ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Vote for SEP candidate Pani Wijesiriwardena in the Sri Lankan presidential election
Build a socialist movement against imperialist war, austerity and dictatorship

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவுக்கு வாக்களியுங்கள்!

ஏகாதிபத்திய போர், சிக்கன நடவடிக்கை மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒரு சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவோம்

By the Socialist Equality Party (Sri Lanka)
25 October 2019

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கை பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) நவம்பர் 16 அன்று நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், அதன் ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவுக்கு ஆதரவளிக்குமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் புத்திஜீவிகளுக்கு அழைப்புவிடுக்கின்றது.


பாணி விஜேசிறிவர்தன

தேர்தலில் போட்டியிடும் ஒரே சோசலிச வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன ஆவார். சோ.ச.க. இன் அரசியல் குழு உறுப்பினரான அவர், உலக சோசலிச வலைத் தளத்தின் கொழும்பு ஆசிரியர் குழுவில் பணியாற்றுகிறார். சோசலிச சர்வதேசவாதத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக போராடிய 40 ஆண்டுகால வரலாற்றை அவர் கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உட்பட அனைத்து முதலாளித்துவக் கட்சிகளுக்கு எதிராகவும், அத்துடன் அவற்றின் போலி-இடது ஆதரவாளர்களான நவ சம சமாஜ கட்சி (ந.ச.ச.க.), ஐக்கிய சோசலிசக் கட்சி (ஐ.சோ.க.) மற்றும் முன்நிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) போன்றவற்றுக்கும் எதிராக சோசலிச சமத்துவக் கட்சி ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் உண்மையைச் சொல்லும் ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே. போர், சிக்கன நடவடிக்கைகள், சர்வாதிகாரம் மற்றும் பாசிச அச்சுறுத்தல் போன்ற, இலங்கையிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரமாண்டமான ஆபத்துக்களுக்கு முதலாளித்துவ கட்டமைப்பினுள்ளும் அதன் காலாவதியான தேசிய அரசு அமைப்பிற்குள்ளும் தீர்வு கிடையாது.

பெருஞ்செல்வந்தர்கள் சிலரின் இலாபங்களுக்காக அன்றி, மனிதகுலத்தின் பரந்த பெரும்பான்மையினரின் இன்றியமையாத தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, சமூகத்தை மறுவடிமைப்பதன் பேரில், தெற்காசியாவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதன் மூலம் இலாப நோக்கு அமைப்பு முறையை தூக்கி வீசினால் மட்டுமே இந்த நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்.

எங்களது முன்னோக்கு உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் மீள் எழுச்சியுடன் ஒருங்கிணைகின்றது. அமெரிக்காவில் ஆசிரியர்களின் போராட்டத்தை தொடர்ந்து, இப்போது நடைபெற்று வரும் 48,000 ஜெனரல் மோட்டர்ஸ் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு மெக்சிக்கோ, கனடா மற்றும் தென் கொரியாவில் உள்ள ஜெனரல் மோட்டர்ஸ் ஆலைகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைத்து வருகின்றது.

மக்ரோன் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் "மஞ்சள் சீருடை" இயக்கத்தால் பிரான்ஸ் அதிர்ந்து போயுள்ளது. ஹாங்காங்கில், அடிப்படை ஜனநாயக உரிமைகளை கோரும் மில்லியன் கணக்கான மக்களை உள்ளடக்கிய வெகுஜன போராட்டங்கள் பல மாதங்களாக தொடர்கின்றன.

இந்தியாவில், பரந்த வேலைநிறுத்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஜனவரி மாதத்தில் 180 மில்லியன் தொழிலாளர்கள் மிகப்பெரிய இரண்டு நாள் பொது நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதே மாதத்தில் தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்த அதேநேரம், மாருதி சுசுகி மற்றும் மதர்சன் மோட்டார்ஸ் தொழிலாளர்கள் தங்கள் வேலைகள், ஊதியங்கள் மற்றும் நிலைமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக போராடுகிறார்கள்.

இலங்கையில் உள்ள தொழிலாள வர்க்கம் இந்த உலகளாவிய இயக்கத்தின் ஒரு பகுதியாகும். கடந்த ஆண்டு முதல் பல்வேறு பிரிவு தொழிலாளர்கள் அரசாங்கத்தின் சிக்கன திட்டத்திற்கு எதிராக நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். கடந்த டிசம்பரில், பல்லாயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் தடங்கல்களையும் மீறி நியாயமான ஊதியத்திற்காக போராடுவதற்கு வேலை நிறுத்தம் செய்தனர். கடந்த இரண்டு மாதங்களாக இலட்சக்கணக்கான ஆசிரியர்களின் போராட்டம், கல்விசாரா தொழிலாளர்களின் மற்றும் புகையிரத ஊழியர்களின் காலவரையறையற்ற வேலை நிறுத்தமும் ஏனைய தொழிலாளர்களின் போராட்டங்களும் நடந்துள்ளன. இவை தொழிற்சங்கங்களால் காட்டிக்கொடுக்கப்பட்டன.

இலங்கை, தெற்காசியா மற்றும் சர்வதேச அளவிலும் வரவிருக்கின்ற போராட்டங்களுக்கு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள எங்கள் சகோதர கட்சிகளுடன் இணைந்து, தொழிலாள வர்க்கத்திற்கு அவசியமான புரட்சிகர தலைமையை கட்டியெழுப்புவதே சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் மையமாகும்.

போருக்கான உந்துதலை நிறுத்து!

மோசமடைந்து வரும் நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு, தமது போட்டியாளர்களுக்கு எதிரான போர் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீது புதிய சுமைகளை திணிப்பதற்கான வர்க்கப் போரை நாடுவதைத் தவிர உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்களிடம் வேறு எந்த தீர்வும் கிடையாது.

உலக அரசியலில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் பிரதான காரணி அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆகும். அது தனது வீழ்ச்சியடைந்து வரும் உலக மேலாதிக்கத்தை தூக்கி நிறுத்தும் மூர்க்கமான முயற்சியில், ஜனாதிபதி ட்ரம்பின் கீழ் மிகவும் ஆக்கிரோஷமாகவும் ஈவிரக்கமற்றதாகவும் ஆகியுள்ளது.

ஜனாதிபதி ஒபாமாவின் கீழ் தொடங்கிய சீனாவுடனான அமெரிக்க மோதலை, ட்ரம்ப் ஒரு பொருளாதார யுத்தமாக தீவிரமாக்கியுள்ளார். இது 1930 களில் போல், ஆசியாவையும் உலகையும் இம்முறை அனுவாயுத சக்திகளின் தலையீட்டுடன் முழு அளவிலான உலகப் போரில் மூழ்கடிப்பதற்கு அச்சுறுத்துகின்றது. அமெரிக்க பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை அச்சுறுத்தும் ஐரோப்பிய நட்பு நாடுகள் என்று அழைக்கப்படுபவை உட்பட எந்தவொரு நாட்டையும் அவர் குறிவைக்கிறார்.

போருக்கான தயாரிப்பில், வாஷிங்டன் பிராந்தியமெங்கும் கூட்டணிகள், மூலோபாய பங்காண்மை மற்றும் இராணுவ நிலைப்படுத்தல் ஏற்பாடுகளையும் வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றது. பென்டகனின் இந்தோ-பசிபிக் வியூகம் 2019 கூறியதாவது: “தெற்காசியாவிற்குள் இலங்கை, மாலத்தீவு, பங்களாதேஷ் மற்றும் நேபாளத்துடன் வளர்ந்து வரும் கூட்டாண்மைகளை முன்னெடுக்கும் அதேவேளை, இந்தியாவுடனான நமது பிரதான பாதுகாப்பு பங்காண்மையை செயல்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.”

இந்தியாவில் தீவிர வலதுசாரி இந்து அரசாங்கம், முந்தைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட "பூகோள இந்தோ-அமெரிக்க மூலோபாய கூட்டாண்மையை" கட்டியெழுப்பி வருகின்றது. இந்தியாவின் துறைமுகங்கள் மற்றும் இராணுவத் தளங்களை அமெரிக்க இராணுவத்திற்கு முழுமையாக திறந்து விடுவதற்கான ஒப்பந்தத்தில் புது டில்லி கடந்த ஆண்டு கையெழுத்திட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவோடு 2015 இல் அமெரிக்கா திட்டமிட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையில் ஆட்சிக்கு வந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் ஆதரவாக விரைவாக மாற்றினார். கொழும்பு, நாட்டின் இராணுவப் படைகளை அமெரிக்க இராணுவத்துடன் நெருக்கமாக ஒருங்கிணைத்துள்ளதுடன், மேலும் மஹிந்த இராஜபக்ஷவின் முந்தைய நிர்வாகத்தால் கையெழுத்திடப்பட்ட வாஷிங்டனுடனான பிரவேச மற்றும் இடைச் சேவை ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளது.

அணுவாயுதப் போரின் மிலேச்சத்தனத்தில் மட்டுமே முடிவுக்கு வரக்கூடிய, போட்டியாளர்களின் புவி-அரசியல் பதட்டங்களின் நீர்ச்சுழிக்குள் நாட்டை இழுத்து விடுவதற்கு இலங்கையில் உள்ள தொழிலாள வர்க்கம் அனுமதிக்க முடியாது. மோதலுக்கு மூல காரணமான முதலாளித்துவத்தையும் காலாவதியான போட்டி தேசிய அரசுகள் அமைப்பு முறையையும் தூக்கியெறிய, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த போர் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்குவது மட்டுமே போருக்கான உந்துதலை நிறுத்துவதற்கான ஒரே வழியாகும். அத்தகைய இயக்கத்தை கட்டியெழுப்புவதற்குப் போராட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் இணையுமாறு நாங்கள் அழைக்கிறோம்.

பாசிசத்தையும் சர்வாதிகாரத்தையும் எதிர்த்திடு!

மீண்டும் தலைதூக்கும் வர்க்கப் போராட்டத்துக்கு பதிலிறுப்பாக, சர்வதேச ரீதியில் ஆளும் வர்க்கங்கள் தீவிர வலதுசாரித்தனம், பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கி தெளிவாக நகர்ந்து வருகின்றன. அமெரிக்காவில், ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு விதிமுறைகளை மீறி, ட்ரம்ப் முன்னெடுக்கும், முதலில் அமெரிக்கா என்ற தேசபக்தி, மோசமான குடியேற்ற எதிர்ப்பு இனவெறி மற்றும் இனவாதமும் அமெரிக்காவில் பாசிசத்தின் ஆபத்தை அதிகரித்து வருகின்றன.

ஐரோப்பாவில், ஆளும் உயரடுக்கினர் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பொலிஸ் அரசு நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிட தீவிர வலதுசாரி மற்றும் பாசிச கட்சிகளின் பக்கம் திரும்புகின்றனர். ஜேர்மனிக்கான மாற்றீடு என்ற பாசிச கட்சி, திட்டமிட்ட வகையில் பிரதான எதிர்க்கட்சியாக தூக்கிவைக்கப்படுகின்ற அதேவேளை, நவ-நாஜி குழுக்கள் புலம்பெயர்ந்தோர் மற்றும் பிறருக்கும் எதிராக பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுக்கின்றன. இந்த தீவிர வலதுசாரிக் கட்சிகளுக்கு வெகுஜன ஆதரவு இல்லாவிட்டாலும், அவை தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு அச்சுறுத்தல் என்பதே உண்மை.

இந்தியாவில், பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் அரசியலமைப்பை மீறி ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்துள்ளது. ஆகஸ்ட் 5 முதல் அங்கு அதிக எண்ணிக்கையிலான துருப்புக்களை நிலைநிறுத்தி, வெளி உலகத்துடனான தகவல்தொடர்புகளைத் துண்டித்து, அரசாங்கம் அந்த மாநிலத்தை முழுமையாக முடக்கி வைத்திருப்பதானது, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக தயாரிக்கப்படுவது என்ன என்பதற்கான எச்சரிக்கையாகும்.

இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல. ஊழலை முடிவுக்குக் கொண்டுவருவது, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பது மற்றும் "நல்லாட்சியை" ஸ்தாபிப்பதாக உறுதியளித்து போலி இடது குழுக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் ஒரு மோசடி பிரச்சாரத்தின் அடிப்படையிலேயே சிறிசேனவும் விக்ரமசிங்கவும் 2015 இல் ஆட்சிக்கு வந்தனர்.

கூறியவற்றுக்கு நேர்மாறாக, அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்கும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் போராட்டங்களை அடக்குவதற்கும் பொலிஸ் மற்றும் இராணுவத்தைப் பயன்படுத்துவதோடு சர்வாதிகார ஆட்சி வடிவங்களை தயாரித்து வருகின்றது.

பெருகிவரும் மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்ட ஜனாதிபதி சிறிசேன, விக்ரமசிங்கவுடனான “ஐக்கிய அரசாங்கத்திலிருந்து” பிரிந்து அரசியலமைப்பிற்கு மாறாக கடந்த அக்டோபரில் மஹிந்த இராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார். அமெரிக்காவானது இராஜபக்ஷவை பெய்ஜிங்கிற்கு ஆதரவானவராக கருதியதால் அரசியல் சதி தோல்வியடைந்ததுடன் அவர் பாராளுமன்றத்தை கலைத்ததை உயர் நீதிமன்றம் இரத்து செய்தது. சோசலிச சமத்துவக் கட்சி விளக்கியவாறு, இந்த ஆட்சி கவிழ்ப்பு சதியானது தொழிலாளர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படவுள்ள பொலிஸ் அரச நடவடிக்கைகள் பற்றிய ஒரு எச்சரிக்கையாக இருந்தது.

ஏப்ரல் மாதம், அவசரகால நிலையை பிரகடனப்படுத்தவும், கடுமையான ஜனநாயக விரோத நடவடிக்கைகளை திணிக்கவும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களை அரசாங்கம் பற்றிக்கொண்டது. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் பல்வேறு தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உட்பட முழு அரசியல் ஸ்தாபகமும் சிறிசேன இராணுவத்தை பெருமளவில் நிலைநிறுத்தியதையும் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தியதையும் ஆதரித்தன.

அரசாங்கத்தின் மற்றும் எதிர்க்கட்சிகளின் சிரேஷ்ட தலைவர்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் வரவிருக்கும் தாக்குதலை அறிந்திருந்த போதும், அதைத் தடுப்பதற்கு எதுவும் செய்யாமல் இருந்தமை, அவர்கள் அனைவரினதும் முழு கபடத் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. அந்த பெருந்துன்பத்தை தங்கள் சொந்த பிற்போக்கு அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக்கொள்ள அவர்கள் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை படுகொலை செய்ய அனுமதித்தனர். ஒரு முஸ்லீம்-விரோத இனவெறி பிரச்சாரத்துடனான பொலிஸ் அரச நடவடிக்கைகளின் உண்மையான இலக்கு, பயங்கரவாதம் அல்ல, மாறாக தொழிலாள வர்க்கமே ஆகும்.

தொழிலாள வர்க்க விரோத வேட்பாளர்களின் அணிதிரள்வு

ஸ்தாபக கட்சிகள் அனைத்தும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு "வலுவான அரசாங்கத்திற்காக" பிரச்சாரம் செய்கின்றன - இது எதேச்சதிகார ஆட்சியை ஒத்ததாகும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோடாபய இராஜபக்ஷவை ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. வேட்பாளராக நிறுத்தியுள்ளது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் செய்த போர்க் குற்றங்கள் மற்றும் அட்டூழியங்களுக்கு இவர்கள் இருவரும் பிரதான பொறுப்பாளிகளாவர். ஐ.நா. அறிக்கையின் படி, போரின் இறுதி மாதங்களில் மட்டும் சுமார் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து (ஸ்ரீ.ல.சு.க.) பிரிந்த ஸ்ரீ.ல.பொ.ஜ.மு., அதன் பிரச்சாரத்திற்கு ஒரு இராணுவப் பிம்பத்தை வழங்குவதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளரை வேட்பாளராக்கியுள்ளதோடு பொதுபல சேனா மற்றும் சிஹல ராவய போன்ற சிங்கள பேரினவாத சக்திகளை அணிதிரட்டுகிறது. அனுராதபுரத்தில் தனது முதல் தேர்தல் கூட்டத்தை நடத்திய அவர், போர் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் சிறைவைக்கப்பட்டுள்ள அனைத்து இராணுவ சிப்பாய்களையும் விடுவிப்பதோடு இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரத்தை மேலும் பலப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. பிரச்சாரத்திற்கு சமாந்தரமாக பேசிய ஐ.தே.க. வேட்பாளர் சஜித் பிரேமதாச, தான் பாதுகாப்பு அமைச்சராக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை நியமிப்பதோடு "எந்தவொரு வகையான பயங்கரவாதத்தையும் நசுக்க அவரது அனுபவத்தைப் பயன்படுத்துவதாக" அறிவித்தார். பொன்சேகா போரின் இறுதி ஆண்டுகளில் இராணுவத்தை வழிநடத்தியதோடு, இராஜபக்ஷ சகோதரர்களுடன் சேர்ந்து அவரும் போர்க் குற்றங்களுக்கு பொறுப்பாளி ஆவார்.

சஜித் பிரேமதாச பௌத்த ஸ்தாபனத்தை அணிதிரட்டிக்கொள்ள அதற்கு வாக்குறுதிகளைக் கொடுக்கின்றார். அவர் தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறார். ஆர். பிரேமதாச 1988-1990ல் கிராமப்புற கிளர்ச்சியை கொடூரமாக நசுக்குவதற்கு இராணுவத்துடன் தொடர்புடைய கொலைப் படைகளை பயன்படுத்தி ஒரு பயங்கரத்தை கட்டவிழ்த்து விட்டவராவார். அதில் 60,000 சிங்கள கிராமப்புற இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

ஜே.வி.பி., பிரதான கட்சிகளான ஐ.தே.க., ஸ்ரீ.ல.சு.க. ஆகியவற்றுக்கு ஆதரவளித்து வந்து, 20 ஆண்டுகளின் பின்னர் முதல் முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றது. 2015 இல் போலியான "நல்லாட்சி" பிரச்சாரத்தை ஆதரித்த கல்வியாளர்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும், இப்போது ஜே.வி.பி.யை ஒரு முற்போக்கான மாற்றீடாக அலங்கரிக்க முயற்சிக்கின்றன. இதன் மூலம் முதலாளித்துவத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பை பாதுகாப்பான பாராளுமன்ற நீரோட்டத்துக்குள் திசை திருப்பி விடுகின்றன.

2015 இல் முன்னெடுத்த ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை மீண்டும் மேற்கொள்வதன் மூலம், ஜே.வி.பி.யின் வேட்பாளர் அனுர குமார திசானநாயக்க, வாக்காளர்களை ஏமாற்ற முயற்சிக்கின்ற அதேவேளை, சட்டம் மற்றும் ஒழுங்கு ஆட்சிக்கு அழைப்பு விடுகிறார் – இவை எதேச்சதிகார ஆட்சிக்கான சொற் பிரயோகங்களாகும். தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அதன் பிற்போக்கு சாதனைகளை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். 2004 இல் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கூட்டணி அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்த ஜே.வி.பி., சர்வதேச நாணய நிதியத்தின் சந்தை சார்பு திட்ட நிரலை செயல்படுத்த உதவியது. பேரினவாத தமிழர் விரோத போரில் முன்னணியில் இருந்ததோடு, வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு ஆதரவளித்து வருகின்ற போதும், ஜே.வி.பி. தேசிய ஐக்கியத்துக்கு அழைப்பு விடுத்து தமிழர்களையும் முஸ்லிம்களையும் கவர்வதற்கு முயற்சிக்கின்றது.

முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் பல்வேறு பிளவுபட்ட குழுக்களும் இனவாத அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றன. இது தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதை மட்டுமே செய்யும். அவர்கள் அனைவரும் 2015 ஆட்சி மாற்ற நடவடிக்கையை ஆதரித்ததன் மூலம், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு தங்கள் ஆதரவை நிரூபித்தனர். தமிழ் உயரடுக்கின் சலுகைகளையும், தமிழ் தொழிலாளர்களை சுரண்டுவதற்கான தங்களின் “உரிமையையும்” தக்கவைத்துக் கொள்வதன் பேரில், அதிகார பகிர்வுப் பொதி ஒன்றை பெறுவதற்காக வாஷிங்டனின் ஆதரவைத் தேடுவதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னோக்கு ஆகும்.

சிக்கன நடவடிக்கை மற்றும் வர்க்கப் போர் செயல்திட்டம்

அனைவருக்கும் வளமான எதிர்காலம் குறித்த சஜித் பிரேமதாசவின் வாக்குறுதிகளை அல்லது இலவச மாவு மற்றும் விவசாயிகளுக்கு உரங்களை வழங்குவதாக கோடாபய இராஜபக்ஷ கொடுக்கும் வாக்குறுதிகளில் யாரும் ஏமாறக்கூடாது. யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அடுத்த ஜனாதிபதி தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வாழ்க்கை நிலைமைகளை மேலும் மோசமாக சீரழிப்பார்.

ஆழமடைந்து வரும் உலகப் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இலங்கை முதலாளித்துவ வர்க்கம் பாரிய கடன்களை எதிர்கொண்டு வருகிறது. மேலும் கடன் சேவைக்காக 2021 வரை அதற்கு 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகிறது. சர்வதேச மதிப்பீட்டு நிறுவனமான மூடி, சமீபத்தில் இலங்கை கடன் செலுத்தமுடியா நிலையையை எட்டியிருப்பதாக எச்சரித்தது. பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 2.7 சதவீதத்துக்கு குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.3 சதவீதமாக இருந்த வரவு-செலவுப் பற்றாக்குறையை, 2020இல் 3.5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கோருகிறது. இந்த வெட்டுக்களை அமுல்படுத்துவதில், சர்வதேச நாணய நிதியமானது அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், விலை மானியங்களைக் குறைத்தல், மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களை அதிகரித்தல் மற்றும் உழைக்கும் மக்கள் மீதான பரந்த வரிகளைத் திணிப்பதையும் வலியுறுத்துகிறது. இந்த நடவடிக்கைகளைச் சுமத்தும் போது, தவிர்க்க முடியாமல் வெடிக்கும் எதிர்ப்புப் போரட்டங்களை அடக்குவதற்கு சர்வாதிகார ஆட்சி வடிவங்கள் அவசியப்படும்.

இந்த எதிர்ப்புரட்சிகர தயாரிப்புகளை எதிர்ப்பதற்கு தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்த மூலோபாயம் தேவையாகும்: அது, சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக, சோசலிச கொள்கைகளை செயல்படுத்துவதற்கு, கிராமப்புற ஏழைகளின் ஆதரவுடன் ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்கான போராட்டமாகும்.

சோ.ச.க. தேர்தலில் பின்வரும் சோசலிச வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்கிறது:

தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காக

சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மீள் எழுச்சி தொழிலாள வர்க்கத்தின் புறநிலை ஐக்கியத்தை நிரூபிக்கின்றது. உலகளவில் ஒழுங்கமைந்துள்ள நாடுகடந்த கூட்டு நிறுவனங்கள், எப்போதும் முடிவே இல்லாத சுரண்டலை தீவிரமாக்குவதற்காக தொழிலாளிக்கு எதிராக தொழிலாளியை நிறுத்துகிறது. உலகப் பொருளாதாரத்தை சோசலிச அடிப்படையில் மறுசீரமைக்க போராடுவதன் மூலம் மட்டுமே, தொழிலாள வர்க்கம் தனது உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள முடியும். அதாவது சமுதாயத்தை பெருநிறுவன இலாபத்துக்காக அன்றி, அவசியமான சமூகத் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியவாறு மறுசீரமைப்பதாகும்.

தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த, அனைத்து வகையான இனவாதத்தையும் தேசியவாதத்தையும் எதிர்க்குமாறு சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது. 1948 இல் உத்தியோகபூர்வ சுதந்திரம் பெற்றதிலிருந்தே, உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்துவதற்கும் தனது ஆட்சிக்கு முண்டு கொடுப்பதற்கும், இலங்கை ஆளும் வர்க்கம் தமிழர்-விரோத மற்றும் முஸ்லீம்-விரோத பேரினவாதத்தை தூண்டிவிட்டு வந்துள்ளது. மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த இனவாத அரசியல், சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு பேரழிவை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது.

சமூக சமத்துவத்திற்காக

முதலாளித்துவம் உலகளவில் முன்னெப்போதும் இல்லாதளவு சமூக சமத்துவமின்மையை உருவாக்கியுள்ளது. ஆக்ஸ்ஃபாம் நிறுவனத்தின் படி, 26 பில்லியனர்கள் 3.8 பில்லியன் மக்களை விட -அதாவது உலக ஜனத்தொகையில் அரைவாசிப்பேரை விட- அதிகமான செல்வத்தை குவித்துக் கொண்டுள்ளனர். இலங்கையில், அரசாங்கத்தின் திரிபுபடுத்தப்பட்ட புள்ளிவிவரங்களின் படி கூட, பணக்கார 20 சதவிகிதத்தினர், மொத்த குடும்ப வருமானத்தில் 51 சதவிகிதத்தைப் பெறுகின்ற அதே சமயம், வறிய 20 சதவிகிதத்தினர் வெறும் 5 சதவிகிதத்தையே பெறுகின்றனர்.

தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகள் தொடர்ச்சியாக சரிந்து போவதை காண்கின்றனர். 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில், அரசாங்க ஊழியர்களின் உண்மையான ஊதியம், முறையே 7.2 மற்றும் 2 சதவீதத்தால் குறைந்துள்ள அதே சமயம், தனியார் துறை ஊதியங்கள் முறையே 5.9 மற்றும் 3.5 சதவீதம் குறைந்துள்ளன. தொழிலாளர் வாடகை முகவர் நிறுவனங்களுடன், தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழில்கள் காளான் முளைப்பது போல் முளைத்து வரும் நிலையில், வேலையின்மையும் நிரந்தரமற்ற தொழில்களும் அதிகரித்து வருகின்றன.

கிராமப்புற மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே வாழ்க்கையை ஓட்டுகின்றனர். பூச்சிக்கொல்லிகள், உரம் மற்றும் உற்பத்திக்கான விலைகளை நிர்ணயிக்கும் விவசாய நிறுவனங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் கடனில் வாழ்கிறார்கள். கடன் சுமை தாங்க முடியாதபோது தற்கொலை செய்து கொள்கிறார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவைத் தொடர்ந்து, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் உர மானியங்களைக் குறைத்துள்ளன.

பெரு-வணிகங்களை கையகப்படுத்தவும், பின்வரும் கொள்கைகளுக்கு நிதியளிப்பதற்காக செல்வந்தர்களிடமிருந்து ஏழைகளுக்கு செல்வத்தை பெருமளவில் மறுபகிர்வு செய்யவும் சோ.ச.க. முன்மொழிகிறது:

* வேலை நேரத்தை வாரத்துக்கு 30 மணித்தியாலமாகக் குறைப்பதன் மூலம், ஊதிய இழப்பு இல்லாமல் வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு விரிவாக்கம் செய்ய வேண்டும். பொது வீட்டுத் திட்டங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் வீதிகளை கட்டியெழுப்ப பாரிய பொதுப்பணித் திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்.

* பணவீக்கத்திற்கு ஏற்ப திட்டமிடப்பட்ட, வாழ்க்கைக்கேற்ற ஊதியத்தைப் பெறக்கூடிய தொழில்களைப் பெறுவதற்கான அடிப்படை சமூக உரிமை அனைத்து தொழிலாளர்களுக்கும் இருக்க வேண்டும். அடக்குமுறையான ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும்.

* அனைவருக்கும் இலவச, உயர்தர சேவைகளை வழங்க பொதுக் கல்வி மற்றும் சுகாதார சேவையை விரிவுபடுத்த வேண்டும். ஒழுக்கமான, மலிவு விலையில் தங்குமிட வசதிகளை வழங்க பொது வீட்டுத் திட்டத்தை அமைக்க வேண்டும்.

* நிலமற்ற அனைத்து விவசாயிகளுக்கும் அரச நிலங்களை ஒதுக்குவதுடன் அனைத்து ஏழை விவசாயிகளதும் மீனவர்களதும் கடன்களை இரத்து செய்ய வேண்டும். மலிவான கடன், தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் பிற உதவிகளை அவர்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். ஒழுக்கமான வாழ்க்கைத் தரத்திற்கு உத்தரவாதமளிப்பதன் பேரில் உற்பத்திக்கான விலைகளை உறுதிப்படுத்த வேண்டும்.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்திடு

ஒவ்வொரு நாட்டிலும் ஜனநாயக உரிமைகள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களைப் பற்றி உலகுக்கு உண்மையைச் சொன்னதற்காக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜிற்கு எதிரான பழிவாங்கலில் இது மிகவும் கூர்மையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் அவரை பிரிட்டனில் சிறையில் அடைக்க சதி செய்துள்ளன. அங்கு அவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படக் கூடிய மற்றும் 175 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படக்கூடிய ஆபத்தை எதிர்கொள்கிறார். ஜூலியன் அசான்ஜ் மற்றும் அசாஞ்சிற்கு எதிராக சாட்சியங்களை வழங்க மறுத்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றங்களை இடித்துரைத்த செல்சியா மானிங்கினதும் விடுதலைக்காக போராடுமாறு சோ.ச.க. வேண்டுகோள் விடுக்கின்றது.

இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அவசரகால சட்டத்தை பிரகடனம் செய்து, அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறுவதில் நீண்ட வரலாற்றை கொண்டுள்ளன. தற்போதைய அரசாங்கமும் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பையும் தமிழ் மக்களின் உரிமைகளை துஷ்பிரயோகம் செய்வதையும் தொடர்கின்றது. கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள், கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவதற்கும் பெருந்தொகையானோரை கைது செய்வதற்குமான சாக்குப்போக்காக ஆக்கிக்கொள்ளப்பட்டது. வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை சட்டவிரோதமாக்குவதற்கு அரசாங்கம் அத்தியாவசிய சேவை சட்டத்தைப் பயன்படுத்துவதை வழமையாக்கிக்கொண்டுள்ளது.

பௌத்த பிக்குகளின் போலிப் புகாரின் அடிப்படையில், விருது பெற்ற எழுத்தாளர் சக்திக சத்குமாரவை ஏப்ரல் 1 முதல் நான்கு மாதங்கள் தடுத்து வைத்திருந்தமை, ஆளும் வர்க்கத்தில் எந்தப் பிரிவினரும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முன்நிற்கவில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமானது அடிப்படை சமூக உரிமைகளைப் பாதுகாப்பதுடனும் சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதுடனும் முழுமையாக பிணைந்துள்ளது.

நாட்டின் ஜனநாயக விரோத, இனவாத அரசியலமைப்பையும் அனைத்து அடக்குமுறை சட்டங்களையும் ஒழித்திடு!. தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்திடு!. ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியலமைப்புச் சபையின் மூலம் புதிய அரசியலமைப்பை வரைந்திடு! கிராமப்புற ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் ஆதரவைத் திரட்டிக்கொள்வதன் மூலம், தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே முன்முயற்சி எடுத்து, ஜனநாயக உரிமைகளை ஸ்தாபிப்பதற்கான உண்மையான போராட்டத்தை வழிநடத்த முடியும்.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காகப் போராடு

முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் கட்சிகளுக்கும் பயனற்ற வேண்டுகோள்கள் விடுப்பதன் மூலம் உழைக்கும் மக்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் எதையும் ஸ்தாபிக்க முடியாது. தொழிலாள வர்க்கமானது ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும், குறிப்பாக, திவாலான இலாப நோக்கு அமைப்பு முறையை கடைசி வரிசையில் நின்று பாதுகாத்து வரும் நவ-சம சமாஜக் கட்சி (ந.ச.ச.க.) மற்றும் ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி (யு.எஸ்.பி.), முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) போன்ற போலி இடது கட்சிகளில் இருந்தும் தனது அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபித்துக்கொள்ள வேண்டும்.

ந.ச.ச.க., பல ஆண்டுகளாக ஐ.தே.க.வை ஆதரித்த பின்னர், 2015 இல் ஆட்சி மாற்றத்திற்கு நேரடியாக உதவியதுடன், பெருவணிக அரசாங்கத்திற்கு "இடது" முகத்தை கொடுக்க இழிவாக முயன்ற வருகின்றது. அது தொழிலாளர்களின் போராட்டங்களை வலதுசாரி சதி என்று முத்திரை குத்தியதுடன், அரசாங்கத்தின் சிக்கனத் திட்டத்தை "பொருளாதார மேம்பாட்டுக்கான" வழிமுறையாக நியாயப்படுத்தியுள்ளது. ந.ச.ச.க. ஜனாதிபதி வேட்பாளரின் முக்கிய பணி ஐ.தே.க.வுக்காகப் பிரச்சாரம் செய்வதே!

ஐக்கிய சோசலிசக் கட்சி (யு.எஸ்.பி.), சமீப காலம் வரை, ஐ.தே.க.வை ஆதரிப்பதற்காக ந.ச.ச.க. உடன் கூட்டணியில் இருந்தது. 2015 ஜனாதிபதித் தேர்தலில், "இராஜபக்ஷ சர்வாதிகாரத்திற்கு" எதிராக ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று முன்நிலை சோசலிசக் கட்சியுடன் சேர்ந்து யு.எஸ்.பி.யும் மிகவும் வெளிப்படையாக குரல் கொடுத்தது. ஆனால் சிறிசேன, சில மாதங்களுக்கு முன்பு வரை, அதே சர்வாதிகாரத்தில் சிரேஷ்ட அமைச்சராக இருந்தார் என்பதையிட்டு முற்றிலும் மௌனமாக இருந்தது.

பெருகிவரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், யு.எஸ்.பி. மற்றும் முன்நிலை சோசலிசக் கட்சியும், அரசாங்கம் அழுத்தத்திற்கு தலைவணங்கும் என்றும், தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுவதாகவும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நம்பவைக்க மேலதிக நேரம் எடுத்து செயற்படுகின்றன.

உண்மையில், பெரும்பாலான தொழிற்சங்கங்கள் ஸ்தாபகக் கட்சிகள் மற்றும் "இடது" குழுக்களால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படுவதுடன், அவை தொழிலாளர்களின் எந்தவொரு செயலுக்கும் கடும் எதிராக இருக்கின்றன. வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்படும்போது, ​​தொழிற்சங்கங்கள் வேண்டுமென்றே தொழிலாளர்களை தனிமைப்படுத்துவதுடன், எந்த நடவடிக்கைகளையும் மட்டுப்படுத்துகின்றன, இறுதியில் அரசாங்க அமைச்சர்கள் மற்றும் கூட்டுத்தாபன அதிகாரிகளின் போலி வாக்குறுதிகளின் அடிப்படையில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முடித்துக்கொள்கின்றன.

தொழிற்சங்க கைவிலங்கில் இருந்து விடுபட தொழிலாளர்கள் விடயங்களை தங்கள் கைகளில் எடுக்கத் தொடங்க வேண்டும். தொழிலாளர்கள் வேலைத் தளங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபித்துக்கொள்ள வேண்டும் என்று சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது. அவர்கள் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பிற தொழில்களில் உள்ள தொழிலாளர்களையும் அணுகுவதோடு இளைஞர்களையும் கிராமப்புற ஏழைகளையும் தம்முடன் அணிதிரட்டிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

சோ.ச.க., நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்ப தீவிரமாக பிரச்சாரம் செய்கிறது. கடந்த டிசம்பரில் 100,000க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தபோது, ​​எபோட்ஸ்லி தோட்டத்தின் தொழிலாளர்கள் சோ.ச.க.வின் அழைப்பைக் கவனித்தனர். அவர்களின் நடவடிக்கைக் குழு எல்லா இடங்களிலும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு முன்மாதிரியாக செயல்பட வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைக் குழுக்களால், முதலாளித்துவத்தை தூக்கிவீசி, சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்துவதற்காக ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதன் பேரில், கிராமப்புற மக்களின் தலைமையாக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல் ரீதியில் அணிதிரட்டுவதற்கான அடிப்படையை உருவாக்க முடியும்.

தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை உருவாக்க சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது. அத்தகைய அரசாங்கமானது வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பெரு நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் வங்கிகளையும் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவதோடு, வெளிநாட்டுக் கடன்களை நிராகரிப்பதுடன் உற்பத்தி மற்றும் விநியோகத்தை சோசலிச வழிமுறையில் மறுசீரமைக்கும்.

சோசலிச சமத்துவக் கட்சியை ஒரு வெகுஜன புரட்சிகர கட்சியாக கட்டியெழுப்புங்கள்

வர்க்கப் போராட்டம் நிரூபிக்கின்றவாறு, புரட்சிகர போராட்டங்கள் நிகழ்ச்சி நிரலில் உள்ளன. எவ்வாறாயினும், கடந்த நூற்றாண்டில் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்கள் ஒரு அடிப்படை அரசியல் புள்ளியை கோடிட்டுக் காட்டுகின்றன: மார்க்சிச விஞ்ஞானத்தை அடித்தளமாகக் கொண்ட ஒரு புரட்சிகர கட்சி முன்கூட்டியே கட்டியெழுப்பப்பட்டு போராட்டங்களில் புடம்போடப்பட்டிருக்காவிட்டால், அதிகாரத்தை புரட்சிகரமாக கைப்பற்றுவது சாத்தியமற்றது.

அந்த பணிகளைச் செய்யக்கூடிய ஒரே ஒரு அரசியல் அமைப்பு மட்டுமே இந்தப் பூமியில் உள்ளது. அது ஸ்ராலினிசத்திற்கு எதிராக லியோன் ட்ரொட்ஸ்கி முன்னெடுத்த அரசியல் போராட்டத்தின் தொடர்ச்சியை பிரதிநிதித்துவம் செய்கின்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவே ஆகும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோ.ச.க., லங்கா சம சமாஜக் கட்சியின் (ல.ச.ச.க.) காட்டிக் கொடுப்புக்கு எதிராக, அனைத்துலகக் குழு முன்னெடுத்த போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, 51 ஆண்டுகளுக்கு முன்பு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமாக ஸ்தாபிக்கப்பட்டது. 1964 இல் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் இணைந்ததன் மூலம் சோசலிச சர்வதேசியவாத கொள்கைகளை லங்கா சம சமாஜக் கட்சி காட்டிக் கொடுத்தது.

சோ.ச.க.வின் முன்நோக்கானது, இலங்கை போன்ற முதலாளித்துவ வளர்ச்சி காலதாமதமான நாடுகளில் உள்ள முதலாளித்துவ வர்க்கம், அடிப்படை ஜனநாயக பணிகளை இட்டுநிரப்ப இலாயக்கற்றது என்று நிரூபித்த, லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தில் வேரூன்றியுள்ளது, அந்தப் பணிகள் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்காகப் போராடிவரும் தொழிலாள வர்க்கத்தின் மீதே சுமத்தப்படுகின்றது.

ஏகாதிபத்திய சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தியமை, தமிழர்களுக்கு எதிரான இனவாத போரை எதிர்த்தமை மற்றும் வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை நிபந்தனையின்றி வெளியேற்றக் கோருகின்றமை போன்ற நீண்ட வரலாறு சோ.ச.க.வுக்கு இருக்கின்றது. அது கிராமப்புற மக்களை அரச பயங்கரத்தில் இருந்து பாதுகாத்ததுடன் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்காக சளைக்காது போராடியது. அதன் இளைஞர் இயக்கம், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் (IYSSE) ஆகும்.

1991 இல், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமை, சர்வதேச அளவில் சந்தைகளின் வெற்றி மற்றும் சோசலிசத்தின் முடிவைப் பற்றிய முதலாளித்துவ வர்க்கங்களின் வெற்றி ஆரவாரத்துடன் இடம்பெற்றது. தோல்வியுற்றது சோசலிசம் அல்ல ஸ்ராலினிசமே என ஸ்தாபித்தது அனைத்துலகக் குழு மட்டுமே. ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்கு பின்னர், அமைதி மற்றும் செழிப்பின் புதிய காலகட்டம் பற்றிய வாக்குறுதி ஒரு மாயை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவம் ஒரு நெருக்கடியிலிருந்து அடுத்த நெருக்கடிக்குச் செல்லும்போது, ​​வர்க்கப் போராட்டம் மீண்டும் வெடித்து புதிய தலைமுறை தீர்வு தேடி சோசலிசத்தின் பக்கம் திரும்புகிறது.

இலங்கை, தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளை எமது தேர்தல் பிரச்சாரத்தை சாத்தியமான அனைத்து வகையிலும் ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவுக்கு வாக்களியுங்கள், எங்கள் பிரச்சாரத்தில் பங்கேற்று எங்கள் தேர்தல் நிதிக்கு நன்கொடை செய்யுங்கள். எவ்வாறாயினும், எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் வேலைத்திட்டத்தையும், நான்காம் அகிலத்தின் வரலாற்றையும் படித்து, எமது கட்சியில் சேருவதற்கு விண்ணப்பித்து, அடுத்துவரவுள்ள புரட்சிகர போராட்டங்களுக்கு அவசியமான புரட்சிகர தலைமைத்துவமாக எங்கள் கட்சியைக் கட்டியெழுப்ப முன்வருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.