ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

දෙලක්ෂයක් රජයේ ගුරුවරු දෙදින වර්ජනය අරඹති

இலங்கையில் இரண்டு இலட்சம் அரசாங்க ஆசிரியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை நடத்தினர்

By our correspondents
27 September 2019

இலங்கையில் நாடு முழுவதும் 200,000 க்கும் மேற்பட்ட அரசாங்க ஆசிரியர்கள் தங்களது இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை நேற்று தொடங்கினர். பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் மூடப்பட்ட தென் மாகாணத்தின் பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களால் மட்டுமே வேலைநிறுத்தத்தில் பங்கேற்க முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


கொழும்பில் ஊர்வலமாகச் செல்லும் ஆசிரியர்களின் ஒரு பகுதியிர்

தமிழர்-விரோத மற்றும் முஸ்லிம்-விரோத பேரினவாத குழுக்களின் தூண்டுதல்களை நிராகரித்தும் தரவரிசை பிரிவுகளைக் கடந்தும் அனைத்து ஆசிரியர்களும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டமை வேலைநிறுத்தத்தின் மிக முக்கியமான வளர்ச்சியாகும். இதனால் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

வேலைநிறுத்தத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், "இந்த நேரத்தில்" அரச ஊழியர்கள் யாருக்கும் சம்பள உயர்வு கொடுக்க முடியாது என்று அமைச்சரவையின் ஒப்புதலுடன் நிதியமைச்சர் செய்த அறிவித்தலை ஏற்றுக்கொள்ள மறுத்து ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கியமை மற்றொரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.

ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் மோசமான நிலைமைகளை அறிந்த பெற்றோர்களும் உயர் வகுப்புகளின் மாணவர்களும் உலக சோசலிச வலைத் தளம் மற்றும் பிற ஊடகங்களுடன் பேசும்போது ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்திற்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

ஊதிய உயர்வுடன் சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டும், மேலதிக வேலையுடன் ஆசிரியர்களுக்கு சுமைகளை திணிக்க வேண்டாம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டும், பெற்றோரிடமிருந்து பணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும், அபகரிக்கப்பட்ட ஓய்வூதியத்தை மீளமைக்க வேண்டும் மற்றும் உயர் கல்வி பதவிகளுக்கு அரசாங்க கைக்கூலிகளை நியமிக்க வேண்டாம் ஆகியவை ஆசிரியர்களின் ஆறு கோரிக்கைகளாகும்.

இலங்கையிலும் சர்வதேச அளவிலும் வர்க்கப் போராட்டங்கள் வெடித்த நிலையிலேயே ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் நேற்று தொடங்கியது. நேற்றுடன் இலங்கையில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் 16 நாட்களை எட்டியது. நேற்று புகையிரத சாரதிகள், தொழில்நுட்ப அதிகாரிகள், நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட தொழிலாளர்கள் தொடங்கியுள்ள தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தால் புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சுகாதாரத் தொழிலாளர்களிடையே கோரிக்கைகளுக்காக போராட வேண்டிய அவசியம் உக்கிரமடைந்து வரும் நிலையில், அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் முறிந்தால், பல சுகாதார தொழிற்சங்கங்களில் உள்ள அதிகாரத்துவத்தினர் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தை நடத்த வேண்டி வரும் என அறிவிக்கத் தள்ளப்பட்டனர்.

இந்த ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்துக்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்ந்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்கள் அடங்கிய ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.

தீவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சுமார் நான்காயிரம் ஆசிரியர்கள் நேற்று கோட்டை புகையிரத நிலையம் முன் கூடி தங்கள் கோரிக்கைகளை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர். தொழிற்சங்கங்களின் மட்டுப்படுத்தல்கள் காரணமாக இந்தளவு எண்ணிக்கையிலான ஆசிரியர்களால் மட்டுமே அங்கு வருகைதர முடிந்தது என்றாலும், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் கொழும்புக்கு வந்து கூடியது இதுவே முதல் முறை என்று பல ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.

ஜனாதிபதி செயலகம் வரை ஒரு எதிர்ப்பு பேரணியை ஏற்பாடு செய்வதற்கே தொழிற்சங்க அதிகாரத்துவம் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆசிரியர்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் பேரணியாகச் சென்றபோது ஆயுதமேந்திய பொலிசார் வீதித் தடைகளைப் போட்டனர். கெஞ்சல்களுக்குப் பின்னர், பொலிஸ் அதிகாரிகளின் அனுமதியுடன், அவர்களது ஜீப்பில் ஏறி ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையோ அல்லது அவரது செயலாளரையோ சந்திக்க சங்கத் தலைவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இரண்டு மணி நேர காத்திருப்புக்குப் பின்னர் அதிகாரிகள் யாரையும் சந்திக்க முடியாமல் தொழிற்சங்க தலைவர்கள் வெறுங்கையுடன் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்துக்கு திரும்ப வந்தனர்.


பொலிஸின் வீதித் தடைக்கு முன்னே முன்னே திரண்டு நிற்கும் ஆசிரியர்கள்

ஜனாதிபதி சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான உபாய முரண்பாடுகள் காரணமாக உக்கிரமடையும் மோதல்களில் எதாவது நன்மை பெறலாம் என தொழிற்சங்கத் தலைவர்கள் கணக்கிட்டிருந்தால், ஜனாதிபதியும் பிரதமரின் அரசாங்கமும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தையும் கோரிக்கைகளையும் சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்த்தையே ஆசிரியர்கள் கண்டனர். தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினரின் கோரிக்கைகள் சம்பந்தமாகவும் இந்த இரு தரப்பினரதும் எதிர்ப்பில் வேறுபாடு கிடையாது.

ஆசிரியர்கள் முன்னிலையில் உரையாற்றிய தலைவர்கள், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் அக்டோபர் 7 முதல் 12 வரை ஐந்து நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுப் போவதாக அறிவித்தனர். "இந்த பிரச்சினையை காலையிலும், பகலிலும், இரவிலேனும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் தீர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம்," என ஜே.வி.பி. இயக்கும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் மஹிந்த ஜயசிங்க அறிவித்தார். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஜோசப் ஸ்ராலின், "நிச்சயமாக இரண்டு நாட்களுக்குள் ஒரு பேச்சுவார்த்தை வேண்டும்," என்று அறிவித்தார்.

போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியின் (மு.சோ.க.) கூட்டு ஆசிரியர்-சேவை சங்கத்தின் செயலாளர் சன்ஜீவ பண்டார, ஆசிரியர்களின் “சக்தி” குறித்து இன்னும் பல வாய்ச்சவடால்களை விடுத்தார். "இந்த நாட்டில் 265,000 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளனர்," என்று கூறிய அவர், அவர்களைச் சூழ "நாட்டின் மக்கள் சக்தி ஒன்றிணைந்தால் என்ன ஆகும்?" என்று கேட்டார். "பிரச்சினையை அது வரை கொண்டு செல்லாமல் பிரச்சினையைத் தீர்க்குமாறு நாங்கள் அரசாங்கத்தை கோருகிறோம்" என்று அவர் முடித்தார்.

அமெரிக்கா, மெக்சிக்கோ, ஜேர்மனி, பிரான்ஸ், போர்த்துக்கல் மற்றும் இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல நாடுகளிலும் சர்வதேச அளவில் ஆசிரியர்கள் தங்கள் ஊதியங்களையும் சேவை நிலைமைகளையும் மேம்படுத்த போராடி வரும் நிலையில், உலகம் முழுதும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு வக்காலத்து வாங்கிய சன்ஜீவ பண்டார, “உலகின் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆசிரியர்களுக்கு இன்று அதிக சம்பளத்தை வழங்குகிறார்கள்” என்றும் “கல்வியின் பெறுமதியை அந்த நாடுகள் அறிந்து வைத்துள்ளதாலேயே அவ்வாறு செய்கின்றன,” என்றும் குறிப்பிட்டார்.

முதலாளித்துவத்தின் உலக நெருக்கடி ஆழமடைகையில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசாங்கங்களும் ஆளும் வர்க்கங்களும் சர்வாதிகார மற்றும் பாசிச ஆட்சிகளுக்குத் திரும்பி, அத்தியாவசிய சமூக உரிமைகள் மற்றும் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வாழ்க்கை நிலைமைகளைத் துடைத்துக் கட்டுகின்றன.

ஏனைய தொழிற்சங்க அதிகாரத்துவங்களைப் போலவே, பண்டாரா, ஜெயசிங்க மற்றும் ஸ்ராலின் தலைமையிலான தொழிற்சங்க அதிகாரத்துவமும்,  ஆசிரியர்களின் உரிமைகள் நசுக்கப்படுவதற்கு மூலகாரணமாக இருக்கும் முதலாளித்துவ நெருக்கடியை மூடிமறைக்கின்றன. இதன் மூலம் நெருக்கடியைப் புரிந்துகொண்டு தொழிலாளர்கள் புரட்சிகர முடிவுகளை எட்டுவதைத் தடுக்கின்றன. அத்தகைய புரட்சிகர வேலைத் திட்டம் சம்பந்தமாக அவர்கள் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு, நேற்று சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) ஆசிரியர்கள் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் தலையீட்டிற்கு அவர்கள் காட்டிய எதிர்ப்பில் தெளிவாகியது.

சோ.ச.க. ஆசிரியர்கள் குழுவினரால் எழுதப்பட்டு உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான, இலங்கை ஆசிரியர்களின் போராட்டத்தில் வெற்றி பெறுவது எப்படி என்ற முன்நோக்கின் நூற்றுக்கணக்கான பிரதிகள் ஆசிரியர்களிடையே விநியோகிக்கப்பட்டு அவர்களுடன் அரசியல் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. சோ.ச.க. ஆசிரியர்கள் குழுவினர்கள் மட்டுமே ஒரு சாத்தியமான அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்வைக்கும் ஒரு ஆவணத்தை ஆசிரியர்கள் மத்தியில் விநியோகித்தனர். ஆசிரியர்கள் அந்தப் பிரசுரத்தை ஆர்வமாக படித்தனர். சிலர் அதை வாங்கிச் சென்று ஆர்ப்பாட்டகாரர்கள் மத்தியில் விநியோகித்தனர்.


சோ.ச.க. உறுப்பினர்களின் பிரச்சாரம்

எதிர்ப்பு அணிவகுப்பு தொடங்குவதற்கு முன்பு, ஆசிரியர்கள் முன்னோக்கு ஆவணத்தைப் வாசித்து, சோ.ச.க. உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கு நெருங்கிய போது, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மஹிந்த ஜயசிங்க, “இங்கு நாசமாக்க முயற்சிக்க வேண்டாம்” எனக் கூறி, சோ.ச.க உறுப்பினர் ஒருவரை அடிப்பதற்கு முயற்சித்தார்.

எனினும் தொழிலாளர்கள் யாரும் தொழிற்சங்கத் தலைவர்களின் தடங்கலுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. சோ.ச.க. உறுப்பினர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த ஒரு ஆசிரியர்கள் குழுவுக்கு முன்னால், ஒரு தொழிற்சங்கத் தலைவர் “இதை வாங்காதீர்கள்” என்று கூச்சலிட்டு, துண்டுப் பிரசுரத்தை கிழித்துப் போட்ட போதிலும், ஆசிரியர்கள் சோ.ச.க. பிரசுரத்தை வாசிக்க விரும்புவதாக தெரிவித்தனர்.

தொழிற்சங்க அதிகாரத்துவம் பரப்பிய மாயைகளை திவாலாக்கும் வகையில், இலங்கை அமைச்சரவையானது “இந்த சமயத்தில்” அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய நிதி செலவிட முடியாது என்று புதன்கிழமையே முடிவு செய்து விட்டது. ஜனவரி மாதம், சம்பள ஆணையத்தின் பரிந்துரைகளின்படி சம்பள உயர்வு வழங்கப்படலாம் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அடுத்த நாள் கொழும்பில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சமரவீர, "சிலர் தங்கள் குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலை திணிப்பதன் மூலம் பொதுச் சேவையை தவறாக வழிநடத்துகிறார்கள்" என்று வேலைநிறுத்தத்தில் இருந்த அனைத்து அரசாங்க ஊழியர்களையும் தாக்கிப் பேசினார்.

அரச ஊழியர்கள் இதுபோன்ற சதிகாரர்களின் பகடைக்காய்களாக மாறக்கூடாது என்று அவர் கூறினார். அரசாங்கம் போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தொழிலாளர்களை வேட்டையாட வழி தேட முற்படுகிறது என்பதே இதன் அர்த்தமாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள், பேரணி நகர்ந்து செல்லும்போது, “பல்கலைக்கழகக் கல்வி வெட்டுக்கு எதிராக கல்விசாரா ஊழியர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஐக்கியத்திற்காகப் போராடுவோம், ஆசிரியர்-மாணவர்-பெற்றோர்களின் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புவோம், தொழிலாள வர்க்கத்தின் சோசலிச அரசியல் இயக்கத்துக்காகப் போராடுவோம், முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்துக்காப் போராடுவோம், போன்ற சுலோகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி, சோ.ச.க. ஆசிரியர்கள் குழுவினரின் பதாகையின் கீழ் ஒரு ஆர்ப்பாட்டத்தை செய்தனர்.


சோ.ச.க. ஆசிரியர்கள் குழுவினரின் மறியல் போராட்டம்

பல ஆசிரியர்கள் தங்கள் போராட்டம் குறித்து உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசினர்.

களுத்துறை கமகொட கனிஷ்ட வித்தியாலயத்தின் அருண மற்றும் ஆனந்த:

“இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உள்ளே, புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம் (சோ.ச.க.இன் முன்னோடி) தொழிலாள வர்க்கத்தின் அரசியல் இயக்கத்தை உருவாக்க போராடியது. அப்போது நீங்கள் சொன்னதை நாங்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கவில்லை. ஆனால் இப்போது அத்தகைய போராட்டத்தின் தேவையை உணர்கிறோம். முதலாளித்துவ அமைப்பு முறையை சவால் செய்யாமல் கோரிக்கைகளை வெல்ல முடியாது. அதற்கு எங்களிடம் தலைமை மற்றும் வேலைத் திட்டம் இல்லை. நாங்கள் அதைப் பற்றி கலந்துரையாட விரும்புகிறோம்."


அருண மற்றும் ஆனந்த

அருண குறிப்பிடும் போது, “நான் இதை புதிதாகக் கேள்விப்படுகிறேன், ஆனால் அது உண்மைதான். 22 ஆண்டுகளாக இந்த கோரிக்கைகள் கிடைக்காமையானது இது முதலாளித்துவ அமைப்பு முறையின் நெருக்கடியின் விளைவே என்பதைக் குறிக்கிறது. குழுக்களை உருவாக்குவதுதான் நாங்கள் செய்ய வேண்டிய வேலை,” என்றார்.

வத்தளை பிரதேசத்தில் இருந்து இரண்டு முஸ்லிம் ஆசிரியர்கள் குறிப்பிட்டதாவது: “நாங்கள் அரசாங்கத்திற்கு எதிரான எங்கள் எதிர்ப்பைக் காட்ட இந்த போராட்டத்திற்கு வந்தோம். ஏனைய ஆசிரியர்களுக்கு சக்தியூட்டுவதற்கு. நாட்டில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளமை தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமையைக் காட்டுகிறது. ஏப்ரல் 21 தாக்குதலை சுரண்டிக்கொள்வதன் மூலம், அரசாங்கமும் பௌத்த அதி தீவிரவாத சக்திகளும் இந்த ஐக்கியத்தை உடைக்கவே முயன்றன.”

“தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான அரசியல் வேலைத்திட்டத்தை விரும்புகிறது, ஆனால் ஜே.வி.பி. உட்பட பிற கட்சிகள் முதலாளித்துவ கட்சிகள் மீது சாய்ந்து கொண்டிருக்கின்றன. ஜே.வி.பி. இப்போது ஐ.தே.க.வுக்கு வக்காலத்து வாங்குகிறது. இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரதான வேட்பாளர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை கிடையாது,” என்று குருநாகல் பகுதியில் இருந்து வந்த ஆசிரியர்கள் குழுவினர் குறிப்பிட்டனர்.

வேலைநிறுத்தத்திற்கு முன்னதாக, பேராதனையில் உள்ள ஆங்கில ஆசிரியர் கல்லூரியின் இரு ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய போது ஒருவர் பின்வருமாறு கூறினார்: ஆசிரியர்களின் போராட்டத்தில் மிக்கியப் பிரச்சினையாக இருப்பது என்னவெனில், இப்போது ஆசிரியர்கள் போராட்டத்திற்கு வருகின்றனர். ஆனால் இவற்றை ஒற்றுமையுடன் ஒழுங்கமைப்பது ஒரு பிரச்சினை. கட்சிகளோடு இணைந்து பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவர்கள் இப்போது அதை உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.”

கண்டியின் ரணபிமா அரச கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கும் மயூர கூறியதாவது: “ஆசிரியர்கள் கடுமையான போராட்டம் இல்லாமல் வாழ முடியாத நிலைமை உள்ளது. இந்த நாட்களில் நான் விடைத் தாள்களைத் திருத்திக்கொண்டிருக்கின்றேன். அவற்றைக் கூட ஓரத்தில் வைத்துவிட்டு நான் கொழும்பு பிரச்சாரத்திற்கு செல்கிறேன். அரசாங்கம் போகிற போக்கைப் பார்த்தால் இந்த ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஏதாவது பலன் கிடைக்கும் என்று கற்பனை செய்வது கடினம். தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகள் குறித்து எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை.”

இனவாத “எழுக தமிழ்” இயக்கத்தில் இணைந்து கொண்ட தமிழ் ஆசிரியர் சங்கம் வேலைநிறுத்தத்தை ஆதரிக்க மறுத்த நிலையிலும், யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர் பாலா குறிப்பிட்டதாவது: “நான் இந்த வேலைநிறுத்தத்தை ஆதரிக்கிறேன். ஆனால் இரண்டு நாள் வேலைநிறுத்தம் போதாது. நான் எந்த சங்கத்திலும் உறுப்பினராக இல்லை. ஆனாலும் ஆசிரியர்களின் போராட்டம் சர்வதேசரீதியானது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.”