Print Version|Feedback
Pompeo signs US-Greek military alliance and threatens Iran, Russia, China
அமெரிக்க-கிரேக்க இராணுவ ஒப்பந்தம் ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவை அச்சுறுத்துகிறது
By Alex Lantier and V. Gnana
7 October 2019
பால்கன் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஆக்கிரோஷமான வெளியுறவுக் கொள்கை மோதல், பெரும் சக்திகளுக்கு இடையே உலகப் போர் அபாயத்தை தீவிரப்படுத்துகிறது. அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பொம்பேயோ, இத்தாலி, மொண்டினீக்ரோ, மாசிடோனியா மற்றும் கிரீஸ் ஆகிய முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசுகளுக்கு மேற்கொண்ட ஆறு நாள் சுற்றுப்பயணத்தில் இதுதான் தெளிவாகிறது. கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான ஒரு முழுமையான போரை அவர்கள் தூண்டுவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னர் ஈரான் மீதான அமெரிக்க இராணுவத் தாக்குதலை ட்ரம்ப் கைவிட்டதைத் தொடர்ந்து, பொம்பேயோ மேற்கொண்டுள்ள இந்த சுற்றுப்பயணம் ஈரானையும் மற்றும் அதன் அணுவாயுத நட்பு நாடுகளான ரஷ்யா மற்றும் சீனாவையும் அச்சுறுத்துவதற்கு கவனம் செலுத்தியது.
வாஷிங்டன், ஐரோப்பிய மற்றும் துருக்கிய நேட்டோ “கூட்டணி” நாடுகளுடன் கொண்டுள்ள அதன் பெயரளவான உறவுகளில் ஏற்பட்டுள்ள வெடிப்புறும் நெருக்கடிக்கு மத்தியில் பொம்பேயோ இந்த பயணத்தை மேற்கொண்டார். மாறாக, உக்ரேனிய பிரதமர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் ட்ரம்ப் தொலைபேசியில் உரையாடுகையில் அவர் கேட்ட விடயங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கும், மேலும் ட்ரம்பை குற்றம்சாட்டுவதற்கான பிரச்சாரத்திற்கு அவை பயன்படுத்தப்படுமா என்பதை தெளிவுபடுத்துவதற்கும் அவரது பயணத்தின் பெரும்பாலான நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. எவ்வாறாயினும் அவரது விஜயத்தின் போது, அமெரிக்கா ஐரோப்பாவிற்கு எதிராக 7.5 பில்லியன் டாலர் சுங்கவரி விதிப்பை அறிவித்ததோடு, பேர்லின், இலண்டன் மற்றும் பாரிஸ் ஆகிய ஐரோப்பாவின் மூன்று மிகப்பெரிய பொருளாதார மையங்களுக்கு விஜயம் செய்வது அவசியம் என்று பொம்பேயோ கருதவில்லை.
பொம்பேயோவின் பயணத்தின் முக்கிய நோக்கம், ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவை இடையறாது கண்டனம் செய்வதாக இருந்ததோடு, இந்த மூன்று நாடுகளுக்கு எதிராகவும், அமெரிக்காவின் நேட்டோ நட்பு நாடு என்று கூறப்படும் துருக்கிக்கு எதிராகவும் இயக்கப்படும் ஒரு அமெரிக்க இராணுவ ஒப்பந்தத்தில் கிரீஸ் உடன் கையெழுத்து இடுவதுமாகும். சனிக்கிழமை ஏதென்ஸில் பொம்பேயோ பேசிய கருத்துக்களை கேட்கும் எவரும், தவிர்க்க முடியாமல், ஜூன் 28, 1914 இல் ஆஸ்திரிய கோமகன் ஃபிரான்ஸ் ஃபெர்டினாண்டின் கொலைக்குப் பின்னர் முதல் உலகப் போர் வெடிக்க வழிவகுத்த பால்கன் மோதல்களை நினைவுகூர தள்ளப்படுவர்.
பால்கன் "மூலோபாய போட்டியின் ஒரு பகுதியாகவே உள்ளது" என்று பொம்பேயோ அறிவித்தார். அவர், ஈரானையும் அதன் நட்பு நாடுகளையும் இப்பிராந்தியத்தில் மூன்று தசாப்தங்களாக நடத்தப்பட்டு வரும் அமெரிக்க தலைமையிலான நேட்டோ போர்களால் தூண்டப்பட்ட மோதல்களுக்கும் இரத்தக்களரிகளுக்கும் பொறுப்பானவை என்று குற்றம்சாட்டினார்.
பொம்பேயோ, “மத்திய கிழக்கை ஸ்திரமற்றதாக்கியுள்ள பயங்கரவாத பினாமிகளை கொண்டதான ஈரானின் இஸ்லாமிய குடியரசு, லெபனானை ஒரு வாடிக்கையாளர் நாடாக மாற்றியுள்ளது, மேலும் இன்றுவரை கிரேக்கத்தை தொடர்ந்து பாதிக்கும் அகதிகள் நெருக்கடியை உருவாக்க உதவியது” என்று கண்டித்தார். மேலும் அவர், “கிரேக்கத்திற்குள்ளும் மற்றும் உங்கள் நாட்டின் அண்டை நாடுகளுக்குள்ளும் நிலவும் மோசமான ரஷ்ய செல்வாக்கு” குறித்தும், சீனா “பெய்ஜிங்கிற்கு பயனளிக்கும் மற்றும் அதன் வாடிக்கையாளர்களை கடனில் மூழ்கடிக்கும் வகையிலான ஏறுக்குமாறான ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு நாடுகளை கட்டாயப்படுத்த பொருளதார வழிகளைப் பயன்படுத்துகிறது” என்றும் அவர் கண்டித்தார்.
மேலும், கிரீஸூக்கு ஆர்வமற்ற ஆதரவை வழங்கியதைப் போல, இந்த பகுதியில் அமெரிக்க இராணுவ கட்டுப்பாட்டிற்கான உந்துதல் தொடர்பான அவரது சொந்த முன்னிலைப்படுத்துகை பற்றி பொம்பேயோ அப்போது பகிரங்கமாக தற்பெருமை பீற்றிக் கொண்டார். மேலும், “கிழக்கு மத்தியதரைக் கடலை கிரேக்கம் வெற்றிகரமாக பாதுகாக்க அமெரிக்கா உதவுவது கொஞ்சம் சுயநலமானதாகத்தான் இருக்கின்றது” என்றும் அவர் கூறினார்.
பொம்பேயோ வழங்கிய போர் பற்றிய சுருக்கவுரை, அந்த வெளியுறவுச் செயலரைக் கூட நம்பவைக்க முடியாதளவிற்கு பொய்களின் தொகுப்பாக இருந்தது. மத்திய கிழக்கிற்கு தீ வைத்தது ஈரான் அல்ல, ஆனால் பல தசாப்த கால நேட்டோ போர்கள், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்புகள், மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான பினாமி போருக்கு 2011 முதல் அல்கொய்தா படைகளை நேட்டோ பயன்படுத்தியது போன்றவற்றாலேயே அது நிகழ்ந்தது. பின்னர், 2014 இல், உக்ரேனில் பேர்லினும் வாஷிங்டனும் ஆதரவளித்த ஒரு பாசிச தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பு, அந்நாட்டை உள்நாட்டுப் போரில் மூழ்கடித்தது, மேலும் ரஷ்யாவுடன் கிட்டத்தட்ட போருக்குத் தூண்டியதுடன், ஐரோப்பாவில் ஆயுதப் போட்டிக்கும் வழிவகுத்தது.
இந்த போர்களில் நிகழ்ந்த மில்லியன் கணக்கான இறப்புகளுக்கும் அவர்கள் உருவாக்கிய பல்லாயிரக்கணக்கான அகதிகளுக்குமான பொறுப்பு, ஈரான் அல்லது ரஷ்யாவிடம் இல்லை, மாறாக வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளிடமே உள்ளது.
இன்று, யுரேஷியாவை இராணுவ ரீதியாக ஆதிக்கம் செலுத்துவதற்கான வாஷிங்டனின் நம்பிக்கைகள் சுக்குநூறாகிவிட்டன. சென்ற மாதம், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் வெற்றிக்கு அணு குண்டுகளால் அந்நாட்டை அழிப்பது மட்டும் தான் ஒரே வழி என்று ட்ரம்ப் குறிப்பிட்டார். “ஒரே வாரத்தில்” தன்னால் போரை வெல்ல முடியும், என்றாலும் அதைச் செய்ய விரும்பவில்லை என்று, அதாவது “10 மில்லியன் மக்களைக் கொல்ல அவர் விரும்பவில்லை” என்று அவர் பெருமையாகக் கூறினார்.
2011 இலிருந்து, வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள், பாரசீக வளைகுடா எண்ணெய் ஷேக் இராச்சியங்கள் மற்றும் அவர்களின் கூலிப்படையான இஸ்லாமிய மற்றும் குர்திஷ் போராளிகள் அடங்கிய ஒரு பிரிவிற்கும், மறுபக்கம் ஈரான், ரஷ்யா, சீனா ஆதரவளிக்கும் சிரிய அரசாங்கத்திற்கும் இடையேயான சிரிய மோதல் ஒரு பினாமிப் போராக உருவெடுத்துள்ளது. இந்த போர், வடக்கு சிரியாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளுக்கு அழிவை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இது அமெரிக்காவிற்கும் துருக்கிக்கும் இடையிலான பதட்டங்களை மோசமாக்கியுள்ளது. துருக்கி, குர்திஷ் போராளிகளைத் தாக்குகிறது அதேவேளை, இஸ்லாமிய போராளிகள் ரஷ்யா ஆதரவிலான சிரிய அரசாங்கப் படைகளின் தாக்குதலை எதிர்கொள்கின்றனர்.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதட்டங்கள் ஐரோப்பாவிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன: இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களில், அமெரிக்கா கடற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அதே நேரத்தில் வேகமாக வளர்ந்து வரும் சீனப் பொருளாதாரம் அமெரிக்காவை விஞ்சுவதைத் தடுக்க சீனாவுக்கு எதிரான வர்த்தகப் போரை இறுக்குகிறது. பொம்பேயோ பயணத்தின் பெரும்பகுதி, யுரேஷிய உள்கட்டமைப்புக்கான சீனாவின் இணைப்பு மற்றும் பாதை முன்னெடுப்பு (Belt and Road Initiative-BRI) திட்டத்தை தாக்குவதாக இருந்தது. மேலும், BRI நிதியுதவியில் நெடுஞ்சாலை அமைப்பதை மாசிடோனியா கைவிட வேண்டும், இந்த ஆண்டு தொடக்கத்தில் ரோமில் ஒப்புக்கொண்ட BRI க்கான உத்தியோகபூர்வ ஆதரவை இத்தாலி கைவிட வேண்டும், மேலும் சீன நிறுவனமான ஹவாய் (Huawei) க்கு இத்தாலிய இணைய உள்கட்டமைப்பை அணுகுவது மறுக்கப்பட வேண்டும் என அவர் வற்புறுத்தினார்.
ஈரானுக்கு எதிரான தொடர்ச்சியான போர் அச்சுறுத்தல்களை முகங்கொடுக்கும் போது, கிரேக்கத்துடனான வாஷிங்டனின் கூட்டணி இந்த பின்னடைவுகளை பொறுத்துக்கொள்ளாது என்பதையும் மேலும் ஒரு புதிய விரிவாக்கத்துடன் பதிலளிக்கும் என்பதையும் பொம்பேயோ தெளிவுபடுத்தினார்.
பொம்பேயோ தனது கையொப்பத்தை அமெரிக்க-கிரேக்க இராணுவ உடன்படிக்கையின் கீழ் வைப்பதற்கு முன்னரே, இராணுவ வட்டாரங்களில் பால்கன் பிரச்சினை மற்றும் குறிப்பாக கிரேக்க இராணுவ தளங்களை அணுகுவது குறித்து தெளிவாக விவாதிக்கப்பட்டது. ஜூலை மாதம், கிரேக்கத்திற்கான அமெரிக்க தூதர் ஜியோஃப்ரே பயாட், Stars and Stripes செய்தியிதழுக்கு அளித்த பேட்டியில், சிரியப் போரில் ஒரு பங்கைக் கொண்டிருந்த Souda வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்கத் தளம் "மிகவும் நேர்த்தியானது" என்று சுட்டிக்காட்டினார். அமெரிக்க இராணுவ செய்தித் தொடர்பாளர்கள் ஏதென்ஸ் துறைமுகமான பைரேயஸில் சீன முதலீடு குறித்து கவலைப்படுவதாகக் கூறினர்: "நாங்கள் ஒரு கப்பலை, ஒரு போர்க்கப்பலை பைரேயஸுக்குக் கொண்டுவர விரும்பினால், சீனா இல்லை என்று கூறலாம்."
பொம்பேயோவின் விஜயத்திற்கு முன்னர், அமெரிக்கக் கொள்கையை பின்வருமாறு பயாட் விளக்கினார்: “புதுப்பிக்கப்பட்ட வல்லரசுக்கான போட்டிகளும், மற்றும் கடந்த தசாப்தத்தின் மிகப்பெரிய ஹைட்ரோகார்பன் கண்டுபிடிப்புக்களும் நிறைந்த சகாப்தத்தில் ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் இந்த உலகளாவிய குறுக்குப்பாதைகளை நோக்கி அமெரிக்க மூலோபாய சிந்தனையின் முன்னணி திரும்பியுள்ளன. கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியை கருத்தில் எடுத்துக்கொண்ட பல ஆண்டுகளுக்குப் பின்னர், பின்னோக்கிவந்து, அமெரிக்க நலன்களை எப்படி முன்னேற்றுவது என்பது குறித்து ஒட்டுமொத்த அரசாங்கமும் சிந்திக்கத் தள்ளப்பட்டுள்ளது….”
இதன் விளைவாக, புதிய அமெரிக்க-கிரேக்க பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் சனிக்கிழமை கையெழுத்தானது. இந்த காலவரையற்ற ஒப்பந்தம், கிரீட்டில் அமெரிக்க ஆறாவது கடற்படைத் தளத்தை விரிவுபடுத்தும், மத்திய கிரேக்கத்தில் ஆளில்லா விமானத் தளங்களை உருவாக்கும், மேலும் அலெக்ஸாண்ட்ரோபோலியில் ஒரு இராணுவத் தளத்தையும் இயற்கை எரிவாயு வசதியையும் உருவாக்கும், இந்நிலையில் இதற்கு இனிமேல் கிரேக்க பாராளுமன்ற ஒப்புதல் தேவையில்லை என்று இதன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இந்த தளமானது அமெரிக்க இயற்கை எரிவாயுவை கிரேக்கத்திற்கு அனுப்ப அனுமதிக்கும் என்பதுடன், தொடர்ந்து இந்த பிராந்தியத்தில் ரஷ்யாவின் எரிவாயு ஏகபோகத்தை உடைக்கும் வகையில், பால்கன் முழுவதுமாக கட்டமைக்கப்படவுள்ள எரிவாயு குழாய்கள் ஊடாக எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ளும்.
இராணுவ ரீதியாக, அலெக்ஸாண்ட்ரோபோலி தளம் ரஷ்யா மற்றும் பால்கன் இரண்டையும், மற்றும் ஈரான் மற்றும் மத்திய கிழக்கையும் அச்சுறுத்துகிறது. மேலும், துருக்கியின் ஊடாக கருங்கடலிலும், பின்னர் ரஷ்ய கட்டுப்பாட்டிலான கடல் வழிகளிலும் பயணிக்காமல் பால்கனுக்குள் படைகளை அனுப்ப வாஷிங்டனை இது அனுமதிக்கும். கிரேக்க பாதுகாப்பு ஆய்வாளர் எப்திமியோஸ் சிலியோபோலோஸ், அலெக்ஸாண்ட்ரோபோலி தளம் மூலமாக வாஷிங்டன், “மற்ற துறைமுகங்களை விட அதிவிரைவாக பால்கனுக்கான நடவடிக்கைகளை ஆதரிக்க” முடியும் என்று Al Jazeera செய்தி ஊடகத்திற்கு தெரிவித்தார். கிரேக்க தளங்களில் உள்ள அமெரிக்க துருப்புக்கள் மத்திய கிழக்கில் “எளிதில் ஈடுபடுத்தப்படக்கூடியவை” என்றும் அவர் சேர்த்துக் கூறினார்.
மத்திய கிழக்கிலிருந்து கிரீஸ் மற்றும் ஐரோப்பாவிற்கு ஏஜியன் கடலின் ஊடாக தப்பிச் செல்ல முயற்சிக்கும் அகதிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களைத் தடுக்கவும் பென்டகன் இந்த தளங்களை பயன்படுத்தக்கூடும்.
சைப்ரஸ் தொடர்பான கிரேக்கத்துக்கும் துருக்கிக்கும் இடையே மீண்டும் எழுந்த மோதல்கள், மற்றும் கிழக்கு மத்தியதரைக் கடலில் எண்ணெய் துளையிடும் உரிமைகள் குறித்த மீளெழுச்சிக்கு மத்தியில், துருக்கிக்கு எதிரான கிரேக்க நிலைப்பாட்டிற்கு சந்தேகத்திற்கு இடமின்றி பொம்பேயோ ஒப்புதலளித்தார். கிரேக்க, சைப்ரிய மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளை அவர் சந்தித்ததாக வலியுறுத்தி, பொம்பேயோ பின்வருமாறு கூறினார்: “சர்வதேச நீர்பரப்புகளிலான செயல்பாடுகள் ஒரு தொகை விதிமுறைகள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். சட்டவிரோதமாக துளையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என துருக்கியர்களிடம் நாங்கள் கூறியுள்ளோம்.
ஒரு எச்சரிக்கை எழுப்ப வேண்டியது அவசியம்: புதிய, உலகளாவிய மோதலுக்கான தயாரிப்புகள் மிக விரைவான வேகத்தில் எடுக்கப்படுகின்றன. போரை அடிப்படையாகக் கொண்ட கொள்கையை நோக்கிய ஐரோப்பிய நட்பு நாடுகளின் திருப்பம், வாஷிங்டனில் உள்ள இரண்டு பிரதான கட்சிகளையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்கு மற்றொரு இராணுவ விரிவாக்கத்துடன் பதிலளிக்க ஊக்குவித்துள்ளது. நேட்டோ சக்திகள் பேரழிவிற்கு வழிவகுக்கும் ஒரு போக்கில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீட்டால் மட்டுமே போருக்கு வழிவகுக்கும் இந்த பல தசாப்த கால ஏகாதிபத்திய கொள்கையை தடுக்க முடியும்.
பொம்பேயோவின் விஜயத்தின் போது, ஈரானுடனான அமெரிக்கப் போரின் ஆபத்து குறித்து ஊடகங்களில் ஆழ்ந்த மௌனம் நிலவியது. ஐரோப்பா மீதான அத்தகைய போரின் தாக்கங்களும் மறைக்கப்பட்டன. எவ்வாறாயினும், ஈரானிய அரசாங்கம் தனது ஏவுகணைகளின் எல்லைக்குள் இருக்கும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது குண்டு வீசுவதன் மூலம் அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடி கொடுக்குமென பலமுறை உறுதிப்படுத்தியுள்ளது. இது, ஈரானின் ஷாஹாப்-3 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் நீண்ட தூர தாக்குதல்களுக்குள்ளாகக் கூடிய, கிரேக்கத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களையும் உள்ளடக்கியிருக்கலாம்.
உக்ரேனில் 2014 ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் ஐரோப்பாவில் இராணுவ பதட்டங்கள் படிப்படியாக அதிகரித்துள்ள நிலையில் போர் மிக விரைவாக பரவுகிறது. நேட்டோ தனது துருப்புக்களை ரஷ்யாவிற்கு எதிராக நிறுத்தியுள்ளது. ஜூன் மாதத்திலிருந்து, போலந்து, எஸ்தோனியா, லாட்வியா, லித்துவேனியா, பின்லாந்து மற்றும் சுவீடன், போர்ச்சுக்கல் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் பல்லாயிரக்கணக்கான துருப்புகள் சம்பந்தப்பட்ட கூட்டு நேட்டோ இராணுவ பயிற்சிகள் நடந்துள்ளன. 20,000 அமெரிக்க துருப்புக்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை ஈடுபடுத்தி, ஜேர்மனி மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள "பாதுகாப்பு பயிற்சி 2020", கடந்த 25 ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் மிகப்பெரிய நேட்டோ போர் பயிற்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.