ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trudeau’s “blackface” photos: How to oppose Canada’s Liberal government, and how not to

ட்ரூடோவின் "கருப்புமுக" புகைப்படங்கள்: கனடாவின் தாராளவாத அரசாங்கத்தை எவ்வாறு எதிர்ப்பது, எவ்வாறு எதிர்க்கக் கூடாது

Keith Jones
20 September 2019

கனடா பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ டைம் பத்திரிகை வெளியிட்ட ஒரு புகைப்படத்திற்குப் பதிலளிக்க, புதன்கிழமை மாலை அவரின் தாராளவாத கட்சி தேர்தல் பிரச்சார விமானத்திலேயே ஓர் அவசர பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட்டினார், அந்த புகைப்படம் அவர் அலாதீன் உடையணிந்து கருப்பு முகமாக ஒப்பனை செய்யப்பட்டிருந்ததைக் காட்டியது. ட்ரூடோ ஒரு சமயம் பாடம் நடத்தி வந்த ஒரு தனியார் பள்ளி ஆண்டுவிழா கையேட்டிலிருந்து எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் 2001 ஆம் ஆண்டுக்குரியது.

தவறை வருந்தி ஒப்புக்கொண்ட ட்ரூடோ, அப்போது அதை கருத்தில் கொள்ளவில்லை என்றாலும், இப்போது அதையொரு "இனவாத நடவடிக்கையாக" ஒப்புக் கொண்டு கனடா மக்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாக தெரிவித்தார். அவரின் விடலைப் பருவதில் உயர்நிலைப்பள்ளி திறமையாளர் போட்டியில் பங்கெடுத்த போது அதிலும் "கருப்பு முகம்" கொண்ட அவரின் இன்னொரு புகைப்படம் இருப்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.

இந்த புகைப்படங்கள் அரசியலிலும் ஊடகங்களிலும் கூச்சலை தூண்டின. அக்டோபர் 21 இல் நடக்கவுள்ள கனடாவின் கூட்டாட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தை ட்ரூடோ நேற்று இடைநிறுத்தினார்.

புதனன்று இரவு விமானநிலைய வளாகத்திலேயே அவசர அவசரமாக ஒழுங்கமைத்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், ட்ரூடோவின் பிரதான எதிர்ப்பாளர், பழமைவாத கட்சி தலைவர் ஆண்ட்ரூ ஷீர் (Andrew Scheer) கூறுகையில், அவர் "மிகவும் அதிர்ச்சியும் ஏமாற்றமும்" அடைந்திருப்பதாக கூறியதுடன், ட்ரூடோ "இந்நாட்டை நிர்வகிக்க பொருத்தமற்றவர்" என்று அறிவித்தார். அவரின் சொந்த கட்சியே தீவிர வலதுசாரி சக்திகளுடன் தொடர்பில் இருப்பதையும் மற்றும் ட்ரம்பின் புலம்பெயர்ந்தோர்-விரோத மனிதவேட்டையிலிருந்து தப்பி வரும் அகதிகளுக்கு எதிரான அதன் அதிதீவிர பிரச்சாரமும் ஒருபுறம் இருக்க, ஷீர், “பழுப்புநிற முகம் (brownface) அணிவது ... 2011 இல் எந்தளவுக்கு இனவாதமாக இருந்ததோ 2019 இலும் அது அதேயளவுக்கு இனவாதம் தான்,” என்று உணர்ச்சிகரமாக அறிவித்தார்.


ஜனாதிபதி டொனால்ட் ஜெ. ட்ரம்பும் கனடாவின் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோவும், அவர்களின் பிரதிநிதிகள் குழு உறுப்பினர்களுடன் சேர்ந்து, பிரான்சின் பியாரிட்ஸ் இல், ஆகஸ்ட் 25, 2019 ஞாயிற்றுக்கிழமை ஜி7 உச்சிமாநாட்டு தளத்தில், பெல்வியு டு மாநாட்டு மையத்தில் இருதரப்பு கூட்டத்தில் பங்கெடுத்த போது (Shealah Craighead இன் அதிகாரபூர்வ வெள்ளை மாளிகை புகைப்படம்)

குளோபல் நியூஸ் 1990 களின் ஆரம்பகால சிறிய காணொளி காட்சி ஒன்றை பிரசுரித்து, ட்ரூடோவின் கருப்புமுகத்தை மீண்டும் எடுத்துக்காட்டியதும், ட்ரூடோ "பொய்யுரைக்கிறார்" என்று குறைகூறி ஷீர் மீண்டும் தாக்கினார். அதன் பின்னர், அவரின் பழமைவாத கட்சி தான் கடந்த வாரம் குளோபல் நியூஸிற்குக் காணொளியை அனுப்பியதா என்று வினவியதும் ஷீர் அதை ஒப்புக் கொண்டார்.

ட்ரூடோ "தூய்மையுடன் வர" தவறிவிட்டார், இந்த படங்கள் இருப்பதை புதன்கிழமைக்கு முன்னர் அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்று குறைகூறியும், அப்பட்டமான பாசாங்குத்தனத்திற்காக அவரை குற்றஞ்சாட்டியும், பெருநிறுவன ஊடகங்கள், களைப்படையும் அளவுக்கு பணியாற்றின. "பன்முகத்தன்மை கொண்ட" கனேடிய பிரதம மந்திரி என்று அவரைப் பாராட்டி, ட்ரூடோ மீது முன்னர் நன்மதிப்பு வைத்திருந்தவர்களில் பலரும், இப்போது அவர் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்திருப்பதாகக் கூறுகின்றனர்.

ட்ரூடோ மற்றும் அவரின் தொழிற்சங்க ஆதரவு பெற்ற தாராளவாத அரசாங்கத்தை எதிர்க்க தொழிலாள வர்க்கத்திற்கு அனைத்து காரணங்களும் உள்ளன. அதுவொரு வலதுசாரி, பெருவணிக அரசாங்கமாகும், அது மருத்துவக் காப்பீட்டில் பத்து பில்லியன் கணக்கான வெட்டுக்களையும், சிக்கன நடவடிக்கைகளையும் திணித்துள்ளது; 2026 ஆம் ஆண்டளவில் இராணுவ செலவுகளை 70 சதவீதத்திற்கு அதிகமாக உயர்த்த உத்தரவிட்டுள்ளது; சீனா, ரஷ்யாவுக்கு எதிராகவும் மற்றும் எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கிலும் வாஷிங்டனின் சூறையாடும் இராணுவ-மூலோபாய தாக்குதல்களில் ஏதேனும் ஒன்று ஒரு பேரழிவுகரமான உலக போராக போய் முடியக்கூடிய நிலையிலும், அது வாஷிங்டனுடன் கனடாவை இன்னும் கூடுதலாக ஒருங்கிணைத்துள்ளது.

ஆனால் ட்ரூடோவின் பெருவணிக அரசியல் எதிர்ப்பாளர்களின் சூழ்ச்சிகள் மற்றும் ஆத்திரமூட்டல்களில் சிக்கிக் கொள்ளாமல், தொழிலாள வர்க்கம் அதன் சொந்த வர்க்க நிலைப்பாட்டில் இருந்து ட்ரூடோ அரசாங்கத்தை எதிர்க்க வேண்டும்.

இந்த "கருப்புமுக மோசடி" (“blackface scandal”) அரசியல் ஆத்திரமூட்டலுக்காகவே பிரத்யேகமாக ஜோடிக்கப்பட்டது. தசாப்தங்கள் பழமையான சம்பவங்களைக் கொண்டு திட்டந்தீட்டி பரப்பப்படும் அதை, ஆளும் வர்க்கத்தின் "தாராளவாத-இடது கன்னை" விடாப்பிடியாக உருவாக்கி வரும் இனவாத அடையாள அரசியலுக்காகவும், மற்றும் #MeToo வின் பிற்போக்கு பிரச்சாரத்தால் ஆதரித்து வளர்க்கப்படும் முழுமையான ஒழுக்கநெறி சூழலுக்கும் அது நிறைவேற்றுச் சாதனமாக ஆக்கப்படுகிறது.

இந்த போலி-மோசடி, ட்ரூடோவின் மதிப்பைச் சீர்குலைப்பதற்காக முதலாளித்துவ வர்க்கத்தின் குறிப்பிடத்தக்க ஒரு பிரிவால் ஆயுதமாக்கி கொள்ளப்பட்டு வருகிறது. இது ஏனென்றால் அவற்றின் வர்க்க போர் திட்டநிரலை நிறைவேற்றுவதில் அவர் போதியளவுக்கு ஈவிரக்கமின்றி இல்லை என அவை கருதுகின்றன. அரசாங்கத்தை நிலைகுலைக்கவும் மற்றும் அரசியலை இன்னும் வலதுக்கு அழுத்தமளிக்கவும் மோசடி-பழியுரைகளைப் பயன்படுத்துவதற்கு இணையான ஒரு முயற்சியில், இந்த கன்னை கியூபெக்கை மையமாக கொண்ட பொறியியல் துறை பெருநிறுவனம் SNC-Lavalin இன் குற்ற வழக்கை நிறுத்துவதற்காக சட்டத்தைத் திருத்தியும் மாற்றியும் ட்ரூடோ செய்த முயற்சிகளை மேற்கோளிட்டு, இந்த தேர்தலைத் தாராளவாத கட்சியின் ஊழல் மீதான ஒரு வெகுஜன வாக்கெடுப்பு என்பதாக வடிவமைக்க முயன்று வருகிறது.

ஏற்கனவே, கடந்த 15 மாதங்களில் கனடாவின் ஆளும் உயரடுக்கு அந்நாட்டின் மிகவும் மக்கள்தொகை நிறைந்த மூன்று மாகாணங்களான அன்டாரியோ, கியூபெக் மற்றும் அல்பேர்டாவில் வலதுசாரி வெகுஜனவாதிகள் தலைமையிலான அரசாங்கங்களை அதிகாரத்திற்குக் கொண்டு வர செயல்பட்டுள்ளது, இவை பொதுச் சேவைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகளை வெட்டி உள்ளன, மற்றும் கியூபெக் CAQ அரசாங்கத்தின் விடயத்தில், முஸ்லீம்கள் மற்றும் இதர மத சிறுபான்மையினரை இலக்கில் வைத்து பேரினவாத சட்டமசோதாவை நிறைவேற்றி உள்ளது.

“கருப்புமுக மோசடியின்" அரசியல் பலம், ட்ரூடோ அவரின் சொந்த பிற்போக்குத்தனமான அடையாள அரசியலை இடைவிடாது ஊக்குவித்ததுடன் பிணைந்துள்ளது. ட்ரூடோ, பெருவணிகங்களின் கட்டளைகளை நிறைவேற்றிய அதேவேளையில் மந்திரிசபையிலும், இராணுவம், முதலாளித்துவ அரசின் ஏனைய அமைப்புகள், கல்வித்துறை மற்றும் பெருநிறுவன நிர்வாகத்தின் உயர் பதவிகளிலும் இன, பாலின மற்றும் வம்ச "பன்முகத்தன்மைக்கு" அவர் அரசாங்கம் பொறுப்பேற்றிருப்பதாக தம்பட்டம் அடித்துள்ளார். அவரின் வெளியுறவுத்துறை அமைச்சர், போர் வெறியர் கிறிஸ்டியா ஃப்ரீலான்ட் "பெண்நிலைவாத வெளியுறவுக் கொள்கை" ஒன்றை நடைமுறைப்படுத்துகிறார், இதைக் கொண்டு அவர் வெனிசூலாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைத் தூக்கியெறிவதற்குத் திட்டமிடுவதில் அமெரிக்க துணை-ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ போன்றவர்களுடன் திரைமறைவில் செயல்படுகிறார்.

தாராளவாதிகளின் பாசாங்குத்தனமான முற்போக்கு அடையாள அரசியல் திட்டநிரல், உயர்மட்ட 1 மற்றும் 10 சதவீதத்திற்குள் கூடுதல் அதிகாரமும் தனிச்சலுகைகளும் பெற விரும்பும் ஓர் உயர்மட்ட நடுத்தர வர்க்க வட்டாரங்களைப் பேணிப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. அனைத்திற்கும் மேலாக, அது தொழிலாள வர்க்கத்தை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது, தொழிலாள வர்க்கம் உலகெங்கிலும் போலவே கனடாவிலும் அதிகரித்தளவில் பாரிய சமூக போராட்டங்களில் அதன் சுயாதீனமான வர்க்க நலன்களை வலியுறுத்தி வரும் நிலைமைகளின் கீழ், அதைப் பிளவுபடுத்தி வருகிறது.

தொழிலாளர்கள் எச்சரிக்கை அடைய வேண்டும். ட்ரூடோவுக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட மோசடியானது அதிவலது சக்திகள் உடனான பழமைவாதிகளின் உறவுகளைக் குறைத்துக் காட்டவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தாராளவாதிகள் அவர்களின் சொந்த எரிச்சலூட்டும் தேர்தல் நோக்கங்களுக்காக, பழமைவாத வேட்பாளர்களுடைய முந்தைய வெளிநாட்டவர் விரோத போக்கு, கருக்கலைப்பு-எதிர்ப்பு மற்றும் இனவாத சமூக-ஊடக பதிவுகளையும் உயர்த்திக் காட்டி வருகின்றனர். இப்போது பெருநிறுவன ஊடகங்கள், அல்லது குறைந்தபட்சம் அதில் பெரும்பாலானவை, ட்ரூடோவின் சொந்த "பாவங்களை" வைத்துப் பார்த்தால், அவை அனைத்தையும் தள்ளுபடி செய்து விட வேண்டும் என்று வாதிட்டு வருகின்றன.

ஆனால் யதார்த்தம் என்னவென்றால், அனைத்து முன்னேறிய முதலாளித்துவ நாடுகளைப் போலவே கனடாவிலும் பாரம்பரிய ஸ்தாபக கட்சிக்குள் இருந்து தீவிர-வலது சக்திகள் வெளிப்படுகின்றன. பழமைவாத கட்சியின் தேசிய தேர்தல் பிரச்சார தலைவரும், ஷீர் இன் 2017 தலைமை பிரச்சாரத்தின் முன்னாள் ஒழுங்கமைப்பாளருமான ஹமீஸ் மார்ஷல், கால்கரியை மையமாக கொண்ட அதிவலது ஊடகமான Rebel Media இன் முன்னாள் இயக்குனர் ஆவார், இந்த ஊடகம் பிரிட்டிஷ் நவ-பாசிசவாத ரொம் ரோபின்சனை ஊக்குவிக்கிறது. பழமைவாத கட்சி தலைவர் போட்டிக்கான 13 வது வாக்கெடுப்பில் கிட்டத்தட்ட இறுதி வரையில் ஷீரைக் கொண்டு சென்ற மாக்சைன் பேர்ணர், "பாரிய புலம்பெயர்வை" கனேடிய சமூகத்திற்கு ஓர் அச்சுறுத்தல் என்று கண்டித்து வரும், புதிதாக நிறுவப்பட்ட கனடா மக்கள் கட்சியின் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்டு வருகிறார். கடந்த இலையுதிர் காலத்தில் ஷீரின் ஆலோசகரும், பழமைவாத கட்சியின் முன்னாள் பிரதம மந்திரி ஸ்டீபென் ஹார்பரும், நிஜமான அச்சுறுத்தல் என்றவர் விவரிக்கும் சோசலிசத்தை எதிர்ப்பதற்காக அதிவலது கட்சிகளுடன் "பேச்சுவார்த்தை" நடத்த வாதிடும் ஒரு நூலைப் பிரசுரித்தார். அதில் அவர் உண்மையான அச்சுறுத்தல் "சோசலிசம்" என்று விவரித்தார்.

ட்ரூடோ வலதுசாரி வெகுஜனவாதத்தை எதிர்ப்பதாக வாதிடுகிறார். ஆனால் ஆளும் உயரடுக்கின் "தாராளவாத" அணி தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒருபோதும் முடிவில்லா தாக்குதல்கள் மற்றும் அதன் போர்களைக் கொண்டு வலதுசாரி வெகுஜனவாத வளர்ச்சிக்கான இடத்தை வளப்படுத்தி உள்ளது. இதேபோல அது எல்லாவற்றுக்கும் மேலாக ஏதேச்சதிகார ஆட்சி முறைகளை நோக்கி திரும்பி வருகிறது. ட்ரம்புடன் நெருக்கமாக பணியாற்ற ட்ரூடோ பின்னோக்கி வளைந்து கொடுத்துள்ளார் என்பதுடன் "தாராளவாத ஜனநாயக ஒழுங்கமைப்பை" பாதுகாப்பதில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மற்றும் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கல் அவரின் நெருக்கமான கூட்டாளிகளாக உள்ளனர். முதல் நபர் "அவசரகால நிலையை" வழமையாக்கி, தொழிலாள வர்க்கம் மீதான கடும் தாக்குதல்களைத் திணிக்க பாரியளவில் பொலிஸ் வன்முறையைப் பயன்படுத்தி உள்ளார். மேர்க்கெல், அவர் பங்கிற்கு, நவ-பாசிசவாத AfD இன் புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறார் என்பதோடு, கடந்த நூற்றாண்டில் மிகவும் பயங்கரமான குற்றங்களுக்கு இட்டுச் சென்ற ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் "உலக சக்தியாகும்" அரசியலை மீட்டுயிர்ப்பித்து வருகிறார்.

தொடர்ந்து ஆழமடைந்து வரும் உலக முதலாளித்துவ முறிவு நிலைமைகளின் கீழ், மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் ட்ரூடோ அரசாங்கம் மிகத் துரிதமாக தொழிலாள வர்க்கத்துடன் கண்மூடித்தனமான மோதலுக்கு வரும். 2018 தபால்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தைக் குற்றமயமாக்கியதிலும் மற்றும் உளவுத்துறை முகமைகளின் அதிகாரங்களை அது விரிவாக்கியதிலும் ஏற்கனவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளவாறு, தொழிலாள வர்க்க எதிர்ப்பைத் தொழிற்சங்கங்களால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் தாராளவாதிகள் ஒடுக்குமுறையில் தஞ்சமடைவார்கள்.

தொழிற்சங்கங்களும் சமூக-ஜனநாயகக் கட்சி NDP உம், தசாப்தங்களாக திட்டமிட்டு வர்க்க போராட்டத்தை ஒடுக்கியும், பாரியளவில் கூலி மற்றும் வேலை வெட்டுக்களைத் திணித்தும், பொதுச் சேவைகளைக் கலைப்பதில் திரைமறைவில் உடந்தையாய் இருந்தும் வந்துள்ளதால், அவை ஆழமாக மதிப்பிழந்துள்ளன.

ஒன்டாரியோவில் ஃபோர்ட் அரசாங்கத்திற்கு எதிராக எண்ணற்ற போராட்டங்கள், 2018 “சட்டவிரோத" கியூபெக் கிரேன் ஆபரேட்டர்கள் வேலைநிறுத்தம், மற்றும் நடக்கவிருக்கும் ஒஸ்ஹாவா ஜிஎம் உற்பத்தி ஆலைமூடலுக்கு எதிராக யூனிஃபர் சங்கத்தை எதிர்த்து ஒழுங்கமைக்கப்பட்ட வேலை இடைநிறுத்தங்கள் உட்பட இன்னும் பல போராட்டங்கள் அவர்களின் கட்டுப்பாட்டை மீறி வெடித்து வருகின்றன.

தொழிலாள வர்க்கத்தின் ஆரம்ப எழுச்சிக்கு ஒரு சோசலிச சர்வதேசியவாத முன்னோக்கை வழங்குவதே அத்தியாவசிய பணியாகும். சிக்கன நடவடிக்கைகள், விட்டுக்கொடுப்புகள் மற்றும் போர் என இவற்றுக்கு எதிரான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பலதரப்பட்ட போராட்டங்களை ஒரு தொழிலாள வர்க்க தொழில்துறை மற்றும் அரசியல் தாக்குதலாக இணைக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கை, சோசலிச கொள்கைகளுக்குப் பொறுப்பேற்ற ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டு வருவதையும் மற்றும் கனேடிய தொழிலாளர்களின் போராட்டங்களை, அண்மித்து 50,000 அமெரிக்க ஜிஎம் தொழிலாளர்களின் தற்போதைய வேலைநிறுத்தம் உட்பட அதிகரித்து வரும் உலகளாவிய தொழிலாள வர்க்க எழுச்சியுடன் ஐக்கியப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்.

இந்த போராட்டத்தை முன்னெடுக்க, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதியாக ஒரு புரட்சிகர தொழிலாள வர்க்க கட்சி, அதாவது சோசலிச சமத்துவக் கட்சி (கனடா), கட்டமைக்கப்பட வேண்டும்.