Print Version|Feedback
Oppose the Turkish military offensive in Syria!
சிரியாவில் துருக்கிய இராணுவ தாக்குதலை எதிர்ப்போம்!
By the International Committee of the Fourth International
14 October 2019
குர்திஷ் தலைமையிலான ஆயுதக் குழுக்களை இலக்கு வைத்து சிரியா மீதான துருக்கிய படையெடுப்பை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) வன்மையாக கண்டிக்கிறது. வாஷிங்டன் சிரியாவில் அதன் பிரதான பினாமி சக்தியாக செயல்பட்டு வந்த குர்திஷ் படைகளைக் கடந்த வாரம் கைவிட்டதும், ஒரு துரிதமான மற்றும் வன்முறையான இராணுவ மோதல் நடந்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை துருக்கிய பாதுகாப்புத்துறை அமைச்சக அறிக்கை ஒன்றின்படி, துருக்கிய துருப்புகள் அத்தாக்குதலின் முதல் ஐந்து நாட்களில் 550 குர்திஷ் துருப்புகளைக் கொன்றுள்ளன. குறைந்தபட்சம் நான்கு துருக்கிய சிப்பாய்களும் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பற்ற வீடுகள் மீது குண்டுமழை பொழிவதால், துருக்கிய-சிரிய எல்லையின் இரண்டு தரப்பிலும் பல அப்பாவி மக்களும் காயமடைந்துள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. துருக்கிய படைகளையும் மற்றும் அவர்களுடன் அல்கொய்தா தொடர்புபட்ட சிரிய "கிளர்ச்சிகர" கூட்டாளிகளையும் எதிர்கொள்ள ஈரான் ஆதரவுடன் சிரிய இராணுவம் வடக்கு நோக்கி அணிவகுத்துள்ள நிலையில், மத்திய கிழக்கும் உலகமும் முற்றுமுதலான போரின் விளிம்பில் உள்ளன.
துருக்கி, மத்திய கிழக்கின் மூன்று தசாப்த கால ஏகாதிபத்திய போர் உருவாக்கிய பெரும் சுழலுக்குள் சிக்கி உள்ளது. அங்காராவில் ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகானின் அரசாங்கம் அதன் தாக்குதலை குறிப்பிடுகின்றவாறு, “வசந்தகால சமாதான நடவடிக்கை" (Operation Peace Spring) என்பது சமாதானத்திற்கான நடவடிக்கையோ அல்லது பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு போரோ கிடையாது. அது, சிரியாவில் சிஐஏ முடுக்கிவிட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கை, ஒருபுறம் அமெரிக்கா, ஐரோப்பா, துருக்கி மற்றும் சிரிய "கிளர்ச்சிகர" குழுக்களையும், மறுபுறம் ஈரான், ரஷ்யா, சீனா மற்றும் சிரிய ஆட்சியையும் உள்ளிழுத்து, தொடங்கிவிட்ட எட்டாண்டு கால போரின் கடுமையான தீவிரப்பாடாகும்.
ரஷ்யாவுடன் ஓர் உடன்படிக்கை மேற்கொள்ள முயன்றதற்காக எர்டோகனைக் கவிழ்த்து படுகொலை செய்வதற்கான ஒரு தோல்வியடைந்த, வாஷிங்டன் மற்றும் பேர்லின் ஆதரித்த, 2016 ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர், சிரியாவில் அமெரிக்க ஆதரவிலான குர்திஷ் அரசு கட்டமைப்பதைத் தடுக்க அங்காரா நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த துருக்கிய-குர்திஷ் சகோதரத்துவ மோதலானது, ஏகாதிபத்தியத்தின் பிரதான இராணுவ எதிர்பலத்தைக் அகற்றி விட்டிருந்த 1991 சோவியத் ஒன்றிய ஸ்ராலினிச கலைப்புக்குப் பின்னர் வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய ஏகாதிபத்திய கூட்டாளிகளும் மேற்பார்வை செய்த மத்தியக் கிழக்கு மனிதயினப் படுகொலைகளின் இறுதி விளைபொருளாகும். அப்போதிருந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவரே கூட சமீபத்தில் ட்வீட்டரில் ஒப்புக் கொண்டவாறு, ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் அதற்கு அப்பாலும் வாஷிங்டன் பொய்களின் அடிப்படையில் மில்லியன் கணக்கானவர்களை போர்களில் கொன்றுள்ளது. இத்தகைய போர்கள் பத்து மில்லியன் கணக்கானவர்களை அவர்களின் வீடுகளை விட்டு துரத்தி, இரண்டாம் உலக போருக்குப் பின்னர் மிகப் பெரிய உலகளாவிய அகதிகள் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
பல தசாப்தங்களாக ஏகாதிபத்திய போரால் எரியூட்டப்பட்ட கட்டுப்படுத்தவியலாத இன மற்றும் வர்க்க மோதல்களுக்கு இராணுவரீதியில் தீர்வு காண்பதற்காக, இப்போது அங்காரா முழு வீச்சில் இறங்கி உள்ளது. வடக்கு சிரியாவைக் கைப்பற்றி, அங்கே துருக்கியில் வாழும் மில்லியன் கணக்கான சிரிய அரபு அகதிகளைப் பலவந்தமாக குடியமர்த்துவதும் மற்றும் அவ்விதத்தில் துருக்கிய-சிரிய எல்லையில் ஒரு குர்திஷ் அரசு நிலை பெறுவதைத் தடுப்பதுமே அதன் நோக்கமாகும். இந்த மூலோபாயத்துடன், துருக்கிய முதலாளித்துவ வர்க்கம் அழிவை நோக்கி நகர்ந்து வருகிறது.
மிகப் பெரும் போர் குற்றங்களில் துருக்கிய ஆளும் வர்க்கம் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், அங்காராவின் தாக்குதல், அனைத்து உலக சக்திகளுக்கும் இடையே முற்றுமுதலான போராக தீவிரமடையும் அபாயத்தை முன்நிறுத்துகிறது.
துருக்கிக்கு உள்ளே அமைதியான முறையில் இத்தாக்குதலை எதிர்ப்பவர்களைக் கைது செய்வதை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கண்டிக்கிறது. அல்ஜீரியா, சூடான் மற்றும் எகிப்திய இராணுவ ஆட்சிகளையும், அத்துடன் ஈராக்கில் நவ-காலனித்துவ அமெரிக்க கைப்பாவை அரசாங்கத்தையும் வீழ்த்துவதற்கான பெருந்திரளான மக்கள் போராட்டங்களுடன், உலகளவில் வர்க்க போராட்டத்தின் மீள்வருகைக்கு மத்தியில், துருக்கிய தாக்குதல் நடந்து வருகிறது. படுமோசமாக சீர்குலைந்து வரும் துருக்கிய பொருளாதாரம் மீது அதிகரித்து வரும் மக்கள் கோபம் குறித்தும் கருத்துக் கணிப்புகளில் எர்டோகனின் ஆளும் கட்சியான நீதி மற்றும் வளர்ச்சி கட்சி (AKP) தீவிரமாக 30 சதவீதத்திற்குக் கீழ் பின்தங்கி வருவதையும் குறித்து அவர் கட்சி நன்கு அறிந்துள்ளார். அது, உள்நாட்டில் ஒரு சமூக வெடிப்பைக் குறித்து அஞ்சி, தொழிலாள வர்க்க எதிர்ப்பை தேசியவாத மற்றும் இராணுவவாத திட்டநிரலுக்குள் மூழ்கடிக்க கருதுகிறது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதி மூலமாக எர்டோகனை நீக்குவதற்கான அதன் முயற்சிகள் உட்பட ஏகாதிபத்தியத்தை சமரசத்திற்கிடமின்றி எதிர்க்கிறது. ஆனால் ஒட்டோமான் சாம்ராஜ்ஜியத்தை துண்டாடும் ஏகாதிபத்திய முனைவுக்கு எதிரான ஒரு போரில் துருக்கி ஒரு மதசார்பற்ற அரசாங்கமாக உருவாகி ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், துருக்கிய முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியத்திடம் இருந்து அதன் சுதந்திரத்தைப் பாதுகாத்து கொள்வது ஒருபுறம் இருக்கட்டும், அது அதன் உள்மோதல்களுக்கு எந்தவொரு ஜனநாயக தீர்வும் காண இலாயக்கற்றது என்பதை நிரூபித்துள்ளது. உண்மையில், எர்டோகன் தாக்குதலை நடத்துவதற்கு முன்னர், வெறும் மூன்றாண்டுகளுக்கு முன்னர்தான் அவரைக் கொல்ல முயன்ற, வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளின் ஒப்புதலைப் பெற முயன்றார்.
போர், இன மோதல் மற்றும் எதேச்சதிகார ஆட்சியின் பிரச்சினைகளுக்கு ஒரே முற்போக்கான பதில், துருக்கி, குர்திஸ், அரேபிய, ஈரானிய மற்றும் இஸ்ரேலிய அனைத்து தேச தொழிலாளர்களையும் ஏகாதிபத்திய போர் மற்றும் பிராந்திய முதலாளித்துவ வர்க்கங்களுக்கு எதிராக ஐக்கியப்படுத்தி, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டத்தின் மூலமாக இனப் பிளவுகளைக் கடந்து ஒரு ஜனநாயக ஆட்சியை நிறுவுவதில் தான் தங்கியுள்ளது.
துருக்கியிலும் மற்றும் அப்பிராந்தியம் எங்கிலுமான நிகழ்வுகள், லியோன் ட்ரொட்ஸ்கியால் அவரது நிரந்தரப் புரட்சியில் விளங்கப்படுத்தப்பட்ட உலக புரட்சிகர மூலோபாயத்தைப் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. முதலாளித்துவ வளர்ச்சி தாமதமான மற்ற எல்லா நாடுகளைப் போலவே, துருக்கியிலும், தொழிலாள வர்க்கத்திற்கு அஞ்சி நம்பிக்கையற்று ஏகாதிபத்தியத்துடன் பிணைந்துள்ள முதலாளித்துவ வர்க்கம் இந்த பிரச்சினைகளில் எதையுமே தீர்க்க இலாயக்கற்றது. உள்நாட்டு முதலாளித்துவ வர்க்கம் மற்றும் ஏகாதிபத்தியம் இரண்டுக்கும் எதிராக சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவுகள் அனைத்திற்கும் தலைமை கொடுத்து தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான போராட்டத்தின் மூலமாக மட்டுமே இந்த பணியைப் பூர்த்தி செய்யவியலும்.
அதன் குர்திஷ் கூட்டாளிகள் உடனான வாஷிங்டனின் அப்பட்டமான இரட்டை-வேடம், குர்திஷ்களின் ஜனநாயக மற்றும் கலாச்சார உரிமைகளை முன்னெடுப்பதற்கு ஒரு மூலோபாயமாக குர்திஷ் தேசியவாதத்தின் திவால்நிலைமைக்கு மற்றொரு கசப்பான படிப்பினையாகும். இஸ்லாமிய அரசு ஆயுதக் குழுக்களின் 1,000 க்கும் அதிகமான உறுப்பினர்களை படுமோசமான நிலைமைகளில் சிறையில் அடைத்து வைத்திருப்பதில் குர்திஷ் தேசியவாதிகள் வகித்த பாத்திரம் அம்பலமாவது, வடக்கு சிரியாவில் ஒரு ஜனநாயக ஆட்சியை மேற்பார்வை செய்வோம் என்ற அவர்களின் வாதங்களின் மோசடித்தன்மையை எடுத்துக்காட்டுகிறது.
குர்திஷ் மக்கள் துருக்கி, சிரியா, ஈராக் மற்றும் ஈரான் எங்கிலும் பரவலாக வாழ்கிறார்கள். அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் ஐக்கிய சோசலிச அரசுகளைக் கட்டமைப்பதற்காக எல்லா இன தொழிலாளர்களையும் ஒருங்கிணைத்த ஒரு பொதுவான புரட்சிகர போராட்டம் மட்டுமே, துருக்கிய மக்களுக்கு போலவே, குர்திஷ் மக்களுக்கும் அவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரே சாத்தியமான மூலோபாயமாகும்.
துருக்கியின் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் எடுத்துள்ள பிற்போக்குத்தனமான நிலைப்பாடுகள் மத்திய கிழக்கில் முதலாளித்துவம் அடைந்துள்ள முட்டுச்சந்து நிலையை அம்பலப்படுத்துகிறது. துருக்கிய ஆளும் வர்க்கத்தின் பாரம்பரிய போர்-ஆதரவு கட்சியும் எதிர்கட்சியுமான, குடியரசு மக்கள் கட்சி (CHP), சிரிய ஆட்சியுடன் ஓர் உடன்படிக்கை செய்யப்படும் என்ற அனுமானத்துடன் இராணுவத் தீவிரப்பாட்டின் அபாயம் குறித்து தொழிலாளர்களை உறக்கத்தில் வைத்திருக்கும் முயற்சியில், எர்டோகனின் தாக்குதலை ஆதரித்துள்ளது.
இது துருக்கிய நடுத்தர-வர்க்க போலி-இடது கட்சிகள் வகித்த பிற்போக்குத்தனமான பாத்திரத்தை அம்பலப்படுத்துகிறது, இவை இந்தாண்டு உள்ளாட்சி தேர்தல்களில் எர்டோகனின் AKP கட்சிக்கு எதிராக CHP க்குப் பின்னால் அணிவகுத்தன. தொழிற் கட்சியான EMEP குடியரசு மக்கள் கட்சியுடன் “நிரந்தர ஐக்கியம்” நாடுகின்ற அதேவேளையில், சுதந்திரம் மற்றும் நல்லிணக்க கட்சி (ÖDP) அதன் தலைவரை CHP வேட்பாளராக போட்டியிட நிறுத்தியது. CHP ஆட்சியிலிருக்கும் நகரங்களில் இருந்து சிரிய அகதிகளை வெளியேற்றுவதற்கான CHP இன் நகர்வுகளுக்கும், இப்போது சிரியா மீதான துருக்கியின் படையெடுப்புக்குமான அரசியல் பொறுப்பு இவர்களையை சாரும்.
குர்திஷ்-தேசியவாத மக்கள் ஜனநாயகக் கட்சி (HDP) “சர்வதேச அமைப்புகள்" “பொறுப்பேற்க வேண்டும்" என்றும், குர்திஷ் ஆயுதக் குழுக்களின் உதவிக்கு வர வேண்டுமென்றும் அழைப்பு விடுத்து வருகிறது. ஆனால் பென்டகன், சிஐஏ, ஜனநாயகக் கட்சி மற்றும் ஐரோப்பாவில் உள்ள அவர்களின் கூட்டாளிகளே குர்திஷ் தேசியவாதிகள் முறையிடும் "சர்வதேச அமைப்புகளாக" உள்ளன. பல பத்தாண்டுகளாக இந்த அமைப்புகள் பாரிய படுகொலைக்கு தான் பொறுப்பாக உள்ளன.
மத்திய கிழக்கில் குர்திஷ் மக்களையும் ஏனைய ஒடுக்கப்படும் மக்களையும் சமரசத்திற்கிடமின்றி பாதுகாக்கின்ற அதேவேளையில், ICFI, குர்திஷ் முதலாளித்துவ தேசியவாதிகளை ஆதரிக்கவில்லை. ISIS மீதான போர் என்றழைக்கப்பட்டதில் ரக்கா மற்றும் ஏனைய சிரிய நகரங்கள் மீது நடத்தப்பட்ட போர் குற்றங்கள் உட்பட சிரியாவில் அமெரிக்க-குர்திஷ் கூட்டணியின் நாசகரமான விளைவு, முதலாளித்துவ தேசியவாதம் குறித்த ட்ரொட்ஸ்கிச விமர்சனத்தை ஊர்ஜிதப்படுத்துகிறது, அதுவாவது: அது மத்திய கிழக்கை இனரீதியில் பிளவுபடுத்தவும் மற்றும் அதன் மக்களை ஏகாதிபத்தியத்திற்கு அதை அடிபணிய வைக்கவும் மட்டுமே சேவையாற்றி உள்ளது.
குர்திஷ் முதலாளித்துவ தேசியவாதிகள், “சோசலிச" வார்த்தைஜாலங்களை பயன்படுத்துகிறார்கள் என்றாலும், வரலாற்றுரீதியில் அவர்கள் ஏகாதிபத்தியத்துடனும், சிஐஏ மற்றும் இஸ்ரேலில் இருந்து ஈரானின் ஷா மற்றும் மாஸ்கோ ஸ்ராலினிச அதிகாரத்துவம் வரையில் முதலாளித்துவ சக்திகளுடனும் கூட்டணிகள் அமைக்க முயன்றனர். இது தொடர்ச்சியாக பல சீரழிவுகளை உண்டாக்கியது. ஜலால் தலபானியின் குர்திஷ் நாட்டுப்பற்று சங்கம் (Patriotic Union of Kurdistan) மற்றும் மௌசூத் பர்ஜானியின் குர்திஷ் ஜனநாயகக் கட்சி (Kurdish Democratic Party) ஆகியவை எதிரெதிர் தரப்புகளை ஆதரித்து, 1980-1988 ஈரான்-ஈராக் போரில் ஒன்றுக்கு எதிராக ஒன்று சண்டையிட்டன. 1991 வளைகுடா போருக்குப் பின்னர் ஒரு குர்திஷ் எழுச்சியை பாக்தாத் ஒடுக்கியதை வாஷிங்டன் இரகசியமாக ஆதரித்திருந்த போதும் கூட, குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி (Kurdistan Workers Party - PKK) உட்பட குர்திஷ் தேசியவாதிகள் அமெரிக்க தலைமையிலான சட்டவிரோத 2003 ஈராக் படையெடுப்பை வரவேற்றனர்.
குர்திஷ் தேசியவாதிகள் இப்போது சிரியா விவகாரத்தில் அங்காராவுக்கும் வாஷிங்டனுக்கும் இடையேயான கடுமையான கசப்பான தந்திரோபாய மோதல்களில் சிக்கி உள்ளனர். இஸ்லாமிய ஆயுதக் குழுக்களை வாஷிங்டன் அதன் அதிரடி துருப்புகளாக பயன்படுத்தி அவற்றை ஆயுதமயப்படுத்திய நேட்டோ போரை அங்காரா ஆதரித்தது. ஆனால், அல் கொய்தா தொடர்புபட்ட ஆயுதக் குழுக்களின் தோல்விக்குப் பின்னர், நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் PKK இன் சிரிய பிரிவான மக்கள் பாதுகாப்பு படை (People’s Protection Units - YPG) ஐ நோக்கி திரும்பிய போது அங்காரா நிலைப்பாட்டை மாற்றியது.
AKP அரசாங்கம் ஈராக் மற்றும் சிரியாவில் அதன் கரத்தைப் பலப்படுத்துவதற்காகவும் மற்றும் உள்நாட்டில் தொழிலாள வர்க்க எதிர்ப்பை நிலைகுலைய செய்வதற்கும் PKK ஐ பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில், சிலகாலம், அது PKK உடன் சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்தியது. ஆனால் சிரியாவில் நேட்டோவின் பிரதான பினாமி படையாக இருந்த சிரிய ஜனநாயக படைகளில் (SDF) YPG தலைமை படையாக சேவையாற்ற தொடங்கியதும், அங்காரா பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொண்டது. ரஷ்யாவுடன் துருக்கி அபிவிருத்தி செய்து வரும் உறவுகள் மீது வாஷிங்டனுக்கும் அங்காராவுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல்களுக்கு இடையே, இறுதியில் இது ஓர் இரத்தக்களரியான காட்சிக்கு இட்டுச் சென்றுள்ளது.
மத்திய கிழக்கில் போட்டியிடும் முதலாளித்துவ சக்திகளின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பின்னால் தொழிலாள வர்க்கம் இழுக்கப்படுவதற்கு அது தன்னை அனுமதித்தால், அதற்கு பயங்கர விலை செலுத்த வேண்டியிருக்கும். தொழிலாள வர்க்கத்தின் அணுகுமுறை முற்றிலும் வேறுவிதமான அச்சில் அபிவிருத்தி ஆக வேண்டும். அப்பிராந்தியம் எங்கிலும் அபிவிருத்தி அடைந்துவரும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்திற்கு மத்தியில், அனைத்து தேசியங்களையும் சேர்ந்த தொழிலாள வர்க்கத்தை ஏகாதிபத்திய போருக்கு எதிரான ஒரு பொதுவான புரட்சிகர போராட்டத்தில் அரசியல்ரீதியில் ஐக்கியப்படுத்துவதே தீர்க்கமான பணியாகும்.
தெற்காசிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தின் உள்ளடக்கத்தில், இலங்கை-தமிழீழம் ஐக்கிய சோசலிச அரசுகளுக்காகவும் மற்றும் நிரந்தர புரட்சிக்காகவும் இலங்கை ட்ரொட்ஸ்கிச இயக்கம் முன்னெடுத்த போராட்டம், சிரியாவின் வெடிப்பார்ந்த நெருக்கடிக்கான தீர்வுடன் ஆழமாக ஒத்துப் போகிறது. இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி, தமிழ் தேசியவாதிகளுக்கு ஆதரவளிக்காமல் அல்லது சமரசம் செய்து கொள்ளாமல், அதேவேளை சற்றும் விட்டுக்கொடுப்பின்றி, இலங்கை முதலாளித்துவ வர்க்கம் அதன் இராணுவத்தை பயன்படுத்தி தமிழ் மக்களை ஒடுக்கியதை எதிர்த்தது. சோசலிச சர்வதேசியவாதத்திற்கான கொள்கைரீதியான போராட்டத்தின் இந்த முன்வரலாறு, மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் உலகப் போர் அபாயத்திற்கு எதிராக ஒரு பாட்டாளி வர்க்க போராட்டத்தை முன்னெடுப்பதற்கான பாதையைச் சுட்டிக்காட்டுகிறது.
மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தில், துருக்கி மற்றும் அப்பிராந்தியம் எங்கிலுமான தொழிலாள வர்க்கத்தை வழி நடத்த, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர கட்சிகளாக ICFI இன் பிரிவுகளைக் கட்டமைப்பதே தீர்க்கமான அரசியல் பணியாக உள்ளது.