Print Version|Feedback
Chilean military deployed against protests for the first time since Pinochet
பினோசேக்கு பின்னர் முதல் முறையாக ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக சிலிய இராணுவத்தை ஈடுபடுத்துகின்றது
By Andrea Lobo
21 October 2019
அகுஸ்டோ பினோசே இன் பாசிச இராணுவ சர்வாதிகாரத்திற்குப் பின்னர், அமெரிக்க டாலர் 1.12 இலிருந்து 1.16 என்றளவிற்கு சமமாக சாண்டியாகோ மெட்ரோவிற்கான கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டதற்கு எதிராகப் போராடும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இந்த வார இறுதியில் சிலியின் சாண்டியாகோ நகரத்தில் முதல் முறையாக பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன. சாதாரண உடையிலும் மற்றும் சீருடையிலும் அங்கிருந்த இராணுவத்தினர் திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி சுடுவதையும் அவர்களை நோக்கி இயந்திரத் துப்பாக்கிகள் குறி வைப்பதையும் படமாக்கினர்.
சனிக்கிழமை, கோடீஸ்வரர் செபாஸ்டியன் பினெராவின் வலதுசாரி அரசாங்கம், நாடு முழுவதிலுமாக அவசரகாலநிலையை பிரகடனப்படுத்தவும், 9,441 சிப்பாய்கள் மற்றும் மதிப்பிழந்த இராணுவமயமாக்கப்பட்ட பொலிசார்களான ஆயிரக்கணக்கான Carabineros -கராபினெரோக்கள்- மூலம் சாண்டியாகோ, வால்பரைசோ மற்றும் கான்செப்சியனில் ஊரடங்கு உத்தரவுகளைத் திணிக்கவும் பினோசேயினால் ஸ்தாபிக்கப்பட்டு இன்றும் நிலைபெற்றிருக்கும் 1980 அரசியலமைப்பை செயல்படுத்தியது. மேலும், ஆர்ஜென்டினாவுடன் தொடர்புள்ள பிரதான எல்லைப்புறப் பகுதியில் வாரம் முழுவதிலுமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன், சிலிய ஆளும் வர்க்கம் இத்தகைய சர்வாதிகார நடவடிக்கைகளை தடையின்றி திணித்து வருவதானது, “ஜனநாயகத்திற்கான ஒரு மாற்றம்” என்ற பேரிலான மோசடியை அம்பலப்படுத்துகிறது, இதில் பினோசேயின் கீழ் உருவாக்கப்பட்ட அடிப்படை அரசியல் மற்றும் இராணுவ அமைப்பு, கடந்த 30 ஆண்டுகளில் 25 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகள் தலைமையிலான “கூட்டு“ “Concertación” அரசாங்கங்களின் கீழ் இன்னமும் கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.
அக்டோபர் 20, 2019 ஞாயிற்றுக்கிழமை, சிலி, சாண்டியாகோவில் அவசரநிலை தொடர்ந்து நடைமுறையில் இருந்த நிலையில், ஒரு ஆர்ப்பாட்டக்காரர் போராட்டத்தின் போது முன்னேறும் சிப்பாய்களை நோக்கி கைகளை உயர்த்தி காண்பிக்கிறார். பாரிய மற்றும் வன்முறைமிக்க ஆர்ப்பாட்டங்களைத் தூண்டிய மெட்ரோ கட்டண உயர்வுகளை ஜனாதிபதி பினெரா இரத்து செய்த பின்னரும் கூட, நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் அடுத்த புதிய நாளிலும் தொடர்ந்தது. (AP Photo / Esteban Felix)
இந்த செயல்முறையின் சர்வதேச தன்மை, ஸ்பெயினில் சமூக ஜனநாயகவாத அரசாங்கம் கட்டலான் தேசியவாதிகளுக்கு எதிராக கையாண்ட பாசிச அடக்குமுறையிலும், மேலும் ஈக்வடோரில் நிகழ்த்தப்பட்ட இராணுவ ஒடுக்குமுறையிலும் ஒரேநேரத்தில் பிரதிபலித்தமை, எல்லா இடங்களிலும் ஆளும் வர்க்கம் நிதி மூலதனத்தினது பொருளாதார உத்தரவுகளை திணிப்பதற்கு சர்வாதிகாரத்தை நோக்கித் திரும்பி முதலாளித்துவ நெருக்கடிக்கும் மற்றும் வர்க்கப் போராட்ட மீளெழுச்சிக்கும் பதிலளிக்கிறது என்பதை நிரூபிக்கிறது.
அக்டோபர் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட இந்த மெட்ரோ கட்டண உயர்வு, இளைஞர்களையும் மற்றும் தொழிலாளர்களையும் கடந்த திங்கள்கிழமை சமூக ஊடகங்கள் வழியாக பேரணிகளுக்கு அழைப்பு விடுக்கச் செய்தது. கொடூரமான பொலிஸ் அடக்குமுறையைச் சந்தித்த பயனர்கள் அதிலிருந்து தப்பிக்க தொகையாக சுழல்தடைபயணப் பாதையை நோக்கி பாய்ந்தனர். மேலும் வெள்ளிக்கிழமை, இந்த ஆர்ப்பாட்டங்கள், வளர்ந்து வரும் சமத்துவமின்மைக்கு எதிராக பாரிய சமூக சீற்றத்தைத் தூண்டியதுடன், பரந்த சமூக கோரிக்கைகளுக்கான ஆர்ப்பாட்டங்களையும் முடுக்கிவிட்டன.
இந்த உணர்வுகளை வெளிப்படுத்திய 38 வயது ஆர்ப்பாட்டக்காரர் அலெஜாண்ட்ரா இபனெஸ் AFP க்கு இவ்வாறு தெரிவித்தார்: “வன்முறை அல்லது சிலர் பொருட்களை உடைப்பது போன்ற செயல்களை நான் விரும்பவில்லை, ஆனால் எங்களை அவர்கள் கேலி செய்வதையும், எங்களது வாயை அடைத்து விடுவதையும் நிறுத்த திடீரென இந்த விடயங்கள் நடக்க வேண்டும். ஏனென்றால் சம்பளத்தை தவிர அனைத்தும் உயர்த்தப்படும் நிலையில், நாட்டின் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக இவையனைத்தும் நிகழ்கின்றன.”
வெள்ளிக்கிழமை, சாண்டியாகோ மெட்ரோ அமைப்பின் அனைத்து 136 நிலையங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்த நிலையில் அவை மூடப்பட்டன. சிலியில் எரிசக்தி விநியோகத்தில் 40 சதவிகிதத்தை கட்டுப்படுத்தும் எனெல் (Enel) என்ற தனியார் இத்தாலிய நிறுவன தலைமையகத்திலும், மற்றும் வால்பரைசோவில் உள்ள பினோசே சார்பு எல் மெர்குரியோ செய்தித்தாளின் அலுவலகங்களிலும் நிகழ்ந்தது போல, டசின் கணக்கான நிலையங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், ஊரடங்கு உத்தரவுகள் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களால் மீறப்பட்டதுடன், சாண்டியாகோவில் பினோசே சர்வாதிகாரத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்களின் படங்களை கையிலேந்தியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குறுகியநேரத்திற்கு பீரங்கிகளை சுற்றிவளைத்தனர்.
சனிக்கிழமை இரவு 10 மணியளவில், ஊரடங்கு சட்டம் செயல்படுத்தப்பட்டு மற்றும் “எதையும் மதிக்காத உண்மையான குற்றவாளிகள்” என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் அழைக்கப்பட்டு சில மணித்தியாலங்களுக்குப் பின்னர், பினெரா, “எனது நாட்டவரின் குரலை பெருந்தன்மையுடன் கேட்டேன்” எனத் தெரிவித்து, சாண்டியாகோ மெட்ரோவிற்கான 30 பெசோக்கள் கொண்ட மிக சமீபத்திய கட்டண உயர்வை இரத்து செய்வதாக அறிவித்தார். (பெப்ரவரி 2018 முதல், அவசர நேரத்திற்கான மெட்ரோ கட்டணம் ஏற்கனவே 100 பெசோஸ் அல்லது கிட்டத்தட்ட 15 சதவிகித அளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது)
எவ்வாறாயினும், அவசரகாலநிலை காலவரையின்றி தொடரும் என்பதுடன், ஞாயிற்றுக்கிழமை இரவு ஊரடங்கு உத்தரவும் விதிக்கப்பட்டிருந்தது. உள்துறை அமைச்சகம் ஞாயிறன்று விடுத்த ஒரு அறிக்கையின் படி, 1,462 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 15 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
ஆர்ப்பாட்டங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் மத்தியில் சாண்டியாகோவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் தீ பற்றியதில் ஐந்து பொதுமக்கள் இறந்து போயினர். அதே நேரத்தில், சாண்டியாகோவின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிறன்று தொடர்ந்து மின்சாரம் இல்லாமல் இருந்ததுடன், அன்று பள்ளிகளில் வகுப்புகளும் நடைபெறவில்லை.
ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (CP) கட்டுப்பாட்டிலுள்ள முக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பான தொழிலாளர்கள் ஐக்கிய மையம் (Workers United Center – CUT), “பாதுகாப்பற்ற நிலைமைகள்” காரணமாக மெட்ரோ தொழிலாளர்கள் வேலையை தவிர்க்கும் படி விடுக்கப்பட்டிருந்த உத்தரவுகளுக்கு அப்பாற்பட்டு எந்தவொரு வேலைநிறுத்த நடவடிக்கையையும் ஒடுக்குவதில் ஈடுபட்டது. அதற்கு மாறாக, அவசரகால நிலையை முடிவுக்கு கொண்டுவர பினெராவின் மனச்சாட்சிக்கு அழைப்புவிட்டு மொனேடா ஜனாதிபதி மாளிகை நோக்கி தொழிற்சங்க அதிகாரிகள் அணிவகுத்துச் சென்றனர்.
கம்யூனிச கட்சியும், மற்றும் போலி-இடது பரந்த முன்னணியும், இந்த வார இறுதியில் பினெராவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ள அவை மறுக்கவிருப்பதற்கான அடையாள நடவடிக்கையை மேற்கொண்டன. ஆயினும், அவர்களது தலையீடுகள் பினெராவிடம் விடுக்கப்பட்ட இதேபோன்ற முறையீடுகள் மீதும் மற்றும் அடக்குமுறையை வெளிப்படையாக நியாயப்படுத்துவதிலும் கவனம் செலுத்தியுள்ளன.
பரந்த முன்னணியின் தலைவர் பெயாட்ரிஸ் சான்செஸ், “மிகுந்த வேதனையுடன், நியாயமான மற்றும் பெரும்பான்மை ஆதரவுடன் நடத்தப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டம் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் நியாயப்படுத்த முடியாத வன்முறையால் கைப்பற்றப்பட்டதை நான் காண்கிறேன்” என்று ட்வீட் செய்தார். மேலும், அதன் சட்டமன்ற உறுப்பினரான ஜியோர்ஜியோ ஜாக்சன், “பலரைப் போலவே, நகரங்களில் நியாயப்படுத்த முடியாத அளவிற்கு நிகழ்ந்த கொள்ளை மற்றும் தீ வைப்பு சம்பவங்களின் புகைப்படங்களைப் பார்த்து எனக்கும் வயிறு வலிக்கிறது என்பதுடன், நான் விரக்தியடைந்ததோடு, ஒன்றும் செய்ய இயலாதவான உணர்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
வடக்கு சாண்டியாகோவில் உள்ள ஒரு நகரமான ரெக்கோலெட்டாவின் கம்யூனிச கட்சி மேயரான டானியல் ஜாது, அவரது பங்கிற்கு இவ்வாறு தெரிவித்தார்: “நியாயமான அணிதிரட்டல்கள் வன்முறையிலும் விவரிக்க முடியாத கொள்ளையிலும் சென்று முடிவடைய முடியாது. இது, அவரது இயலாமையை குடிமக்களுக்கு எதிரான வன்முறையினால் நியாயப்படுத்த முயலும் செபாஸ்டியன் பினெரா நிர்வாகத்தின் கருத்துக்களை மட்டுமே உறுதிப்படுத்துகிறது.”
அடக்குமுறையை நியாயப்படுத்தும் இந்த அறிக்கைகள், சமத்துவமின்மைக்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்களை விரோதத்துடன் பார்க்கும் இந்த கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் உயர் நடுத்தர வர்க்கத்தின் பரந்த அடுக்குகளின் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. மேலும், இந்த அறிக்கைகள், சிறிய வரவு செலவுத் திட்ட வெட்டுக்கள் மற்றும் “ஜனநாயகமயமாக்கல்” மூலம் இராணுவத்தை மறைமுகமாக பலப்படுத்துவதற்கான அவர்களது உலகளாவிய அழைப்புக்களின் பிற்போக்குத்தன குணாம்சத்தையும் அம்பலப்படுத்துகின்றன.
உத்தியோகபூர்வ “இடதின்” பதிலிறுப்பானது, சிலியில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக அணிதிரட்டுவதற்கான அழைப்புகளை உருவாக்க முனையும் வெளிப்படையான பாசிச பிரிவினருக்கு தைரியமூட்டியுள்ளது. பினோசே சர்வாதிகாரத்தை பற்றிய மிகுந்த நுட்பமான குறிப்பில், ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரிகளின் சங்கம் ஞாயிற்றுக்கிழமை, “குழப்பமான தருணத்தில் ஒரு நாட்டை ஒழுங்கமைத்து இயக்குவதற்கான தயாரிப்பும் பரந்த அனுபவமும் எங்களிடம் உள்ளது” என்று தெரிவித்தும், மேலும் “சிலியில் சட்டத்தின் ஆட்சியை மீட்பதற்கு ஆயுதப்படைகளையும் மற்றும் பொலிஸையும் ஆதரிக்கும்” நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்தும் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சி என்பது, சிலியில் முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ தேசியவாதத்தின் கொடிய காட்டிகொடுப்புக்களிலிருந்து கற்றுக்கொண்ட வரலாற்று படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சோசலிச வேலைத்திட்டத்தினால் ஆயுதபாணியாக்கப்பட்ட ஒரு புரட்சிகர தொழிலாள வர்க்கத் தலைமையின் வளர்ச்சியைக் கோருகிறது. இந்த வரலாறு, ஏகாதிபத்தியம் மற்றும் உலக நிதிமூலதனம் என்ற ஒரு உலகளாவிய எதிரியை தொழிலாளர்கள் எதிர்கொள்வதால் அவர்களது சுயாதீன வர்க்க நலன்களை அவர்களால் தேசிய அடிப்படையில் முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதை நிரூபிக்கிறது.
செப்டம்பர் 1970 இல், இடது முதலாளித்துவ-தேசியவாதியான சால்வடோர் அலெண்டே தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ரிச்சார்ட் நிக்சன் நிர்வாகம் உடனடியாக அவரை தூக்கியெறிய திட்டமிட்டது. அலெண்டே தேர்ந்தெடுக்கப்பட்டு 10 நாட்களுக்குப் பின்னர் நிக்சன் விடுத்த உத்தரவுகளிலிருந்து அப்போதைய சிஐஏ இயக்குநர் ரிச்சார்ட் ஹெல்ம்ஸ் எழுதிய குறிப்புக்கள், “சாத்தியமான அபாயங்கள் எதுவுமில்லை. தூதரகத்தின் தலையீடு இல்லை. 10,000,000 டாலர் தேவையாக உள்ளது. அவசியமானால் அதிகம் தேவை. எங்களிடம் உள்ள சிறந்த மனிதர்களுக்கு முழுநேர வேலை… பொருளாதாரத்தை அலறவேண்டும். செயல் திட்டத்திற்கு 48 மணித்தியாலங்கள் தேவை” என்று தெரிவித்தன. (கிஸ்ஸிங்கர்: ஒரு சுயசரிதை, வால்டர் ஜாசக்சன், 1992, பக். 290)
சிலிய பொருளாதாரத்தையும் அரசாங்கத்தையும் அழிப்பதற்கு வாஷிங்டன் தெளிவான முயற்சிகள் எடுத்த போதிலும், நிக்சனின் அங்கீகாரத்தை வென்றெடுக்க அலெண்டே இடையறாது முயன்றார். பெப்ரவரி 1971 இல், அலெண்டே, அமெரிக்க விமானந்தாங்கி கப்பலான USS Enterprise ஐ வால்பரைசோவில் நிறுத்துவதற்கு அழைப்பு விடுத்தார், இது இறுதியில் நிக்சனால் நிராகரிக்கப்பட்டது. “அமெரிக்காவிற்கு எதிராக பயன்படுத்தப்படக்கூடிய ஒரு இராணுவத் தளத்தை சிலி ஒருபோதும் வழங்காது” என்று அலெண்டே பதிலளித்தார்.
அலெண்டே பிரதிநிதித்துவப்படுத்தும் சிலிய ஆளும் வர்க்கம் பூகோள நிதி மூலதனத்தின் மீது கொண்டிருந்த பொருளாதார சார்புநிலையும், மற்றும் மாஸ்கோவிலுள்ள ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்திய சிலியின் ஆளும் மக்கள் முன்னணியில் இருந்த சிலிய கம்யூனிச கட்சி மூலம் அதற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையேயான போருக்குப் பிந்தைய சமரசம் ஆகிய இரண்டிலிருந்தும் இருந்தே அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவதற்கான மறுப்பு பரிந்துரைக்கப்பட்டது. இதற்கிடையில், வேலைநிறுத்தங்களும், தொழிற்சாலை மற்றும் நில ஆக்கிரமிப்புக்களும், சிலிய பொலிஸ், இராணுவம் மற்றும் ஸ்ராலினிச குண்டர்களின் அடக்குமுறையை எதிர்கொண்டன. இராணுவம் சிலிய பாசிஸ்டுகள், மற்றும் வாஷிங்டனும் ஒரு சதித்திட்டத்தை தீட்டியிருந்தமை மக்கள் முன்னணி தலைவர்களுக்கு தெரிந்திருந்த நிலையிலும், தொழிலாளர் போராளிக்குழுக்கள் நிராயுதபாணிகளாக்கப்பட்டனர்.
ஸ்ராலினிஸ்டுகள், ஐக்கிய செயலகத்தில் உள்ள அவர்களது பப்லோவாத கூட்டாளிகள், குவாராவாத புரட்சிகர இடது இயக்கம் (Guevaraist Revolutionary Left Movement – MIR) மற்றும் ஏனைய குட்டி முதலாளித்துவ தேசியவாத சக்திகள் ஆகியவற்றின் மூலம் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் கைகளில் விடப்பட்ட உள்நாட்டுப் போர், 1960 களில் எட்வர்டோ ஃப்ரீயின் பெருநிறுவன சார்பு கொள்கைகளுக்கு எதிரான புரட்சிக்கு முந்தைய எழுச்சிகளையும், மற்றும் தேசிய முதலாளித்துவத்தின் பிரிவினருக்கு வழங்கப்பட்ட வெளிப்படையான மற்றும் “விமர்சனரீதியான” ஆதரவுக்கு பின்னால் 1972-73 காலகட்டத்தில் நிகழ்ந்த புரட்சிகர எழுச்சிகளும் திசைதிருப்பப்பட்டன.
திவாலான தொழிற்சங்கங்கள், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பரந்த முன்னணி ஆகியவற்றிடம் முறையீடு செய்வதனூடாக ஆளும் வர்க்கத்தின் பின்னால் எதிர்ப்பை திசைதிருப்புவதன் மூலம் பாசிச அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் தொழிலாளர்களை அரசியல்ரீதியாக நிராயுதபாணிகளாக்க இந்த போலி-இடது சக்திகள் மீண்டும் வேலை செய்கின்றன.
செப்டம்பர் 20-21, 1973 அன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வெளியிட்ட ஒரு அறிக்கையில், “ஹிட்லர் மற்றும் பிராங்கோவைப் போலவே, ஸ்ராலினிசத்தின் நம்பிக்கை துரோகத்தால் ஜெனரல் பினோசேயும் இயல்பாகவே வென்றார்” என்று விவரித்தது. ICFI பின்னர், சிலி தொழிலாளர்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தது, அது இன்றைக்கும் மிக அவசரமானது என்னவென்றால்: “ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், மத்தியவாதம், திருத்தல்வாதம் அல்லது தாராளவாத முதலாளித்துவம் ஆகியவற்றில் நம்பிக்கை வைக்காதீர்கள். மாறாக, நிரந்தர புரட்சிகர செயல்திட்டத்தைக் கொண்ட நான்காம் அகிலத்தின் ஒரு புரட்சிகர கட்சியை கட்டியெழுப்புங்கள்” என்பதாகும்.