Print Version|Feedback
New Anti-capitalist Party demands military escalation against Turkey in Syria
புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி சிரியாவில் துருக்கிக்கு எதிராக இராணுவ அதிகரிப்பை கோருகிறது
By Alex Lantier
12 October 2019
வடகிழக்கு சிரியாவில் குர்திஷ் படைகளுக்கு எதிராக துருக்கிய அரசாங்கத்தின் இரத்தந்தோய்ந்த தாக்குதலுக்கு பப்லோவாத புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியின் (NPA) விடையிறுப்பு அதுவொரு ஏகாதிபத்தியத்தின் கருவி என்பதை அம்பலப்படுத்துகிறது. துருக்கிய தாக்குதலுக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கி உள்ள நிலையில், பிரதான நேட்டோ சக்திகள் துருக்கிக்கு எதிராக ஆக்ரோஷமான நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய கிழக்கு எங்கிலும் ஏகாதிபத்திய இராணுவத் தலையீட்டை அதிகரிக்குமாறும் அழைப்புவிடுத்து, NPA, போர்-ஆதரவு முன்னோக்கை ஊக்குவிப்பதற்காக, அந்த போராட்டங்களில் தலையிட்டு வருகிறது.
“(துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப்) எர்டோகனின் இராணுவ படையெடுப்புக்கு எதிராக" என்ற அதன் அறிக்கையில், NPA எழுதுகிறது: “துருக்கிக்கும் சிரிய ஜனநாயக படைகள் (SDF) வசமிருக்கும் பகுதிக்கும் இடையிலான இடைப்பட்ட பகுதியிலிருந்து (buffer zone) அமெரிக்க துருப்புகள் திரும்பப் பெறப்படுமென ட்ரம்பின் அறிவிப்பானது, அமெரிக்க ஜனாதிபதி பின்னர் அவர் அறிக்கையிலிருந்து பகுதியாக பின்வாங்கிவிட்டார் என்றாலும் கூட, அதுவொரு புதிய படுகொலைகளை நடத்த எர்டோகனுக்கு பச்சைக் கொடி காட்டுவதாக எடுத்துக் கொள்ளப்பட்டது.” அந்த அறிக்கை, துருக்கிக்கு எதிராக பொருளாதார தடைகளையும் இராணுவ நடவடிக்கையையும் அதிகரிக்க கோருமளவுக்குச் சென்றது.
“எர்டோகனுக்கு எதிரான தடைகள் பற்றிய கேள்வியும் முன்நிறுத்தப்பட வேண்டும்,” என்று அறிவிக்கும் NPA, மற்றொரு கட்டுரையில், “துருக்கிக்கு எதிராக விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதியைக் கொண்டு வருவதும், பொருளாதார மற்றும் இராஜாங்க தடைகளை விதிக்க செய்வதும் ஒட்டுமொத்த பிரெஞ்சு இடதின் கடமையாகும்,” என்பதை சேர்த்துக் கொள்கிறது.
NPA இன் பேராசிரியர் ஜில்பேர் அஷ்கார், துருக்கிக்கு எதிரான ஒரு பினாமிப் போரில் பிரதான நேட்டோ சக்திகள் குர்திஷ் போராளிகள் குழுக்களுக்கு ஆயுதம் வழங்க வேண்டுமெனக் கோரி, இலண்டனில் அவரது பல்கலைக்கழக பதவியிலிருந்து இதே அழைப்பை எதிரொலித்தார்: “துருக்கி அரசாங்கத்தின் நேட்டோ கூட்டாளிகள் … அங்காராவுக்கான அவற்றின் இராணுவ ஆதரவை நிறுத்த வேண்டும், சிரியாவில் இருந்து அதன் துருப்புகளை அது திரும்பப் பெறும் வரையில் துருக்கிய அரசாங்கம் மீது பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும், மற்றும் குர்திஷ் பகுதி மீதான துருக்கிய படையெடுப்பை எதிர்த்து சண்டையிடுவதற்கு அவசியமான ஆயுதங்களை குர்திஷ் இயக்கத்திற்கு வழங்க வேண்டும்,” என்றார்.
மத்திய கிழக்கில் ஏகாதிபத்தியப் போரின் நீண்டகால ஆதரவாளரான அஷ்கார், சிரியாவில் இருந்து அமெரிக்கத் துருப்புகளை திரும்ப பெறுவதை எதிர்க்கும் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர்களை புகழ்கிறார். அமெரிக்கத் துருப்புகளை திரும்ப பெறுவதை "முற்றிலும் பொறுப்பற்றத்தன்மை" என்று குறிப்பிடும் பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் அவற்றை "பொறுப்பற்ற மற்றும் முன்னேற்பாடற்ற தன்மை" என்று குறிப்பிடும் எலிசபெத் வாரென் ஆகியோரின் விமர்சனங்களை அவர் முழுதிருப்தியுடன் மேற்கோளிடுகிறார். இது NPA க்கும் அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி போன்ற வெட்கக்கேடான பெருவணிக கட்சிகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகளை மட்டுமே அடிக்கோடிடுகிறது.
ஏகாதிபத்தியம் மற்றும் மத்திய கிழக்கு முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு புரட்சிகர இயக்கத்தில் —துருக்கிய, குர்திஷ், மத்திய கிழக்கு, ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் அதற்கு அங்காலும்— சர்வதேச அளவில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் நம்பகமான முற்போக்கான கொள்கையை மட்டுமே NPA எதிர்க்கிறது. அதற்குப் பதிலாக, NPA, ஏகாதிபத்திய ஆளும் உயரடுக்கின் பிரிவுகளின் தலைமையில், அதுவும் குறிப்பாக ஜனநாயகக் கட்சி, பென்டகன் மற்றும் வாஷிங்டனின் குர்திஷ்-தேசியவாத SDF பினாமி படைகளுடன் பிணைந்த பிரிவுகளினது தலைமையிலான போர் அழைப்புகளுக்கு பின்னால் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் கட்டுப்படுத்த முயல்கிறது.
புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) துருக்கிய தொழிலாள வர்க்கத்தின் மீதான அவமதிப்பு மற்றும் அலட்சியத்துடன் அதன் கொள்கைகளை வெளியிடுகிறது. துருக்கிய எஃகு ஏற்றுமதிகள் மீது ட்ரம்ப் ஏற்கனவே விதித்ததைப் போன்ற தடைகள் துருக்கியில் எண்ணற்ற ஆயிரக் கணக்கான தொழிலாளர்களை வேலையிலிருந்து வெளியேற்றும் என்பதுடன், பணவீக்கத்தை உயர்த்தும் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை நாசமாக்கும். வர்த்தகப் போர் வரிவிதிப்புகளை கொண்டு துருக்கிய பொருளாதாரத்தை நசுக்க ட்ரம்ப் அச்சுறுத்திய பின்னர், அமெரிக்க செனட்டர்கள் லிண்டெ கிரஹாம் மற்றும் கிறிஸ் வன் ஹொல்லென் துருக்கி மீதான அதுபோன்ற புதிய தடைகளுக்கான திட்டங்களை வெளியிட்டுள்ளனர்.
மத்திய கிழக்கில் அடுத்தடுத்து தீவிரமடைந்து வரும் போருக்கு எதிரான வெவ்வேறு தேசிய இனங்களை சேர்ந்த தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கு கடும் விரோதத்துடன், NPA, அதற்கு பதிலாக துருக்கி மீது ஓர் ஏகாதிபத்திய போருக்கு வக்காலத்து வாங்குகிறது. இதுதான், விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதியை நடைமுறைப்படுத்தவும் மற்றும் துருக்கிக்கு எதிராக SDF ஐ ஆயுதமயப்படுத்தவும் நேட்டோவுக்கு அது அழைப்புவிடுப்பதில் உள்ள அதன் வர்க்க உள்ளடக்கமாகும். துருக்கிய-சிரிய எல்லையில் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதியை நடைமுறைப்படுத்துவது என்பது துருக்கிய மற்றும் சிரிய வான்வெளியை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆயுதப்படைகள் கட்டுப்பாட்டில் எடுப்பதையும், அப்பகுதியில் துருக்கிய போர்விமானங்களை சுட்டு வீழ்த்தவும் மற்றும் இத்தகைய போர்விமானங்களை பாதுகாக்க முயலும் துருக்கிய தரைப்படை மற்றும் ஏவுகணை படைகளை அழிக்கவும் தயாராக உள்ள படைகளை நிலைநிறுத்துவதையும் தவிர்க்க முடியாததாக ஆக்குகிறது.
மிகவும் குறிப்பாக, NPA, மத்திய கிழக்கில் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் நவீன ஆயுதப்படைகளில் ஒன்றை நிலைநிறுத்தி உள்ள துருக்கி மீதான அத்தகைய ஒரு போரைத் தொடங்கும் பிரான்ஸ் அல்லது வேறு ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக துருக்கிய படைகள் எடுக்கக்கூடிய சாத்தியமான இராணுவ பதில் நடவடிக்கைகளின் விளைவுகளை ஒருபோதும் பரிசீலிக்கவே இல்லை.
NPA இன் நெருப்புக்கொளுத்தி களிப்படையும் கருத்துக்கள் அவற்றின் சொந்த நடவடிக்கைகள் அல்லது கொள்கைகளின் விளைவுகளைக் குறித்து கவலையின்றி மிகவும் அவசரகதியில் உள்ளன. பல தசாப்தங்களாக நிதியியல் பிரபுத்துவம் "இடது" என்று மோசடியாக கடந்துவிட்ட, இந்த 1968 முன்னாள் மாணவ தீவிரக் கொள்கையாளர்களின் வர்க்க நோக்குநிலை இப்போது கூர்மையாக அம்பலப்பட்டு நிற்கிறது. இந்த செல்வாக்கான பல்கலைக்கழக பேராசிரியர்களும் தொழிற்சங்க நிர்வாகிகளும் அவர்களின் மத்திய கிழக்கு கொள்கை தோல்வியடைவதைக் காண்பதுடன், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் மற்றும் நிதியியல் சந்தைகளின் உலகளாவிய நிலைப்புத்தன்மை மீதான பாதிப்புகள் குறித்தும், அவ்விதத்தில் அவர்களின் சொந்த பங்கு சொத்துக்கள் குறித்தும் அஞ்சுகின்ற வேளையில், அவர்கள் வெறித்தனத்திற்குள் வெகுண்டு எழுந்து வருகிறார்கள்.
துருக்கிக்கு எதிராக அவர்கள் தூண்டிவிட்டு வரும் போர் காய்ச்சல், 2011 இல் துனிசியா மற்றும் எகிப்தில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சிகளுக்கு அவர்களின் வெறித்தனமான விடையிறுப்பில் நேரடியாக எதிரொலிக்கிறது. அவர்கள் லிபியா மற்றும் சிரியாவில் நேட்டோ பினாமி போர்களை ஆதரித்தார்கள், அதிலிருந்து தான் இறுதியில் சிரியாவில் துருக்கிய தலையீடு வருகிறது. துருக்கிக்கு எதிரான NPA இன் பிரச்சாரத்தை ஆதரிக்க முனையும் எவரொருவரும், NPA இன் முந்தைய மிகப்பெரிய போர் முனைவின் பயங்கர விளைவுகளை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
லிபிய நகரங்கள் மீது, நேட்டோ சரமாரியாக குண்டு வீசிய போது, அஷ்கார் கூறுகையில், லிபியாவில் அரசு-விரோத போராட்டக்காரர்களை பாதுகாக்க நேட்டோப் போரை ஒரு மனிதாபிமான நடவடிக்கையாக ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். வருந்தத்தக்க விதத்தில் அவர் அப்போரை ஆதரிக்க நிர்பந்திக்கப்பட்டதாக கூறிய அஷ்கார், “பாதுகாப்பு நோக்கத்தை எட்டுவதற்கு வேறெந்த மாற்றீடுகளும் இல்லாதபோது, யாரும் அதை நியாயமாக எதிர்க்க முடியாது… நீங்கள் ஏகாதிபத்திய-எதிர்ப்பு கொள்கைகளின் பெயரில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையை எதிர்க்க முடியாது,” என்று அறிவித்தார்.
இந்த மோதலின் துயரகரமான விளைவு, ஏகாதிபத்திய போருக்கு ஒரு கோட்பாட்டுரீதியான மார்க்சிச எதிர்ப்பை WSWS வலியுறுத்தியதை ஊர்ஜிதப்படுத்தியது. அந்த மோதலில் நேட்டோ லிபியா மீது குண்டுவீசியதுடன் கர்னல் மௌம்மர் கடாபியின் ஆட்சிக்கு எதிராக இஸ்லாமிய போராளிகள் குழுக்களைப் பினாமி படைகளாக ஆயுதமயப்படுத்தியது.
கடாபி மீதான சித்திரவதை மற்றும் நீதிவிசாரணையற்ற படுகொலையுடன் அந்த போர் முடிவுக்கு வந்து அண்மித்து ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், இப்போதும் லிபியா, ஏகாதிபத்திய-ஆதரவிலான எதிர்விரோத இஸ்லாமிய போராளிகள் குழுக்களுக்கு இடையே ஓர் உள்நாட்டு போரில் தான் மூழ்கி கிடக்கிறது. அதன் எண்ணெய் தொழில்துறை நாசமாக்கப்பட்டுள்ளது, ஏகாதிபத்திய யுத்தமானது ஜனநாயகத்தை கட்டமைக்கும் என்ற NPA இன் பொய்கள் தகர்ந்து போயுள்ளன. லிபியாவின் நவ-காலனித்துவ ஆட்சி ஐரோப்பிய ஒன்றிய சித்திரவதை முகாம்களின் ஒரு வலையமைப்பை நடத்தி வருகிறது, அவற்றில் அகதிகள் அடிக்கப்படுகிறார்கள், கற்பழிக்கப்படுகிறார்கள், படுகொலை செய்யப்படுகிறார்கள் அல்லது மத்தியத் தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்கு அவர்கள் கடந்து வராமல் இருக்க அடிமைகளாக விற்கப்படுகிறார்கள்.
SDF மீதான துருக்கிய தாக்குதல் இந்த போர் முனைவின் மற்றொரு விஷமேற்றப்பட்ட விளைபயனாக உள்ளதுடன், சிரியாவில் NPA ஆல் ஆதரிக்கப்பட்ட எட்டாண்டு கால இரத்த ஆற்றில் நூறாயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். 2015 வாக்கில், சிரிய ஆட்சி, ரஷ்யா மற்றும் ஈரான் துருப்புகளின் உதவியுடன், அதற்கு எதிராக நேட்டோ அதிகாரங்கள் அணித்திரட்டிய மக்கள் மதிப்பிழந்த இஸ்லாமிய போராளிகள் குழுக்களைப் பெருமளவில் நசுக்கி இருந்தது. அதன் ஒரு விளைவாக தான், வாஷிங்டன் குர்திஷ் தேசியவாத போராளிகள் குழுக்களுக்கு அதன் ஆதரவை வழங்கியது, இது சிரியாவில் புதிய முன்னணி அமெரிக்க பினாமி படையாக SDF இக்குள் தீர்க்கமான படைகளை வழங்கியது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு கூட்டணியில் நுழைந்த குர்திஷ் தேசியவாத கட்சிகள் மத்திய கிழக்கு எங்கிலும் ஜனநாயக மற்றும் கலாச்சார உரிமைகளைப் பெறுவதற்கான குர்திஷ் மக்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்தன. NPA இன் ஆதரவுடன், அவை அதை இரத்த ஆற்றுக்கு இட்டுச் சென்றன. அமெரிக்கா மற்றும் SDF இன் கூட்டணி துருக்கிய அரசாங்கத்தைப் பீதியூட்டியது, துருக்கியில் குர்திஷ் பிரிவினைவாதத்தைத் தூண்டிவிடுமோ என்று அஞ்சிய அது SDF ஐ கைவிடுமாறு வாஷிங்டனுக்கு அழுத்தமளித்தது. இறுதியில் ட்ரம்பின் இரட்டை-வேட நாடகத்தால், குர்தியர்கள் எர்டோகனுக்கு எதிராக இப்போது துருக்கிய தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் அதிருப்திக்கு முறையிட முடியாமல் துருக்கிய தாக்குதலை முகங்கொடுக்கிறார்கள்.
ஏகாதிபத்திய சார்பு குர்திஷ் தேசியவாத கட்சிகளை NPA தழுவியதன் அடிப்படையில் தன்னை முற்போக்காக காட்டிக் கொள்வது தான் துருக்கிய தாக்குதலில் மற்றொரு துயரமாகும். பல ஆண்டுகளாக, ஐரோப்பா எங்கிலுமான குட்டி-முதலாளித்துவ கட்சிகள் SDF ஐ "ரொஜாவா" (Rojava) புகலிடம் என்று புகழ்ந்துள்ளதுடன், அவை, பெண்கள் உரிமைகளுக்கான அராஜகவாதிகளின் சொர்க்கம் என்றும் தன்னாட்சி சுய-அமைப்புகள் என்றும் தன்னை காட்டிக் கொண்டு சிரிய போருக்கான அவர்களின் ஆதரவை "இடது" வண்ணத்தில் சித்தரிக்க முயன்று வந்துள்ளன. இதுவும் முறிந்து போனது, ஏனெனில் ட்ரம்பின் திரும்பப்பெறல் அறிவிப்புக்குப் பிந்தைய துருக்கிய தாக்குதல், ரொஜாவாவின் உயிர்பிழைப்பே முற்றிலும் அமெரிக்க துருப்புகளின் பிரசன்னத்தை சார்ந்துள்ளதை எடுத்துக்காட்டி உள்ளது.
NPA எழுதுகிறது, எர்டோகனின் "நோக்கம் தெளிவாக உள்ளது: அதாவது குர்தியர்கள் உருவாக்கிய தன்னாட்சி மண்டலத்தை அழிப்பது, சமீபத்திய உள்ளாட்சி தேர்தல்களில் அவர் முகங்கொடுத்த அதிகரித்த பிரச்சினைகளை வைத்து பார்க்கையில், எர்டோகன் அவரது அரசாங்கத்திற்கும் தேசியவாத அரசியலுக்கும் அதை ஓர் அச்சுறுத்தலாக மட்டுமே பார்க்க முடியும். … மத பன்மைத்துவத்தின் வளர்ச்சி, தேசியங்களின் தன்னாட்சியை மதிப்பது, பெண்கள் உரிமைகளை முன்னெடுப்பது ஆகியவை எதேச்சதிகார எர்டோகனால் அதன் இருப்பை சகித்துக் கொள்ளவியலாததாய் ஆக்குகிறது.”
உண்மையில், ரொஜாவா ஒரு ஜனநாயக சொர்க்கம் கிடையாது மாறாக அமெரிக்க துருப்புகளால் பாதுகாக்கப்பட்ட ஒரு கோட்டையாகும். இப்போது பரவலாக செய்திகளில் குறிப்பிடப்படுவதைப் போல, அது சிறை முகாம்களைக் கொண்டிருந்தது அவற்றில் இஸ்லாமிய அரசு போராளிகள் என்ற வெறும் சந்தேகத்தின் பேரில், ஏகாதிபத்திய சக்திகளின் கூற்றுப்படி, 11,000 க்கும் அதிகமானவர்கள் அடைக்கப்பட்டிருந்தார்கள். குர்தியர்களுக்கும் உலகின் ஏனைய மக்களுக்கும் ரொஜாவாவை ஒரு புரட்சிகர ஜனநாயக முன்னோக்கிய பாதையாக சித்தரிப்பதற்கான NPA இன் முயற்சிகள் வெட்கக்கேடான ஒரு மோசடியாகும்.
ரொஜாவா, மத்திய கிழக்கில் தீர்க்கமான எதிர்புரட்சிகர சக்தியான பென்டகனின் கட்டளையின் கீழ் செயல்பட்டது. உள்ளவாறே, அதன் மக்கள் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளின் ஈவிரக்கமற்ற போர் சூழ்ச்சிகளுக்கும் மற்றும் ஈரான் உடனான போருக்குத் தீவிரப்படுத்தப்பட்ட தயாரிப்புகளுக்கும் மற்றும் மத்திய கிழக்கு எங்கிலும் முற்றுமுதலான இராணுவ மோதலுக்கும் அடிபணிய செய்யப்பட்டார்கள். இந்த கசப்பான யதார்த்தம் மீது NPA ஏற்படுத்தி உள்ள பிரச்சார மூடிமறைப்பு, ட்ரம்ப் அவர் துருப்புகளைத் திரும்ப பெறுவதாக அறிவித்து சிரியாவுக்குள் துருக்கிய ஆயுதப் படைகளின் தாக்குதல் குறித்து எர்டோகனுடன் விவாதித்ததும் திடீரென வெடித்து சிதறி உள்ளது.
குர்திஷ் படைகள் மீதான எர்டோகனின் தாக்குதலுக்கு எதிராக போராடுவதற்கான ஒரே முற்போக்கான மூலோபாயம், போருக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டி ஐக்கியப்படுத்துவது மட்டுமே ஆகும். எர்டோகனுக்கு துருக்கிக்குள் வரும் எதிர்ப்பு, ஈராக்கில் இருந்து ஜோர்டான் மற்றும் அல்ஜீரியா வரையில் மத்தியக் கிழக்கில் அதிகரித்து வரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் சமூக போராட்டங்கள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிகரித்து வரும் போர் மீதான வெறுப்பு மற்றும் சமூக கோபம் ஆகியவை அதுபோன்றவொரு கொள்கைக்கு புறநிலை அடித்தளத்தை எடுத்துக்காட்டுகின்றன.
எவ்வாறிருப்பினும், அனைத்திற்கும் மேலாக, அதுபோன்றவொரு இயக்கத்திற்கு உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) முன்னெடுக்கும் சர்வதேசியவாத புரட்சிகர சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் ஓர் அரசியல் தலைமைக்காக போராடுவது அவசியமாகும். அதுபோன்றவொரு தலைமையை, NPA இன் ஏகாதிபத்திய சார்பு அரசியல் போக்குக்கு எதிராக சளைக்காத போராட்டத்தினூடாக மட்டுமே கட்டமைக்க முடியும்.