ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The military crackdown in Chile: Pinochet returns

சிலியில் இராணுவ ஒடுக்குமுறை: பினோசே மீண்டெழுகிறார்

Andrea Lobo
23 October 2019

சிஐஏ ஆதரவிலான அகுஸ்டோ பினோசே இன் பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு நாற்பத்தி ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், சிலியின் செல்வந்த அடுக்கு நூறாயிரக் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அதிகரித்து வரும் போராட்டங்களை நசுக்க சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கு திரும்புகிறது.

தனியார்மயமாக்கப்பட்ட ஓய்வூதியங்கள் மற்றும் பிற சேவைகள், வறிய சம்பளங்கள் மற்றும் கடுமையான தொழிலாளர் சட்டதிட்டங்கள் உட்பட தசாப்தங்களாக நடத்தப்பட்டு வரும் சமூக எதிர்புரட்சி மீதான ஆழ்ந்த கோபத்தால் இந்த போராட்டங்கள் தூண்டிவிடப்பட்டுள்ளன. இதற்கு விடையிறுப்பாக, செபஸ்தியான் பினெரா நிர்வாகம் உடனடியாக பினோசே இன் கீழ் நிறுவப்பட்ட 1980 அரசியலமைப்பைக் கையிலெடுத்து, முக்கியமாக எந்த சேதாரமும் இல்லாமல் இருந்து வருவதும் மற்றும் பாசிசவாத அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதுமான ஒரு பொலிஸ்-அரசு எந்திரத்தை இயக்கமூட்டியது.


பாரிய போராட்டங்களுக்கு மத்தியில் சிலியில் ஒரு பொலிஸ் ஒடுக்குமுறையில் குறைந்தபட்சம் 11 பேர் உயிரிழந்தனர் (அசோசியேடெட் பிரஸ்/லூயிஸ் ஹிடல்கொ)

சனிக்கிழமை, பினெரா அவசரகாலநிலையை பிரகடனம் செய்து, ஜனநாயக உரிமைகளை இடைநிறுத்தி, இராணுவத்தை நிலைநிறுத்தியதுடன், சந்தியாகோ மற்றும் பிற பிரதான நகரங்கள் எங்கிலும் இரவுநேர ஊரடங்கு நிலையை அமல்படுத்தினார்.

டாங்கிகளும் மற்றும் தாக்கும் துப்பாக்கிகள் ஏந்திய இராணுவ படைப்பிரிவுகளும் பிரதான சுங்கச்சாவடிகள் மற்றும் பாலங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கின, கெரபினெரோ பொலிஸ், நீர்பீய்ச்சிகள் மற்றும் ஹெலிகாப்டர்களும் பின்தொடர்ந்தன. சிப்பாய்கள், சீருடையின்றி சாதாரண உடையிலேயே கூட, பட்டப்பகலில் நிஜமான தோட்டாக்களைக் கொண்டு சுட்டுத் தள்ளுவதையும், இரவில், போராட்டக்காரர்களைப் புகைப்படமெடுத்து, அவர்களின் அண்டைப்பகுதிகளில் இருந்து அவர்களை இழுத்துச் செல்வதையும் சமூக ஊடக காணொளிகள் எடுத்துக்காட்டுகின்றன.

செவ்வாயன்று, சிலியில் மானெடா ஜனாதிபதி மாளிகை 15 அப்பாவி மக்கள் உயிரிழந்திருப்பதை உறுதிப்படுத்தியது. நாடெங்கிலும் பரவி உள்ள சந்தியாகோ மெட்ரோ போக்குவரத்தின் கட்டண உயர்வால் ஆர்ப்பாட்டங்களும், அத்துடன் சேர்ந்து சமூக சமத்துவமின்மைக்கு எதிரான பரந்த கோரிக்கைகளும் தூண்டிவிடப்பட்ட போது, வெள்ளிக்கிழமையிலிருந்து 2,600 இக்கும் அதிகமான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அது அறிவித்தது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தகவல்படி, குறைந்தபட்சம் 88 பேர் துப்பாக்கிச்சூட்டால் காயமடைந்துள்ளனர், அதேவேளையில் இராணுவம் குறைந்தபட்சம் இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை — ஞாயிறன்று லா செரெனாவிலும் திங்களன்று குரிகோவிலும் — சுட்டு கொன்றுள்ளது. இரண்டாவது விடயத்தைக் குறிப்பிட்டு கூறுகையில், உள்துறை துணை-செயலர் ரோட்ரிகொ உபெல்லா செவ்வாயன்று எச்சரித்தார், “5 ஆம் தெற்கு வீதியில் நேற்றிரவு கொல்லப்பட்டவரின் மரணம் குறித்து செய்தி வெளியிட முடியாது. மக்கள் நல அமைச்சகம் ஏதேனும் தகவலைத் தவிர்க்கிறது என்றால், அது தடை செய்வதற்குரியதாகும்.”

மீண்டும் சர்வாதிகாரத்திற்கு திரும்புவதை சிலிய தொழிலாள வர்க்கம் உறுதியாக எதிர்க்கும் என்பதை அதை தெளிவுபடுத்தி உள்ளது. இராணுவ நிலைநிறுத்தல் மற்றும் அவசரகாலநிலையை அகற்றுவதற்காக ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த பின்னர், துறைமுகத் துறை தொழிலாளர்கள் பிரதான துறைமுகங்களை மூடினர், அந்நாட்டின் மிகப் பெரிய சுரங்கமான எஸ்கொன்டிடா சுரங்கத்தின் தாமிர சுரங்க தொழிலாளர்கள் திங்களன்று வேலைநிறுத்தத்தில் இறங்கினர்.

சிலியின் அபிவிருத்திகள் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்க போர்குணம் பொங்கி எழுச்சி அடைந்து கொண்டிருப்பதன் பாகமாகும். இலத்தீன் அமெரிக்காவில், சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஈக்வடோர் மற்றும் ஹோண்டுராஸில் பாரிய வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்துள்ளன. உலக முதலாளித்துவத்தின் மையமாக விளங்கும் அமெரிக்காவில் வாகனத்துறை தொழிலாளர்கள், சுரங்கத் துறை தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் வேலைநிறுத்த அலை நடந்து கொண்டிருக்கிறது, பிரான்சில் ஆயிரக் கணக்கான இரயில்வே தொழிலாளர்களது தன்னிச்சையான வேலைநிறுத்தம், பிரிட்டனில் 110,000 தபால்துறை தொழிலாளர்கள் பெருவாரியாக வேலைநிறுத்தத்தை அங்கீகரித்து வாக்களித்துள்ளமை ஆகியவை நடந்துள்ளன.


சிலியின் சந்தியாகோவில் ஞாயிற்றுக்கிழமை 20, 2019 இல் நடைமுறையளவில் அவசரகாலநிலை நீடிக்கின்ற நிலையில் கவச வாகனங்களில் சிப்பாய்கள் ரோந்து வருகின்றனர். பாரியளவில் வன்முறை ஆர்ப்பாட்டங்களை தூண்டிய சுரங்கப் போக்குவரத்து கட்டண உயர்வை ஜனாதிபதி செபஸ்தியன் பினெரா இரத்து செய்த பின்னரும் கூட, போராட்டங்கள் ஒவ்வொரு நாளும் நாடெங்கிலும் பரவி உள்ளன. (படம்: அசோசியேடெட் பிரஸ்/லூயிஸ் ஹிடல்கொ)

ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களில் தலையிடுவதில் இருந்து அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க பிரிவுகளை தடுக்கவியலாமல், சிலியின் பிரதான தொழிற்சங்க கூட்டமைப்பான, ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் (CP) கட்டுப்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் மையம் (CUT), “அரசாங்கத்திடமிருந்து வரும் விடையிறுப்புகளுக்கு நாங்கள் மத்தியஸ்தம் செய்யும் வரையில் மற்றும் ஜனநாயக அமைப்புகள் தற்போதைய இந்த நெருக்கடியிலிருந்து விரைவாக வெளியேறும் வரையில்,” ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு புதன்கிழமை அழைப்பு விடுக்க நிர்பந்திக்கப்பட்டது.

செனட் தலைவர் ஜைய்ம் குவின்டானா, ஆளும் வர்க்கத்தினுள் பெயரளவிற்கான எதிர்ப்புக்கு குரல் கொடுத்து பேசுகையில், செவ்வாயன்று அறிவித்தார்: “ஆணித்தரமாக, நாங்கள், எதிர்கட்சிகளைப் போல, பினெரா அரசாங்கத்தை நிலைகுலைக்க முயலவில்லை, அது அவசரமாக தானே பின்வாங்கி, அத்தியாவசிய நலன்களுடன் ஒரு சமூக திட்டநிரலை அறிவிக்க அனுமதிக்கப்பட வேண்டும்,” என்றார். குவின்டானா ஜனநாயகத்திற்கான கட்சிக்கு (Party for Democracy) தலைமை வகிக்கிறார், அது 1990 இல் பினோசே அதிகாரத்தில் இருந்து விலகியதில் இருந்து கடந்த 30 ஆண்டுகளில் 25 ஆண்டுகள் ஆட்சி செய்த சோசலிஸ்ட் கட்சி, ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளின் கூட்டணி அரசாங்கங்களுக்குத் தலைமை கொடுத்தது.

போலி-இடது Broad Front கூட்டணி, இதிலிருந்த முக்கிய கட்சிகள் முந்தைய ஆளும் கூட்டணிகளிலும் பங்கெடுத்திருந்த நிலையில், “ஏற்றுக் கொள்ளவியலாத நியாயப்படுத்த முடியாத நாசவேலைகளுக்காக" போராட்டக்காரர்களைக் கண்டித்ததன் மூலமாக ஒடுக்குமுறையை நியாயப்படுத்தி உள்ளது.

தொழிற்சங்கங்கள், ஸ்ராலினிசவாதிகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளும் அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பை வர்க்க எதிரிகளுக்குப் பின்னாலும் அதன் ஒடுக்குமுறை எந்திரத்திற்குப் பின்னாலும் கட்டிப்போடுவதன் மூலமாக, சிலிய தொழிலாள வர்க்கம் மீதான அவர்களின் வரலாற்று காட்டிக்கொடுப்புகளை மீண்டும் நடத்த செயல்பட்டு வருகின்றனர் என்பதையே இத்தகைய அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.

பினோசே ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு முன்னர், இத்தகைய சக்திகள், அமெரிக்க ஆதரவிலான Eduardo Frei இன் வணிக-சார்பு கொள்கைகளுக்கு எதிரான புரட்சிகர எழுச்சிகளை சல்வடோர் அலெண்டே தலைமையிலான (“Unidad Popular” என்றழைக்கப்படும்) மக்கள் முன்னணிக்கான ஆதரவுக்குப் பின்னால் திருப்பி விட்டன. 1969 மற்றும் 1973 க்கு இடையே தொழிலாள வர்க்க எழுச்சி ஆலைகள் உச்சத்தில் இருந்தன, நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன, cordones industriales (தொழிலாளர்களினது தொழில்துறை) அல்லது தொழிலாளர்களாலேயே கட்டுப்படுத்தப்படும் தொழில்துறை ஆலைகளின் வலையமைப்புகள் கட்டமைக்கப்பட்டன.

வாஷிங்டன் மற்றும் சிலிய இராணுவம் மற்றும் ஆளும் வர்க்கத்தின் பாசிசவாத பிரிவுகளால் திட்டமிடப்பட்டு உடனடியாக நடக்கவிருந்த ஓர் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியைக் குறித்து அறிந்ததும், மக்கள் முன்னணி (Unidad Popular) தலைவர்கள் இராணுவத்தை "சீருடையில் இருக்கும் மக்கள்" என்று பெருமைப்படுத்தினர், அதேவேளையில் நடக்கவிருந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை எதிர்க்க தொழிலாளர்களை ஆயுதபாணியாக்குவதற்கான cordones இன் அழைப்புகளை நிராகரித்தனர். அதற்கு பதிலாக அவர்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை ஒடுக்க சிப்பாய்களை நிலைநிறுத்தினர். அதன் புரட்சிகர விருப்பங்களுக்காக சுயாதீனமாக சண்டையிடுவதற்கு அதன் சொந்த கட்சி இல்லாததால், தொழிலாளர்கள் காட்டிக்கொடுக்கப்பட்டதுடன், 1973 இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதி மற்றும் பினோசே இன் பாசிசவாத ஒடுக்குமுறையின் முன்னால் ஸ்தூலமாகவும் அரசியல்ரீதியிலும் நிராயுதபாணியாக விடப்பட்டிருந்தனர்.

சிலியில் பினோசே பாணியிலான ஒடுக்குமுறை உயிர்பிக்கப்பட்டிருப்பது ஒரு சர்வதேச நிகழ்வுபோக்கின் பாகமாகும். கட்டலோனியாவில் பொலிஸ்-அரசு அடக்குமுறை, ஈக்வடோரில் இராணுவ ஒடுக்குமுறை, ஜேர்மனி, பிரேசில் மற்றும் அமெரிக்காவில் பாசிசவாதத்தின் வளர்ச்சி ஆகியவை அண்மித்து மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு "வரலாற்றின் முடிவை" குறித்ததாக முதலாளித்துவ சித்தாந்தவாதிகள் கூறிய வாதங்களைச் சிதறடிக்கிறது. சமூக எதிர்ப்பு மற்றும் வர்க்க போராட்டத்தின் வளர்ச்சிக்கு விடையிறுப்பதில், ஆளும் உயரடுக்குகள் 20 ஆம் நூற்றாண்டின் எல்லா விதமான அரசியல் அசிங்கங்களையும் பிற்போக்குத்தனத்தையும் மீண்டும் தோண்டி எடுத்து வருகின்றன.

ஜனநாயக ஆட்சி வடிவங்களுக்குடன் பொருந்தாத, அதீத சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சியே ஆளும் வர்க்கம் எதேச்சதிகாரத்திற்குத் திரும்புவதற்குப் பின்னால் இருக்கும் அடிப்படை காரணியாகும். சிலியில், சமத்துவமின்மை 1882 இன் மட்டங்களுக்குத் திரும்பி உள்ளது, அப்போது செல்வந்த சீமான் எட்வர்ட் குடும்பத்தின் சுரங்கத்துறை மற்றும் வங்கித்துறை சொத்துக்கள் சிலியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏழு சதவீதத்திற்கு நிகராக இருந்தது.

இன்று, 17.4 பில்லியன் டாலர் லூக்சிக் குடும்ப சொத்துக்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் ஆறு சதவீதத்திற்கு நிகராக உள்ளது. விரல் விட்டு எண்ணக்கூடிய செல்வந்தர்கள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களுடனான நெருக்கமான தொடர்புகளுடன், இவர்கள் ஒவ்வொரு மட்டத்திலும் அரசைக் கட்டுப்படுத்துகின்றனர். பில்லியனிய ஜனாதிபதி செபஸ்தியன் பினெராவும் இதில் உள்ளடங்குகிறார். தொழிற்சங்கங்கள், ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (CP), Broad Front கூட்டணி, மற்றும் அவற்றின் அனுதாபிகள் பிரதிநிதித்துவம் செய்யும் உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் அடுக்குகள் சமூக சமத்துவமின்மை மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான எந்தவொரு போராட்டங்களுக்கும் விரோதமாக உள்ளனர்.

சிலியிலும் சர்வதேச அளவிலும் முதலாளித்துவத்திற்கு எதிராக வர்க்க போராட்டத்திற்குள் நுழைந்து வரும் தொழிலாளர்களுக்கு, சிலியில் இரந்தந்தோய்ந்த 1973 காட்டிக்கொடுப்பின் படிப்பினைகள் மூலோபாய முக்கியத்துவம் கொண்டதாகும்.

தொழிலாள வர்க்கத்தால் ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கக்கூடிய ஒன்றை, புளூம்பேர்க் கட்டுரையாளர் ஜோன் ஆதெர்ஸ் செவ்வாயன்று எழுதினார்: “சந்தியாகோவில் இது நடக்க முடியும் என்றால், அது எங்கே வேண்டுமானாலும் நடக்கலாம். உலகின் ஏனைய பகுதிகள், சிலியின் இந்த திடீர் உள்நாட்டு ஒழுங்கு குலைவில் இருந்து அந்தவொரு சங்கடமான சேதியைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உலகளாவிய பொருளாதாரத்தின் ஓர் "ஒருமித்த வளர்ச்சிக் குறைவு" குறித்து சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கின்ற வேளையில் மற்றும் புவிசார் அரசியல் மோதல்கள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், ஆளும் வர்க்கம் அதன் சொத்துக்கள் மீதான எந்தவிதமான இழப்பையும் அது மூர்க்கமாக எதிர்க்கும் என்பதை ஒவ்வொரு இடத்திலும் எடுத்துக்காட்டி வருகிறது.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மற்றும் சமத்துவமின்மையை எதிர்ப்பதிலும் தொழிலாள வர்க்கம் தலைமை எடுக்க வேண்டும் என்பதையே சிலியின் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் மக்கள் முன்னணிவாதத்தின் (popular frontism) பேரழிவுகரமான காட்டிக்கொடுப்புகளைத் தவிர்க்க, உலகளவில் தன்னெழுச்சியான வர்க்க போராட்டங்களின் அலை ஒரு சோசலிச மற்றும் சர்வதேசியவாத வேலைதிட்டத்தைக் கொண்டு நனவுப்பூர்வமாக ஆயுதபாணியாக்கப்பட வேண்டும். இதன் அர்த்தம், சிலியிலும் இலத்தீன் அமெரிக்கா எங்கிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் (ICFI) பிரிவுகளைக் கட்டமைப்பதை அர்த்தப்படுத்துகிறது.