ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்

By Wimal Rasenthiran and M. Kalaimaaran
13 September 2019

இலங்கையின் பிரிவினைவாத விடுதலைப் புலிகளுக்கு எதிரான மூன்று தசாப்த கால இனவாத போரின்போது கடத்தப்பட்டு அல்லது இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் காணாமல் போன நபர்களின் உறவினர்கள் சர்வதேச காணாமல்போனோர் தினமான ஆகஸ்ட் 30 அன்று வடக்கு மற்றும் கிழக்கில் பல இடங்களில் போராட்டங்களை நடத்தினர்.

பிள்ளைகள், கணவன்மார்கள் மற்றும் பெற்றோர்களையும் இழந்த பிள்ளைகள், பெண்கள் மற்றும் முதியவர்களுடன் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுமாக பல நூற்றுக்கணக்கானவர்கள், ஆகஸ்ட் 30 அன்று இரு மாகாணங்களிலும் நடந்த போராட்டங்களில் பங்கேற்றனர்.

காணாமல் போன தமிழர்களின் உறவினர்கள் பல ஆண்டுகளாக நடத்திய தொடர்ச்சியான போராட்டத்தில் இது சமீபத்தியது. இதுவரை, இந்த போராட்டங்களில் ஈடுபட்ட 35 தந்தையர் மற்றும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைக் கண்டுபிடிக்க முடியாமலே இறந்துவிட்டனர்.

காணாமல்போன உறவினர்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலம்

 காணாமல் போனவர்களின் சில உறவினர்கள் வவுனியாவில் 900 நாட்களைக் கடந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வீதி அபிவிருத்தி திணைக்கள வவுனியா அலுவலகத்திற்கு அருகே நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர், பகுதி பகுதியாக சுழற்சி முறையில் இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆகஸ்ட் 30 அன்று, வவுனியாவிலுள்ள பன்றிக்கொய்தகுளம் பிள்ளையார் கோவிலில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் ஓமந்தையில் உள்ள ரம்பைக்குளம் வரை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலம் நடத்தினர்.

போரின் போதும் அதற்குப் பின்னரும் ஓமந்தையில் ஒரு பெரிய இராணுவ “சோதனைச் சாவடி” இருந்தது. இந்த சோதனைச் சாவடியில் தங்கள் அன்புக்குரியவர்களை இராணுவத்திடம் ஒப்படைக்குமாறு பலர் மிரட்டப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில், அவர்கள் ஐ.நா.விடம் ஒப்படைக்குமாறு கிறிஸ்தவ பாதிரியார் ஜோசப் அந்தோனிப்பிள்ளை ஜேசுதாசனிடம் மனு ஒன்றை கையளித்தனர். போராட்டக்காரர்களை அச்சுறுத்துவதற்காக அரசாங்கம் ஏராளமான பொலிஸை அணிதிரட்டியுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் காணாமல் போன உறவினர்களின் படங்களை ஏந்தியிருந்தனர். "இராணுவமே! நாங்கள் உங்களிடம் ஒப்படைத்த எங்கள் அன்புக்குரியவர்கள் எங்கே? எங்களுக்கு பதிலளிக்கவும்!", "இலங்கை அரசே! காணாமல் போனோர் அலுவலகத்தை நிறுவுவதன் மூலம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றாதே!”, “அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தாமதம் ஏன்", “வெள்ளை வேன்களில் கடத்தப்பட்ட எங்கள் பிள்ளைகள் எங்கே?" போன்ற சுலோகங்கள் அடங்கி அட்டைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

கிளிநொச்சியில் ஒரு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. மன்னார் நகரில், மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் அன்று காலை நூற்றுக்கணக்கான மக்கள் பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களும் ஒரு ஊர்வலத்தை நடத்தியிருந்தனர்.

கிழக்கு மாகாணத்திலும் இதேபோன்ற ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் கல்முனை மற்றும் மட்டக்களப்பிலும் நடைபெற்றன. தலைநகர் கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, மேலும் மத்திய மலைப்பகுதியில் உள்ள போகவந்தலாவாவில் உள்ள கேர்கர்ஸ்வேல்ட் தோட்டத்திலுள்ள இளைஞர்கள் குழு இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக மறியல் போராட்டமொன்றை நடத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.

1983ல் போர் தொடங்கியதிலிருந்து தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் துன்புறுத்தப்பட்டு வந்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் 2006 இல் போரை மீண்டும் ஆரம்பித்ததில் இருந்து கொடூரமான அடக்குமுறை தீவிரமடைந்தது. ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் பொலிஸ் அல்லது பாதுகாப்புப் படையினரால் புலி சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் போயுள்ளனர். ஒரு சில நபர்கள் மில்லியன் கணக்கான ரூபாக்களை கப்பமாக பெற்ற பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

யுத்தத்தின் இறுதி மாதங்களில் சுமார் 40,000 பொதுமக்கள் இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா அறிக்கை கூறுகிறது. இறுதி மாதங்களில் சிக்கிய சுமார் 300,000 தமிழ் பொதுமக்கள் வவுனியாவில் இராணுவ கட்டுப்பாட்டு சிறை முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர்.

இராணுவ புலனாய்வு பிரிவினர் அந்த முகாம்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களையும் பெண்களையும் புலி சந்தேக நபர்களாக இழுத்துச் சென்றனர். அவர்களில் சுமார் 11,000 பேர் "புனர்வாழ்வுக்குப்" பின்னர் விடுவிக்கப்பட்டனர், ஆனால் பலர் காணாமல் போயுள்ளனர். சில அறிக்கைகள் சுமார் 23,586 பேரைக் காணவில்லை என்று கூறுகின்றன. பலவந்தமாக காணாமல் போனவர்களுக்கான ஐ.நா. செயற் குழுவானது பலாத்காரமாக காணாமல் ஆக்கபடுவோர் பட்டியலில் இலங்கையை இரண்டாவது இடத்தில் வைத்துள்ளது. இதற்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் இன்னும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக குற்றச்சாட்டுகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

2015 ஜனாதிபதித் தேர்தலில், சிறிசேன, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து பிற்போக்கு சக்திகளின் உதவியுடன் ஆட்சிக்கு வந்தார். சிறிசேன, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பார், மனித உரிமை மீறல்களை விசாரிப்பார், அரசியல் கைதிகளை விடுவிப்பார், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்கள் நிலங்களை திருப்பித் தருவார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியது. இந்த வாக்குறுதிகள் மக்களை ஏமாற்றுவதற்கும், அமெரிக்க சார்பு ஆட்சி மாற்றத்திற்கு வாக்குகளைப் பெறுவதையும் இலக்காகக் கொண்டிருந்தன. இந்த வாக்குறுதிகள், இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்களின் ஒரு பகுதியை விடுவிப்பதோடு ஓரங்கட்டப்பட்டுவிட்டன.

பிரதம ரணில் விக்கிரமசிங்க "அவர்கள் [காணாமல் போனவர்கள்] இறந்திருக்கலாம்" என்று சமீபத்தில் அறிவித்திருந்த போதிலும், அது எப்படி என்பதை அவர் விளக்கவில்லை.

சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம் சட்டங்களைக் கொண்டு வந்து 2017 செப்டம்பரில் காணாமல் போனவர்களின் அலுவலகம் (OMP) ஒன்றைத் திறந்தது. இருப்பினும், இது ஒரு கண் துடைப்பாகும்.

காணாமல் போனவர்களின் உறவினர்களின் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்ய உதவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மத குருமார்கள், புலம்பெயர் குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உட்பட அனைத்து தமிழ் முதலாளித்துவக் கட்சிகளும், பிரச்சினைகளைத் தீர்க்க அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் ஐ.நா மீது அழுத்தம் கொடுக்க முடியும் என்ற மாயையை விதைத்துள்ளன. கடந்த வார ஆர்ப்பாட்டங்களும் இந்த முடிவை நோக்கியே திருப்பிவிடப்பட்டன. உண்மையில், இந்த அமைப்புகள், மக்கள் மத்தியிலான உண்மையான கோபத்தை, ஜனநாயக உரிமைகளை வெல்வதற்கான சரியான போராட்டத்திலிருந்து திசை திருப்பி விடுகின்றன.

தனது பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலின் வெற்றிக்காக விடுதலைப் புலிகள் அமெரிக்காவுக்கும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளுக்கும் ஆதரவு கோரி வேண்டுகோள் விடுத்தனர். எவ்வாறாயினும், அமெரிக்காவும் இந்தியா உள்ளிட்ட பிற சக்திகளும் தங்கள் புவிசார் அரசியல் நலன்களுக்கு ஏற்ப புலிகளுக்கு எதிரான கொழும்பின் போரை ஆதரித்தன.

பெய்ஜிங், இராஜபக்ஷ ஆட்சியின் முக்கிய நிதி ஆதரவாளராகவும் அதன் இராணுவ தளவாட வழங்குனராகவும் வளர்ந்து வருவதைக் கண்ட பின்னரே, வாஷிங்டன், போரின் இறுதி மாதங்களில் கொழும்பின் மனித உரிமை மீறல்களை விமர்சிக்கத் தொடங்கியது.

உலகில் இரத்தக்களரி மனித உரிமை மீறல்களைச் செய்யும் அமெரிக்கா, அதைப் பாதுகாப்பதாக பாசாங்கு செய்துகொண்டு, பெய்ஜிங்கிலிருந்து தூர விலகுவதற்காக இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க அவற்றைப் பயன்படுத்தியது. இறுதியாக, அது விக்ரமசிங்கவின் உதவியுடன், இராஜபக்ஷவை அகற்றவும் சிறிசேனவை அதிகாரத்திற்கு கொண்டுவரவும் இந்திய சமுத்திரத்தில் மூலோபாய ரீதியில் அமைந்துள்ள இலங்கையை, சீனாவை எதிர்ப்பதற்கான தனது மூலோபாய இராணுவவாத உந்துதலுக்கு அணிதிரட்டியது.

புலிகளின் ஊதுகுழலாக செயல்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, அமெரிக்காவிற்கான அதன் வேண்டுகோளுக்காக உற்சாகமாக ஆதரவளித்தது. போருக்குப் பின்னர் அது வாஷிங்டனின் போலி மனித உரிமை பிரச்சாரத்துடன் அணிசேர்ந்தது. அது ஆட்சி மாற்ற நடவடிக்கையை ஆதரித்ததுடன் ஏறத்தாழ கொழும்பு அரசாங்கத்தின் வாஷிங்டன் சார்பு நகர்வுகளின் பங்காளியாக மாறியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தந்திரோபாய வேறுபாடுகள் மட்டுமே கொண்டுள்ள ஏனைய தமிழ் கட்சிகள், அடிப்படையில் அமெரிக்க சார்பு வழியைப் பின்பற்றுகின்றன.

இந்த அமைப்புகள் எதுவும் தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் ஜனநாயக உரிமைகளை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. அவர்களின் எதிர்ப்பைத் தகர்த்தெறிவதற்காக இந்த அமைப்புகள் பெரும் வல்லரசுகளுக்கும் ஐ.நா.வுக்கும் பயனற்ற வேண்டுகோள்களை விடுப்பதற்காக அவை ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் இன எல்லைகளைக் கடந்து ஐக்கியப்பட்டு, அவர்கள் தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்துடன் அணிதிரள்வதற்கான நிலைமைகள் அபிவிருத்தியடைவதையிட்டு கொழும்பு ஆளும் கும்பலைப் போலவே பீதியடைந்துள்ளனர்.

தமிழர்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் போர் அழிவுக்கான தீர்வுகளை முதலாளித்துவ ஆட்சியின் கீழ் அல்லது பெரும் வல்லரசுகளுக்கு வேண்டுகோள் விடுப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியாது. இலங்கை தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குகின்ற மற்றும் போருக்கான நிலைமைகளின் தோற்றுவாய் உலக முதலாளித்துவத்துடன் பிணைக்கப்பட்டுள்ள இலங்கை முதலாளித்துவ ஆட்சியே ஆகும். இது தமிழர்களுக்கு பாரபட்சம் காட்டியதுடன், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த இனப் பதட்டங்களைத் தூண்டியது. சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டத்தில் முதலாளித்துவத்தை தூக்கியெறிவதன் மூலம் மட்டுமே தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கான அவர்களின் ஜனநாயக உரிமைகளை அடைய முடியும்.

ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் ஒரு பகுதியினர்

ஓமந்தை ஆர்ப்பாட்டத்தில் உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்களுடன் பேசிய, காணாமல் போனோர்களின் உறவினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் அரசாங்கத்தையும் எதிர்த்தனர்.

இறுதிப் போரில் 19 வயதில் காணாமல் போன அவரது சகோதரை தேடும் ஒரு அன்றாட தொழிலாளியான தேவதாசன் கூறியாதாவது: “நான் கடந்த 10 ஆண்டுகளாக தேடிக்கொண்டிருக்கிறேன், இன்று அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீதரன் மற்றும் சிவாஜிலிங்கம் அவரைக் கண்டுபிடிப்பதாக உறுதியளித்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. தேர்தல் வரவிருக்கிறது. அதே பொய்களுடன் அவர்கள் மீண்டும் எங்களிடம் வருவார்கள். அவர்கள் நீண்ட காலமாக எங்களை ஏமாற்றுவதைத்தான் செய்து வருகிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை உலகெங்கிலும் மனித உரிமைகளுக்காக பேசுகிறது. அது இனி எங்கள் பிரச்சினைகளை தீர்க்கும் என்று நான் நம்பவில்லை.”

மகேஸ்வரி

மல்லாவியைச் சேர்ந்த பி. மகேஸ்வரி, 61, சந்தானம்மா, 59, ஆகியோருக்கும் சொல்ல இருந்த ஒரே கதை இதுவாகத்தான் இருந்தது. மன்னார் மாவட்டத்தில் அடம்பனைச் சேர்ந்த விவசாயி நீக்கிளன், காணாமல் போனபோது 21 வயதாக இருந்த தனது மகனைத் தேடுகிறார். “புலிகள் முதலில் என் மகனைப் பிடித்துச் சென்றனர். அவர் காயமடைந்தபோது எங்களிடம் திரும்பி வந்தார். பின்னர் 2009 ஏப்ரல் 20 அன்று, எனது மகனை இரணைப்பாளை சந்தியில் வைத்து இராணுவத்திடம் ஒப்படைத்தேன். அதன் பின்னர் எனது மகனைக் காணவில்லை,” என்றார்.

சந்தானம்மா

அவர் வவுனியாவில் இராணுவத்தால் நடத்தப்பட்ட முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் தனது மகனை வவுனியா மருத்துவமனை உட்பட எல்லா இடங்களிலும் தேடினார் ஆனால் பயனில்லை. “நான் வழக்குத் தாக்கல் செய்ய முயற்சிக்கும்போது அவர்கள் என்னிடம் ஒரு சாட்சியைக் கொண்டு வரச் சொல்கிறார்கள். நானே ஒரு சாட்சி,” என அவர் கூறினார்.