Print Version|Feedback
French ex-President Jacques Chirac dead at 86
பிரெஞ்சு முன்னாள்-ஜனாதிபதி ஜாக் சிராக் 86 வயதில் காலமானார்
By Alex Lantier
30 September 2019
பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலும் தொழிலாளர்கள் மத்தியில் நிலவும் சமூகக்கோப மனோநிலையும், ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மீது பரந்த வெறுப்பையும் கருத்தில் கொண்டு, வியாழக்கிழமை வலதுசாரி ஜனாதிபதி ஜாக் சிராக்கின் மரணத்தின் வேளையில், அலையென உத்தியோகபூர்வ புகழுரைகளை தூண்டிவிடுவதென்பது தவிர்க்கவியலாததாக இருந்தது.
ஜாக் சிராக்
கடந்த இரண்டாண்டுகள், அரசியல் ஸ்தாபகத்தின் தன்னம்பிக்கையை மிகவும் உலுக்கியுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலும் வேலைநிறுத்தங்களின் வெடிப்பும், பிரான்சில் "மஞ்சள் சீருடையாளர்கள்" மற்றும் சூடான், அல்ஜீரியா, ஹாங்காங்கில் தொழிலாளர்கள் இளைஞர்களின் பாரிய அரசியல் போராட்டங்களும் சர்வதேச வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சியைக் குறிக்கின்றன. சிராக்கின் மரணம், பொதுத்தொடர்பு செயலதிகாரிகளுக்கும், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் பத்திரிகை எழுத்தாளர்களுக்கும், ஒன்று போல, சிராக்கின் ஜனாதிபதி ஆட்சிக்காலத்தில் (1995-2007) அனைத்தும் பாதுகாப்பாகவும் மற்றும் மிகவும் கணிக்கத்தக்கவாறும் இருந்ததுபோல நினைவூட்டுகிறது.
பேச்சாளர்களின் நிகழ்ச்சிகளில் இருந்து அரசு அமைச்சர்கள் மற்றும் பிரதான நாளிதழ்களின் பக்கங்கள் வரையில், சிராக்கிற்கு ஆதரவான மேலோட்டமான முட்டாள்தன பிரச்சாரம் நடந்து வருகிறது. பிரான்சின் "உண்மையான கடைசி அரசு தலைவர்” (20 Minutes) என்றும், பிரெஞ்சு உணர்வின் "மொத்த மனித" வெளிப்பாடு (முன்னாள் மாவோவாத நாளிதழ் Libération) என்றும் புகழப்பட்டு, மக்ரோனின் வியாழக்கிழமை இரவு தொலைக்காட்சி உரையில் 2003 அமெரிக்க தலைமையிலான ஈராக் படையெடுப்பின் மிகப்பெரிய எதிர்ப்பாளராக சித்தரிக்கப்பட்டார். நவபாசிசவாத சஞ்சிகை Current Values அதன் முதல் பக்கத்தில் அவரது புகைப்படத்துடன் கூடிய ஓர் அனுதாபக் கட்டுரையை வெளியிட்டது. அவரை மக்களில் 70 சதவீதத்தினர் பிரான்சின் சிறந்த வாழ்நாள் ஜனாதிபதியாக கருதியதைக் கண்டறிந்த சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் இடம்பெற்ற அவற்றின் வாசகர்களை, அந்த பத்திரிகைகள், மிகவும் பணிவன்புடன் நினைவு கூர்ந்தன.
இந்த உத்தியோகபூர்வ முட்டாள்தனத்தின் எழுச்சியை எதிர்கொண்டு, சில அத்தியாவசிய உண்மைகளை முதலில் கூறியாக வேண்டும். சிராக்கிற்கு முன்னர் ஆட்சியிலிருந்த மக்கள் செல்வாக்கிழந்த வலேரி கிஸ்கார்ட் டெஸ்டாங்குக்கும் (Valéry Giscard d’Estaing) அவரது வாரிசுகளுக்கும் பதிலாக வாக்காளர்கள் அவரை தேர்ந்தெடுத்தார்கள் என்பது, சிராக்கிற்கு பெரிய பெருமை அல்ல: பழமைவாத நிக்கோலா சார்க்கோசி, சமூக ஜனநாயகவாதியான பிரான்சுவா ஹாலண்ட் மற்றும் மக்ரோன் - பிரான்சின் வரலாற்றில் மிகவும் வெறுக்கப்படும் மூன்று ஜனாதிபதிகள் ஆவர். சிராக்கின் உண்மையான முன்வரலாறுக்கும் அவர் வாழ்வைக் குறித்து ஊடகங்கள் சந்தைப்படுத்தி வரும் விபரங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இரண்டாவது புள்ளியாக இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.
பாரீஸ் நகரசபை தலைவராக இருந்தவரும் கற்பனையான வேலையை உருவாக்கி பணமோசடி வழக்கில் குற்றத்தண்டனை பெற்ற ஒரு மோசடியாளரும், இரண்டு-முறை பிரதம மந்திரியாக இருந்தவரும், மற்றும் பிரான்சின் முன்னாள் ஆபிரிக்க காலனித்துவ சாம்ராஜ்ஜியம் எங்கிலும் நவகாலனித்துவ சர்வாதிகாரிகளின் நண்பராகவும் விளங்கிய சிராக், ஒரு தலைசிறந்த "மனிதாபிமானியும்" கிடையாது அல்லது ஏகாதிபத்தியத்தின் ஓர் எதிர்ப்பாளரும் கிடையாது. அவர் பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் அரசு எந்திரத்தில், ஒரு முக்கிய நபர் மட்டுமே.
புலம்பெயர்ந்தோர்-விரோத பாரபட்சங்களுக்கு செய்த முறையீடுகளுடன் சேர்ந்து, சுதந்திர சந்தை மற்றும் சட்ட-ஒழுங்கு கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்கியதன் மூலமாக, அவர் "மஞ்சள் சீருடையாளர்களின்" இரத்தந்தோய்ந்த ஒடுக்குமுறையையும், நாஜி ஒத்துழைப்புவாத சர்வாதிகாரி பிலிப் பெத்தனை ஒரு "மாவீரர்" என்று மக்ரோன் புகழ்ந்ததில் எடுத்துக்காட்டப்பட்டவாறு ஐரோப்பிய பாசிசவாதத்தின் நீண்டகால புத்துயிரூட்டலையும் அவர் முன்பே கவனத்தில் எடுத்திருந்தார்.
பிரெஞ்சு தேசத்தின் பெருமைமிகு தேசத் தந்தையாக சிராக்கின் தற்போதைய ஊடக பிம்பம், பல தசாப்தங்களாக, முதலாளித்துவத்தில் “இடது" கடந்து வந்துள்ள செல்வச்செழிப்பான நடுத்தர வர்க்க கூறுபாடுகளின் ஓர் புனைகதையாகும். 2002 ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில் மக்கள் செல்வாக்கிழந்த சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் லியோனல் ஜோஸ்பன் வெளியேற்றப்பட்டதும் அதன்பின்னர் இரண்டாம் சுற்றில் சிராக்கிற்கும் நவபாசிசவாத ஜோன்-மரி லு பென்னுக்கும் இடையிலான போட்டிக்கும் இட்டுச் சென்ற வேளையில், சோசலிஸ்ட் கட்சியும் தொழிற்சங்கங்களும் மற்றும் பப்லோவாத புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகமும் (LCR) —இன்று இது புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA)— சிராக்கிற்குப் பின்னால் அணிவகுத்ததனர். அவ்விரு பிற்போக்குத்தனமான வேட்பாளர்களுக்கும் இடையே ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கு எதிராக பாரிய போராட்டங்கள் வெடித்தெழுந்ததும், ஜனநாயகத்தை பாதுகாக்க, பிரெஞ்சு தேசம் சிராக் என்ற ஒரு மனிதருக்குப் பின்னால் அணிதிரள வேண்டியிருப்பதாக அவை அனைத்தும் வலியுறுத்தின.
அத்தேர்தலை செயலூக்கத்துடன் புறக்கணிக்குமாறு தொழிலாள வர்க்கத்தில் பிரச்சாரம் செய்வதற்கும் மற்றும் விரைவில் நிறுவப்பட இருந்த சிராக் நிர்வாகத்தின் பிற்போக்குத்தனமான திட்டநிரலுக்கு எதிராக ஓர் அரசியல் இயக்கத்தைத் தொடங்குவதற்கும் அழைப்பு விடுத்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) அழைப்பை அவை நிராகரித்தன.
தாக்கும் துப்பாக்கிகளுடன் கலகம் ஒடுக்கும் ஆயுதமேந்திய பொலிஸ்காரர்கள் புடைசூழ, அன்வலிட் இல் நடந்த சிராக்கின் இறுதி நிகழ்வில் தங்களின் மரியாதையை செலுத்த, பாரீஸ் வீதிகளில் பல ஆயிரக் கணக்கானவர்கள் திரளச் செய்திருந்த சிராக் குறித்த பழைய நினைவூட்டல்கள், பொதுமக்கள் அடுக்கின் மீது இந்த குட்டி-முதலாளித்துவ பிரச்சாரத்தின் தாக்கத்தைப் பிரதிபலிக்கிறது. நான்கு முறை ஜனாதிபதி பிரச்சாரங்களின் முதல் சுற்றில் 20 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற முடியாத சிராக்கை பிரான்சில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் அறவே வெறுத்தார்கள். ஆனால் வலதுசாரியோ அல்லது பெயரளவிலான "இடதோ", செல்வசெழிப்பான குட்டி-முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் மற்றும் வர்க்க அபிப்ராயங்களைச் சாதகமாக்கிக் கொள்வதில் அவர் வல்லவராக இருந்தார்.
இரண்டாம் உலகப் போர் காலத்திலும் மற்றும் நாஜி ஆக்கிரமிப்புடனான விச்சி ஆட்சியின் ஒத்துழைப்பு காலத்திலும் வாழ்ந்த கடைசி பிரெஞ்சு ஜனாதிபதியான சிராக், ஐயத்திற்கிடமின்றி அவரது வாரிசுகளை விட வித்தியாசமான பாணியை வளர்த்திருந்தார். இரண்டாம் உலக போருக்குப் பின்னர் ஐரோப்பிய பாசிசத்தின் வீழ்ச்சிக்கு மத்தியில் தொழிலாள வர்க்க கிளர்ச்சிகள் மற்றும் 1968 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தம் ஆகிய இரண்டுக்கும் மத்தியில் வாழ்ந்திருந்த அவர், அடிமட்டத்திலிருந்து வரக்கூடிய புரட்சிகர அச்சுறுத்தலைக் குறித்து ஆழமாக புரிந்து வைத்திருந்தார். வேலைநிறுத்தங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் தூண்டப்படும்போது சிக்கன நடவடிக்கைகளை ஓரளவு திரும்ப பெறுவதன் மூலம் பிரதிபலித்தார், இது இளைய மற்றும் அனுபவம் குறைந்த முதலாளித்துவ அரசியல் தலைமுறைகளை விரக்தியடையச் செய்தது.
சிராக் எப்போதுமே ஒரு வலதுசாரி, ஆனால் அவரது அரசியல், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அவர்களின் LCR/NPA போன்ற கட்சிகளில் இருந்த அரசியல் பாதுகாவலர்களின் பாராட்டை பெற்றது. பிரெஞ்சு ஜனாதிபதி என்ன சிக்கன நடவடிக்கைகளை அவர்களிடம் ஒப்படைத்தாலும், அதை ஆதரிப்பதற்காக, வங்கிகள் மற்றும் பிரதான அரசாங்க கட்சிகளிடம் இருந்து இந்த கைக்கூலிகளுக்கு கையூட்டு வழங்கப்படுகிறது. ஆனால், ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக 1995 இரயில்வே வேலைநிறுத்தம் மற்றும் இளைஞர்களின் தற்காலிக வேலை ஒப்பந்தங்களுக்கு எதிரான 2006 மாணவர் போராட்டங்களை முகங்கொடுத்த போது, சிராக்கைப் பதவியிலிருந்து இறங்க நிர்பந்தித்த தீவிர நடவடிக்கையாளர்களாக அவர்கள் தங்களைக் காட்டிக் கொள்வதற்கு, எரிச்சலூட்டும் விதத்தில் சிராக்கின் பல்வேறு தற்காலிக, கணக்கிட்ட பின்வாங்கல்களைப் பயன்படுத்தி கொண்டனர்.
அவசியமற்ற அரசியல் ஆத்திரமூட்டல்களை சிராக் எச்சரிக்கையோடு தவிர்த்துக் கொண்டார் என்பது அவரின் தனிப்பட்ட வாழ்க்கை வரையில் நீள்கிறது. சிராக், உயரடுக்கு தேசிய நிர்வாக பள்ளியில் (ENA) பட்டப்படிப்பு முடித்த மக்ரோனைப் போல, அவர் அரசியலுக்கு நுழைவதற்கு முன்னர் பல கோடி மில்லியனராக ஆவதற்காக வங்கித்துறையில் நுழைந்தவரல்ல. தனது பில்லியனிய நண்பர்களின் ஆடம்பர சொகுசு படகுகளில் பயணித்தவரும் இளம் இத்தாலிய மாடல் அழகியும் பாடகியுமான கார்லா புரூனியைத் திருமணம் செய்ய தன் மனைவி செசிலியாவை விவாகரத்து செய்தவரான சார்கோசியின் நயமற்ற மனக்கிளர்ச்சியை சிராக் வெறுத்தார் என்பதில் எந்த இரகசியமும் இல்லை. ஆனால் சிராக் மிகவும் பழைய பாணியில், தனது விடுமுறைகளை மிகவும் ஜாக்கிரதையாக கழிக்க விரும்பினார், இரக்கமற்ற முதலாளித்துவவாதியான அவரின் மனைவி பேர்னாட்டெட் சோடுரொன் டு கூர்செல் (Bernadette Chodron de Courcel) க்கு தொடர்ந்து நேர்மையற்றவராக இருந்தார்.
2002 தேர்தல்களுக்கு பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர், ஈராக்கிய போர் படையெடுப்பு மற்றும் லு பென் பரம்பரை பிரதிநிதித்துவம் செய்த நவபாசிசவாதத்திற்கு எதிராக, சிராக்கைப் பிரான்சின் புனித பாதுகாவலராக பெருமைப்படுத்திய சமூக ஜனநாயக, ஸ்ராலினிச மற்றும் பப்லோவாத சக்திகள் மீது இப்போது ஒருவர் ஓர் இருப்புநிலை கணக்கை வரைய முடியும். போர் மற்றும் பாசிசவாத எதேச்சதிகாரத்திற்கு எதிரான ஒரு தேசிய அடிப்படையிலான மூலோபாயமாக, அது முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது.
1995 இல் சிராக் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, ஆப்கானிஸ்தானில் (2001 ல் நேட்டோ படையெடுப்பில் சிராக் பங்கேற்றார்), சிரியா, லிபியா மற்றும் மாலி வரையில், பிரான்ஸ் ஏகாதிபத்திய போர்களின் ஒரு பரந்த வளையத்தில் துருப்புகளை நிலைநிறுத்தி உள்ளது. 2014 இல் மற்றும் 2019 ஐரோப்பிய தேர்தல்களிலும் மற்றும் 2017 ஜனாதிபதி தேர்தல்களிலும் நவபாசிசவாதிகளுக்கு பின்னால் தள்ளப்பட்டுள்ள சிராக்கின் பழமைவாத கோலிச கட்சி, உடைந்து விடும் அச்சுறுத்தல் நிலையில் உள்ளது.
வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச மீளெழுச்சியின் பின்னணியில், —முன்னுக்குப் பின் முரண்பாடாக தெரிந்தாலும்— சிராக்கின் வலதுசாரி வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முரண்பாடான மூலோபாய படிப்பினைகள் உள்ளன. தொழிலாளர் இயக்கத்திலும் மற்றும் "இடது" என்பதிலும் மேலாளுமை செய்த தேசியவாத சக்திகளின் திவால்நிலைமையின் மீதும், அவை தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிராகரித்ததன் மீதும் அவர் தனது பிற்போக்கு தொழில் வாழ்வைக் கட்டமைத்தார். தேசியவாதம் மற்றும் சொத்துடைமை வர்க்கங்களை சுவீகரித்துக் கொள்வதன் மீது இடது அரசியலை அடித்தளமாக வைப்பதற்கான முயற்சிகளின் திவாலான பிற்போக்குத்தனமான விளைவுகளுக்கு அதுவொரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
பனிப்போர் காலத்தில், ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை (PCF) வளர்ந்து வரும் ஒரு கட்சியாக ஏற்று, சிராக், சிறிதுகாலம் அதனை அரவணைத்து அவரின் தொழில் வாழ்வைத் தொடங்கினார். அவர் பாரீசில் குறைந்தபட்சம் ஒரு PCF கிளைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததாகவும் அணுஆயுத பரவலுக்கு எதிரான 1950 ஸ்டாக்ஹோம் முறையீட்டில் கையெழுத்திட்டிருந்ததாகவும் ஸ்ராலினிச நாளிதழ் L’Humanité கொக்கரித்தது. அவர் தனது தந்தையின் ஆட்சேபனையையும் மீறி சில காலம் ஒரு கப்பல் மாலுமியாக பணியாற்றினார், பின்னர் ஒரு வங்கி பணியாளராக இருந்து படிப்படியாக ஒரு வங்கியாளராக உயர்ந்து அமெரிக்காவுக்கும் பயணித்திருந்தார்.
புரட்சிக்கு முந்தைய ரஷ்யாவில் இருந்ததைப் போல அந்நேரம் பிரான்சிலும், பல முதலாளித்துவ வர்க்க இளைஞர்கள் சில காலம் "சிவப்பின்" மீது அனுதாபங்கள் கொண்டிருந்தனர், இதை ட்ரொட்ஸ்கி குழந்தைளுக்கு வரும் தட்டம்மையின் சிவப்பு கொப்புளங்களுடன் ஒப்பிட்டார். சிராக் ஒரு பாரிஸ் வாசி என்றாலும், அவரின் குடும்பம் கோர்ரேஸ் (Corrèze) பகுதியில் இருந்து வந்தது, அங்கே உலக போரின் போது எதிர்ப்பு போராளிகள் குழு மிகவும் செயலூக்கத்துடன் செயல்ப்பட்டது. பாசிசவாதிகளுக்கு எதிராக ஆயுதமேந்திய எதிர்ப்புக்குத் தலைமை கொடுப்பதில் சோவியத் ஒன்றியமும் தொழிலாள வர்க்கமும் வகித்த பாத்திரம் அந்நேரத்தில் உலகெங்கிலும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
அனைத்திற்கும் மேலாக, ஐரோப்பா எங்கிலுமான ஸ்ராலினிச கட்சிகளைப் போலவே, PCF உம், உலகப் போரின் முடிவில் தொழிலாள வர்க்கத்தினது கிளர்ச்சிகரமான இயக்கத்தின் குரல்வளையை நசுக்கியது; PCF அதை, தேசிய முன்னோக்கின் பின்னால் தளபதி சார்ல்ஸ் டு கோலின் முதலாளித்துவ ஆட்சிக்கு ஆதரவாக சிக்க வைத்தது, அவ்விதத்தில் 1940 இல் நாஜி ஜேர்மனியிடம் அதன் பேரழிவுகரமான தோல்விக்குப் பின்னர் உலக அரங்கில் உபாயங்கள் மேற்கொள்வதற்கான பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் தகைமையை மீட்டமைத்தது. இது முதலாளித்துவ அரசியலில் தங்கள் வாழ்வைத் தொடங்க காத்திருந்த பல இளைஞர்களிடையே அனுதாபங்களைப் பெற்றது. ஆகவே பாரீசில் அரசியல் மற்றும் அரசு நிர்வாகம் படித்து வந்த ஜாக் சிராக்கும் கூட, சில காலம் ஸ்ராலினிச “சிவப்பு" தட்டம்மை கொப்புளங்களின் நோய்க்கு மிதமாக ஆளானார்.
அதன் அடையாளங்கள் மிக விரைவிலேயே காணாமல் போயின. மிகவும் நம்பகமான வாழ்க்கை பாதை எங்கே கிடைக்கும் என்பதை எப்போதும் ஆர்வமுடன் தெரிந்து வைத்திருந்த சிராக், 1956 இல் அல்ஜீரியாவில் பிரெஞ்சு காலனித்துவ ஆட்சி தொடர்வதை ஆதரிக்க அல்ஜீரிய போருக்கு தானே முன்வந்து சேவையாற்றினார். அந்த ஆண்டுதான் அவர் நிதியியல் பிரபுத்துவத்திற்குள் திருமணம் செய்தார். 17 ஆம் நூற்றாண்டில் இருந்து அதன் வேர்களைக் கொண்ட மிகப் பெரிய செல்வந்த முதலாளித்துவ குடும்பமான பேர்னாட்டெட் இன் குடும்பம், புரட்சிகர பிரெஞ்சு முதலாளித்துவ குடியரசுக்கு எதிராக நிலப்பிரபுத்துவ எதேச்சதிகார இராணுவங்களுடன் சேர்ந்து பிரெஞ்சு புரட்சியின் போது போரிட்டிருந்தது, அது சிராக்கின் தாழ்ந்த பின்புலத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் சிராக் விடாப்பிடியாக நின்றார், அவரின் ENA பட்டப்படிப்பு மற்றும் அவர் மனைவி உடனான தொடர்புகளுக்குத் தான் நன்றி கூற வேண்டும், அவர் விரைவிலேயே கோலிச ஆட்சியின் உயர்மட்டங்களில் பணியாற்றியவாறு அதேவேளையில் கோர்ரேஸ் இல் தேர்தல் அரசியலையும் பின்தொடர்ந்து கொண்டிருந்தார்.
மே-ஜூன் 1968 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தம் சிராக்கின் அடுத்த மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. டு கோல் ஆட்சிக்கு தொழிலாள வர்க்கத்தில் வெடிப்பார்ந்த எதிர்ப்பு வெடித்தது, இதுதான் இன்று வரையிலான ஐரோப்பிய வரலாற்றில் மிகப்பெரிய வேலைநிறுத்தமாகும். 10 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினார்கள், பொருளாதாரமே முடங்கிப் போனது, பிரான்ஸ் எங்கிலுமான ஆலைகளில் செங்கொடிகள் பறந்தன.
டு கோல் அரசாங்கத்தின் அதிகாரம் வீழ்ந்தது, புரட்சியைத் தடுக்க மீண்டும் அது PCF ஐ சார்ந்து நின்றது. அவரின் அரசியல் பரிவாரங்களுடன் இணைந்து செயல்பட்டு, பிரதம மந்திரி ஜோர்ஜ் பொம்பிடு (Georges Pompidou) உம், சமூக விவகாரங்களுக்கான துணை அமைச்சரான ஜாக் சிராக்கும், PCF உடன் இணைப்பு கொண்ட தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) சங்கத்துடன் கிரெனெல் (Grenelle) ஒப்பந்தங்களின் கீழ் கூலி உயர்வுகளைப் பேரம்பேச உதவினர். PCF பின்னர், இந்த ஒப்பந்தங்களை கையிலெடுத்துக்கொண்டு, தொழிலாளர்களின் எதிர்ப்பைக் கடந்து வர வாரக்கணக்கில் செயல்பட்டு, தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுத்து, தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப தள்ளுவதை நியாயப்படுத்த அவற்றைப் பயன்படுத்தியது.
பிரெஞ்சு முதலாளித்துவ அரசின் அஸ்திவாரத்தையே அசைத்து விட்டிருந்த 1968 அதிர்ச்சிகளுக்குப் பிந்தைய காலகட்டம் சிராக்கின் வாழ்வைச் செதுக்கியது, அவர் தன்னை நவீனமானவர் மற்றும் மக்கள் விருப்பத்திற்குரியவராக காட்டுவதற்கு ஒப்பீட்டளவில் அவரின் இளமை வயதைச் சாதகமாக்க முயன்றதுடன், கிராமப்புற கோர்ரேஸ் இன் உப்பைத் தின்றவராகவும் காட்டிக் கொள்ள முயன்றார். 1974 இல் இருந்து 1976 வரையில் வலேரி கிஸ்கார்ட் டெஸ்டாங் இன் கீழ் பிரதம மந்திரியாக முதல் உயர்பதவியை ஏற்க அவரை இட்டுச் சென்ற இந்த பிம்பம், ஓர் செயற்கையானதாக இருந்தது.
பிரதம மந்திரியாக, அவர் வணிகங்களுக்காக மானியங்கள் கோரினார், இது தொழிலாளர்களிடம் இருந்து செல்வவளத்தைப் பறித்து கைமாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டதாக இருந்தது. திரைக்குப் பின்னால், அவர் வலதிலிருந்த அவரது போட்டியாளர்களுக்கு எதிராக கொடிய உட்கட்சி சூழ்ச்சிகள் மற்றும் நிதியியல் சூழ்ச்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவற்றில் ஒன்று, பின்னர் அவரைக் குறித்து சார்க்கோசி வெளிப்படையாக கூறுகையில், “சிராக் மிகவும் நல்லவர், மிகவும் மிடுக்கானவர் அல்ல என்று மக்கள் நம்புகின்றனர், அவர் மிகவும் மென்மையானவர் இல்லை. உண்மையில் இது முற்றிலும் தலைகீழானது,” என்றார்.
சிராக் தொழில்வாழ்வின் பிந்தைய கட்டங்கள், முக்கியமாக, ஸ்ராலினிச PCF இன் எதிர்புரட்சிகர பாத்திரத்தை திட்டவட்டமாக அம்பலப்படுத்தி இருந்த 1968 பொது வேலைநிறுத்தத்திற்குப் பிந்தைய பிரெஞ்சு இடது அரசியலின் மறுஒழுங்கமைப்பைச் சார்ந்திருந்தது. ஆனால் மேலோங்கிய சக்தியாக எது மேலெழுந்ததோ, அது சர்வதேச தொழிலாள வர்க்க நிலைப்பாட்டிலிருந்து ஸ்ராலினிசத்தின் மீது ஒரு மார்க்சிச விமர்சனத்தை வைக்கும் ட்ரொட்ஸ்கிச கட்சி அல்ல, மாறாக 1971 இல் புதிதாக நிறுவப்பட்ட ஒரு முதலாளித்துவ கட்சியாகும்: அதுதான் முன்னாள் விச்சி ஒத்துழைப்பாளர் பிரான்சுவா மித்திரோன் தலைமையிலான சோசலிஸ்ட் கட்சி (PS).
இது ட்ரொட்ஸ்கிசம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் முறித்து கொண்டிருந்த குட்டி-முதலாளித்துவ கட்சிகள் வகித்த பிற்போக்குத்தன பாத்திரத்தினால் ஆகும். பப்லோவாத LCR உம் மற்றும் 1971 இல் ICFI உடன் முறித்துக் கொண்ட சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பும் (Organisation communiste internationaliste – OCI), தொழிலாளர்களுக்கு தேசியப் பாதையை வழங்குவதாக கூறி PS-PCF இன் "இடது ஐக்கியம்" (Union of the Left) என்பதை ஆமோதித்தன. 1981 இல் மித்திரோன் ஜனாதிபதி ஆன பின்னர், இந்த அமைப்புகள் அனைத்தும் அவரின் சமூக சிக்கன நடவடிக்கைகள் மற்றும் இராணுவவாத கொள்கைகளுக்கு தங்களை தகவமைத்துக் கொண்டன.
1986 இல் மித்திரோன் மீது கண்கூடாக எந்தவித இடதுசாரி விமர்சனமும் இல்லாத நிலையில், சோசலிஸ்ட் கட்சி உடனான மக்களின் கோபத்தை சிராக்கால் சாதகமாக்கி கொள்ள முடிந்ததோடு, அவர் பிரதம மந்திரியாக மீண்டும் பதவிக்கு வந்தார் — தனியார்மயமாக்கல் மற்றும் தொழிலாள வர்க்கம் மீதான தாக்குதல்களைப் பின்தொடர்ந்தார். இருப்பினும் 1988 தேர்தல்களில் ஜனாதிபதி ஆவதற்கான சிராக்கின் அபிலாஷைகளை மித்திரோன் செயல்குலைத்தார். தேர்தல் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை திணித்ததன் மூலமாக, மித்திரோன் தேசிய சட்டமன்றத்திற்குள் நவபாசிசவாத தேசிய முன்னணி (FN) நுழைவதற்கு உதவியதுடன், வலதுசாரி வாக்குகளைப் பிரிக்க FN இன் செல்வாக்கைப் பயன்படுத்தினார். இதனால் 1988 இல் சோசலிஸ்ட் கட்சி கடுமையான போராட்டத்துடன் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.
சமூக ஜனநாயகவாதிகளின் பிற்போக்கு கொள்கைகளாலும், 1989-1991 இல் சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பா எங்கிலுமான ஸ்ராலினிச கட்சிகள் முதலாளித்துவ மீட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்ததைக் குறித்த இந்த காலகட்டத்தில், சிராக் செயலாற்றி கொண்டிருந்த கட்டமைப்பு பொறிந்து போயிருந்ததுடன், முதலாளித்துவ அரசியல் வலதை நோக்கி வெகுவாக திரும்பியிருந்தது.
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியும் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களிடையே அவர்களுக்கு எஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச அடித்தளத்தையும் விரைவாக இழந்தன. ஜூலை 16-17, 1942 இல் 13,000 யூதர்களைப் பிரான்சில் இருந்து ஜேர்மனி மற்றும் போலாந்து நாஜி கொலை முகாம்களுக்கு நாடுகடத்த Vél d’Hiv சுற்றிவளைப்புக்கு பிரெஞ்சு பொலிஸிற்கு உத்தரவிட்ட விச்சி பொலிஸ் தலைவர் றெனே புஸ்க்கே உடன் மித்திரோன் நட்புறவைப் பேணி வந்தார் என்பதை அறிந்து பெருந்திரளான மக்கள் அதிர்ச்சி அடைந்து போயினர். 1993 இல் ஒரு பைத்தியக்காரரால் சுடப்பட்ட புஸ்க்கே ஒருபோதும் வழக்கு விசாரணைக்கு உள்ளாக்கப்படவில்லை. சோசலிஸ்ட் கட்சியில் இருந்த முன்னாள் OCI மற்றும் முன்னாள் பப்லோவாத உறுப்பினர்கள் பலரும் மித்திரோன் உடனான அவர்களின் கூட்டுறவை நியாயப்படுத்துவதற்காக அந்த வெளியீடுகளின் முக்கியத்துவத்தை நிராகரித்து அறிக்கைகள் வெளியிட்டனர்.
சிராக் FN இன் ஜனநாயக எதிர்ப்பாளராக ஒரு பிம்பத்தை வளர்த்துக் கொண்டாலும், அவர் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு மற்றும் முஸ்லீம்-விரோத வெறுப்பு பேச்சுக்கு பாசிச முறையீடு செய்த இழிவானவர். 1991 இல் ஆர்லியோனில் நன்கு அறியப்பட்ட ஒரு உரையில், பிரெஞ்சு தொழிலாளர்கள் வெளிநாட்டினரின் அருவருக்கத்தக்க நாற்றத்தை வெறுக்கிறார்கள் என்று சிராக் கூறினார்: 15,000 பிராங்க் சம்பாதிக்கும் ஒரு தொழிலாளி, "ஒரு தந்தை, மூன்று அல்லது நான்கு மனைவிகள் மற்றும் இருபது குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தைப் பார்த்தால்," இயற்கையாகவே வேலை செய்யாமல், சமூக நலன்களில் 50,000 பிராங்குகளை சம்பாதிப்பவர் யார்! [உரத்த கைதட்டல்] நீங்கள் அந்த இரைச்சல் மற்றும் அருவருக்கத்தக்க நாற்றத்தையும் சேர்த்தால் [சிரிப்பு ஊட்டப்பட்டது], தரையிறங்கிய பிரெஞ்சு தொழிலாளி, அவருக்கு பைத்தியம் பிடிக்கும். ... நீங்கள் அங்கு இருந்திருந்தால், அதே எதிர்வினைதான் உங்களுக்கும் இருக்கும். இதைச் சொல்வது இனவெறி அல்ல".
சோசலிஸ்ட் கட்சி மக்கள் செல்வாக்கு இழந்ததில் இருந்து இலாபமடைந்து, சிராக்கால் மே 7, 1995 தேர்தலை ஜெயிக்க முடிந்தது. வெறும் இரண்டு மாதங்களுக்குப் பின்னர், அவர் முதல்முறையாக, Vél d’Hiv சுற்றிவளைப்பின் 53 ஆம் நினைவாண்டில், அந்த சுற்றிவளைப்பில் பிரான்சின் பொறுப்பை முதல்முறையாக அதிகாரபூர்வமாக ஒப்புக் கொண்டார். இதில் ஓர் அரை நூற்றாண்டு முடிந்திருந்தது, இந்த காலகட்டத்தில் கோலிஸம், சமூக ஜனநாயகம் மற்றும் ஸ்ராலினிசம் என எல்லா வண்ணங்களின் அரசு அதிகாரிகளும் இந்த வரலாற்று குற்றம் குறித்து மவுனமாக இருந்தனர் அல்லது பிரெஞ்சு கடமைப்பாட்டை மறுத்து பொய்யுரைத்தனர். ஆனால் அரசியல் ஸ்தாபகமோ இந்த புறநிலைரீதியான பேரதிர்ச்சியூட்டும் ஒப்புதலை சாத்தியமானளவுக்கு ஒரு பிற்போக்கு பொருள்விளக்கமாக காட்ட முயன்றன. அது தொடர்ந்து வலதுக்கு நகரத் தொடங்கிய நிலையில், பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவம் அதன் பாசிசவாத குற்றங்களின் வரலாற்றைக் கையாண்டதற்கான நிரூபணமாக அதை கூறி, அந்த குற்றம் மீதான சிராக்கின் வாக்குமூலத்தை பெருமைபீற்றியது.
உண்மையில், அடுத்து வரவிருந்த ஒரு கால் நூற்றாண்டு, 20 ஆம் நூற்றாண்டின் ஒரு விதிவிலக்கான அம்சமாக இருப்பதற்கு பதிலாக, போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பாசிசவாத ஆட்சிகளை நோக்கிய முதலாளித்துவத்தின் முனைவு முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த போக்குடன் ஆழமாக வேரூன்றி இருப்பதை எடுத்துக்காட்டியது.
வலதுசாரி பிரதம மந்திரி அலன் ஜூப்பே முன்னெடுத்த ஓய்வூதிய வெட்டுக்கள் 1995 இல் ஒரு பாரிய இரயில்வே துறை வேலைநிறுத்தத்தைத் தூண்டியதும், சிராக் விரைவிலேயே மீண்டும் சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் குட்டி-முதலாளித்துவச் சுற்றுவட்டத்தினது சேவைகளைச் சார்ந்திருக்க தள்ளப்பட்டார். அரசாங்கத்தைப் பதவியிலிருந்து இறக்குவதற்கான ஒரு போராட்டமின்றி, அந்த வேலைநிறுத்தத்தை கலைத்து விடுவதற்காக, தொழிற்சங்கங்கள் மற்றும் பப்லோவாத கட்சிகளைச் சார்ந்திருந்த சிராக், எவ்வாறிருந்த போதினும், 1997 இல் புதிய தேர்தர்களுக்கு அழைப்பு விடுப்பதென வெளிப்படையாகவே அரசியல்ரீதியில் தற்கொலைக்கு நிகராக முடிவெடுத்தார். இது, முன்னாள் OCI உறுப்பினரான பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பன் தலைமையில் மீண்டும் சோசலிஸ்ட் கட்சி தலைமையிலான அரசாங்கத்தை —சோசலிஸ்ட் கட்சி, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பசுமை கட்சிகளின் பன்முக இடது கூட்டணியை— கொண்டு வந்தது. ஜோஸ்பன் அரசாங்கத்துடனான தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வந்த அதிருப்தியே 2002 தேர்தல்களின் முதல் சுற்றிலேயே அவர் வெளியேறுவதற்கும் மற்றும் சிராக்-லு பென் போட்டி மீதான நெருக்கடிக்கும் இட்டுச் சென்றது.
சிராக்கின் இரண்டாம் பதவிக்காலத்தில் அவரின் நடவடிக்கைகள், சிராக்கிற்கான வாக்குகள் நவபாசிசவாதம் மற்றும் போர் அதிகரிப்பதைத் தடுப்பதற்குச் சிறந்த வழி என்று வாதிட்ட குட்டி-முதலாளித்துவ போலி-இடது கட்சிகளுக்கு ICFI இன் எதிர்ப்பை ஊர்ஜிதப்படுத்தியது. பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய பொருளாதாரத்திற்கு அதிமுக்கியமாக இருந்த மத்திய கிழக்கு மற்றும் அதன் எண்ணெய் வினியோகங்கள் மீதான இராணுவ பிடியைப் பாதுகாக்கும் நோக்கில் ஈராக் மீதான அமெரிக்காவின் ஒருதலைபட்சமான போரை எதிர்கொண்ட நிலையில், சிராக் அனுமானித்தக்கவாறு சேர விருப்பமின்றி இருந்தார்.
இது, பிரான்சில் சிராக்-லு பென்னின் இரண்டாம் கட்ட தேர்தலுக்கு எதிரான பாரிய போராட்டங்கள் மற்றும் ஈராக் படையெடுப்புக்கு எதிரான பாரிய சர்வதேச போர் எதிர்ப்பு போராட்டங்களுடன், வர்க்க உறவுகளின் வெடிப்பார்ந்த நிலைமை மீதான பதட்டத்துடன் சேர்ந்திருந்தன. உண்மையில் 2003 இல் அதிக ஓய்வூதிய வெட்டுக்களுக்கான சிராக்கின் அழைப்பு, ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தைத் தூண்டியது, மற்றும் 2005 இல் பாரீசில் பொலிஸ் விரட்டியதில் இரண்டு புறநகர் இளைஞர்கள் மரணமடைந்ததால் பிரான்சின் பெருநகரங்களில் பாரிய கலங்களுக்கு இட்டுச் சென்றது, இவற்றை பொலிஸ் ஒடுக்குமுறை நடவடிக்கையால் அடக்கியது.
பாசிசவாத மற்றும் இராணுவவாத கொள்கைகளை நோக்கி தீவிரமாக திரும்பியதே, அவரின் இரண்டாவது பதவிக்காலத்தில் எழுந்த வர்க்கப் போராட்டத்திற்கு சிராக்கின் விடையிறுப்பாக இருந்தது. ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை முகங்கொடுத்து, அவர் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்த முஸ்லீம்-விரோத இனவாதத்திற்கு முறையீடு செய்ததன் மூலமாக அதை நெறிப்பிறழச் செய்ய முயன்றார்.
அடிப்படை ஜனநாயக உரிமைகளை இடைநிறுத்திய மூன்று மாதகால அவசரகால நிலையை திணிக்க இருந்ததே, 2005 கலகங்களுக்கான அவரின் விடையிறுப்பாக இருந்தது. காபொன் நாட்டின் ஒபர் பொங்கோ மற்றும் காங்கோவின் Denis Sassou Nguesso போன்ற ஆபிரிக்க சர்வாதிகாரிகள் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு மலிவான எண்ணெய் மற்றும் இயற்கை வளங்களை வழங்கி வந்த அதேவேளையில் முன்னணி அரசியல்வாதிகளுக்குப் பணமும் செலுத்தி வந்த நிலையில், அந்த ஆபிரிக்க சர்வாதிகாரிகளின் ஒரு நீண்டகால நண்பரான சிராக், முன்னாள் பிரெஞ்சு காலனித்துவ ஆபிரிக்காவில் பிரெஞ்சு இராணுவ தலையீடுகளைத் தீவிரப்படுத்தினார். ஐவரி கோஸ்ட் மீதான அவரின் 2004 குண்டுவீச்சு, 2011 இல் Alassane Ouattara ஐ ஐவரி கோஸ்ட் ஜனாதிபதியாக நியமிக்க அங்கே பிரெஞ்சு படையெடுப்புக்கு இட்டுச் சென்ற மோதல்களை இயக்கத்திற்குக் கொண்டு வர உதவியது. பிரான்சில் அரசியல் பிரச்சாரங்களுக்கு, குறிப்பாக ஆபிரிக்க ஆதாரவளங்களிடம் இருந்து, சட்டவிரோத நிதி வழங்குவதில் அவர் பரந்தளவில் தங்கியிருந்ததால், 2011 இல் அது பிரெஞ்சு வரலாற்றிலேயே அவர் கையாடலுக்காக தண்டனை விதிக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாக ஆவதற்கு இட்டுச் சென்றது.
இராணுவவாதத்திற்கு அவர் ஏற்றிருந்த பொறுப்புறுதியைத் துல்லியமாக தெளிவுபடுத்தும் வகையில், ஜனாதிபதியாக அவர் பதவியிலிருந்து கீழிறங்குவதற்கு முன்னர், 2006 இல், பிரான்சுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதாக பாரீஸ் குற்றஞ்சாட்டும் நாடுகளுக்கு எதிராக பிரான்ஸ் அணுஆயுதங்களை முதலில் பிரயோகிப்பதை அனுமதிக்கும் ஒரு கோட்பாட்டை வரைந்தார்.
அடுத்து வரவிருந்த 12 ஆண்டுகளில் ஐரோப்பிய ஏகாதிபத்தியம் அப்பட்டமாக இராணுவ ஆக்ரோஷம் மற்றும் நவபாசிசவாதத்தை நோக்கி திரும்புவதற்கு சிராக் ஒரு எதிர்ப்பாளராக இருக்கவில்லை மாறாக ஒரு முன்னோடியாக இருந்தார் என்பது இன்று தெளிவாகிறது. சார்லி ஹெப்டோ தாக்குதல்களுக்குப் பின்னர் சோசலிஸ்ட் கட்சியால் முன்னொருபோதும் இல்லாத வகையில் திணிக்கப்பட்ட மற்றும் மக்ரோனால் தக்க வைக்கப்பட்ட இரண்டாண்டு அவசரகால நிலை, மற்றும் அதை தொடர்ந்து "மஞ்சள் சீருடையாளர்கள்" மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான பொலிஸ் ஒடுக்குமுறை ஆகியவற்றை அவர் 2005 ஒடுக்குமுறையிலேயே நடத்துவதற்கு உத்தேசித்திருந்தார். ஆளும் உயரடுக்கு, தேசிய முன்னணியைப் பிரதான முதலாளித்துவ அரசியலுக்குள் ஒருங்கிணைப்பதற்கு வழிவகுத்த முஸ்லீம்-விரோத இனவாதத்தை அவர் வழமையாக்கியமை, பாசிசவாத அரசியலைச் சட்டபூர்வமாக்குவதற்கான ஐரோப்பிய முதலாளித்துவத்தின் பொதுவான உந்துதலின் பாகமாக இருந்தது.
பெத்தானை "மாவீரராக" மக்ரோன் புகழ்ந்தமை, ஜேர்மன் வலதுசாரி தீவிரவாத பேராசிரியர்கள் ஹிட்லரின் கொள்கைகளை "குரூரமானதில்லை" என்று புகழ்ந்துரைத்தமை, மற்றும் பிரான்சிஸ்கோ பிராங்கோவின் 1936 பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதி சட்டபூர்வமானது என்று ஸ்பானிஷ் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகிய அனைத்தும் சிராக் மரபியத்தின் மத்திய பாகமாக இருந்துள்ள இராணுவ-பொலிஸ் வன்முறை மற்றும் பாசிசவாத கொள்கை சட்டபூர்வமாக்கப்பட்டதன் விளைவாகும். ஏகாதிபத்திய போர் மற்றும் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில், ICFI முன்னெடுக்கும் ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தின் மீது தொழிலாள வர்க்கத்தைப் புரட்சிகரமாக அணித்திரட்டுவது மட்டுமே ஒரே முன்னோக்கிய வழி என்பதற்கு அவரின் முன்வரலாறு மற்றொரு ஆதாரமாக விளங்குகிறது.