மாநாட்டில் வெளியுறவுத்துறை மந்திரியும் தற்போதைய ஜேர்மன் ஜனாதிபதியுமான பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் (சமூக ஜனநாயக கட்சி, SPD), ஜேர்மனி "பக்கவாட்டில் இருந்து உலக அரசியலைக் குறித்து வெறுமனே கருத்துரைப்பதையும் விட பலமானதும் பொருளாதாரரீதியில் மிகவும் வலிமையானதும் கூட" என்று அறிவித்து வெறும் ஒரு சில மாதங்களிலேயே நாம் எழுதினோம்:
“வரலாறு மீண்டும் பழிவாங்கும் வெறியோடு திரும்பிக் கொண்டிருக்கிறது. நாஜிக்களின் குற்றங்கள் மற்றும் இரண்டாம் உலகப் போர் தோல்வி ஆகியவற்றுக்கு வெறும் எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர், ஜேர்மனியின் ஆளும் உயரடுக்கு கெய்சர் மற்றும் ஹிட்லரின் கீழ் பின்பற்றப்பட்ட நாட்டைப் பிடிக்கும் கொள்கைகளுக்குள் தஞ்சமடைந்து வருகிறது. போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் பிரச்சாரம் — அதாவது, ஜேர்மனி நாஜிக்களின் கொடூரமான குற்றங்களில் இருந்து பாடம் கற்று, மேற்கு உலகை வந்தடைந்து, ஒரு சமாதானமான வெளியுறவு கொள்கையை ஏற்றுள்ளது, அத்துடன் ஒரு நிலையான ஜனநாயகமாக அபிவிருத்தி அடைந்துள்ளது என்ற பிரச்சாரம் பொய்களாக அம்பலமாகி உள்ளது. ஜேர்மன் ஏகாதிபத்தியம், அது வரலாற்றுரீதியில் மேலெழுந்ததைப் போலவே, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதன் மொத்த ஆக்ரோஷத்தன்மையுடன் மீண்டுமொருமுறை அதன் நிஜமான நிறங்களைக் காட்டி வருகிறது.”
ஐந்தாண்டுகளுக்கு பின்னர், இந்த மதிப்பீடு எந்தளவுக்கு சரியாக இருந்தது என்பது தெளிவாகிறது. 20 ஆம் நூற்றாண்டின் அதன் வரலாற்றுக் குற்றங்கள் ஒருபுறம் இருந்தபோதிலும், ஆளும் உயரடுக்கு 21 ஆம் நூற்றாண்டில் அதன் ஏகாதிபத்திய நலன்களைப் பின்தொடர்வதில் எந்த வரம்புகளையும் ஏற்பதாக இல்லை. முதலாளித்துவ அரசியல்வாதிகளும் ஊடக நிறுவனங்களும் மிகவும் ஆக்ரோஷமான போர் பிரச்சாரத்தை முன்னெடுக்க போட்டி போட்டுக் கொண்டு இருப்பதுடன், எழுபது ஆண்டுகள் வெளியுறவு கொள்கையில் ஒப்பீட்டளவில் ஸ்திரத்தன்மை பேணியதற்குப் பின்னர் இப்போது பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நலன்களுக்காக மீண்டுமொருமுறை பெரும் போர்களை தொடுப்பது அவசியப்படுவதாக மக்களை நம்ப வைக்க முயற்சித்து வருகின்றன.
“ஐரோப்பாவின் இராணுவமயப்படலை ஒருவர் ஒரு முற்போக்கு திட்டமாக விளங்கிக் கொள்ள வேண்டும்,” என்று வாராந்தர சஞ்சிகை Die Zeit ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறது. “ஐரோப்பியர்களை பொறுத்த வரையில்,” அமெரிக்கர்களின் பின்வாங்கலில் இருந்து பின்வரும் முடிவுகளை எட்ட வேண்டும்: “அதிகார அரசியலில் அவர்கள் ஒரு சுதந்திரமான காரணகர்த்தாவாக ஆக வேண்டும்... ஐரோப்பா ஒன்றில் ஒரு கூட்டு ஆயுதப்படையை ஏற்க வேண்டும், அல்லது குறைந்தபட்சம் அதன் தேசிய ஆயுதப் படைகளைப் பலப்படுத்தி ஒரு நம்பகமான அணுஆயுத தடையை ஸ்தாபிக்க வேண்டும்.” இது "பழைய கூட்டணிகள் கலைந்து வரும் ஓர் உலகில் தவிர்க்கவியலாததாகும்,” என்றது.
இன்னும் பல கருத்துரைகளும் கிராம்ப்-கரன்பவரின் முன்மொழிவை, வெளியுறவுக் கொள்கையில் நீண்டகாலமாக நிலுவையில் வைக்கப்பட்டிருந்த ஒரு நடவடிக்கை மாற்றமாக பாராட்டின. Spiegel Online இல் “இறுதியில் ஈடுபாடு" என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில், பாதுகாப்பு மந்திரியின் முடிவு "ஒரு பரபரப்பூட்டும் வெளியுறவு கொள்கை, ஜேர்மனியின் பாதுகாப்பு கொள்கையில் ஒரு திருப்புமுனை, ஜேர்மனியின் இராணுவக் கட்டுப்பாட்டு கலாச்சாரத்திலிருந்து முறித்துக்கொள்ளுதல் என்பதற்கு குறைவில்லாதது, இது உலகில் கூடுதலாக அரசியல் பொறுப்பேற்பதற்கான எல்லா அழைப்புகளுக்கும் மத்தியில், அதன் கொள்கையைத் தொடர்ந்து வரையறுத்துள்ளது,” என்பதாக பாராட்டப்பட்டது. ஐரோப்பா "சிரியாவில் அமெரிக்காவின் பின்வாங்கலைத் தொடர்ந்து இன்னும் பலமாக ஈடுபட" வேண்டும், மற்றும் "ஐரோப்பாவின் தெற்கிலுள்ள இந்த நெருக்கடி பிரதேசத்தை … இந்த உலகின் புட்டின்கள் மற்றும் எர்டோகன்களிடம் விட்டுவிட" அனுமதித்து விடக்கூடாது. ஜேர்மனி "அதன் பொறுப்புகளில் இருந்து தொடர்ந்து பின்வாங்கிக் கொள்வதை விட, மிகவும் வளமானது, மிகவும் பெரியது, அத்துடன், ஆம், மிகவும் பலமானது.” என்று குறிப்பிட்டது.
அனைத்து ஊடகங்களிலும் போலவே, எல்லா ஸ்தாபக கட்சிகளிடம் இருந்தும் ஆதரவைப் பெற்றுள்ள இந்த அத்துமீறல், போர் காய்ச்சலை உண்டாக்கி உள்ளது. கிராம்ப்-கரன்பவரின் முன்மொழிவு பற்றி விமர்சனங்கள் இருந்தால், அது அதன் மூலோபாய நோக்குநிலை மீதான நிலைப்பாட்டில் இருந்து, அந்த பாதுகாப்பு மண்டலத்தைக் கூடுதலாக தொழில்முறைரீதியில் எவ்வாறு தயாரிப்பது மற்றும் செயல்படுத்துவது என்பதிலிருந்து வந்தது.
அதிவலது தீவிரவாத ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) அதன் அறிக்கையில் அரசாங்கத்தை ஒரு "குழப்பமான இராணுவம்" என்று வர்ணித்தது, ஆனால் அந்த முன்மொழிவுடன் கோட்பாட்டுரீதியில் அது உடன்படுவதாக வலியுறுத்தியது. AfD இன் வெளியுறவு கொள்கை செய்தி தொடர்பாளர் ஆர்மின் பௌலுஸ் ஹாம்பெல் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கோருகையில், ஜேர்மனி "ஒரு பலமான ஐ.நா. உத்தரவாணையின் உதவியோடும் மற்றும் எவரொருவர் அந்த பாதுகாப்பு வலையத்திற்குள் நுழைய முயன்றாலும் சுட்டுத்தள்ள தயாராக இருக்கும் ஒரு சர்வதேச படையுடனும்… சிரியாவில் அந்த பாதுகாப்பு வலையத்தை உருவாக்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் அழுத்தமளிக்க" வேண்டும் என்றார்.
சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) மூத்த கட்சி பிரமுகர்கள் கிராம்ப்-கரன்பவர் அவரின் முடிவை அவர்களுடன் கலந்து பரிசீலிக்கவில்லை என்று மீண்டும் மீண்டும் குறைபட்டு கொண்டாலும், SPD அதன் ஆதரவையும் சுட்டிக்காட்டியது. “நிலைமையை ஸ்திரப்படுத்த நம்மால் என்ன செய்ய முடியும் என்று இங்கே ஜேர்மனிக்குள் நாம் விவாதித்து கொண்டே இருக்கிறோம் என்ற உண்மை முறைகேடானது கிடையாது,” என்று நாடாளுமன்ற பாதுகாப்பு குழுவில் உள்ள SPD இன் பிரதிநிதி Fritz Felgentreu தெரிவித்தார். பாதுகாப்பு வலையம் குறித்து "விவாதம்" “நடத்தப்பட்டிருக்க வேண்டும், ஆனால் இறுதியில் யதார்த்தமான ஏதாவதொன்று அதிலிருந்து வெளிப்பட்டிருக்கும்" என்றார்.
அது, அனைத்திற்கும் மேலாக, துருக்கியின் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக திருப்பி விடப்பட்டிருக்க வேண்டும் என்று முறையிட்டு, இடது கட்சியும் பசுமை கட்சியும் கூட அப்பிராந்தியத்தில் ஜேர்மன் ஏகாதிபத்திய நலன்களின் அதிக ஆக்ரோஷமான வலியுறுத்தலை ஆமோதிக்கின்றன.
“வடக்கு சிரியாவில் இருந்து துருக்கி பின்வாங்குவதற்கும் மற்றும் அப்பகுதிகளில் குர்தியர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுப்பதற்கும் அழுத்தமளிப்பதே" “தலையாய முன்னுரிமை" என்று பசுமை கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் Anton Hofreiter ஓர் அறிக்கையில் எழுதினார். ஜேர்மன் அரசாங்கம் "சட்டவிரோத துருக்கிய இராணுவ தலையீட்டுக்கு மிகவும் மிகவும் ஆர்வமின்றி" விடையிறுத்ததாகவும், இப்போது "எர்டோகனைச் சுற்றி தயங்கி தயங்கி செல்வதை மூடிமறைக்க முயன்று" வருவதாகவும் தெரிவித்தார்.
தொடக்கத்தில் இருந்தே சிரிய மோதலில் போர் கட்சியாக இருந்துள்ள இடது கட்சி இதேபோன்ற தொனியை ஒலித்தது. அரசாங்கம் "அவ்விதத்தில் வடக்கு சிரியாவுக்குள் ஜனாதிபதி எர்டோகனின் அணிவகுப்பைத் தடுத்து நிறுத்த எல்லா அரசியல் வாய்ப்புகளையும் பயன்படுத்த பெரிதும் தவறி" இருந்தது என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு மற்றும் இராணுவக் கொள்கை குழுவின் துணை தலைவர் Özlem Alev Demirel குறை கூறினார். “ஓர் இராணுவ தலையீடு குறித்து கிராம்ப்-கரன்பவர் பலமாக சிந்திப்பதற்கு முன்னதாக, அதன் அரசியல் தயாரிப்பு வேலைகளைச் செய்ய வேண்டும்.”
சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே மகா கூட்டணியின் போர் திட்டங்களை எதிர்க்கும் ஒரே கட்சியாகும், SEP மட்டுமே தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரும் எதிர்ப்பை அணித்திரட்ட முயன்று வருகிறது. பாசிச ஆட்சி வடிவங்களைக் கொண்டு ஆளும் உயரடுக்கு மீண்டுமொருமுறை அதன் இராணுவவாதம் மற்றும் போர் திட்டங்களை திணித்து வருவதைத் தடுக்க, இந்த அதிகரித்து வரும் எதிர்ப்பு ஒரு நனவுபூர்வமான அரசியல் அடித்தளத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), “சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்" என்ற அதன் அறிக்கையில் முன்னெடுத்த கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு போர்-எதிர்ப்பு இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டும். இந்த கொள்கையில் உள்ளடங்குபவை:
• போருக்கு எதிரான போராட்டமானது, மக்களின் அனைத்து முற்போக்கான கூறுபாடுகளையும் சமூகத்தின் தலைச்சிறந்த புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கத்தின் பின்னால் ஐக்கியப்படுத்தி, அதை அடித்தளமாக கொண்டிருக்க வேண்டும்.
• இராணுவவாதம் மற்றும் போருக்கு அடிப்படை காரணமான இந்த பொருளாதார அமைப்புமுறை மற்றும் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போராட்டம் இல்லாமல் போருக்கு எதிரான எந்த தீவிரமான போராட்டமும் இருக்க முடியாது என்பதால், புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் சோசலிசத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
• ஆகவே, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, அத்தியாவசியமான வகையில், முதலாளித்துவ வர்க்கத்தின் அத்தனை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்தும் முழுமையாகவும் குழப்பத்திற்கிடமின்றியும் சுயாதீனமானதாகவும், அவற்றுக்கு விரோதமாகவும் இருந்தாக வேண்டும்.
• எல்லாவற்றுக்கும் மேலாக, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது சர்வதேசமயமானதாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு ஒன்றுபட்ட உலகளாவிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த சக்தியை அணிதிரட்டக்கூடியதாக இருந்தாக வேண்டும். முதலாளித்துவத்தின் நிரந்தரமான போருக்கு தொழிலாள வர்க்கத்தின் நிரந்தரப் புரட்சி முன்னோக்கைக் கொண்டு பதிலளிக்கப்பட வேண்டும் — தேசிய-அரசு அமைப்புமுறையை ஒழிப்பதும் ஒரு உலக சோசலிசக் கூட்டமைப்பை ஸ்தாபிப்பதுமே அதன் மூலோபாய இலக்காகும். உலகத்தின் வளங்கள் பகுத்தறிவான, திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்யப்படுவதையும், அந்த அடிப்படையில், வறுமை ஒழிக்கப்படுவதையும் மனித கலாச்சாரம் உயர்ந்த மட்டங்களை எட்டுவதையும் அது சாத்தியமாக்கும்.