Print Version|Feedback
Sri Lanka: Tamil People’s Council calls rally to stir up Tamil nationalism
இலங்கை: தமிழ் மக்கள் பேரவை தமிழ் தேசியவாதத்தை கிளறிவிடுவதற்காக பேரணிக்கு அழைப்புவிடுத்துள்ளது
By M. Thevarajah
14 September 2019
வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை, செப்டம்பர் 16 அன்று யாழ்ப்பாணத்தில் “எழுக தமிழ்” என்ற தலைப்பில் ஒரு பேரணியை ஏற்பாடு செய்துள்ளது. 2015 இறுதியில் தொடங்கப்பட்ட இந்த பிற்போக்கு தேசியவாத பிரச்சாரத்தை மீண்டும் தூக்கிப் பிடிப்பதானது இலங்கை தொழிலாளர்கள் போராட்டத்திற்கு வரந்து கொண்டிருக்கும் நிலையில், அவர்களை இன அடிப்படையில் பிளவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
தமிழ் மக்கள் பேரவையானது பல தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் சமூக குழுக்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் 30 ஆண்டுகால இரத்தக்களரி இனவாத போரின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களதும் ஒரு கூட்டணி அமைப்பாகும்.
பேரணியை அறிவிக்கும் ஒரு துண்டுப்பிரசுரத்தில் தமிழ் மக்கள் பேரவை ஆறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. தமிழர் "தாயகத்தில்" சிங்கள குடியேற்றத்தை நிறுத்து, இலங்கை போர்க் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்து, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், "காணாமல் போனவர்கள்" பற்றிய சர்வதேச விசாரணை வேண்டும், தமிழ் பிரதேசங்களில் இராணுவமயமாக்கலை நிறுத்து மற்றும் போரின் போது இடம்பெயர்ந்த அனைவரையும் மீளக்குடியமர்த்து, ஆகியவையே அந்த கோரிக்கைகளாகும். யாழ்ப்பாண பேரணியுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் சபையின் நியூ யோர்க் தலைமையகம் மற்றும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வெளியேயும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
தமிழ் மக்கள் பேரவையின் பிரச்சாரம், வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தின் பின்னர் தமிழர்கள் எதிர்கொண்டு வரும் துன்பங்களுக்கும், இரண்டு மாகாணங்களிலும் ஏறத்தாழ நிலவும் இராணுவ நிர்வாகத்திற்கும் ஒரு பிரதிபலிப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அதன் கோரிக்கைகள், "சர்வதேச சமூகத்தின்" ஆதரவைப் பெற்றால், தமிழ் மக்களுக்கு ஒரு தேசிய தீர்வு இருக்கிறது என்ற கொடிய மாயையை ஊக்குவிக்கிறது.
"சர்வதேச சமூகம்" என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் பிராந்தியத்தில் அதன் மூலோபாய பங்காளியான இந்தியாவையும் மற்றும் ஏனைய பிரதான வல்லரசுகளையும் குறிக்கும் ஒரு சொல் ஆகும். இந்த சக்திகள் மனித உரிமைகளை தொடர்ச்சியாக மீறுவதில் பேர் போனவையக உள்ள அதே வேளை, தங்கள் சொந்த புவி-அரசியல் நலன்களை முன்நகர்த்துவதற்காக குறிப்பிட்ட சில சிறுபான்மையினர் மீது வஞ்சத்தனமாக அக்கறையை வெளிப்படுத்துகின்றன. வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை நிபந்தனையின்றி வெளியேற்றுமாறு தமிழ் மக்கள் பேரவை கோரவில்லை, மாறாக இரண்டு மாகாணங்களிலும் "இராணுவமயமாக்கலை" நிறுத்துமாறு கொழும்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ் மக்கள் பேரவை தேசியவாத பிரச்சாரத்தினை மீண்டும் கையில் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போதைய அரசாங்கம் மற்றும் அதன் முக்கிய பங்காளியான தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட இலங்கை அரசியல் ஸ்தாபனமும் நாடு முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் முற்றிலும் மதிப்பிழந்து போயுள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் கூட்டமைப்பு பரவலான அவநம்பிக்கையை எதிர்கொண்ட சூழ்நிலையிலேயே விக்னேஸ்வரனும் அவரது கூட்டாளிகளும் 2015 இறுதியில் தமிழ் மக்கள் பேரவையை ஸ்தாபித்தனர்.
சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மீள் எழுச்சியுடன், சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்டுள்ள அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஊதியங்கள், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக, இலங்கை தொழிலாள வர்க்கத்தின் முக்கிய பிரிவினர் நாடு பூராவும் வேலைநிறுத்தங்களிலும் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் பல்கலைக்கழக கல்விசாரா தொழிலாளர்கள் ஊதியங்கள் மற்றும் நிலைமைகள் தொடர்பாக ஒரு தேசிய வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். செப்டம்பர் 26, 27ம் தேதிகளில் 200,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் இதேபோன்று வேலை நிறுத்தத்தை தொடங்க உள்ளனர்.
கொழும்பின் அரசியல் உயரடுக்கு மற்றும் அதன் முதலாளித்துவ தமிழ் கூட்டாளிகள், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இலங்கை தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த ஒரு இயக்கம் தலைதூக்க கூடும் எனப்தையிட்டு மரண பீதியில் உள்ளன. இது தற்போதுள்ள ஒழுங்கிற்கு ஆபத்தானது என்று அவர்கள் உணர்கிறார்கள்.
2015 ஜனவரியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெளியேற்றுவதற்காக அமெரிக்கா தலைமையிலான ஆட்சி மாற்ற நடவடிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய முதலாளித்துவக் கட்சிகளும் ஒப்புதல் அளித்ததுடன், மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி பதவியில் அமர்த்த உதவின. பெய்ஜிங்குடனான ராஜபக்ஷவின் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள் காரணமாக அவர் அகற்றப்பட வேண்டும் என வாஷிங்டன் விரும்பியது.
சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) தலைமையிலான ஒரு கூட்டணி, ஜனநாயக உரிமைகளை காப்பதாகவும், வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதாகவும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாகவும் உறுதியளித்தன. சிறிசேனவின் வாக்குறிதிகளில் எதையுமே மதிக்கும் எண்ணம் அவருக்கு இல்லாத போதிலும், அந்த போலி வாக்குறுதிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பகத்தன்மையை அளித்தது.
வாஷிங்டனின் கோரிக்கைகளுக்கு இணங்க, சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் சீனாவிலிருந்து இலங்கையை தூர விலக்கிக்கொண்டு, தனது வெளியுறவுக் கொள்கையை அமெரிக்கா மற்றும் இந்தியா பக்கம் மறு திசையமைவுபடுத்தியதுடன் அதன் இராணுவத்தை அமெரிக்கப் படைகளுடன் ஒருங்கிணைத்தது. இந்த மாற்றங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக ஒப்புதல் அளித்தது.
வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பானது இலங்கை அரசியல் ஸ்தாபனத்திற்குள் ஆழமான பிளவுகளை உருவாக்கியுள்ள அதே வேளை, ஆளும் உயரடுக்கின் அனைத்து பிரிவுகளும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கி நகர்வதில் ஒன்றுபட்டுள்ளன. ஏப்ரல் 21 அன்று இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவால் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, சிறிசேன அவசரகால நிலைமையப் பிரகடனப்படுத்தியதையும் இராணுவத்தை தேசிய அளவில் நிறுத்தியதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஒவ்வொரு பாராளுமன்றக் கட்சியும் ஆதரித்தன.
கடந்த அக்டோபரில், விக்னேஸ்வரன் ஒரு புதிய தமிழ் அரசியல் கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியை நிறுவினார். தனது கட்சி "மக்கள் அரசியலை" பின்பற்றுவதாக அறிவித்த அதே வேளை, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதாகவும், கொழும்பு மீது "சர்வதேச அழுத்தத்தைக் கொண்டுவருவதாகவும்", அவர் தெரிவித்தார் (பார்க்க: விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி: இலங்கை தொழிலாளர்களுக்கு ஒரு பொறிக்கிடங்கு).
தமிழ் மக்கள் பேரவையும் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த அடிப்படை வேறுபாடுகளையும் கொண்டிருக்காத அதே வேளை அதன் அமெரிக்க-சார்பு மற்றும் இந்திய-சார்பு பாதையையும் ஆதரிக்கின்றன. ஜூன் 3 அன்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய விக்னேஸ்வரன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இந்து மேலாதிக்க அரசாங்கம் மீண்டும் பதவிக்கு வந்ததைப் பாராட்டினார்.
"இந்தியாவில் ஆட்சிக்கு வந்துள்ள சக்திவாய்ந்த அரசாங்கத்தை நாங்கள் வரவேற்க வேண்டும்," என்று அவர் அறிவித்தார். மோடியின் பேரினவாத, முஸ்லிம்-விரோத பிரச்சாரத்தை ஆதரித்த அவர், இந்தியா பங்களாதேஷ் மற்றும் பாக்கிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளால் சூழப்பட்டுள்ளது என்றும், "இஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து ஆபத்துக்களை எதிர்கொள்கிறது" என்றும் வலியுறுத்தினார்.
பெய்ஜிங்கிற்கு எதிரான வாஷிங்டனின் புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப, விக்னேஸ்வரன் சீனாவின் கடல்சார் பட்டுப் பாதை திட்டத்தையும், பாகிஸ்தானுடனான அதன் ஒத்துழைப்பையும் தாக்கியதோடு, மேலும் சுற்றிவளைத்தல், சூழ்ந்தடைத்தல், சிக்கவைத்தல் என்ற மூன்று வழிகள் மூலம் இந்தியாவைச் சூழ்ந்து அந்நாட்டை சிக்கலுக்கு உள்ளாக்க இலங்கை மிகவும் பொருத்தமான மையப்புள்ளியாக இருக்கின்றது, என்று எச்சரித்தார்.
இலங்கையில் தமிழ் சுயாட்சி வழங்கப்பட்டால், இதுபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள புது தில்லிக்கு உதவும் என்று விக்னேஸ்வரன் கூறினார்: "எங்கள் சுயாட்சி அமையும்போது, அரபிக்கடலும் வங்கக் கடலும் இந்தியாவின் பாதுகாப்புக்காக கைகோர்க்க வேண்டிய நிலை ஏற்படும்."
அவற்றின் புவிசார் அரசியல் நலன்களுக்கு சேவை செய்யவும், சீனாவுக்கு எதிரான போர் தயாரிப்புகளுக்கு உதவவும் தமிழ் முதலாளித்துவம் தயாராக இருப்பதாக விக்னேஸ்வரனும் அவரது தமிழ் மக்கள் பேரவையும் புது டில்லிக்கும் வாஷிங்டனுக்கும் தெளிவாக சமிக்ஞை செய்கின்றன.
கொழும்பை தளமாகக் கொண்ட வீரகேசரி மற்றும் தினக்குரல் செய்தித்தாள்கள் உட்பட பல தமிழ் ஊடகக் குழுக்கள் தமிழ் மக்கள் பேரவையை ஆதரிப்பதுடன் அவை “எழுக தமிழ்” பிரச்சாரத்தை அங்கீகரிக்கும் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளன.
தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த தமிழ் மக்கள் பேரவை ஆலோசகர் எம். திருநாவுகரசின் கட்டுரை, “மாற்றுத் தலைமையை உருவாக்க விரும்பும் மக்களும் கட்சிகளும் இப்போது தங்கள் ஒற்றுமையைக் காட்ட முன்வர வேண்டும். ஏனைய கட்சி உறுப்பினர்கள் தடைகளை உடைத்து இந்த ஆர்ப்பாட்டத்தையும் ஈழ தேசியத்தையும் பலப்படுத்த வேண்டும்,” என அறிவித்தது.
தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தமிழ் மக்கள் பேரவையின் பிரச்சாரத்தையும் அதன் பிற்போக்கு தேசியவாத அரசியலையும் நிராகரிக்க வேண்டும். தமிழ் மக்கள் பேரவைக்கும் ஏனைய தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான தந்திரோபாய வேறுபாடுகளுக்கு அப்பால், அவை அனைத்தும் ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்வதுடன் இலங்கை மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை தடுக்க அவநம்பிக்கையுடன் முயற்சிக்கின்றன.
அதே காரணத்திற்காக, கொழும்பை தளமாகக் கொண்ட முதலாளித்துவ கட்சிகளும் அவற்றின் சிங்கள பேரினவாத கூட்டாளிகளும் தமிழர்-விரோத மற்றும் முஸ்லிம்-விரோத வாய்ச்சவடால்களை கட்டவிழ்த்து விடுகின்றன. இது, மறுபக்கம், தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் பிற்போக்கு தோரணைக்கும் அவற்றின் தேசியவாத பிரச்சாரங்களுக்கும் ஊக்கமளிக்கிறது. தொழிலாள வர்க்கத்திற்கும் ஏழைகளுக்கும் எதிரான சிங்கள மற்றும் தமிழ் ஆளும் உயரடுக்கின் "வர்க்க ஒற்றுமை" இதுவே ஆகும்.
இலங்கை இராணுவத்தால் புலிகள் தோற்கடிக்கப்பட்டது -2009 மே மாதம் நடந்த இறுதி இரத்தக்களரி தாக்குதல்களின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டது- ஒரு இராணுவ விடயம் மட்டுமல்ல, மாறாக அது தமிழ் தேசியவாதிகளின் அரசியல் முன்னோக்கின் வங்குரோத்தின் மோசமான வெளிப்பாடு ஆகும்.
புலிகள் மற்றும் பிற தமிழ் முதலாளித்துவக் கட்சிகளைப் போலவே தமிழ் மக்கள் பேரவையும் இலங்கை மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கு முற்றிலும் விரோதமானதாகும். ஏனெனில் இந்த அரசியல் ஒற்றுமை அவர்களின் வர்க்க நலன்களை அச்சுறுத்துகிறது.
தமிழர்கள் மீதான அடக்குமுறையின் தோற்றுவாய் முதலாளித்துவ முறைமையே ஆகும். 1948இல் சுதந்திரம் எனப்படுவது கிடைக்கப்பட்டதில் இருந்தே, கொழும்பு ஆளும் வர்க்கமும் அதன் அடுத்தடுத்த அரசாங்கங்களும் இலங்கை முதலாளித்துவத்தையும் இலாப முறைமையையும் பாதுகாக்க தமிழர்-விரோத பாகுபாட்டைப் பயன்படுத்தி வந்துள்ளன.
இந்த அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், தங்களது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவதற்கும், தமிழ் பேசும் தொழிலாளர்கள் தங்கள் சிங்கள சமதரப்பினருடன் ஒன்றிணைந்து ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இந்திய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திரும்ப வேண்டும்.
முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டி, சர்வதேச ரீதியிலும் தெற்காசியாவிலும் சோசலிச குடியரசுகளைக் கட்டியெழுப்புவதன் ஒரு பகுதியாக, இலங்கையில் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதன் மூலம் மட்டுமே, ஜனநாயக உரிமைகளை வெல்ல முடியும். இந்த முன்னோக்கிற்காக போராடும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே.
ஆசிரியரும் பரிந்துரைக்கும் கட்டுரை:
Statement by the Socialist Equality Party (Sri Lanka)
9 September 2019