Print Version|Feedback
The workers Leaque and the Founding of the Socialist Equality Party
வேர்க்கஸ் லீக்கும் சோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தாபிதமும்
பெப்ரவரி12 திகதி வேக்கர்ஸ் லீக் ஒரு புதிய அரசியல் கட்சியை ஸ்தாபிப்பதற்கான தனது தீர்மானத்தையும் மற்றும் 1996 தேர்தல் பிரச்சாரத்தை தொழிலாள வர்க்கத்தினுள் இந்த புதிய கட்சி ஏன் அவசியம் என்பதை விளங்கப்படுத்தவதற்கு பயன்படுத்தப்போவதாக அறிவித்தது. அதிலிருந்து இத்தீர்மானத்திற்கு அடித்தளமான காரணங்களை குறித்து விளக்கமளிக்குமாறு பலர் International Workers Bulletin இடம் கேட்டுள்ளனர்.
கீழ்வரும் அறிக்கையானது, தேசிய செயலாளர் டேவிட் நோர்த்தால் 25 ஜூன் 1995ல் வேர்க்கஸ் லீக்கின் அங்கத்தவர் குழு கூட்டத்தில் வழங்கப்பட்டதாகும். இது,1996ல் வேர்க்கஸ் லீக்கை சோசலிச சமத்துவக் கட்சியாக ஸ்தாபிப்பதற்கு அடித்தளமாக இருந்த தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான 30 ஆண்டுகால சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் அரசியல், தத்துவார்த்த அடித்தளங்களை விவரிக்கின்றது.
வரலாற்று கட்டமைப்பு
அனைத்துலகக் குழுவின் உள்ளான உடைவிலிருந்து பத்து வருடங்கள்
நாங்கள் இவ்வார முடிவில் சந்தித்துக் கொண்டுள்ளபோது, ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு நிறைவொன்றை அணுகிக் கொண்டுள்ளோம்: தொழிலாளர் புரட்சிக் கட்சி (Workers Revolutionary Party) இன் சந்தர்ப்பவாதிகளுடன், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உடைவினது பத்தாவது ஆண்டு நிறைவாகும். நாங்கள் ஹீலி, பண்டா, சுலோட்டருக்கு எதிரான போராட்டத்தின் பாதையில், நான்காம் அகிலத்தின் உள்ளான அனைத்து மகத்தான போராட்டங்களும், உலக அரசியல் நிலைமையிலான பிரமாண்டமான மாற்றங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை அடிக்கடி குறிப்பிட்டு வந்தோம். 1939-40 களிலான கன்னைப் போராட்டம், இரண்டாம் உலக போரின் பின்னணியில் அபிவிருத்தி அடைந்தது. 1953 இன் உடைவானது, ஸ்ராலினின் மரணத்தின் இரு மாதங்களின் பின்னரும், கிழக்கு ஜேர்மன் எழுச்சியின் பின்னரும், ஸ்ராலினிச ஆட்சிகளின் நீடித்த மரண ஓலத்தின் ஆரம்பத்துடனும் இடம்பெற்றது. கனனாலும், அனைத்துலகக் குழுவை ஸ்தாபித்த ஏனைய மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளாலும் பாதுகாக்கப்பட்ட தத்துவார்த்த கோட்பாடுகள், பின்னர் ஹங்கேரியப் புரட்சியின் எழுச்சியுடன் நடைமுறை ரீதியில் நிரூபிக்கப்படுவதற்கு மூன்று வருடங்கள் மாத்திரமே இருந்தது.
1982க்கும் 1986க்கும் இடையே அனைத்துலகக் குழுவுக்குள்ளான போராட்டம், கடந்த தசாப்தத்தின்போது பூகோளத்தின் அரசியல் வரைபடத்தையே மாற்றியமைத்த வரலாற்று சம்பவங்களை எதிர்பார்த்திருந்தது. வேர்க்கஸ் லீக்கினால் மேற்கொள்ளப்பட்ட விமர்சனங்கள், உடைவினை விரைவாகத் தொடர்ந்த சம்பவங்களினால் நேரடியாக நிரூபிக்கப்பட இருந்தது.
சாராம்சத்தில், தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான போராட்டத்தில், ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட மூன்று பிரச்சனைகள் எழுப்பப்பட்டன: 1) ஸ்ராலினிசத்தின் பங்கு; 2) சமூக ஜனநாயகத்தின் பங்கு; 3) முதலாளித்துவ தேசியவாதத்தின் பங்கு. உடைவுக்கு முந்திய சகாப்தத்தில் தொழிலாளர் புரட்சிக் கட்சி, தொழிலாள வர்க்கத்தின் உள்ளான இம்மூன்று பிரதான சக்திகளதும் அரசியல் பங்கு பற்றிய அதனது மதிப்பீட்டில் பப்லோவாதத்தினை நோக்கி திரும்பியிருந்தது. இவ் ஒவ்வொரு சக்திகளுக்கும் அல்லது குறைந்தது அவற்றின் பகுதிகளுக்கு, தொழிலாளர் புரட்சிக் கட்சி ஒரு முற்போக்குப் பாத்திரத்தின் சாயத்தினை வழங்கியது. இச் சக்திகளுக்கு தொழிலாளர் புரட்சிக் கட்சியின், அடிபணிவை நியாயப்படுத்தும் வகையில் லெனினது தத்துவார்த்த பாரம்பரியம் திரிக்கப்பட்டதுடன், தவறாக பொருள்விளக்கமளிக்கப்பட்டது. இப்போக்குகள், தொழிலாளர் இயக்கத்தினுள் ஏகாதிபத்தியத்தின் அரசியல் கருவிகளாக தொழிற்படுகின்றன என்ற விஞ்ஞானபூர்வமான ஆய்வின் அடிப்படையிலானதும், வரலாற்று அனுபவங்களால் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதுமான மதிப்பீட்டை செய்வது, அரசியல் ரீதியாக சட்டவிரோதமானது என தொழிலாளர் புரட்சிக் கட்சி பிரகடனப்படுத்தியது.
கடந்த தசாப்தத்தின் சம்பவங்கள், ஹீலியின் அரசியல் நிலைப்பாட்டின், அத்துடன் இதே விடயத்தில் முழுமையான டொச்சர்—பப்லோவாத முன்னோக்கான, அதிகாரத்துவத்தின் புரட்சிகர ஆற்றலின் திவால்தன்மையை, மறுக்கமுடியாத விதத்தில் நிரூபித்துள்ளது. ஸ்ராலினிசத்தின் மாற்றமுடியாத எதிர்ப்புரட்சிகர தன்மையை அனைத்துலகக் குழு வலியுறுத்தியமை, சோவியத் அரசினது கலைப்பில் அதனது மறுக்க முடியாத நிரூபணத்தை கண்டு கொண்டது. ஏனெனில் சோவியத் அரசினது உடைவு, ஒரு வெளி சக்தியினால் அது தூக்கி எறியப்பட்டதன் பெறுபேறு அன்றி, அதிகாரத்துவத்தின் நனவுபூர்வமான நடவடிக்கையின் விளைவாகும். 60 வருடங்களின் முன்னர், ட்ரொட்ஸ்கி, "சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ உறவுகள் மீள ஸ்தாபிக்கப்படுமானால், ஒரு முதலாளித்துவ புனருத்தாரனம், ஒரு புரட்சிகரக் கட்சியை விட குறைந்த எண்ணிக்கையிலான மக்களையே துடைத்துக்கட்ட வேண்டியிருக்கும்" என எச்சரித்தார். இவ் எதிர்வுகூறலின் நுணுக்கமான சரியான தன்மை, முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் அரசியல் குண இயல்பினால் (Physiognomy) நிரூபிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஆட்சியினதும் அதனது எல்லா தலைமை தாங்கும் கட்சிகளினதும் பிரதானமான நபர்கள், பெரும்பாலும் பழைய சோவியத் அதிகாரத்துவத்தினதும் அத்துடன் இணைந்த தலைமை வகித்தவர்கள் (Nomenclature) வகைப்படுத்தப்பட்ட இந்த அல்லது அந்த பகுதியினுள் வசதிமிக்க பதவிகளை பொறுப்பேற்றிருந்த தனிநபர்களாகும்.
சமூக ஜனநாயகத்தை பொறுத்தவரையிலும் கூட அது ஒரு பேரழிவுமிக்க அரசியல் தோல்வியை அடைந்துள்ளது. இந்நிகழ்ச்சிப்போக்கு ஸ்ராலினிசப் பேரழிவைப் போன்ற தோற்றத்தை சமூக ஜனநாயகம் எடுக்காததற்கு காரணம் அது ஏற்கனவே மதிப்பிழந்திருந்தாகும். இரண்டாம் அகிலத்தினது கட்சிகள், ஒரு முதலாளித்துவ எதிர்ப்பு மாற்றீட்டினை பிரதிநிதித்துவப்படுத்துவதாக உரிமை கோரிக்கொள்ளவில்லை. மேலும் சமூக ஜனநாயகத்தின் தோல்விகள், விதிவிலக்கான இறுக்கமும், நெருக்கடியும் மிக்க சூழ்நிலையினால் ஒருபோதும் ஆதிக்கம் செய்யப்படாதிருந்ததுடன் அதன் சீரழிவு, ஒரு மிகவும் நீண்டகாலமாக நிகழ்ந்தது. அதனது மரண ஓலத்தில் கூட சமூக ஜனநாயகம் ஒரு செயலற்ற, மற்றும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் அணுகுமுறையையே கொண்டிருந்தது.
உலகம் பூராவும், ஒரு மனிதநேயம் கொண்ட முதலாளித்துவம் என்ற சீர்திருத்தவாத கற்பனாவாதம் பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்குப்பின் நாடாக சீர்திருத்தவாதக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் ஒரு தோல்வியிலிருந்து இன்னொரு தோல்விக்கு சென்று கொண்டுள்ளதுடன், அங்கத்தவர் எண்ணிக்கையில் பாரிய இழப்பை முகங்கொடுக்கின்றன. ஆட்சியிலோ அல்லது ஆட்சிக்கு வெளியிலோ இக் கட்சிகளும் அமைப்புக்களும், தம்மை ஒரேயொரு பணிக்கே அர்ப்பணித்துக் கொண்டுள்ளன: அதாவது தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான மூலதனத்தின் தாக்குதலுக்கான அனைத்து தொழிலாள வர்க்க எதிர்ப்புகளையும் அடக்குவது. கனடாவின் NDP, பிரிட்டனின் தொழிற் கட்சி, பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி, இத்தாலியின் சோசலிஸ்ட் கட்சி, ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சி, சுவீடனின் சமூக ஜனநாயகக் கட்சி, ஜப்பானின் சோசலிஸ்ட் கட்சி, அவுஸ்திரேலியாவின் தொழிற் கட்சி (மிகவும் பிரபல்யமானவற்றை மட்டுமே பெயர் குறிப்பிடுகின்றோம்) போன்ற எல்லாவற்றினதும் சாதனைகள் மீண்டும் ஒருமுறை ட்ரொட்ஸ்கியினால் 60 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட வார்த்தைகளையே ஞாபகத்துக்கு கொண்டு வருகின்றன: “முதலாளித்துவத்தை ஸ்தம்பிதம் அடையச் செய்துள்ள தற்போதைய நெருக்கடி, சமூக ஜனநாயகத்தை நீடித்த பொருளாதார, அரசியல் போராட்டங்களின் பின்னர் ஈட்டிக்கொண்ட பெறுபேறுகளை தியாகம் செய்யும்படியும், இவ்விதமாக ஜேர்மன் தொழிலாளர்களை அவர்களது தந்தையர்களதும், பாட்டனாரதும், பூட்டனாரதும் வாழ்க்கை நிலைக்கு கீழ்தாழ்த்துவதற்கும் கட்டாயப்படுத்துகின்றது”.
இறுதியாக நாங்கள் முதலாளித்துவ தேசியவாதத்தின் பாத்திரத்துக்கு வருகின்றோம். 1960களின் ஆரம்பத்தில் அல்ஜீரியா பற்றியதும் கியூபா பற்றியதுமான அதனது எழுத்துக்களில் சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) முதலாளித்துவ தேசியவாதத்தின் பாத்திரம் பற்றிய, பாரம்பரிய மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச ஆய்வினை பாதுகாத்து அபிவிருத்தி செய்தது. அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த தத்துவங்களுக்கு எதிரான விதத்தில், தேசியவாத இயக்கங்கள் அவற்றின் தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பு பகட்டாரவாரங்களுக்கு மத்தியிலும், ஒடுக்கப்பட்ட மக்களின் அபிலாஷைகளின் நியாயமான மற்றும் சாத்தியமான பிரதிநிதிகள் அல்ல என்று சோசலிச தொழிலாளர் கழகம் வலியுறுத்தியது. எப்படியிருந்தபோதும் 1970 களில் சோசலிச தொழிலாளர் கழகம், அதனது கோட்பாடு சார்ந்த நிலைப்பாடுகளை கைவிட்டதுடன், ஆபிரிக்காவில் நுகோமோ, முகாபே, மண்டேலா தொடக்கம் மத்திய கிழக்கில் கடாபி, அரபாத் போன்ற குட்டிமுதலாளித்துவ தேசியவாதிகளின் ஆர்வம்மிக்க ஆதரவாளனாக மாறியது.
முதலாளித்துவ தேசியவாதத்தின் வரலாற்றுப் பாத்திரம் பற்றிய ஒரு மதிப்பீட்டுக்கு ஒருவர், தேசிய இயக்கங்களின் இன்றைய நடவடிக்கைகளை ஒரு தசாப்தத்திற்கு அண்மைவரையில், அவர்கள் பிரகடனப்படுத்தியவற்றுடன் ஒப்பீடு செய்வது மாத்திரமே போதுமானது. அரபாத், அவரது சொந்த வார்த்தைகளையே பாவிப்போமாயின், தனது அவமானம் மிக்க அரசியல் துகிலுரிதலை தொடர்கிறார். பாலஸ்தீனிய மக்களின் விடுதலையாளனாக வரவேண்டியவர், காசாவின் பிரதம பொலிஸ் அதிகாரியாக மாறியுள்ளார். நெல்சன் மண்டேலா, தென்னாபிரிக்காவில் முதலாளித்துவ நலன்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்றுக் கொண்டார். காட்டிக்கொடுப்பு என்ற பதம் உண்மையில் பொருத்தமற்றதாய் இருக்கின்றது என்பதைத் தவிர இத்தகைய காட்டிக்கொடுப்புகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இத்தலைவர்களின் இன்றைய கொள்கைகள், அவர்கள் தலைமை தாங்கிய தேசியவாத இயக்கங்களின் புறநிலையான தன்மையிலிருந்து சடத்துவரீதியாக அபிவிருத்தியடைவதுடன், அவர்களது கொள்கைகளின் பேரழிவு மிக்க தாக்கங்கள் முழுமையாக முன்கணிக்கக்கூடியதாக இருந்தன. ஒரு மிகவும் ஆழமான அர்த்தத்தில் ''காட்டிக்கொடுத்தல்'' என்ற பதம், மார்க்சிச வார்த்தை ஜாலங்களை பாவித்து, இம் முதலாளித்துவ தேசியவாதிகளுக்கு அரசியல் மூடுதிரையினை வழங்கிய சந்தர்ப்பவாதிகளுக்கே பொருந்துகின்றது.
போருக்கு பின்னைய காலகட்டத்தின் முடிவு
ஒரு நீடித்த வரலாற்றுக் காலகட்டத்துக்கு, ஸ்ராலினிஸ்டுக்கள், சமூக ஜனநாயகவாதிகள் அல்லது முதலாளித்துவ தேசியவாதிகள் என வரையறுக்கக்கூடியதாக இருந்த கட்சிகளும், அமைப்புக்களும் இலட்சோபலட்சம் மக்களின் தலைமையாக இருந்தன. ஒரு வடிவத்திலோ அல்லது இன்னொரு வடிவத்திலோ வேறுபடும் மட்டத்திலான எதிர்ப்புடனும் வாயடிப்புடனும் இவ் இயக்கங்கள் உழைக்கும் பரந்துபட்ட மக்களின் அடிப்படையான சமூக அதிருப்தியுடனும் உரிமைகளுடனும் இனங்காட்டிக் கொண்டதுடன், அவற்றினை எதிர்க்க அழைப்பும் விட்டன. அவைகள் முதலாளித்துவ அமைப்பு முறையினை தூக்கி எறிவதற்கோ, தீவிரமாக மாற்றி அமைப்பதற்கோ அல்லது மிகவும் குறைந்ததாக, படிப்படியான சீர்திருத்தத்திற்கோ போராடுவதாக பிரகடனப்படுத்திக் கொண்டன.
இத்தகைய பிரகடனங்கள் தற்போது மேற்கொள்ளப்படுவதேயில்லை. இச் சகல அமைப்புக்களும் முதலாளித்துவத்தின் வெற்றியை ஏற்றுக்கொள்வதுடன், நம்புகின்றன. யார் தாட்சரிடம் இறுதியாக வருகின்றாரோ அவர் கடுமையானவராகின்றார். இவ் அமைப்புக்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் உலகளாவிய தன்மையைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இந்நிகழ்ச்சிப் போக்கினை அவர்களின் தனிப்பட்ட பலவீனங்களின் அடிப்படையிலோ, இத்தலைவர்களின் தகுதியற்ற இயல்பின் அடிப்படையிலோ விளக்குவது சாத்தியமில்லை. நாம் இவ் அரசியல் உருமாற்றங்களுக்கான காரணங்களை, அரசியல் பொருளாதாரத்திலும், உலக முதலாளித்துவத்தின் உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கிலும் ஏற்பட்ட புறநிலையான மாற்றங்களில் கண்டுகொள்ளவேண்டும்.
நிச்சயமாய் ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், முதலாளித்துவ தேசியவாதம் ஆகிய ஒவ்வொன்றும் தங்களது சொந்த விசேடமான மூலத்தையும், வரலாற்றையும் கொண்டுள்ளன. மேலும் இவ் எந்தவொரு போக்கும் ஒரு ஒருங்கிணைந்த வடிவத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. ஆயினும்கூட, இவ் அமைப்புக்களின் செல்வாகிற்கு, 2ம் உலகப் போரின் பின் எழுந்த திட்டவட்டமான அரசியல் உறவுகள் காரணமாக இருந்ததுடன், இவை 1945 இன் பின்வந்த ஒரு முழு வரலாற்று சகாப்தத்தினதும் முதலாளித்துவ சமநிலையின் அவசியமான பாகமுமாகும்.
''போருக்கு பிந்திய'' என்ற பதம், இம் முழு வரலாற்று சகாப்தத்தையும் விபரித்ததுடன் வரையறுக்கவும் செய்தது. இது ஒரு வரலாற்று காலகட்டத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி என்பதைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இப்பதம் 2ம் உலகப் போரின் வெளிப்பாட்டின் ஒரு நேரடி விளைவான சர்வதேச அரசியலினதும், பொருளாதாரத்தினதும் பிரமாண்டமானதும் சிக்கலானதுமான கட்டுமானம் என்பவற்றின் வெளிப்படையான உண்மையை குறித்து நிற்கின்றது.
ஒரு அடிப்படையான அர்த்தத்தில் உலக முதலாளித்துவம் 1945ல் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. இப்புனர்நிர்மாணத்துக்கான நேரடிக்கருவி, ஐக்கிய அமெரிக்காவின் பிரமாண்டமான தொழிற்துறை, நிதித்துறை வளங்களாகும். இப் புனர்நிர்மாணத்துக்கான மறைமுகக்கருவி, சோவியத் ஒன்றிய சடத்துவ வளங்களையும், மதிப்பையும் பயன்படுத்தி சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணியாக்கி காட்டிக்கொடுத்த ஸ்ராலினிசமாகும்.
ஒரு பரந்த வரலாற்றுப் பதங்களில் 1945ல் தனியே 2ம் உலகப் போர் மட்டும் முடிவுக்கு வரவில்லை. தன்னளவில் 2ம் உலகப் போர், உலக வரலாற்றிலேயே பிரமாண்டமான பொருளாதார, சமூக, அரசியல் உடைவின் உச்சப் புள்ளியாகும். ஆகஸ்ட் 1914ல் 1ம் உலக யுத்தம் வெடித்ததிலிருந்து முதலாளித்துவ உலகம், போர்களினாலும், புரட்சிகளினாலும் அத்தோடு முதலாளித்துவ உற்பத்தியின் முழு பொறிமுறைகளினதும் ஒரு உடைவினாலும் கொந்தளித்துக் கொண்டிருந்தது. 31 வருட கொந்தளிப்பின் பின்னர் இச் சமநிலையின் மீட்சி, இரண்டு உலகப் போர்களின் அகழிகளிலும், குண்டுவீச்சு மழைகளுக்கு உட்பட்ட நகரங்களிலும் அத்துடன் நிட்சயமாய் நாஜி மரண முகாம்களின் விசவாயு அறைகளினுள்ளும் 100 மில்லியனுக்கு மேற்பட்ட உயிர்கள் பலியிடப்பட்டதற்கு பின்பு மாத்திரமே இடம்பெற்றது.
2ம் உலகப்போர் ஒரு முடிவுக்கு வந்தபோது, உலகில் பொருளாதார ரீதியாக சக்திவாய்ந்ததாக இருந்த ஒரேயொரு முதலாளித்துவ வல்லரசு, ஐக்கிய அமெரிக்கா மாத்திரமே. இங்கிலாந்து உட்பட பழைய ஐரோப்பிய முதலாளித்துவ வல்லரசுகள் யாவும் முழுமையாக களைத்துவிட்டிருந்தன. போரின் இறுதி மாதங்களிலும் அதற்குப் பின்னும் உருவாகிய உலகம், அதிகளவு அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் சிருஷ்டிக்கப்பட்ட அரசியல் நிதி நிறுவனங்களது விளைவாகும். இந் நிறுவனங்கள் அடித்தளம் இடுவதற்கான சந்தர்ப்பமோ, ஒரு புதிய சமநிலை ஸ்தாபிக்கப்படுவதோ, சோவியத் ஒன்றியத்தினாலும், ஸ்ராலினிச கட்சிகளினாலும் வழங்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த உதவியின்றி ஒருபோதும் சாத்தியமாகியிராது என்பதை உடனடியாக இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக ஜேர்மனியில் மூன்றாம் குடியரசின் வீழ்ச்சி, தொழிற்சாலைகளின் கட்டுப்பாட்டை கைப்பற்றி தொழிலாளர் குழுக்களின் ஸ்தாபிதத்துக்கு இட்டுச் சென்றது. சில இடங்களில் இக்குழுக்கள், தொழிற்சாலைகளை அழிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த SS (பாசிச அதிரடி) பிரிவுகளை விரட்டி அடித்தன. குறூப் (Krupp) தொழிற்சாலை தொழிலாளர்களினால் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது போன்ற இத்தகைய குழுக்கள், தொழிற்சாலைகள் நஷ்டஈடுகள் எதுவுமின்றி சுவீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அடிக்கடி முன்வைத்தன. அமெரிக்க இராணுவ பொறுப்பாளர்கள் இக்குழுக்களுக்கு வெறுப்பாக இருந்தனர். ஆனால் அரசியல் போர்க்குணத்தை சோர்வடையச் செய்வது KPD (ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி) இன் சேவையை வேண்டி நின்றது. KPD இனது வேலைத்திட்டம், பொருளாதார மறுசீரமைப்பானது, ''தனிச்சொத்து அடிப்படையிலான சுதந்திர வர்த்தகத்திலும் தனியார் நிர்வாக முன்னெடுப்புக்களினதும் பூரணமான நிபந்தனையற்ற அபிவிருத்தி'' கோட்பாட்டின் ஊடாகவே இடம்பெற முடியுமெனக் கூறியது. ''பிரதான தொழிற்துறை ஏகபோகங்களை'' அப்போது தேசியமயமாக்க அழைப்புவிட்டதன் மூலம் சில தருணங்களில் CDU (கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி) KPDஐ விட தீவிரமாக முன்சென்றது.
இதேமாதிரி ஐரோப்பா பூராவும் பின்பற்றப்பட்டது. ஜனவரி 1947இல் பல்மீரோ தொக்கிளியாட்டி (Palmiro Togliatti- இத்தாலிய கம்யூனிச கட்சிக்கு 40 வருடங்கள் தலைமை தாங்கியவர்.) அரசியலமைப்பு சபையில் மற்றைய அனைத்து ஐரோப்பிய நாடுகளையும் விட இத்தாலியில் மிகவும் குறைவான வேலைநிறுத்தங்களே இடம்பெறுவதாக பெருமை பேசினார்:
''கடந்த வருடங்களில் இத்தாலியில் எந்த அரசியல் வேலை நிறுத்தமும் இடம்பெறவில்லை.... எங்கள் நாட்டில் மட்டுமே தொழிற்சங்கங்கள் ஒரு ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இவ் ஒப்பந்தம் தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றிலேயே தனித்துவமானது. ஏனெனில் இது குறைந்தபட்ச ஊதியத்தை அன்றி அதிகபட்ச ஊதியத்தை வரையறுக்கின்றது. நாங்கள் வாழுகின்ற பொருளாதார நிலைமையில், தொழிலாள வர்க்கமும், தொழிற்சங்கங்களும் சிறந்த உதாரணத்தை வழங்குவதுடன், உற்பத்தியில் கட்டுப்பாட்டினையும், ஒழுங்கையும், சமூக அமைதியையும் பேணுவதில் எல்லா அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதும் உண்மையில் கவனத்தை கவரக்கூடிய எதிர்காலமாக விளங்குகின்றது'' என கூறினார். (Capitalism Since 1945 [Black Well, 1984] p.55).
தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக வழிதடுமாறச் செய்ததில் ஸ்ராலினிசம் மிகவும் அழிவுகரமான பங்கு வகித்தது. மிகைப்படுத்தல்களுக்கும், திரிப்புகளுக்கும், ஸ்ராலினிச பிரச்சாரத்தின் பொய்களுக்கும் அப்பால் சோவியத் ஒன்றியத்தின் பொருளாதார சாதனைகளை துதிபாடி தொழிலாள வர்க்கத்தின் சர்வதேசப் போராட்டங்களில் இருந்து அதனது அவசியமான அடித்தளங்களையும் பிரித்தது, சோசலிசத்தை வெறுமனே ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பும் பிரச்சனையாக கேவலப்படுத்திக் காட்டியது. இது விசேடமாக தனது சொந்த முதலாளித்துவ வேலைத்திட்டத்தை, ஒரு வகையான ''சோவியத் மாதிரி'' எனக்காட்டி நியாயப்படுத்த முயற்சித்த காலனித்துவ, பின்தங்கிய நாடுகளது தேசிய முதலாளிகளுக்கு அனுகூலமாகியது. அதேநேரத்தில் முன்னேறிய நாடுகளில் உள்ள தொழிலாளர்கள், இம்மாதிரியை பொலிஸ் அரச சர்வாதிகாரத்துடனும், பொருட்களுக்கான பாரிய பற்றாக்குறையும் மிக்க ஒரு அமைப்பாக இனங்கண்டதால் அவர்கள் சோசலிசத்தில் இருந்து அந்நியப்பட்டனர்.
சோவியத் ஒன்றியம் தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் ஏகாதிபத்தியத்துக்கு கீழ்ப்படுத்திக் கொண்டிருந்த அதேவேளையில், ஐக்கிய அமெரிக்காவின் மேலாதிக்கப் பாத்திரத்தை அடித்தளமாகக் கொண்ட அரசியல், பொருளாதார உடன்பாடுகளுக்கான முக்கிய அடித்தளத்தையும் வழங்கியது. பரவலாக அழைக்கப்பட்ட சோவியத் ஆவியுரு என்ற அபாயம், ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பொருளாதார மேலாதிக்கத்திற்கு ஆதரவை வழங்கியதுடன், இவ்விதமாக ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாட்டையும் அடக்கி வைத்தது.
போருக்குப் பின்னைய அமைப்பும் வர்க்க உறவுகளும்
போருக்கு பின்னர் ஐக்கிய அமெரிக்கா, உலக முதலாளித்துவ விவகாரங்களில் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட எஜமானன் ஆகவும் சவாலுக்கு அப்பாற்பட்ட தொழிற்துறை தலைவனாகவும், சர்வதேச ரீதியில் பணமாற்றத்தின் (International Liquidity) முக்கிய மூலமாகவும் வெளிப்பட்டது. இவ்விதமாக 1 அவுன்ஸ் தங்கம் 35 டாலராக மாற்றத்தகு தன்மை நிர்ணயிக்கப்பட்டதுடன், ஏனைய சகல நாணயங்களினதும் பெறுமதி டாலரின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டது. 1 டாலர், 4 டொச் மார்க்குக்கும், 360 ஜென்னுக்கும், 4.32 சுவிஸ் பிராங்குக்கும் ''சமப்படுத்தப்பட்டது''. சகல சர்வதேச கொடுக்கல் வாங்கல்களும் டாலரில் கணிப்பிடப்பட்டு பூரணப்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக, உலக வர்த்தகமும், சர்வதேச நிதி அமைப்பும் 1944 ஆம் ஆண்டு பிரெட்டன் வூட்ஸில் நடந்த மாநாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பொறிமுறையினாலேயே முழுமையாக ஒழுங்கு செய்யப்பட்டது.
ஆனால் முதலாளித்துவத்தை மீளக்கட்டியெழுப்புவதில் பிரெட்டன் வூட்ஸ் அடைந்த அதே வெற்றிகளே, படிப்படியாக அவ்வமைப்பு முறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது. ஐரோப்பிய, ஜப்பானிய முதலாளித்துவத்தை மீளக்கட்டி எழுப்பும் அதே நிகழ்வுப்போக்கே, அமெரிக்காவின் மேலாதிக்கத்தை பலவீனமடையவும் செய்தது. வர்த்தக கொடுப்பனவுகளையும், வர்த்தக செலுத்துமதிகளையும் (Balance of trade) நகர்த்துவதானது டாலரின் பாத்திரத்தினை கேள்விக்குள்ளாக்கியது. 1971 ஆகஸ்ட்டில் டாலர்-தங்க மாற்றத்தகு தன்மையின் முடிவானது, ஐக்கிய அமெரிக்காவின் மேலாதிக்கப் பாத்திரத்தினை அடிப்படையாகக் கொண்ட போருக்குப் பிந்தைய பொருளாதார சமநிலையின் ஒரு நீடித்த உடைவின் தொடக்கத்தைக் குறித்து நின்றது.
1973க்கும், 1982க்கும் இடையே அமெரிக்க, உலக முதலாளித்துவம் ஆழமான பொருளாதார நெருக்கடியினால் பற்றிப்பிடிக்கப்பட்டது. முதலில் 1973 இனதும், 1979 இனதும் ''எண்ணெய் அதிர்ச்சிகளினால்'' சமிக்ஞை செய்யப்பட்ட பணவீக்கத்தின் எழுச்சியும், அதனுடன் இணைந்த ''வேலையின்மையினதும், பொருளாதார மந்தநிலைமையினதும் (Stagflation)'' இறுதியாக ஆழமான பொருளாதார பின்னடைவுமாக இந்த நெருக்கடி விளங்கியது. இந்நெருக்கடியின் ஆழமும் அதிகரிப்பும், ஒரு சமரசக் கொள்கையில் இருந்து ஒரு அதிகரித்த ஈவிரக்கமற்ற மோதலான அடிப்படை மாற்றத்தை செய்ய, முதலாளித்துவவாதிகளின் சமூகக் கொள்கையை நிர்ப்பந்தப்படுத்தியது.
அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும், அதிலும் குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் 1970களும், 1980களின் ஆரம்பமும் ஆழமான வர்க்கப் போராட்டங்களை குறித்து நின்றன. 20ம் நூற்றாண்டு பூராவும் அதனது விஞ்ஞான அடித்தளங்கள் அபிவிருத்தி அடைந்ததும், எல்லாவற்றிற்கும் மேலாக குவான்டம் இயக்கவியலின் (Quantum Mechanic - அணுத்துகள்களின் கதிரியக்க பொறிமுறை) அபிவிருத்தியினால் அதனது உச்சக்கட்ட வெளிப்பாட்டைக் கண்டதுமான தொழில்நுட்ப புரட்சி ஒரு அடிப்படையான பொருளாதார தேவையினால் ஊக்குவிக்கப்பட்டது. அதாவது இலாபத்தின் மீதான அழுத்தத்தை தணிப்பதற்காகவாகும். இது தவிர்க்கமுடியாத விதத்தில் தொழிலாள வர்க்கத்தினை பலவீனமடையச் செய்யும் ஒரு நனவான சமூக அரசியல் நோக்குடன் பிரிக்கமுடியாத விதத்தில் இணைந்துகொண்டுள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களதும் தொழில்நுட்ப புரட்சி, சில பிரித்தெடுக்கப்பட்ட அர்த்தத்தில், தனியே தூய விஞ்ஞானபூர்வமான தோற்றப்பாடு மாத்திரம் அல்ல என்பதை வலியுறுத்துவதற்கே நான் இப்புள்ளியைக் குறிப்பிட்டேன். நிச்சயமாய் விஞ்ஞான முன்னேற்ற நிகழ்வுப்போக்கு, சாதாரணமாக உடனடியான அரசியல் அல்லது பொருளாதாரத் தேவைகளினதும் நலன்களினதும் ஒரு பிரதிபலிப்பு அல்ல. ஆனால் விஞ்ஞான அபிவிருத்திகளையும், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளையும் அல்லது பொதுவில் பொருளாதார நிகழ்ச்சிப் போக்குகளை சமூக வர்க்கங்களுக்கிடையிலான உயிர்வாழும் உட்தாக்கத்தில் இருந்து முழுமையாக பிரித்துபார்ப்பதும் கூட தவறானதாகும்.
உண்மையில் 1930களின் அனுபவங்கள், சனத்தொகை நெருக்கடி மிகுந்த நகர மையங்களின் பரந்த தொழில்துறை வளாகங்களால் தோற்றுவிக்கப்பட்ட சமூக ஆபத்துக்களை இட்டு அமெரிக்க முதலாளி வர்க்கத்தை உசார் அடையச் செய்தது. தொழில்துறைகளை, நகர மையங்களிலிருந்து கிராமப்புறங்களுக்கு அகற்றியமையும் தொழில்துறை நிகழ்ச்சிப்போக்கின் தன்னியக்கம் (Automation of Industrial Processes) என்ற இரண்டும் 1950களில் கணிசமான அளவு பரந்துபட்டதோடு முதலாளித்துவத்தின் சமூக நோக்கங்களையும் பிரதிபலித்தது.
1970களில் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதார அழுத்தங்கள், அதிகரித்த முறையில் கசப்பான வர்க்க மோதுதல்களுடன் இணைந்து தொழில்நுட்ப மாற்றத்தின் நிகழ்ச்சிப்போக்கினை துரிதப்படுத்தியது. பின்வரும் உண்மையை கருத்தில் கொள்ள வேண்டும். பிரித்தானியா, அமெரிக்கா இரண்டினுள்ளும் மூலதனத்தின் சக்திக்கு எதிரான முக்கிய தூணாக பல தசாப்தங்களாக நின்றுவந்த தொழிலாள வர்க்கப் பிரிவினர் - அதாவது சுரங்கத் தொழிலாளர்கள், 1970களின் கடைப்பகுதியில் இருந்து ஒரு முக்கிய தொழில்துறை சக்தியாக விளங்குவது முழுமனே ஒழிந்து போயிற்று. பிரித்தானியாவில் 1972ல் டோரிக்களை அவமானத்துக்குள்ளாக்கியதும் 1974ல் அவர்களை ஆட்சியில் இருந்து வெளியேற்றியதுமான தேசிய சுரங்கத் தொழிலாளர் சங்கம் (NUM) 1984ல் வேலைநிறுத்தத்தில் படுமோசமான முறையில் தோற்கடிக்கப்பட்டதோடு, அன்றிலிருந்து அங்கத்தவர் எண்ணிக்கையும் ஒரு சில ஆயிரங்களுக்கு வீழ்ச்சியடைந்தது. இங்கு ஐக்கிய அமெரிக்காவிலும் ஐக்கிய சுரங்கத் தொழிலாளர் (UMW) அதிகமாகவோ அல்லது குறைவாகவோ, இதையொத்த ஒரு தலைவிதியையே சந்திக்க நேரிட்டது.
பிரித்தானியாவினதும், ஐக்கிய அமெரிக்காவினதும் சுரங்கத் தொழிலாளர்களின் தலைவிதி, 1970களின் இறுதியில் மூலதனம், உழைப்புக்கு எதிராக தொடுத்த தாக்குதலின் மிகவும் துன்பகரமான விளைவுகளுள் ஒன்று மாத்திரமே. பெடரல் ரிசர்வின் தலைவராக போல் வோல்க்கர் நியமிக்கப்பட்டு, அவர் உடனடியாக வட்டி வீதங்களை முன்னறிந்திராத மட்டத்திற்கு உயர்த்தியபோது, இது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக முதலாளித்துவ வாதிகளினால் முன்னெடுக்கப்படும் ஒரு பொதுவான தாக்குதலின் ஆரம்பத்தைக் குறிக்கிறது என வேர்க்கஸ் லீக் உடனடியாக எச்சரிக்கை செய்தது. எமது நிலைப்பாடு சரியானதென நிரூபிக்கப்பட்டது. 1979-82 பொருளாதார மந்தநிலை, சர்வதேச வர்க்க உறவுகளில் ஒரு திருப்புமுனையைக் குறித்து நின்றது.
மூலதனத்தின் எதிர்த்தாக்குதல்
எல்லாவற்றிற்கும் முதல் பிரித்தானிய, அமெரிக்க அரசாங்கங்களில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. தாட்சர் 1979 மே இல் ஆட்சிக்கு வந்தார். 1979 யூலையில் ஒரு தேர்தல் இல்லாமலே வோல்கர் அதிகாரத்துக்கு வந்ததுடன், 1980 நவம்பரில், காட்டரின் பேரளவிலான தோல்வியை உறுதிப்படுத்திய பொருளாதாரக் கொள்கைகளையும் அறிமுகம் செய்தார். இத் தேர்தலுக்கு முன்பே, அந்த நேரத்தில் வேர்க்கஸ் லீக் எச்சரிக்கை செய்ததுபோல், வந்துகொண்டிருக்கின்ற மாற்றம் முன்னணி வர்த்தக சஞ்சிகைகளின் உச்சரிப்புகளினால் சுட்டிக்காட்டப்பட்டது. நாம் ''மீள் தொழில்மயமாக்கம்'' (Re-Industrialization) என்ற புதிய பதத்தின் அதிகரித்த பிரயோகத்தை சுட்டிக்காட்டியதுடன், 1980 யூனில் பிஸ்னஸ் வீக் சஞ்சிகையில் வெளியான ஒரு கட்டுரையின்பால் கவனத்தை ஈர்த்தோம்.
''மீள் தொழில்மயமாக்கல், பொருளாதாரக் கொள்கை உருவாக்கம் என்ற கட்டுமானத்திலும் பொருளாதார அரங்கின் பிரதான பங்காளிகள் —வணிகம், உழைப்பு, அரசாங்கம், சிறுபான்மையினர்— அவர்கள் பொருளாதாரத்திற்கு எவ்வளவை சேர்க்கின்றார்கள், பொருளாதாரத்தில் இருந்து எவ்வளவை பெற்றுக் கொள்கின்றார்கள் என்பதைப்பற்றி சிந்திக்கின்ற முறையிலும் துடைத்துக்கட்டும் மாற்றங்களை அடிப்படை நிறுவனங்களில் வேண்டிநிற்கின்றது. இம்மாற்றங்களில் இருந்து இவ் ஒவ்வொரு குழுக்களுக்கும் இடையே, பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு ஒவ்வொருவரும் எவ்வளவை பங்களிப்புச் செய்ய வேண்டும் என்பதையும், ஒவ்வொருவரும் எவ்வளவை பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் ஒரு விசேடமான முறையில் அங்கீரிப்பதன் அடிப்படையிலான ஒரு புதிய சமூக ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டும்.''
உள்நாட்டு சமூக உறவுகளில் ஏற்பட்ட மாற்றம் சர்வதேச கொள்கையிலான ஒரு நகர்வுடன் இணைந்து வந்தது. 1963ல் அணுசக்தி பரிசோதனை தடை ஒப்பந்தம் கைச்சாத்தானதில் இருந்து, அணு ஆயுதக்குறைப்பு ஒப்பந்த (SALT) பேச்சுவார்த்தைகளின் ஆரம்ப வெற்றிகள் வரை அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் தொடர்பாக ''பதட்டத்தை குறைத்தல்'' (Detente) எனப் பெயர்பெற்ற கொள்கையை கடைப்பிடித்தது. இந்தக் கட்டம் கூட 1979ல் ஒரு முடிவுக்கு வந்தது. ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பு சோவியத் ஒன்றியம் தொடர்பாக பெரிதும் குரோத அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதற்கான ஒரு சூழ்நிலையாக பயன்படுத்தப்பட்டது. இரண்டாவது, அணு ஆயுதக்குறைப்பு உடன்படிக்கை ஒருபோதும் அமெரிக்க செனட் சபையால் அங்கீகரிக்கப்பட்டதில்லை. றேகன் தெரிவுசெய்யப்பட்டதுடன் அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் தொடர்பாக ஒரு யுத்தத்தில் ஈடுபட்டுக்கொண்டுள்ளவர்களின் எதிர்ப்புக் கொள்கையை கடைப்பிடித்தது. சமீபத்தில் பிரசுரிக்கப்பட்ட பல நினைவுக் குறிப்புக்களை நம்புவோமானால் சோவியத் அதிகாரத்துவத்தின் உள்ளேயான கூறுகள் அமெரிக்கா, சோவியத் யூனியனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு திட்டமிட்டு வருவதையிட்டு பெரிதும் கவலை கொண்டிருந்தன. குறைந்தபட்சம் றேகன் நிர்வாகம் பிரமாண்டமான இராணுவச் செலவீனங்களில் இறங்கியமை, சோவியத் ஒன்றியத்தின் வரையறுக்கப்பட்ட வரவு-செலவு திட்டத்தின் மீது அழுத்தத்தினை பெருமளவு கொணர்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தது.
சர்வதேச கொள்கையிலான மாற்றம், மத்திய கிழக்கு, இலத்தீன் அமெரிக்கா தொடர்பாக ஏகாதிபத்தியம் கடைப்பிடித்த கொள்கைகளிலும் சுட்டிக்காட்டப்பட்டது. மல்வினாஸ் (Malvinas) யுத்தம், லெபனான் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு, பெய்ரூட்டிலிருந்து PLO வெளியேற்றப்பட்டமை, நிக்கரகுவா, எல்சல்வடோர், கௌதமாலாவில் அமெரிக்கா நடத்திய அசிங்கமான போர்கள் —கிரெனடா ஆக்கிரமிப்பு பற்றி சொல்லவும்தேவையில்லை— இச்சகல அபிவிருத்திகளும் சமரசத்தில் இருந்து மோதலுக்கான மாற்றத்தை பிரதிபலித்தன.
தங்களுக்கே உரிய வழிமுறையில் ஸ்ராலினிசமும், சமூக ஜனநாயகமும், முதலாளித்துவ தேசியவாதமும் புதிய நிலைமைக்கு தம்மை விரைவாக தகவமைத்துக்கொண்டன. ஜேர்மன் சமூக ஜனநாயகம் ஆட்சியை கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியிடம் (CDU) ஒப்படைத்தது. 1981ல் தீவிர சீர்திருத்தங்கள் வழங்குவதாக கூறி ஆட்சிக்கு வந்த மித்திரோன், பிரெஞ்சு பங்குமுதல் சந்தை அவருக்கு எதிராக ஒருசில வேட்டுக்கள் தீர்த்ததுதான் தாமதம் தனது வேலைத்திட்டத்தினை கைவிட்டார். அவுஸ்திரேலியாவில் ஹோக் அரசாங்கம், லிபரல்கள் முயற்சிக்க அஞ்சிய கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது. சோவியத் யூனியனினுள் ஸ்ராலினிச கிழட்டு ஆட்சியின் பலவீனமான அரசு, முழு ஆட்சிமுறையினதும் ஸ்தம்பிதத்துக்கும் ஒழுங்கீனத்துக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது. முதலாளித்துவ தேசியவாதிகளைப் பொறுத்தவரை, ஸ்ராலினிசத்தின் நெருக்கடி, தமது முக்கிய பாதுகாவலனை தமக்கு இல்லாமல் செய்துவிட்டதை அறிந்ததுதான் தாமதம் தமது கோரிக்கைகளை கட்டுப்படுத்திக் கொள்ளத் தொடங்கினர்.
ஏகாதிபத்திய நெருக்கடி
சர்வதேச முதலாளி வர்க்கம் தொழிலாள வர்க்கத்தின் மீதான அதன் தாக்குதலில் பெரும் வெற்றிகளை கண்டது. ஆனால் போருக்குப் பிந்தைய முதலாளித்துவ ஸ்திரத்தன்மையின் முழு பொருளாதார அடித்தளத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்திய பூகோளமயமாக்கல் நிகழ்ச்சிப்போக்கினை அதனால் கட்டுப்படுத்த முடியவில்லை. 1989-90ல் அனைத்துலகக் குழு மட்டுமே, ஸ்ராலினிச ஆட்சிகளின் வீழ்ச்சியானது, வரலாற்றுப் பரிமாணத்திலான உலக நெருக்கடியின் ஒரு முன்னோடியாக உள்ளது என்று தனித்து நின்று வலியுறுத்தியது.
இன்று, சர்வதேச நிலைமை பற்றிய எந்தவொரு தீர்க்கமான அவதானியும், பழைய இரண்டாம் உலக போரின் பின்னைய பொதுச் சமநிலை பொறிந்து போய்விட்டது என்பதை மறுக்கமாட்டார். ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான இந்த மோதுதல்கள் —எல்லாவற்றுக்கும் முதல் அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயானது— சந்தைகளுக்கும் விலைமதிப்பற்ற மூலவளங்களுக்கும் மலிவுக்கூலி, உழைப்பு மூலங்களுக்குமான போராட்டங்கள் கூர்மையடைகையில் புதிய எழுச்சிகளை முன்னறிவிக்கிறது. கிளின்டன் நிர்வாகத்தின் கொள்கை அதன் தலைமை அந்தஸ்தினை பேணிக்கொள்ள என்னவிதமான அழுத்தங்கள் அவசியமென அது கருதுகின்றதோ அதைப் பயன்படுத்த அமெரிக்கா தயாராக வேண்டுமென முதலாளி வர்க்கத்தின் கணிசமான பகுதியினரிடையே இருந்துவரும் மனப்பான்மையை புலப்படுத்துகின்றது. மிகச் சமீபத்தில் world Policy Journal என்ற சஞ்சிகையில், ரொனால்ட் ஸ்டீல் எழுதியதாவது:
''சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி என்பது, அதிருப்தியுற்றோரையும், ஆவல்மிக்கோரையும் வழிநடத்தும் நம்பிக்கையாக கம்யூனிசத்தின் உடைவைக் குறித்தது. சந்தை முதலாளித்துவம் சகல இடங்களிலும் வெற்றிகரமானதாக விளங்குகின்றது. ஆனால் இதை கொண்டாடுவோர் கற்பனை செய்வதிலும் பார்க்க இது ஐக்கிய அமெரிக்காவுக்கு கிடைத்த ஒரு குறைவான வெற்றியே. முதலாளித்துவம் என்பது, ஒவ்வொரு தேசமும் விளையாடக்கூடிய விளையாட்டே. குளிர் யுத்தத்தைப் போன்றே இதுவும் ஒரு அதிகாரத்திற்கான விளையாட்டு. சில தேசங்கள் ஐக்கிய அமெரிக்காவைப் போல் அல்லது அதைவிட இன்னும் சிறப்பாக விளையாட்டை மேற்கொள்கின்றன. பொருளாதார தத்துவத்தை போலன்றி உண்மையான அரசியலின் சார்பு ரீதியான வெற்றியே கணக்கிடப்படுகின்றது. மொத்தப் பங்கு எவ்வளவு அதிகரிக்கின்றது என்பது முக்கியமல்ல யாருடைய பங்கு அதிகரிக்கின்றது என்பதே முக்கியம். அமெரிக்காவின் பங்கு அதிகரிக்கவில்லை; அதனது போட்டியாளர்களின் (''முன்னாள் பனிப்போர் கூட்டாளிகளின்'' என வாசிக்கவும்) பங்கே அதிகரிக்கின்றது. கம்யூனிசத்தை வெற்றி கண்டதன் பின்னர், முதலாளித்துவத்தின் வர்த்தகப் போர்களில் ஐக்கிய அமெரிக்கா பின்தங்கி நிற்கின்றது.''
''சுதந்திர உலக சர்வதேசவாதம் என்ற பெயரில், அமெரிக்க வெகுஜனங்கள் பனிப்போர் கால கூட்டுக்களான ஜப்பான், தென்கொரியாவை அல்லது சீனா போன்ற சோவியத் எதிர்ப்பு பங்காளிகளை அமெரிக்காவின் சொந்த தொழிற்துறை தளத்தினை அழிக்கத் தொடர்ந்தும் அனுமதிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. திறந்த சந்தைகள், சர்வதேசவாதம் போன்ற புத்திஜீவித்தன்மையான யதார்த்தமற்ற கருத்துகளுக்கு கட்டுப்பட்டுள்ளமையால், தனது சொந்த தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு இலாயக்கற்ற அல்லது ஆற்றல் அற்ற ஒரு தேசம் உள்ளார்ந்த சச்சரவிற்கும், இரண்டாம்தர அந்தஸ்த்துக்கும் உள்ளான ஒரு தேசமாகும். ஒரு அறிவொளி பெற்ற அமெரிக்க தேசியவாதம், மலிவான கூலி உழைப்பைத் தேடி வெளிநாடுகளுக்கு நகர்கின்ற கூட்டுத்தாபனங்களுக்கு உதவுவதைக் காட்டிலும், அமெரிக்க தொழில்களை காப்பதற்கே ஒரு உயர்ந்த முன்னுரிமை கொடுக்கவேண்டும். அத்தோடு இது, அமெரிக்காவின் சுயபிரகடனம் செய்யப்பட்ட ‘அதிஉயர் வல்லரசு’ என்ற அந்தஸ்தை பேணுவதான பிரமையின் கீழ் அதனது பொருளாதாரப் போட்டியாளர்களுக்கு இலவச இராணுவ பாதுகாப்பை வழங்குவதையும் கூட நிறுத்தவேண்டும். உண்மையில் ‘சம்பளமற்ற பாதுகாவலன்’ என்பதே இதற்கு மிகவும் துல்லியமான பதமாகும்.
''சர்வதேசவாதம் பொதுத்தொண்டுக்கான, நல்ல நோக்கங்களுக்கான ஒரு பதாகையாக நோக்கப்படக் கூடாது. அது முற்றுமுழுதாக அதற்கு நல்லதுமல்ல. இது வெறுமனே தேசிய சமூகங்களாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள மக்களின் நலன்களை முன்னேற்றுவதற்கான ஒரு முறை மட்டுமே. எங்கே அது இதைச் செய்கின்றதோ அங்கே அது அங்கீகரிக்கப்படும், அதை அது செய்யாதவிடத்தில் மிகவும் நியாயமான முறையில் நிராகரிக்கப்படும்''.
போருக்குப் பிந்தைய ஒழுங்கு தெளிவாக ஒரு குழப்பத்தில் உள்ளது. இந்த சமநிலையின்மையின் உள்ளே அல்லது மிகவும் திட்டவட்டமாக அதனது மையத்தில், தொழிலாள வர்க்கத்தின் என்றுமில்லாத பரந்த பகுதியினரை உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கில் இருந்து அகற்றுவதற்கான முதலாளித்துவவாதிகளின் ஈவிரக்கமற்ற முயற்சிகளின் விளைவாய், சர்வதேச ரீதியாக வீழ்ச்சியடையும் உபரிமதிப்பில் தங்களது பங்கை பேணிக்கொள்வதற்கான பூகோள முதலீட்டாளர்களின் வெறிபிடித்த ஓட்டம் விளங்குகின்றது. இது உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கில் இருந்து பரந்த அளவிலான தொழிலாள வர்க்கப் பகுதியினரை வெளியேற்றும் முதலாளி வர்க்கத்தின் இடைவிடாத முயற்சியாகும். உலக நாணயம், பங்குப்பத்திரம், பங்குமதிப்பு, வர்த்தகப் பண்ட சந்தைகளின் நாளாந்த கொந்தளிப்புகள் நிதித்தேட்ட அவஸ்தையினால் உபரி மதிப்பினை ஈவிரக்கமற்ற முறையில் தேடுவதில் உயர்ந்த மட்டத்தை அடைந்துள்ளது. இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் பிரமாண்டமானவை: ஒரு நாளுக்கு உலக நாணய சந்தைகளின் வர்த்தகம் 1.1 ட்ரில்லியன் டாலருக்கு அதிகமாய் உள்ளது. ஒவ்வொரு வாரமும் அவை அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) சமமான செல்வத்தை நகர்த்துகின்றன.
அனைத்துலகக் குழுவின் புதிய பணிகள்
உலக நெருக்கடியின் தாக்கங்கள்
இதுவரை குறிப்பிட்டவை அபிவிருத்தி கண்டுவரும் நெருக்கடியின் முக்கிய அம்சங்கள் பற்றிய ஒரு குறிப்பு மட்டுமேயாகும். நான் குறிப்பிட விரும்பும் முக்கிய அம்சம் பின்வருமாறு: உலக முதலாளித்துவத்தின் பழைய சமநிலை உடைந்துவிட்டது. நாம் சர்வதேச முதலாளித்துவ சமநிலையின்மையின் ஒரு புதியதும் நீண்டதுமான காலகட்டத்தினுள் வேகமாகச் சென்று கொண்டுள்ளோம். போர் முடிவடைந்ததிலிருந்து முதலாளித்துவத்தின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்பட்ட உலகளாவிய உற்பத்தி சக்திகள், தேசிய-அரசு அமைப்பு முறையுடனும், உற்பத்திச் சாதனங்களில் தனியார் உடமையுடனும் பொருந்தாதவையாகிவிட்டன. வரலாற்று அர்த்தத்தில் இன்று பெருகிவரும் வீழ்ச்சிகள் இந் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றியதைப்போல ஆழமானதும் வெடிக்கும் சாத்தியமும் கொண்டவையாகும். நாம் கண்ணெதிரே போர்களையும், புரட்சிகளையும் எதிர்நோக்குகின்றோம்.
முதலாளித்துவத்தின் நெருக்கடியில் இருந்து, இதுவரை தொழிலாள வர்க்கத்தின் மேல் ஆதிக்கம் கொண்டிருந்த பழைய கட்சிகள், அமைப்புக்கள், இயக்கங்களின் வீழ்ச்சி மூலம் தொழிலாள வர்க்கத்தின் உள்ளே அனைத்துலகக் குழுவின் பகுதிகளின் ஆளுமையை நிறுவும் சாத்தியம் இன்று தோன்றியுள்ளது.
ஒரு வரலாற்று மற்றும் வேலைத்திட்ட அர்த்தத்தில், அனைத்துலகக் குழுவின் பகுதிகள் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிக் கட்சிகளாகும். எமது பகுதிகளுக்குள் ஒரு பலம்வாய்ந்த பாரம்பரியமும் அனுபவமும் திரண்டுபோயுள்ளன. அனைத்துலகக் குழுவுக்கு வெளியே புரட்சியாளர் என்ற பெயருக்கு தகுதியான எந்தவொரு போக்கும் கிடையாது. ஆனால் நீண்டகாலத்திற்கு எமது பகுதிகள் ஒரு பரந்த புரட்சிக் கட்சியை அபிவிருத்தி செய்வதற்கு சாதகமற்ற நிலைமைகளின் கீழேயே பெரும்பாலும் தொழிற்பட்டு வந்துள்ளன. நடைமுறை அர்த்தத்தில் நாம் இன்னமும் தொழிலாள வர்க்கத்தினுள் அனைத்துலகக் குழுவின் அரசியல் ஆளுமையை நிலைநாட்ட வேண்டியுள்ளது.
மார்க்சிசம் ஒரு விஞ்ஞானம். ஆனால் ஒரு புரட்சிக் கட்சியை கட்டுவதற்கு தொடரப்பட வேண்டிய திட்டவட்டமான நடவடிக்கைகளை முன்கூட்டியே விளக்குகின்ற ஒரு தொகை சம்பிரதாயபூர்வமான அறிவுறுத்தல்களை மார்க்சிசம் கொண்டிருக்கவில்லை. மேலும் இந்த வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் தன்மையிலிருந்தே கடந்தகாலம் எதிர்காலத்திற்கான திட்டவட்டமான வழிகாட்டலை வழங்கவில்லை. ஒருவர், கடந்தகாலத்தின் பாரம்பரியங்களில் இருந்து பாடங்களையும், உந்து சக்தியையும் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் எதிர்காலம் என்பது ஒரு மங்கலான விதத்தில் கடந்தகாலம் திரும்ப நிகழ்வது போன்ற ஒரு வடிவத்தை எடுக்காது.
அனைத்துலகக் குழுவின் அபிவிருத்தி, இன்றைய காலகட்டத்தின் விசேடமான பிரச்சனைகளுக்கு அதனது காரியாளர்களிடம் இருந்து ஒரு ஆக்கபூர்வமான பதிலை எதிர்பார்க்கின்றது. நான்காம் அகிலம் அடிப்படையாகக் கொண்டுள்ள வரலாற்று வேலைத்திட்டத்தினை பேணுகையில் நாம் எவருக்கும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை. ஆனால் இவ் வேலைத்திட்டமே, தொழிலாள வர்க்கம் இறுதியாக சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கு வேண்டிய அமைப்பினை உருவாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு விட்டுக்கொடுப்பற்ற போராட்டத்தினால் தொடர்ச்சியாக வளப்படுத்தப்பட்டதாகும்.
பல தசாப்தங்களாக பரந்த தொழிலாளர்களுக்கு தலைமை வழங்கும் சாத்தியம் புறநிலை நிலைமைகளால் எமது இயக்கத்திற்கு மறுக்கப்பட்டிருந்தது. நாம் மேற்கொண்ட செயற்பாடுகள் பிரதானமாக ஒரு பிரச்சார இயல்புடையதாக விளங்கியது என்பதனை “எந்தவித சங்கடமும் இன்றி” கூறுகின்றோம். பெரும்பாலும் நாம் எமது போராட்டங்களை ஒரு கருத்தியல் மட்டத்திலேயே மேற்கொண்டோம்.
எப்படியிருந்தபோதிலும், வேர்க்கஸ் லீக்கின் முழு வரலாற்றையும் விசேடமாக என்ன வித்தியாசப்படுத்தியது என்றால், நாங்கள் மிகவும் சாதகமற்ற நிலைமையின் கீழும் கூட எங்களது வேலைகளை ஒரு சாத்தியமான உயர்ந்த மட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் உயிர்வாழும் அனுபவங்களுடன் இணைப்பதற்கு தொடர்ச்சியாக முயற்சித்தோம். உண்மையில் கட்சியின் நடவடிக்கைகள், நேரடியாக தொழிலாள வர்க்கத்தின் பரந்த பகுதியினர் மீது நேரடியாக செல்வாக்குச் செலுத்திய பல சந்தர்ப்பங்கள் இருந்தன. ஹரி ரெய்லர் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் தொழிலாளர்களை காக்கும் பிரச்சாரங்கள், 1974, 1977-78 சுரங்கத் தொழிலாளர் வேலைநிறுத்தத்தில் வேர்க்கஸ் லீக் வகித்த மையப்பாத்திரம், ''பாற்கோ'' (PATCO) வேலைநிறுத்தம், பெல்ப்ஸ் டொட்ஜ் வேலைநிறுத்தம், றொஜே கவுத்திரா பாதுகாப்பு, மாக் அவனியூ கமிட்டி வேலைகள், மிக சமீபத்தில் பாடசாலை பஸ் சாரதிகள் பாதுகாப்பு என்பனவற்றில் எமது கட்சி முன்னணிப் பாத்திரம் வகித்தது. இவை வேர்க்கஸ் லீக் தொழிலாள வர்க்கத்தின் உள்ளே - குறிப்பாக அதனது அரசியல் ரீதியில் முன்னேற்றமான பகுதியினரிடையே தமது செல்வாக்கினை ஆழமாக்கிக்கொண்ட பல பிரச்சாரங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவையாகும்.
மார்க்சிசமும் குறுங்குழுவாதமும்
பல தசாப்தங்களாக, குட்டிமுதலாளித்துவ தீவிரவாதிகளிடையே இருந்த எமது எதிரிகள், எம்மை குறுங்குழுவாதிகள் என கண்டனம் செய்து வந்தனர். அதன் மூலம் அவர்கள் கொள்கையின் மீதான எமது உறுதி, ஸ்ராலினிசத்தின் பேரிலான எமது சமரசமற்ற குரோதம், மத்தியதர வர்க்க தீவிரவாதிகள் தொடர்பான குரோத அணுகுமுறை, வர்க்க உடனுழைப்பு அரசியலுடன் சமரசம்காண மறுப்பு ஆகியவற்றினை கருத்தில் கொண்டிருந்தனர். வேர்க்கஸ் லீக்கின் நடைமுறைத் திறனுக்காக தனது பாராட்டினை என்னிடம் அடிக்கடியும் சக்திவாய்ந்த முறையிலும் தெரிவித்து வந்த ஹீலி கூட ''குறுங்குழுவாதம்'' என்ற குற்றச்சாட்டை எம்மீது வீசி எறிந்தார். அவர் ஆதர் ஸ்கார்கிலுடனான தனிப்பட்ட சந்திப்புக்களில் இருந்து திரும்பும்போதும், கிரெம்ளினில் கோர்பச்சேவுடனான தரிசனங்களுக்கு தயாராகும்போதும் இம்முடிவுக்கு வந்தார்!
ஒரு சிறப்புப் பதமாக அல்லது விஞ்ஞானபூர்வமான முறையில் பயன்படுத்துகையில் ''குறுங்குழுவாதம்'' என்ற பதம், மார்க்சிசத்தின் அடிப்படைக் கொள்கைகளை தொழிலாளர் இயக்கத்தின் அனுபவங்களுக்கும் தேவைகளுக்கும் ஸ்தூலமான முறையில் தொடர்புபடுத்த முடியாததாகவும், தொடர்புபடுத்த அனுமதிக்க முடியாததாகவும் காணும் ஒரு போக்கினை குறித்து நிற்கிறது. நான்காம் அகிலத்தின் அபிவிருத்தியில், ட்ரொட்ஸ்கி அத்தகைய போக்குகளுக்கு எதிராக போரிட்ட சம்பவங்களும் உண்டு. அத்தகைய போக்குகளுக்கு எதிராக அவர் கூறியதை நாம் எமது அரசியல் மரபுகளின் பாகமாகக் கொள்கின்றோம்.
1935ல் ட்ரொட்ஸ்கி எழுதுகையில், ''முதலாளித்துவ சமுதாயத்தின் இயக்கத்தை ஆளும் விதிகளினதும் மற்றும் அதனால் கண்டுபிடிக்கப்பட்டவற்றினதும் அடிப்படையிலான ஒரு விஞ்ஞான ரீதியிலான வேலைத்திட்டத்தினால் கட்டப்பட்டதே மார்க்சிசமாகும். இது ஒரு பிரமாண்டமான வெற்றியாகும்! எவ்வாறெனினும் ஒரு சரியான வேலைத்திட்டத்தினை உருவாக்க இது போதுமானதல்ல என்பதை ஏற்றுக்கொள்வது தொழிலாள வர்க்கத்திற்கு அவசியம். ஆனால் குறுங்குழுவாதிகள் தமது இயல்பின் காரணமாக, மேற்கூறிய பணியின் முதல் அரை இறுதியிலேயே தம்மை நிறுத்திக்கொள்வர். அவர்களுக்கு பரந்த தொழிலாளர்களின் நிஜப்போராட்டங்களுள் தலையீடு செய்வது என்பது மார்க்சிச வேலைத்திட்டத்தின் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட பிரச்சாரங்களின் பிரதியீடாகும்.
''ஒவ்வொரு தொழிலாள வர்க்கக் கட்சியும், ஒவ்வொரு பிரிவினரும் அதன் ஆரம்ப கட்டங்களில் முற்றிலும் பிரச்சார காலப்பகுதியினூடாக அதாவது அதன் காரியாளர்களை பயிற்றும் கட்டத்தைக் கடந்து செல்கின்றது. ஒரு மார்க்சிச வட்டமாக (Marxist circle) இருந்துவரும் காலப்பகுதி தொழிலாளர் இயக்கத்தின் பிரச்சனைகளை அணுகும் போக்குடன் தவிர்க்கமுடியாதபடி ஒட்டிக் கொள்கின்றது. இந்த வட்டத்தின் விளிம்புக்கு அப்பால் உரிய தருணத்தில் பயணம் செய்ய எவர் முடியாது உள்ளாரோ அவர் ஒரு பழமை பேணும் குறுங்குழுவாதியாக பரிணாமம் அடைகின்றார். குறுங்குழுவாதி சமுதாயத்தின் வாழ்க்கையை ஒரு உயர்ந்த பள்ளியாகவும், அதற்கு தம்மை ஒரு ஆசிரியனாகவும் நோக்குகின்றார். அவரின் கருத்துப்படி, தொழிலாள வர்க்கம் அதனது சிறிய முக்கியத்துவமற்ற விடயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, அவரின் பிரசங்க மேடையைச் சுற்றி வளைத்து கூடியிருக்க வேண்டும் என அவர் நினைக்கின்றார். அதுதான் பிரச்சனைக்கு அவர்களின் தீர்வாகும்.
''ஒவ்வொரு வசனத்திலும் அவர் மார்க்சிசத்தின் பேரால் சத்தியப்பிரமாணம் செய்தாலும் குறுங்குழுவாதம், இயங்கியல் சடவாதத்திற்கு நேரெதிரானது. அது அனுபவத்தினை, புறப்பாட்டுப் புள்ளியாகக் கொண்டு எப்போதும் அதற்கே திரும்பவும் செல்கின்றது. ஒரு குறுங்குழுவாதி பூரணத்துவமான வேலைத்திட்டத்திற்கும், ஒரு போராட்டத்திற்கும் இடையேயான இயங்கியல் செயல்பாட்டையும் புரிந்துகொள்வதில்லை. குறுங்குழுவாதம் இயங்கியலுக்கு எதிரானது. (வார்த்தைகளில் அல்ல செயலில்) அது தொழிலாள வர்க்கத்தின் நிஜ அபிவிருத்திக்கு புறமுதுகு காட்டுகின்றது”. (லியோன் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்கள், I935-36 [New York: Pathfinder, 1977], பக். 152-53).
வேர்க்கஸ் லீக்கின் உள்ளோ அல்லது அனைத்துலகக் குழுவின் உள்ளோ ஒரு குறுங்குழுவாதப் போக்கு இருப்பதாக நான் நம்பவில்லை. எப்படியிருந்தபோதும் தொழிற்சங்கங்களினதும் சீர்திருத்தவாத கட்சிகளதும் அசிங்கமான நாற்றமெடுப்பினால் உக்கிரமாக்கப்பட்ட நிர்ப்பந்தமான தனிமைப்படுத்தல்களுக்கு இரையாக பல ஆண்டுகள் விளங்கியதன் பின்னர், வேர்க்கஸ் லீக்கும் அதன் சகோதரக் கட்சிகளும் புறநிலை நிலைமைகளைப் பற்றி செய்துகொண்டுள்ள அதன் ஆய்வுகளின் அடிப்படையில் செயல்படவும் புரட்சிகர இயக்கத்தை அபிவிருத்தி செய்ய இருந்துவரும் புதிய வாய்ப்புக்களை இனங்காணவும் தவறும் ஆபத்து இருந்து கொண்டுள்ளது. சம்பவங்களின் புறநிலைத் தாக்கத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட ஆரம்பிப்புக்களை அதனது நடைமுறை வேலைகளுள் அறிமுகம் செய்யத் தவறுவதன் மூலம், தரப்பட்ட ஒரு நிலைமையினுள் இருந்துகொண்டுள்ள சாத்தியங்களை நிஜமாக்க கட்சி தவறிவிடலாம்.
மிகவும் புரட்சிகரமான அமைப்பினுள் கூட ஒரு சக்திவாய்ந்த செயலற்றபோக்குகள் இருந்துகொண்டுள்ளன. போருக்குப் பிந்தைய காலப்பகுதியில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் அவை எப்படி அபிவிருத்திகாணாது இருக்க முடியும்? உண்மையில் எமது அமைப்புக்களின் விடாப்பிடியான போக்கு, கோட்பாட்டு பாரம்பரியங்களை பேணும் அவற்றின் சமரசமற்ற போக்கு, மேல்மட்டமாக விளங்கிக்கொள்ளப்பட்டதால் ஆழமாக சிந்திக்கப்படாத புதுமைப்படுத்தல்களான ''புதிய உலக யதார்த்தங்கள்'' போன்றவற்றிக்கு எதிரான எமது எதிர்ப்பு என்பன, நான்காம் அகிலத்தின் புரட்சிகர அனைத்துலகக் குழுவின் புரட்சிகரப் பண்பின் ஒரு அத்தியாவசியமான மூலமாக விளங்கியது. ஆனால் உறுதியானதும், சிருஷ்டிகரமானதுமான ஆரம்பிப்புக்களை வேண்டிநிற்கும் நிஜ ஆழமான மாற்றங்களின் இச்சமயத்தில், இந்தப் போக்குகள் பழமைபேணும் வாதத்திற்கும், மனநிறைவுக்கும் ஒரு மூடுதிரையாக மாறும் ஆபத்து இருந்துகொண்டுள்ளது. காலம் மாறியுள்ளது என்பதும் பல வருடங்களாக நிலவிய எமது வேலையின் வடிவங்கள் இன்றுள்ள புதிய நிலைமைக்கு இனியும் பொருந்தாது என்பதும், வெறும் பிரச்சார விளக்கம்தான் எமது இயக்கத்தின் பொதுஇலக்கு என்பதும் காலாவதியாகிவிட்டது. அதன் அர்த்தம் இனிமேல் பிரச்சாரம் தேவையில்லை என்பதயோ அல்லது அது அத்தியாவசியமில்லை என்பதோ அல்ல. அல்லது தெளிவாகக் கூறினால் நாம் எதற்காக போராடுகின்றோம் என்பதை விளங்கப்படுத்துவது அவசியமில்லை என்பதல்ல. எனினும் இது வரலாற்று அபிவிருத்தியின் பரந்த பணியினைப் பற்றியும் மற்றும் ஒரு புரட்சிகர இயக்கத்தின் பங்கு பற்றியும் எமது பொதுக் கருத்துப்பாடு பற்றி தெரிவிக்கும் ஒரு வெறும் பிரச்சனை அன்றி இந்தப் போராட்டங்களின் தலைமையை எடுத்துக்கொள்வது பற்றிய பிரச்சனையாகும்.
லீக்குகளின் நிர்மாணம்
கட்சியின் வடிவங்கள் நிரந்தரமானவையல்ல. அவை நாம் தொழிற்படும் வரலாற்று நிலைமைகளினால் நிர்ணயம் செய்யப்படுவதோடு அதை பிரதிபலிக்கவும் வேண்டும். ஒரு தரப்பட்ட வரலாற்று சூழ்நிலையில் உள்ள புரட்சிகர சாத்தியங்கள், கட்சி வேலையின் வடிவங்கள் அவற்றின் அபிவிருத்தியை நோக்கி நனவுபூர்வமாக நெறிப்படுத்தப்படும் அளவுக்கு மட்டுமே முற்போக்கு வெளிப்பாட்டினை பெறமுடியும் என்பதை வரலாறு சுட்டிக் காட்டுகின்றது. அல்லது அதை நன்கு தெளிவாகச் சொல்வதானால், சமூகப் புரட்சி அடைபட்டுக் கிடக்கும் வரலாற்றின் கடினமான உறையினுள் இருந்து அதை பிரித்தெடுக்க வேண்டியுள்ளது.
எவ்விதமான அமைப்பு வடிவத்தினுள் எமது நடவடிக்கைகள் அபிவிருத்தி காண்பது என்பது, ஒரு புறநிலையான வரலாற்று நிகழ்ச்சிப்போக்கு என்ற விதத்தில் உலக முதலாளித்துவத்தின் முரண்பாடுகளின் அபிவிருத்தியும் வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியுமே தீர்மானிக்கின்றன. இந்த வடிவங்களும் தொழிலாள வர்க்கத்துடனான உறவுகளும் அவை தோன்றியதும் ஆரம்பத்தில் வளர்ச்சி கண்டதுமான வரலாற்று நிலைமைகளுடன் குறிப்பிட்ட உறவுகளைக் கொண்டிருக்கவில்லையென நம்புவது ஒரு தவறாகும். 1959ல் பிரித்தானியாவில் சோசலிஸ்ட் லேபர் லீக் (S.S.L) 1966ல் வேர்க்கஸ் லீக் (W.L), 1968ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (R.C.L) தொடக்கம் 1971 புண்ட் சோசலிஸ்ட் ஆர்பைற்றர் (B.S.A), 1972ல் அவுஸ்திரேலியாவில் சோசலிஸ்ட் லேபர் லீக் (S.S.L) வரையிலான லீக்குகளின் ஸ்தாபிதம் திட்டவட்டமான வரலாற்று நிலைமைகளுடனும் தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர இயக்கம் பற்றிய மூலோபாய கருத்துப்பாட்டுடனும் பிணைக்கப்பட்டுள்ளது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அபிவிருத்தியின் இந்த முதல் கட்டத்தில், ட்ரொட்ஸ்கிச இயக்கம் முகம்கொடுக்க நேரிட்ட மைய மூலோபாய பிரச்சனை, தொழிலாள வர்க்கத்தின் மிகவும் முன்னேற்றமான பகுதியினர் பரந்த ஸ்ராலினிச, சமூக ஜனநாயக கட்சிகளுக்கும், தொழிற் சங்கங்களுக்கும் காட்டிய நடைமுறையானதும், போர்க்குணம் மிக்கதுமான விசுவாசமாகும்.
ஆதலால் வித்தியாசமான உபாயங்கள் இருந்தபோதிலும், எமது பிரிவுகளின் அரசியல் நடவடிக்கைகள், இந்த அமைப்புக்களின் அங்கத்தவர்களாக இருக்கும் வர்க்க நனவும் அரசியல் துடிப்பும் அதிகம் கொண்ட மூலகங்களை புதிதாக அணிதிரட்டும் தன்மையை கொண்டிருந்தது. சமூக ஜனநாயகத்தினதும், ஸ்ராலினிசத்தினதும் சமரசமற்ற எதிரிகள் என்ற முறையில் அனைத்துலகக் குழுவின் கிளைகள் இந்த இயக்கத்திற்கு வெளியே பரந்த புரட்சிக் கட்சியை நிறுவும் உண்மையான சாத்தியப்பாடுகளில் ஒரு திடமான பாத்திரத்தை வகிக்கும். இந்த மூலோபாய தகவமைவானது பப்லோவாதிகளுக்கு நேரெதிரானது. அவர்கள் தமது அமைப்புக்களை, அதிகாரத்துவ தலைமைகளை நோக்கி தகவமைத்தனர். அவர்களுக்கு புரட்சிகர சாத்தியங்கள் இருப்பதாக இவர்கள் கற்பித்தனர். மறு வார்த்தையில் சொன்னால் அவர்கள் மேலிருந்து அதிகாரத்துவத்தினூடாக செல்வாக்கு செலுத்த முயன்ற வேளையில் நாம் இந்த பரந்த இயக்கத்தினை கீழிருந்து புரட்சிகரமானதாக்க முயன்றோம்.
சோசலிஸ்ட் லேபர் லீக் மே 1959 இல் தொழிற் கட்சிக்குள் ஒரு போக்காக (Tendency) ஸ்தாபிக்கப்பட்டது. ஸ்தாபக மாநாட்டின் அரசியல் தீர்மானத்தில் கூறப்பட்டபடி:
“சோசலிஸ்ட் லேபர் லீக், தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க இயக்கத்திற்குள் உள்ள இன்றைய வர்க்க காட்டிக்கொடுப்புகளுக்குப் பதிலாக சோசலிச கொள்கைக்கு போராட அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு மார்க்சிஸ்டுகளின் அமைப்பாகும்....
“சோசலிஸ்ட் லேபர் லீக் தடைகள், மறுப்புக்கள், வெளியேற்றங்கள் மத்தியிலும் தொழிற் கட்சிக்குள் தொழிலாள வர்க்கக் கொள்கைகளுக்காக தொடர்ந்து போராடுவதோடு தொழிற் கட்சியுடன் இணைந்திருப்பதற்கான உரிமைக்காகவும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும்.
“சோசலிஸ்ட் லேபர் லீக் ஒரு சுயாதீனமான புரட்சிகர தொழிலாள வர்க்க கட்சி அல்ல. ஆனால் அது முதலாளித்துவத்தை தூக்கி வீசவும் பிரித்தானியாவில் தொழிலாள வர்க்கம் ஆட்சியை ஈட்டவும் அத்தியாவசியமான அதன் தொழிற்பாடுகளும் நடவடிக்கைகளும் அத்தகைய வகையறாவைச் சேர்ந்த ஒரு எதிர்காலக் கட்சிக்கான அத்திவாரத்தை இடுகின்றது.
“அதேசமயம் சோசலிஸ்ட் லேபர் லீக், தொழிற் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியினுள் உள்ள சீர்திருத்தவாதத்தினதும், ஸ்ராலினிசத்தினதும் காட்டிக்கொடுப்புகளுக்கு எதிராக ஒரு புரட்சிகர பதிலீட்டைக் கட்டி எழுப்புவது அவசியம் எனக் கருதும் தொழிலாளர்களையும் அத்தகைய மனப்பாங்கு கொண்ட ஏனைய சகல தொழிலாளர்களையும் அதன் அங்கத்துவத்தினுள் வென்றெடுப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. (Labour Review, ஜூலை-ஆகஸ்ட் 1959)
இலங்கையைப் பொறுத்தவரையில், பழைய அமைப்புக்களின் ஆளுமையினால் உருவாக்கப்பட்ட மூலோபாயப் பிரச்சனை, பரந்த கட்சியான லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) நான்காம் அகிலத்துடன் வரலாற்று ரீதியில் பிணைந்து கொண்டிருந்தமை ஒரு உக்கிரமான வடிவத்தை எடுத்தது. அவுஸ்திரேலியாவில் எமது அரசியல் அபிவிருத்தியின் வடிவம், தொழிற் கட்சியின் ஆளுமையினால் நிர்ணயம் செய்யப்பட்டது. அது 1972ல் கவ் விட்லம் (Gough whitlam) ஆட்சிக்கு வந்த வேளையில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பகுதியினரின் ஆதரவை பெற்றிருந்தது. அவ்வாறே 1971ல் ஜேர்மனியில் BSA அமைக்கப்பட்டதானது பிராண்ட் (Brandt) சகாப்தத்தின் முக்கிய காலப்பகுதியில் இடம்பெற்றது. ஒரு பாராளுமன்ற சதியின் மூலம் சமூக ஜனநாயகக் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி மேற்கொண்ட முயற்சி கிட்டத்தட்ட ஒரு அரசியல் பொது வேலைநிறுத்தத்தைத் தூண்டியது.
அந்த காலப்பகுதியில் எமது பிரிவுகளை அரசியல் கட்சிகளாக அமைப்பது என்பது, அந்த வார்த்தையின் முறையான அர்த்தத்தில், புரட்சிகர இயக்கத்தின் முன்வைக்கப்பட்ட திட்டவட்டமான அரசியல் பணிகளில் இருந்து நழுவுவதை பிரதிநிதித்துவம் செய்வதாக விளங்கியிருக்கும். ஒரு போர்க்குணமிக்க தொழிலாள வர்க்கம் அதனுடன் பலமான முறையில் இனங்காட்டிக்கொண்ட அமைப்புக்களையும், கட்சிகளையும் இன்னமும் பரீட்சிக்கும் போக்கில் இருந்துகொண்டிருக்கின்றது. ஒரு புதிய அமைப்புக்கான அவசியத்தைக் காண தொழிலாள வர்க்கம் இன்னமும் தொடங்கும் முன்பு, அந்தக்கட்டத்தில் நாம் எம்மை ஒரு கட்சியாக பிரகடனம் செய்வது, அதனை நியாயப்படுத்தும் தீவிரவாத வார்த்தைகளை பொருட்படுத்தாது விட்டாலும் ஒரு விதத்திலான குறுங்குழுவாத நழுவல் வாதமாகவே இருந்திருக்கும்
வேர்க்கஸ் லீக்கும் தொழிற் கட்சி கோரிக்கையும்
தொழிற் கட்சி பிரச்சனையின் முக்கியத்துவம்
வேர்க்கஸ் லீக்கின் வரலாற்றில் தொழிற் கட்சி விவகாரம் ஒரு மையப் பாத்திரத்தினை வகித்தது. ஒரு தொழிற் கட்சியை அமைக்கும்படி விடுத்த அழைப்பானது, ஒரு கிளர்ச்சி பிரச்சார உபாயம் என்பதற்கும் அப்பாற்பட்ட ஒன்றாக விளங்கியது. இது அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அபிவிருத்தியின் ஒரு திட்டவட்டமான மூலோபாய கருத்துப்பாட்டை உள்ளடக்கியிருந்தது. உண்மையிலேயே வேர்க்கஸ் லீக்கினால் தொழிற் கட்சி பிரச்சனை தொடர்பாக அபிவிருத்தி செய்யப்பட்ட பல்வேறு வழிகள், எமது கட்சியின் அரசியல் பரிணாமத்தினுள்ளும், ஐக்கிய அமெரிக்காவின் வர்க்கப் போராட்டத்தின் புறநிலை அபிவிருத்தியினுள்ளும் ஒரு ஆழமான பார்வையை செலுத்த உதவுகின்றது.
வேர்க்கஸ் லீக் 1966 இலையுதிர் காலத்தில் அமைக்கப்பட்டது. இது தொழிலாள வர்க்கத்தினதும், இளைஞர்களதும் தீவிரமயமாக்கத்தால் குணாம்சப்படுத்தப்பட்ட ஒரு காலப்பகுதியாகும். சிவில் உரிமை இயக்கம் தெற்கில் 1965 வரை பெரிதும் வன்முறையற்ற ஒரு அஹிம்சை எதிர்ப்பு இயக்கமாக விளங்கியது. வடக்கில் சகல பெரும் நகர மையங்கள் வன்முறைப் போராட்ட வெடிப்பினால் தாண்டிச் செல்லப்பட்டது. வியட்நாம் யுத்தத்திற்கு எதிரான மாணவர்களின் எதிர்ப்பு ஒரு வெகுஜன தன்மையைக் கொள்ளத் தொடங்கியது. அதேசமயம் தொழிலாள வர்க்கத்தினுள்ளே அமைதியின்மைக்கான தெளிவான அறிகுறிகள் காணப்பட்டன. ஆசிரியர்களும் மற்றும் சமூகசேவை தொழிலாளர்களும் அணிதிரட்டப்பட்டதைத் தொடர்ந்து தொழிற்சங்க இயக்கம் துரிதமாக வளர்ச்சி காணத் தொடங்கியது. 1966 இன் தொடக்கத்தில் நியூயோர்க் நகரில், சட்டத்தையும் மீறி நடாத்தப்பட்ட போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தினால் நகரம் பல வாரங்களாக ஸ்தம்பித்துப் போயிருந்தது.
சோசலிசத் தொழிலாளர் கட்சியின் (SWP) சீரழிவானது, கட்சியின் பாரம்பரியமான ஒரு தொழிற் கட்சியை அமைக்கும் அழைப்பைக் கைவிட்டதன் மூலம் தெளிவான முறையில் பிரதிபலித்தது. உண்மையில் இக்காலப்பகுதி பூராவும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் இருந்து அது பெருமளவுக்கு விலகியிருந்து.
வேர்க்கஸ் லீக், தொழிற் கட்சி கொள்கையை மீளாய்வு செய்கையில், அமெரிக்க முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் மைய மற்றும் முன்னணி பாத்திரத்தினை மீள வலியுறுத்தவும், அதேசமயம் ஒரு புரட்சிகர இயக்கத்தின் அபிவிருத்திக்கான தாக்குப்பிடிக்கக்கூடிய மூலோபாயத்தினை விரிவுபடுத்தவும் முயன்றது.
வேர்க்கஸ் லீக்கின் ஸ்தாபக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறிப்பிட்டதாவது; ''அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் அபிவிருத்தியின் இந்தக் கட்டத்தில் எமது மத்திய இடைமருவு கோரிக்கையானது, அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு கட்சியாக — ஒரு தொழிற் கட்சியை சிருஷ்டிப்பதாக இருக்கவேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பொருளாதார போராட்டங்களில் இருந்து ஆளும் வர்க்கத்திற்கும் அதன் அரசியல் கருவிகளுக்கும் எதிராக, ஒரு அடிப்படையான அரசியல் போராட்டத்திற்குச் செல்வது இன்றியமையாதது என்பதை தொழிலாள வர்க்கத்திற்கு சுட்டிக்காட்டியாக வேண்டும். இதன் மூலம் தொழிற் கட்சி கோரிக்கையானது, அமெரிக்காவில் எமது சகல வேலைகளையும் ஒன்றிணைக்கும் கோரிக்கையாக மாறுகின்றது. எமது சகல பிரச்சாரங்களிலும் கிளர்ச்சிகளிலும் தொழிலாள வர்க்க இளைஞர்கள், தொழிற்சங்கங்கள், சிறுபான்மை மக்களிடையே யுத்தப் பிரச்சனையை சுற்றி ஊடுருவ வேண்டும். ....
''இடம்பெறும் வர்க்கப் போராட்டங்களிலும், பெரிதும் நனவான போராளிகளின் உணர்மையின் மட்டத்துடன் தொடர்புபட்டு, தொழிற் கட்சி பற்றிய பொதுக் கருத்துப்பாட்டினை இணைக்கும் வகையில் நாம் தொழிற் கட்சி சுலோகத்தினை சூழ்ந்த எமது பிரச்சாரத்தினையும், கிளர்ச்சியையும் அபிவிருத்தி செய்வது முக்கியம். இந்தக் கருத்துப்பாட்டினை, வெறும் வடிவமாகவும், பொதுவான விதத்திலும் முன்வைப்பதை தவிர்க்க வேண்டும். இந்த விதத்தில் ஒரு தொழிற் கட்சி, அமெரிக்க தொழிற்சங்க இயக்கத்தினை அதன் முக்கிய தளமாகக் கொள்ளும் அதேவேளையில் இது இன்றும் உடனடியான எதிர்காலத்திலும் ஒரு தொழிற் கட்சிக்கான முக்கிய உந்துசக்தி கட்டாயம் தொழிற்சங்கங்களில் இருந்தே வந்தாக வேண்டும் என்பதைக் குறிக்கவில்லை. ஒரு தொழிற் கட்சிக்கான திசையிலான ஆரம்ப அபிவிருத்திகள் தெற்கில் உள்ள நீக்ரோ இயக்கங்களின் உள்ளோ, வடக்கின் சேரிகளின் நீக்ரோக்கள் மற்றும் சிறுபான்மை மக்களிடையேயோ, யுத்தப் பிரச்சனையைச் சூழவோ ஆரம்பிக்க முடியும். அத்தகைய சகல விடயங்களிலும் நாம் இந்த இயக்கங்களினுள் வர்க்கத்தின் பரந்த தட்டினரையும் — குறிப்பாக தொழிற்சங்க இயக்கம் நோக்கியும் திரும்பப் போராட வேண்டும். தொழிற் கட்சியை நோக்கிய இயக்கம், தொழிற்சங்க இயக்கத்திற்கு வெளியே அதன் ஆரம்பத்தைத் தொடங்கினாலும், அது ஒரு தீர்க்கமான சக்தியாக அபிவிருத்தியடைய முன்னர் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் இயக்கத்தினுள் ஒரு தளத்தினை அபிவிருத்தி செய்தாக வேண்டும். மேலும் அத்தகைய இயக்கங்கள் ஒரு வர்க்கத்திற்கான முழுமையான இயக்கமாவதற்கு போராடுவதற்குப் பதிலாக, வெற்றி கொண்ட வர்க்க வேலைத்திட்டங்களின் மத்தியிலும் அவை இன்றுள்ள முதலாளித்துவக் கட்சிகளிடையே அவற்றை தூக்கிவீசுவதற்கு பதிலாக அவற்றிடையே சூழ்ச்சி செய்யும் ஒன்றாக மாறும்'' .
இந்தப் பந்திகள் தெளிவாகச் சுட்டிக்காட்டுவதுபோல், தொழிற் கட்சிக்கான போராட்டம், தொழிற்சங்கங்களினுள் அதன் செல்வாக்கை நிலைநாட்டும் வேர்க்கஸ் லீக்கின் போராட்டத்துடன் இணைந்துள்ளது. 1966ல் தொழிற்சங்கங்களுக்கும், தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே இருந்துவந்த உறவுகளுக்கும், இன்றுள்ள உறவுகளுக்கும் இடையேயான பாரிய வேறுபாட்டை சுட்டிக்காட்டுவது அவசியமல்ல. பின்வருவதை மனதில் கொள்ளவும்: வேர்க்கஸ் லீக்கின் ஆரம்பத்திற்கும், பிளின்ட் (Flint) உள்ளமர்வுப் போராட்டத்திற்கும் அதேபோல் இன்றைய அங்கத்தவர் கூட்டத்திற்கும் இடையில் இருந்த பலவருடங்கள் வித்தியாசத்தை நினைவிற்கொள்ளவேண்டும். எமக்கு வியட்நாமில் அமெரிக்காவின் நேரடி இராணுவத் தலையீட்டின் முடிவினைக்காட்டிலும், அன்று இரண்டாம் உலகப் போரின் முடிவு எமக்கு மிகவும் சமீபகால சம்பவமாகும். இரண்டாம் உலக போரின் படையாட்களாக இருந்தவர்களும் 1945-46ன் மாபெரும் தொழிற்துறை வேலைநிறுத்தங்களில் கலந்துகொண்டவர்களுமான தொழிற்துறை தொழிலாளர்களில் பலர் அன்று இந்த அறையில் உள்ளவர்களில் கணிசமானவர்களைக் காட்டிலும் வயதானவர்கள் அல்லர். அவர்கள் 40களின் நடுப்பகுதியில் இருந்தனர். உண்மையில் அன்று CIO கிளை அமைப்புக்கு இட்டுச் சென்ற போராட்டங்களில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை இன்னும் தொழிற்சாலைகளில் காணக்கூடியதாக இருந்தது.
அன்றைய காலகட்டத்தில் தொழிற்சங்கங்களின் தலைவர்களில் பலர், முன்னைய போராட்டங்களுடனான தனியார் இனங்காணல் அவர்களின் சந்தர்ப்பவாதத்திற்கு ஒருவிதமான மூடுதிரையை வழங்கியது. அவர்களில் சிலரின் பெயரைக் குறிப்பிடின் UAW வின் ரொயிட்டர், மசே ரீம்ஸ்ராரின் ஜிம்மி ஹொப்பா (இவர் அணிதிரட்டும் உபாய அறிவினை பரோல் டொப்சிடம் இருந்து பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அத்தோடு தொழிற்சங்கத்தில் தமது நெருங்கிய சகாவாக இவர் பெயர் குறிப்பிட்ட ஹரோல்ட் ஹிப்சன் SWP உடன் தொடர்பு கொண்டிருந்தவர். ILWU வின் ஹரி பிரிட்ஜஸ், NMU வின் ஜேலர்ட், லோக்கல் 1199 ன் லியோன் டேவிஸ் இளம் தலைமுறையினரில் இருந்து வலதுசாரி ஷாக்ட்மன் வாதியான அல்பேர்ட் ஷங்கேர் மிகவும் முக்கிய புள்ளியாக விளங்கினார். இவரின் தேசிய செல்வாக்கு நியூயோர்க் ஆசிரியர் சம்மேளனத்தின் ஆளுமையை ஸ்தாபிதம் செய்த வேலைநிறுத்தங்களுக்கு தலைமை தாங்கியதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இவர்கள் அனைவரும் படுமோசமான போக்கிரிகளாக விளங்கினர் ஆனால் இவர்கள் தொழிலாள வர்க்கத்தினுள் குறிப்பிட்ட நம்பகத்தன்மையை கொண்டிருந்தனர். இதில், அமெரிக்க முதலாளித்துவத்தின் மேலாதிக்கம் கொண்ட உலக அந்தஸ்து, ஒரு வர்க்க சமரசக் கொள்கையை வளர்த்த நிலைமைகளின் கீழ் அவர்கள் தொழிற்சங்கங்களை வழிநடத்தியது அவர்களின் நல்ல அதிர்ஷ்டமாகும்.
அன்றைய சமயத்தில், தொழிற்சங்கங்களிலிருந்து விலகி சுயாதீனமான ஒரு தொழிற் கட்சியை அபிவிருத்தி செய்வது என்ற கேள்வி இருந்திருக்க முடியாது. 28 ஆண்டுகளுக்கு முன்னதாக 1938ல் ட்ரொட்ஸ்கி விளக்கிய மூலோபாய நிலைப்பாடு, அதன் செல்லுபடியாகும் தன்மையைக் கொண்டிருந்தது. போரின் குறுக்கீட்டினாலும், பின்னர் கம்யூனிச எதிர்ப்பு பிற்போக்கின் ஆரம்பத்தினாலும் நாசமாக்கப்பட்ட CIO வின் அரசியல் அபிவிருத்தி புதுப்பிக்கப்பட வேண்டியிருந்தது. தொழிற் கட்சிக்கான கோரிக்கை, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், ஜனநாயகக் கட்சியுடன் கொண்டிருந்த அரசியல் கூட்டின் கொள்கையின் மிகவும் ஆபத்தானதும், காயப்படுத்தக்கூடியதுமான புள்ளியில் தாக்குவதற்கான கருவியாக விளங்கியது.
தொழிற் கட்சிக்கான பிரச்சாரம் (1972- 1978)
இதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், வேர்க்கஸ் லீக் தொழிற்சங்கங்கங்களின் உள்ளேயான அதன் வேலைகளை, தொழிற் கட்சிக்கான பிரச்சாரம், கிளர்ச்சியின் அடிப்படையில் அபிவிருத்தி செய்தது. 1968-75 இடைப்பட்ட வருடங்கள் தொழிற்துறை போர்க்குணத்தில் ஒரு மாபெரும் எழுச்சியைக் கண்டது: மின்சார தொழிற்துறை, மோட்டார் தொழிற்துறை, கிழக்கு கரை, மேற்கு கரை துறைமுகங்கள், 1970 வசந்தகால தபால் தொழிலாளர்களின் வெளிநடப்பு என.
1971ல் ஒரு வேலைநிறுத்தம் இல்லாமல் உருக்குத் தொழிலாளர்கள் வெற்றிகண்ட சம்பளத் தீர்வு 1971 ஆகஸ்டில் 15ல் சம்பளம், விலைகள் மீது 90 நாட்கள் சம்பள உறைவு கொள்கையை திணிக்கும் நிக்சனின் தீர்மானத்திற்கும் முத்தரப்பு —அரசாங்கம்-நிர்வாகம்-தொழிலாளர்— சம்பள சபையை நிர்மாணிக்கவும் தூண்டியது. சம்பள உறைவுக்காலம் முடிவடைந்ததும் வருடாந்த சம்பள அதிகரிப்பை 5.5 வீதத்திற்கு கட்டுப்படுத்துவது அதன் நோக்கமாக இருந்தது. இன்று அந்த அளவிலான வருடாந்த சம்பள அதிகரிப்பை வழங்குவது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட தாராண்மையாகக் கணிக்கப்படும். AFL அமைப்பின் பிற்போக்கு மரபுகளதும், அரசியலதும் அவதாரமான ஜோர்ஜ் மீனி இதனை அமெரிக்கத் தொழிலாளர் மீதான ஒரு யுத்தப் பிரகடனமாகவும் அமெரிக்காவில் பாசிசத்தினை நோக்கிய முதலாவது அடியாகவும் கண்டித்தார். இருப்பினும் அவர் சம்பள சபையில் கடமையாற்ற இணங்கினார். மீனியும் அவரின் AFL-CIO சகாக்களும் சம்பள கட்டுப்பாட்டுச் சபையில் இருந்து வெளியேறி, 5.5 வீத வரையறையை உடைத்து எறியவேண்டுமென்ற கோரிக்கையை மையமாகக்கொண்ட ஒரு சக்திவாய்ந்த அரசியல் பிரச்சாரத்தினை தொழிற்சங்கங்களுள் வேர்க்கஸ் லீக் அபிவிருத்தி செய்தது.
அந்த பிரச்சார இயக்கம் 1972 கோடைகாலத்தின் ஆரம்பத்தில் ஏன் ஒரு தொழிற் கட்சி அவசியம் என்ற பிரசுரத்தின் மூலம் பரந்த பிரிவினருக்கு விளங்கப்படுத்தியது. அப்பிரசுரத்தின் சுமார் 75,000 பிரதிகளை நாம் விற்பனை செய்தோம். இன்னொரு பிரசுரம் தொழிற்துறை தொழிலாளர்களிடையே வோலசின் (wallace) செல்வாக்கின் பெருக்கத்தை தடைசெய்வதற்கான ஒரே சிறந்த வழியாக, தொழிற் கட்சி உருவாவதை ஊக்குவிப்பதற்காக, வோலஸ் உண்மையில் எங்கு நின்று கொண்டிருக்கின்றார், என்ற பிரசுரம் எழுதப்பட்டது.
இந்தப்பிரசுரங்கள் 1972 அக்டோபரில் சிக்காக்கோ நகர சம்மேளனத்தை அணிதிரட்ட வழிவகுத்ததோடு வேர்க்கஸ் லீக் அங்கு ''தொழிற்சங்கத்திற்கான தொழிற்சங்கக் கூட்டினை'' (TUALP) நிறுவியது. இம்மாநாட்டுக்கு தொழிற்துறையின் சகல முக்கிய துறைகளையும் சேர்ந்த தொழிலாளர்கள் வருகை தந்தனர். அதன் இரண்டாவது மாநாடு 1973 பெப்ரவரியில் சென்ட் லூசியில் நடைபெற்றது. 1975 மார்ச்சில் டெட்ராயிட்டில் தொழிற்சங்கத்திற்கான தொழிற்சங்கக் கூட்டின் ஒரு வெற்றிகரமான மாநாட்டை கூட்டியபோது, அதில் 300 மேற்பட்ட பேராளர்கள் கலந்துகொண்டனர்.
''வேர்க்கஸ் லீக் ஆட்சிக்கான போராட்டத்தினதும், ஒரு பரந்த புரட்சிகரக் கட்சியை நிர்மாணிப்பதனதும் நிலைப்பாட்டில் இருந்து, தொழிற் கட்சிக்காக போராடுகிறது. தொழிற் கட்சி என்பது, ஆட்சிக்கான போராட்டத்திற்கான தயாரிப்பில் தொழிலாள வர்க்கம் எடுக்கவேண்டிய அவசியமான முதல் படியாகும். ஆனால் ஒருபோதும் ஏதோ ஒரு வகையான சர்வரோக நிவாரணியாகவும் ஒரு புரட்சிக் கட்சிக்கான பதிலீடாகவும் நோக்கப்படக்கூடாது''
1977 முன்னோக்கு தீர்மானத்தில் மீண்டும்: ''ஒரு தொழிற் கட்சிக்கான பிரச்சாரத்தினை அதிகரிப்பதன் அவசியத்தினை வலியுறுத்துகையில் தீர்க்கமான விவகாரம் வேர்க்கஸ் லீக்கினை கட்டி எழுப்புவதும், அதனை ஒரு பரந்த புரட்சிக் கட்சியாக பரிணாமம் செய்வதும் தீர்க்கமான பிரச்சினை என்பதை தோழர்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. நாம் இந்த நிலைப்பாட்டில் இருந்து மட்டுமே தொழிற் கட்சிக்காகப் போராடுகின்றோம்'' எனக் குறிப்பிட்டது.
1978 ன் முன்னோக்கு பிரேரணை
ஆயினும்கூட, இந்த எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், தொழிற் கட்சிக்கான போராட்டத்தில் கவனிக்கப்பட்ட அரசியல் தெளிவின்மை குறித்த அதிருப்தி தொடர்ந்து இருந்து வந்தது. மற்றொரு தொழிலாள வர்க்க கட்சியின் நிர்மாணத்துக்கான பொதுவான கோரிக்கையில், புரட்சிகர இயக்கத்தின் சுயாதீனப் பணிகள் இழக்கப்படக்கூடும் என்ற தொடர்ச்சியான ஆபத்தினை நாம் இனங்கண்டோம். மேலும் தொழிற் கட்சிக்கான அழைப்பு, முறைப்படுத்தப்பட்ட விதம் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு விடுக்கப்பட்ட ஒரு ''கோரிக்கையாக'' விளங்கியது. இது அதிகாரத்துவத்தின் சூழ்ச்சிகளுக்கு வேர்க்கஸ் லீக்கினை கீழ்ப்படியச் செய்யும் ஆபத்தினைக் கொண்டிருந்தது. UMW தலைமைக்கு எதிரான அங்கத்தவர்களின் ஒரு கிளர்ச்சியாகவும் பெடரல் அரசாங்கத்துடனான ஒரு மோதலாகவும் வடிவமெடுத்த 1977-78 சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில் எமது தலையீட்டின் பின்னர், நாம் தொழிற் கட்சி கேள்வியை ஒரு மீளாய்வுக்கு உள்ளாக்கினோம். அந்த ஆய்வின் மத்தியில் 1954ல் கனன் அபிவிருத்தி செய்த நிலைப்பாட்டின் ஒரு விமர்சன மதிப்பீடு விளங்கியது. அது தொழிற் கட்சியை ஸ்தாபிதம் செய்வதற்கான உத்வேகம் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து வருமென வாதிட்டது.
ஆனால் வேர்க்கஸ் லீக் பின்வருமாறு வாதிட்டது: ''நடைமுறையில், இதன் பொருள் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு அடிபணிந்துபோவதைக் கருதுகிறது. AFL-CIO வின் முழு அனுபவமும் அது இரண்டு முதலாளித்துவக் கட்சிகளுக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் நிஜமான சுயாதீனமான அரசியல் இயக்கத்தினை நாசமாக்க எதனையும் செய்யத் தயங்காது என்பதனைக் காட்டியுள்ளது. தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் எந்த ஒரு பிரிவினராலும் தலைமை தாங்கப்படும் எந்த ஒரு வகையறாவைச் சேர்ந்த அரசியல் இயக்கமும், ‘மூன்றாம்’ கட்சி அல்லது 'தொழிற் கட்சி' என அழைத்துக் கொள்கின்ற ஏதோ ஒன்றோ முதலாளித்துவத்தின் சேலைத் தலைப்பில் இருந்து விடுபட்ட ஒரு நிஜமான அரசியல் உடைவை எந்தவிதத்திலும் குறிக்காது.''
ஆவணம் இன்னொரு விதத்தில் தீர்க்கமான முன்னேற்றத்தைக் குறித்து நின்றது. ஒரு தொழிற் கட்சிக்கான இயக்கம், தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த சமூக இயக்கத்தினை எந்த அளவுக்கு பிரதிநிதித்துவம் செய்கின்றதோ அந்த அளவுக்கு மட்டுமே ஒரு புரட்சிகர பரிணாமத்தினை எடுக்கமுடியும் என்ற உண்மைக்கு அவதானத்தை திருப்பும்படி கோரியது. நாம் மேலும் கூறினோம்:
''தொழிற் கட்சி, வெறுமனே ‘தொழிற்சங்கவாதிகளின் அணியில் இடம்பெறும் ஒரு தீவிரவாத கிளர்ச்சியின்’ விளைபொருளாக இருக்கமுடியாது. தொழிற்சங்கங்களின் உள்ளேயான தன்னியல்பான எழுச்சிகள் தொழிற் கட்சியின் தோற்றத்தில் ஒரு தீர்க்கமான பாத்திரத்தினை வகிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. எனினும் இது தொழிற் கட்சிக்கான போராட்டம், அரசியல் துறையினுள் தொழிற்சங்க வாதத்தினை நேரடியாக விஸ்தரிப்பதற்கு அப்பாற்பட்டதல்ல என எண்ணுவது குறுகிய பார்வையை கொண்ட அடிப்படைத் தவறாகும். இது ஒரு சீர்திருத்தவாத கருத்துப்பாடாகும். முதலாளித்துவ அரசியலில் இருந்து துண்டித்துக்கொள்ள ஏற்படும் பரந்த இயக்கம், ஒடுக்கப்படும் மக்களின் சகல தரப்பினரதும் ஆத்திரத்தினால் தூண்டப்படும் ஒரு தன்னியல்பான வெடிப்பில் இருந்து எழும்''
றேகனின் காலப்பகுதி
நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல ரொனால்ட் றேகன் தெரிவுசெய்யப்பட்டமை முதலாளி வர்க்கத்தின் வர்க்க மூலோபாயத்தில் ஒரு பெரும் மாற்றத்தினை பிரதிநிதித்துவம் செய்ததோடு வர்க்க உறவுகளிலும் ஒரு ஆழமான மாற்றத்திற்கு இட்டுச் சென்றது. வேர்க்கஸ் லீக் இந்த மாற்றங்களுக்குத் துரிதமாக பதிலளித்ததுடன், றேகன் நிர்வாகம் தொழிலாள வர்க்கத்தின் மீதும் அதன் தொழிற்சங்கத்தின் மீதும் ஒரு பெரும் தாக்குதலை ஆரம்பிக்கும் எனவும் எச்சரிக்கை செய்தது. AFL-CIO தொழிற் சங்கங்களுள் இலட்சோபலட்சம் தொழிலாளர்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கும்போது, இப்போராட்ட சமயத்தில் தொழிற்சங்கங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொழிற் கட்சியை உருவாக்குவதற்கான அதன் பிரச்சார இயக்கத்தினை கட்சி விஸ்தரித்தது.
அதைத் தொடர்ந்து வந்த வருடங்களில் வேர்க்கஸ் லீக் எதிர்பார்த்தது போல, தொழிற்சங்கங்கள், போருக்குப் பின்னான காலப்பகுதியின் மிகவும் கசப்பான வர்க்கப் போராட்டங்களின் மையமாக இருந்தன. ஒவ்வொரு போராட்டங்களும் AFL-CIO இன் கொள்கைகளின் விளைவாக தோற்கடிக்கப்பட்டன. றேகன் தெரிவுசெய்யப்படுவதற்கு முன்னரே கிறைஸ்லர் (Chrysler) பிணை எடுப்புக்கான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தினை குறைக்கும் மற்றும் தொழில் அதிபர்களினதும் அரசினதும் முயற்சியோடு ஒத்துழைக்கும் தனது தயார்நிலையை காட்டிக்கொண்டது. றேகன் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பாற்கோவில் (PATCO) ஆரம்பித்து AFL-CIO தொழிற்சங்கமானது தொழிற்சங்மயப்படுத்தப்பட்ட தொழிலாளர்களை ஒன்றன்பின் ஒன்றாக வேண்டுமென்று தனிமைப்படுத்தி அதன் தோல்வியை உறுதி செய்தது.
எமது 1985 முன்னோக்குகள் தீர்மானத்தில், தொழிலாள வர்க்கத்தின் இக் காட்டிக்கொடுப்புக்களின் சடத்துவ அடிப்படையை ஆய்வு செய்தோம். நாம் எழுதியதாவது, ''தொழிற்சங்க அதிகாரத்துவம் வெறுமனே ஊழல் நிறைந்த தனிநபர்களின் கூட்டு அல்ல. ஒரு திட்டவட்டமான சமூகத் தட்டினைக் கொண்டுள்ளது. அது தொழிற்சங்க இயக்கத்துடன் ஒரு ஒட்டுண்ணித்தனமான உறவைக்கொண்டிருப்பதுடன், அது முதலாளித்துவத்திற்கு வழங்கும் சேவைகளின் அடிப்படையில், தான் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தினைக் காட்டிலும் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கிறது.
''AFL-CIO வின் அதிகாரசபையில் அதன் நிறைவேற்றுசபை 35 அங்கத்தவர்களை கொண்டுள்ளது — 31 தொழிற்சங்கங்களின் முன்னணி அதிகாரிகளும் அத்தோடு AFL-CIO தேசிய தலைமையகத்தின் உயர் அதிகாரிகளையும் கொண்டுள்ளது. அமெரிக்க தொழிற் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, 1983-84ல் இவர்கள் கூட்டு வருமானமாக 3.913.089 டாலர்களைப் பகிர்ந்துகொண்டனர். AFL-CIO நிறைவேற்றுசபையில் பிரதிநிதித்துவம் கொண்டுள்ள தொழிலாளர் அமைப்புக்களின் சகல அதிகாரிகள் உட்பட 1983-84ல் சம்பளமாகவும், செலவுகளாகவும் இவர்களின் கூட்டு வருமானம் 44.987.846 டாலர்களாகும். இந்த 31 தொழிற்சங்கங்களதும் AFL-CIO வினதும் முழு அதிகாரிகளையும் சேர்ப்பின் வருடாந்த சம்பள பட்டியல் விபரம் பின்வருமாறு: 321.677.435 டாலர்களாகும். இந்த ஆகாயத்தை எட்டும் புள்ளிவிபரங்களுடன் இன்னுமோர் 71.532.780 டாலர்கள் மேலதிக செலவுகளாக ஹோட்டல்கள், ‘வணிக’ மதியபோசனங்கள், இரவுப்போசனங்கள் என்பவற்றுக்கு சேர்க்கப்படவேண்டும். இந்தவிதத்தில் 35 அங்கத்தவர்களைக் கொண்ட AFL-CIO இன் நிறைவேற்றுக்குழு, ஆண்டொன்றுக்கு 400 மில்லியன் டாலர்களுக்கு சற்று குறைவாக உறிஞ்சிக்கொள்ளும் ஒரு பாரிய அதிகாரத்துவத்தின் சார்பில் பேசுகின்றது!
"உற்பத்தித்திறன் கொண்ட எதுவிதமான உழைப்பையும் வழங்காத குட்டி அதிகாரத்துவ குழுக்கள் தம்மால் பாதுகாக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ள தொழிலாளர்களின் அங்கத்துவப் பணத்தை தின்று தொண்டைக்குழி வரைக்கும் வயிற்றை நிரப்புகின்றார்கள். ஐக்கிய உருக்கு தொழிலாளர் சங்கத்திற்கு 45 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான தொகை சம்பளமாகவும், செலவாகவும் தேவையாகவுள்ளது. இது 1984ல் அங்கத்தவர்களால் செலுத்தப்பட்ட மொத்த அங்கத்துவ பணத்தின் 41 வீதத்துக்கு அதிகமானது. ஐக்கிய உருக்கு தொழிலாளர் சங்கத்தின் அதிகாரிகள் 1984ல் 61 மில்லியன் டாலர்களுக்கும் கூடியதை ஒழித்துக்கட்டினர். இது அங்கத்துவப் பணமாக தொழிற்சங்கங்களுக்கு கிடைத்த வருமானத்தில் கிட்டத்தட்ட 30 வீதத்துக்குச் சமமானது... தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மொத்தத்தில் ஆண்டொன்றுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை தின்று ஏப்பம் விடுவதை தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் சிறிய ஆனால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் பகுதியினரின் முழு வருமானத்தினதும் அடிப்படையில் மதிப்பீடு செய்வது நியாயமற்ற ஒன்றல்ல. இங்கு அதிகாரத்துவம், ஏகாதிபத்தியத்தினை அடிமைத்தனமாக பேணுவதனதும் இவர்களின் கம்யூனிச எதிர்ப்பு வெறியினதும், தொழிலாள வர்க்கத்தின் மீதான கெடி கலக்கத்தினதும், தொழிலாளர் இயக்கத்தின் உள்ளே முதலாளித்துவத்திற்கு எதிராக வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் நின்றுகொண்டுள்ளவர்களின் பேரிலான சகலர் மீதான அதன் வெறுப்பினதும் நிஜ அடிப்படையைக் கண்டுகொள்ள முடியும்."
இந்த பகுப்பாய்விலிருந்து நாம் இம்முடிவுக்கு வருகின்றோம்: ''அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் அணிதிரள்வானது ஆளும் வர்க்கத்தின் பெரும் ஊதியம் பெறும் ஏஜண்டுகளுக்கு எதிராக அங்கத்தவர்களை அணிதிரட்டும் — தொழிற்சங்கங்களின் உள்ளேயான ஒரு உள்நாட்டு யுத்த வடிவத்தினை நிச்சயம் எடுக்க வேண்டும். இந்தப் போராட்டத்தின் அரசியல் சாராம்சம், தொழிற்சங்கங்களுள் மார்க்சிசத்துக்கான போராட்டத்தினையும் AFL-CIO அதிகாரத்துவத்திற்கு பதிலீடாக ஒரு புரட்சிகரக் கட்சியை அமைப்பதையும் குறிக்கிறது. வேர்க்கஸ் லீக்கின் பணி இதுவேயாகும்”.
ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால், 1980கள் AFL-CIO விற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான உறவின் ஒரு திட்டவட்டமான மாற்றத்தினை குறித்தது. இது நேரடிப்பொறுப்பான தோல்விகளின் ஒரு பகுதி பட்டியல்கள் அதன் காட்டிக்கொடுப்புகளின் வரலாற்று பண்பினை காட்டுகின்றது: 1981 பாற்கோ (PATCO) 1983- 84ல் கொண்டினென்டல் எயர்லைன்ஸ், பெல்ப்ஸ் டொட்ஜ் கிறேகொன்ட், 1985-86ல் யூனைட்டட் எயர்லைன்ஸ், பான்-அமெரிக்கன் எயர்லைன்ஸ், சிக்காக்கோ ரிபியூன், ஹோர்மல், விலில்- பிட்ஸ்பேர்க், 1986-87 ல் TWA, USX ஸ்டீல், IBP பட்ரிக் குடாஹி, 1987- 88ல் டோன் மெரல், இன்ரநாஷனல் பேப்பர் 1989ல் பிட்ஸ்டன், ஈஸ்ரேன் போன்றவையே இக் காட்டிக்கொடுப்புகளாகும்.
WRP உடனான பிளவின் பின்னர் வேர்க்கஸ் லீக் முன்னோக்கு தொடர்பான வேலையில் AFL-CIO இன் காட்டிக்கொடுப்புகளின் வேலைத்திட்ட தாக்கம் தொடர்பாக போராடியது. 1988 ஜூலை பிரேரணை, தொழிற்சங்கங்களின் அடிப்படையிலான தொழிற் கட்சி என்ற சூத்திரத்தினை தொடர்ந்து பயன்படுத்திய வேளையிலும், இது தொழிற் கட்சிக்கான போராட்டத்திற்கும், புரட்சிகர இயக்கத்தின் அபிவிருத்திக்கும் இடையேயான உறவின் ஸ்தூலமான அர்த்தத்தில் நாம் புரிந்துகொள்வதில் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளமையை குறிப்பிட்டுக் காட்டியது. எந்தவிதமான சீர்திருத்தவாத தொழிற் கட்சியையும் நாம் நிராகரித்ததை இது தீர்க்கமான முறையில் ஊர்ஜிதம் செய்தது. தொழிற்சங்கங்களால் நிறுவப்பட்ட ஒரு அரசியல் கட்சிக்கு எந்த ஒரு நிலைமையிலும் எந்தவிதமான ஆதரவும் — விமர்சன ரீதியிலோ அல்லது வேறுவிதத்திலோ வழங்க வேர்க்கஸ் லீக் கடமைப்பட்டு இருக்கவில்லை என தெளிவாகக் குறிப்பிட்டோம். புரட்சிகர சோசலிசப் போக்கிலான ஒரு அபிவிருத்திக்கான நிஜ சாத்தியத்தினை ஒரு தொழிற் கட்சியின் ஸ்தாபிதம் உள்ளடக்கிக் கொண்டுள்ளதாக அது கருதுமிடத்து மட்டுமே வேர்க்கஸ் லீக்கின் ஆதரவும், தீவிரமான ஊக்குவிப்பும் அதற்கு கிடைக்கும் எனவும் குறிப்பட்டது.
ஆனால் அப்போதும் கூட தொழிற்சங்கங்களின் அடிப்படையிலான தொழிற் கட்சி என்ற பதம்- அது முழுப்பத்திரத்திலும் ஒரேயொரு பந்தியில் மட்டுமே காணப்பட்டது. இது நிகழ்வுகளால் காலாவதியாகிப்போயிருந்தது. உண்மையில் வேர்க்கஸ் லீக்கின் பத்திரங்களிலும், அறிக்கைகளிலும் அந்தப் பதம் இன்னும் காணப்படுவது எமது இயக்கத்தின் கடந்தகால பரிணாம அபிவிருத்தியின் ஏதோ ஒரு மிச்சசொச்சத்தை ஒத்திருந்தது.
1990 பெப்ரவரியில் நாம் குறிப்பிட்டதுபோல்: “காட்டிக்கொடுப்புகளதும், தோல்விகளதும் அளவுரீதியான அதிகரிப்பும், அதிகாரத்துவத்திற்கும் முகாமைத்துவத்திற்கும் இடையிலான உடனுழைப்பு பின்னலின் அதிகரிப்பும் ஒருபுறத்தில் அதிகாரத்துவத்துக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் இடையிலும் மறுபுறத்தில் அதிகாரத்துவத்துக்கும், தொழிலாள வர்க்கத்துக்கும் இடையேயும் உறவுகளில் பண்புரீதியான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. AFL-CIO இன் உயர்மட்டம் தொடக்கம் பிராந்திய தொழிற்சங்க அதிகாரிகள் வரை கீழேயும், தொழிற்சங்க தலைமை, பெருநிறுவன முகாமைத்துவத்தின் கட்டமைப்புடன் முழுமனே ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது....
“ஈஸ்ரேன் வேலைநிறுத்தத்திலும், யூனைட்டட் எயர்லைன்ஸ் தொழிலாளர்களை வாங்குதல் எனப்படுவதை திணிக்க விமான ஓட்டிகள் தலைமை செய்யும் முயற்சியிலும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பரிணாமம் கண்ட பாத்திரம் மிகவும் தெளிவாக வெளிப்பட்டது. ஈஸ்ரேன் கம்பனியில் தொழிலாளர்களின் தொழில், சம்பளம், நிவாரணங்களைக் காக்க சங்கத்தலைமை எதுவித பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை. ஆரம்பத்தில் இருந்தே அது தனது சார்பில் சலுகைகளைக் காக்கவும், நிறுவனங்களின் நிர்வாகத்தில் பதவிகளைப் பெறவும் பேரம்பேசி வந்தது”.
இறுதியாக 1992ல் சோவியத் அரசு அதிகாரத்துவத்தினால் கலைக்கப்பட்ட உலக வரலாற்று சூழலில், சர்வதேச அளவிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் தொழிலாளர் அதிகாரத்துவங்கள் இழைத்த காட்டிக்கொடுப்புக்களின் அடிப்படையில் நாம் அவசியமான முடிவுகளை எடுத்தோம்:
"சோவியத் ஒன்றியத்தின் சட்டரீதியான கலைப்பில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைகள் என்ன? எல்லாவற்றிற்கும் மேலாக சோவியத் அரசும் அதன் பொருளாதார அடித்தளங்களும் கீழே இருந்து தூக்கி வீசப்படவில்லை. அவை மேலிருந்து இல்லாதொழிக்கப்பட்டன. இந்த மாற்றம், பரந்த மக்களின் தலைக்கு மேலாக சிறிய அதிகாரத்துவ கும்பல் தமது பதவி அந்தஸ்துக்களை பாவித்து தொழிலாள வர்க்கத்தினை ஸ்தம்பிக்கச் செய்து, அதன் கடந்தகால வெற்றிகளை தொலைத்துக்கட்டி செய்யப்பட்டது. முன்னாள் சோவியத் ஒன்றியத்தினுள் நிகழ்ந்தது சர்வதேச நிகழ்வுப்போக்கின் ஒரு வெளிப்பாடாகும். உலகம் பூராவும் தொழிலாள வர்க்கம், முந்தைய காலப்பகுதியில் அவர்கள் நிர்மாணித்த தொழிற்சங்கம், கட்சி மட்டுமன்றி அரசும் கூட ஏகாதிபத்தியத்தின் நேரடி கருவிகளாக மாற்றப்பட்டுள்ளது என்ற உண்மையை எதிர்கொண்டுள்ளார்கள்.
“தொழிலாளர் அதிகாரத்துவங்கள் வர்க்கப் போராட்டத்தினை ‘மத்தியஸ்தம்’ செய்து வர்க்கங்களுக்கு இடையே ஒரு தாங்கி (BUFFER) போன்ற பாத்திரத்தினை வகித்துவந்த காலம் முடிந்துவிட்டது. அதிகாரத்துவம் பொதுவில் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நலன்களை காட்டிக்கொடுத்தாலும் அவர்கள் இன்னமும் ஒரு வரையறுக்கப்பட்ட விதத்தில் அதன் அன்றாட தேவைகளுக்கு சேவை செய்தன; அந்த அளவுக்கு தொழிலாள வர்க்க அமைப்புக்களின் தலைவர்களாக தாம் இருந்துகொண்டுள்ளதை நியாயப்படுத்தினர். அந்தக் காலப்பகுதி கடந்து சென்றுவிட்டது. இன்றைய காலப்பகுதியில் அதிகாரத்துவம் அத்தகைய எந்தவொரு சுயாதீனமான பங்கையும் வகிக்க முடியாது.
இது சோவியத் ஒன்றியத்தில் உள்ள அதிகாரத்துவத்திற்கு மட்டுமல்ல, அமெரிக்க தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவங்களை பொறுத்தமட்டிலும் உண்மையாகும். எமது கடந்த மாநாட்டில் நாம் இன்றைய தொழிற்சங்க தலைவர்களை தொழிலாள வர்க்கத்தின் நலன்களை மிகவும் வரையறுக்கப்பட்டதும், திரிபுசெய்யப்பட்டதுமான விதத்தில் தன்னும் பிரதிநிதித்துவம் செய்கின்ற சக்திகளாக வரைவிலக்கணம் செய்யமுடியாது என வலியுறுத்தினோம். AFL-CIO தலைவர்களை ''தொழிற்சங்க” தலைவர்களாக வரைவிலக்கணம் செய்வது அல்லது அதேவிடயத்தில் AFL-CIO ஒரு தொழிலாள வர்க்க அமைப்பாக வரைவிலக்கணம் செய்வதானது தொழிலாள வர்க்கத்தினை அவர்கள் முகங்கொடுக்கும் யதார்த்தத்தில் இருந்து இருட்டடிப்புச் செய்வதாகும்.
ஒரு புதிய கட்சியை நிறுவுதல்
ஒரு புதிய கட்டம் ஆரம்பமாகிவிட்டது
கடந்த இரண்டு சகாப்தங்களதும் ஆழமான பொருளாதார அரசியல் மாற்றங்கள் எம்மை எமது மூலோபாய பணிகளை ஒரு புதிய மதிப்பீட்டைச் செய்யும்படி கட்டாயப்படுத்தியுள்ளன. தொழிற்சங்கங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொழிற் கட்சியை அமைக்கும்படி நாம் அழைப்பு விடுக்கவில்லை. ஏனெனில், அத்தகையதொரு கட்சி சுயாதீனமான தொழிலாள வர்க்க அரசியலை நோக்கிய ஒரு முற்போக்கானதாகவோ —புரட்சிகரமானது என்பதைப்பற்றி குறிப்பிடவே தேவையில்லை— இருக்கப்போவதில்லை என்பது சர்ச்சைக்கு இடமற்ற உண்மையாகும். 1966ல் இருந்து எமது இந்த அரசியல் நிலைப்பாட்டின் அபிவிருத்தியை ஆய்வுசெய்கையில் இது தெளிவாகும். நாம் இந்த முடிவுக்கு வந்தது, அதிகாரத்துவத்தின் மிதமிஞ்சிய குற்றங்கள் பற்றிய அகநிலை பிரதிபலிப்பால் ஏற்பட்ட ஒரு விளைவு அல்ல.
தொழிற்சங்கங்களின் தன்மை மற்றும் அவை தொழிலாள வர்க்கத்துடன் கொண்டுள்ள உறவுகள் தொடர்பாக ஒரு புறநிலையான மாற்றம் ஏற்பட்டுள்ளது. தசாப்தக் கணக்கிலான அரசியல் சீரழிவானது அதிகாரத்துவத்தினை தொழிலாள வர்க்கத்தில் இருந்து ஆழமான முறையில் அந்நியப்படுத்தியுள்ளது. அது குறைந்த பட்சம் சீர்திருத்தவாத நோக்குக்களை பின்தொடர்வதாக இருந்தாலும் எந்தவொரு தீர்க்கமான அர்த்தத்திலும் AFL-CIO ஒரு தொழிலாள வர்க்க அமைப்பாக கருதப்பட முடியாதது. ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் AFL-CIO இன் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம் என நீங்கள் கருதவில்லையா என லேன் கிர்க்லான்ட் இடம் கேட்டக்கப்பட்டதற்கு, இது நீண்டகாலத்திற்கு முன்னரல்ல, அவர் கோம்பர்ஸின் (Gompers) காலத்திலிருந்து தொழிற்சங்கத்தின் கொள்கை இருந்ததைப் போலவே உள்ளது... மாற்றத்திற்கான காரணம் எதுவுமில்லை என்றார். உண்மையில், அவரது கொள்கை கோம்பர்ஸின் காலத்தில் இருந்ததல்ல. கோம்பர்ஸிடம் AFL இன் நோக்கங்கள் என்ன என கேட்கப்பட்டதற்கு அவர் ''பல!'' என பதிலளித்தார். ஒரு நேர்மையானவராக இருந்திருந்தால் லேன் கிர்க்லான்ட் இன் பதில் ''சில!'' என இருந்திருக்கும். AFL-CIO என்பது, அதனது தொழிலாள வர்க்க அங்கத்தவர்களின் நலன்களுக்கு முற்றிலும் விரோதமான ஒரு குட்டிமுதலாளித்துவ சமூக கூட்டை அடித்தளமாக கொண்டதாகும். இது தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கும் தேவைகளுக்கும் பொருந்தாது.
லேன் கிர்க்லான்ட் 15 ஆண்டுகளுக்கு மேலாக நிறைவேற்று சபையில் இருந்து எந்தவொரு இராஜினாமாவுக்கான கோரிக்கையையோ அல்லது எவ்விதமான குறிப்பிடத்தக்க எதிர்ப்பிற்கும் முகம்கொடுக்காமல் பெரும் அழிவுமிக்க ஒரு தொகை தோல்விகளை ஒழுங்கு செய்தார். இதே காலப்பகுதியில் அமெரிக்காவின் நிறுவனங்களின் இயக்குனர் சபைகளில் தலைகள் உருண்டோடின. செனட்டிலும் காங்கிரசிலும் முதலாளித்துவ வர்க்கம் தாராளமய ஸ்தாபகங்களை துடைத்துக்கட்டி வந்தது. ஆனால் தொழிலாளர் இயக்கத்தினுள், அதிகாரத்துவ உயர்மட்டத்தில் எதுவிதமான மாற்றங்களும் இடம்பெறவில்லை.
பின்வருவனவற்றை கவனத்தில் கொள்ளுங்கள்: 20ம் நூற்றாண்டின்போது அமெரிக்காவில் 18 ஜனாதிபதிகள் இருந்தார்கள் என நான் நினைக்கின்றேன். பிரித்தானிய மன்னர்கள் 7 பேர் இருந்தனர். 8 அல்லது 9 பாப்பரசர்கள் இருந்தனர். ஆனால் 40 ஆண்டுகளுக்கு முன்னர் CIO உடனான இணைப்பில் இருந்து பணியாற்றிய இருவர் உட்பட AFL க்கு நான்கு தலைவர்கள் மட்டுமே இருந்துள்ளனர். இது தொழிலாள வர்க்கத்தில் இருந்து எப்படி அந்நியப்பட்டிருந்து வந்துள்ளது என்பதற்கு ஒரு அளவீடாகும். AFL- CIO அமைப்பின் ஒரு அதிகாரி — நான் இங்கு சிறப்பாக குறிப்பிடுவது UMW (ஐக்கிய மோட்டார் தொழிலாளர்) தொழிற்சங்கத்தின் தலைவர் ரிச்சார்ட் ட்ரம்காவை (Richard Trumka) பற்றியதாகும். தம்மால் பேரளவில் தலைமை தாங்கப்பட்ட அமைப்பின் அங்கத்துவம், தாம் பதவிக்கு வந்த காலத்தில் இருந்த அங்கத்தவர் எண்ணிக்கையைக் காட்டிலும் மோசமாக வீழ்ச்சி கண்டுபோன நிலையிலும் கூட தொழிற்சங்க உயர்மட்டத்தில் அதிகாரத்தை அதிகரித்துக்கொள்ள முடிந்துள்ளது. இன்று லேன் கிர்க்லான்ட் இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டிருப்பின் அதற்குக் காரணம், AFL-CIO அமைப்பு இறுதியில் அங்கத்துவத்தின் நெருக்குவாரத்தினை ''பிரதிபலிப்பதால்'' அல்ல. அதற்குப் பதிலாக அவர் விலகும்படி நெருக்கப்பட்டுள்ளமை, இறுதியில் AFL-CIO சுருங்கியதானது அதிகாரத்துவத்தின் பகுதியினரை நேரடியாக பாதிப்பதோடு அதன் அணிகளுக்குள் அமைதியின்மையை ஏற்படுத்துகின்றது.
மற்றொன்று, குறைவான முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லாவிட்டாலும், AFL-CIO வின் சிதைவானது தொழிலாள வர்க்கத்தின் உள்ளே ஒரு மாற்று தீவிரவாத பரந்த இயக்கத்தின் தோற்றத்திற்கான வெற்றிடத்தை உருவாக்கிவிடும் என்பது தொடர்பாக முதலாளித்துவ மூலோபாயவாதிகளிடையே ஒரு கவலையை உருவாக்கியுள்ளது.
எவ்வாறெனினும் எமது பணி AFL-CIO அதிகாரத்துவத்தின் தலைவிதி பற்றி ஊகிப்பதோ அல்லது இல்லாத ஒரு முற்போக்கான போக்கின் பின்னால் அணிதிரள்வது பற்றியதோ அல்ல. AFL-CIO இன் வீழ்ச்சியில் இருந்து உரிய முடிவுகளை பெறவேண்டியதோடு, கட்சியின் புதிய பணிகளையும் சரியான முறையில் வகுக்க வேண்டும். தொழிலாள வர்க்கத்திற்கு வழங்கப்படக் கூடிய ஒரு தலைமை இருப்பின் அதனை எமது கட்சியினாலேயே வழங்கப்பட முடியும். உழைக்கும் மக்களுக்கு ஒரு புதிய பாதையை திறப்பதாயின் அதனை எமது அமைப்பினாலேயே திறக்கமுடியும். தலைமைத்துவ பிரச்சனையை ஒரு புத்திசாலித்தனமான தந்திரோபாயத்தின் அடிப்படையில் தீர்த்துவிட முடியாது. தொழிலாளர் வர்க்க தலைமை நெருக்கடியினை நாம் மற்றையோரை அத்தலைமையை வழங்கும்படி “கோருவதன்” மூலம் தீர்த்துவிட முடியாது. ஒரு புதிய கட்சி தேவையெனில், அதனை நாம்தான் கட்டியெழுப்பியாக வேண்டும்.
முன்னோக்குகளும் மூலோபாய பணிகளின் உருவாக்கமும்
புரட்சிகர அமைப்பின் மூலோபாய பணிகள் முதலும் முக்கியமுமாக அந்த சகாப்தத்தின் முக்கிய பண்புகளைப் பற்றிய விஞ்ஞான மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
தற்போதைய நெருக்கடியானது, வெறும் தற்போதைய காலகட்டத்திற்குரியதாக அல்லாது ஒரு முழு அமைப்புமுறை தொடர்பானது என அனைத்துலகக் குழு கருதுகின்றது. இறுதி ஆய்வுகளில் இந்த நெருக்கடி முதலாளித்துவ அமைப்பின் அடிப்படைப் பிரச்சனையில், அதாவது இலாபவீத வீழ்ச்சி காணும் போக்கினை ஈடுசெய்யும் விதத்தில் போதுமான உபரிமதிப்பை கறப்பதில் வேரூன்றி உள்ளது. தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக முதலாளித்துவத்தினால் தூண்டிவிடப்பட்ட தொழில்நுட்பப் புரட்சி பொருளாதார சக்தியை வெறுமனே புரிந்துகொள்ளப்பட்டதற்கான ஒரு பிரதிபலிப்பல்ல, மாறாக அதற்கு நிஜ அரசியல் சமூக நோக்கங்கள் இருக்கின்றன என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன். இது முதலாளித்துவத்தின் அடிப்படையான முரண்பாடுகளை ஆழமாக்கி உள்ளது, இது உண்மையில் ஒரு பிரச்சனையைத் தீர்க்க முயன்று அதனை ஒரு உயர்ந்த மட்டத்தில் மீள உருவாக்கியுள்ளது. சுரண்டல் வீதத்தினை உக்கிரமாக்கும் திசையில் பரந்த அளவிலான தொழிலாள வர்க்கப் பகுதியினரை உற்பத்திப் போக்கில் இருந்து வெளியே தள்ளியுள்ள இப்போக்கானது உழைப்பினால் உருவாக்கப்படும் மற்றும் சராசரி இலாப விகிதத்திற்கு அடித்தளமான உபரிமதிப்பின் மொத்த அளவினை குறைத்துள்ளது.
முக்கிய முதலாளித்துவ சக்திகளின் முதலாளித்துவத்தால் முன்னெடுக்கப்படும் உற்பத்தித்திறனை இடைவிடாது அதிகரிக்க செய்வதும், உற்பத்தி செலவை குறைப்பதும், மிகவும் மலிவான ஊதியத்தை கொண்ட உழைப்பாளிகளை தேடுவதும், தனது போட்டியாளர்களின் இழப்பில் சந்தையில் தனது பங்கை அதிகரிப்பதுமான சகல நடவடிக்கைகளும் இந்த புறநிலையான நிகழ்ச்சிப்போக்கின் மீது அழுத்தத்தை பிரதிபலிக்கின்றன.
இந்நெருக்கடியின் வளர்ச்சி தவிர்க்க முடியாத வகையில் இரண்டு திசைகளில் இட்டுச் செல்லுகின்றது:
1. சந்தையின் பங்குக்காக முதலாளித்துவ சக்திகளிடையே போராட்டத்தினை உக்கிரமாக்கும் விளைவாக போரை நோக்கியும்.
2. உலகளாவிய ஆதிக்கத்திற்கான தமது போராட்டத்துக்கும் உபரி மதிப்பிற்கான தனது தீராத உந்துதலுக்கும் தொழிலாளர்களின் மிகவும் அடிப்படையான தேவைகளை கூட கீழ்ப்படுத்தும் முதலாளித்துவத்தின் தேவையிலிருந்து தோன்றும் வர்க்கப் போராட்டங்கள் உக்கிரம் அடைவதன் பெறுபேறாக சமூகப் புரட்சியை நோக்கியுமாகும்.
சோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தம்பிதம்
அமெரிக்காவின் சமூக நிலைமை
புறநிலை நிலைமைகள் புரட்சியின் திசையில் இட்டுச் செல்கின்றது. ஆனால் வரலாற்றில் இருந்து நாம் அறிந்ததுபோல் புரட்சிகர நனவின் அபிவிருத்தி ஒரு தன்னியக்க நிகழ்ச்சிப்போக்கு அல்ல. முதலாளித்துவத்தின் ஆழமான முரண்பாடுகளால் உருவாக்கப்பட்ட தாக்கங்கள், அவற்றை நேரடியாக சோசலிச சிந்தனை வடிவங்களாக மாற்றிவிடுவதில்லை. ஒரு குறிப்பட்ட புறநிலை நிலைமையில் தொழிலாள வர்க்கத்தின் பிரதிபலிப்பானது அக்குறிப்பிட்ட காலத்தின் பரந்த வரலாற்று நிபந்தனைக்குட்பட்ட சிக்கல்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இவை உண்மையில் நாட்டுக்கு நாடு வேறுபடலாம். ஆனால் ஒவ்வொரு விடயத்திலும் மார்க்சிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்தின் சிந்தனையுள் மேலும் சொன்னால் தொழிலாள வர்க்கத்தின் இதயத்தினுள் செல்லும் பாதையைக் கண்டாக வேண்டும்.
லீக்கினை கட்சியாக பரிணாமம் செய்கையில் நாம் உழைக்கும் மக்களின் பரந்த பகுதியினரிடையே முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடி வெளிப்படும் விதத்தினை கவனத்தில் கொள்ள வேண்டும். மிகவும் தெளிவாகச் சொன்னால் இலட்சோபலட்சம் உழைக்கும் மக்கள் வாழ்க்கைத் தரத்தில் இடைவிடாத வீழ்ச்சியை அனுபவித்துக் கொண்டுள்ளனர். அவர்கள் தமது தொழில் உத்தரவாதம் பற்றி இடைவிடாமல் அச்சம் கொண்டுள்ளனர். சம்பளம் வீழ்ச்சி கண்டு, விலைவாசி உயர்ச்சி அடைகையில் அதை ஈடுசெய்யும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க வாழ்க்கையில் தற்போது ஆதிக்கம் செலுத்துவது, முன்னொருபோதும் இல்லாத செல்வத்தை அனுபவிக்கும் சனத்தொகையில் சிறிய வீதத்தினருக்கும், பொருளாதார ஸ்திரப்பாட்டின்மையினதும் மற்றும் துயரத்தினதும் பல்வேறு மட்டத்தில் வாழும் உழைக்கும் மக்களின் பரந்த தட்டினருக்கும் இடையேயான இடைவெளி அதிகரிப்பாகும்.
செல்வத்தினதும் வறுமையினதும் சுட்டெண்கள்
சமீபத்தில் எனக்கு ''வறுமைக்கு எதிரான அமெரிக்காவின் யுத்தம்'' என்ற ஒரு புத்தகம் கிடைத்தது. அது அமெரிக்காவின் சமூக நிலைமைகள் பற்றிய பெறுமதியான தரவுகளைக் கொண்டுள்ளது. இந்த நூலிலிருந்து சில தகவல்களை மேற்கோள் காட்ட என்னை அனுமதிக்கவும்.
1977 முதல் 1988 வரை, செல்வந்தர்களான 1 வீதத்தினரின் வருமானங்கள் 96 வீதத்தினால் உயர்ந்தது. செல்வந்தர்களான ஐந்தில் ஒரு பங்கினரின் வருமானம் நூற்றுக்கு இருபத்தைந்து வீதத்தினாலும் உயர்ந்துள்ளதோடு, அமெரிக்க குடும்பங்களில் வறுமையான ஐந்தில் ஒரு பகுதியினரின் வருமானம் பத்து வீதத்துக்கும் மேலாக வீழ்ச்சி கண்டது.
1983-89 வரை அமெரிக்காவின் முழு செல்வத்தின் அதிகரித்த பங்கின் பெரும்பங்கு நூற்றுக்கு அறுபத்திரண்டு வீதம் — அந்த நாட்டின் செல்வந்தர்களான நூற்றுக்கு ஒரு பங்கினரிடம் சென்றது. கீழ்மட்டத்தினரான 80 சத வீதத்தினருக்கு அதிகரித்த பங்கில் நூற்றுற்கு ஒரு வீதமே கிடைத்தது. 1990ல் அமெரிக்க மக்களில் வறிய ஐந்தில் ஒரு பங்கினர் நாட்டின் மொத்த வருமானத்தில் 3.7 வீதத்தினை பெற்றனர். இது 1954இன் பின்னர் ஆகக் குறைந்த வீதமாகும். அதே ஆண்டில் செல்வந்தரான ஐந்தில் ஒரு பங்கினர் இதுகாறும் கண்டிராத உயர்ந்த வீதமான நாட்டின் மொத்த வருமானத்தில் அரைவாசிக்கு கூடுதலாகப் பெற்றனர்.
1943ல் டாலரின் இன்றைய பெறுமதியின் படி 1 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை வருடாந்த வருமானமாக பெற்ற சனத்தொகையினர் மத்திய அரசாங்கத்தினது குறிக்கப்பட்ட செலவுகளுக்கு தமது முழு வருமானத்தில் 78 வீதத்தினை செலுத்தினர். 1990ல் உயர்ந்த வருமானம் பெறும் நூற்றுக்கு ஒருவரின் வருமானத்தில் மத்திய அரசாங்கத்தின் வருமான வரிக்கு உட்பட்ட தொகை 21.5 வீதம் வரை வீழ்ச்சி கண்டது.
1979 வரையிலான சகாப்தத்தில் 200,000 டாலர்கள் அல்லது அதற்கும் கூடுதலான தொகையை முழுவருமானமாக பெற்ற வருமானவரி செலுத்துவோரின் எண்ணிக்கை (9,400 இலிருந்து 790,000) எட்டு மடங்கால் அதிகரித்த அதேவேளையில் அவர்களின் சமஷ்டி வருமானவரி விகிதம் 45.3 வீதத்தில் இருந்து 24,1 வீதமாக வீழ்ச்சி கண்டது.
1980ல் 57,000 ஆக இருந்த சொத்துக்களின்படி மில்லியனர்களின் தொகை 1988ல் 1.3 மில்லியன் ஆக அதிகரித்தது. 1972ல் இது 180,000 ஆகவும் 1964ல் 90,000 ஆகவும், 1953ல் 27,000 ஆகவும் விளங்கியது. 1994ல் அமெரிக்க செனட் சபையில் 28 மில்லியனர்களும், பிரதிநிதிகள் சபையில் 50 மில்லியனர்களும் இருந்தனர்.
தமது குடும்பங்களை வறுமைக்கோட்டுக்கு மேல் பாதுகாத்துக்கொள்ளும் அளவுக்கு உயர்ந்த வருமானம் பெறாத முழுநேரத் தொழில் புரிந்தவர்களின் எண்ணிக்கை 1979ல் இருந்து 1992 வரையிலான காலப்பகுதியில் 100 க்கு 50 வீதத்தால் அதிகரித்தது, இது முழு தொழிலாளர்களிடையே 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரித்தது. 10 அமெரிக்கரில் ஒருவர் இலவச உணவு மானியம் வழங்கும் உணவுக்களஞ்சியங்கள், சூப் சமையலறைகள் அல்லது உணவுதான மண்டபங்களுக்கு செல்ல நேரிட்டுள்ளது.
சிறுவர் வறுமை
ஐந்து அமெரிக்க குழந்தைகளில் ஒருவர், அதாவது 14.6 மில்லியன் ஏழைகளாவர். 1965ன் பின்னர் எந்தவொரு வருடத்தைக் காட்டிலும் 1992ல் அமெரிக்கச் சிறுவர்கள் வறுமையில் மூழ்கிப்போய் உள்ளனர், எனினும் இக்காலப் பகுதியில் அமெரிக்க மொத்த தேசிய உற்பத்தி (GNP) 53.2 வீதத்தினால் அதிகரித்தது. 1991ல் 18 வயதுக்கு குறைந்த 12 மில்லியன் குழந்தைகள் (அனைத்து குழந்தைகளிலும் 18.3 வீதம்) பட்டினியால் பீடிக்கப்பட்டு இருந்தனர். 1989க்கும் 1992க்கும் இடையே உணவு முத்திரை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை 41 வீதத்தினால் 13.3 மில்லியனாக அதிகரித்துள்ளது. 1990ல் தங்குமிடம் தேடும் வீடற்றோரில் குழந்தைகள் 30 சதவீதமாக இருந்தனர்.
1990ல் 15 மாநிலங்களில் சிறுவர் வறுமை 20 வீதமாகவும் அதற்கு கூடுதலாகவும் இருந்தது. மிசுசிப்பியிலும், லூசியானாவிலும் ஒவ்வொரு மூன்று குழந்தைக்கும் ஒரு குழந்தை ஏழையாக இருந்தது. நியூ மெக்சிக்கோவிலும், மேற்கு வேர்ஜினியாவிலும், கொலம்பியா மாவட்டத்திலும், ஆர்க்கான்சாவிலும் இது நாலுக்கு ஒன்றாக இருந்தது.
அமெரிக்க குழந்தைகள் கனேடிய குழந்தைகளை விட இருமடங்கு வறியோராகவும், பிரித்தானிய குழந்தைகளை விட மூன்று மடங்கு வறியோராகவும், பிரெஞ்சு குழந்தைகளைவிட நான்கு மடங்கு வறியோராகவும், ஜேர்மனி, ஒல்லாந்து, சுவீடன் குழந்தைகளை விட ஏழு தொடக்கம் பதின்மூன்று மடங்கு வறியோராகவும் உள்ளனர்.
1984 இற்கும் 1987 இற்கும் இடையில் அமெரிக்கா ஒரு உதாரணமான தொழிற்துறை நாடுகளுக்கு இடையே குழந்தைகளை வறுமையில் இருந்து விடுவிப்பதில் ஆகக்குறைந்த வெற்றி வீதத்தினையே கொண்டிருந்தது. இந்த வீதம் ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் போன்ற நாடுகளைக் காட்டிலும் 9 மடங்கு சிறியதாக விளங்கியது.
இரத்தச்சோகை மற்றும் உணவு பற்றாக்குறை என்பன வறிய குழந்தைகள், வயது வந்தோர்களிடையே பொதுவானதாகக் காணப்பட்டது. இரும்புச்சத்து பற்றாக்குறை, பொதுசனத் தொகையினரிடையே காணப்பட்டதைக் காட்டிலும் ஒரு வயது, இரண்டு வயதைக் கொண்ட குறைந்தமட்ட வருமான குழுவினரிடையே இரண்டு மடங்கு சாதாரணமாகக் காணப்பட்டது.
1989ல் 10,000 முதல் 15,000 டாலர் வருமானத்தைக் கொண்ட வீடுகளில் வசிக்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் 4.4 வீதத்தினர் ஒரு கணனியை (Computer) வீடுகளில் பயன்படுத்துகின்றனர். 40.000 முதல் 50,000 டாலருக்கு இடைப்பட்ட வருமானத்தைக் கொண்ட வீடுகளில் இந்த எண்ணிக்கை 27.7 வீதமாக உள்ளது.
1984 க்கும் 1994 க்கும் இடையே அமெரிக்கா அதன் ஒருங்கிணைந்த மனித தேவைகளின் பேரில் செலவிட்டதைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக பாதுகாப்புக்கு செலவிட்டது. கல்விக்கு செலவிட்டதைக் காட்டிலும் ஏறக்குறைய 15 மடங்கு அதிகமாக பாதுகாப்புக்கு செலவிட்டது.
சம்பளங்களும் பகுதிநேர தொழிலாளர்களும்
1970 க்கும் 1993 க்கும் இடையே கட்டாயத்தின் பேரிலான பகுதிநேரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 178 சதவீத அதிகரிப்பு காணப்பட்டது. இதேசமயம் முழுநேரத் தொழிலாளர் எண்ணிக்கை 51 வீதத்தினால் மட்டுமே அதிகரித்தது. குறைந்தபட்ச சம்பளம் பணவீக்க மட்டத்துடன் உயரவில்லை. குறைந்தபட்ச சம்பளம் பெறும் ஒரு முழுநேர, ஆண்டு பூராவும் உழைக்கும் தொழிலாளியின் வருமானம், மூன்று பேரைக்கொண்ட குடும்பத்தின் வருமானம் வறுமைக்கோட்டுக்கு கீழாக வீழ்ச்சி கண்டது.
1979 க்கும் 1989 க்கும் இடையே 17.2 மில்லியன் தொழில்கள் உருவாக்கப்பட்ட போதிலும் உயர்சம்பளம் பெறும், 17 இலட்சம் உற்பத்தி தொழிற்துறை தொழில்கள் மற்றும் சுரங்கத் தொழில்கள் இல்லாமல் போனதோடு சேவைத்துறையின் (Service sector) குறைந்த சம்பளம் பெறும் தொழில்கள் 18.8 மில்லியனால் உயர்ந்தது. புதிதாக உருவாக்கப்பட்ட வேலைகளில் பெரும்பாலானவை மிகவும் குறைந்த சம்பளம் வழங்கும் இரண்டு துறைகளான, அதாவது வாரத்திற்கு 276 டாலர் சம்பளம் வழங்கும் சில்லறை வர்த்தகத் துறையும், வாரத்திற்கு 357 டாலர் சம்பளம் வழங்கும் சேவைத் துறையும் விளங்கின.
சிறைச் சனத்தொகை
1980 களில் வேகமாக வளர்ச்சி காணும் ஒரு வீடமைப்பு வகையாக சிறைச்சாலைகள் விளங்கின. ஒவ்வொரு 250 அமெரிக்கரிலும் ஒருவருக்கு மேலாக ஏதேனும் ஒரு சீர்திருத்த சிறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது உலகின் அதிகூடிய சிறையிலிடப்பட்டோர் விகிதமாகும்.
1980இன் ஜனத்தொகை புள்ளிவிபரங்களின் படி 315,974 பேர் சிறையில் இருந்தனர். 10 ஆண்டுகளின் பின்னர் சிறையில் தள்ளப்பட்டோர் எண்ணிக்கை 1.1 மில்லியன் வரை 3 மடங்கால் அதிகரித்தது. இது முழு டெட்ராயிட் நகரத்தினதும் ஜனத்தொகையை தாண்டிச்செல்லும் புள்ளி விபரமாகும்.
சுகாதார காப்புறுதி
10,000 டாலருக்கும் குறைவான வருமானத்தைக் கொண்ட அமெரிக்கர்களில் 36 வீதமானோருக்கு சுகாதார காப்புறுதி கிடையாது. 1991ல் காப்புறுதி செய்யாத நோயாளியின் இறப்பு விகிதம், தனிப்பட்ட காப்புறுதி செய்த நோயாளிகளைக் காட்டிலும் நூற்றுக்கு 44 வீதம் தொடக்கம் 124 வீதம் வரை அதிகமாக இருந்தது. 1992 ஆம் ஆண்டில் ஏழை மக்களின் 5 இல் ஒரு ஒருவருக்கு சுகாதார காப்புறுதி இருக்கவேயில்லை.
புலம்பெயர்ந்தோர்
வறுமைக் கோட்டுக்கு கீழாக வாழும், புலம்பெயர்ந்து வந்த குடும்பங்களின் வீதாசாரம் 1979ல் 11 சதவீதத்திலிருந்து 1991ல் 31.7 வீதமாக அதிகரித்தது.
கிராமப்புற அமெரிக்கா
அமெரிக்க மக்கள்தொகையில் ¼ பங்கினரான 70 மில்லியன் மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவர்களில் 1/6 பங்கினர் வறுமையில் வாழ்கின்றனர். அமெரிக்க நிலச்சுவாந்தர்களில் உயர்மட்ட 5 சதவீதத்தினர், அமெரிக்க தனியுடமை நிலங்களில் 75 வீதத்தினைக் கொண்டுள்ளனர். அடிமட்டத்தில் உள்ள 78 சதவீதத்தினர் 3 சதவீதத்தினை மட்டுமே கொண்டுள்ளனர்.
1980-1990 க்கும் இடையே பண்ணைத் தொழில்கள் 22 வீதம் வீழ்ச்சி கண்டது.
மேலதிக புள்ளிவிபரங்கள்
குறைந்தது 2.3 மில்லியன் டாலர்கள் தேசியமதிப்புள்ள சொத்துக்களை கொண்ட 1 சதவீத அமெரிக்க செல்வந்த குடியிருப்பாளர்கள், நாட்டின் செல்வத்தில் 40 வீதத்துக்கும் மேலாக கொண்டுள்ளனர்.
3.8 மில்லியன் மக்களான உயர்மட்ட 4 வீதத்தினர், 49.2 மில்லியனான கீழ்மட்ட 51 வீதத்தினரினது மொத்த உழைப்பிற்கு சமமான வருவாயை ஈட்டினர்.
சனத்தொகையில், 0.5 சதவீதத்துக்கு குறைவானோர் கம்பனி பங்குகளில் 37.4 சதவீதத்தையும் தனிப்பட்ட வர்த்தக சொத்துக்களில் 56.2 சதவீதத்துக்கும் மேலாகவும் கொண்டுள்ளனர்.
உயர்மட்டத்தைச் சேர்ந்த 5 சதவீதத்தினர் 1979ல் 120,253 டாலர்களை வருமானமாக கொண்டிருந்து 1989ல் இது 148,428 டாலர்களாக அதிகரித்தனர். அதே நேரத்தில், வறிய 20 சதவீதத்தினரின் ஊதியம் 9,990 டாலர்களில் இருந்து 9,431 டாலர்களாக வீழ்ச்சி கண்டது.
உயர்மட்ட 20 சதவீதத்தினர் 4/5 பங்கினரைக் காட்டிலும் கூடிய வருமானத்தை பெற்றனர்.
தொழில்நுட்ப அபிவிருத்திகளின் தாக்கமும் உற்பத்தித் தொழில்நுட்பத்திலான மாற்றங்களும்
தொழிலாள வர்க்கத்தின் பொருளாதார அந்தஸ்திலும் சமூக நிலைமைகளிலுமான சீரழிவு, அதனை அதிகரிக்க செய்த தொழில்நுட்ப புரட்சியுடனும், உற்பத்தியின் பூகோளமயமாக்கத்துடனும் நேரடியாகத் தொடர்புபட்டது. உற்பத்தி சக்திகளின் தனிச்சொத்துடமை ஆட்சியின் கீழ், தொழிலாள வர்க்கம் தொழில்நுட்பத்திற்கு பலியாகியுள்ளனர். 19ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியினதும் 20ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியினதும் பாரிய உற்பத்திமுறைகளும், Assembly Line தொழிற்சாலைகளை நிறுவிய தொழில்நுட்பங்களுக்கு மாறாக உற்பத்தியின் கணினிமயமாக்கம் இலட்சோபலட்சம் மக்களை அவர்களின் தொழில்களிலிருந்து வெளியேற்றி வருகின்றது.
1950களில் அமெரிக்கத் தொழிலாளர்களில் 1/3 பங்கினர், உற்பத்தி தொழில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். 1990 அளவில் இத்தரவுகள் 17 வீதமாக விளங்கின.
1990ல் அமெரிக்க உருக்கு தொழிற்துறை 20,000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, 1980ல் 120,000 தொழிலாளர்களுடன் இது உற்பத்தி செய்ய முடிந்த உருக்கினை உற்பத்தி செய்தது.
1983-1993 க்கும் இடையே தன்னியக்க ''ரெல்லர்'' (Automatic Teller Machines) இயந்திரங்களின் அறிமுகம், 179,000 தொழில்களின் அழிப்புக்கு இட்டுச் சென்றது.
1947-1973 க்கும் இடையே வாரச் சம்பளம் ஆண்டொன்றுக்கு சராசரியாக நூற்றுக்கு 1.9 வீதத்தினால் அதிகரித்தது. 1973-1990 க்கும் இடையே அவை ஆண்டொன்றுக்கு உண்மையான அர்த்தத்தில் 0.9 வீதத்தினால் வீழ்ச்சி கண்டன.
1982ல் நிலையான டாலர்களில் அளக்கப்பட்டபோது, தொழிலாளர்களின் சராசரி சம்பளம், 1973இன் 308.03 டாலர்களில் இருந்து 1991ல் 260,37 டாலர்களாக வீழ்ச்சி கண்டது. இது வருமானத்தில் இடைவிடாத ஒரு வீழ்ச்சியாகும்.
1990களின் தொடக்கத்தில் சராசரி சம்பளத்தின் கொள்முதல் சக்தி, ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இருந்ததைவிட 15 வீதம் குறைவானதாகும்.
25 முதல் 34 வயதிற்குட்பட்ட ஆண் தொழிலாளர்களின் உழைப்பு வீதம் –நால்வரைக் கொண்ட ஒரு குடும்பத்தை ஆதரிக்க அவசியமானதெனக் கருதப்பட்டது– 1969ல் 13.6 வீதத்திலிருந்து 1993ல் 32.2 வீதமாக அதிகரித்துள்ளது.
புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் புதிய வகையறாவிலான தொழில்கள் தோன்றுகின்றன. ஆனால் அவை குறைந்த சம்பளத்தை வழங்குவதோடு குறைந்த பாதுகாப்பையும் வழங்குகின்றன.
இத்தகைய சமூக நிலைமைகளையிட்டு வேர்க்கஸ் லீக் அக்கறை செலுத்த வேண்டும். அங்ஙனம் செய்கையில், ஸ்ராலினிசத்தின் குற்றங்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு உருத்திரிக்கப்பட்ட சோசலிசத்தின் வரலாற்று முன்னோக்கினை தொழிலாள வர்க்கத்தின் தேவைகளுடன் தொடர்புபடுத்த வேண்டும்.
வேர்க்கஸ் லீக் ஒரு புதிய கட்சியை ஸ்தாபிதம் செய்கையில், அனைத்து குட்டிமுதலாளித்துவ தீவிரவாத குழுக்களில் இருந்தும் அவற்றின் போலிப்புரட்சிகர வார்த்தை ஜாலங்களில் இருந்தும், புரிந்துகொள்ளமுடியாத பெயர்களான மார்க்சிச–லெனினிச கூட்டு, லெனின்–ட்ரொட்ஸ்கி கட்சி, கம்யூனிச புரட்சியாளர்களின் கழகம் போன்றவற்றில் இருந்தும் வேறுபடுத்திக்கொள்ள வேண்டும். இவை அவற்றுள் சிலவாகும். எவ்வளவுக்கு எவ்வளவு அவர்களின் பெயர்கள் “புரட்சிகரமானதாக” ஒலிக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு சந்தர்ப்பவாதமும் நாற்றம் கண்டுள்ளது.
எமது கட்சியின் நோக்கம் அதனது பெயரில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டியதுடன், தொழிலாளர்களால் புரிந்து கொள்ளவும் இனங்காணவும் கூடியதாகவும் இருக்கவேண்டும். உண்மையில் கலந்துரையாடல் அவசியம், பிரதியீட்டுக்கான யோசனைகள் தெரிவிக்கப்படலாம். இச் சமயத்தில் நான் வேர்க்கஸ் லீக்கை சோசலிச சமத்துவக் கட்சியாக மாற்றுவதற்கான தயாரிப்புக்களை ஆரம்பிக்க பிரேரிக்கின்றேன்.
சுருக்கமாக குறிப்பிட்டால், இந்தக் கட்சியை தொழிலாள வர்க்கத்திற்கு முன்வைக்கையில், அதன் குறிக்கோள் ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதாகும் என்பதை நாம் தெளிவுபடுத்த வேண்டும். இதன் மூலம் தொழிலாளர்களுக்காக தொழிலாளர்களினால் நடத்தப்படும் ஒரு தொழிலாளர் அரசாங்கத்தையே நாம் கருதுகின்றோம். அத்தகைய ஒரு அரசாங்கம், தொழிலாள வர்க்க நலன்களுக்கு ஏற்ப, பொருளாதார வாழ்க்கையை மறுசீரமைக்கவும், சமூகத்தின் நாசகரமான சந்தை சக்திகளை வெற்றிகொண்டு, அவற்றை ஜனநாயக ரீதியிலான சமூகத்திட்டமிடல் மூலம் பதிலீடு செய்யவும், உழைக்கும் மக்களின் உடனடி சமூகத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் செல்வத்தை ஒரு தீவிரமானதும் சமூகரீதியில் நியாயமானதுமான முறையில் மறுபங்கீடு செய்வதன் மூலம், சோசலிசத்துக்கான அத்திவாரத்தினை இடவும் பயன்படுத்தும்.
சோசலிச சமத்துவக் கட்சியின் இந்த இலக்குகளை, தொழிலாள வர்க்கத்தின் ஒரு நனவான சர்வதேசியவாத இயக்கத்தின் ஒரு இணைந்த பாகமாக மட்டுமே யதார்த்தமாக்க முடியுமென நாம் வலியுறுத்துகின்றோம். ஏனைய நாடுகளில் உள்ள அதனது வர்க்க சகோதரர்களையும், சகோதரிகளையும் பல்தேசிய, நாடுகடந்த கூட்டுநிறுனங்கள் சுரண்டும் வரை அமெரிக்கத் தொழிலாளிக்கு சமூக சமத்துவமும், சமூக நீதியும் இருக்க முடியாது. மேலும் வர்க்கப் போராட்டம் அடிப்படையாகக் கொள்ளக்கூடிய எதுவிதமான தேசிய மூலோபாயமும் கிடையாது. தொழிலாள வர்க்கம் அதனது சர்வதேச மூலோபாயத்தினை, நாடுகடந்த கூட்டுநிறுவனங்களின் சர்வதேச மூலோபாயத்துக்கு எதிராக உறுதியாகவும், திட்டமிட்டவகையிலும் முன்வைத்தாக வேண்டும். சோசலிச வேலைத்திட்டத்திற்கான முக்கியமான இந்த தீர்மானகரமான பிரச்சனையில் எந்த சமரசத்துக்கும் இடம் கிடையாது.
சோசலிச சமத்துவக் கட்சிக்கான கோரிக்கைகள்
தொழிலாள வர்க்கத்தினை அரசியல் ரீதியில் அணிதிரட்ட உழைக்கையில், சோசலிச சமத்துவக் கட்சியானது இன்றுள்ள சமூக நிலைமைகளில் இருந்து தோன்றும் வெகுஜனங்களின் உடனடித் தேவைகளுக்கு கவனத்தைச் செலுத்தியாகவேண்டும். சர்வதேச மூலதனம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான இடைவிடாத தாக்குதலில் ஈடுபட்டுள்ள ஒரு சமயத்தில், சமூகக் கோரிக்கைகள் முழுமையானதும், ஒழிவுமறைவு அற்றதுமான ஒரு புரட்சிகரப் பண்பை பெறுகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக பழைய அமைப்புக்கள், சீர்திருத்த நடவடிக்கைகளின் ஊடாக சீர்திருத்தக் கோரிக்கைகளை ஈட்டிக்கொள்வது சாத்தியமாக இருந்திருக்குமானால் அவை அவற்றைக் கைவிட்டிருக்க மாட்டாது. உண்மையில் மிகவும் அடிப்படையான, தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு கோரிக்கையும் தொழிலாள வர்க்கத்திற்கும், முதலாளித்துவ அரசுக்கும் இடையேயான ஒரு நேரடி மோதுதலை தோற்றுவிக்கின்றது.
எமது வேலைத்திட்டத்தினுள் சேர்த்துக் கொள்ளும் கோரிக்கைகளை, நாம் தெளிவாகக் குறிப்பிட்டாக வேண்டும். எவ்வாறெனினும் எதிர்கால சோசலிச கற்பனாவாத இராஜ்யத்துக்கான ஒரு அறிக்கையாக ஒரு வேலைத்திட்டத்தினை எழுதவேண்டியது அவசியமில்லை. மாறாக அது அதனது புறநிலை நலன்களைக் கொண்ட ஒரு கூட்டு இலக்கினை தொழிலாள வர்க்கத்திற்கு வழங்கவேண்டும். மேலும் அது வெகுஜனங்களின் நனவில் ஒரு நரம்பை மீட்க வேண்டும். சமூக சமத்துவத்துக்கான கோரிக்கை, சோசலிச இயக்கத்துக்கான அடிப்படை நோக்கினை மட்டும் மொத்தத்தில் எடுத்துக் கூறவில்லை. அது கூடவே அமெரிக்கத் தொழிலாளர்களின் நிஜ ஜனநாயகமும், புரட்சிகரப் பாரம்பரியங்களும் வேரூன்றியுள்ள சமூக சமத்துவப் பாரம்பரியங்களையும் வெளிப்படுத்துகின்றது. அமெரிக்க வரலாற்றில் மாபெரும் சமூகப் போராட்டங்கள் அனைத்தும் தமது பதாகைகளில் சமூக சமத்துவத்துக்கான கோரிக்கையை பொறித்துக் கொண்டுள்ளன. இன்றுள்ள அரசியல் பிற்போக்கான சூழலில் இந்த இலட்சியம் இடைவிடாத தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது தற்செயலானதல்ல.
தந்திரோபாயக் கணிப்புகள்
இந்தப் பிரேரணையை அறிமுகம் செய்யுமிடத்து இது எந்தவிதத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதையிட்டு நாம் கவனம் செலுத்தியாக வேண்டும் என நான் நினைக்கின்றேன், ஏனெனில், வேர்க்கஸ் லீக்கில் இருந்து சோசலிச சமத்துவக் கட்சிக்கான பரிணாமம் என்பது, வெறுமனே இன்றுள்ள எமது சக்திகளை மறுசீரமைப்புச் செய்வதன்றி, பரந்த மக்களுடனான எமது உறவில் ஒரு மாற்றத்தையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. எனவே இந்த மாற்றமானது ஒரு பொறுமைமிக்க தயாரிப்பை வேண்டி நிற்கிறது. எமது பெயரை மாற்றி, எம்மை ஒரு புதிய கட்சியாகப் பிரகடனம் செய்வது மட்டும் போதாது. நாங்கள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு நிஜ சமூக இயக்கத்தினை ஊக்கி வளர்க்கவும், அதனால் இப்புதிய கட்சிக்கு ஒரு உறுதியான அத்திவாரத்தினை ஸ்தாபிதம் செய்ய பணியாற்ற வேண்டும்.
நாங்கள் 1996 தேர்தல் பிரசாரத்தை இந்த மாற்றம் அடித்தளமாக கொள்ளக்கூடிய சக்திகளை கட்டி எழுப்புவதற்காக பயன்படுத்துவோம். அதாவது, வேர்க்கஸ் லீக் 1996 இன் ஜனாதிபதி மற்றும் காங்கிரஸ் தேர்தல்களில் தனது சொந்த வேட்பாளர்களுடன் தலையிட வேண்டும். தேர்தல் அடையாளத்திற்காக சோசலிச சமத்துவ கட்சி என்ற பெயரையே பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் தொழிலாள வர்க்கத்தை அடித்தளமாக கொண்ட சமூக சமத்துவத்திற்கான ஒரு இயக்கத்தை தூண்டுவதனை விளங்கப்படுத்துவதற்காக இப்பிரச்சாரத்தை பயன்படுத்த வேண்டும். இப்பிரச்சாரத்தின் ஊடாக லீக்கினை கட்சியாக மாற்றுவதற்கான முறையான அத்தியாவசியமான அடித்தளத்தை அமைக்க வேண்டும்.
தோழர்களே, இந்த வகையிலேயே நாம் முன்னேறிச் செல்லவேண்டும் என முன்மொழிகின்றேன்.