Print Version|Feedback
India: Motherson auto parts company in Chennai victimises strikers
இந்தியா: சென்னையில் மதர்சன் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனம் வேலைநிறுத்தக்காரர்களை பழிவாங்குகிறது
By Arun Kumar
20 September 2019
தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரம் சென்னையின் அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு பிரதான வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனமான மதர்சன் தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் (Motherson Automotive Technologies & Engineering-MATE) நிறுவனம், ஒரு புதிய தொழிற்சங்கத்தை உருவாக்குவதிலும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைப்பதிலும் செயலூக்கத்துடன் இருந்த அதன் தொழிலாளர்களுக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
ஆகஸ்ட் 26 அன்று வெளிநடப்பு செய்த வேலைநிறுத்தக்காரர்கள், ஊதிய உயர்வு மற்றும் கடுமையான வேலை நிலைமைகளை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து போராட அவர்களது செங்கை அண்ணா மாவட்ட ஜனநாயக தொழிலாளர் சங்கம் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றனர். இதற்கு MATE நிறுவனம், 22 பயிற்சியாளர்கள் மற்றும் 33 தொழில் வல்லுநர்களை பணிநீக்கம் செய்தும், மேலும் 15 நிரந்தர ஊழியர்களை இடைநீக்கம் செய்தும் பதிலிறுத்துள்ளது.
புதிய தொழிற்சங்கம் இணைந்துள்ள அகில இந்திய மத்திய தொழிற்சங்க கவுன்சில் (AICCTU), வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்க ஆலையில் எஞ்சியுள்ள அல்லது MATE நிறுவனத்தின் பிற பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர் சக்தியை அணிதிரட்டுவதற்கும், மேலும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை பாதுகாப்பதற்கும் மறுத்துவிட்டது.
தொழிலாளர்களை பிளவுபடுத்தும் மற்றும் உற்பத்தியை பாதுகாக்கும் MATE இன் முயற்சிகளுக்கு ஒத்திசைவாக, மாவோயிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிச லெனினிச-விடுதலை அல்லது சிபிஐ-எம்.எல்-விடுதலை என்றழைக்கப்படுவதால் கட்டுப்படுத்தப்படும் கூட்டமைப்பு, வேலைநிறுத்தம் செய்யாத ஊழியர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுகிறது. மேலும் இது, வேலைநிறுத்தக்காரர்களை பாதுகாக்க பிற இந்திய வாகனத் தொழிலாளர்களிடமோ அல்லது சர்வதேச அளவிலோ எந்தவித விண்ணப்பமும் செய்யவில்லை.
இந்தியாவின் உள்நாட்டு வாகனத் தொழிலுக்கு வடிவமைக்கப்பட்ட பாகங்கள், சேர்க்கைகள் மற்றும் தொகுதிகள் ஆகியவற்றின் மிகப்பெரிய விநியோகஸ்தராக MATE உள்ளது. இந்த தமிழ்நாடு ஆலையில் 2,000 க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர், ஆனால் 568 பேர் மட்டும் தான் நிரந்தரத் தொழிலாளர்களாக உள்ளனர். மற்றொரு 1,000 தொழிலாளர்கள் ஒப்பந்தத்தில் பணியாற்றுகின்றனர் என்பதுடன், அரசாங்கத்தால் வழங்கப்படும் திட்டத்தின் கீழ் 500 பயிற்சியாளர்களும் அங்கு பணிபுரிகின்றனர்.
குறைந்த ஊதியங்கள், கடுமையான வேலை நிலைமைகள் மற்றும் ஆலையின் உணவகத்தில் தரமற்ற உணவு வழங்கப்படுவதை எதிர்த்துப் போராடுவதற்காக MATE தொழிலாளர்கள் சென்ற ஜூலையில் ஒரு புதிய தொழிற்சங்கத்தை நிறுவினர்.
ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே MATE தொழிலாளர்களின் ஒரு கூட்டத்தில் AICCTU தேசியத் தலைவர் எஸ்.குமாரசாமி பேசுகையில், இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவது பற்றி ஆலோசனைகள் வழங்கிய அதேவேளை, நிறுவனத்திடம் பல்வேறு பரிதாபகரமான விண்ணப்பங்களை விடுத்தார்.
MATE தொழிலாளர்களுக்கு குறைந்தது 40,000 ரூபாய் (571 அமெரிக்க டாலர்கள்) மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும், ஏனென்றால் குறைந்த ஊதியங்கள் இந்திய பொருளாதாரத்தை மந்தநிலைக்கு கொண்டு செல்கின்றன என்று குமாரசாமி தெரிவித்தார். மேலும், நிரந்தரத் தொழிலாளர்களின் இந்த வேலைநிறுத்தம் ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தவும், இரவு நேர தொழிலாளர்களுக்கு உணவு வழங்கவும் நிறுவனத்தை நிர்ப்பந்தித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதை தடுப்பதற்காக வழங்கப்பட்ட பரிதாபகரமான சலுகைகள் எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படலாம் என்ற உண்மையை புறக்கணித்து “ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இந்த நன்மை கிடைப்பது குறித்து நிரந்தரத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
150,000 ஊழியர்களை பணியமர்த்தியிருக்கும் ஒரு மாபெரும் பூகோள ரீதியான நிறுவனத்தின் ஒரு பகுதியாக இந்த நிறுவனம் இருக்கிறது என்று வேலைநிறுத்தக்காரர்களிடம் குமாரசாமி தெரிவித்த போதிலும், அந்த தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கு அவர் அழைப்பு விடுக்கவில்லை.
இந்தியாவில் ஹூண்டாய் மற்றும் நிசான் ஆலைகளின் தொழிற்சங்க நிர்வாகிகள் MATE வேலைநிறுத்தக்காரர்களுக்கு ஆதரவளித்ததாக குமாரசாமி கூறினார். என்றாலும், இந்த “ஆதரவு” என்பது, MATE நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்களும் பயிற்சியாளர்களும் தயாரித்த வாகன உதிரிபாகங்கள் தரமற்றதாக இருக்கும் என்று ஹூண்டாய் மற்றும் நிசான் நிறுவனங்களின் மேலாளர்களுக்கு விடுத்த எச்சரிக்கைகளையும் உள்ளடக்கியதாகும்.
2021 தமிழ்நாடு மாநிலத் தேர்தலில், சிபிஎம்-எம்.எல்.-விடுதலை சட்டமன்ற உறுப்பினர்களை அவர்கள் தேர்ந்தெடுப்பார்களானால் MATE தொழிலாளர்களின் வேலை நிலைமைகளை மேம்படுத்த முடியும் என்று இழிந்த முறையில் அவர் அறிவித்தார். அவ்வப்போது அதன் “இடதுசாரி” வாய்ச்சவடால்கள் விடுக்கப்பட்ட போதிலும், சிபிஎம்-எம்.எல்.-விடுதலை முற்றிலும் ஒரு முதலாளித்துவ உருவாக்கமாக உள்ளது. பீஹாரில் நடந்த சமீபத்திய பாராளுமன்ற தேர்தல்களில் அரசு அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு அது ஆதரவளித்தது.
டிசம்பர் மாதம் யமஹா இந்தியாவில் நடந்த வாகனத் தொழிலாளர்களின் ஊதியப் போராட்டத்திற்கு இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி – மார்க்சிஸ்ட் அல்லது சிபிஎம் கட்டுப்பாட்டிலுள்ள இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) வெற்றிகரமாக தலைமை தாங்கியதாக குமாரசாமி பொய் கூறினார். மேலும், மதர்சன் வேலைநிறுத்தக்காரர்கள் மீது AICCTU திணிக்க முயலும் “மூன்று காரணிகளை” அடிப்படையாகக் கொண்ட புதிய சம்பள ஒப்பந்தம் பற்றி அவர் பாராட்டினார்.
WSWS முன்பே விளக்கமளித்தது போல, “‘தொழில்துறை அமைதியை’ மேம்படுத்தவும், உள்ளிருப்பு போராட்டங்களை தடுக்கவும் உறுதிபூண்டு” நிறுவனத்துடன் ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் யமஹா தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை CITU நிறுத்தியது.
சென்னை ஆலையில் யமஹா இந்தியாவிற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையே எட்டப்பட்ட மூன்று ஆண்டு ஒப்பந்தம் பற்றி பகிரங்கப்படுத்தப்படவில்லை. உற்பத்தியை அதிகரிக்கவும், சுரண்டலை தீவிரப்படுத்தவும் என தனிப்பட்ட செயல்திறன், தளவாட பணியிட செயல்திறன் மற்றும் ஆலை செயல்திறன் போன்ற “மூன்று காரணிகள்” வடிவமைக்கப்பட்டன.
ஊடக அறிக்கையைப் பொறுத்தவரை, ஒரு தொழிலாளி மூன்று ஆண்டு காலத்திற்குள் சராசரியாக 14,000 – 20,000 ரூபாய் வரையிலான சம்பள உயர்வை மட்டுமே பெறுவார், இது அவர்களது வகை மற்றும் அனுபவத்தை சார்ந்திருக்கும்.
யமஹா மோட்டார் இந்திய குழுமத்தின் தலைவர் மோட்டோஃபியூமி ஷித்தாரா, விற்பனை ஒப்பந்தம் “ஒரு குறிப்பிடத்தக்க சாதனை” ஆகும் என்று விவரித்த அதேவேளை, யமஹா மோட்டார் தொழிற்சங்க பிரதிநிதி யு.வேல்முருகன், இது “நம் அனைவருக்கும் ஒரு பொன்னான தருணமாகும்” என்று கூறினார். “நிறுவனத்தின் இலக்கையும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்றுவதற்கு” தொழிற்சங்கத்தின் முழு ஆதரவையும் வழங்க அவர் ஒப்புக் கொண்டார்.
MATE நிறுவனத்தில் நடந்து வரும் வேலைநிறுத்த நடவடிக்கை பூகோள அளவில் அதிகரித்தளவில் மீளெழுச்சி பெற்று வரும் தொழிலாளர் போராட்டங்களின் ஒரு பகுதியாகும். இந்நிலையில், நிரந்தர வேலைகள், கண்ணியமான ஊதியம் மற்றும் சிறந்த வேலை நிலைமைகள் ஆகியவை குறித்த போராட்டம் பூகோள அளவில் தொழிலாளர்களின் பொதுவான கோரிக்கைகளாக மாறி வருகின்றன.
வேலைநிறுத்தம் செய்யும் MATE தொழிலாளர்களை பழிவாங்குவது, குறைந்த ஊதியம் பெறும் ஒப்பந்தத் தொழிலாளர்களை அதிகமாக பயன்படுத்துவது ஆகியவை தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் அல்ல. இந்தியாவின் மந்தநிலை பொருளாதாரத்தின் தாக்கத்தை தொழிலாளர்கள் மீது சுமத்துவதற்கு முதலாளிகள் முயற்சி செய்கின்ற நிலையில், இந்திய வாகனத் தொழிலாளர்கள் பெருமளவில் வேலை மற்றும் ஊதிய வெட்டுக்களையும், மற்றும் நிலைமைகள் மீதான தாக்குதல்களையும் எதிர்கொள்கின்றனர்.
வேலைநிறுத்தம் செய்யும் ஒரு தொழிலாளி பாலகிருஷ்ணன் WSWS இடம் பேசுகையில், நிறுவனம் புதிய தொழிற்சங்கத்தை அங்கீகரிக்காது என்றும் அல்லது வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் வரையில் ஊதியங்கள், நிபந்தனைகள் அல்லது இடைநீக்கங்கள், பணிமுடிவுகள் மற்றும் பணிநீக்கங்கள் பற்றி எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தாது என்று அரசாங்க துணை தொழிலாளர் ஆணையரிடம் MATE நிர்வாகம் தெரிவித்ததாகக் கூறினார்.
பாலகிருஷ்ணன் மேலும், வேலைநிறுத்தம் செய்பவர்கள் இந்த இறுதி எச்சரிக்கைகளுக்கு தலைவணங்கத் தயாராக இல்லை என்பதுடன், அவர்களது கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை தொடர்ந்து அவர்கள் வேலைநிறுத்தம் செய்வார்கள் என்று தெரிவித்தார். மேலும் அவர், ஊதிய உயர்வுதான் எங்களது பிரதான கோரிக்கை, என்றாலும் அனைத்து இடைநீக்கங்களும், பணிமுடிவுகளும் மற்றும் பணிநீக்கங்களும் இரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.
பாதிக்கப்படுவோம் என்ற பயத்தில் பல MATE வேலைநிறுத்தக்காரர்கள் அவர்களது பெயரை குறிப்பிடுவதற்கு விரும்பவில்லை. இருந்தாலும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை பாதுகாக்க AICCTU தலைமை போராடும் என்பதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று WSWS இடம் தெரிவித்தனர்.
சிறந்த ஊதியங்கள், மேம்பட்ட வேலை நிலைமைகள், ஓய்வூதியத் திட்டம் மற்றும் மருத்துவ சலுகைகள் ஆகியவற்றை வெல்வதற்கான போராட்டத்திற்கு, சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்திய தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளையும் ஒன்றுதிரட்டுவது அவசியமாகிறது.
சர்வதேச அளவிலான சக தொழிற்சங்கங்ககளைப் போல, இந்திய தொழிற்சங்கங்களும், முதலாளித்துவ அமைப்பு மற்றும் தேசிய அரசுடன் பிணைக்கப்பட்டுள்ளன, அத்துடன் இந்த முன்னோக்கிற்கு விரோதமானவையாக உள்ளன. அதனால்தான், இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு, இந்தியா முழுவதும் உள்ள MATE தொழிலாளர்களும் மற்றும் வாகனத் தொழிலாளர்களும் ஒருங்கிணைந்து, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான தங்களுக்கென சொந்த நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும், அமெரிக்காவில் போராடி வரும் ஜெனரல் மோட்டார்ஸ் வேலைநிறுத்தக்காரர்களுக்கும் அவர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதுடன், பூகோள அளவிலான பெரும் வாகன நிறுவனங்களுக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் சர்வதேச ஒற்றுமையையும், ஒருங்கிணைந்த நடவடிக்கையையும் உருவாக்க வேண்டும்.
ஆசிரியர் பின்வரும் கட்டுரையையும் பரிந்துரைக்கிறார்:
நூறாயிரக்கணக்கான இந்திய வாகனத் தொழிலாளர்கள் பணிநீக்கங்கள் மற்றும் ஊதிய வெட்டுக்களை எதிர்கொள்கின்றனர்
[18 September 2019]