Print Version|Feedback
Sri Lankan university unions threaten indefinite national strike over wages and benefits
இலங்கை பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் சம்பளம் மற்றும் நலன்களுக்காக தேசிய ரீதியிலான தொடர் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அச்சுறுத்துகின்றன
By our correspondents
4 September 2019
பல்கலைக்கழக ஆசிரியர்கள், போதனைசாரா ஊழியர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்களும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஊக்குவிப்பு தொகைகளைக் கோரி, செப்டம்பர் 10 முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போவதாக அனைத்துப் பல்கலைகழகங்களதும் ஊழியர்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
தங்களுடைய அங்கத்தவர்கள் மத்தியில் வளர்ந்துவரும் கோபங்களுக்கு பதிலளிக்கும் முகமாக, போதனைசாரா ஊழியர்களை உள்ளடக்கிய பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி (JCUTU), பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்துடனும் இணைந்து, இந்த அறிவித்தலை விடுத்துள்ளன. ஆகஸ்ட் 28 தொடக்கம் இரண்டு நாட்கள் நாடளாவிய ரீதியில் நடந்த வேலை நிறுத்த்தினை தொடர்ந்து இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது. இந்த வேலை நிறுத்தத்தில் 15 அரச பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 16,000 க்கு மேற்பட்ட கல்விசாரா ஊழியர்கள் பங்குபற்றியிருந்தனர்.
கடந்த வாரத்தின் இரண்டாம் நாள் போராட்டத்தின் போது, 2000 க்கு மேற்பட்ட போதனைசாரா ஊயர்கள், கொழும்பில் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு (UGC) முன்னால் ஒரு ஆர்ப்பாட்டத்தினை நடத்தியிருந்தார்கள். பல அரச பல்கலைக்கழகங்களில் இருந்து எதிர்ப்பில் கலந்து கொண்ட போதனைசாரா ஊழியர்கள், சிங்களம் மற்றும் தமிழில் எழுதப்பட்ட சுலோகங்களைக் கூறியதுடன், சுலோக அட்டைகளையும் பிடித்திருந்தனர்.
பல்கலைகழக ஊழியர்களின் சம்பளங்கள் ஏனைய அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களுடன் சமமான நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்றும், 2015 முதல் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து சம்பள அதிகரிப்பும் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி கோருகின்றது. கல்விசாரா ஊழியர்களுக்கு பொருத்தமான ஓய்வூதிய திட்டம் மற்றும் அதிகரித்த ஊக்குவிப்புத் தொகையையும் வழங்க வேண்டும் என்றும் அது கோரிக்கை விடுக்கின்றது. பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியின் கோரிக்கைகள் சம்பந்தமான பேச்சுவார்த்தையை பல்கலைக்கழக அதிகாரிகள் மறுத்ததற்குக்கு எதிராக, கல்விசாரா ஊழியர்கள் ஜூலை 30 அன்றும் வெளிநடப்புச் செய்தனர்.
பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியானது, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகிய கட்சிகள் சார்ந்த சங்கங்கள் இணைந்து, சுயாதீனம் என்ற போர்வையில் அமைக்கப்பட்டதாகும். மட்டுப்படுத்தப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகள், மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் கோரிக்கைகளை அமுல்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்று அது தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளது.
2018 ஆரம்பத்தில், 20 வீத சம்பள அதிகரிப்பு, காப்புறுதி, ஒய்வூதியத் திட்டம் மற்றும் ஏனைய கோரிக்கைகளை முன் வைத்து, கல்விசாரா ஊழியர்கள் ஒன்றரை மாத வேலை நிறுத்தத்தினை நடத்தியிருந்தார்கள். அதிகாரிகளின் போலி வாக்குறுதிகளைத் தொடர்ந்து, இந்த வேலைநிறுத்தம் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினால் காட்டிக் கொடுக்கப்பட்டது.
இலங்கையில் அரச மற்றும் தனியார்துறை தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் பிரதான பிரிவுகளினால் மேற்கொள்ளப்படும் அதிகரித்துவரும் போர்க்குணம் மிக்க போராட்டங்களின் ஒரு பாகமாகவே, பல்கலைகழக ஊழியர்களின் சம்பளம் மற்றும் நிலமைகளை மேம்படுத்துவதற்கான போராட்டங்கள் இடம்பெறுகின்றன. சம்பளங்கள், வாழ்க்கை நிலமைகள் மற்றும் சமூக உரிமைகள் மீதான சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன தாக்குதல்களை முன்னெடுப்பதன் காரணமாகவே அரசாங்கத்தின் மீது இலங்கை தொழிலாளர் மத்தியில் கோபம் அதிகரித்து வருகின்றது.
இலங்கையில் கடந்த வருடம், தபால், புகையிரதம், சுகாதாரம் மற்றும் கல்விச் சேவைகள் மற்றும் தோட்டத்துறை தொழிலாளர்களுமாக இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். சிறந்த வசதிகளுக்காகவும் மற்றும் மூன்றாம் நிலை கல்வித்திட்டத்தை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்கள்.
வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஒரு பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி இணைத் தலைவரான மங்கள டாபரேரா, அரசாங்கத்தின் தாக்குதல்கள் பற்றி எதையும் கூறாமல், தொழிலாளர்களின் கோரிக்கைகளை தடுப்பதாக சம்பள ஆணைக்குழுவில் இருக்கும் அரச அதிகாரிகளையும் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவையும் குற்றஞ்சாட்டினார். “கல்விசாரா ஊழியர்களின் சக்தியைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று அனைத்து பொறுப்புவாய்ந்த அதிகாரிகளையும் நாங்கள் எச்சரிக்கின்றோம்.” என அவர் கூறினார்.
ஒரு ஐ.தே.க. தொழிற்சங்க அதிகாரி, “நிர்வாக அதிகாரிகள் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்காவிட்டால், நாங்கள் இந்த விடயத்தில் அரசியல் ரீதியிலான தலையீட்டினை மேற்கொள்வோம்” என்றார். வேறு வார்த்தையில் கூறினால், தொழிற்சங்க அதிகாரிகள் அரசாங்க அமைச்சர்களைப் பார்த்து கூச்சலிடுவதோடு ஒரு விற்றுத் தள்ளும் உடன்படிக்கைக்காவும் வேண்டுகோள் விடுக்கும் அதே வேளை, அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தொழிலாளர்கள் மேற்கொள்ளும் எந்தவொரு அரசியல் அணிதிரள்வையும் தடுக்க நடவடிக்கை எடுப்பர்.
பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியின் வலியுறுத்தலுக்கு மாறாக, அரச அதிகாரிகள் அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை சுலபமாக அமுல்படுத்திக்கொண்டிருக்கின்றனர். மார்ச் மாத வரவுசெலவுத் திட்டத்தின்படி, சகல திணைக்களங்களும் தங்களின் செலவுகளை 15 வீத்ததினால் வெட்டிக் குறைக்க வேண்டும் என நிதி அமைச்சு கடந்த மாதம் அறிவுறுத்தல் விடுத்திருந்த்து.
அரசாங்கத்தையும் அதன் முதலாளித்துவ திட்டங்களையும் தொழிலாளர்கள் சவால் செய்வதை தடுக்க தொழிற்சங்கங்கங்கள் உறுதியா உள்ளன. உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்கள், சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) அங்கத்தவர்கள் மற்றும் அதன் இளைஞர் அமைப்பு மீதும் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி அதிகாரிகள் கொண்டுள்ள பகைமைப் போக்கு இதை உறுதிப்படுத்துகின்றது.
வடமேல் மாகாணத்தில் உள்ள வயம்ப பல்கலைக்கழகத்தில் தொழிற்சங்க குண்டர்கள் WSWS நிருபர்கள் மற்றும் சோ.ச.க. அங்கத்தவர்களையும் சரீர வன்முறையைப் பிரயோகித்து அச்சுறுதினார்கள். அதேபோல், கொழும்பில் நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கூட்டுத் தொழிற்சங்க கமிட்டி மீது போலிக் குற்றச்சாட்டுக்களை வைப்பதாக கூறி, சோ.ச.க. அங்கத்தவர்கள் போராட்டக்காரர்களுடன் உரையாடுவதை தொழிற்சங்க அதிகாரிகள் தடுத்தனர். பேராதனை பல்கலைக்கழக அதிகாரிகள், தங்களின் நடவடிக்கைகளின் மீதான WSWS இன் விமர்சனங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை “நலிவடையச்” செய்யும் என்று கூறினார்கள்.
முதலாளித்துவ அமைப்பு முறையின் பூகோள நெருக்கடி, கொழும்பு அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய கொள்கைகள் மற்றும் தொழிற்சங்கங்களின் அரசாங்க சார்பு நிலைப்பாடுகளினதும் காரணமாகவே தொழிலாளர்களின் வேலைகள், சம்பளம் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதல்கள் உந்தப்படுகின்றன என்பதை WSWS மற்றும் சோ.ச.க. இன் ஆய்வுகள் தெளிவுபடுத்துவதன் காரணமாகவே பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியின் அதிகாரிகள் அவர்களை எதிர்க்கின்றனர். தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களில் இருந்து வெளியேறி, சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தங்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்கு சுயாதீன நடவடிக்கை குழுக்களை அமைக்குமாறு, WSWS கட்டுரைகள் ஊக்குவிக்கின்றன.
பூகோள முதலாளித்துவம் முன்னெப்போதுமில்லாத வகையில் நெருக்கடியில் மூழ்கியுள்ளதுடன் சம்பளம், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் அரச நிதியிலான கல்வி மீதான முழு அளவான தாக்குதல் உட்பட பல தாக்குதல்களை முன்னெடுப்பதன் மூலம் உலகெங்கும் உள்ள அரசாங்கங்கள், பொருளாதர வீழ்ச்சியின் முழுச் சுமையையும் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சுமத்துவதற்கு முயற்சிக்கின்றன.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் இலங்கை அரசாங்கமும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்களைப் பற்றிக்கொண்டன. சிறிசேன இந்த சட்டத்தினை இரண்டு வாரங்களுக்கு முன்னர் நீக்கிவிட்டபோதிலும், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் இராணுவத்திற்கு பரந்தளவிலான அடக்குமுறை அதிகாரத்தினை வழங்கி, சகல தொழிற்சங்க நடவடிக்கைகளும் விளைவுகளுடன் தடை செய்யப்படும் வகையில் பொதுப் போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக அறிவித்துள்ளார்.
அரசாங்கம் கடந்த வாரத்தில், பல பல்கலைக்கழகங்களை நிர்வகிக்க “தகுதிவாய்ந் அதிகாரிகளை” நியமித்துள்ளது. இதில், மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்த தொழில் நுட்பக் கல்லூரிக்கும் கம்பகா ஆயுர்வேத பல்கலைக்கழகத்திற்கும் இரண்டு இராணுவ மேஜர் ஜெனரல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை முகாமைத்துவம் செய்ய இன்னொரு தகதிவாய்ந்த அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு எதிர்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வேலைநிறுத்தம் செய்துள்ள பல தொழிலாளர்கள் WSWS உடன் பேசினார்கள். அவர்களது பார்வை தொழிற்சங்க தலமைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.
கொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் அலுவலக எழுதுவினைஞராக இருக்கும் மகிந்த இவ்வாறு கூறினார்: “எங்கள் போராட்டம் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பாதை உபயோகமற்றதாகவே நான் உணர்கின்றேன். தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான வெற்றிகளுமற்ற நிலையில் வேலை நிறுத்தினைக் முடிவுக்கு கொண்டு வந்துள்ளன. ஆனால், வேலை நிறுத்தத்துக்கு பின்னரும் இதே மாதிரி நடக்கும். நாங்கள் தொடர்ச்சியான போராட்டத்துக்கு தயாராக உள்ளோம். ஆனால், எங்களுக்கு நம்பிக்கையான ஒரு அமைப்பும் இல்லை.”
மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் ஒரு தொழிலாளி மனோஜ், முன்னைய போராட்டங்களின்போது, தொழிற்சங்கங்களின் பாத்திரம் பற்றி விமர்சித்தார். “நாங்கள் ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.சு.க. தொழிற்சங்கங்களாக இருக்கின்றபடியினால், எங்களால் கோரிக்கையை இலகுவில் வெற்றிகொள்ள முடியும் என்று தலைவர்கள் எங்களுக்கு கூறினர் (இரண்டு பிரதான கட்சிகளும் இப்போது அரசாங்கத்தில் உள்ளன). ஆனால், அரசாங்கம் எமது பிரச்சினைகளை தீர்க்கவில்லை. நாங்கள் ஒரு கோரிக்கையை கூட வெல்லாமல் மீண்டும் வேலைக்குத் திரும்பியுள்ளோம்.”
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து வந்திருந்த ரி. உதயராசா, தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதைப் பாதுகாப்பதினால், அவர் அவற்றை கண்டனம் செய்தார். “எமது கோரிக்கையின் அடிப்படையில் தொழிற்சங்கங்கள் ஐக்கியப்படவில்லை. அவர்கள் தொழிலாளர்களைப் பிரிக்கின்றார்கள். தங்களின் அதிகாரத்தினைப் தொடர்ச்சியாக பேணுகின்றார்கள். ஆனால் தொழிலாளர்கள் எந்நேரமும் பாதிக்கப்படுகின்றார்கள்.”
ருகுணு பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த பாலித கூறும்போது, “நான் பல வருடங்களாக இத்தகைய பல போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளேன். அதிகாரிகள் சில முற்போக்கான தீர்வுகளை வழங்கியுள்ளதாக கூறிக் கொண்டு, தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தங்களை நிறுத்திவிடுகின்றன. ஆனால், நாங்கள் எதுவுமே வெல்லவில்லை என்பதை வெகு விரைவில் உணர்ந்துவிடுவோம். தொடர்ச்சியாக ஆட்சி செய்து வரும் சகல அரசாங்கங்களும் சிக்கன வெட்டுக்களைத் தொடர்கின்றன.
நாங்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள், முதலாளித்துவ நெருக்கடிகளின் விளைவே என்பதை, சோ.ச.க. உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களின் விளக்கத்தின் மூலம் புரிந்துகொண்டேன். முதலாளித்துவ அரசாங்கங்கள் இனிமேலும் தொழிலாளர்களைக்கு எதையும் கொடுக்கப் போவதில்லை. முதலாளித்துவத்துக்கு எதிராகப் போராட தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவது அவசியம்.