Print Version|Feedback
කුරුනෑගල මුස්ලිම් වෛද්යවරයාට එරෙහිව සිංහල වර්ගවාදීන් ගෙතූ අභූත චෝදනා ප්රතික්ෂේප වෙයි
இலங்கை: குருணாகல்லில் முஸ்லிம் மருத்துவர் மீதான சிங்கள இனவாதிகளின் குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட்டன
By Kapila Fernando
3 July 2019
ஏப்ரல் 21 அன்று நடந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களை அடுத்து, முஸ்லிம்களுக்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் சிங்கள அதிதீவிரவாத குழுக்கள் தற்போது நடத்தி வரும் இனவாத ஆத்திரமூட்டலின் பிரதானமானதாக இருந்தது, குருணாகல் போதனா மருத்துவமனையின் மருத்துவர் ஷிஹாப்தீன் சாஃபிக்கு எதிரான இழிவான பிரச்சாரம் ஆகும்.
சிசேரியன் சிகிச்சை செய்யும் போது சிங்கள-பௌத்த தாய்மார்களின் அனுமதியின்றி அவர்களுக்கு கருத்தடை செய்ததாக மருத்துவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இனவாதத்துக்கு ஒத்துழைக்கும் ஊடகங்களின் மோசமான பிரச்சாரத்தின் மத்தியில், எந்தவொரு விசாரணையும் இன்றி மருத்துவரை ஒரு குற்றவாளியாக ஆக்கிய இனவெறி கும்பலின் முக்கிய நோக்கம், முழு முஸ்லீம் சமூகத்திற்கும் எதிராக பரவலான ஆத்திரமூட்டல்களை கிளறிவிடுவதே ஆகும்.
ஒரு மாதத்துக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்ட இந்த பிரச்சாரத்தின் மத்தியில், குற்றவியல் புலனாய்வு பிரிவு (சி.ஐ.டி.), 210 பக்க அறிக்கையை குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஜூன் 27 அன்று சமர்ப்பித்தது. மருத்துவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இதனால் இனவாத பிரச்சாரம் பிசுபிசுத்துப் போனதோடு வைத்தியருக்கு எதிரான பிரச்சாரம் ஒரு சதி என்பதும் அம்பலத்துக்கு வந்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த அறிக்கையானது பொலிஸ் அல்லது விசாரணையை நடத்திய அரசாங்கத்தின் பக்கச்சார்பற்ற தன்மையை வெளிப்படுத்தவில்லை. உண்மை என்னவென்றால், வைத்தியருடன் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பிற சேவைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், தாதிமார் மற்றும் ஏனைய ஊழியர்கள் வழங்கிய சக்திவாய்ந்த ஆதாரங்களால், அவர் மீது புணையப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை என்பது உறுதியான நிலையில், பொலிசாரால் அத்தகைய அறிக்கையைத் தவிர வேறு எதையும் தயாரிக்க முடியாமல் போனது.
சொத்துக்கள் எவ்வாறு சம்பாதிக்கப்பட்டன என்று விசாரிப்பதற்காக மே 24 அன்று பொலிசால் கைது செய்யப்பட்ட மருத்துவர், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழேயே தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். மருத்துவர் சட்டவிரோதமாக பணம் சம்பாதித்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், அவர் ஈஸ்டர் குண்டுவெடிப்பு அல்லது வேறு எந்த பயங்கரவாத அமைப்பிலும் ஈடுபாடு கொண்டிருக்கவில்லை என்றும் சி.ஐ.டி. அறிக்கை கூறுகிறது.
இந்த வைத்தியர் ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) பட்டியலில் 2015 பொதுத் தேர்தலில் குருணாகலங் மாவட்டத்தில் போட்டியிட்டதுடன் அந்தக் கட்சியின் உறுப்பினரின் காலியிடங்களை நிரப்ப தேவையான எண்ணிக்கையிலான வாக்குகளையும் அவர் பெற்றிருந்தார்.
மே 21 அன்று வெளியான சிங்கள திவயின செய்தித்தாளில் வெளியிடப்பட்ட செய்தியில், சாஃபிக்கு எதிரான இந்த அபத்தமான குற்றச்சாட்டை முன்வைத்தது. சிசேரியன் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட போது, அவர் கிட்டத்தட்ட 4,000 சிங்கள தாய்மார்கள் மீண்டும் குழந்தை பெற முடியாதவாறு அவர்களது பலோப்பியன் குழாய்களை சேதப்படுத்தியுள்ளார், என்ற செய்தியை அந்தப் பத்திரிகை வெளியிடும் போது, அதற்கான எந்தவொரு மூலாதாரத்தைப் பற்றியும் குறிப்பிடவில்லை.
குருணாகல் பொலிஸ் உதவி அத்தியட்சகர் கீர்த்தி ஜயலத் மற்றும் குருணாகல் மருத்துவமனையில் மருத்துவராக இருக்கும் அவரது மனைவியுமே இந்த ஆதாரமற்ற தகவல்களை திவயின பத்திரிகைக்கு வழங்கியுள்ளனர்.
மருத்துவர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும் போது, பொலிஸ் அத்தியட்சகர் ஜயலத், தாய்மார்களை சாட்சியமளிக்க அழைப்பு விடுத்தார். விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தாய்மார்களுக்கு இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பலரும் பகிரங்கமாக அறிவித்தபோது, பல்வேறு சிக்கல்களைப் புகார் செய்த தாய்மார்களின் எண்ணிக்கை ஆயிரம் வரை அதிகரித்தது.
மேலும் ஆத்திரமூட்டல்களைத் தீவிரப்படுத்தும் பொருட்டு, மருத்துவர் சாஃபியின் அறுவை சிகிச்சையின் பின்னர் தாம் பல ஆண்டுகளாக குழந்தை இல்லாதவர்களாக இருந்தோம் எனக் கூறும் வீடியோ காட்சிகள் தொலைக்காட்சி சேவைகளில் தினமும் ஒளிபரப்பட்டன.
விசாரணையை நடத்திய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், 71 தாய்மார்கள் மட்டுமே சாஃபியின் அறுவை சிகிச்சையால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதைக் கண்டறியும் விஞ்ஞானப் பரிசோதனையை நடத்த முன்வந்தனர் என்று ஊடகங்களுக்குத் தெரிவித்ததார். எந்த மருத்துவர் தனக்கு சிசேரியன் செய்திருக்கிறார் என்பது பெரும்பாலான தாய்மார்களுக்குத் தெரியாமல் இருந்தது. பொலிஸ் அதிகாரி மேலும் கூறுகையில், கணவர்களின் குறைபாடுகள் காரணமாகவே அவர்கள் கருவுறுமால் இருந்தமைக்கு பங்களித்திருக்கின்றன என்பதை முந்தைய விசாரணைகள் நிரூபித்துள்ளன, என்றார்.
குருணாகல் மருத்துவமனையின் இயக்குநர் ஏ.எம்.எஸ். வீரபண்டார, சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படும் சோதனைகள் நம்பகமானவை அல்ல என கூறித் திரிகின்றார். வீரபண்ர, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயற்பாட்டாளராக இருப்பதோடு பேர்போன சிங்கள பேரினவாத பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்சவின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.
மிக முக்கியமாக, வைத்தியர் சாஃபியுடன் பணிபுரிந்த குருணாகல் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அறுவை சிகிச்சையின் போது சாஃபி அத்தகைய குற்றம் செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்களை வழங்கினர். சிங்கள மேலாதிக்கவாதிகளின் அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும் அவர்கள் இந்த ஆதாரங்களை வழங்கினர்.
டாக்டர் சாஃபிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கடந்த வாரங்களில் பல மகளிர் மருத்துவ மற்றும் மகப்பேற்று நிபுணர்கள் வெளியிட்ட கூற்றுக்கள் மற்றும் விளக்கங்கள் ஊடகங்களால் கிட்டத்தட்ட ஓரங்கட்டப்பட்டு விட்டன.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் மகளிர் மருத்துவ மற்றும் மகப்பேறியல் துறையின் தலைவர் பேராசிரியர் ஹேமந்த சேனநாயக்க, லங்கதீபா மற்றும் டெய்லி மிரர் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், ஒரு மருத்துவரகள் மற்றும் தாதிமார் குழுவினரின் முயற்சியின் ஒரு பகுதியாக நடக்கும் அறுவைசிகிச்சைகளின் போது ஒரு மருத்துவர் இத்தகைய இரகசிய செயலை செய்வது “கடினம்” என்று சுட்டிக்காட்டினார்.
பிரசவம் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் போன்ற முக்கியமான பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட நியாயமற்ற அறிக்கைகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அவர் மேலும் எச்சரித்தார்.
வைத்தியர் சாஃபிக்கு எதிரான ஆத்திரமூட்டலானது நீண்ட காலமாக முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள-பௌத்த பேரினவாத தாக்குதலின் ஒரு புதுப்பிக்கப்பட்ட விடயமாக உள்ளது. முதலாளித்துவ ஆளும் வர்க்கமானது தொழிலாளர் வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது பாரிய சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை திணிப்பதால், தொடர்ச்சியான வர்க்கப் போராட்டங்கள் பெருகி வருகின்றன. இந்த முஸ்லீம்-விரோத ஆத்திரமூட்டலின் முக்கிய நோக்கம் தொழிலாள வர்க்கத்தை இன அடிப்படையில் பிளவுபடுத்துவதும் பலவீனப்படுத்துவதுமே ஆகும்.
தமிழ் மக்களுக்கு எதிரான 26 ஆண்டுகால யுத்தத்தின் பின்னர், பிரதான முதலாளித்துவ கட்சிகளின் ஆதரவோடு சிங்ஹலே, பொதுபல சேனா மற்றும் ராவணா பலகாயா போன்ற சிங்கள பேரினவாத அமைப்புகளால் இந்த முஸ்லீம்-விரோத பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது இந்த நோக்கத்திற்கே ஆகும்.
இந்த சிங்கள பேரினவாத கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு விஷமத்தனமான பிரச்சாரம் என்னவென்றால், "சிங்கள இனத்தை அழிக்கின்ற அதே நேரம்" முஸ்லிம்கள் தங்கள் சொந்த குழந்தைகளை அதிகமாக உருவாக்கி இலங்கையில் பெரும்பான்மையாக மாற முயற்சிக்கின்றனர், என்பதாகும். கடந்த ஆண்டு, முஸ்லீம் உணவக உரிமையாளர்கள், சிங்கள ஆண்களையும் பெண்களையும் தேர்ந்தெடுத்து கருத்தடை மாத்திரைகளை உணவில் கலக்கின்றனர் என்ற அப்பட்டமான பொய்யை அவர்கள் பரப்பினர்.
இந்த பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட சிங்கள இனவாதிகள் கும்பல் ஒன்று, பெப்ரவரி 26 அன்று, அம்பாறை நகரில் உள்ள முஸ்லிம் ஹோட்டல்களைத் தாக்கியது. சில நாட்களுக்குப் பின்னர் மற்றொரு அமைப்பான மஹாசோன் பலகாய (பெரும் மயானப் பேய் படை) என்ற அமைப்பு, கண்டியில் திகன பிரதேசத்தில் ஏராளமான முஸ்லிம்களின் வீடுகளை தாக்கி அழித்தது.
இத்தகைய தாக்குதல்களுக்குப் பிறகு, இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் 200க்கும் மேற்பட்ட விசேட மருத்துவ நிபுணர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டு, பெண்கள் அல்லது ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் அத்தகைய மருந்துகள் எதுவும் இல்லை என்றும், இந்தப் பிரச்சாரம் ஒரு மோசடி என்றும் கூறினார்.
இருப்பினும், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமானது இதுபோன்ற விஞ்ஞான விளக்கங்களை வெளிப்பாடுத்த முன்வரவில்லை, அது மட்டுமல்லாமல், இனவெறி பிரச்சாரத்தால் வெளிப்படையாக இணைந்துகொண்டது. ஜூன் 30 அன்று சண்டே ஒப்சேவர் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு செய்தியின் படி, வைத்தியர் சாஃபிக்கு எதிரான விசாரணை ஒன்றைக் கோரி, ஜூன் 26 அன்று, குருணாகல் போதனா வைத்தியசாலையில் “நாட்டையும், தேசத்தையும், மதத்தையும் காப்பாற்றுங்கள்” என்ற வாசகத்துடன் நடத்தப்பட்ட போராட்டத்துக்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமே தலைமை வகித்துள்ளது.
சி.ஐ.டி. அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முந்தைய நாள் இந்த போராட்டம் நடந்தது தற்செயல் நிகழ்வு அல்ல. அறிக்கையில் வெளிவந்த உண்மைகள் வகுப்புவாத பிரச்சாரத்திற்கு எதிரானவை என்பதை அறிந்து, எதிர்ப்பு முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டது என்பது தெளிவாகிறது.
சி.ஐ.டி. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நாளில் குருணாகல் நீதிமன்றத்தின் முன் ஊடகங்களுடன் பேசிய பௌத்த பிக்குவான அதூரலியே ரத்தனே, அறிக்கை முன்வைத்த உண்மைகள் குறித்து எந்தக் குறிப்பும் தெரிவிக்காமல் ஆத்திரமூட்டல்களைத் மேலும் தூண்ட முயன்றார். சி.ஐ.டி. அறிக்கையை நிராகரித்து அதை முன் வைத்த பொலிஸ் அதிகாரி திசேராவை விமர்சித்த ரத்தனே, “உலகின் மருத்துவ பேராசிரியர்களை இலங்கைக்கு அழைத்து வந்து ஒரு வாரத்திற்குள் சுயாதீன விசாரணையைத் தொடங்குவதாக” பிதற்றிக்கொண்டார்.